பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் தோழர் தோழிகளுக்கு ஒரு திறந்த கடிதம்:

பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்கத்தின் மொரட்டுவ கிளை தலைவர்களின் குண்டர் தாக்குதலை கண்டிப்பதற்கு ஒன்றிணையுங்கள்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

தேஹின் வசந்த ஆகிய நான், மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் 25 வருடங்களுக்கும் மேலாக கல்விசாரா ஊழியராக கடமையாற்றுவதுடன், பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுப் பேரவையில் இணைந்துள்ள இலங்கை பல்கலைக்கழக தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளேன். பொது ஜன முற்போக்கு ஊழியர் சங்கத்தின் மொரட்டுவ பல்கலைக்கழக கிளையின் தலைவர் இந்திக்க பெரேராவும் செயலாளர் சுரங்கா பியவர்தனவும் நவம்பர் 30 அன்று என் மீதும் எனது அரசியல் சகா மீதும் குண்டர் தாக்குதல் நடத்தியதைக் கண்டிக்குமாறு அழைப்பு விடுக்கவே இந்தக் கடிதத்தை உங்களுக்கு அனுப்புகிறேன்.

தேஹின் வசந்த

நவம்பர் 30 அன்று, மேற்கூறிய நபர்கள், என்னையும் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) முழுநேர உறுப்பினரான லக்ஷ்மன் பெர்னாண்டோவையும், பல்கலைக்கழகத்தின் பின்வாசல் அருகே பிரச்சாரம் செய்துகொண்டிருந்த போது, கொடூரமாகத் தாக்கினர். நானும் ஒரு சோ.ச.க. உறுப்பினர் ஆவேன். அமெரிக்க சோ.ச.க.யின் தேசிய செயலாளர் ஜோசஃப் கிஷோர் உரையாற்றவிருந்த, கொழும்பில் ட்ரொட்ஸ்கிசத்தின் நூற்றாண்டைக் கொண்டாடுவதற்கு சோ.ச.க. ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்திற்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக இந்தப் பிரச்சாரம் இடம்பெற்றது.

பிரச்சாரத்தின் கருப்பொருள் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அரசியல் ரீதியாக முக்கியமானதாக இருந்தது. உலகின் முதல் தொழிலாளர் அரசை ஆட்சிக்குக் கொண்டு வந்த, லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி கூட்டாகத் தலைமை வகித்த, 1917 ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சியில் மில்லியன் கணக்கான ரஷ்ய தொழிலாளர்களை வழிநடத்தியது லியோன் ட்ரொட்ஸ்கி முன்வைத்த நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு ஆகும்.

எங்கள் மீதான தாக்குதல் முன்கூட்டிய திட்டமிட்டு அரசியல் தூண்டுதலால் மேற்கொள்ளப்பட்டது என்பதை அனைத்து ஆதாரங்களும் சுட்டிக்காட்டுகின்றன. குண்டர்கள் எங்கள் உயிருக்கு தீங்கு விளைவிக்க நினைத்தனர். பொதுஜன முற்போக்குத் ஊழியர் சங்கத்தின் குண்டர்களில் ஒருவன் என் தலை மீது அடித்த ஒரு மரண அடியில் இருந்து நான் சற்றே உயர் தப்பினேன். எனினும், கொடூரமான தாக்குதலில் எனது இடது கையில் இரண்டு விரல்கள் உடைந்துள்ளதுடன் எனது சக தோழர் பெர்னாண்டோவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. விரல்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் என்னால் சாதாரணமாக வேலை செய்ய முடியவில்லை. நான்கு வாரங்கள் மருத்துவ விடுமுறையில் இருந்தேன். எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், குணமடைய காலம் எடுக்கும் என்பதால் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தினார். இந்த நிலை புத்தாண்டு வரை நீட்டித்துள்ளது.

