இலங்கையில் ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சியின் இரண்டு ஆண்டுகள்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

17வது தேசிய போர் வீரர்கள் நினைவு தினத்தில் திசாநாயக்க கலந்துகொண்ட போது [Photo: Facebook/Anura Kumara Dissanayake]

இலங்கையில் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2024 செப்டெம்பர் 21 அன்று, ஜே.வி.பி./தே.ம.ச. தலைவர் அனுர குமார திசாநாயக, சுமார் 42 சதவீத வாக்குகளைப் பெற்று ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார். இது 2019 இல் நடைபெற்ற முந்தைய ஜனாதிபதித் தேர்தலில் அவர் பெற்ற 3.1 சதவீத வாக்குகளுடன் ஒப்பிடுகையில் 12 மடங்குக்கும் மேலான அதிகரிப்பாகும். அதனைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குப் பின்னர், நவம்பர் நடுப்பகுதியில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், முந்தைய பாராளுமன்றத்தில் வெறும் மூன்று ஆசனங்களை மட்டுமே கொண்டிருந்த ஜே.வி.பி./தே.ம.ச., மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான பெரும்பான்மையைப் பெற்றது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு சற்று முன்னதாக, 2024 செப்டம்பர் 19 அன்று, உலக சோசலிச வலைத் தளம், ஜே.வி.பி./தே.ம.ச. ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் “இலங்கைத் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பொறி” என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டதுடன், ஜே.வி.பி. “முதலாளித்துவக் கட்சியாகவும், சிங்களப் பேரினவாதத்தில் ஊறிப்போன, தொழிலாள வர்க்கத்திற்கு கடும் விரோதமான” ஒரு கட்சியாக இருந்து வருவதோடு, அது “நீண்ட காலத்திற்கு முன்பே தனது சோசலிசப் பாசாங்குகளை கைவிட்டு விட்டதுடன், கடந்த மூன்று தசாப்த காலப்பகுதியில் அரசியல் ஸ்தாபனத்துடன் முற்றுமுழுதாக ஒருங்கிணைந்து கொண்டுள்ளது” என்றும் எச்சரித்தது.

தேர்தல் முடிந்து இரண்டு நாட்களுக்குப் பின்னர், 2024 செப்டம்பர் 23 அன்று, உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எச்சரித்தது: “‘ஆளும் தரப்பில் இருக்காத ஒரு கட்சி’ என்ற அதன் பிம்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஜே.வி.பி., சமூகச் செலவினங்களை அதிகரிப்பதாக வரையறுக்கப்பட்ட வாக்குறுதிகளை வழங்கிய அதேவேளை, பாரம்பரிய அரசியல் உயரடுக்கின் வெளிப்படையான ஊழலுக்கு எதிராகக் கூச்சலிட்டது…

“இவை அனைத்தும் முற்றிலும் பாசாங்கானவை ஆகும். முன்னாள் ஜனாதிபதி [ரணில்] விக்கிரமசிங்கவினால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்புத் திட்டத்தின் “வரம்புகளுக்குள்” பணியாற்றுவதற்கு ஜே.வி.பி. பகிரங்கமாக உறுதிபூண்டுள்ளது.”

கடந்த இரண்டு ஆண்டுகளில், உலக சோசலிச வலைத் தளம் (WSWS) மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) முன்வைத்த அரசியல் ஆய்வும் எச்சரிக்கைகளும் தெள்ளத்தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. தனது தேர்தல் வாக்குறுதிகளை கைவிட்டுள்ள ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தினால் கட்டளையிடப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை இரக்கமின்றி தீவிரப்படுத்தியுள்ளதுடன், அமெரிக்காவுடனும் அதன் கூட்டாளிகளுடனும் தன்னை அணிசேர்த்துக் கொண்டுள்ள அதேவேளை, அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்களுக்கும், கல்விக்கான நிதி வெட்டுக்களுக்கும் எதிராகப் போராட்டங்களில் இறங்கியுள்ள தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மீது அரச ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.), ஐ.தே.க.வில் இருந்து பிரிந்த கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) மற்றும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் உட்பட பாரம்பரிய உயரடுக்குக் கட்சிகளுக்கு எதிரான வெகுஜனங்களின் கோபத்தைச் சுரண்டிக்கொண்டே ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சிக்கு வந்தது. இந்த அனைத்துக் கட்சிகளும் முன்னர் ஆட்சியில் இருந்தவை அல்லது அந்த அரசாங்கங்களை ஆதரித்தவை என்ற வகையில், வெகுஜனங்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதற்கான கொள்கைகளை நடைமுறைப்படுத்தியமைக்குப் பொறுப்பானவையாகும்.

