மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், சவுதி அரேபிய சர்வாதிகாரி முகமது பின் சல்மானுடன் கைகுலுக்கும் புகைப்படம் குறித்த கேள்வி அவரது வருகைக்கு முன்பே எழுந்தது. சவுதியின் சர்வாதிகாரி முகமது பின் சல்மானுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் கைகுலுக்கியதை புகைப்படம் எடுக்காத ஒரு படமெடுப்பவரும் இருக்கமுடியாது. பைடெனின் மத்திய கிழக்கிற்கான நான்கு நாள் பயணத்தின் சவுதி அரேபியாவில் இருக்கும்போது செய்தித்துறையினர் பெருமளவில் விலக்கப்பட்டிருந்தன. மேலும் பைடெனின் உதவியாளர்கள் பைடெனுடன் கைகுலுக்கல் அல்லது அரவணைப்பு இருக்காது எனவும் விரைவாக பரவும் கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் BA.5 துணை வகையினால் இந்த கட்டுப்படுத்தும் புதிய நெறிமுறையை அறிவித்துள்ளனர்.
இந்தக் கொள்கைக்கும் 79 வயதான ஜனாதிபதியின் புதிய உடல்நலக் கவலைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நம்புவதற்கு நல்ல காரணம் இருக்கிறது. ஒரு மோசமான இரத்தக்கறை படிந்த கொலைகாரடனுடன் பைடெனின் அரவணைப்புக்கு கொடுக்கப்படும் கவனத்தை குறைக்க வெள்ளை மாளிகை விரும்புகிறது. சவுதியின் எண்ணெய் உற்பத்தியில் கணிசமான அதிகரிப்பைப் பெறுவதற்கான முயற்சியில் அவர் பின் சல்மானுடன் தொடர்பு கொள்கிறார். உக்ரேனில் நடந்த போரின் துணை விளைபொருளாக ரஷ்ய விநியோகத்தை நிறுத்தியதில் இருந்து நேட்டோ நாடுகள் மீதான அழுத்தத்தை குறைக்கவும் மற்றும் எரிவாயு விலை ஒரு கலனுக்கு கிட்டத்தட்ட 5 டாலர் வரை உயர்ந்துள்ள அமெரிக்காவிலேயே சமூக அதிருப்தியைத் தணிக்கவும் முயல்கின்றார்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் கடந்த மூன்று தசாப்தங்களாக ஈராக், சிரியா மற்றும் லிபியாவில் போர்களை நடத்தி, அரசர்கள் மற்றும் சர்வாதிகாரிகளின் மிருகத்தனமான அடக்குமுறைகளை ஆதரித்து, கடந்த மூன்று தசாப்தங்களாக அதன் இரத்தம் தோய்ந்த குற்றங்களைச் செய்த பிராந்தியத்திற்கு ஜனாதிபதியாக இது அவரது முதல் பயணமாகும்.
