முன்னோக்கு

யேமனை "நிர்மூலமாக்கி" மத்திய கிழக்கை அடிமைப்படுத்துவதற்கான அமெரிக்கப் போருக்கு ட்ரம்ப் அழைப்பு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

யேமன் தலைநகர் சனாவில் ஒரே இரவில் அமெரிக்க வான்வழித் தாக்குதல்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தை உள்ளூர் மக்கள் பார்வையிடுகிறார்கள். வியாழக்கிழமை, மார்ச் 20, 2025 [AP Photo/AP Photo]

காஸா பகுதியை இன ரீதியாக சுத்திகரித்து இணைப்பதற்கான முயற்சிகளை ட்ரம்ப் நிர்வாகம் இரட்டிப்பாக்கியுள்ள நிலையில், அமெரிக்கா ஏமனையும், இறுதியில் ஈரானையும் குறிவைத்து ஒரு புதிய இராணுவத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இந்தத் தாக்குதல், வாஷிங்டனின் மேலாதிக்கத்தின் கீழ் மத்திய கிழக்கை மறுஒழுங்கமைப்பதை நோக்கமாகக் கொண்ட இஸ்ரேலிய-அமெரிக்கப் போரின் திட்டமிட்ட விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

கடந்த ஞாயிறன்று, அமெரிக்க இராணுவம் அரேபிய தீபகற்பத்தின் தென்மேற்கு மூலையில் 34.7 மில்லியன் மக்களைக் கொண்ட வறிய நாடான யேமன் மீது ஒரு பெரிய தாக்குதலை நடத்தியது. அதைத் தொடர்ந்து பல நாட்கள் தொடர்ச்சியான குண்டுவீச்சுத் தாக்குதல்கள் யேமன் மீது மேற்கொள்ளப்பட்டன.

கடந்த புதனன்று, யேமனை “முற்றிலுமாக நிர்மூலமாக்க” சூளுரைத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “இது ஒரு நியாயமான சண்டை கூட அல்ல, அது ஒருபோதும் நடக்காது. அவர்கள் முற்றிலுமாக அழிக்கப்படுவார்கள்” என்று அறிவித்தார். பின்னர் ஈரானை அச்சுறுத்திய அவர், அது “விளைவுகளை சந்திக்கும், அந்த விளைவுகள் மோசமானதாக இருக்கும்!” என்று கூறினார்.

யேமனை “நிர்மூலமாக்கும்” அவரது நோக்கத்தை அறிவித்ததன் மூலமாக, ட்ரம்ப் அவரது அரசியல் முன்மாதிரியான அடோல்ஃப் ஹிட்லரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டியுள்ளார். மார்ச் 30, 1941 அன்று, ஹிட்லர் ஒன்றுகூடியிருந்த தனது தளபதிகளிடம் கூறுகையில், சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக நாஜி ஜேர்மனி திட்டமிட்டுக் கொண்டிருந்த போர் ஒரு “வெர்னிக்டுங்ஸ்கேம்ப்“ (Vernichtungskampf) அல்லது “நிர்மூலமாக்கும் போராக” இருக்கும் என்றார். அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, ஹிட்லர் சோவியத் ஒன்றியத்தை அழிப்பதற்கான போரைத் தொடுத்தார். இந்தப் போரில், அப்பாவி மக்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டு, பட்டினிக்கு உள்ளாக்கப்பட்டனர். இதனால் 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்.

உலகின் மறுபக்கத்தில் உள்ள ஒரு சிறிய வறிய நாட்டை “நிர்மூலமாக்குவதற்கு” ட்ரம்ப் விடுத்துள்ள அச்சுறுத்தல், படுகொலைகள் மற்றும் பட்டினிகள் மூலமாக காஸா மக்களை, அவர்களின் மண்ணில் இருந்து வெளியேற்றுவதற்கான அமெரிக்க-இஸ்ரேலிய முயற்சியின் செயல்பாட்டு கருத்தாக்கமான இனப்படுகொலை மொழி, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் பரந்த பகுதிகளை எந்த அளவிற்கு அதிகரித்தளவில் வரையறுக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. அமெரிக்க நேரடி காலனித்துவ அடிமைத்தனத்திற்கு எதிரான அனைத்து எதிர்ப்புகளையும், அமெரிக்க ஆதரவு இஸ்ரேலிய ஆட்சியாளர்கள் பாலஸ்தீனியர்களை நடத்தும் விதத்தில் நடத்த ட்ரம்ப் சூளுரைத்து வருகிறார்: அது, முழுமையான அழித்தொழிப்பாகும்.