நான் தேர்வுசெய்துகொள்ளும் அரசியல் கருத்தை கொண்டிருக்கவும் அதற்காக முற்நிற்பதும் எனது சட்டப்பூர்வ உரிமையாகும், மேலும் எனது சக ஊழியர்களான உங்கள் அனைவருக்கும் இந்த ஜனநாயக உரிமையும் உள்ளது. நான் ஒரு சோசலிஸ்ட் ஆவேன். அதனடிப்படையில், தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளின் நலன்களைக் காக்கப் போராட முன்நின்ற வரலாறு எனக்கு உண்டு. எனது ஜனநாயக உரிமைகளை யாராலும் மறுக்கவோ, நசுக்கவோ முடியாது. ஆனால் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தொழிற்சங்கக் கிளையின் தலைவரும் பொதுச் செயலாளரும் இந்த உரிமைகளை நசுக்குவதற்காக எமக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இந்த இரண்டு தலைவர்களுக்கும் மொரட்டுவ பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுப் பேரவையின் தலைவர்களுக்கும், தொழிற்சங்க கூட்டங்களில் உரையாற்றும் எனது ஜனநாயக உரிமையை மீறிய வரலாறு உள்ளது. அந்த கூட்டங்களில் என்னை பேசவிடாமல் பலமுறை உடல் பலத்தை பிரயோகித்துள்ளனர்.

இந்த ஜனநாயக விரோதப் பாத்திரம் மொரட்டுவைப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கக் கிளைகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. ஒட்டுமொத்தமாக அனைத்து தொழிற்சங்கங்களின் உயர்மட்டத் தலைமை முதல் கீழ்மட்டத் தலைமை வரை பொது அங்கத்துவத்திற்கு எதிராக இது இடம்பெறுகின்றது. என் மீதும் எனது சக தோழர் மீதும் நடத்தப்பட்ட இந்த ஜனநாயக விரோத குண்டர் தாக்குதலுக்கு, கல்வி சாரா ஊழியர் சங்கம் உட்பட ஒட்டுமொத்த தொழிற்சங்க அதிகாரத்துவமும் மௌனம் சாதிப்பதானது, அதில் அவர்களின் முழு உடன்பாட்டை உறுதிப்படுத்துகிறது.

தொழிற்சங்க அதிகாரத்துவம் தொழிற்சங்கங்களுக்குள் அல்லது கூட்டு தொழிற்சங்க பேரவைக்குள் ஜனநாயகத்தைப் பேணுவதில்லை. தொழிற்சங்கத் தலைவர்கள் தாங்கள் எடுத்த முடிவுகளை அறிவிப்பதற்காக மட்டுமே இத்தகைய கூட்டங்களை அழைக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை நான் செய்த “குற்றம்” என்பது எமது போராட்டங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டதைப் பற்றி கேள்வி எழுப்புவதும், எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கும் பாதுகாப்பதற்கும் சாத்தியமான வேலைத்திட்டத்தை முன்வைப்பதும், இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள ஏனைய தொழிலாளர்களுடன் ஐக்கியப்பட அழைப்பு விடுத்ததும் மற்றும் அதற்கான அரசியல் வேலைத் திட்டம் ஒன்றின் அவசியத்தை விளக்குவதும் ஆகும்.

உண்மையில், எனது கருத்துக்களும் கொள்கைகளும் இந்த தொழிற்சங்கத் தலைவர்களுடன் நேரடியாக முரண்படுகின்றன. அவர்களில் பெரும்பாலானோர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உட்பட முதலாளித்துவ கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆவர். ஒரு ஜனநாயக ரீதியான விவாதத்தை அனுமதித்து அதன் மூலம் நமது உறுப்பினர்களின் நலன்களைப் பாதுகாக்கும் திட்டத்தைத் தீர்மானிப்பதற்குப் பதிலாக, அவர்கள் ஜனநாயக விரோத அதிகாரத்துவ முறைகளைப் பயன்படுத்துகின்றனர்.

நவம்பர் 1 அன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை அறிவிப்பதற்கான கூட்டத்தில், தொழிற்சங்க கூட்டு பேரவையின் தலைவர் கயன் பீரிஸ் பேசும் போது கூறியதாவது: “உங்களுக்கு மேலும் ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள், ஆனால் யாரும் பேச அனுமதியில்லை.”

