துனிசியாவில், பத்திரிகையாளர் அப்தெரஜாக் ஜோர்குய்யின் தீக்குளிப்புக்குப் பின்னர் ஆர்ப்பாட்டங்கள் வெடிக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

துனிசியாவில் பத்திரிகையாளரான அப்தெரஜாக் ஜோர்குய் தீக்குளித்து தன்னையே அழித்துக் கொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு நகரங்கள் எங்கிலும் மூன்று நாட்களாக பொலிசாருடன் தொழிலாளர்களும் இளைஞர்களும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். 32 வயது ஒளிப்பதிவாளர், தனது செயல் ஒரு புதிய புரட்சியின் ஆரம்பத்திற்கு உதவியாக இருக்கும் என்று அவர் நம்புவதாக தெரிவித்து, ஒரு எழுச்சிக்கு அழைப்பு விடுக்கும் ஒரு காணொளியை சமூக ஊடகங்களில் பதிவிட்டு பின்னர், அவரது சொந்த ஊரான கசேரைனில் (Kasserine) தன்னையே எரித்து அழித்துக் கொண்டார்.

டிசம்பர் 2010 ல் துனிசிய காய்கறி வியாபாரியான மொஹமத் பௌஜிஜி (Mohamed Bouazizi) தீகுளித்து தன்னையே அழித்துக் கொண்ட சம்பவம் துனிசியாவிலும் எகிப்திலும் புரட்சிகர எழுச்சிகளைத் தூண்டிவிட்டு எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், தற்போது இவரது தற்கொலை நிகழ்ந்துள்ளது. அதிகாரத்தை கைப்பற்றும் வகையில் தொழிலாள வர்க்கத்தை வழிநடத்த தகுதி வாய்ந்த ஒரு புரட்சிகர தலைமை அங்கு இல்லாத நிலையில், பழைய துனிசிய ஆட்சி தன்னை மறுஸ்தாபகம் செய்து கொள்ளவும், மற்றும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க வங்கிகளின் நிதிய உத்தரவை திணிக்கவும் முடிந்தது. துனிசியாவின் தற்போதைய ஜனாதிபதி பெஜி கெய்ட் எஸ்ஸெப்சி (Beji Caid Essebsi), 14 ஜனவரி 2011 ல் தொழிலாள வர்க்கத்தால் தூக்கியெறியப்பட்ட சர்வாதிகாரியான ஜின் எல் அபிடின் பென் அலியின் (Zine El Abidine Ben Ali) கீழ் சேவையாற்றியவர் ஆவார்.

ஜோர்குய் தனது காணொளியில், துனிசிய ஆட்சியையும் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்பதையும் கண்டனம் செய்து, இவ்வாறு தெரிவித்தார்: “கசேரைனில் அனைத்து வேலையற்ற இளைஞர்கள், பசியில் வாடுவோர் மற்றும் வளங்கள் இல்லாதவர்களுக்கு நான் ஒன்றை தெரிவிக்கிறேன்: நாம் எதிர்க்கும் போதெல்லாம், பயங்கரவாதம் என்ற ஒன்றை நம்மீது திருப்பி எறிகின்றனர். வேலை தேடும் உரிமையைக் கோருவதற்கு நாம் வீதிகளில் இறங்குகின்றோம், அவர்களோ பயங்கரவாதத்தைப் பற்றிப் பேச முனைகின்றார்கள், அதன் அர்த்தம் என்னவென்றால், ‘வாயை மூடி வீட்டிற்குச் சென்று பட்டினியாக கிட’ என்பதாகும். கசேரைனின் மக்களுக்கும் வேலையற்றோருக்கும் நான் சொல்கிறேன், இன்று நான் மட்டுமே ஒரு புரட்சியைச் செய்வேன். என்னுடன் சேர விரும்புவோர் வரவேற்கப்படுகிறார்கள். அதற்குப் பின்னர் யாரொருவருக்கு வேலை கிடைத்தாலும், எனது தீக்குளிப்பு வீணாகிவிடாது.”

மேலும், அவர் இதையும் சேர்த்துக் கூறினார்: “நாங்கள் நோய்வாய்ப்பட்டு சோர்ந்து விட்டோம், எட்டு ஆண்டுகளாக அவர்கள் எங்களுக்கு வாக்குறுதிகளை வாரி வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள் என்றாலும் அவை அனைத்தும் பொய்யே. என்னைப் பொறுத்தவரையில், நான் எந்தவொரு கட்சியையும் சார்ந்தவனில்லை. வேலையற்றோரும் ஒட்டுமொத்த பிராந்திய மக்களும் ஒரு சதம் கூட கொண்டிராத நிலையில், அவர்கள் வேலையற்றவர்களைப் பற்றியெல்லாம் மறந்துவிட்டு, செல்வந்தர்களுக்காக பேசுகின்றனர்.

