மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஜேர்மன் அரசாங்கம் அதன் 2023 க்கான போர் வரவு-செலவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய மூன்று வாரங்களுக்குப் பின்னர், ஒரு பாரிய ஆயுதக் கட்டமைப்பு நடந்து வருகிறது. புதன்கிழமையன்று, பாராளுமன்ற வரவு-செலவுத் திட்டக் குழு அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட 35 US F-35 லைட்னிங் II ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்களை வாங்குவதற்காக 10 பில்லியன் யூரோக்களை அனுமதித்துள்ளது.
அதே நாளில், ஆயுதப் படைகளுக்கான தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவை ஆதரவு (BAAINBw) மத்திய அலுவலகம் அமெரிக்க விமானப் படையுடன் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பேர்லினில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அறிக்கையின்படி, விமானங்கள் '2026 மற்றும் 2029 க்கு இடையில்' வழங்கப்பட உள்ளன. இந்த அமெரிக்க வெளிநாட்டு இராணுவ விற்பனைத் திட்டத்தில் 'விற்பனையைக் கையாளல், நடவடிக்கைகளை திட்டமிடல், வெடிமருந்துகள், தளவாடங்கள் மற்றும் பயிற்சி ஆகியவை அடங்கும்.'
அணு குண்டுவீச்சு விமானங்களை வாங்குவது என்பது பல வழிகளில் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்கள் மீதான போர்ப் பிரகடனமாகும். இதன் மூலம், ஆளும் வர்க்கம் அதன் ஏகாதிபத்திய நலன்களை முன்னெடுப்பதற்காக அணு ஆயுதப் போரை நடத்தத் தயாராக உள்ளது என்பதை இது தெளிவுபடுத்துகிறது. அது பில்லியன் கணக்கான மக்களின் மரணம் மற்றும் முழு உலகத்தின் சாத்தியமான அழிவையும் குறிக்கிறது.
புதனன்று தனது அரசாங்க அறிக்கையில், சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் (சமூக ஜனநாயகக் கட்சி - SPD) அணுசக்தி ரஷ்யாவை முழுப் போர் மூலம் அப்பட்டமாக அச்சுறுத்தினார்: 'தேவைப்பட்டால், கூட்டணி பிரதேசத்தின் ஒவ்வொரு சதுர மீட்டரையும் பாதுகாப்போம்' என்று அவர் அறிவித்தார். இந்த நோக்கத்திற்காக, '100 பில்லியன் யூரோக்கள் சிறப்பு நிதியாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இது எங்கள் படை உருவாக்கப்பட்டதிலிருந்து மிகப்பெரிய முதலீடு' என்று அவர் கூறினார். நவீன F-35 போர் விமானங்கள் வாங்குவதன் மூலம் கூட்டணியில் அணுசக்தி பகிர்வுக்கு ஜேர்மனியின் பங்களிப்பை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம்” என்றார்.
அதன் அர்த்தம் என்ன என்பதை விவரிக்க ஷோல்ஸ் விரும்பவில்லை. ரஷ்யாவிற்கு எதிரான அணுசக்தி போர் ஏற்பட்டால், தற்போது டொர்னாடோ வகை போர் விமானங்களை கொண்ட படையினர் ஜேர்மனியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்க அணுகுண்டுகளுடன் ஆயுதமயப்படுத்தியிருப்பதுடன் மேலும் அவற்றை பயன்படுத்தும். F-35 இன் சாத்தியமான ஆயுதமயமாக்கலுடன் 'தானாகவே விழும் அணு ஆயுதங்கள்' அடங்கும் என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் உத்தியோகபூர்வ இணைய தளத்தில் ஒரு கட்டுரை கூறுகிறது.
உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ பினாமிப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னணி நேட்டோ சக்திகள் அணுவாயுத மூன்றாம் உலகப் போரின் அச்சுறுத்தலை ஒத்துக்கொள்வது மட்டுமல்லாமல், அதற்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. விமானப்படை தளபதி ஜெனரல் இங்கோ ஹெர்ஹார்ட்ஸ் ஜூன் மாதத்தில் ரஷ்யா மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக வெளிப்படையாக அச்சுறுத்தினார். 'நம்பகரமாக அச்சுறுத்துவதற்கு, தேவைப்பட்டால் அணுசக்தி அச்சுறுத்தலைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் அரசியல் விருப்பம் இரண்டும் எங்களுக்குத் தேவை' என்று அவர் அறிவித்தார்.
அந்த நேரத்தில் உலக சோசலிச வலைத் தளம் ஒரு ஜேர்மன் தளபதி ரஷ்யாவுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதாக வெளிப்படையாக அச்சுறுத்துகிறார் என்பதை ஒரு தீவிர எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என விமர்சித்தது. மூன்றாம் குடியரசு வீழ்ச்சியடைந்து எழுபத்தேழு ஆண்டுகளுக்குப் பின்னர், ஆளும் வர்க்கத்தில் மீண்டும் ஒரு பாசிச சிந்தனை பரவி வருகிறது. அது தனது ஏகாதிபத்திய நலன்களை நிலைநாட்ட மீண்டும் ஒரு முறை மோசமான குற்றங்களைச் செய்யத் தயாராக உள்ளது.
F-35 களை வாங்கியதன் மூலம், ஜேர்மன் போர் திட்டங்கள் இப்போது பாரியளவில் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. படைகளின் தளபதி ஜெனரல் ஏபர்ஹார்ட் சோர்ன் மற்றும் பாதுகாப்பு மந்திரி கிறிஸ்டின லாம்ப்ரெக்ட் (SPD) ஆகியோருடன் புதனன்று ஹெர்ஹார்ட்ஸ் இந்த ஒப்பந்தத்தை அறிவித்தபோது, போர் விமானங்கள் வாங்குவது 'வரலாற்று ரீதியானது' மட்டுமல்ல, 'நாங்கள் பொருத்தமான உதிரிப் பாகங்களையும் [மற்றும் வெடிமருந்துகளையும்] வாங்குகிறோம் என்று பெருமையாகக் கூறினார், இது தொடக்கத்திலேயே அதிக அளவிலான செயல்பாட்டுத் தயார்நிலையை எங்களுக்கு உறுதி செய்யும்” என்றார்.
லாம்ப்ரெக்ட் இந்த கொள்முதல் ஆயுதப்படையின் விரிவான மேம்படுத்தலின் ஒரு பகுதியாகும் என்று அவரே தெளிவுபடுத்தினார். இது 'ஆயுதப்படைகளுக்கு ஒரு நல்ல நாள், தேசிய மற்றும் கூட்டணி பாதுகாப்புக்கு ஒரு நல்ல நாள்' என்று அவர் உற்சாகப்படுத்தினார். 'இன்று, வரவு-செலவுத் திட்ட குழுவில் ஏறக்குறைய 13 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான கொள்முதலைப் பெறுவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். 'உக்ரேன் போரின் தொடக்கத்தில் சான்னசிலர் ஷோல்ஸால் பிரகடனப்படுத்தப்பட்ட 'காலத்தின் திருப்பத்தை பூர்த்திசெய்ய' 'முழு வேகத்தில்' செயற்படுகின்றோம் என்று அவர் மேலும் கூறினார். ஆரம்பிக்கப்பட்டுள்ள 'கொள்முதல்கள்' 'ஆயுதப்படைகளின் முழு பகுதியையும்' பற்றியது என்றார்.
F-35 களுக்கு கூடுதலாக, வரவு-செலவுத் திட்ட குழு இந்த ஆண்டு அதன் கடைசி கூட்டத்தில் பின்வரும் ஆயுத அமைப்புகளை வாங்குவதற்கான நிதியை வெளியிட்டது: கிட்டத்தட்ட 3 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள இராணுவத்திற்கான நவீன வானொலிகள், 552 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள 140 அதிக பனி வாகனங்கள் மற்றும் சுமார் 273 மில்லியன் யூரோக்களுக்கு 118,718 புதிய HK416 தாக்குதல் துப்பாக்கிகள். மேலும், பூமா காலாட்படை கவசவாகனம் 1 பில்லியன் யூரோ செலவில் மேம்படுத்தப்பட உள்ளது.
