ஜூலியன் அசான்ஜை பாதுகாக்க இலங்கை நடவடிக்கை குழு நடத்தும் பகிரங்க கூட்டம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் கலை மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைக் குழுவானது (ACDAE), விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்வதற்கான உலகளாவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பெப்ரவரி 24 வியாழன் அன்று இலங்கை-இந்திய நேரப்படி, இரவு 7 மணிக்கு இணையவழி பொதுக் கூட்டமொன்றை நடத்தவுள்ளது. அவர் போலிக் குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படும் அபாயத்தில் உள்ளார்.

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தின் மேல்மாடியில் இருந்து ஆதரவாளர்களை வாழ்த்திய போது. [Credit: AP Photo/Frank Augstein, File] [AP Photo/Frank Augstein]

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் போர்க்குற்றங்கள், வெகுஜன கண்காணிப்பு மற்றும் இராஜதந்திர சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தும் ஆவணங்களை வெளியிட்டமையே அசான்ஜ் செய்ததாகக் கூறப்படும் குற்றமாகும். ஆஸ்திரேலிய குடிமகனான அவர், அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்வீடிஷ் மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்களின் மோசமான வேட்டையாடலுக்கு ஒரு தசாப்த காலமாக பலியாகியுள்ளார்.

ஜனவரி மாதம், அசான் தன்னை நாடுகடத்தும் வழக்கிற்கு எதிராக ஐக்கிய இராச்சிய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான உரிமையை வென்றாலும், பிரிட்டிஷ் அரசால் தடுத்து வைக்கப்பட்டிருந்த விருது பெற்ற பத்திரிகையாளரின் கடந்த மூன்று வருட கால அனுபவங்கள், நீதித்துறையில் நம்பிக்கை வைக்க முடியாது என்பதை நிரூபிக்கின்றன.

உலக சோசலிச வலைத் தளம், அசான்ஜுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றத்தினால் டிசம்பர் 10 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பை, அவரது தொடர்ச்சியான துன்புறுத்தலை நியாயப்படுத்துவதற்கான ஒரு போலி-சட்ட கேலிக்கூத்து என்று கண்டனம் செய்தது. அசான்ஜ் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டால், அவர் உளவு பார்த்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வார், அது நடைமுறையில் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனையை விதிக்க வழிவகுக்கலாம்.

உக்ரேன் மீதான ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான ஆத்திரமூட்டல்கள் அதிகரித்து வரும் நிலையிலும் ஒரு அணுவாயுத உலகப் போரின் ஆபத்து அதிகரித்து வரும் நிலையிலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் போர்வெறிக் கூட்டாளிகளின் கொடூர குணாம்சத்தை அம்பலப்படுத்திய அசாஞ்சை விடுதலை செய்வதற்கான போராட்டம், சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தீர்க்கமான பிரச்சினையாகும்.

உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) முன்னெடுக்கும் கொள்கை ரீதியான போராட்டத்திற்கு முழு ஆதரவாக கலை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை குழு இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. அசான்ஜை விடுதலை செய்வதும் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை நிறுத்துவதும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதிலேயே தங்கியிருக்கின்றது.

கலை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை குழுவானது, அசான்ஜைப் பாதுகாப்பதற்காக, சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் அணிதிரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கையில் இராஜபக்ஷ அரசாங்கமும், இந்தியாவில் மோடி அரசாங்கத்தைப் போலவே, கடுமையான சர்வாதிகாரக் கொள்கைகளைப் பின்பற்றி, தொழிலாள வர்க்கப் போராட்டங்களை நசுக்கி, ஜனநாயக உரிமைகளைத் தாக்கி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு, ஜனாதிபதி இராஜபக்ஷ, அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலில், சுகாதார மற்றும் மினசார சபை ஊழியர்களின் போராட்டங்களைத் தடைசெய்யும் அத்தியாவசிய சேவை உத்தரவுகளை பிறப்பித்தார்.

அசான்ஜைப் பாதுகாப்பதற்கான போராட்டம், முதலாளித்துவ அரசாங்கங்களின் இத்தகைய தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாதது ஆகும். தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகள் இந்தக் கூட்டத்தில் நடைமுறையில் பங்கேற்பதோடு, ஜூலியன் அசாஞ்சை விடுவிப்பதற்கும் அனைத்து ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்குமான போராட்டத்திலும் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம். கூட்டத்திற்காக இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்.