காஸா இனப்படுகொலைக்கு முன்னர், ஏகாதிபத்திய சக்திகளின் கட்டளைப்படி அப்பாவி மக்கள் வேண்டுமென்றே பாரிய பட்டினிக்கு உள்ளாக்கப்பட்ட யேமன், உலகின் முன்னணி உதாரணமாக இருக்கிறது. 2015 மற்றும் 2022 க்கு இடையில், சவூதி-அமெரிக்க குண்டுவீச்சு தாக்குதலுக்கும், வேண்டுமென்றே அப்பாவி மக்கள் பட்டினிக்கு உள்ளாக்கப்பட்டதிலும், யேமனில் ஏறத்தாழ 400,000 மக்கள் உயிரிழந்தனர். 2020 ஆம் ஆண்டில், யேமன் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் தலைவரான கமல் ஜெண்டுபி, சவூதி அரேபியாவால் யேமனின் துறைமுகங்கள் வேண்டுமென்றே அமெரிக்க ஆதரவுடன் முற்றுகையிடப்பட்டதை மேற்கோள் காட்டி, “யேமனில் உள்ள பொதுமக்கள் பட்டினியால் வாடவில்லை. மாறாக, அவர்கள் பட்டினியால் வாட்டப்படுகிறார்கள்” என்று கூறினார்.

அந்த நேரத்தில், யேமனில் சவூதி அரேபியாவின் தாக்குதலுக்கு, அதன் இராணுவத்திற்கு நிதியளித்து ஆதரித்த அரசாங்கங்கள் கூட, குற்றவாளிகளாகக் கருதப்பட்டன. நவம்பர் 2019 ஜனாதிபதி தேர்தல் விவாதத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், சவூதிகள் “உள்ளே சென்று குழந்தைகளைக் கொலை செய்வதாகவும், அவர்கள் அப்பாவி மக்களைக் கொல்வதாகவும் குற்றம் சாட்டினார்.” மேலும், “அவர்கள் பொறுப்புக் கூற வேண்டும்” என்றும் கூறினார். “உண்மையில், நாங்கள் அவர்களுக்கு அதிக ஆயுதங்களை விற்கப் போவதில்லை” என்றும் அவர் சூளுரைத்தார்.

ஆனால், பைடென் அதிபராக பதவியேற்றவுடன் அதைத்தான் செய்தார். அவர் 2021 இல் சர்வாதிகார சவுதி ஆட்சிக்கு 650 மில்லியன் டாலர் ஏவுகணைகளை விற்றார். பின்னர், சவுதியின் மன்னர் ஆட்சிக்கு ஆயுத விற்பனை செய்வதற்கான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் அவர் நீக்கினார். 2022 ஆம் ஆண்டில், நீண்டகால அமெரிக்க குடிமகனும் வாஷிங்டன் போஸ்ட் நிருபருமான ஜமால் கஷோகியின் 2018 படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய சவுதி அரேபியாவின் முடிக்குரிய ஆட்சியாளரான இளவரசர் முகமது பின் சல்மானை பைடென் பகிரங்கமாகப் முஷ்டி போட்டு பாராட்டினார். 2024 ஆம் ஆண்டில் சவுதி வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான மரணதண்டனைகளை முகமது பின் சல்மானின் காட்டுமிராண்டித்தனமான ஆட்சியில் கட்டவிழ்த்துவிடப்பட்டது. அப்போது 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

யேமன் மீதான அமெரிக்காவின் புதுப்பிக்கப்பட்ட தாக்குதலின் உடனடி உள்ளடக்கமானது, காஸாவில் ஒரு “போர் நிறுத்தத்தை” நோக்கிச் செயல்படுவதாக அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் செய்யும் எந்தவொரு பாசாங்கையும் திட்டமிட்டு முறையாக நிராகரிப்பதாகும்.

