வட இலங்கையில் தொழிலாளர்களும் மாணவர்களும் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை எதிர்க்கின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் பற்றி யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் பகிரங்கக் கூட்டத்திற்காக, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பினதும் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் வட இலங்கையில் உள்ள தொழிலாளர்கள், மாணவர்கள், சிறு வணிகர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் IYSSEஇன் பிரச்சாரம்

“ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய குற்றவியல் போரை நிறுத்து” என்ற தலைப்பிலான கூட்டம், ஜூன் 9, செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள YMCA மண்டபத்தில் நடைபெறும். இதே கருப்பொருளில் சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. ஏற்பாடு செய்துள்ள ஒரு மறியல் போராட்டமும், ஜூன் 8, திங்கட்கிழமை அன்று மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணப் பேருந்து நிலையம் அருகே நடைபெறும்.

கொழும்பு, பேராதனை, பெருந்தோட்டப் பகுதியிலுள்ள ஹட்டன் மற்றும் தென் நகரமான மாத்தறையிலும் நடைபெற்ற கூட்டங்களைத் தொடர்ந்து யாழ்ப்பாணக் கூட்டம் நடைபெறுகிறது. சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சோசலிசப் போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக, நான்காம் அகிலத்தின் சர்வதேசக் குழு (ICFI), உலக சோசலிச வலைத் தளம் (WSWS) ஆகியவற்றால் தொடங்கப்பட்ட சர்வதேசப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வுகள் அமைந்துள்ளன.

சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. பிரச்சாரகர்கள், சுன்னாகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிளிநொச்சி மற்றும் ஊர்காவற்துறை தீவு உட்பட பல்வேறு பகுதிகளில் தொழிலாளர்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினர். ஈரானுக்கு எதிரான அமெரிக்கத் தலைமையிலான போர், அமெரிக்கா மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளின் அதிகரித்து வரும் இராணுவவாதம், சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான ஒரு பரந்த மோதலுக்கான தயாரிப்புகள், மற்றும் போரைத் தூண்டிவிடுகின்ற அதே பூகோள பொருளாதார நெருக்கடி போரினால் மீண்டும் ஆழமடைவது பற்றியும் இந்த கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டன.

ஈரானுடன் ஒரு மோசடியான பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அதேவேளை, ட்ரம்ப் நிர்வாகம் அந்நாட்டிற்கு எதிரான போர் ஆத்திரமூட்டல்களை அதிகரித்து வருகிறது. அதே சமயம், இஸ்ரேல் லெபனான் மீது இடைவிடாமல் குண்டுவீசி, காஸாவை நிரந்தரமாக ஆக்கிரமிக்க நகர்கிறது. ட்ரம்பின் பேச்சுவார்த்தைகள் மீது பலருக்கு மாயைகள் இருந்தன, ஆனால் சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. பிரச்சாரகர்கள் பேச்சுவார்த்தைகளின் மோசடித் தன்மையை விளக்கியதோடு அமெரிக்கா எந்த நேரத்திலும் ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்கக்கூடும் என்று எச்சரித்தனர். முதலாளித்துவத்தின் நெருக்கடியே அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஒரு உலகப் போரைத் தொடங்கத் தூண்டியுள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. உடன் பேசியவர்கள், எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணங்கள் போன்ற போரின் பேரழிவுகரமான உலகளாவிய விளைவுகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வடக்கிலுள்ள தமிழ் மக்கள், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட மூன்று தசாப்த கால இனவாதப் போரின் பேரழிவுகரமான அனுபவத்தைக் கடந்து வந்துள்ளனர்.

உழைக்கும் மக்கள் மீது சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) கட்டளையிடப்பட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளுக்கும் மேலாக, போரின் பொருளாதாரச் சுமைகளையும் சுமத்தி, அமெரிக்கா தலைமையிலான போருடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகவின் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்தின் வகிபாகத்தையும் பிரச்சாரகர்கள் அம்பலப்படுத்தினர். கடந்த வார இறுதியில், அரசாங்கம் மீண்டும் எரிபொருள் விலையை உயர்த்தியது.

தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முதலாளித்துவ தேசியவாதக் கட்சிகளின் ஏகாதிபத்திய சார்பு அரசியலையும் சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள் விளக்கினர். அமெரிக்க-இஸ்ரேலியப் போருக்கு மறைமுகமாக ஆதரவளிக்கும் தமிழ் தேசியவாதக் கட்சிகளின் அரசியலை பகிர்ந்துகொள்ளும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் நிலைப்பாட்டுக்கு நேர் மாறாக, மாணவர்கள் போருக்கு எதிரான எதிரப்பை வெளிப்படுத்தினர்.

