டி கிளர்க்கின் மரணத்தால் அதன் மோசமான வரலாறு அடிக்கோடிட்டுக் காட்டப்படுகையில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தேர்தல் தோல்வியை சந்திக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தென்னாபிரிக்காவில் சமீபத்தில் நடந்த நாடு தழுவிய நகராட்சிகள் தேர்தல்களில் ஜனாதிபதி சிரில் ராமபோசாவின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) வெறும் 46 சதவீத வாக்குகளைப் பெற்று, முதல் முறையாக 50 சதவீத வரம்பை கடக்கத் தவறியது.

வெறுக்கப்பட்ட நிறவெறி ஆட்சி மற்றும் சிறுபான்மை வெள்ளையினத்தவர் ஆட்சியின் முடிவைத் தொடர்ந்து 1994 தேர்தல்களில் பதவியேற்றதிலிருந்து இது ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் மிக மோசமான முடிவாகும்.

உத்தியோகபூர்வ கணக்கீட்டின் படி:

• ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் 2016 நகராட்சித் தேர்தலில் 54 சதவீத வாக்குகளுடன் ஒப்பிடுகையில் 46 சதவீத வாக்குகளைப் பெற்றது.

• பிரதான எதிர்க் கட்சியான ஜனநாயகக் கூட்டணி (DA), வெள்ளையின மற்றும் நிற (பல இனக் குடிமக்களை குறிக்கும் தென்னாபிரிக்காவின் வார்த்தை) வாக்காளர்களிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்று, இது 2016 இல் 27 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 22 சதவீதத்தை பெற்றது.

• ஜூலியஸ் மலேமாவின் கறுப்பின தேசியவாத பொருளாதார சுதந்திரப் போராளிகள் 2016 இல் 8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 10 சதவீதத்தை வென்றனர்.

• ஜூலூ இன-தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஜூலூ இன்கார்த்தா சுதந்திரக் கட்சி (IFP) 6% வெற்றி பெற்றது.

• ஆபிரிக்க தேசியவாத சுதந்திர முன்னணி பிளஸ் கட்சி 2 சதவீதம் மற்றும் வெற்றி பெற்றது

• இனவெறி கருத்துக்களை உரத்துக் கூறும் தலைவரைக் கொண்ட புதிதாக உருவாக்கப்பட்ட ActionSA 2 சதவிகிதம் வென்றது.

ஜோகன்னஸ்பேர்க், பிரிட்டோரியா மற்றும் க்கெபெர்ஹா (முன்னர் போர்ட் எலிசபெத் என அறியப்பட்டது) உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தோல்விகளை சந்தித்தது மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமாவின் சொந்த மாகாணமான குவாசுலு-நடாலில் பெரும்பான்மையை இழந்தது. அது 250 நகராட்சிகளில் 161 இல் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. 2016 இல் 213 நகராட்சிகளில் 176 க்கு எதிராக 250 நகராட்சிகளில் 161 இல் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது, அதே நேரத்தில் DA 13 நகராட்சிகளில் பெரும்பான்மை மற்றும் IFP 10 இல் உள்ளது. மொத்தம் 66 நகராட்சிகளில் எவருக்கும் பெரும்பான்மை இல்லாதுள்ளது.

இந்த தோல்வி ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் மற்றும் முக்கிய எதிர்க்கட்சிகள் வாக்குகளை இழந்ததில் மட்டும் வெளிப்படுத்தப்படவில்லை. தென்னாபிரிக்காவின் பதிவு செய்யப்பட்ட 26 மில்லியன் வாக்காளர்களில் வெறும் 47 சதவிகிதம் வாக்களித்தனர். இது கடந்த தேர்தலை விட 11 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால் இதுவும் தோல்வியின் அளவைக் குறைக்கத் தவறிவிட்டது. தென்னாபிரிக்காவின் 40 மில்லியன் மக்களில் தகுதியுள்ள மூன்று வாக்காளர்களில் ஒருவர் என்ற விகிதத்தில் 13 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். முக்கியமாக தேர்தல் அரசியலில் ஏமாற்றமடைந்த முதல்முறை வாக்காளர்கள், தமது வாக்கை பதிவு செய்யக்கூட கவலைப்படவில்லை.

