மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
உக்ரேன் மோதல் வேகமான விரிவாக்கப்படுவது, ரஷ்யாவுக்கு எதிரான போரில் நேட்டோ ஒரு பங்குதாரர் இல்லை என்ற கூற்றை சிதைத்துள்ளது.
நேட்டோ தலையீட்டில் ஒரு மிகப் பெரிய புதிய விரிவாக்கம் இல்லாத வாரமே இல்லை:
- டிசம்பர் 10 இல், ஓர் அமெரிக்க அதிகாரி டைம்ஸ் ஆஃப் இலண்டனுக்குக்கூறுகையில், ரஷ்யாவுக்கு உள்ளே ஆழமாக உக்ரேன் தாக்குதல்கள் நடத்துவதை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக ஆமோதித்துள்ளதாகத் தெரிவித்தார், ''[ரஷ்யா அல்லது கிரிமியாவில் உள்ள] ரஷ்யர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்' என்று நாங்கள் கியேவுக்குக் கூறவில்லை,” என்றவர் அறிவித்தார்.
- உக்ரேனுக்கு இன்று வரையில் அனுப்பப்பட்டதிலேயே மிகவும் அதிநவீன ஆயுத அமைப்பான பேட்ரியாட் ஏவுகணைகளின் ஒரு தொகுப்பை அனுப்ப இருப்பதாக பைடென் நிர்வாகம் டிசம்பர் 21 இல் அறிவித்தது.
- இந்தப் போருக்காக மற்றொரு 50 பில்லியன் டாலரை ஒதுக்கும் ஒரு சட்டத்தில் டிசம்பர் 29 இல் பைடென் கையெழுத்திட்டு, இந்த மோதலில் அமெரிக்க ஈடுபாட்டின் அளவை ஒரு பேனாவைக் கொண்டு அவர் இரட்டிப்பாக்கினார்.
- உக்ரேனுக்கு டாங்கிகளும் மற்றும் கவச போர் வாகனங்களும் அனுப்ப இருப்பதாக ஜனவரி 4 மற்றும் 5 இல் பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் அமெரிக்கா அறிவித்தன.
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒரு நேரடி போருக்கு இட்டுச் செல்லும் என்று பைடெனும் பிற நேட்டோ தலைவர்களும் முன்னர் எவற்றைக் குறிப்பிட்டார்களோ இவை அதே நடவடிக்கைள் தான்.
மார்ச் மாதம் பைடென் கூறினார், 'நாங்கள் தாக்கும் தளவாடங்களை அனுப்பப் போகிறோம், அமெரிக்க விமானிகள் மற்றும் அமெரிக்கக் குழுவினருடன் விமானங்களும் டாங்கிகளும் இரயில்களும் செல்லப் போகின்றன என்ற கருத்து... மூன்றாம் உலகப் போர் என்று அழைக்கப்படுகிறது.'
'நாங்கள் நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒரு போரை விரும்பவில்லை' என்ற அவர் வாதத்திற்கு முட்டுக்கொடுக்க, பைடென் மே மாதம் நியூ யோர்க் டைம்ஸில்பொது-தலையங்கம் ஒன்றை எழுதினார், “உக்ரேன் அதன் எல்லைகளைத் தாண்டி தாக்குவதை நாங்கள் ஊக்குவிப்பதாகவோ அல்லது உதவுவதாகவோ இல்லை' என்றவர் குறிப்பிட்டார்—இந்த நிலைப்பாடு இப்போது அமெரிக்க அதிகாரிகள் பத்திரிகைகளுக்குக் கொடுக்கும் அறிக்கைகளோடு வெளிப்படையாக முரண்படுகிறது.
ஜூன் மாதம் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அறிவித்தார், 'நாங்கள் போருக்குள் இறங்கவில்லை... ஆகவே, — தாக்குதல் விமானம் அல்லது டாங்கிகள் உட்பட — சில குறிப்பிட்ட ஆயுதங்களை வழங்குவதில்லை என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது, மேலும் இந்த ஒப்பந்தத்தைக் குறித்து அதிபர் செலென்ஸ்கிக்கும் தெரியும்.'