இலங்கை முதலாளித்துவத்தின் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடிக்கும், அதன் பாரம்பரிய ஆளும் கட்சிகளுக்கான மக்கள் ஆதரவு வீழ்ச்சிக்கும் மத்தியில், ஆளும் வர்க்கத்தின் கணிசமான பிரிவுகள் இதற்கு முன்னர் ஒருபோதும் ஆட்சியில் இருந்திராத ஜே.வி.பி./தே.ம.ச. பக்கம் திரும்பின. சமூக ரீதியாக கொந்தளிப்பை ஏற்படுத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அதனால் மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்த முடியும் என்று அவர்கள் கணக்கிட்டனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், 2022 இல், இலங்கையில் முதலாளித்துவ ஆட்சியானது கோவிட் பெருந்தொற்று, நேட்டோவால் தூண்டிவிடப்பட்ட ரஷ்யாவுக்கு எதிரான போர், அரசாங்கம் தேசியக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியமை ஆகியவற்றால் உருவான தாங்க முடியாத பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளால் தூண்டப்பட்ட தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் ஒரு வெகுஜன எழுச்சியால் அதிர்ந்து போயிருந்தது. மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்த வெகுஜனப் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்குப் பின்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்.

இலங்கை முதலாளித்துவ வர்க்கம் மற்றும் உலக ஏகாதிபத்தியத்தின் நிலைப்பாட்டில், 2022 வெகுஜன எழுச்சியைத் தடம் புரளச் செய்து ஒடுக்குவதில் அதன் வகிபாகத்தின் மூலம், ஜே.வி.பி./தே.ம.ச. உயர்ந்த பதவிக்குத் தகுதியானது என்பதை நிரூபித்தது. பிரதான பெரும் வர்த்தக எதிர்க்கட்சியான ஐ.ம.ச. உடன் இணைந்தும், போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் உதவியுடனும் செயல்பட்ட அது, வெகுஜன இயக்கத்தை நடப்பு சமூக மற்றும் அரசியல் ஒழுங்குடன் அரசியல் ரீதியில் பிணைத்து, பாராளுமன்றத்தில் இருந்த வலதுசாரிக் கட்சிகளின் கூட்டணியை அடிப்படையாகக் கொண்ட ஒரு இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்தை அமைக்க அது அழைப்பு விடுத்தது.

ஆளும் வர்க்கம், வெகுஜனங்கள் பதவி நீக்கம் செய்யக் கோரி வந்த அதே பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்பின் மூலம், என்றும் மாறாத வலதுசாரியும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியுமான ரணில் விக்கிரமசிங்கவை இடைக்கால ஜனாதிபதியாகத் திணிக்க நகர்ந்தபோது, திசாநாயகவை வேட்பாளராக நிறுத்தியதன் மூலம், ஜே.வி.பி./தே.ம.ச. இந்த ஜனநாயக விரோத சூழ்ச்சிக்கு சட்டபூர்வத் தன்மையை வழங்க உதவியது.

வெறுக்கப்பட்ட ராஜபக்ஷவுக்கு எதிரான தங்களது “வெற்றி” இவ்வளவு விரைவாகவும் எளிதாகவும் தங்களிடமிருந்து பறித்துக்கொள்ளப்பட்டது தொடர்பாக உழைக்கும் மக்கள் மத்தியில் நிலவிய குழப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, விக்கிரமசிங்க விரைவாக அடக்குமுறையைப் பயன்படுத்தி வீதிகளில் இருந்த போராட்டங்களை அகற்றுவதற்கும், எதிர்க்கட்சிகள் கோரி வந்ததைப் போல, சர்வதேச நாணய நிதியத்தின் “பிணையெடுப்புத் திட்டம்” ஒன்றைப் பெறுவதற்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் நடவடிக்கை எடுத்தார்.

