முன்னோக்கு

பைடெனின் சவுதி பயணமும் மனித உரிமை ஏகாதிபத்தியத்தின் மோசடியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை வெள்ளிக்கிழமைச் சந்திக்க உள்ளார். அதிருப்தியாளர் ஜமால் கஷோகியைச் சவூதி அரசக் குடும்பம் கொன்றதற்கு விடையிறுப்பாக அந்த மதராஜ்ய சர்வாதிகாரத்தை 'ஒதுக்கி' வைக்கும் பிரச்சாரப் பாதையில் பைடெனின் திட்டவட்டமான வாக்குறுதியை இந்த விஜயம் மாற்றி அமைக்கிறது.

சவூதி பத்திரிகையாளரான கஷோகியின் 2018 படுகொலையைத் தனிப்பட்ட ரீதியில் சல்மான் 'ஒப்புக்' கொண்டிருந்தார் என்று குறிப்பிட்டுக் கடந்தாண்டு பெப்ரவரியில் பைடென் நிர்வாகம் ஓர் அறிக்கை வெளியிட்டது, கஷோகியின் எழுத்துக்கள் வாஷிங்டன் போஸ்டில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

FILE - In this Dec. 15, 2014, file photo, Saudi journalist Jamal Khashoggi speaks during a press conference in Manama, Bahrain. The Washington Post columnist, who wrote critically about the Saudi crown prince, was killed inside the Saudi Consulate in Istanbul in October 2018. (AP Photo/Hasan Jamali, File)

கஷோகி அவருக்கு நடக்கவிருந்த திருமணம் தொடர்பான ஆவணங்களைப் பெறுவதற்காகத் துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்திற்குச் செல்ல நேரிட்டிருந்தது. உள்ளே நுழைந்ததும், கொலைகாரர்களின் ஒரு கும்பல் அவரைப் படுகொலைச் செய்தது. பின்னர் துருக்கி அரசாங்கம் வெளியிட்ட ஒரு பதிவு செய்யப்பட்ட காணொளி, அவர் உடல் ஒரு ரம்பத்தால் துண்டு துண்டாக அறுக்கப்படுவதை ஆவணப்படுத்திக் காட்டியது.

நவம்பர் 2020 இல் நடந்த ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி விவாதத்தில், பைடென் கூறுகையில், அவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், யேமனுக்கு எதிரான சவூதி அரேபியாவின் போரில் பயன்படுத்துவதற்காகச் சவூதி அரேபியாவுக்கு விற்கப்படும் ஆயுதங்களை அவர் நிர்வாகம் நிறுத்தும் என்றும், கஷோகியைக் கொன்ற சவூதி அதிகாரிகளைத் 'தண்டிக்கும்' என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.

'உண்மையில், கஷோகி படுகொலைச் செய்யப்பட்டு அவர் உடல் துண்டு துண்டாகச் சிதைக்கப்பட்டது,” என்று கூறிய பைடென், “இது பட்டத்து இளவரசரின் உத்தரவின் பேரில் நடந்ததாக நான் நம்புகிறேன். உண்மையில் சொல்லப் போனால், நாங்கள் அவர்களுக்கு இன்னும் ஆயுதங்களை விற்கப் போவதில்லை, உண்மையில், நாங்கள் அவர்களை விலை கொடுக்கச் செய்வோம், உண்மையில் அவர்களைத் தனிமைப்படுத்துவோம்… என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்,” என்றார்.

பைடென் தொடர்ந்து கூறுகையில், அவர் 'சவூதியர்களுக்குப் பொருட்கள் விற்பதை நிறுத்த' இருப்பதாகவும், “அங்கே அவர்கள் தொடர்ந்து குழந்தைகளைப் படுகொலைச் செய்கிறார்கள், அவர்கள் அப்பாவி மக்களைக் கொலைச் செய்கிறார்கள்,” என்றார்.

கஷோகியின் கொலைக்குக் கூடுதலாக, பைடென் யேமன் மீதான போரையும் குறிப்பிட்டிருந்தார், அதில் சவூதி அரேபியா, அமெரிக்காவின் குண்டுகளைக் கொண்டு, வெகுஜனங்களைப் பட்டினிக் கிடத்தியது உட்பட, அப்பாவி மக்களை வேண்டுமென்றே இலக்கு வைத்தது. ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அதிகாரி குறிப்பிட்டதைப் போல, “யேமன் பொது மக்கள் பட்டினியால் வாடவில்லை, அவர்கள் பட்டினிக் கிடத்தப்படுகிறார்கள்.” சவூதி அரேபியாவைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு இழுத்து வர வேண்டுமென அவர் அழைப்பு விடுத்தார்.