ரஷ்ய இராணுவத்தை அழிக்கும் நோக்கில், உக்ரேனிய இராணுவம் அமெரிக்காவினால் ஒரு கூலிப்படையாக திறம்பட பணியமர்த்தப்பட்டுள்ளது என்பதை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயவாதிகள் உள்அலுவலக பிரசுரங்களில் ஒப்புக் கொள்கிறார்கள்.
'குளிர்காலத்தில், புவிசார் அரசியல் அடிப்படையில், இந்தப் போர் தரைப்படையைப் பயன்படுத்தாமல் மற்றும் அமெரிக்க உயிர்களை ஆபத்துக்குட்படுத்தாமலேயே ரஷ்யாவின் பாரம்பரிய பாதுகாப்பு திறனை அழிக்கவும் சிதைக்கவும் நல்ல வாய்ப்பை வழங்குகிறது,” என்று ஐரோப்பிய கொள்கை பகுப்பாய்வு மையத்தின் (CEPA) திமோதி ஆஷ் எழுதினார்.
'அமெரிக்கா அதன் பாதுகாப்புத்துறை வரவு-செலவு திட்ட செலவினங்களில் 5.6 சதவீதத்தை ரஷ்யாவின் பாரம்பரிய இராணுவத் திறனில் ஏறக்குறைய பாதியை அழிப்பதற்காக செலவிடுவது, முற்றிலும் நம்பமுடியாத முதலீடாகத் தோன்றுகிறது' என்று எழுதிய ஆஷ், 'உக்ரேனை அழிப்பதற்காக ரஷ்யா தொடர்ந்து இராணுவப் படைகளை அனுப்ப வேண்டுமென அமெரிக்க இராணுவம் காரணத்துடன் விரும்பக்கூடும்,” என்று குறிப்பிட்டார்.
அதிகரித்தளவில் ரஷ்ய அரசை ஸ்தூலமாக அழிப்பது நேட்டோ கொள்கையின் இலக்காக வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. அணுஆயுதப் போரை அறிவுறுத்தும் ஹெர்மன் கான் நிறுவிய சிந்தனைக் குழுவான ஹட்சன் இன்ஸ்டிட்யூட்டின் லூக் காஃபி குறிப்பிடுகையில், 'உக்ரேனில் நடக்கும் போர்... இன்று அறியப்படும் விதத்தில் (சோவியத் ஒன்றியத்தின் சட்டப்பூர்வ வழிதோன்றலான) ரஷ்ய கூட்டமைப்பின் கலைப்பைக் குறிப்பதாக இருக்கும்,” என்றார்.
அமெரிக்காவும் நேட்டோவும் இந்தப் போரைத் தூண்டி விட்டு, நீடிக்க செய்து, விரிவுபடுத்தி உள்ளன. ரஷ்ய அரசாங்கம், பிற்போக்குத்தனமான ஒரு மிகப்பெரும் தவறாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை உருவாக்கும் நம்பிக்கையில் உக்ரேனைத் தாக்கியது. ஆனால் அதற்கு மாறாக, பேரழிவுகரமான விளைவுகளோடு அது நேட்டோவின் பொறியில் விழுந்தது.
ஒவ்வொரு அதிகரிப்பின் போதும், அமெரிக்காவும் நேட்டோவும் எந்தவொரு மிகப்பெரிய விடையிறுப்பும் இல்லாமல் கடந்த முறையை விட இன்னும் கூடுதலாக அவற்றால் முன்நகர்த்த முடியுமென மல்லுக்கட்டுகின்றன. கடந்த மாதம் நியூ யோர்க் டைம்ஸ் இந்த நியாயத்தை விவரிக்கையில், “அணுஆயுத தீவிரப்பாடு இல்லாமல், ரஷ்யா ஏற்கனவே எதுவும் செய்ய முடியாமல் இருப்பதைப் போல உக்ரேனுக்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி விட முடியாது என்ற உணர்வு பரந்தளவில் கியேவ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில்' இருப்பதைச் சுட்டிக் காட்டியது.