கந்தசாமி வினோதன்

இறுதியாண்டு கலைப்பீட மாணவரான கந்தசாமி வினோதன் கூறியதாவது: “அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகை ஆள விரும்புகிறது, அதனால்தான் அது மத்திய கிழக்கில் போர் தொடுக்கிறது. ஆனால் நாங்கள் போரை எதிர்க்கிறோம், அது நிறுத்தப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை அல்லது ஐரோப்பிய ஒன்றியம் போரை ஆதரிப்பதால், அவற்றின் மூலம் இதை நிறுத்த முடியாது.”

போர்களை நிறுத்துவது எப்படி என்பது குறித்து தனக்கு முன்பு அரசியல் முன்நோக்கு இருந்ததில்லை என்றும், ஆனால் சோ.ச.க. உடன் இவ்விஷயம் குறித்து கலந்துரையாடிய பிறகு, சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தை அணிதிரட்ட வேண்டியதன் அவசியத்தை இப்போது நம்புவதாகவும் அவர் கூறினார்.

கிளிநொச்சியைச் சேர்ந்த 45 வயதான சிறு வியாபாரி எஸ். தர்மசீலன், விண்ணை முட்டும் விலையேற்றத்தால் தனது சிறிய மளிகை வியாபாரம் எப்படிச் சரிந்துவிட்டது என்பதை விளக்கினார். “எரிபொருள் விலைகள் வானளாவ உயர்ந்துள்ளன, உணவுப் பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதற்கு அமெரிக்காதான் காரணம். முன்பு 14,400 ரூபாயாக [$US43.50] இருந்த ஒரு மூட்டை காய்ந்த மிளகாய், இப்போது 26,500 ரூபாயாக [$US80] விற்கப்படுகிறது. பால் மா விலை மீண்டும் உயர்ந்துள்ளது. மக்களிடம் பணம் இல்லை. தொழிலாளர்கள் சம்பள நாளிலும் சில பொருட்களை மட்டுமே வாங்குகிறார்கள்.

“எனக்கு மாற்றுத்திறனாளி பிள்ளை உட்பட நான்கு பிள்ளைகள் உள்ளனர். அவர்களின் மாதக் கல்விச் செலவு மட்டுமே 10,000 ரூபாய்க்கு மேல் ஆகிறது. ஊட்டச்சத்து வாங்குவது கட்டுப்படியாகாத ஒன்றாகிவிட்டது. மீன் விலை கிலோவுக்கு 1,800 முதல் 2,000 ரூபாய் வரையிலும், மாட்டிறைச்சி விலை சுமார் 2,500 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.”

ஜே.வி.பி./தே.ம.ச. அரசைக் கண்டித்த அவர், “இந்த அரசு தேர்தலின் போது பல வாக்குறுதிகளை அளித்தது, ஆனால் இப்போது முந்தைய அரசுகளுக்கும் இதற்கும் எந்த வித்தியாசத்தையும் நாங்கள் காணவில்லை. சாமானிய மக்களுக்கு எந்தத் தீர்வும் இல்லை” என்று கூறினார்.

போர் எதிர்ப்பு இயக்கம் மற்றும் சுயீதீனமான தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதற்கான சோ.ச.க.யின் அழைப்பை ஆதரித்த தர்மசீலன், “நாம் ஒன்றிணைந்து இந்தப் போரை நிறுத்த வேண்டும். ஈரான் மீதான அமெரிக்கப் போர் நிறுத்தப்படாவிட்டால், நாம் பசி, பஞ்சம் மற்றும் போரினால் அழிந்து போவோம்” என்று அறிவித்தார்.

புங்குடுதீவைச் சேர்ந்த 26 வயதான மீனவர் கே. டிலாசன், மக்கள் பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காகவே கடன் வாங்குவதாகக் கூறினார். எரிபொருள் விலை உயர்வு குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், “[தினமும் வேலைக்கு] யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் ஒரு சாதாரண தொழிலாளி தனது சம்பளத்தின் பெரும்பகுதியை எரிபொருளுக்காகச் செலவிடுகிறார்” என்று விளக்கினார். மீன்பிடித் தொழிலில் எங்களுக்கு 20,000 ரூபாய் கிடைத்தாலும், அதில் கிட்டத்தட்ட பாதி மண்ணெண்ணெய் மற்றும் இயந்திரப் பழுதுபார்ப்புகளுக்கே செலவாகிறது. முன்பு, ஒரு குடும்பம் ஒரு நாள் வாழ்வதற்கு 1,000 ரூபாய் போதுமானதாக இருந்தது, ஆனால் இப்போது அது ஒரு வேளை உணவுக்குக் கூடப் போதுமானதாக இல்லை.”