ஜோர்குய் தீக்குளித்து தன்னையே அழித்துக் கொண்ட பின்னர், கசேரைனிலும், அத்துடன் ஜேபெனியானா (Jbeniana), டீபோர்பா (Tebourba) மற்றும் தொழிலாள வர்க்க தலைநகரம் துனிஸ் (Tunis) போன்ற பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் ஒவ்வொரு இரவிலும் வெடித்தன. கசேரைனில் இளைஞர்கள் டயர்களை எரித்தும், கலகப் பிரிவு பொலிசாரின் சரமாரியான கண்ணீர்ப்புகை வீச்சிற்கு கற்களை வீசியும் பதிலிறுத்தனர்.

நடைமுறையில் பணவீக்கம் 7.5 சதவிகிதமாக இருந்தும் துனிசிய டினாரின் மதிப்பு சரிவு கண்டும் வருவதால், வேலையின்மை விகிதம், தேசியளவில் 15.5 சதவிகிதமாகவும், கசேரைன் முழுவதிலும் அதைப்போல இரு மடங்காகவும் இருக்கின்ற நிலையில், தொழிலாளர்கள் மத்தியில் சீற்றம் பெருகி வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் இணைந்த கசேரைனைச் சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியரான நெபில் காஸ்சுமி (Nebil Gassoumi), France Info வானொலிக்கு இவ்வாறு தெரிவித்தார்: “இங்கு நடப்பது எதுவும் நன்றாக இல்லை. டினாரின் மதிப்பு குறைந்துள்ளதால், நமது வாழ்க்கைத் தரங்களும் தாழ்ந்துள்ளன, ஏன் வேலை செய்பவர்களின் நிலை கூட அப்படித்தான் உள்ளது. இங்கு ஒவ்வொருவரும் பாதிக்கப்படுகின்றனர்.” “இங்கு முதலீட்டிற்கும் வழியில்லை, வேலை தேடுபவர்களுக்கு வேலையும் இல்லை” என்றும் அவர் சேர்த்துக் கூறினார். மேலும், இந்த ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என்று நம்பியதாகவும் காஸ்சுமி தெரிவித்தார்.

இந்த வாரத்தில் கூட, துனிசியாவில் ஐவோரியர்களின் சங்கத்தின் தலைவரான ஃபலிகோ குலிபாலியின் (Falikou Coulibaly) கொலையை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன. இது, துனிசியாவில் நிலவும் வேலை நிலைமைகள் மற்றும் இனவெறி பிரச்சினை குறித்து துணை-சஹாரா ஆபிரிக்கத் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் கட்டுக்கடங்காத விமர்சனத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. “எங்களை ஏன் நசுக்குகிறீர்கள்? எங்களை துணை-சஹாரன்கள் என்று ஏன் நீங்கள் அந்நியப்படுத்துகிறீர்கள்? நேர்மையாக இருக்க வேண்டும் என்று இதைத் தான் நீங்கள் சொல்கிறீர்களா? தார்மீக ரீதியாகவும், உளரீதியாகவும் நாங்கள் பயங்கரமாக உணர்கிறோம்,” என்று RFI குறித்த துனிசியா பற்றி ஒரு தொழிலாளியான அலெக்ஸாண்டர் டியோரே (Alexandre Diaore) கூறினார்.

“வடக்கு புறநகர் பகுதியில் சில்லறை விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள பகுதியான கரெஃபூருக்கு (Carrefour) இரண்டு கறுப்பு இளம் பணிப்பெண்களுடன் சாமான் வாங்கச் செல்வது என்பது ஒரு குறிப்பிட்ட முதலாளித்துவ அடுக்கினருக்கு முற்றிலும் நாகரீகமான நடைமுறையாக உள்ளது” என்று AFP தெரிவிக்கிறது. அதே நேரத்தில், ஐவொரி கடற்கரையோரப் பகுதி அல்லது அருகாமை நாடுகளைச் சேர்ந்த இளம் பணிப்பெண்கள் வாரத்தின் ஏழு நாட்களிலும் வேலை செய்கிறார்கள், மேலும் குறைந்தளவு ஊதியம் பெறுவதுடன், அவர்களது கடவுச்சீட்டுக்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன” என்றும் குறிப்பிடுகிறது. “ஒரு செனகலிய (Senegalese) மாணவர் மரத்தின் மீது தூங்கி வாழைப்பழங்களை மட்டுமே உணவாக உட்கொண்டு வாழ்கிறாரா என்று கேட்டதான” புகார் பற்றி wire service உம் குறிப்பிட்டது.