ஆனால் அதிகரித்தளவில் உயிர்பிழைப்புக்கான அச்சுறுத்தலாக ரஷ்யா எதைக் கருதுகிறதோ அதற்கு ரஷ்யா விடையிறுக்காது என்று பந்தயம் கட்டுவது, மில்லியன் கணக்கான மக்களின் உயிரைப் பணயத்தில் வைப்பதாகும்.
அதன் அனைத்து பேரழிவுகரமான விளைவுகளுடன், ரஷ்யாவுடன் அமெரிக்காவைப் போரில் இறக்க பைடென் நிர்வாகத்திற்கு யார் அதிகாரம் வழங்கியது? காங்கிரஸ் சபை மற்றும் ஆளும் வர்க்கத்தின் இரண்டு கட்சிகள் ஏற்றுக் கொள்ளும் ஓர் அறிவிக்கப்படாத போர், ஓர் ஒப்புதல் வாக்கெடுப்பு பாசாங்குத்தனம் கூட இல்லாமல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
பைடென் அவருடைய மாஃபியா கண்ணாடியைக் கழற்றி வைத்து விட்டு, அவரது நடவடிக்கைகளின் விளைவுகள் என்ன என்பதை உலகிற்குக் கூற வேண்டும். 'சம்பிரதாயமான' ஒரு போர் விரிவாக்கமே கூட ஐரோப்பா எங்கிலும் ஆயிரக் கணக்கான, அல்லது மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்படுவதை அச்சுறுத்துகிறது. ஓர் அணுஆயுத நிர்மூலமாக்கல் என்பது உலகின் மிகப்பெரிய நகரங்கள் நிர்மூலமாக்கப்படுவதையும் மனிதகுல நாகரீகத்தின் அழிவையும் அச்சுறுத்துகிறது.
உலக சோசலிச வலைத் தளம் அதன் புத்தாண்டு அறிக்கையில் எழுதியது, “போர் அதன் இரண்டாம் ஆண்டில் நுழைகின்ற நிலையில், யதார்த்தமற்ற இலக்குகள் மற்றும் பேரழிவூட்டும் தவறான கணக்கீடுகளின் அடிப்படையில் தீர்க்கரமாக முன்னேறி செல்ல வேண்டியதன் அவசியத்தால் தூண்டப்பட்டு, இராணுவ விரிவாக்கத்தின் தர்க்கம் தவிர்க்கமுடியாமல் தொடர்கிறது…
பைடன் நிர்வாகம் ஓர் அதிரடியான ரஷ்ய விடையிறுப்பைத் தூண்ட தலைப்படுகிறதா அல்லது நேட்டோவுடன் போர் விரிவாக்கப்படுவதைப் புட்டின் ஆட்சி தவிர்க்கும் என்று அது நம்புகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் திட்டமிட்ட ஆத்திரமூட்டலாக இருந்தாலும் சரி அல்லது ரஷ்யக் கொள்கையைப் பற்றிய ஒரு தவறான மதிப்பீடாக இருந்தாலும் சரி, வெள்ளை மாளிகை ஓர் உலகளாவிய பேரழிவுக்கு இட்டுச் செல்லும் அபாயகரமான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
இராணுவ விரிவாக்கத்தின் தர்க்கம், போர் மீதான எதிர்பார்ப்பையும் புவியியல்ரீதியான பரப்பெல்லையையும் விரிவாக்கும். பெலாரஸூம், பின்னர் போலாந்தும் ஈடுபடுவதற்கு முன்னர் எவ்வளவு காலம் எடுத்துள்ளது? கிழக்கு ஐரோப்பா மொத்தமும், ஏகியன் மற்றும் பால்டிக் பகுதிகள், பின்னர் ஐரோப்பா மற்றும் உலகின் மற்ற பகுதிகள் முழுவதும் உள்ளிழுக்கப்படும். ஏற்கனவே உக்ரேனுக்குள் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க துருப்புகள் ரஷ்ய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டு, “தரைப்படை' கோரிக்கைகள் தூண்டப்பட எவ்வளவு காலம் ஆகிவிடும்?