சிறில் ராம்போசா (Credit: Tasnim News Agency)

பரவலான ஊழலால் கோபம் அதிகரித்ததால் 2016ல் நடந்த நகராட்சித் தேர்தல்களிலும், 2019ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தோல்வியடைந்தது. 2018 ஆம் ஆண்டில், ஆபிரிக்க தேசிய காங்கிரஸில் உள்ள ராமபோசாவின் பிரிவு, அவரது நடவடிக்கைகள் மற்றும் அவரது கூட்டாளிகளின் நடவடிக்கைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தென்னாபிரிக்காவின் வணிக நலன்களை மோசமாக பாதிக்கின்றன மற்றும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தேர்தல் ஆதரவை இழக்கின்றது என்ற அச்சத்தின் மத்தியில், நீண்டகால ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக அப்போதைய ஜனாதிபதி ஜூமாவை இராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தியது.

17 வயதிலிருந்தே நிறவெறி எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு முன்னாள் போராளியான 79 வயதான ஜூமா, நெல்சன் மண்டேலாவுடன் 1960களில் ராபன் தீவில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துடன், 1990 வரை ஸ்ராலினிச தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் (SACP) உறுப்பினரும் ஆவார். இவர் ஊழல் மற்றும் அரசு கைப்பற்றல் தொடர்பாக சோண்டோ ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க மறுத்ததற்காக நீதிமன்ற அவமதிப்புக்காக 15 மாத சிறைத்தண்டனை பெற்றார். அவரது ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் குவாசுலு-நடாலில், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு பரந்த இயக்கமாக உருவெடுத்தது. மருத்துவ விடுமுறை வழங்கப்பட்ட பின்னர் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட ஜுமா இப்போது 1999 ஆயுத ஒப்பந்தத்திற்காக செய்யப்பட்ட பணம் தொடர்பான மோசடி மற்றும் ஊழலுக்காக நீண்டகால ஒத்திவைக்கப்பட்ட விசாரணையை எதிர்கொள்கிறார்.

ஜூமாவின் வாரிசான ராமபோசாவும் இதேபோல் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் பாதையையும் மற்றும் அதன் கொள்கைகளையும் பின்பற்றுகின்றார். தென்னாபிரிக்காவின் மிகப்பெரிய தொழிற்சங்கமான சுரங்கத் தொழிலாளர்களின் தேசிய சங்கத்தின் முன்னாள் தலைவரான ராமபோசா 1991 இல் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் பொதுச் செயலாளராக ஆனார். அவர் விரைவில் பல மில்லியன்களுக்கு சொந்தக்காரர் ஆனார். இதனால் 2012 இல், மரிக்கானாவில் உள்ள லோன்மின் சுரங்கங்களில் பங்குதாரராரானார். வேலைநிறுத்தம் செய்யும் சுரங்கத் தொழிலாளர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இது ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அரசாங்கம் மற்றும் உத்தியோகபூர்வ தொழிற்சங்க கூட்டமைப்பான தென்னாபிரிக்க தொழிற்சங்கங்களின் காங்கிரஸில் (COSATU) உள்ள அதன் கூட்டாளிகளால் திட்டமிடப்பட்டது. இதன்போது ஆயுதப்படைகள் வேலைநிறுத்தக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 34 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 78 பேர் காயமடைந்தனர்.

பதவியேற்கும் ஜனாதிபதியாக தென்னாபிரிக்காவின் பணக்கார அரசியல்வாதி, ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் ஊழலை வேரறுப்பதாகவும், நாட்டின் கொடியநிலையிலுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பதாகவும், குறிப்பாக இளைஞர்களிடையே வேலையின்மையைக் குறைப்பதாகவும், ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தேர்தல் அதிர்ஷ்டத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் உறுதியளித்தார். இதை அடைவதற்குப் பதிலாக, உலகிலேயே மிக உயர்ந்த வருமான சமத்துவமின்மை உள்ள தென்னாபிரிக்காவை ஒரு சமூக தீப்பொறிக்கிடங்காக மாற்றிய ஆழமான பொருளாதார நெருக்கடிக்கு அவர் தலைமை தாங்கினார்.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் துணைப் பொதுச்செயலாளர் ஜெஸ்ஸி டுவார்டே, 'நாங்கள் தோல்வியடைந்தவர்கள் அல்ல, நாங்கள்தான் வெற்றிபெறும் கட்சி' என்று வலியுறுத்திய அதேவேளையில், பிளவுபட்டுள்ள ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தலைமை இந்த தேர்தல் முடிவைக் கண்டு திகைத்துவிட்டது என்பதில் சந்தேகமில்லை. ராமபோசா ஆபிரிக்க தேசிய காங்கிரஸிற்க்குள் இருந்து ஒரு தலைமைத்துவ சவாலை எதிர்கொள்ள நேரிடும் அல்லது கட்சியில் பிளவுகளை தூண்டிவிடக்கூடிய, வெளிப்படையாக ஊழல் செய்த அவரது சகாக்களில் சிலரை பணிநீக்கம் செய்ய நிர்பந்திக்கப்படுவார்.