எங்களைத் தாக்கியதன் மூலம், தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரள்விற்கு எதிரான தங்களது வெறுப்பையும் எதிர்ப்பையும் வெளிக்காட்டியுள்ளனர். தொழிலாளர்கள் தங்களுக்காக பேசுவதை அவர்கள் குற்றமாகக் கருதுகின்றனர். அவர்களின் ஜனநாயக விரோத வழிமுறைகளும் வன்முறைகளும் அவர்களது அரசியல் வங்குரோத்தை மட்டுமே காட்டுகின்றன. தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள், தங்களின் முதலாளித்துவ சார்பு கொள்கைகளை ஏற்க மாட்டார்கள் என்பதை அறிந்துள்ள அவர்கள், இந்த தொழிலாளர்களும் இளைஞர்களும் நான் போராடும் சோசலிச வேலைத்திட்டத்தில் சேர்ந்துவிடுவார்கள் என்று பீதியடைந்துள்ளனர்.

கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நியாயப்படுத்த, இந்த சங்கத் தலைவர்கள் தொழிற்சங்கங்களில் “அரசியல் வேண்டாம்” என்று போதிக்கின்றனர். இருப்பினும், அவர்கள் முதலாளித்துவக் கட்சிகளுக்கு ஆதரவான அடிப்படையிலேயே செயல்படுகிறார்கள்.

உலக சோசலிச வலைத் தளத்தில் (wsws.org) இருந்து இதை அறிந்து அதிர்ச்சியடைந்த இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களும் ஜனநாயக உரிமைகளை மதிப்பவர்களும், என் மீதும் எனது சக தோழர் மீதும் நடத்தப்பட்ட வெட்கக்கேடான தாக்குதலைக் கண்டித்து, டசின் கணக்கான அறிக்கைகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளனர்.

சோ.ச.க. உறுப்பினராக நான் மூன்று தசாப்தங்களாக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சர்வதேச சோசலிச முன்னோக்கிற்காக போராடி வருகிறேன். தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சோ.ச.க.பல தசாப்தங்களாக போராடி வருவதை தொழிலாளர்கள் நன்கு அறிவார்கள்.

நான் எங்கு தலையிட்டாலும், அனைத்து முதலாளித்துவ கட்சிகள் மற்றும் பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்கம் உட்பட துரோக தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்தும் சுயாதீனமாக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே, தொழிலாளர்கள் தங்கள் உரிமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை பாதுகாக்க முடியும் என்று நான் வலியுறுத்தி வந்துள்ளேன்.

ஒவ்வொரு தொழிலாளிக்கும் தான் நம்பும் மற்றும் மதிக்கும் அரசியல் கருத்துக்களை கொண்டிருக்கவும், அதற்காக தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யவும், அவற்றை வெளிப்படையாக விவாதிக்கவும் கலந்துரையாடவும் உரிமை உண்டு. இது ஒரு உன்னத பாரம்பரியமும் தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை உரிமையும் ஆகும். பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்கம் உட்பட முதலாளித்துவ சார்பு தொழிற்சங்க அதிகாரத்துவம் உங்களைப் போன்ற சாதாரண தொழிலாளர்களின் இந்த அடிப்படை ஜனநாயக உரிமைகளை அங்கீகரிக்கவில்லை.

தொழிற்சங்கங்கள் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் தொழிலாளர்களின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகளாக நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நிர்வாகிகள் தொழிற்சங்கங்களுடன் மாதாந்திர கூட்டங்களை நடத்துகின்றனர். தொழிற்சங்கத் தலைவர்களின் ஒருங்கிணைப்புடனேயே மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் வேலை அதிகப்படுத்தல் உட்பட அடக்குமுறைகள் திட்டமிடப்பட்டன. சமீபகால வரலாற்றில் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுடன் இந்தத் திட்டங்களைப் பற்றி கலந்துரையாடியது கிடையாது. அடக்குமுறை அமுலுக்கு வரும்போதுதான் தொழிலாளர்கள் அதைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள். அப்போது தொழிற்சங்கங்கள், “நாங்கள் போதுமானளவு எதிர்த்துப் பேசியது போதும் பலனில்லை” என்று பதில் அளிக்கின்றனர்.