ஒவ்வொரு முறை புதிதாக ஆயுதங்கள் அனுப்பப்படும் போதும், நேட்டோவின் கௌரவம் இன்னும் அதிக கூடுதலாக ஆபத்திற்கு உட்படுகிறது. நேட்டோவுக்குள் பாய்ச்சப்பட்டு வரும் ஆயுதங்களுக்குப் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மட்டும் தேவைப்படாது, மாறாக உக்ரேனில் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது உட்பட அதிகளவிலான மற்றும் விரிவான தளவாட பரிவர்த்தனை வலையமைப்பும் தேவைப்படும்.
ரஷ்யாவின் தரப்பில், ஒரு 'சிறப்பு இராணுவ நடவடிக்கையை' மேற்கொண்டு வருகிறோம் என்ற புட்டின் அரசாங்கத்தின் கட்டுக்கதை முழு அளவிலான போர் அணிதிரள்வின் யதார்த்தத்திற்கு வழிவகுக்கிறது. அனைத்திற்கும் மேலாக, நேட்டோவின் விரிவாக்கம் ரஷ்ய இராணுவம் மற்றும் தீவிர தேசியவாதக் கூறுபாடுகளிடம் இருந்து மிகப் பெரியளவிலான எதிர்தாக்குதலுக்கான அழுத்தங்களை மட்டுமே இன்னும் கூடுதலாக தீவிரப்படுத்தும், அல்லது நேட்டோ மீதான ஒரு நேரடி தாக்குதலுக்கான அழுத்தங்களை கூட கூடுதலாக தீவிரப்படுத்தும்.
ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், விரிவாக்கமே விரிவாக்கத்தைத் தூண்டி, அதில் சம்பந்தப்பட்டவர்களே தடுக்க நினைத்தாலும் தடுக்க முடியாதபடி, சங்கிலித் தொடர் போல கட்டுப்படுத்த முடியாத எதிர்வினைகளை தூண்டிவிடும்.
இந்தப் போரின் இடைவிடாத விரிவாக்கம், ஒவ்வொரு நாட்டிலும் அதிகரித்து வரும் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியால் உந்தப்பட்டு வருகிறது. அமெரிக்கா ஒரு சமூக வெடி உலையாக உள்ளது, கொடுமையான அமெரிக்க அரசியல் அமைப்புமுறை அடிவேரில் இருந்து அழுகிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்க ஆளும் உயரடுக்கும் செல்வச் செழிப்பான உயர்-நடுத்தர வர்க்கமும் போர் வெறி கொண்டுள்ளன. முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் வளங்களைச் சூறையாடுவதன் மூலம், அமெரிக்க சமூகத்தை வாட்டி வதைக்கும் கொடுமையான உள்நாட்டு நெருக்கடியை அவர்களால் தீர்க்க முடியுமென அவர்கள் வீண் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இந்த போருக்கு பரந்த மக்கள் ஆதரவு இல்லை என்பதே யதார்த்தமாகும். உக்ரேனிய ஜனாதிபதி வொலொடிமீர் செலென்ஸ்கி கடந்த மாதம் அமெரிக்க காங்கிரஸ் சபையில் ஆற்றிய உரைக்கு, அங்கே கூடியிருந்த காங்கிரஸ் சபை உறுப்பினர்களின் கூச்சல்கள் மற்றும் ஆரவாரங்கள் இருந்தாலும், பரந்த பொதுக் கருத்தில் எந்த தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை.
ஆனால் மக்களிடையே பரந்த எதிர்ப்பு, இதுவரை, எந்த ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் வெளிப்பாட்டையும் காணவில்லை. இது தான் மாற்றப்பட வேண்டும். ஏகாதிபத்தியம், இராணுவவாதம், வரலாற்று ரீதியாக காலாவதியான தேசிய-அரசு அமைப்பு முறை மற்றும் இந்த முதலாளித்துவ சமூக ஒழுங்குக்கு எதிரான போராட்டத்தில் ஐக்கியப்படுத்தப்பட்ட சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுந்தான் அதிகரித்து வரும் இந்தப் பேரழிவைத் தடுக்கக் கூடிய ஒரே சக்தியாகும்.