ஜூன் மாதம் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட ஆயுதப்படைக்கான 100 பில்லியன் யூரோக்கள் சிறப்பு நிதியிலிருந்து வாங்குதல்களுக்கு நிதியளிக்கப்படும். ஹிட்லருக்குப் பின்னர் ஜேர்மனியின் மிகப்பெரிய மறுஆயுதமயமாக்கல் மற்றும் போர் தாக்குதலின் ஆரம்பம் இதுவாகும். 'என்னைப் பொறுத்தவரை, இது சிறப்பு நிதி எங்கள் திட்டங்களை செயல்படுத்துவதற்கான தொடக்க புள்ளியாக இருந்தது' என்று ஷோர்ன் விளக்கினார். 'அதாவது அடுத்த சில ஆண்டுகளில் நாங்கள் இன்னும் அதிக எண்ணிக்கையிலான 25 மில்லியன் யூரோ மசோதாக்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்போம்'.
குறிப்பாக, படைகளின் தளபதி பின்வருவனவற்றை 'தேவையான உத்தரவுகள்' என்று பெயரிட்டார்: அடுத்த ஆண்டு நேட்டோவின் முன்னணி மிக உயர்ந்த தயார்நிலை கூட்டு பணிக் குழுவின் (VJTF) கட்டளையை ஜேர்மனி ஏற்றுக்கொள்வது; 2025 க்குள் நேட்டோவுக்கான போர்-தயாரான ஆயுதப்படை பிரிவை நிலைநிறுத்துதல்; 2025 ஆம் ஆண்டளவில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஒரு போர்ப் படையை நிலைநிறுத்துதல்; மற்றும் ஜேர்மன் கடற்படையின் 'ஆண்டுதோறும் 20 படகுகள் மற்றும் கப்பல்களை' தயார் நிலையில் வைத்தல். இவை அனைத்திற்கும், 'ஒரு நம்பகமான உயரும் நிதிவரவு' தேவை என்று அவர் கூறினார்.
'வரலாற்று ரீதியான' மறுஆயுதமயமாக்கலுக்கு தொழிலாள வர்க்கத்தின் மீது வரலாற்றுத் தாக்குதல்கள் தேவைப்படுகின்றன. ஆயுதப்படைகளுக்குள் பில்லியன்கள் குவிந்துள்ள நிலையில், சுகாதாரம், கல்வி மற்றும் சமூக நலன் ஆகிய துறைகளில் பாரிய வெட்டுக்கள் செய்யப்படுகின்றன. பணவீக்கத்திற்கு ஏற்ப, 2023 வரவு-செலவுத் திட்டத்தில் இரண்டாம் உலகப் போரின் முடிவிற்கு பின்னர் மிகப்பெரிய வெட்டுக்கள் உள்ளன. சுகாதாரத்துறை வரவு-செலவுத் திட்டத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட 40 பில்லியன் யூரோக்கள் (!) 64.36 பில்லியனில் இருந்து 24.48 பில்லியன் யூரோக்களாக குறைக்கப்படும். ஒரு தொற்றுநோய்க்கு மத்தியில் ஏற்கனவே உலகளவில் பல மில்லியன் உயிர்களை இழந்துள்ள நிலைமையில் இது நிகழ்கிறது.
