இலங்கையில் சோ.ச.க. உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல் தொடர்பான நீதிமன்ற வழக்கு தொடர்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அருகில் 2023 நவம்பரில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) உறுப்பினர்களான தேஹின் வசந்த மற்றும் லக்ஷ்மன் பெர்னாண்டோ மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல் சம்பந்தமான குற்றவியல் வழக்கு தொடர்பான விசாரணையை இலங்கையின் மொரட்டுவ நீதவான் நீதிமன்றம் மே 25 அன்று, தொடர்ந்து முன்னெடுத்தது.

தாக்குதலில் லக்ஷ்மன் பெர்னாண்டோவின் முகம் மற்றும் முதுகில் காயங்கள் ஏற்பட்டன

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலாளர் ஜோசப் கிஷோர் உரையாற்றவிருந்த, ட்ரொட்ஸ்கிசத்தின் நூற்றாண்டை முன்னிட்டு நடைபெற்ற பொதுக் கூட்டங்களுக்கான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, இந்த இரு சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களும் தாக்கப்பட்டனர். சோசலிச சமத்துவக் கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இலங்கைப் பகுதியாகும்.

மே 25 அன்று லக்ஷ்மன் பெர்னாண்டோவிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையின் போது குறிப்பிடத்தக்க அரசியல் பிரச்சினையொன்று எழுந்தது. தாக்குதலுக்கு இலக்கானவர்களில் ஒருவரான பெர்னாண்டோவிடம், தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் முன்வந்த பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி கேள்வி எழுப்பினார். சோசலிச சமத்துவக் கட்சியை வெளிநாட்டு நிதியைச் சார்ந்த அரச சார்பற்ற அமைப்பு (NGO) எனச் சித்தரிக்க அவர் முயன்றதுடன், தாக்குதல் தொடர்பாக அளிக்கப்பட்ட முறைப்பாடு வெளிநாட்டு நிதியைப் பெறும் முயற்சியால் உந்தப்பட்டதாகவும் சுட்டிக்காட்ட முயன்றார்.

பெர்னாண்டோ இந்தக் கூற்றுகளை உறுதியாக நிராகரித்தார். சோசலிச சமத்துவக் கட்சி இலங்கையில் சட்டபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகும் என்றும், அது ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது என்றும், உலகம் முழுவதும் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்காகப் போராடும் உலக சோசலிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியாக சோசலிச சமத்துவக் கட்சி விளங்குகிறது என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சோசலிச இயக்கத்தின் ஒரு பகுதியாக இருப்பது சோசலிச சமத்துவக் கட்சியின் உரிமை என்பதை அவர் வலியுறுத்தினார்.

கட்சியின் நிதி தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த பெர்னாண்டோ, சோசலிச சமத்துவக் கட்சியின் நடவடிக்கைகள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், அரசியல் தொடர்பாளர்கள் வழங்கும் நன்கொடைகள் மற்றும் நிதிச் சேகரிப்புகள் மூலமும், பெரும்பாலும் வீடு வீடாகச் சென்று முன்னெடுக்கப்படும் வெளிப்படையான அரசியல் பிரச்சாரங்கள் மூலமும் நிதி பெறப்படுகின்றன என்று சாட்சியமளித்தார்.

பெர்னாண்டோ, 2023 நவம்பரில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பான வழக்கில் இரண்டாவது சாட்சியாளராக சாட்சியமளித்தார். பொதுக் கூட்டங்களுக்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, தானும் வசந்தவும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பின்புற நுழைவாயிலுக்கு அருகில் சோசலிச சமத்துவக் கட்சியின் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததை அவர் விளக்கினார். அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களிடம் வந்து, அரசியல் பிரசுரங்களை விநியோகிப்பதை நிறுத்திவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு கட்டளையிட்டதாக அவர் தெரிவித்தார்.

பெர்னாண்டோ மேலும் சாட்சியமளிக்கையில், சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் பிரச்சாரத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, தாக்குதலாளிகள் அவர்களைப் பின்தொடர்ந்து மரக் கம்புகளால் தாக்கியதாகக் கூறினார். இந்தத் தாக்குதல் உயிருக்கு ஆபத்தானதாக இருந்தது என்றும், தானும் வசந்தவும் காயமடைந்து பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் விளக்கினார்.

இந்த வன்முறைத் தாக்குதலின் விளைவாக வசந்தவின் இடது கையின் விரல்கள் முறிந்தன என்றும், தனக்கு கழுத்து மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டன என்றும் பெர்னாண்டோ மேலும் சாட்சியமளித்தார். தாக்குதலை மேற்கொண்டவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களே எனவும் அவர் அவர்களை அடையாளம் காட்டினார். முந்தைய நீதிமன்ற நடவடிக்கைகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அப்போதைய ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்திருந்த தொழிற்சங்கமான பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்கத்தின் மொரட்டுவ பல்கலைக்கழகக் கிளையின் அதிகாரிகள் என்பது நிரூபிக்கப்பட்டிருந்தது.

பிரதிவாதிகள் தரப்பினர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மாணவர்களுக்கும் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்டதாகக் கூறப்பட்ட ஒரு தகராறில் தலையிட்டதோடு மட்டுமே நின்றனர்; எந்தவிதமான தாக்குதலும் நடைபெறவில்லை, என்ற ஒரு சம்பவ விவரணத்தையும் முன்வைத்தனர். பெர்னாண்டோ இந்தக் கூற்றுகளை நிராகரித்து, தாக்குதல் தொடர்பாக அவர் ஏற்கனவே வழங்கிய சாட்சியையே உறுதிப்படுத்தினார்.

