முன்னோக்கு

போர்-ஆதரவு வெறியை தூண்டிவிட பைடென் செலென்ஸ்கியைப் பயன்படுத்துகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனை உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி சந்திக்கவும் மற்றும் காங்கிரஸ் சபை கூட்டு அமர்வில் அவர் உரையாற்றவும் புதன்கிழமை ஓர் அமெரிக்க இராணுவ விமானம் அவரை வாஷிங்டனுக்கு அழைத்து வந்தது, அங்கே காங்கிரஸ் சபையின் கூட்டு அமர்வில் அவர் ரஷ்யாவுக்கு எதிரான 'முழுமையான வெற்றிக்கு' அழைப்பு விடுத்தார்.

அனைத்து முக்கிய கேபிள் வலையமைப்பிலும் பிரதான நேரத்தில் ஒளிபரப்பட்ட அந்த உரை, ஒரு மிகப் பெரிய போர் பிரச்சார நடவடிக்கையாக இருந்தது. உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரை வெள்ளை மாளிகை விரிவாக்குவதை ஏற்கச் செய்ய, அமெரிக்க பொது மக்கள் கருத்தில் செல்வாக்கு செலுத்தும் ஒரு முயற்சியின் பாகமாக பைடென் செலென்ஸ்கியை வாஷிங்டனுக்கு அழைத்திருந்தார்.

செலென்ஸ்கி ஒரு பினாமி போருக்கு ஒரு பினாமி உரையை வழங்கினார். சந்தேகத்திற்கு இடமின்றி வாஷிங்டனில் ஒரு உரையாசிரியரால் அவருக்காக எழுதப்பட்ட ஒரு பத்தியில், 1777 இல் அமெரிக்க சுதந்திரப் போரில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய சரடோகா போரைக் நினைவுபடுத்தி, அமெரிக்க பொதுமக்களின் இதயங்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. முன்னாள் உக்ரேனிய கோமாளி நடிகர் பைடென் நிர்வாகத்தின் உரையாசிரியர் அவருக்காக எழுதிய உரையைப் படிக்கும் முன் கட்டாயமாக இது பற்றி கேள்விப்பட்டிருக்கமுடியாது.

இத்தகைய முறையீடுகள் பனிப்போரின் போது கூட வாஷிங்டனில் கேட்கப்படாத வகையிலான ரஷ்ய மக்களுக்கு எதிரான இனவெறி வெறுப்பு பேச்சுகளுடன் சேர்ந்தது. அன்று காலை பைடென் உடனான ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் செலென்ஸ்கி கூறுகையில், ரஷ்ய மக்களை 'மனிதாபிமானமற்றவர்கள்' என்று குறிப்பிட்டார். காங்கிரஸ் சபையில் உரையாற்றுகையில், அவர்கள் 'கிரெம்ளினால் விஷமேற்றப்பட்டு' இருப்பதாக அறிவித்ததுடன், ரஷ்யாவை ஒரு 'பயங்கரவாத அரசு' என பிரகடனம் செய்தார்.

இரு கட்சிகளின் பரந்த பெரும்பான்மை உறுப்பினர்கள் இந்த மொழியை உற்சாகமான ஆரவாரத்துடன் வரவேற்றதுடன், பலமுறை அவர்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்தார்கள்.

அந்த முழு உரையும் 1941 இல் பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் காங்கிரஸிற்கு வழங்கிய உரையை நினைவூட்டும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்தது, ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அடால்ஃப் ஹிட்லராகவும், செலென்ஸ்கி சேர்ச்சிலின் பாத்திரம் வகிப்பதைப் போலவும் சித்தரிக்கப்பட்டது.

அமெரிக்க ஊடகங்களும் இந்த அபத்தமான காட்சிப்படுத்தலுடன் சேர்ந்து கொண்டன. அந்த உரைக்கு முன்னரும் பின்னரும் இருந்த விரிவான வர்ணனையில், ஊடகப் பண்டிதர்கள் யாருமே, அணுஆயுதமேந்திய ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவின் முழு அளவிலான போர் மூலமாக மட்டுமே ரஷ்யா மீது 'முழுமையான வெற்றி' சாத்தியம் என்ற உண்மையைக் குறிப்பிடவில்லை.

ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரை, இரண்டாம் உலகப் போரின் புதுப்பிப்பாக, ஒரு புதிய 'நற்போராக' சந்தைப்படுத்துவதே இந்தக் காட்சிப்படுத்தலின் நோக்கமாக இருந்தது.