சிறு ஜவுளி வியாபாரியான எஸ். ஜோசப் ஞானரத்தினம், உடனடியாகப் போரைக் கண்டித்தார். “இந்தப் போர் ஆபத்தானது. இதனால் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். இது நிறுத்தப்பட வேண்டும்,” என்றார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பின் உள்நாட்டுப் போரின்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவர் நினைவு கூர்ந்தார்: “1998 இல், பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் தாக்கப்பட்டபோது, ​​1.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை நான் இழந்தேன். நாங்கள் பொருளாதாரத் தடைகள், எரிபொருள் மற்றும் மின்சாரத் தட்டுப்பாடு, மற்றும் விலையேற்றம் ஆகியவற்றை அனுபவித்தோம். ஈரானுக்கு எதிரான போரின் தாக்கம் இதைவிட மோசமாக இருக்கும்.”

மற்றொரு வர்த்தகர், இந்தப் போர் அமெரிக்காவில் உள்ள பணக்காரர்களின் நலன்களுக்காக நடத்தப்படுகிறது என்றார். “எண்ணெய் வளங்களைக் கைப்பற்ற இஸ்ரேல் அவர்களுக்கு உதவுகிறது. அத்தியாவசியப் பொருட்களைத் தவிர வேறு எதையும் மக்களால் வாங்க முடியாததால், எங்கள் வணிகங்கள் சரிந்து வருகின்றன.” தமிழ் கட்சிகளைக் கண்டித்த அவர் மேலும் கூறியதாவது: “தமிழ் கட்சிகள் எப்போதும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வல்லரசுகளுடன் தான் நிற்கும். அதுதான் அவர்களின் அரசியல்.”

சோ.ச.க.யின் வேலைத் திட்டம் பற்றிய கலந்துரையாடலுக்குப் பிறகு, கடைக்காரரான எம். ரிஷ்மி கூறியதாவது: “ஈரான் மீது போர் தொடுக்க அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் இல்லை. ஒரு சோசலிச வேலைத்திட்டம் மற்றும் சுயாதீனமான தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வதேசப் போர் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்குவதை நான் ஆதரிக்கிறேன்.”

ஊர்காவற்துறையில் பிரச்சாரம்

54 வயதான முச்சக்கர வண்டி ஓட்டுநரான ஜெ. ஜெயந்தன் கூறியதாவது: “ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கி வருகிறது என்ற கூற்று ஒரு பொய். அமெரிக்காவிடமே அணு ஆயுதங்கள் உள்ளன. அமெரிக்கா முன்பு வெனிசுலாவின் எண்ணெய் வளங்களைக் கொள்ளையடித்தது. இப்போது அவர்கள் ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். இது எங்கே போய் முடியும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் உலகை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்”.

மேலும் அவர் தனது மோசமடைந்து வரும் நிதி நிலைமையை விவரித்தார்: “எனக்கு பாடசாலை செல்லும் வயதில் மூன்று குழந்தைகள் உள்ளனர். எனது தினசரி வருமானம் சுமார் 2,000 ரூபாய், சில நேரங்களில் அதைவிடக் குறைவாகவும் இருக்கும். எரிபொருள் விலை உயர்வு எங்கள் வாழ்வாதாரத்தை அழித்துக்கொண்டிருக்கிறது. கல்விச் செலவுகள் மற்றும் வாகனப் பழுதுபார்ப்புச் செலவுகள் காரணமாக நாங்கள் கடனில் மூழ்கி வருகிறோம்.”

போருக்கான தங்கள் ஆதரவை நியாயப்படுத்தவும், இலங்கையில் நடக்கும் இனவாதப் போருக்கு சிங்கள மக்களைக் குற்றம் சாட்டவும் தமிழ் தேசியவாத அரசியல்வாதிகள் செய்யும் முயற்சிகளை ஜெயந்தன் நிராகரித்தார்: “அரசாங்கங்களால் செய்யப்படும் குற்றங்களுக்கு சாதாரண சிங்கள, முஸ்லிம் அல்லது ஈரானிய மக்கள் பொறுப்பல்ல. தங்கள் சொந்த நலன்களுக்காக இந்தப் போரை ஆதரிக்கும் தமிழ் அரசியல்வாதிகளுடன் நான் உடன்படவில்லை.”