வளர்ந்து வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு துனிசிய அரசாங்கம்பொலிஸ் வன்முறை மற்றும் ஒரு ஒடுக்குமுறைக்கான உயர்மட்டத் திட்டங்களால் பதிலளிக்கிறது. கசேரைனின் எண்ணூர் (Ennour) மற்றும் எஸ்ஸோஹோர் (Ezzouhour) மாவட்டங்களில், பொலிசார் வீடு வீடாகச் சென்று சோதனையிட்டு, கலகம் செய்ததாக குற்றம்சாட்டி 16 பேரைக் கைது செய்துள்ளனர். துனிசிய உள்துறை அமைச்சகத்தால் நிறுவப்பட்ட ஐந்து நிலையான கண்காணிப்பு கேமராக்களை அழித்ததாக குற்றம் சாட்டின.

நேற்று, அமைச்சர்களின் துனிசிய ஆலோசனை சபை சந்தித்தது. “அமைதியான உரிமை கோரும் ஆர்ப்பாட்டத்தை மதிப்பதற்கான அவசியத்தை” அது உறுதிப்படுத்திய அதே வேளையில், ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் அனைத்து உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் செயலாற்றியது. பென் அலி கவிழ்க்கப்பட்டதை நினைவுகூரும் ஆர்ப்பாட்டங்களின் போது, இராணுவ மற்றும் பொலிசாரின் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகங்களும் ஒத்துழைக்கின்றன என்பதுடன், எதிர்ப்பாளர்களை அச்சுறுத்துவதற்கு ஊடக மற்றும் பொலிஸ் வட்டாரங்களில் ஒரு ஒருங்கிணைந்த வெறித்தனமான பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அல்லது அவர்கள் பயங்கரவாதிகளாகவும் குற்றவாளிகளாகவும் அவமதிக்கப்படுகிறார்கள்.

La Presse இல் “மிகுதியானவர்கள் மற்றும் தெரியாதவர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்,” என தலைப்பிடப்பட்ட தலையங்கத்தில் அப்தெல்கிரிம் டெர்மெக் (Abdelkrim Dermech) பின்வருமாறு குறிப்பிட்டார்:

“17 டிசம்பர் 2010 இல் பௌஜிஜி யும், மற்றும் கசேரைனில் திங்களன்று அபெதெரஜாக் ஜோர்குய் யும் கொளுத்திப் போட்ட தீப்பொறிகளுக்கு இடையிலான ஒற்றுமையை உருவாக்கியவர்கள் அத்தகைய ஒப்பீட்டை இனிமேல் நீண்டகாலத்திற்கு செய்ய முடியாது என்பதை ஏனோ மறந்துவிடுகிறார்கள். குறைந்த ஆதரவுள்ள பகுதி என்று அழைக்கப்படும் பிராந்தியங்களில், தற்போதைய அரசியல் ஸ்தாபகம் மற்றும் இளைஞர்களுக்கும் இடையே ஒரு உண்மையான பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், வன்முறை, முட்டாள்தனமான ஆக்கிரமிப்பு, மற்றும் அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது என்பனவற்றை இனிமேல் நீண்ட காலத்திற்கு ஏற்றுக் கொள்ளவோ, சகித்துக் கொள்ளவோ அல்லது ஜனநாயக முறையில் பார்க்கவோ முடியாது.”

வியாழனன்று, ஜோர்குய் இறப்பின் சூழ்நிலைகள் “தெளிவற்றதாக,” உள்ளது என்றும், தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் விசாரணை தொடர்பான ஒரு ஆரம்ப அறிக்கையை பொலிசார் வெளியிட்டுள்ளனர் என்றும் அமைச்சரவை அபத்தமாக அறிவித்தது. Kapitalis வலைத் தளம் பொலிஸின் பின்வரும் கண்டுபிடிப்புக்களை ஒப்புக் கொண்டது: “டிசம்பர் 25 மற்றும் 26, 2018 ஆம் தேதிகளில் இளம் பருவத்தினர் உட்பட தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு, அவர்களை விசாரணை செய்ததில், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையே இந்த கடத்தல்காரர்கள் ஊடுருவி, பொலிசையும் தேசிய பாதுகாப்பு நிலையங்களையும் கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளால் (Molotov cocktail) வீசி தாக்குவதற்கு அவர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.”