மில்லியன் கணக்கான மக்கள் இறந்துள்ளனர் மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்ற்றப்பட்டுள்ளனர். பைடென் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிலிருந்து தப்பியவர்களின் அவலத்தைத் தணிக்க முற்படவில்லை, மாறாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளார். அவர் இரண்டு மிக முக்கியமான அமெரிக்க நட்பு நாடுகள் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள தமக்கு சார்பான நாடுகளுடன் தீவிர பேச்சுவார்த்தைகளுக்கு நான்கு நாட்கள் ஒதுக்குகிறார். ஈரானுக்கு எதிரான போருக்கான தயாரிப்புகளுக்கு அமெரிக்க ஆதரவை உறுதியளிக்கும் அதே வேளையில், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரின் பின்னால் இரு நாடுகளையும் அணிவகுத்து நிற்கும் மூலோபாய நோக்கத்துடன் அவர் இஸ்ரேலில் இரண்டு நாட்களைக் கழித்துள்ளார். மேலும் இரண்டு நாட்களை சவுதி அரேபியாவில் கழிப்பார்.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு அவர்களின் உரிமைகளை அங்கீகரிப்பதை விட அவர்களின் முகத்தில் அறையும் தன்மையைக் கொண்ட ரமல்லாவிற்கு ஒரு சுருக்கமான பயணமும் உள்ளது. பாலஸ்தீனியர்கள் தொடர்பாக, ட்ரம்ப் நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் பைடென் தொடர்ந்தார். இதில், ட்ரம்ப்பால் டெல் அவிவில் இருந்து மாற்றப்பட்ட அமெரிக்க தூதரகம், ஜெருசலேமில் உள்ளது; பாலஸ்தீனியர்களின் முக்கிய தொடர்பு மையமான கிழக்கு ஜெருசலேமில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளது; வாஷிங்டன் டி.சி.யில் உள்ள பாலஸ்தீனிய பணியகம் மூடப்பட்டுள்ளது; 'பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது' என்று இஸ்ரேல் அழைக்கும் இஸ்ரேலிய துருப்புக்கள் மற்றும் குடியேறியவர்களால் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் அனைத்து உதவித் தொகைகளையும் பாலஸ்தீனிய அதிகாரம் நிறுத்த வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து கோருகிறது. சர்வதேச சட்டத்தை மீறி, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உருவாக்கப்பட்ட இஸ்ரேலிய குடியேற்றங்களின் சட்டபூர்வமான தன்மையை அங்கீகரிக்கும் ட்ரம்பின் கொள்கையை அமெரிக்கா இன்னும் மாற்றவில்லை.
பைடென் பயணத்தில் ஏகாதிபத்திய பாசாங்குத்தனத்தின் அதிகப்படியான தன்மை உள்ளது. உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரில் அமெரிக்க அரசாங்கம் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக ஈடுபட்டுள்ளது. அது பல பில்லியன் டாலர்களை ஆயுதங்களில் கொட்டி மற்றும் இரகசிய இராணுவப் படைகளை நிலைநிறுத்தியுள்ளது. உலகின் இரண்டு பெரிய அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளுக்கிடையே நேரடி இராணுவ மோதலுக்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த மோதல் சுதந்திரம், ஜனநாயகம், உக்ரேன் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் அமெரிக்காவின் நேட்டோ கூட்டினருக்கு ரஷ்யாவால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்கா பாதுகாத்து வருகிறது என்பதால் நியாயப்படுத்தப்படுகின்றது.
ஆயினும்கூட இந்தக் கொள்கையானது, உக்ரேனில் அமெரிக்கத் தலையீட்டை நியாயப்படுத்தியதாகக் கூறப்படும் அதே குற்றங்களை புரிந்த இரண்டு ஆட்சிகளை தழுவுவதற்கு அமெரிக்க ஜனாதிபதியை இப்போது வழிநடத்துகிறது.
இஸ்ரேல் என்ற அரசு, பாலஸ்தீன மக்களுக்கு சுயநிர்ணய உரிமையையும் உண்மையில் அவர்களின் இருப்பையும் மறுப்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் கோலன் குன்றுகளில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக கைப்பற்றப்பட்ட பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. மேலும் குடியேற்றங்கள் மற்றும் பாலஸ்தீனிய மற்றும் சிரிய நிலங்களைக் கைப்பற்றுவதன் மூலம் இந்த பகுதிகளின் தன்மையை சீராக மறுசீரமைத்து வருகிறது. இதனை இனச் சுத்திகரிப்பு என்று மட்டுமே அழைக்கலாம். பெரும்பாலான சிறைகளில் காவலர்கள் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் அல்லது கைதிகள் மீது குண்டுகளை வீசுவதில்லை என்பதைத் தவிர, உலகின் மிகப்பெரிய திறந்தவெளி சிறைச்சாலையாக காசா பொருத்தமாக விவரிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனியர்களின் சுயநிர்ணய உரிமையை நசுக்குவது இஸ்ரேலின் முக்கிய கொள்கையாக உள்ளது. இது ட்ரம்ப் நிர்வாகத்தின் போது இஸ்ரேலை யூத மக்களின் நாடு என்று அறிவிக்கும் சட்டத்தின் மூலம் வரையறுக்கப்பட்டது. இதன்படி யூதர்கள் அல்லாதவர்கள்-கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், நாத்திகர்கள், அனைத்து வகையான புலம்பெயர்ந்தோர் மற்றும் பாலஸ்தீனியர்கள் நிரந்தர இரண்டாம் தர குடிமக்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். சியோனிஸ்டுகள் இந்த வார்த்தையை விரும்பாமல் இருக்கலாம், ஆனால் இது இனப்பாகுபாடாகும்.