எந்தவொரு கையகப்படுத்துதலும் F-35 அணு குண்டுவீச்சுகளை விட ஆளும் வர்க்கத்தின் முன்னுரிமைகளை சுருக்கமாகக் கூற முடியாது: மரணமும் அழிவும் அவர்களுக்கு வாழ்க்கை மற்றும் சமூக முன்னேற்றத்தை விட அதிக முன்னுரிமைகள். 100 பில்லியன் யூரோக்கள் சிறப்பு நிதியானது சுகாதார வரவு-செலவுத் திட்டத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும் மற்றும் கல்விக்கான வரவு-செலவுத் திட்டத்தை விட கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகமாகும் (21.46 பில்லியன் யூரோக்கள்). இப்போது போர் விமானங்களுக்காக வீணடிக்கப்படும் 10 பில்லியன் யூரோக்கள், ஐந்தாண்டுகளுக்கு 34,000 க்கும் மேற்பட்ட கூடுதல் ஆசிரியர்களை வேலைக்கு அமர்த்த பயன்படுத்தப்படலாம், அல்லது அதே காலகட்டத்தில் நிதியளிப்பு குறைந்த சுகாதாரப் பாதுகாப்பு துறையில் கிட்டத்தட்ட 52,000 செவிலியர்களை வேலைக்கு அமர்த்தலாம்.
ஒவ்வொரு வகையிலும் அழிவுகரமான இந்த இராணுவ பைத்தியக்காரத்தனத்தை முன்தள்ள நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றன. சமூக ஜனநாயகக் கட்சி (SPD), தாராளவாத ஜனநாயக் கட்சி (FDP) மற்றும் பசுமைக் கட்சியினரின் 'போக்குவரத்து விளக்குக் கூட்டணியை தாண்டியும் பரந்த பெரும்பான்மையுடன் இன்று இதை சாத்தியப்படுத்தியதற்காக வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றவுள்ளவர்களுக்கு' லாம்பிரெக்ட் வெளிப்படையாக நன்றி தெரிவித்தார். 'நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆயுதப்படைகளுக்கு பின்னால் நிற்கிறது என்பதை காட்டுவது, காலத்தின் இந்த திருப்பத்திற்குப் பின்னால் இருக்கிறது என்பதற்கான மிக முக்கியமான அடையாளம்' என்று அவர் கூறினார்.
ஜேர்மனிக்கான தீவிர வலதுசாரி மாற்று (AfD) மற்றும் கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் (CDU/CSU) ஆகியவற்றால் ஆயுதப்படைகளுக்கான பாரிய மறுஆயுதமயமாக்கல் கடுமையாக ஆதரிக்கப்படுகிறது. மத்திய அரசாங்கத்திற்குள், பசுமைக் கட்சியினர் குறிப்பாக ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றனர். 'உலகின் அதிநவீன ஜெட் விமானத்தை நமது விமானப் படையின் விமானிகளின் திறமையான கைகளில் வைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்' என்று முன்னாள் அமைதிவாதிகளுக்காக நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவில் அமர்ந்திருக்கும் பிலிப் கிரேமர் கூறினார். அவரது சக அங்கத்தவர் செபஸ்டியான் ஷேபர், 'ஒரு செயல்படக்கூடிய மற்றும் விரைவான நடிவடிக்கைக்கான தயார்நிலையை உறுதிப்படுத்துவது' இப்போது பணியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இடது கட்சி F-35 வாங்குவதையும் மற்றும் ஆயுதப்படைகளுக்கான சிறப்பு நிதியை வார்த்தைகளில் விமர்சித்தாலும், அது போர் மற்றும் மறுஆயுதமயமாக்கலில் நெருக்கமாக ஈடுபட்டுள்ளது. துரிங்கியா மாநிலப் பிரதம மந்திரி போடோ ரமேலோ மற்றும் பேர்லின் மேயர் வேட்பாளர் கிளவுஸ் லெடரெர் போன்ற அதன் முன்னணி பிரதிநிதிகள், உக்ரேனுக்கு ஆயுத விநியோகத்தை வெளிப்படையாக ஆதரிப்பதோடு, இராணுவத்திற்கு கட்டாய ஆட்சேர்ப்பை மீண்டும் அறிமுகப்படுத்தவும் அழைப்பு விடுக்கின்றனர்.