ஆனால் அந்த ஆஸ்தான 'ஜனநாயக' வழிகாட்டி ரஷ்ய மக்களை ஏன் 'மனிதாபிமற்றவர்கள்' என்றார் என்று யாரும் கேட்கவில்லை — சோவியத் ஒன்றிய மக்களுக்கு எதிராக ஒரு நிர்மூலமாக்கல் போரை நியாயப்படுத்த இதே மொழி தான் ஹிட்லரால் பயன்படுத்தப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் போது நாஜி ஜேர்மனியுடன் அணி சேர்ந்து யூத இனப்படுகொலை மற்றும் யூத-விரோத படுகொலைகளில் பங்கெடுத்த உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பு (OUN) மற்றும் உக்ரேன் கிளர்ச்சி இராணுவம் (UPA) ஆகியவை பயன்படுத்திய கோஷமான, “ஸ்லாவா உக்ரேனி' அல்லது 'உக்ரேனுக்கு மகிமை' என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் ஏன் கூச்சலிட்டார்கள் என்றும் யாரும் கேட்கவில்லை.

சேர்ச்சிலை நினைவூட்டும் விஷயங்கள் அனைத்தையும் பொறுத்த வரையில், உக்ரேனிய அரசாங்கத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள இந்தளவுக்கு பிரிட்டிஷ் பிரதம மந்திரிக்குக் கூட ஒருபோதும் நிபந்தனையற்ற ஆதரவை ஒருபோதும் பெறவில்லை.

அன்றைய நாள் ஆரம்பத்தில் செலென்ஸ்கி உடனான பத்திரிகையாளர் கூட்டத்தில் பைடென் பேசிய போது, “எவ்வளவு காலம் எடுக்குமோ அதுவரை' உக்ரேனை அமெரிக்கா ஆதரிக்கும் என்று உறுதியளித்தார். இந்த மோதலுக்காக இன்று வரையில் அனுப்பப்படாத அதிநவீன ஆயுதங்களான ஒரு பேட்ரியாட் ஏவுகணை அமைப்பை பைடென் நிர்வாகம் உக்ரேனுக்கு அனுப்ப உள்ளது என்ற அறிவிப்பும் செலென்ஸ்கியின் பயணத்தில் இணைந்திருந்தது.

செலென்ஸ்கியின் உரை, உக்ரேனுக்கு மிகப் பெரியளவில் பாய்ச்சப்படும் 45 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை நியாயப்படுத்துவதன் பாகமாகவும் இருந்தது, இது தற்போது அமெரிக்க பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையின் இறுதி ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

'கட்சிகளின் இடுக்கிப்பிடி' என்று இழுக்கப்படும் அனைத்து விஷயங்களைப் பொறுத்த வரையில், போருக்கு ஏறக்குறைய வரம்பின்றி பணத்தை ஒப்படைப்பது என்று வரும் போது, ஒட்டுமொத்த காங்கிரஸ் சபையும் செயலூக்கத்துடன் கவனம் எடுப்பதுடன், ஜனநாயகக் கட்சி முன்னணியில் நிற்கிறது.

அமெரிக்கா இன்னும் ஆழமாக இன்னும் தவிர்க்க முடியாதளவில் போருக்குள் நுழைந்து வருகிறது. உக்ரேனுக்குப் பேட்ரியாட் ஏவுகணைகளை வழங்குவதன் மூலம், வாஷிங்டன் ஆழ்ந்து ரஷ்ய எல்லைக்குள் விமானத் தாக்குதல் நடத்தும் திறனை உக்ரேனுக்கு வழங்குகிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கத் துருப்புகளைத் திரும்ப பெறுகையில், பைடென், கடந்தாண்டு தான், “நித்தியப் போரை' முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்தார். ஆனால் இந்த நிர்வாகம் இப்போது ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஒட்டுமொத்த உலக மக்களையும், சாத்தியமான பேரழிவுகரமான விளைவுகளுடன், ஒரு புதிய 'நித்தியப் போரில்' மூழ்கடித்து வருகிறது.

வாஷிங்டனில் இந்த நாளின் நீண்ட சரமாரியான பிரச்சாரத்திற்கு மத்தியில், அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் போரைக் கட்டுபாடின்றி விரிவாக்கி, முழு அளவிலான அணுஆயுதப் பரிமாற்றத்திற்கு இட்டுச் செல்லக்கூடும் என்று அவருடைய ஐரோப்பிய கூட்டாளிகள் கவலை கொண்டிருப்பதைப் பைடென் ஒப்புக் கொண்டார்.