ஆனால் இந்த அமைதி மிகவும் குறுகிய காலமே நீடித்தது. விக்கிரமசிங்கவும் அவரது அரசாங்கமும் அதிகரித்து வரும் வெகுஜன எதிர்ப்பை எதிர்கொண்டதுடன், சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ள பெருமளவிலான அரசாங்கச் செலவு வெட்டுக்கள், வரி அதிகரிப்புகள் மற்றும் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும் சவாலையும் தொடர்ந்து முகங்கொடுத்த நிலையில், ஆளும் வர்க்கத்தின் சக்திவாய்ந்த பிரிவுகள், கடுமையான சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதற்கும், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் பிரதான தெற்காசிய கூட்டாளியான இந்தியாவினதும் கொள்ளையடிக்கும் நிகழ்ச்சி நிரலுடன் கொழும்பை மேலும் ஒருங்கிணைப்பதற்கும் ஜே.வி.பி./தே.ம.ச.வை ஆட்சிக்குக் கொண்டுவருவதே தங்களுக்கு எஞ்சியிருந்த மோசமான தெரிவுகளில் குறைந்தபட்ச தெரிவாகக் கருதத் தொடங்கின.

சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதற்கான ஒரு கருவி

ஆட்சிக்கு வந்த உடனேயே, திசாநாயக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பு உடன்படிக்கையை மறுபேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவதாக அளித்த தேர்தல் வாக்குறுதியை கைவிட்டு, அதை முழுமையாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான திசாநாயக கடந்த இரண்டு ஆண்டுகளில் சமர்ப்பித்த வரவு-செலவுத் திட்டங்கள், உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதலை வியத்தகு அளவில் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த வரவு-செலவுத் திட்டங்கள் தொழிலாளர்களின் வருமானம் மற்றும் வேலை நிலைமைகள் மீது கொடூரமான தாக்குதல்களை உள்ளடக்கியுள்ளன. 2022 முதல் உண்மையான ஊதியங்களில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சியை எந்த வகையிலும் ஈடுசெய்யாத மிகக் குறைந்தளவிலான ஊதிய அதிகரிப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன; உழைக்கும் மக்கள் மீது விதிக்கப்படும் வரிச்சுமை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளது; 400 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்பு/தனியார்மயமாக்கல் தொடங்கப்பட்டுள்ளது—இது இலட்சக்கணக்கான தொழில்களை அழித்தொழிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு செயல்முறையாகும்; அத்துடன், வெளிநாட்டு மூலதனத்திற்கான “முதலீடுகளைப் பாதுகாப்பதற்கும்” இலாபங்களை வெளிநாடுகளுக்கு மீளக் கொண்டு செல்வதை உறுதி செய்வதற்குமாக வடிவமைக்கப்பட்ட புதிய முதலீட்டுச் சட்டத்தின் கீழ் தொழிற்துறை வலயங்கள் நிறுவப்பட்டுள்ளன.

கடந்த காலத்தில் கொண்டிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு வாய்ச்சவடால்களின் எஞ்சியிருந்த சுவடுகளையும் கைவிட்டு, ஜே.வி.பி. அரசாங்கம் கொழும்பை சீனாவுக்கு எதிரான அமெரிக்க இராணுவ-மூலோபாயத் தாக்குதலுடன் மேலும் நெருக்கமாக ஒருங்கிணைத்துள்ளதுடன், இஸ்ரேலுடனான உறவுகளையும் வலுப்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் ஏகாதிபத்திய சார்புக் கொள்கைகள், ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய குற்றவியல் போர் சம்பந்தமான அதன் அணுகுமுறையில் அம்பலமாகின்றன. பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து அது “ஆழ்ந்த கவலையை” வெளிப்படுத்தியதுடன், “பதற்றத்தைத் தணிக்க” அழைப்பு விடுத்துள்ள போதிலும், ஆக்கிரமிப்பாளர்களான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பெயரையோ அல்லது தூண்டுதலற்ற இந்த ஆக்கிரமிப்புப் போரின் பலியான ஈரானின் பெயரையோ குறிப்பிடுவதை அது வேண்டுமென்றே தவிர்த்துள்ளது.

பலஸ்தீன மக்களுக்கு எதிராக காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் அமெரிக்க ஆதரவிலான இனப்படுகொலைப் போரிலும் அது இதே நிலைப்பாட்டையே எடுத்தது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை பெயர் குறிப்பிடாமல், பதற்றத்தைத் தணிக்கவும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும் மட்டுமே அது அழைப்பு விடுத்தது.