ஆட்சியாளர்களின் நலன்களைப் பூர்த்தி செய்யும் பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்கம் உட்பட ஒவ்வொரு தொழிற்சங்கமும் முழு உறுப்பினர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது ஆகும். இது, சோ.ச.க. முன்மொழிந்துள்ள தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தின் எரியும் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த நடவடிக்கைக் குழுக்கள், தொழிலாளர்களின் ஜனநாயக கலந்துரையாடல்களின் மூலம் முடிவுகளை எடுக்கும் அமைப்புகளாகும். சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கு எதிராகப் போராட தொழிலாளர்களுக்கு இத்தகைய அமைப்புகள் தேவை.

தொழிற்சங்கத் தலைவர்களின் துரோகத்தனமான நடத்தைக்கு கடந்த வருடம் நடைபெற்ற வெகுஜனப் போராட்டம் காட்டிக்கொடுக்கப்பட்டமை சிறந்த உதாரணம் ஆகும். அவை தொழிலாளர்களின் கலந்துரையாடலுக்கு குழிபறித்தன. ஒரு விவாதம் நடந்தால், இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்த திட்டங்களை தொழிலாளர்கள் முற்றிலும் எதிர்த்திருப்பார்கள் என்பது நிச்சயமானதாகும்.

சர்வதேச நாணய நிதியத்தால் விதிக்கப்பட்ட கடுமையான சிக்கன நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் அமுல்படுத்தி வருவதன் பின்னணியில் எமக்கு எதிரான சரீர வன்முறை இடம்பெற்றதுள்ளது. இதன் விளைவாக, பல்கலைக்கழகங்கள் உட்பட நிறுவனங்களில் உள்ள இலட்சக் கணக்கான தொழில்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதுடன் வேலை நிலைமைகள் மற்றும் ஊதியங்கள் குறைக்கப்படுகின்றன. தொழிலாளர்கள் தங்கள் தொழில்களையும் நிலைமைகளையும் பாதுகாக்க, இந்த தொழிற்சங்க அதிகாரத்துவத்தை நம்ப முடியாது. உண்மையில், அவற்றில் பல இந்த உரிமைகளை நசுக்கும் அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் ஆகும்.

என் அன்பான கல்வி சாரா ஊழியர் தோழர் தோழிகளே! இதுபோன்ற குண்டர் தாக்குதல்கள், ஜனநாயக விரோதச் செயல்கள் மற்றும் நமது உரிமைகளைத் தாக்கும் அரசாங்கத்திற்கும் அதிகார வர்க்கத்திற்கும் சேவை செய்பவர்களுக்கு நீங்கள் எதிராக இருக்கிறீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அந்த தொழிற்சங்கத் தலைவர்கள் மேற்கொண்ட வன்முறையைக் கண்டித்து, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க எமக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், எனது அன்பான கல்வி சாரா ஊழியர் சகாக்களே, இந்த தொழிற்சங்க அதிகாரத்துவம் சம்பந்தமாக எங்களுக்கு உள்ள பொதுவான அனுபவங்கள், குறிப்பாக நமது அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் வேலைத் திட்டங்கள் சம்பந்தமாக தொழிற்சங்கங்களில் எந்தவொரு ஜனநாயக ரீதியிலான கலந்துரையாடலுக்கும் அனுமதிக்காத அவர்களது வகிபாகம், இந்த அதிகாரத்துவத்தினரில் இருந்து சுதந்திரமாக ஒழுங்கமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது. அதிலிருந்து தேவையான முடிவுகளை புரிந்துகொண்டு, உங்கள் வேலைத் தளங்களில் சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கி, அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டத்தை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

தோழமையுடன்,

தேஹின் வசந்த.

பிரிட்டிஷ் ட்ரொட்கிஸ்டுகள் இலங்கை சோ... உறுப்பினர்கள் மீதான அரசாங்க-சார்பு குண்டர் தாக்குதலை கண்டிக்கின்றனர்

இலங்கை சோ... அதன் உறுப்பினர்கள் மீதான அரசாங்க சார்பு குண்டர்களின் தாக்குதலுக்கு எதிராக முன்னெடுக்கும் பிரச்சாரத்திற்கு ஆதரவு பெருகிவருகின்றது

விக்கிரமசிங்க ஆட்சியின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடுவதற்கு: தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பு! தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டை நோக்கி முன்செல்!

Loading