அமெரிக்க வெளியுறவுத் துறைத் தகவல்படி, சவூதி அரேபியாவில் 'குறிப்பிடத்தக்க மனித உரிமைகள் பிரச்சினைகள்' உள்ளன, அவற்றில் உள்ளடங்குபவை:

சட்ட விரோதப் படுகொலைகள்; வன்முறை அல்லாத குற்றங்களுக்கும் மரண தண்டனை; பலவந்தமாகக் காணாமல் ஆக்குவது; சித்திரவதை … அமைதியாக ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் குழுக்கள் அமைப்பதற்கான சுதந்திரத்தில் கணிசமாகக் குறுக்கிடுவது … சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்கள் மூலம் மக்கள் அவர்களின் அரசாங்கத்தை அமைதியாகத் தேர்ந்தெடுக்கச் செய்ய இலாயக்கற்று இருப்பது; பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாகுபாடு … விருப்பத்தின் பேரில் ஓர் பாலின நடவடிக்கையைக் குற்றமாக்குதல்; தொழிற்சங்களுக்கும் மற்றும் கூட்டு பேரம்பேசல்களுக்கும் தடை உட்பட அமைப்புகள் ஏற்படுத்துவதற்கான தொழிலாளர்களின் சுதந்திரத்தின் மீது தடை ஆகியவை உள்ளடங்குகின்றன.

மார்ச்சில், பைடென் பயணத்திற்கு நான்கு மாதங்களுக்கு முன்னர், சவூதி அரேபியா ஒரே நாளில் 81 பேரைத் தூக்கிலிட்டது, இது இந்த பேரரசின் நவீன கால வரலாற்றில் மிகப் பெரியதாகும்.

பதவியேற்றதும் பைடென் வாக்குறுதிகள் அளித்திருந்தாலும், 2021 இல் கூடுதலாக 650 மில்லியன் டாலர் மதிப்பிலான ஏவுகணைகளை விற்று, யேமன் மக்களுக்கு எதிராகச் சவூதி அரேபியா அதன் போரை நடத்த அமெரிக்க ஆயுத ஏற்றுமதியை விரிவுபடுத்தினார்.

ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்களைத் தீவிரப்படுத்துவது பற்றி விவாதித்து வந்த அதேவேளையில், பின் சல்மானைச் சந்தித்து, யேமனில் கொலை வெறிப் போருக்குத் தொடர்ந்து நிதியுதவி அளிப்பதன் மூலம், பைடென் 'இடைவிடாத போரின் இந்தக் காலகட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக' அவரின் பொய் வாக்குறுதியை இன்னும் கூடுதலாக மறுத்தளித்து வருகிறார்.

சவூதி அரேபியாவும் சம்பந்தப்பட்டிருப்பதாக அதைப் பற்றிப் பைடென் வெற்று அறிக்கைகளை அறிவித்துக் கொண்டிருந்த அதேவேளையில், ரஷ்யாவுடனான தற்போதைய அமெரிக்க-ஆதரவு பினாமி போருக்குத் தயாரிப்பு செய்வதற்காக உக்ரேனைத் திட்டமிட்டு ஆயுதமயப்படுத்தும் தொலைநோக்கு திட்டங்களும் ஏற்கனவே நடந்து கொண்டிருந்தன. பைடென், இந்தப் போரின் பெயரில், யேமனில் சவூதி அரேபியாவின் வெகுஜனப் படுகொலைகளில் இருந்தும் மற்றும் கஷோகியை அது கொன்றதில் இருந்தும் தன்னைத் தூர நிறுத்திக் கொள்வதற்கான எந்தப் பாசாங்குத்தனத்தையும் முழுமையாகக் கைவிடுவதை நியாயப்படுத்தி உள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்கப் போரைச் சுற்றியுள்ள பிரச்சாரத்தின் மிகவும் குறிப்பிடத்தக்கப் பண்புகளில் ஒன்று என்னவென்றால், போரில் அமெரிக்கத் தலையீட்டை வழிநடத்தும் சடவாத நலன்களைப் பற்றிய எந்தவித விவாதத்தையும் முற்றிலுமாகத் தவிர்த்துக் கொள்வதாக உள்ளது.

