மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பைடென் நிர்வாகம் மற்றும் பெருநிறுவன ஊடகங்களின் மிகவும் கடுமையான வார்த்தைகளில், புட்டினை புதிய ஹிட்லராகவும் ரஷ்ய இராணுவத்தை செங்கிஸ் கான் படைகளின் நவீன வகையாகவும் சித்தரித்து, உக்ரேன் படையெடுப்பில் எந்த ரஷ்ய இராணுவ நடவடிக்கையும் சரமாரியான கண்டனங்கள் இல்லாமல் நகர்வதில்லை. ஆனால் அமெரிக்க கூட்டாளியும் உலக முதலாளித்துவத்திற்கு எண்ணெய் வினியோகிக்கும் மிக முக்கியமான ஒரு நாடு காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை நடத்தும் போது, வாஷிங்டன் மிதமான எதிர்ப்பைக் கூட காட்டுவதில்லை.
சவூதி அரேபியாவில் சனிக்கிழமை 81 கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து வெள்ளை மாளிகையோ அல்லது அமெரிக்க வெளியுறவுத் துறையோ எந்த அறிக்கையும் வெளியிடவில்லை, இது மனித உரிமைகள் அமைப்புகளாலும் மற்றும் சவுதிக்கு வெளியிலுள்ள குழுக்களாலும் பரவலாகக் கண்டனம் செய்யப்பட்டது. இப்பிரச்சினை வழக்கமான திங்கட்கிழமை வெளியுறவுத்துறையின் பத்திரிகையாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட போதும் கூட, செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், 'நியாயமான விசாரணை உத்தரவாதங்களைப் பற்றி நாங்கள் தொடர்ந்து கவலைகளை எழுப்பி வருகிறோம்' என்று கூறியதைத் தவிர வேறு எதுவும் கூறவில்லை, இருப்பினும் அவர் 'அதற்கான நேரத்தைப் பற்றி பேச முடியாது, ஆனால் நாங்கள் இந்தக் கவலைகளை எழுப்பியுள்ளோம்,” என்றார்.
பட்டவர்த்தனமான ஆங்கிலத்தில் கூறுவதானால், 2018 இல் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தின் உள்ளேயே சவுதி அதிருப்தியாளர் ஜமால் கஷோகியைக் கொன்று துண்டு துண்டாக்க ஒரு குண்டர் படையை அனுப்பிய சவுதி முடியாட்சியின் கொலைகார ஆட்சியாளரும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மானின் இந்த மரண தண்டனைகள் குறித்து அமெரிக்க நிர்வாகம் எதுவும் கூறவில்லை. அந்த கொலைகாரர் அவரின் இரத்தந்தோய்ந்த வேலையைச் செய்வதற்கு முன்னர், (கைதிகள் சட்டபூர்வ பிரதிநிதித்துவம் பெறுவது மறுக்கப்பட்டு, அவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட பின்னர்) அவர்களுக்கு ஒரு 'நியாயமான வழக்கு விசாரணை' வழங்குவது குறித்த கடந்த கால அறிக்கைகளை மட்டுமே வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளரால் சுட்டிக் காட்ட முடியும்.
சவூதி அரேபியாவில் தலை துண்டித்தல் என்பது மரணதண்டனையின் நிலையான அணுகுமுறையாக உள்ளது. இந்த இடைக்கால காட்டுமிராண்டித்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் சவுதி அரேபியாவின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், அங்கே பெரும்பான்மையான மக்கள் ஷியைட் பிரிவைச் சேர்ந்தவர்கள் — இவர்கள் இந்த இராஜ்யத்தில் அன்றாட வாழ்க்கைக்கான நியதிகளை அமைக்கும் வஹாபைட் சுன்னி மதகுருக்களால் மதவெறிக் கொள்கையாளர்களாக கருதப்படுகிறார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான அமைப்பின் ஆணையர் Michelle Bachelet இன் கருத்துப்படி, இந்த பாரிய மரண தண்டனையில் பலியானவர்களில் 41 பேர் 2011-2012 இல் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கெடுத்தவர்கள். மற்றொரு ஏழு பேர் யேமனியர்கள், இவர்கள் யேமனில் சவுதி ஆதரவிலான ஆட்சியை அகற்றிய ஹௌதி கிளர்ச்சியுடன் தொடர்புடையவர்களாகக் கூறப்படுகிறது. 'அவசியப்படும் நியாயமான வழக்கு விசாரணைக்கான உத்தரவாதங்கள் எதையும் வழங்காத விசாரணைகளைத் தொடர்ந்து மரண தண்டனை வழங்குவது, சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களால் தடை செய்யப்பட்டுள்ளதுடன், அது ஒரு போர்க் குற்றத்தின் கணக்கில் வைக்கப்படலாம்,' என்றவர் தெரிவித்தார்.