இந்த வார இறுதியில் வாஷிங்டன் போஸ்டில் எழுதுகையில், உலக யூத காங்கிரஸின் தலைவரான ரொனால்ட் லவ்டர், மத்தியதரைக் கடலில் இருந்து ஜோர்டான் நதி (அடிப்படையில் இஸ்ரேல், காசா மற்றும் மேற்குக் கரை) வரை பரவியுள்ள பிராந்தியத்தில் பாலஸ்தீனிய மக்கள் தொகை யூத மக்கள் தொகையைவிட இப்போது அதிகமாக உள்ளது என்று வருத்தம் தெரிவித்தார். 'சியோனிச திட்டத்திற்கு, இந்த உள் அச்சுறுத்தலைப் போல வெளிப்புற அச்சுறுத்தல் எதுவும் இல்லை' என்று அவர் எழுதுகிறார்.
குறிப்பாக இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் மத்தியிலுள்ள பாசிச பிரிவுகள், 1947-48 இல் நடத்தப்பட்டது போன்ற பாரிய வெளியேற்றங்கள் மூலம் அல்லது யூதப்படுகொலையின் நாஜிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ஐரோப்பாவின் யூத மக்களுக்கு நேர்ந்த வகையிலான பாரிய கொலைகள் போன்றவற்றின் மூலம் யூதப் பெரும்பான்மையை மீண்டும் நிலைநாட்டவும் பராமரிக்கவும் பாலஸ்தீனிய மக்கள் தொகை பெருமளவில் குறைக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளது.
பைடெனின் வருகையின் போது, இந்த சிரமமான உண்மைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை, இஸ்ரேலிய ஜனநாயகத்திற்கான அமெரிக்காவின் முடிவில்லாத ஆதரவைப் பற்றிய இனிப்பான உறுதிமொழிகளால் நிறைந்துள்ளன.
சவுதி அரேபியாவை பொறுத்தவரை, அது இஸ்ரேலின் பாராளுமன்ற மூடுதிரையை கூட கொண்டிருக்கவில்லை மேலும் ஒரு கொடுங்கோல் மன்னரால் ஆளப்படுகிறது. அவர், ஒரு சிறிய அண்டை நாட்டிற்கு எதிரான கொலை, காட்டுமிராண்டித்தனமான உள் அடக்குமுறை மற்றும் இனப்படுகொலைப் போருக்கு ஒரு உதாரணமாக மாறியுள்ளார்.
2017 இல் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்தில், சவுதி விமர்சகரும் பத்திரிகையாளருமான ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டதே பின் சல்மானின் மிகவும் பகிரங்கப்படுத்தப்பட்ட கொலையாகும். அப்போது அமெரிக்க குடிமகனும் வாஷிங்டன் போஸ்ட்டின் கட்டுரையாளருமான கஷோகி தூதரகத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு பின்னர் பின் சல்மானால் அனுபப்பட்ட கொலைப் படையால் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டதால் இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை.