இந்தப் போர் முற்றிலும் நல்லெண்ண நோக்கங்களால் உந்தப்பட்டு உள்ளதாகவும், அமெரிக்கா மிகவும் கருணையோடு, “ஜனநாயக' பாதுகாப்பிற்கான ஒரு நியாயமான போரை நடத்துவதில் வரம்பின்றி ஆதார வளங்களைச் செலவிடத் தயாராக இருப்பதாகவும், ஊடகங்களில் சவால் செய்ய முடியாத ஒரு மூலக்கூறு உள்ளது. இதைத் தவிர வேறெந்த விளக்கமும் ரஷ்யப் பிரச்சாரமாக முத்திரைக் குத்தப்படுகிறது.

இந்த யதார்த்தம் சனிக்கிழமை வாஷிங்டன் போஸ்டில் பைடென் பிரசுரித்த பொதுத் தலையங்கத்தை இன்னும் அதிக முக்கியத்துவம் கொண்டதாக ஆக்குகிறது. சவூதி அரேபியாவுக்கான அவர் பயணத்தை நியாயப்படுத்த முயன்ற அதேவேளையில், பைடென், மத்திய கிழக்கில் அமெரிக்க இலக்குகளை முழுவதுமாக அமெரிக்கப் புவிசார் அரசியல் அபிலாஷைகளின் கண்ணாடி வழியாக விளங்கப்படுத்தி, மனித உரிமைகள் பற்றிய எந்த விவாதத்தையும் புறக்கணித்தார்.

இதற்காக, பைடென் 'மனித உரிமைகள்' மற்றும் 'கஷோகி' என்ற வார்த்தைகளை அதில் ஒரேயொரு முறை மட்டுமே பயன்படுத்தினார். மாறாக, அந்தப் பயணத்திற்கான மொத்த நியாயப்பாடும் அமெரிக்க வணிக மற்றும் இராணுவ மூலோபாயத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருந்தது, அல்லது பைடென் கூறியது போல, 'முக்கிய அமெரிக்க நலன்களை முன்னெடுப்பதற்காக' வடிவமைக்கப்பட்டு இருந்தது.

“நாம் சார்ந்திருக்கும் உலகளாவிய வர்த்தகத்திற்கும் மற்றும் வினியோகச் சங்கிலிகளுக்கும் அதன் கடல்வழிப் பாதைகள் இன்றியமையாதவை. உக்ரேனில் ரஷ்யப் போரால் உலகளாவிய வினியோகங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் குறைக்க அதன் எரிசக்தி ஆதார வளங்கள் அத்தியாவசியமானவை,” என்பதால் அவர் மத்தியக் கிழக்கிற்குப் பயணிப்பதாக, அவர், சுற்றி வளைக்காமல் நேரடியாகவே, விளக்கினார்.

கஷோகியைத் திருமணம் செய்து கொள்ளவிருந்த Hatice Cengiz, கடந்த மாதம் வாஷிங்டன் போஸ்ட்டில் பிரசுரித்த ஒரு பொதுத் தலையங்கத்தில், 'உங்கள் பயணத்தை இரத்து செய்து, ஜமாலுக்கான நீதி நிலைநாட்டப்படும் என்ற உங்கள் வாக்குறுதியை நிலைநிறுத்துங்கள்' என்று பைடென் நிர்வாகத்திற்கு முறையிட்டு இருந்ததுடன், இந்தப் பயணம் 'குறிப்பாக எங்களின் ஆழ்ந்த துக்கத்தையும் அவநம்பிக்கையையும் கொண்டிருக்கும்' என்று குறிப்பிட்டார்.

'உக்ரேனில் எதிர்ப்பாளர்களைத் துன்புறுத்துவதற்கும், போர்க் குற்றங்கள் புரிவதற்கும் நீங்கள் ரஷ்யாவை கண்டிக்கிறீர்கள்,' ஆனால் சவூதி அரச குடும்பத்திற்கு ஏன் 'சலுகைக் கொடுக்கப்படுகிறது? இது எண்ணெய்க்கான விலையா?” என்று அவர் பைடெனுக்குக் கேள்வி எழுப்பினார்.