கிளிநொச்சியைச் சேர்ந்த மீனவரான கே. வினுசன், “நாங்கள் ஒரு உள்நாட்டுப் போரில் சிக்கிக்கொண்டோம். அதனால், ஈரான், காஸா மற்றும் லெபனான் மக்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை நான் புரிந்துகொள்கிறேன்,” என்றார்.

“அந்த நாடுகளில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அமெரிக்காவின் குண்டுவீச்சால் கொல்லப்பட்டுள்ளனர். நாங்களும் அகதிகளாக வாழ்ந்தோம். அந்த மக்களும் இதே போன்ற நிலையை அனுபவிப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். அகதிகள் முகாம்களில் தொற்றுநோய்களும் பட்டினியும் ஏற்படும். அந்த மக்களால் நிலைமையைச் சமாளிக்க முடியாது. இந்தக் கொடூரமான போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

2009 இல் போரின்போது, ​​மாத்தலனில் முதியவர்களும் பெண்களும் கொல்லப்படுவதை நான் கண்டேன். இதேதான் [மத்திய கிழக்கிலும்] நடக்கிறது. குண்டுகள் வீசப்படும்போது, ​​நச்சுப் புகையால் ஏற்படும் மூச்சுத்திணறலால் முதியவர்களும் குழந்தைகளும் இறக்கின்றனர். இது மாத்தலனில் நடந்தது, ஈரானிலும் நடக்கிறது.

“சோசலிச சமத்துவக் கட்சியால் முன்னெடுக்கப்படும் போர் எதிர்ப்பு இயக்கத்தை நான் ஆதரிக்கிறேன். அதன் ஒரு பகுதியாக, தொழிலாளர்கள் மத்தியில் நடவடிக்கை குழுக்களை அமைக்கும் வேலைத்திட்டம் நல்லது. ஏனென்றால், நீங்கள் சொல்வது போல், பழைய அமைப்புகள் அனைத்தும் தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் துரோகம் செய்கின்றன,” என்று அவர் மேலும் விளக்கினார்.

மின் பொறியியல் படித்து, மின்சார வாரியத்தில் பகுதி நேரப் பாதுகாவலராகப் பணிபுரியும் 29 வயதான இ. துவாரகன் கூறியதாவது: “முதலாவதாக, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக நடத்தும் இந்த ஆக்கிரமிப்புப் போரை நான் வன்மையாக எதிர்க்கிறேன், கண்டிக்கிறேன். அங்கே தினமும் மக்கள் கொல்லப்படுகிறார்கள். இலங்கைப் போரின் முடிவில் முள்ளிவாய்க்காலில் நமது தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதைப் போலவே, தற்போது ஈரானிலும் மக்கள் கொல்லப்படுகிறார்கள், காஸாவிலும் படுகொலை செய்யப்படுகிறார்கள்.

மிக முக்கியமாக, பிள்ளைகள் படித்துக்கொண்டிருக்கும் ஒரு பாடசாலையின் மீது குண்டு வீசி அவர்களைக் கொல்வது காட்டுமிராண்டித்தனமானது. இதுதான் அமெரிக்கா உலகிற்குக் கற்பிக்கும் ஜனநாயகம். அமெரிக்கா தனது இராணுவ பலத்தைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் அமைதியின்மையை உருவாக்குகிறது. இப்போது இந்தப் போர் உலகம் முழுவதும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, இலங்கையிலும் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மீண்டும் மீண்டும் அதிகரித்து வருகின்றன.

“எங்கள் சம்பளம் உயர்த்தப்படவில்லை, ஆனால் பொருட்களின் விலைகள் மட்டுமே அதிகரித்து வருகின்றன. எனது படிப்புக்கான பயணச் செலவுகளுக்கு மட்டுமே மாதத்திற்கு 12,000–15,000 ரூபாய் செலவாகிறது. இது எங்களால் வாழ முடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. எனவே, இந்தப் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை நான் நம்பவில்லை, ஏனெனில் இதேபோன்ற பேச்சுவார்த்தைகள் எங்கள் நாட்டிலும் நடந்தன, ஆனால் எதனாலும் போரை நிறுத்த முடியவில்லை.

“எனவே, இப்போது நடக்கும் போர்களை நாம் முடிவுக்குக் கொண்டுவர விரும்பினால், அனைவரும் இந்தப் போராட்டத்தில் இணைய வேண்டும். வேறுவிதமாகக் கூறினால், நீங்கள் குறிப்பிடுவது போல, உலகெங்கிலும் உள்ள உழைக்கும் வர்க்கம் போருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.”

Loading