சவுதி அரேபியாவிற்குள், பின் சல்மான், ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு சவுதி வம்சத்தின் ஸ்தாபகர் வரையிலான கொடுமையான ஆட்சியாளர்களின் நீண்ட வரிசையில் சமீபத்தியவராவார். அவரது வயதான மற்றும் இயலாதுபோன தந்தை மன்னராக ஆட்சி செய்யும் போது, பின் சல்மான் பட்டத்து இளவரசராக ஆட்சி செய்கிறார். பெண்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட ஷியைட் சிறுபான்மையினரின் உறுப்பினர்களுக்கு எதிராக விஷேடமாக மிருகத்தனத்துடன் செயல்படுத்தப்படும் அனைத்து சவூதி குடிமக்களினதும் ஜனநாயக உரிமைகளை தொடர்ந்து நசுக்குவதை வழிநடாத்துகிறார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், 81 ஆண்கள், பெரும்பாலும் ஷியாக்கள் தங்கள் மதப் பிரிவினரின் உரிமைகளை பாதுகாக்க வாதிட்டதற்காக, 'குற்றவாளிகள்' என்று கருதப்பட்டனர். அவர்கள் கூட்டு மரணதண்டனையினால் தலை துண்டிக்கப்பட்டனர். இந்த சர்வாதிகாரம் மத்தியகாலத்திற்குரியதாக இருந்தாலும், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளிடம் இருந்து போர் ஆயுதங்களை வாங்குகிறது. சிலிக்கன் பள்ளத்தாக்கு மற்றும் இஸ்ரேலால் உருவாக்கப்பட்ட கண்காணிப்பு தொழில்நுட்பத்துடன், ஆட்சி மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் அதை செயல்படுத்துகிறது.
'சுய நிர்ணயத்தையும்' மற்றும் சிறிய நாடுகளின் உரிமைகளை மிதித்து, தங்கள் சக்தி வாய்ந்த அண்டை நாடுகளின் சுதந்திரமான எல்லை தாண்டிய ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதில் பின் சல்மான் விளாடிமிர் புட்டினை விஞ்சி நிற்கின்றார். 2015 ஆம் ஆண்டு முதல், அரபு உலகின் ஏழ்மையான நாடான யேமன் மீது சவுதி இராணுவப் படைகள் வெட்கக்கேடான ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகின்றன. சவுதியின் கைப்பாவை ஆட்சியாளர் அப்தராபுஹ் மன்சூர் ஹாடியை அகற்றிய உள்நாட்டுக் கிளர்ச்சிக்கு விடையிறுக்கும் வகையில், சவுதி அரேபியாவின் துருப்புக்கள், போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள், அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் தொழில்நுட்ப உதவி மற்றும் ஆயுதங்களுடன், முன்னுதாரணமற்ற மிருகத்தனமான போரை நடத்துவதை ஐக்கிய நாடுகள் அதிகாரிகளை இதனை உலகில் ஒரு மிக மோசமான மனிதாபிமான நெருக்கடி என்று அழைத்தனர்.
கடந்த இரண்டு தசாப்தங்களாக ரஷ்யாவை நேட்டோ சுற்றி வளைத்ததன் மூலம் தூண்டப்பட்ட உக்ரேன் மீதான புட்டினின் பிற்போக்குத்தனமான படையெடுப்பு ஆயிரக்கணக்கான உக்ரேனியர்களைக் கொன்று மில்லியன் கணக்கானவர்களை அகதிகளாக்கியுள்ளது. யேமன் மீதான பின் சல்மானின் படையெடுப்பு மிகவும் இரத்தக்களரியானது. நவம்பர் 2021 இல் வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கை 377,000 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் பட்டினி மற்றும் சவுதி உணவு விநியோகத் தடையால் ஏற்பட்ட நோயால் இறந்தனர்.