யேமனின் வரைபடம். [Photo by EC-JRC (ECHO) / CC BY-SA 4.0]

காஸாவில், இரண்டு மாத காலப்பகுதியில் பெயரளவிலான போர்நிறுத்தம் அமுலில் இருந்தபோது நூற்றுக்கணக்கான பொதுமக்களை படுகொலை செய்து, தினசரி தாக்குதல்களை நடத்திவரும் இஸ்ரேல், இப்போது “போர்நிறுத்தத்தை” கடைப்பிடிப்பதை கைவிட்டுள்ளது. இருபது நாட்களுக்கு முன்பு, இஸ்ரேல் காஸாவிற்குள் அனைத்து வகையான உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ வசதிகள் நுழைவதைத் தடுத்தது. இந்த வாரம், அது காஸா மீது அதன் முழு அளவிலான வான்வழி குண்டுவீச்சு தாக்குதலை புதுப்பித்தது. கடந்த செவ்வாயன்று ஒரே நாளில் 400 க்கும் அதிகமானவர்களை இஸ்ரேல் படுகொலை செய்தது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட “போர்நிறுத்தத்தின்” விதிமுறைகளின் கீழ், அந்நாட்டின் 60 சதவீத மக்களின் தாயகமாக இருக்கின்ற பிராந்தியத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள யேமனின் ஹௌதி இயக்கம், செங்கடலைக் கடந்து செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. காஸா மீது உணவு, தண்ணீர், எரிபொருள் மற்றும் மருத்துவப் பொருட்கள் மீது இஸ்ரேல் முற்றுகையிட்டதற்கு விடையிறுப்பாக, செங்கடலில் இஸ்ரேலிய கப்பல்களை இலக்கு வைக்கப் போவதாக ஹௌதி அரசாங்கம் கூறியது.

இதையொட்டி, அமெரிக்கா பரந்த மத்திய கிழக்கு முழுவதிலும் ஒரு இராணுவ விரிவாக்கத்தின் பாகமாக, யேமன் மீதான அதன் தாக்குதலை புதுப்பிக்க ஹௌதிக்களின் இந்த எச்சரிக்கையை பற்றிக் கொண்டுள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்திற்குள் உள்ள பிரமுகர்கள் ஈரானின் அணுசக்தி வசதிகள் மீதான ஒரு நேரடி தாக்குதலுக்கு பகிரங்கமாக அறிவுறுத்தி வருகின்றனர்.

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக, அமெரிக்க கைக்கூலியான ஷா முகம்மது ரேசா பஹ்லவியின் இரத்தக்கறை படிந்த கொடுங்கோன்மை ஆட்சியை அழித்த 1978-79 ஈரானியப் புரட்சியின் விளைவுகளை மாற்றியமைக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் தீர்மானகரமாக இருந்து வருகிறது.

செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதல்கள், அப்பகுதியில் நேரடி அமெரிக்க மேலாதிக்கத்தை மீட்கும் நோக்கத்துடன் மத்திய கிழக்கில் ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையை தொடக்குவதற்கு ஒரு சாக்குப்போக்கை வழங்கின.

2001 இல் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ், ஈராக்கையும், ஈரானையும் “தீய அச்சு” நாடுகள் என்று பிரகடனம் செய்தார். “இந்தப் பிரச்சாரம் எங்கள் கண்காணிப்பில் முடிந்துவிடாது, இருப்பினும் இது எங்கள் கண்காணிப்பில் நடத்தப்பட்டாக வேண்டும், நடத்தப்படும்,” என்று புஷ் அறிவித்தார். புஷ்ஷின் பிரகடனத்தைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு 2003 ஈராக் மீதான படையெடுப்பு ஆரம்பித்தது.

9/11 தாக்குதல்களின் போது, ஜெனரல் வெஸ்லி கிளார்க் கூறுகையில், “ஈராக்கில் தொடங்கி பின்னர் சிரியா, லெபனான், லிபியா, சோமாலியா, சூடான், அதற்குப் பின்னர் ஈரானை அழித்து, ஐந்து ஆண்டுகளில் ஏழு நாடுகளுடன் போருக்குச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாகக்” கூறினார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீது முழு அளவிலான படையெடுப்புகளை மட்டுமே புஷ் நிர்வாகத்தால் நடத்த முடிந்தது. ஆனால், ஒபாமா நிர்வாகம் லிபியாவிலும் சிரியாவிலும் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளைத் தொடங்கி, 2011 இல் லிபிய அரசாங்கத்தைத் கவிழ்ப்பதில் வெற்றி கண்டது. சிரிய அரசாங்கம் – ஒரு தசாப்தத்திற்கும் மேலான போருக்குப் பிறகு – 2024 டிசம்பரில் கவிழ்க்கப்பட்டது.