பிரதிவாதிகள் தரப்பு முன்னெடுத்த கேள்வி எழுப்பும் முறை, இந்த வழக்குடன் தொடர்புடைய பரந்த அரசியல் பிரச்சினைகளை எழுப்புகிறது.

பல தசாப்தங்களாக, ஆளும் வர்க்க ஸ்தாபனக் கட்சிகளும் அவற்றுடன் இணைந்த தொழிற்சங்கங்களின் தலைவர்களும், சோசலிச சமத்துவக் கட்சியை “வெளிநாட்டு நிதியுதவி பெறும்” அமைப்பு என முத்திரைகுத்தியும், அரச சார்பற்ற அமைப்புகளுடன் (NGO) அதனை தொடர்புபடுத்தியும் அதன் நற்பெயரைக் களங்கப்படுத்த முயன்றுள்ளனர். இத்தகைய குற்றச்சாட்டுகள், அனைத்து வகையான முதலாளித்துவ ஆட்சிக்கும் எதிராக சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுக்கும் சமரசமற்ற போராட்டத்தையும், இலங்கை ஆளும் வர்க்க உயரடுக்கிற்கும் தொழிலாள வர்க்கத்தின் மீதான அதன் தாக்குதல்களுக்கும் எதிரான அதன் விட்டுக்கொடுக்காத எதிர்ப்பையும் பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அரசியல் அவதூறுகளாகும்.

அரச சார்பற்ற அமைப்புகள் (NGO) மீதான இந்த விரோதப் போக்கு, அரசாங்கம், ஆளும் வர்க்கக் கட்சிகள் அல்லது தொழிற்சங்க அதிகாரத்துவத்தை விமர்சிக்கும் அமைப்புகள் மீது முன்னெடுக்கும் ஜனநாயக விரோதத் தாக்குதல்களாக அடிக்கடி வெளிப்படுகிறது. இத்தகைய ஒடுக்குமுறைகளை, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களாகக் கருதி சோசலிச சமத்துவக் கட்சி தொடர்ந்து எதிர்த்துள்ளது. அதேவேளை, அரச சார்பற்ற அமைப்புகளின் அரசியலைப் பற்றிய தனது சுயாதீன அரசியல் விமர்சனங்களையும் அது தொடர்ச்சியாக முன்வைத்துள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சியின் சர்வதேச அரசியல் ஒத்துழைப்பை, அரச சார்பற்ற அமைப்புகளின் வெளிநாட்டு நிதியுடன் ஒப்பிடும் முயற்சி குறிப்பாக பிற்போக்குத்தனமானதாகும். சோசலிச சமத்துவக் கட்சி ஒரு சர்வதேசவாத சோசலிசக் கட்சியாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடனான (ICFI) அதன் அரசியல் ஒத்துழைப்பு, பிரதிவாதிகள் தரப்பு சித்தரிப்பதைப் போல், நிதி அல்லது அமைப்புரீதியான சார்புநிலை அல்ல. மாறாக, அது பொதுவான சோசலிசக் கோட்பாடுகளையும், சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் முன்னோக்கையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு நனவுபூர்வமான அரசியல் ஐக்கியமாகும்.

தேசிய எல்லைகளைத் தாண்டிய தொழிலாளர்களின் ஒற்றுமைக்காக சோசலிச சமத்துவக் கட்சி வெளிப்படையாகப் போராடுகிறது. இலங்கையில் தொழிலாளர்களும் இளைஞர்களும் எதிர்கொள்ளும் போர், சிக்கன நடவடிக்கைகள், வேலையின்மை, அதன் அரசியல் முன்னோக்கு, ஒடுக்குமுறை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்சினைகளின் அடிப்படைக் காரணம் முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியே என்பதையும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலமாக மட்டுமே அதற்கு தீர்வு காணபது சாத்தியம் என்பதையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடனான கட்சியின் இணைப்பு, மார்க்சிச அரசியல் கோட்பாட்டின் அடிப்படையிலான ஒன்றாகும். சோசலிச மற்றும் சர்வதேசவாத வேலைத்திட்டத்திலிருந்து நேரடியாக ஊற்றெடுக்கும் அதன் சர்வதேச தொடர்புகள், வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட்டவையாகும். உலக சோசலிச வலைத் தளம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அன்றாட மார்க்சிச வெளியீடாகும். வசந்த மற்றும் பெர்னாண்டோ மீதான தாக்குதலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சர்வதேச பிரச்சாரம், உலகம் முழுவதுமுள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்த ஆதரவைப் பெற்றது.

சோசலிச சமத்துவக் கட்சிக்கு எதிரான இந்த அவதூறு, சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் சர்வதேச அளவில் அமைப்புரீதியாக ஒழுங்கமைய தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் உள்ள உரிமைக்கே இலங்கை ஆளும் வர்க்க உயரடுக்கு விரோதமாக இருப்பதை அம்பலப்படுத்துகிறது. இத்தகைய வாதங்கள், சோசலிச எதிர்ப்பைத் தாக்குவதற்காக அரசியல் ஸ்தாபனத்தின் சில பிரிவுகளும் தொழிற்சங்க அதிகாரத்துவமும் மீண்டும் மீண்டும் பயன்படுத்திவரும் தேசியவாத மற்றும் ஜனநாயக விரோத வழிமுறைகளையே பிரதிபலிக்கின்றன.

Loading