முழு மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கான இருபது மில்லியன் யேமனியர்கள் வாழ்வதற்கு மனிதாபிமான உதவியை நம்பியிருக்கிறார்கள். நான்கு மில்லியன் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். இன்னும் மில்லியன் கணக்கானவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருப்பார்கள். ஆனால் அவர்கள் தப்பிச் செல்வதற்காக பாதை யேமனின் நில எல்லைகளைக் கட்டுப்படுத்தும் மற்றும் நாட்டின் கடல் பாதைகளில் அமெரிக்க ஆதரவுடன் ரோந்துபணியில் ஈடுபட்டுள்ள சவுதி படைகளால் தடுக்கப்பட்டது. ஐ.நா அறிக்கை அடுத்த எட்டு ஆண்டுகளில், இறப்பு எண்ணிக்கை 1.3 மில்லியனாக உயரும் என்றும், பெரும்பான்மையான 22 மில்லியன் மக்கள் மிகவும் ஏழ்மையில் வாழ்வார்கள் எனத் தெரிவிக்கிறது.
கஷோகியின் கொலை, சவுதி அரேபியாவை ஒரு 'பரியா நாடாக' (“pariah state” ஒரு பரியா அரசு என்பது சர்வதேச சமூகத்தில் ஒதுக்கப்பட்டதாகக் கருதப்படும் ஒரு நாடு.) மாற்றியது என்று ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டபோது ஜோ பைடென் அறிவித்தார். இந்த குற்றத்திற்கு தண்டனையாக பின் சல்மானை தனிமைப்படுத்துவதாக அவர் சபதம் செய்தார். இப்போது அவர் இரத்தம் தோய்ந்த மன்னனின் மோதிரத்தை முத்தமிடுவதற்காக ஜெட்டாவுக்குச் செல்கிறார்.
பின் சல்மான் தொடர்பான கொள்கையின் தலைகீழ் மாற்றத்தை நியாயப்படுத்த வெள்ளை மாளிகை மற்றும் வெளியுறவுத்துறையால் பயன்படுத்தப்படும் உருத்திரிப்புக்கள் பற்றி அமெரிக்க ஊடகங்களில் சில அமைதியின்மை உள்ளன. கொலை செய்யப்பட்ட கஷோகி ஒரு கட்டுரையாளராக இருந்த வாஷிங்டன் போஸ்ட் விஷயத்தில் இது குறிப்பாக உள்ளது.
போஸ்ட் வெளியீட்டாளர் பிரெட் ரியானின் கருத்து, சனிக்கிழமையன்று ஒரு தலையங்க பத்தியாக வெளியிடப்பட்டது. அது உத்தியோகபூர்வ ஆசிரிய தலையங்க கட்டுரை அல்ல. அது “பைடெனின் சந்திப்பு, சுதந்திர செய்தித்துறைக்கு அமெரிக்கா கொடுக்கும் மதிப்பு பற்றிய ஆபத்தான செய்தியையும் அனுப்புகிறது என குற்றம்சாட்டியது. [பின் சல்மான்] உடன் தொட்டு சிரிக்கும்க ஒரு புகைப்படம் எல்லா இடங்களிலும் உள்ள எதேச்சதிகாரர்களுக்கு, அமெரிக்கா தீவிரமாக விரும்பும் ஒரு இயற்கை வளம் உங்களிடம் இருக்கும் வரை நீங்கள் ஒரு பத்திரிகையாளரை கொலை செய்வதிலிருந்து உண்மையில் தப்பித்துக்கொள்ளலாம் என சமிக்ஞையை அனுப்புகிறது”.
கட்டுரை, வெளியுறவுக் கொள்கையில் பின் சல்மானுடன் ஒரு நல்லுறவு தேவை என்பதை மறுக்கவில்லை. அது பைடெனை, விடுவிக்கப்பட வேண்டிய அரசியல் கைதிகளின் பட்டியலை ஒப்படைக்கவும், சவுதி அதிருப்தியாளர்களுடன் நேருக்கு நேர் சந்திப்பை நடத்தவும் வலியுறுத்தியது. இது 'பைடெனின் சுய மரியாதை இழப்பு, அமெரிக்க எரிபொருளுக்கான மலிவான எரிவாயுவிற்காக அல்லாது அதிக மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே என்று காட்ட இது ஒரு வழியாகும்' என்று ரியான் முடிக்கிறார்.