இங்கு நிகழ்வது என்னவெனில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸிற்கான மக்கள் ஆதரவில் ஒரு வரலாற்று சரிவாகும். இதன் மிக உடனடி அர்த்தத்தில் இது தொற்றுநோயைக் கையாண்டது, தடுப்பூசி போடுதல், மின்சாரத் தடைகள், தண்ணீர் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, 34 சதவிகித வேலையின்மை விகிதம் மற்றும் உள்ளூர் ஊழல் ஆகியவற்றுக்குக் கொடுக்கப்பட்ட விலையாகும். ஆனால் இது நிறவெறியின் கீழ் வெள்ளை சிறுபான்மையினரின் ஆட்சியால் குணாதிசப்படுத்திய கோரமான ஏற்றத்தாழ்வுகளுக்கு முற்றுப்புள்ளியாகவும் இருக்கும் எனவும் மில்லியன் கணக்கான கறுப்பின தொழிலாளர்களின் சமூக நலன்களை முன்னேற்றும் என எதிர்பார்த்ததில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தலைமை தோல்வியடைந்ததன் இறுதி விளைவு மட்டுமே. ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அதற்குப் பதிலாக, முதலாளித்துவ ஆட்சியைக் காப்பாற்றி, சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மை ஆழமடைவதற்குத் தலைமை தாங்கியுள்ளது. அதே சமயம் கட்சியைச் சுற்றிக் குழுமியிருக்கும் கறுப்பின முதலாளித்துவத்தின் சிறிய அடுக்கினர் பெருநிறுவனங்களின் கைக்கூலிகளாகவும் பிரதிநிதிகளாகவும் மாறி 'கறுப்பு பொருளாதார அதிகாரமளிப்பு' என்பதன் பலனைப் பறித்துள்ளனர்.

கடந்த வாரம் இறந்த தென்னாபிரிக்காவின் நிறவெறியின் கடைசி ஜனாதிபதியான F. W. டி கிளார்க்கை புகழ்வதற்கு சர்வதேச பிரமுகர்கள் மற்றும் பெருநிறுவனக் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களின் முயற்சிகள் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் சிரமங்களுக்கு உதவியிருக்காது. தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களின் புரட்சிகர முயற்சிகளை நசுக்குவதில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் பங்கை, அதன் மாபெரும் அரசியல் குற்றத்தை நினைவூட்டும் விதத்தில் டி கிளார்க் Banquo's ஆவியின் பாத்திரத்தில் மீண்டும் தோன்றியதைத் தவிர வேறு எதுவும் நன்றாக எடுத்துக்காட்டாது.

1990 இல், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான 30 ஆண்டுகால தடையை நீக்கி, சிறையிலிருந்து மண்டேலாவை விடுவித்து, 1994 தேர்தல்களில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸை அதிகாரத்திற்குக் கொண்டுவரும் அனைவருக்குமான வாக்குரிமைக்கான வழியைத் திறந்து, பழிவாங்கப்பட்ட நிறவெறி ஆட்சியின் முடிவை அறிவித்தவரே டி கிளார்க் ஆவார்.

ஆனால் டி கிளார்க்கை 'தைரியமான மனிதர்' என்று புகழ்பவர்கள் ஆழ்ந்த இழிந்த மோசடியை செய்கிறார்கள். சிறுவயதிலிருந்தே நிறவெறி அரசியலில் மூழ்கிய அவர், 1972 இல் ஆளும் தேசியக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரானார். 1978 இல் பி.டபிள்யூ. போத்தாவின் அமைச்சரவையில் நுழைந்த அவர் மற்றும் 1989 இன் பிற்பகுதியில் ஜனாதிபதி ஆவதற்கு முன்பு அவரது வலது கையாக பல ஆண்டுகள் பணியாற்றினார்.

தென்னாபிரிக்க முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் உண்மையில் அதன் வீழ்ச்சியைத் தடுப்பதற்கும் ஒரே வழிமுறையாக ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் உடன் இணைந்து இயங்க டி கிளார்க் முடிவு செய்தார். இது ஏகாதிபத்திய சக்திகளின் முன்னாள் காலனிகள் முழுவதும் ஒரு சங்கிலி தொடரான எதிர்வினையை ஏற்படுத்தியது.