தெளிவாக, அது தான் காரணம்.

'மனித உரிமைகள் மீதான அவர் பார்வைகள் தெளிவானவை மற்றும் நீண்ட காலத்திற்கு உரியவை' என்றாலும், இராணுவம் மற்றும் பொருளாதாரக் கட்டாயங்கள் முதன்மையானவை என்று பைடென் தொடர்ந்து எழுதுகிறார்.

ஜனாதிபதியாக, நம் நாட்டை வலுவாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது எனது பணியாகும். நாம் ரஷ்யாவின் ஆக்ரோஷத்தை எதிர்க்க வேண்டியுள்ளது, போட்டியில் சீனாவை ஜெயிக்க நம்மை அதை விடச் சிறந்த நிலையில் நிலைநிறுத்த வேண்டியுள்ளது, உலகின் அடுத்தடுத்த பிராந்தியத்தில் அதிக ஸ்திரத்தன்மைக்காகச் செயலாற்ற வேண்டியுள்ளது. இவற்றைச் செய்ய, இந்த விளைவுகளில் பாதிப்பு ஏற்படுத்தும் நாடுகளுடன் நாம் நேரடியாக ஈடுபட வேண்டியுள்ளது. அதில் சவூதி அரேபியாவும் ஒன்றாகும், வெள்ளிக்கிழமை நான் சவூதி தலைவர்களைச் சந்திக்கும் போது, பரஸ்பர நலன்கள் மற்றும் பொறுப்புகளை அடிப்படையாகக் கொண்டு முன்னோக்கிச் செல்லும் ஒரு மூலோபாயப் பங்காண்மையை வலுப்படுத்துவதே எனது நோக்கமாக இருக்கும்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ரஷ்யாவுடன் போர் செய்ய அமெரிக்கா ஆர்வமாக உள்ளது, எதிர்ப்பாளர்களைக் கொல்வதிலும் யேமன் மக்களுக்கு எதிராகப் போர் குற்றங்கள் புரிவதிலும் சவூதி அரேபியா ஆர்வமாக உள்ளது. இந்த 'பரஸ்பர ஆர்வத்தை' பரஸ்பரம் பின்தொடர்வதற்காக அமெரிக்காவின் 'மூலோபாயப் பங்காண்மை' அமைக்கப்படுகிறது.

பைடெனின் சவூதி அரேபியா பயணத்தில் இருந்து பெறப்பட வேண்டிய தீர்மானங்கள் தெளிவாக உள்ளன. உண்மையில் சொல்லப் போனால், மனிதாபிமான அக்கறைகளுக்கு அமெரிக்க வெளியுறவுக் கொள்கையுடன் எந்த இணக்கமும் இல்லை. அவை வெறுமனே சொல்லாடல்களும் மக்கள் தொடர்பு கருத்துக்களும் தான்.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையானது உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அமெரிக்க ஏகாதிபத்திய முனைவால் உந்தப்படுகிறது, ரஷ்யாவை அழித்து அடிபணிய வைக்க வேண்டும் என்ற அதன் ஒரே நோக்கம், சீனாவுடனான ஓர் இராணுவ மோதலுக்கு வெள்ளோட்டமாகும்.

உலகளாவிய மேலாதிக்கமாக அதன் நிலைப்பாட்டைத் தக்க வைக்க, அமெரிக்கா 1 மில்லியனுக்கும் அதிகமான மக்களை இரத்தந்தோய்ந்த தசாப்தக் கால போர்களில் கொன்று, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது. இந்த 'பயங்கரவாதம் மீதான போரின்' பாகமாக, அமெரிக்க இராணுவமும் உளவுத்துறை அமைப்புகளும் சித்திரவதை மற்றும் பாரிய வெகுஜன படுகொலைகளின் ஒரு கொள்கையை மேற்கொண்டன.

இப்போது, அது போர்க் குற்றங்கள் புரிவதற்கும் மற்றும் அவர்களின் உள்நாட்டு எதிர்ப்பாளர்களைச் சித்திரவதைச் செய்யவும் மற்றும் கொலைச் செய்யவும் அதன் சவூதி கூட்டாளிகளுக்கு அதிகாரச் சுதந்திரம் வழங்கி வருகிறது.