2006 இல், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த கொண்டலீசா ரைஸ், அந்த ஆண்டில் லெபனான் மீதான அமெரிக்க ஆதரவிலான இஸ்ரேலிய படையெடுப்பைப் பாராட்டி, “புதிய மத்திய கிழக்கை” பிரகடனப்படுத்தினார். அதில் அமெரிக்கா ஈரானுடன் கூட்டணி வைத்த நாடுகளுக்கு எதிராக அதிகரித்த வன்முறையுடன் போரை தொடுக்கும் என்று அறிவித்தார்.

ரைஸின் சொற்பதம் —”புதிய மத்திய கிழக்கு”— காஸா இனப்படுகொலையை நடத்துவதிலும் அப்பிராந்தியம் முழுவதிலும் போர் தொடுப்பதிலும் பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சியின் தாரக மந்திரமாக இருந்து வருகிறது. அக்டோபர் 7, 2023 அன்று, ஹமாஸ் தலைமையிலான எழுச்சிக்கு சில நாட்களுக்கு முன்பு, நெதன்யாகு ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்று பாலஸ்தீனத்தின் முழு நிலப்பரப்பையும் இஸ்ரேல் இணைத்துக் கொள்வதைக் காட்டும் வரைபடத்தைக் காட்டினார். “ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் வழியாக ஆசியாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் ஒரு புதிய பாதையை நாங்கள் அமைப்போம்” என்று நெதன்யாகு அறிவித்தார்.

மத்திய கிழக்கின் மீது நேரடி அமெரிக்க காலனித்துவ கட்டுப்பாட்டை திணிக்கும் இந்த முயற்சியின் பரந்த கட்டமைப்பானது, சீனாவுடன் வரவிருக்கும் மோதலுக்கு தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் அமெரிக்காவின் முயற்சியாகும். உலகின் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்புக்களில் 50 சதவீதமும், அதன் நிரூபிக்கப்பட்ட இயற்கை எரிவாயு இருப்புக்களில் 40 சதவீதமும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளன.

ஒருவேளை இன்னும் முக்கியமாக, உலகின் கடல் போக்குவரத்தில் சுமார் 9 சதவீதமும், உலகின் கொள்கலன் போக்குவரத்தில் 20 சதவீதமும் செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப்-எல்-மண்டேப் ஜலசந்தியின் அடைப்புப் புள்ளி வழியாக இடம்பெறுகின்றன. இந்த முக்கியமான நீர்வழிப்பாதையின் கிழக்கு மற்றும் வடக்கு கரையோரங்கள் முழுவதையும் யேமன் கொண்டிருக்கிறது.

ப்ளூம்பெர்க் பத்திரிகை விளக்கியது போல்:

மத்திய கிழக்கு மற்றும் இந்தியாவிலிருந்து பாரிய அளவிலான கச்சா எண்ணெய், டீசல், இயற்கை எரிவாயு, பிற பெட்ரோலிய பொருட்கள் மற்றும் ஒட்டுமொத்த சரக்குகள் என்பன ஐரோப்பாவிற்கு செங்கடல் வழியாக கொண்டு செல்லப்படுகின்றன. ஏனெனில், இந்த பிராந்தியங்களுக்கு இடையிலான குறுகிய பாதை இதுவாகும். 2022 ஆம் ஆண்டில், உக்ரேன் மீதான முழு அளவிலான படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யா மீதான மேற்கத்திய பொருளாதாரத் தடைகள், செங்கடலை வேறு திசையில் பாயும் கச்சா எண்ணெய்க்கான ஒரு முக்கிய வர்த்தக தமனியின் ஒரு பகுதியாக மாற்றியது. ஏனெனில், மாஸ்கோ இப்போது தனது பெட்ரோலியத்தின் பெரும்பகுதியை ஆசியாவுக்கு விற்பனை செய்து வருகிறது.