தென்னாபிரிக்காவின் நிறவெறி ஆட்சியானது 1984ல் இருந்து பல ஆண்டுகளாக வெகுஜன எதிர்ப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்களை எதிர்கொண்ட பின்னர், கறுப்பின தொழிலாள வர்க்க நகரங்கள் மீதான கட்டுப்பாட்டை இழந்து உள்நாட்டுப் போரின் விளிம்பில் நின்றுகொண்டிருந்தபோது, ஜனவரி 1990 இல் டி கிளார்க் தனது ஆச்சரியமான அறிவிப்பை வெளியிட்டார்.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் உடன் ஒரு நடைமுறையை தேடுவதில் அவரது யதார்த்த அரசியலுக்கான நடவடிக்கையை அவரது சமகாலத்தவரான மிக்கைல் கோர்பச்சேவ், மக்கள் எதிர்ப்பை சமாதானப்படுத்த சில வரையறுக்கப்பட்ட ஜனநாயக நடவடிக்கைகளை (கிளாஸ்னோஸ்ட்) ஏற்றுக்கொண்டதுடன் ஒப்பிடலாம். இதன்போது சந்தைப்பொருளாதார திட்டத்தினை (பெரஸ்த்ரோயிகா) அறிமுகப்படுத்தியதன் மூலம், இது முதலாளித்துவ மறுசீரமைப்புக்கான பாதையை அமைத்தது. முதலாளித்துவ மறுசீரமைப்பு முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் உள்ள மக்கள்தொகைக்கு பேரழிவை ஏற்படுத்தியதுடன், அதே நேரத்தில் பழைய அதிகாரத்துவம் மற்றும் புதிய முதலாளிகளின் ஒரு சிறிய அடுக்கு அரசுக்கு சொந்தமான சொத்துக்களை அபகரித்து, மிகையான செல்வத்தை ஈட்டிக்கொண்டது.

டி கிளார்க்கின் நடவடிக்கை தென்னாபிரிக்காவின் முதலாளித்துவ உயரடுக்கிற்கு பாதுகாக்கக்கூடிய அனைத்தையும் பாதுகாப்பதுடன் பிணைந்திருந்தது. பல தசாப்தங்களாக தொழிலாள வர்க்கத்தினை திசைதிருப்புவதற்கு ஸ்ராலினிச ஆட்சி மற்றும் குட்டி முதலாளித்துவ எதிர்ப்பாளர்களின் ஆதரவை நம்பியிருந்த கோர்பச்சேவைப் போலவே, டி கிளெர்க், மண்டேலாவும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸும் மட்டுமே முதலாளித்துவ வர்க்கத்திற்கு அரசியல் வாழ்க்கை பாதுகாப்பை வழங்க முடியும் என்பதை புரிந்து கொண்டார். ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் அரசியல் முன்னோக்கு, ஸ்ராலினிச தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தென்னாபிரிக்க தொழிற்சங்கங்களின் காங்கிரஸில் உள்ள அதன் கூட்டாளிகளைப் போலவே, ஸ்ராலினிச இரண்டு-கட்ட கோட்பாட்டைப் பயன்படுத்தி, நிறவெறியின் ஆட்சியின் பொதுவான முடிவை ஒரு ஜனநாயகப் புரட்சியாகவும், சோசலிசத்திற்கான போராட்டம் நடத்துவதற்கு முந்தைய அவசியமான கட்டமாகவும் அறிவித்தது. இது அரசியல்ரீதியாக மேலாதிக்கத்தையும் மற்றும் குறைந்த பொருளாதார சக்தியைக் கொண்டிருந்தாலும் தனக்கு இணையான வெள்ளை இனத்தவருடன் ஒரு கறுப்பின முதலாளித்துவத்தை வளர்த்துக்கொள்ள முயன்ற குட்டி முதலாளித்துவ சமூக அடுக்குகளின் நோக்கத்தை பிரதிபலித்தது.

நகர குடியிருப்புகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் போர்க்குணத்தால் வெள்ளை முதலாளித்துவ வர்க்கத்தை போலவே திகிலடைந்த ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், சர்வதேச பெருநிறுவனங்கள் மற்றும் நாட்டின் வெள்ளை முதலாளித்துவ ஆட்சியாளர்களின் செல்வத்தையும் சொத்துக்களையும் காப்பாற்றிய 'ஜனநாயக சீர்திருத்தங்கள்' என்ற பேரம்பேசப்பட்ட திட்டமாக அனைத்தையும் மாற்றியது. வங்கிகள், சுரங்கங்கள் மற்றும் பெரிய தொழில்துறைகளை பொது உடைமையாக்குவதற்கான அனைத்து உறுதிமொழிகளையும் கைவிட்டு, தடையற்ற சந்தைக் கொள்கைகளை செயல்படுத்துவதற்கும் தென்னாபிரிக்காவை சர்வதேச மூலதனத்திற்கு திறந்துவிடுவதற்கும் சர்வதேச நாணய நிதியத்துடன் இரகசிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.