இதுவே உக்ரேனின் 81 போர்க் கைதிகளைப் 'பயங்கரவாதிகள்' என்று கூறி ரஷ்ய இராணுவம் தூக்கிலிட்டிருந்தால், வாஷிங்டனின் எதிர்வினையைக் கற்பனை செய்ய சிறிய முயற்சியே தேவைப்படும்.
யேமன் தொடர்பான சவுதி முடியாட்சியின் ஒட்டுமொத்த கொள்கையும் ஒரு போர்க்குற்றமாகும், அரபு உலகிலேயே மிகவும் வறிய அந்நாட்டின் அப்பாவி மக்களை, பட்டினியில் சாகடிக்கவும் மற்றும் படுகொலை செய்யவும் சவூதி அந்நாட்டை இலக்கில் வைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான அவசர நிதியத்துடன் (UNICEF) இணைந்த ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு வகைப்பாடு திங்கட்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, யேமனில் 538,000 குழந்தைகள் ஏற்கனவே கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் இந்தாண்டு இறுதிக்குள் அந்த எண்ணிக்கை 2.2 மில்லியனாக உயரக்கூடும்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் சுமார் 1.3 மில்லியன் கர்ப்பிணிப் பெண்கள் அல்லது பாலூட்டும் தாய்மார்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள், அதேவேளையில் 161,000 பேர் தற்போதைய எண்ணிக்கையை விட ஐந்து மடங்கு அதிகமாக, கடுமையான உணவுப் பற்றாக்குறையை, பஞ்சத்தை அனுபவிக்க நேரிடலாம். 'யேமனில் பேரழிவுக்கான தினத்தை நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம் என்பதையும், அதைத் தவிர்ப்பதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டது என்பதையும் இந்த கொடூரமான புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன,' என்று உலக உணவுத் திட்டத்தின் தலைவர் டேவிட் பீஸ்லி கூறினார், 'அடுத்து ஏற்படவிருக்கும் பேரழிவைத் தவிர்க்கவும், மில்லியன் கணக்கானவர்களைக் காப்பாற்றவும்' அவசரமான நடவடிக்கை தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார். IPC அறிக்கையின்படி, யேமன் மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள், அதாவது 30 மில்லியனில் 19 மில்லியன் பேர், இந்தாண்டின் இரண்டாம் பாதியில் குறைந்தபட்ச உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம், இது இப்போதைய 17.4 மில்லியனை விட அதிகமாகும்.
மார்ச் 11 வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட மற்றொரு UNICEF அறிக்கையின்படி, 2015 இல் சவுதி இராணுவத் தலையீடு தொடங்கியதில் இருந்து குறைந்தது 10,200 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதை அல்லது காயப்படுத்தப்பட்டு இருப்பதை ஐநா உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் அனைவருமே சவூதி குண்டுகள் மற்றும் ஏவுகணைகளால் ஏற்படுத்தப்பட்டவர்கள், இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்க நிபுணர்கள் வழங்கிய இலக்கு விபரங்களைப் பயன்படுத்தி, அமெரிக்கா வினியோகித்த போர் விமானங்களில் இருந்து வீசப்பட்டவை ஆகும்.
ஏகாதிபத்திய அரசாங்கங்கள் மற்றும் பெருநிறுவன ஊடகங்களின் பாரபட்சமான சீற்றத்தில் வெளிப்படையான இனவெறி அம்சம் ஒன்று உள்ளது, இது உக்ரேனிய மக்களின் துயரங்களைக் குறித்து செறிவூட்டப்பட்ட செய்திகளிலும், அதேயளவுக்கு யேமன் மக்களின் துயரங்களைக் குறித்து நடைமுறையளவில் காட்டப்படும் மவுனத்திலும் வெளிப்படுகிறது.
இது CBS நிருபர் சார்லி டி'அகட்டாவின் கருத்தில் சுருக்கமாகத் தொகுத்தளிக்கப்பட்டது, அவர் 'நம்மைப் போன்றிருக்கும்' பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓர் அனுதாபமான விடையிறுப்பைக் காட்டுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக உளறிக் கொட்டி இருந்தார். அவர் பலரில் ஒருவர் மட்டுமே. பிரிட்டனின் டெய்லி டெலிகிராப்பின் டேனியல் ஹனன் குறிப்பிட்டார், “அவர்கள் நம்மைப் போலவே தெரிகிறார்கள். அவ்வளவுதான். அதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. உக்ரேன் ஓர் ஐரோப்பிய நாடு. அதன் மக்கள் நெட்ஃபிக்ஸ் பார்க்கிறார்கள் மற்றும் அவர்கள் இன்ஸ்டாகிராம் கணக்குகளை வைத்திருக்கிறார்கள், தேர்தல்களில் சுதந்திரமாக வாக்களிக்கிறார்கள் மற்றும் தணிக்கை செய்யப்படாத செய்தித்தாள்களைப் படிக்கிறார்கள். போர் என்பதை வறிய மற்றும் தொலைதூர மக்கள் மீதான ஏதோவொன்றாக இப்போது பார்க்கப்படுவதில்லை,” என்றார்.