இதுவரையிலும், துனிசிய பாதுகாப்பு அதிகாரிகள், பென் அலியின் கீழ் அவர்கள் செய்த சித்திரவதை மற்றும் பிற குற்றங்களைச் சுமத்தி அவர்களை இன்னமும் விசாரணை செய்து வருகின்றனர், இந்த “வாக்குமூலங்கள்” – எஸ்ஸெப்சியின் அமைச்சரவையினால் எப்படி வடிவமைத்து தரப்பட்டதோ அப்படியே அவர்களால் ஒப்பிக்கப்பட்டதான இவை – எந்தவித நம்பகத்தன்மையையும் கொண்டிருக்கவில்லை.

21 ம் நூற்றாண்டில் தொழிலாள வர்க்கத்தின் முதல் புரட்சிகர எழுச்சியில் பென் அலியின் வீழ்ச்சிக்குப் பின்னர் எட்டு ஆண்டுகள் கழித்து, தொழிலாளர்களை போராட்டம் செய்ய உந்தியதான எந்தவொரு கோரிக்கைக்கும் தீர்வு காணப்படவில்லை. பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முதலாளித்துவம் திவாலாகிப் போயுள்ளது. துனிசியாவின் ஜனநாயக ரீதியான சீர்திருத்தங்களைப் பொறுத்தவரை, பழைய ஆட்சி மற்றும் பழைய பொலிஸ் அரசுக்கு சற்று ஒரு மாற்றாக அவர்கள் இருந்தனர், அதுவே இப்போது “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற ஒரு கட்டுக்கதையின் கீழ் தொடர்கிறது.

இது, பென் அலியின் வெளியேற்றத்திற்கு பின்னர் உடனடியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் (ICFI) முன்வைக்கப்பட்ட முன்னோக்கை உறுதிப்படுத்துகிறது. துனிசியாவிலும், அதனையடுத்து எகிப்திலும் தோன்றிய புரட்சிகர எழுச்சிகள், சர்வதேச வர்க்கப் போராட்டத்தில் ஒரு புதிய காலப்பகுதியையும், உலக சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தையும் குறித்து நிற்கின்றன என்பதை ICFI அடையாளங்கண்டது.

“துனிசியாவில் உருவாகியுள்ள வெகுஜன எழுச்சியும், நிரந்தர புரட்சிக்கான முன்னோக்கும்”, என்ற 17 ஜனவரி 2011 ஆம் தேதிய அதன் அறிக்கை எச்சரித்ததாவது:

ஆயினும், இந்த துனிசிய வெகுஜனங்கள், அவர்களது போராட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில் மட்டுமே உள்ளனர். புதிய இடைக்கால ஜனாதிபதியின் கீழ் தொடர்ச்சியான இராணுவ வன்முறை கொண்டு ஏற்கனவே தொழிலாள வர்க்கம் ஒடுக்கப்பட்டு வந்துள்ள நிலையில், ஆழ்ந்த ஆபத்துக்களையே அவர்கள் எதிர்கொள்கின்றனர். புரட்சிகர வேலைத்திட்டமும் தலைமையும் குறித்த முக்கியமான கேள்வி இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளது. ஒரு புரட்சிகர தலைமைக்கான வளர்ச்சி இல்லாமல், பென் அலிக்கு பதிலீடாக தவிர்க்கமுடியாமல் மற்றொரு சர்வாதிகார ஆட்சி தான் அங்கு ஸ்தாபிக்கப்படும்.

கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலம் நீடித்த போர் மற்றும் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், துனிசியாவிலும் மேலும் அதற்கு அப்பாலும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு புதிய வெடிப்பு தொடர்கிறது. அமசன் மற்றும் ரைன்எயர் விமான தொழிலாளர்களின் சர்வதேச அளவிலான ஆர்ப்பாட்டங்கள், ஈரானிய தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அமெரிக்க ஆசிரியர்கள் நடத்திய வெகுஜன வேலைநிறுத்தங்கள் ஆகியவை நடந்து முடிந்து ஓராண்டுக்குப் பின்னர், சூடானில் ரொட்டிக்கான கலவரங்கள் வெடிப்பது போல, அரசியல் எதிர்ப்புக்களும் வேலைநிறுத்தங்களும் பிரான்ஸ், போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளை உலுக்கி வருகின்றன.

புரட்சிக்காக அழைப்பு விடுத்து தற்கொலை செய்து கொண்ட ஜோர்குய்யின் இந்த முடிவானது குறிப்பாக, இந்த சூழலில் தொழிலாள வர்க்கத்திற்குள் புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவதுதான் முக்கியமான கேள்வி என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுப்பாய்வுக்கு ஒரு துன்பியலான விளக்கமாக இருக்கிறது. எனவே, துனிசியா, மத்திய தரைக்கடல் மற்றும் உலகெங்கிலுமான ICFI இன் பல்வேறு பிரிவுகளை கட்டியெழுப்புவது ஒன்றே தற்போதைய சவாலாக உள்ளது.