ட்ரம்பின் கீழ், அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவுடனான மோதலுக்குத் தயாராகும் பொருட்டு, உலகளாவிய வர்த்தகத்தின் முக்கிய வழித்தடப் பகுதிகளைக் கைப்பற்றி மேலாதிக்கம் செலுத்த முயன்று வருகிறது. இதில் செங்கடலின் மேலாதிக்கம் மட்டுமல்ல, பனாமாக் கால்வாயைக் கைப்பற்றி, ஆர்க்டிக் வழியாக எதிர்கால வடமேற்குப் பாதையைக் கட்டுப்படுத்த கனடா மற்றும் கிரீன்லாந்தை இணைக்கும் ட்ரம்பின் திட்டமும் அடங்கும்.

உலகப் போரும் உள்நாட்டில் ஒரு சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான முனைவும் ட்ரம்பின் வேலைத்திட்டத்தின் இன்றியமையாத கூறுபாடுகளாக உள்ளன. வரம்பற்ற இராணுவ வன்முறை மற்றும் சுங்கவரிகள் போன்ற கட்டாய பொருளாதார கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம், உலகில் அமெரிக்க மேலாதிக்கத்தை, முதன்மையாக சீனாவிற்கு எதிராக உறுதிப்படுத்த ட்ரம்ப் முயன்று வருகிறார்.

இவருடைய போர் விரிவாக்கம், தொழிலாள வர்க்கத்தின் மீது நடத்தப்படும் நேரடித் தாக்குதலில் இருந்து பிரிக்க முடியாதது ஆகும். இது, மருத்துவப் பாதுகாப்பு, மருத்துவ உதவி, சமூகப் பாதுகாப்பு போன்ற அடித்தளத்தில் உள்ள சமூகநலத் திட்டங்களை தகர்த்து, அதன் மூலம் கிடைக்கும் தொகையை மறு ஆயுதபாணியாக்குதல், வங்கிப் பிணையெடுப்பு ஆகியவற்றிற்கு பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்குத் திரும்பாமல் இவற்றில் எதுவுமே செய்யப்பட முடியாது. ட்ரம்ப் நிர்வாகம், அமெரிக்க வெளியுறவு கொள்கையின் எதிர்ப்பாளர்களை “பயங்கரவாதிகள்” என்று அவதூறு செய்ய முனைந்துள்ளது. அமெரிக்க குடியேற்ற அமைப்புமுறையில் போலீஸ் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி எதிர்ப்பாளர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்து நாடு கடத்துகிறது. மத்திய கிழக்கு முழுவதும் ட்ரம்பின் போர் தீவிரமடைந்து வருவதால், ஈரானை நேரடியாக குறிவைக்கும் சாத்தியக்கூறுகள் உட்பட, அவரது நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் மௌனமாக்கும் இந்த தாக்குதல், அமெரிக்க குடிமக்கள் மீதும் விரிவுபடுத்தப்படும்.

உலகளாவிய போருக்கான ட்ரம்பின் திட்டங்களுக்கு ஒரு சர்வாதிகாரத்தைக் கட்டியெழுப்புவதும் தொழிலாள வர்க்கத்தை வறுமைக்குள் தள்ளுவதும் அவசியமாகும். இந்தக் காரணத்திற்காக, அவரது நிர்வாகத்திற்கு எதிரான போராட்டமானது, காஸா இனப்படுகொலைக்கு எதிர்ப்பு அல்லது ஜனநாயக உரிமைகள் மீதான அவரது தாக்குதலுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட முடியாது.

அமெரிக்காவில் ஒரு சர்வாதிகாரத்தை உருவாக்குவதற்கான ட்ரம்பின் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த தகைமை கொண்ட ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். ஏகாதிபத்திய போருக்கும், போருக்கு மூலகாரணமான முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரு தொழில்துறை மற்றும் அரசியல் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டக் கூடிய வகையில், மார்க்சிசத்தின் தத்துவார்த்த வேலைத்திட்டத்தைக் கொண்டு ஆயுதபாணியாக்கப்பட்ட ஒரு சோசலிச தலைமையைக் கட்டியெழுப்புவதே மத்திய பணியாகும். சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் (IYSSE) இந்த போராட்டத்தில் முன்னணியில் உள்ளன.