அரசு அதிகாரிகளும் அதையே பின்தொடர்ந்தார்கள். உக்ரேனின் தலைமை வழக்கறிஞர் David Sakvarelidze BBC க்குக் கூறினார், 'நீலக் கண்கள் மற்றும் மஞ்சள் நிற முடி கொண்ட ஐரோப்பிய மக்கள் கொல்லப்படுவதையும், புட்டினின் ஏவுகணைகளால் ஒவ்வொரு நாளும் குழந்தைகள் கொல்லப்படுவதையும் பார்க்கையில் எனக்கு நிஜமாகவே உணர்ச்சிகரமாக உள்ளது,” என்றார். பல்கேரியாவின் பிரதமர் கிரில் பெட்கோவ், “இவர்கள் நமக்குப் பழக்கப்பட்ட அகதிகள் இல்லை. இவர்கள் ஐரோப்பியர்கள், புத்திஜீவிகள், படித்தவர்கள், சிலர் தகவல் தொழில்நுட்ப புரோகிராமர்களாக இருப்பவர்கள்… இது கடந்த காலத்தில் அனுபவமில்லாத வழக்கமான அகதிகள் அலை இல்லை. எந்த ஐரோப்பிய நாடும் அவர்களுக்கு பயப்படவில்லை,” என்றார். தலைமை தளபதியின் முன்னாள் உதவியாளர் ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் ஜெனரல் ரிச்சர்ட் பாரோன்ஸ் கூறுகையில், ' இந்த பிரச்சினைகளில் ஒன்றாக நான் நினைப்பது என்னவென்றால்… நம்மைப் போலவே இருக்கும் மற்றும் நம்மைப் போலவே வாழும் இவர்கள் கொல்லப்படுவதைப் பார்த்து பிரிட்டன் மற்றும் பிற நாடுகளின் பொதுக் கருத்து எப்படி எதிர்வினையாற்றுகிறது.”
இந்த இனவெறி இரட்டை நிலைப்பாட்டைக் கண்டித்து அரபு மற்றும் மத்திய கிழக்கு ஊடகவியலாளர் சங்கம் (AMEJA) ஓர் அறிக்கை வெளியிட்டது. 'உலகின் எந்தப் பகுதியிலும் இராணுவத் தாக்குதலுக்கு உள்ளான எல்லோருடனும் AMEJA முழுமையான நல்லிணக்கத்துடன் நிற்கிறது, மேலும் ஒரு நாட்டின் மக்களைப் பற்றிய செய்திகளுக்கும் மற்றொரு நாட்டு மக்களைக் குறித்த செய்திகளுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதைக் குறித்து வருத்தப்படுகிறோம்,” என்று அந்த அமைப்பு கூறியது. “இந்த மாதிரியான கருத்துரையானது, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, தெற்கு ஆசியா, மற்றும் இலத்தீன் அமெரிக்கா போன்ற உலகின் சில பகுதிகளில் துயரங்களை வழமையாக்கும் மேற்கத்திய பத்திரிகையியலின் மேலோங்கிய மனநிலையைப் பிரதிபலிக்கிறது. இது போரை ஏதோவிதத்தில் வழமையான மற்றும் எதிர்பார்க்கக் கூடிய ஒன்றாக அவர்களின் மனிதாபிமானமற்ற அனுபவத்தைக் காட்டுகிறது…'
இனம், நிச்சயமாக, தீர்மானிக்கும் காரணி அல்ல. அசாத் ஆட்சியின் அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட சிரிய மக்களுக்காக ஏகாதிபத்திய ஊடகங்களில் ஏராளமாக கண்ணீர் இருந்தது. படுகொலையை நடத்தும் அரசாங்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்ததா என்பது தான் தீர்க்கமான அம்சமாக உள்ளது. அவ்விதத்தில் —ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் வட ஆபிரிக்கா முழுவதும் பென்டகன் மற்றும் CIA இனால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கானவர்களை விட்டுவிட்டாலும்— சவூதி அரேபியா, கொலம்பியா, இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸில் நடந்த அட்டூழியங்கள் குறித்து வாய் திறக்கப்படுவதில்லை, அதற்கு நேரெதிர் விதமாக உக்ரேனில் புட்டினின் பிற்போக்குத்தனமான படையெடுப்புக்குப் பலியானவர்களைக் குறித்து கூச்சலிடும் தலைப்பு செய்திகளும் இடைவிடாத செய்திகளும் வெளியிடப்படுகின்றன.
அமெரிக்க ஏகாதிபத்தியமும் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் வெளியுறவுக் கொள்கைக்கு ஆதரவாக பொதுக் கருத்தைத் திரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ள, முதலாளித்துவ செய்தி ஊடகத்தின் பிரச்சாரங்கள் எதனாலும் தொழிலாள வர்க்கம் திசை திருப்பப்படக் கூடாது.