காசா பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் அமெரிக்க ஆதரவுடனான இனப்படுகொலைத் தாக்குதலைப் பொறுத்தவரையிலும் அது இதே நிலைப்பாட்டையே எடுத்தது. மாபெரும் போர்க் குற்றங்களுக்காக அவர்களைக் கண்டிப்பது ஒருபுறமிருக்க, அமெரிக்காவையோ இஸ்ரேலையையோ பெயர் குறிப்பிடாமல், பதற்றத்தைத் தணிக்கவும் கட்டுப்பாட்டுடன் செயல்படவும் அழைப்பு விடுத்தது.

ஜே.வி.பி./தே.ம.ச., ஒடுக்கப்பட்ட தமிழ் சிறுபான்மையினருக்கு ஒரு தொகை தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியது. எதிர்பார்த்தபடியே, அவை ஒரு கொடூரமான ஏமாற்றாக நிரூபிக்கப்பட்டுள்ளன. மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரின்போதும் உடனடியாக அதன் பின்னரும் தடுத்து வைக்கப்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்தல்; போரினால் நாசமாக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை அவற்றின் அசல் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைத்தல்; மற்றும் காணாமல் போனவர்கள் (அவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டவர்கள்) தொடர்பான தகவல்களை வழங்குதல் போன்ற வாக்குறுதிகளும் அவற்றில் அடங்கும்.

தமிழர் வாக்குகளைப் பெறும் நோக்குடன், 2024 தேர்தல்களை முன்னிட்டு, ஜே.வி.பி./தே.ம.ச. இனவாதப் போருக்கு முழுமையான ஆதரவு வழங்கியது உட்பட தனது நீண்டகால சிங்களப் பேரினவாத பதிவில் இருந்து ஓரளவு தூர நிறுத்திக்கொள்ள முயன்றது.

இந்த பிற்போக்கு இனவாத அரசியலின் தொடர்ச்சி, போரின்போது இடம்பெயர்ந்த தமிழ் குடும்பங்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட காணிகளில் இராணுவத்தால் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட பௌத்த கோவிலான திஸ்ஸ விஹாரையை உத்தியோகப்பூர்வமாக பதிவு செய்வதற்கு ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையிலும், தமிழ் மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளைக் கைவிட்டதிலும் தெளிவாக வெளிப்படுகிறது.

தனது அரசாங்கம் “தேசிய ஐக்கியம்” மற்றும் “நல்லிணக்கத்திற்காக” நிற்கிறது என்று திசாநாயக கூறும்போது, தொடர்ச்சியான சிங்கள பெரும்பான்மை ஆட்சிக்கான நாசூக்கான பதங்களாகவே அவர் இவற்றைப் பயன்படுத்துகிறார். உள்நாட்டுப் போரின்போது இராணுவத்தால் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து எந்தவொரு விசாரணையையும் நடத்துவதற்கு ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் கடுமையாக எதிர்ப்பதுடன், வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பையும் தொடர்ந்து பேணி வருகிறது.

தொழிலாளர்கள் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடத் தொடங்கியுள்ள நிலையில், அது பொலிஸ்-அரசு வழிமுறைகளைப் பயன்படுத்தி எதிர்ப்பை ஒடுக்குவதற்கு விரைவாக நடவடிக்கை எடுத்துள்ளது. வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களுக்கு எதிராக அத்தியாவசிய சேவை உத்தரவுகளைப் பிறப்பித்ததுடன், பொலிஸ் மற்றும் இராணுவத்தையும் களமிறக்கியுள்ளது.

ஜே.வி.பி. தலைமையிலான அரசாங்கத்தின் மீதான வளர்ந்து வரும் அதிருப்தி, 2025 மே மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முதன்முதலாக வெளிப்பட்டது. ஆறு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், அதன் வாக்கு சுமார் 18 சதவீதப் புள்ளிகளால் வீழ்ச்சியடைந்தது. மேலும் ஆதரவை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தில், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களை ஜனநாயக விரோதமாக ஒத்திவைத்துள்ளது.