எவ்வாறாயினும், 'சுய சுய மரியாதை இழப்பு' பற்றிய பேச்சு முற்றிலும் விடயத்திற்கு அப்பாற்பட்டது. பைடென் எண்ணெய்க்காக இரத்த ஒப்பந்தம் செய்வதன் மூலம் பின் சல்மானின் நிலைக்குத் தன்னைத் தாழ்த்திக் கொள்ளவில்லை. அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உண்மையான காட்டுமிராண்டித்தனத்தையும் சீரழிவையும் மற்றும் அதன் தற்போதைய அரசியல் தலைவராக தன்னையும் வெளிப்படுத்துகிறார்.
பைடென் மற்றும் பின் சல்மானின் சந்திப்பில், சவுதி சர்வாதிகாரிகளை அற்பர்களாக்கும் பாரிய கொலைகள் உட்பட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் பைடெனே மிக நீண்ட பட்டியலைக் கொண்டிருப்பவராவார். பைடென் அரை நூற்றாண்டு காலமாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பில் முன்னணி நபராக இருந்து வருகிறார். 1990-91 முதல் வளைகுடாப் போர் வரை அமெரிக்க ஆக்கிரமிப்புப் போர்களுக்கான கொள்கையை வகுக்க அவர் உதவினார், அதை அவர் செனட்டில் முழுமையாக ஆதரித்தார்.
பைடென் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்கப் போர்களை அங்கீகரிக்கும் தீர்மானங்களுக்கு வாக்களித்தார். மேலும் அவர் செனட்டில் பணியாற்றிய 36 ஆண்டுகளில் பென்டகன் போர் எந்திரத்திற்கு பாரிய நிதியை வழங்கினார். அவர் ஒபாமாவின் துணை ஜனாதிபதியானவுடன், ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா, யேமன் மற்றும் சோமாலியாவில் அமெரிக்க போர்கள் அல்லது தலையீடுகள் மற்றும் ஒரு பரந்த பிராந்தியத்தில் ட்ரோன் ஏவுகணை படுகொலைகளுக்கு நேரடி நிர்வாக பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷ்ய-சார்பு ஜனாதிபதியை தூக்கியெறிந்து, கியேவில் ஒரு பாசிச ஆதரவு ஆட்சியை நிறுவ அமெரிக்கா 5 பில்லியன் டாலர்கள் செலவழித்த காலகட்டத்தில், ஒபாமா அவரை உக்ரேனை நிர்வகிப்பதற்கான தனது அரசாங்கத்தின் முக்கிய நபராக ஆக்கினார்.
பைடெனுக்கும் பின் சல்மானுக்கும் இடையிலான சந்திப்பில், பைடென் தான் முன்னோடியாக (Godfather) இருக்கும் மனிதராவர். பல குற்றங்களில் குற்றவாளியான அவரால், அவை அனைத்தையும் நினைவில் வைத்திருக்கமுடியவில்லை. இந்த கழுத்தறுக்கும் பட்டத்து இளவரசர் பிறப்பதற்கு முன்பே பின் சல்மானின் கொலைகளைப் போலவே மிருகத்தனமான கொலைகளைச் செய்து கொண்டிருந்த ஒரு இராணுவ-உளவுத்துறை அமைப்பிற்கு அவர் தலைமை தாங்குகிறார்.
மேலும் படிக்க
- பைடெனின் சவுதி பயணமும் மனித உரிமை ஏகாதிபத்தியத்தின் மோசடியும்
- சவுதி அரேபியாவிற்கான பைடெனின் விஜயம் ரஷ்யாவிற்கு எதிரான ஏகாதிபத்திய போரின் பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்துகிறது
- சவூதி முடியாட்சி ஒரே நாளில் 81 ஆண்களை தூக்கிலிட்டது: மத்திய கிழக்கில் அமெரிக்காவின் உயர்மட்ட கூட்டாளியின் மத்தியகாலத்து காட்டுமிராண்டித்தனம்