தென்னாபிரிக்காவின் நிறவெறி ஆட்சி உட்பட தேசியவாத மற்றும் சர்வாதிகார ஆட்சிகளை வழக்கற்றுப் போனதாக்கிய உற்பத்தியின் பூகோளமயமாக்கல் வேகமாக பரவிய காலகட்டத்தில் தென்னாபிரிக்க முதலாளித்துவம் தொடர்ந்து இருப்பதை அச்சுறுத்தும் புரட்சிகரப் போராட்டங்களின் கறுப்பின தொழிலாள வர்க்கத்தை அடக்குவதற்கான வழிமுறையாக ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் செயல்பட்டது.

முதலில் மண்டேலாவின் கீழ் டி கிளார்க்கை அவரது துணைப் பதவிக்கு நியமித்ததும், பின்னர் தாபோ எம்பெக்கி, ஜூமா மற்றும் இப்போது ராமபோசா போன்றோரின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அரசாங்கங்கள் இப்போது தென்னாபிரிக்க தொழிலாளர்களால் அவர்கள் முன்பு எதிர்ப்பதாகக் கூறிய செல்வந்த ஆளும் ஸ்தாபகத்தின் ஊழல் பிரதிநிதிகளாக பரவலாகக் காணப்படுகின்றனர். மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் உள்ள அதன் சகாக்களைப் போலவே, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் இனால் தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு எந்த தீர்வையும் வழங்க முடியவில்லை. அடக்குமுறை, கைதுகள் மற்றும் போராட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் கொடிய முறையில் நசுக்குவது மட்டுமே விரைவாக அதிகரித்து வரும் சமூக அழுத்தங்களுக்கு அதன் ஒரே பதிலாகும்.

மீண்டும் ஒருமுறை தென்னாபிரிக்க முதலாளித்துவம், அதன் சுயாதீனமான சமூக நலன்களை முன்னேற்ற முயலும் தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்கிறது. கடந்த மாதம் 155,000 எஃகு மற்றும் உலோகத் தொழிலாளர்களின் மூன்று வார கால வேலைநிறுத்தம் தென்னாபிரிக்காவின் உலோகத் தொழிலாளர்களின் தேசிய சங்கத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டது.

1987 இல் வெடித்த முதல் இன்டிஃபாடாவைத் தொடர்ந்து ஒரு குறுகிய அடுக்கின் செல்வம் மற்றும் சலுகைகளுக்காக ஏகாதிபத்தியத்துடன் சமாதானம் செய்துகொண்ட இதேபோன்ற கொள்கைகளை பின்பற்றிய பாலஸ்தீன விடுதலை அமைப்பு போன்று, எதிர்ப்பிலிருந்து கூட்டுறவுக்கு மாறிய ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் பாதை ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் பிரதியெடுக்கப்படுகின்றது.

ஏகாதிபத்தியத்தைச் சார்ந்து நிற்கும் மற்றும் அதற்குக் கீழே உள்ள உழைக்கும் மக்களைப் பற்றி அஞ்சும் தேசிய முதலாளித்துவத்தால், வெகுஜனங்கள் எதிர்கொள்ளும் அடிப்படை ஜனநாயக, பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.

தென்னாபிரிக்காவிலோ அல்லது வேறு எங்குமோ தொழிலாள வர்க்கத்திற்கு வர்க்கப் போராட்டம் மற்றும் சோசலிசப் புரட்சியைத் தவிர வேறு வழியில்லை. இதன் பொருள் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் முதலாளித்துவ அரசியலில் இருந்து முறித்துக் கொண்டு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவைக் கட்டியெழுப்ப வேண்டும். அதன் முன்னோக்கும் மற்றும் வேலைத்திட்டமும் லியோன் ட்ரொட்ஸ்கியால் விரிவுபடுத்தப்பட்ட நிரந்தரப் புரட்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.

காலதாமதமான முதலாளித்துவ வளர்ச்சியடைந்த தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில், விவசாயிகளின் நிலப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட உண்மையான ஜனநாயகம் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை அதன் சொந்தக் கைகளில் எடுத்துக்கொள்வதன் மூலம் மட்டுமே தீர்க்கப்பட முடியும் என்பதை ட்ரொட்ஸ்கி நிறுவிக்காட்டினார். அதாவது ஏகாதிபத்தியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், உலக சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கான சர்வதேச போராட்டத்தின் ஒரு பகுதியாக முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதாகும்.