அரசாங்கத்தின் பிரதான முண்டுகோள்களில் ஒன்று தொழிற்சங்க அதிகாரத்துவங்களாகும். அதிகாரத்தின் கடிவாளத்தை தங்களிடம் ஒப்படைக்கலாம் என்று முதலாளித்துவ வர்க்கத்தை நம்ப வைப்பதற்கான கட்சியின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஜே.வி.பி. தொழிற்சங்கங்கள் தொழில்துறை போராட்ட நடவடிக்கைகள் மீது நடைமுறையில் விதித்த தடையைத் தொடர்ந்து அமுல்படுத்தி வருகின்றன. அதேநேரம், ஏனைய தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் தடுக்க முயல்வதுடன் அது சாத்தியமில்லாதபோது, அவற்றை முடக்குகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைத் திட்டத்தையும், அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த முதலாளித்துவ அரசாங்கங்கள் உழைக்கும் மக்களின் செலவில் ஏற்படுத்திய கடன்களையும் நிராகரிக்குமாறு எந்தவொரு தொழிற்சங்கமும் அழைப்பு விடுப்பதில்லை. இந்த நிலையில், இந்தக் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக தொழிலாள வர்க்கம் வெகுஜன தொழில்துறை மற்றும் அரசியல் போராட்ட நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுக்கத் தவறியமை புதுமையானதல்ல.

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சுமார் 100,000 சுகாதாரத் தொழிலாளர்கள் தங்களது கொடுப்பனவுகளில் மேற்கொள்ளப்பட்ட வெட்டுக்களுக்கு எதிராகப் போராட முயன்றனர். ஆனால், தொழிற்சங்கத் தலைவர்கள் வரையறுக்கப்பட்ட ஒருநாள் வேலைநிறுத்தங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்து, பின்னர் அரசாங்கத்தின் வேண்டுகோள்களைச் சுட்டிக்காட்டி எந்தவொரு நடவடிக்கையையும் முற்றாகக் கைவிட்டனர். இதேபோல், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், அத்தியாவசிய சேவைச் சட்டத்தை மீறி தபால் ஊழியர்கள் ஒரு வார காலம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனால், இந்த நடவடிக்கையை முறியடிப்பதற்காக அரசாங்கம் இராணுவத்தையும் பொலிஸையும் அழைத்த பின்னர், தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள் விரைவாக சரணடைந்தனர். அவர்களது 19 கோரிக்கைகளில் ஒன்றுகூட நிறைவேற்றப்படாத நிலையில், தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்புமாறு உத்தரவிட்டனர்.

எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கும், அவற்றை நடைமுறைப்படுத்தும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்திற்கும் எதிரான எதிர்ப்பு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அண்மைய காலகட்டத்தில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் உத்தரவாத நெல் விலை அதிகரிப்பு, மானியங்கள் மற்றும் விவசாயத்திற்கான ஏனைய வசதிகளையும் கோரி போராட்டங்களை நடத்தியுள்ளனர். செப்டெம்பர் தொடக்கத்தில், சுமார் 5,000 பல்கலைக்கழக ஆசிரியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதோடு, புகையிரதம் மற்றும் செவனகல சீனித் தொழிற்சாலைத் தொழிலாளர்களும், அரசாங்கத்தின் கல்வி வெட்டுக்களை எதிர்க்கும் மாணவர்களும் வேலைநிறுத்தங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அதன் இரக்கமற்ற தாக்குதல்களின் விளைவாக, ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் வளர்ந்து வரும் வெகுஜன எதிர்ப்பை எதிர்கொண்டு வருகிறது. வெரிடே ரிசேர்ச்சின் (Verité Research) “தேசத்தின் மனநிலை பற்றிய” (Mood of the Nation) சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி, அரசாங்கத்தை அங்கீகரிப்போரின் விகிதம், கடந்த பெப்ரவரி மாதம் தேர்தலுக்குப் பின்னர் இருந்த 65 சதவீதத்தில் இருந்து, ஜூலை மாதத்தில் சுமார் 50 சதவீதமாக கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

தனது ஆதரவுத் தளங்களின் வீழ்ச்சியையும் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்கள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பையும் தடுத்து நிறுத்தும் ஒரு அவநம்பிக்கையான முயற்சியாக, ஜே.வி.பி./தே.ம.ச. தனது இரண்டாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொடர் பொதுக் கூட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளது. அக்டோபர் முடிவதற்குள் “எமது அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுகள்—வளமான தேசம்” என்ற தொணிப்பொருளின் கீழ் நடைபெறும் இக்கூட்டங்களில் திசாநாயக 25 மாவட்டங்களிலும் உரையாற்றவுள்ளார்.