செலென்ஸ்கி கோரிய அனைத்து ஆயுதங்களையும் ஏன் அமெரிக்கா வழங்கவில்லை என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, பைடென் பதிலளிக்கையில், 'உக்ரேனுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டு வரும் தளவாடங்களை விட அடிப்படையில் வேறுபட்ட பொருட்களை நாம் கொடுக்க வேண்டும் என்ற கருத்து, நேட்டோவை உடைக்கும் சாத்தியக்கூறைக் கொண்டிருக்கும்,' என்றார்.

அமெரிக்காவின் நேட்டோ கூட்டாளிகளைக் குறித்து பைடென் கூறுகையில், “அவர்கள் ரஷ்யாவுடன் போருக்குச் செல்வதாகத் தெரியவில்லை. அவர்கள் ஒரு மூன்றாம் உலகப் போரை நாடவில்லை,” என்றார்.

உக்ரேனில் பாரியளவில் அமெரிக்க தலையீடு விரிவாக்கப்படுவது, போரின் விரைவான மற்றும் எதிர்பாராத அபிவிருத்திக்குக் கதவைத் திறந்து விடுகிறது. அமெரிக்க பேட்ரியாட் ஏவுகணைகள் ஒரு 'சட்டபூர்வமான இலக்கு' என்று கிரெம்ளின் அறிவித்துள்ள நிலையில், இந்த ஆயுதங்கள் ஒரு நேட்டோ நாட்டின் எல்லையில் தாக்கப்பட்டால் என்ன ஆகும்? அல்லது, உக்ரேனுக்குள் ஆயுதங்களைக் கொண்டு செல்லும் போது நடத்தப்படும் ஒரு தாக்குதலில், அந்த ஆயுதங்களை நிலைநிறுத்துவதைக் கண்காணிக்கும் அமெரிக்க படையினர் கொல்லப்பட்டால் என்ன ஆகும்?

சமீபத்திய அமெரிக்க ஆயுத ஏற்றுமதிக்கு விடையிறுக்கையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ரஷ்ய இராணுவ அளவில் 50 சதவீதத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்ததுடன், ரஷ்ய போர்க் கப்பல்களில் ஹைப்பர்சோனிக் அணுசக்தி ஏவுகணைகள் நிலைநிறுத்தும் என்று அறிவித்தார்.

'உக்ரேனில் போரை நிறுத்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் வெகுஜன இயக்கத்திற்காக!' என்ற இணையவழி பேரணியில், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு செய்த எச்சரிக்கைகளை, இந்த வேகமான போர் விரிவாக்கம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் அவரின் நிறைவுரையில், 'தொழிலாள வர்க்கம் இந்த நிகழ்ச்சிப்போக்கை தடுக்காவிட்டால், இதன் விளைவு கடந்த கால வன்முறைகளையே விஞ்சும் அளவுக்கு ஓர் உலகளாவிய பேரழிவுகரமான பிரளயமாக இருக்கும். இந்த போர் வெடித்ததில் இருந்து, அணுஆயுதங்களைப் பயன்படுத்தும் சாத்தியக்கூறு அரசியல் உரையாடல்களில் சகஜமான விஷயமாகி விட்டது,” என்று குறிப்பிட்டார்.

ரஷ்யாவுக்கு எதிராக தீவிரமடைந்து வரும் இந்த அமெரிக்க-நேட்டோ போர், நோர்த் கூறினார், 'உண்மையில், உற்பத்திக் கருவிகள் மீதான முதலாளித்துவ தனிச்சொத்துடைமை மற்றும் எதிர்விரோத தேசிய அரசுகளுக்குள் உலகைப் பங்கிடுவது ஆகியவை முற்போக்கான அபிவிருத்தியுடன், மனிதகுலத்தின் உயிர்பிழைப்புடன் கூட, அபாயகரமாக பொருத்தமின்றி இருப்பதன் ஒரேயொரு வெளிப்பாடு மட்டுமே ஆகும்.”

இந்தக் கூட்டம் நடந்து வெறும் பத்து நாட்களுக்குப் பின்னர், இந்த எச்சரிக்கைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தப் போர் வேகமாக விரிவாக்கப்படுவது, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசரத் தேவையை தெளிவாக்குகிறது.