முன்னாள் கட்சியின் தலைவி கெசின லோட்ஸ் போன்ற மற்றவர்கள், வரவு-செலவுத் திட்டக் குழு மற்றும் இரகசியமாக கூட்டப்பட்ட 'ஆயுதப்படைகளுக்கான சிறப்பு நிதி' குழு ஆகிய இரண்டிலும் அமர்ந்துள்ளனர். ஜேர்மன் ஏகாதிபத்தியத்திற்கான ஒரு நடைமுறை பரப்புரையாளர் என்ற வகையில், இடதுசாரிக் கட்சிப் பத்திரிகையான Junge Welt உடன் பேசிய லோட்ஸ், சமீபத்தில் தனது செயல்பாடுகள் பற்றிய உட்பார்வையைக் கொடுத்தார். 'கோடையில், வரவு-செலவுத் திட்டக் குழுவின் பிரதிநிதிகளுடன் நான் அமெரிக்காவில் இருந்தேன். அங்கு, நாங்கள் அரசியல்வாதிகள் மற்றும் ஆயுத உற்பத்தியாளர்களுடன் பேசினோம்,” என்று அவர் கூறினார். பின்னர், '100 பில்லியன் யூரோக்களை தங்களுக்குள் எப்படிப் பிரித்துக் கொள்வது என்பது பற்றி அவர்கள் ஏற்கனவே ஒரு துல்லியமான திட்டத்தை வைத்திருந்தார்கள்' என்று விஷமத்தனமாக கூறினார்.
பாராளுமன்றத்தில் போட்டியிடும் கட்சிகளின் கூட்டத்தையும் ஜேர்மன் இராணுவவாதத்தின் மீட்சியையும் எதிர்க்கும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei - SGP) ஆகும். பெப்ரவரியில் பேர்லின் மாநிலத் தேர்தலுக்கான எங்கள் அறிக்கையில், சோசலிச சமத்துவக் கட்சி இந்த வாக்கெடுப்பை 'இந்த வெறுக்கப்படும் மற்றும் சட்டவிரோதமான கொள்கைக்கு எதிரான பொதுஜன வாக்கெடுப்பாக' மாற்றுகிறது என எழுதுகிறோம்:
உத்தியோகபூர்வ அரசியலில் நீண்டகாலமாக வெளிப்படுத்தப்படாத பாரிய எதிர்ப்பிற்கு நாங்கள் ஆதரவும் மற்றும் ஒரு சோசலிச முன்னோக்கும் கொடுக்கிறோம். வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் அதிகாரத்தை உடைத்து அவற்றை ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்காமல் போரை நிறுத்தவோ அல்லது சமூக அழிவு முடிவுக்கு கொண்டுவரவோ முடியாது.
F-35 களை வாங்குவது முதலாளித்துவத்திற்கும் போருக்கு எதிராக ஒரு சுயாதீனமான சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தை கட்டமைப்பதற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் போராட்டத்தின் அவசியத்தை காட்டுகின்றது. பிரச்சாரத்தில் எங்களின் மைய முழக்கங்களும் கோரிக்கைகளும் பின்வருமாறு:
• இரண்டு உலகப் போர்கள் போதும்! போர் வெறியர்களை நிறுத்து!
• உக்ரேனில் நேட்டோ போரை நிறுத்து! பொருளாதாரத் தடைகளும் ஆயுத விநியோகமும் வேண்டாம்!
• போருக்கும் ஆயுதங்களுக்கும் பதிலாக மழலையர் பள்ளிகள், பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளுக்கும் 100 பில்லியன் யூரோக்கள் வழங்கவேண்டும்!
மேலும் படிக்க
- ஜேர்மன் பாராளுமன்றம் உக்ரேனில் 1930 களின் பஞ்சத்தை ஒரு இனப்படுகொலை என்று அறிவிக்கிறது: போர் பிரச்சாரத்திற்கு சேவை செய்வதற்காக வரலாற்றை பொய்மைப்படுத்தல்
- அமெரிக்காவின் மிக அதிகபட்ச இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கு "சீனா உடனான எதிர்கால மோதலுக்கு" தயாரிப்பு செய்கிறது
- சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும், போருக்கு எதிரான போராட்டமும்