வெகுஜனங்களின் வாழ்க்கை நிலைமைகளில் ஏற்பட்டுள்ள எந்தவொரு முன்னேற்றத்தையும் சுட்டிக்காட்ட முடியாத நிலையில், இலங்கை மற்றும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கு, சுதந்திரத்திற்குப் பின்னர் தற்போது ஆழமாக மதிப்பிழந்துள்ள பாரம்பரிய ஆளும் கட்சிகளுக்குத் தலைமை தாங்கி வந்த ஒரு சில உயரடுக்குக் குடும்பங்களின் “ஊழலே” காரணம் என்று குற்றம்சாட்டும் ஜே.வி.பி./தே.ம.ச.வின் முயற்சிகளை திசாநாயக தீவிரப்படுத்தி வருகிறார். ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், “இலங்கை ஒரு ‘கறுப்பு அரசாக’ செயல்பட்டது”, ஆனால் அரசாங்கத்தின் “ஊழலுக்கு எதிரான போர்” மற்றும் “சட்டத்தின் ஆட்சியை” நடைமுறைப்படுத்துவதன் காரணமாக இப்போது இது மாறிவருவதாக திசாநாயக முழங்குகின்றார். அதன் இரண்டு ஆண்டுகால ஆட்சி, பெரு வணிகப் பெரும் செல்வந்த தட்டினருக்கு செழிப்பையும், உழைக்கும் மக்களுக்கு வறுமை அதிகரிப்பையுமே கொண்டு வந்துள்ளது.

உலக வங்கியின் மதிப்பீடுகளின்படி, வறுமை இன்னமும் 22 சதவீதத்திற்கு நெருக்கமாக உள்ள அதேவேளை, மக்கள்தொகையில் 10 சதவீதத்தினர் வறுமைக் கோட்டிற்கு சற்றே மேலே வாழ்கின்றனர். சுமார் 39 சதவீதமான குடும்பங்கள் போதுமான உணவைப் பெற முடியாத நிலையில் உள்ள அதேவேளை, ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2022 முதல் அரச ஊழியர்களின் ஊதியங்கள் 33 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளன. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட சமீபத்திய ஆய்வு அறிக்கை, குறைந்தபட்ச ஊதியம் மிகக் குறைவாக உள்ள 130 நாடுகளில், பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் இந்தியாவை விடவும் கீழே இலங்கையை 120 ஆவது இடத்தில் வைத்துள்ளது.

மறுபுறம், முதலாளித்துவ வர்க்கத்தால் ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சியின் கீழ் இலங்கை ஒரு “செழிப்பான நாடாக” இருப்பதாகக் கொண்டாட முடியும். முன்னணி நிறுவனங்கள் தொடர்ச்சியாக இலாப அதிகரிப்பை பதிவு செய்து வருகின்றன. அவற்றில், நாட்டின் மிகப்பெரிய கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், 2026 மார்ச்சில் முடிவடைந்த நிதியாண்டில் வரிக்கு முந்தைய இலாபம் 143 சதவீதம் அதிகரித்துள்ளதாகப் பதிவு செய்துள்ளது. இலங்கையின் மிகப்பெரிய தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கி, 2026 ஜூன் காலாண்டில் 17.49 பில்லியன் ரூபாய் இலாபத்தை அறிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 8 சதவீத அதிகரிப்பாகும்.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைத் திட்டத்தை ஆதரிக்கின்றன. “வெகுஜனங்கள் மீது சுமைகளைச் சுமத்தக்கூடாது” என்ற அவற்றின் வேண்டுகோள்கள் வெளிப்படையான மோசடியாகும்.

2024 இன் பிற்பகுதியில் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டதை “மக்களின் எதிர்பார்ப்புகளின் வெளிப்பாடு” என்று புகழ்ந்த போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.), இப்போது அரசாங்கம் அதன் முன்னோடிகளின் வேலைத்திட்டத்தையே நடைமுறைப்படுத்துவதாக விமர்சித்து வருகிறது. ஆனால், முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியை இரக்கமின்றி அமுல்படுத்துவதற்கான ஒரு கருவி என்று ஜே.வி.பி./தே.ம.ச.வை அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக, முதலாளித்துவத்தின் பாரம்பரிய கட்சிகளுக்கு ஒரு முற்போக்கான மாற்றீடாக அதனைத் தொடர்ந்தும் முன்னிறுத்தி வருவதுடன் அரசாங்கம் “சரியான பாதையை” பின்பற்றுவதற்கு அதன் மீது அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

தொழிலாள வர்க்கமும் கிராமப்புற உழைப்பாளர்களும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்துடன் நேருக்கு நேர் மோதும் நிலையில் உள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ், ஒரு பெரிய வரவு-செலவுத் திட்ட உபரியை உருவாக்கும் வகையில் சிக்கன நடவடிக்கைகளையும் தொழிலாளர் சுரண்டலையும் பாரியளவில் தீவிரப்படுத்துவதற்கும், 2028 ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 5 பில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்தத் தொடங்குவதற்கும் அது உறுதியளித்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, வர்த்தகப் போர், பாரிய சமநிலையின்மைகள், வளர்ந்து வரும் உலகப் போர் ஆகியவற்றின் காரணமாக உலகளாவிய பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலைமைகளின் கீழ் இதனைச் செய்ய வேண்டியுள்ளது.

தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர மூலோபாயத்துடன் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும்

2022 வெகுஜன எழுச்சி, படிப்படியாக முன்னணிக்கு வந்து, ராஜபக்ஷவைப் பதவியில் இருந்து அகற்றிய வெகுஜன இயக்கத்தில் மேலாதிக்கம் செலுத்தி, தொழிலாள வர்க்கத்தின் மகத்தான சமூக சக்தியை வெளிப்படுத்தியது. ஆனால், அதன் அடிப்படைப் படிப்பினை என்னவென்றால், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தையும் மேலாதிக்கத்தையும் நிறுவுவதற்கான போராட்டத்திற்குத் தலைமை கொடுப்பதற்காக, ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டமான நிரந்தரப் புரட்சியை அடிப்படையாகக் கொண்ட ஒரு புரட்சிகரத் தலைமையை தொழிலாள வர்க்கத்தில் கட்டியெழுப்ப வேண்டிய அவசர அவசியமாகும். இதன் மூலம், இலங்கை முதலாளித்துவத்திற்கு எதிராக ஒடுக்கப்பட்ட அனைவரையும் அணிதிரட்டுவதுடன், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுடன் இணைந்து உலக ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் போராட முடியும்.

அத்தகைய முன்னணிக் கட்சியை அபிவிருத்தி செய்வதன் மூலமே, முதலாளித்துவ நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கம் தனது சொந்த சோசலிசத் தீர்வை, அதாவது, உள்நாட்டு மற்றும் பூகோள மூலதனத்தின் இலாபத் தேவைகளுக்கு அடிபணிவதை நிராகரிக்கும் ஒரு தீர்வை அமுல்படுத்த முடியும்.

அத்தகைய கட்சியைக் கட்டியெழுப்புவதற்கும், தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட உழைப்பாளர்களையும் அணிதிரட்டுவதற்குமான வேலைத்திட்டமும் முன்னோக்கும், “ஜே.வி.பி. அரசாங்கத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிரான போராட்டத்தில் சோ.ச.க.வின் மூலோபாயமும் வேலைத்திட்டமும்” என்ற பிரதான தீர்மானத்தில் விரிவாக முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தீர்மானம் கடந்த மாதம் நடைபெற்ற கட்சியின் நான்காவது தேசியப் பேராளர் மாநாட்டில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இது, ஜே.வி.பி. ஒரு தேசியவாத குட்டி முதலாளித்துவ தீவிரவாத அமைப்பிலிருந்து முதலாளித்துவ ஆட்சிக்கான, சமூக எதிர்ப்புரட்சிகர கட்சியாகப் பரிணமித்ததை மீளய்வு செய்கின்றது. ஜே.வி.பி. ஒரு காலத்தில் “மார்க்சிஸ்ட்” அல்லது “சோசலிஸ்ட்” ஆக இருந்து பின்னரே சீரழிந்தது என்ற கூற்றை அம்பலப்படுத்துகின்ற தீர்மானம், ஆரம்பத்தில் இருந்தே ஜே.வி.பி./தே.ம.ச. தொழிலாள வர்க்கத்திற்கு விரோதமாக இருந்தது என்பதை சோ.ச.க. ஆவணப்படுத்துகிறது. ஸ்ராலினிசம், மாவோயிச-காஸ்ட்ரோயிச கொரில்லாவாதம் மற்றும் சிங்கள ஜனரஞ்சகவாதம் ஆகியவற்றின் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட கலவையை அடிப்படையாகக் கொண்டு, அது தொழிலாள வர்க்கத்தை “தேசப்பற்று மிக்க” முதலாளித்துவ வர்க்கம் என்று அழைக்கப்பட்டதற்கு அடிபணியச் செய்வதை ஆதரித்ததோடு, தொழிலாளர்களின் பொருளாதாரப் போராட்டங்களை “கஞ்சி கோப்பைகளுக்கான போராட்டங்கள்” என்று இழிவுபடுத்தியதுடன் தமிழ் தொழிலாளர்களுக்கு எதிராக பேரினவாத வசைமொழிகளைப் பயன்படுத்தியது. 1980களில், தமிழ் மக்களுக்கு எதிரான போருக்கும் ஒற்றையாட்சி அரசைப் பாதுகாப்பதற்கும் முழுமையான ஆதரவை வழங்கியதன் மூலம், அது ஏற்கனவே முதலாளித்துவ வர்க்கத்திற்கும் அதன் அரசுக்கும் ஒரு துணை அமைப்பாகச் செயல்பட்டு வந்தது.

ஜே.வி.பி.க்கு எதிராக, நிரந்தரப் புரட்சிக் கொள்கைக்காக பு.க.க.-சோ.ச.க. நடத்திய போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, முதலாளித்துவ சார்பு தொழிற்சங்க எந்திரங்கள் உட்பட, முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து கட்சிகள் மற்றும் நிறுவனங்களுக்கும் எதிரான, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டத்திற்கான ஒரு வேலைத்திட்டத்தை பேராளர் மாநாட்டின் தீர்மானம் முன்வைக்கிறது.

தொழிலாளர்களின் சமூக சக்தியை அணிதிரட்டுவதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கும், தொழிலாளர்களின் சுயாதீனமான அரசியல் பலத்தை கட்டியெழுப்புவதற்குமான அடிப்படையாக, ஒவ்வொரு வேலைத் தளத்திலும், பெருந்தோட்டத்திலும், பிரதான பொருளாதார மையத்திலும் தொழிலாளர்களால் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டும் என்று சோ.ச.க. முன்மொழிகிறது.

முதலாளித்துவ அமைப்பு அல்லது தேசிய அரசின் கட்டமைப்புக்குள் உழைக்கும் மக்களுக்கு எந்தவொரு முற்போக்கான தீர்வும் கிடையாது என்பதை சோ.ச.க. வலியுறுத்துகிறது. சோசலிசக் கொள்கைகளுக்கான ஒரு வேலைத்திட்டத்தை வகுப்பதற்கும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கும், இந்த சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை அடிப்படையாகக் கொண்டு, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான பேராளர் மாநாட்டை அமைக்குமாறு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

இந்தப் போராட்டத்தின் சர்வதேசத் தன்மையை வலியுறுத்தும் சோ.ச.க., தமது நடவடிக்கைக் குழுக்களை, தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியுடன் (IWA-RFC) ஒருங்கிணைப்பதன் மூலம் இலங்கைத் தொழிலாளர்கள் சர்வதேச தொழிலாளர் வர்க்கத்துடன் ஒன்றிணைய வேண்டும் என்றும், உலகளாவிய தொழிலாளர்களின் எதிர்த்தாக்குதலுக்கான ஒருங்கிணைப்பு மையமாக அதைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் அது சுட்டிக்காட்டுகிறது.

ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சியின் இரண்டு ஆண்டுகாலப் பதிவானது, உலக சோசலிச வலைத் தளமும் சோ.ச.க.யும் முன்வைத்த அரசியல் ஆய்வையும் எச்சரிக்கைகளையும் முழுமையாக உறுதிப்படுத்தியுள்ளது. சோ.ச.க.வில் இணைந்து, சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை கட்டியெழுப்ப எதிர்வரும் போராட்டங்களுக்கு தலைமை கொடுக்கும் வெகுஜன புரட்சிகரக் கட்சியாக அதைக் கட்டியெழுப்புங்கள்.

Loading