முன்னோக்கு

கலிபோர்னியாவெள்ளமும் காலநிலை நெருக்கடியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்  

கலிபோர்னியா மற்றும் அரிசோனா, நெவாடா மற்றும் ஒரேகானின் சில பகுதிகளில் உருவாகிய புயல்கள் மற்றும் வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை குறைந்தது 18 ஆக உயர்ந்தது. மிக சமீபத்தில் 43 வயது பெண்மணி ஒருவர் அவரது கார் எட்டு அடி நீரில் மூழ்கியதால் இறந்தார். கலிபோர்னியா ஆளுநரின் அவசர சேவை அலுவலகத்தால் அறிவிக்கப்பட்ட மேலும் இரண்டு இறப்புகள் புயலால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் வெள்ளம் தொடர்வதால், சேதத்தின் முழு அளவு இனி தான் தெரிய வரும் என்ற நிலையில் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வெள்ளம் சூழ்ந்த சாலைகள் துண்டிக்கப்பட்டு விடுமுறைக் காலத்திலும் அதற்குப் பின்னரும் பயணிப்பவர்களை அச்சுறுத்தியதால் மேலும் நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட வேண்டியிருந்தது. ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர், நூறாயிரக்கணக்கானோர் கடந்த இரண்டு வாரங்களாக இடையிடையேயான மின்சார விநியோகத்தை மட்டுமே பெற்றுள்ளனர். செவ்வாயன்று 20 மில்லியனாக இருந்து, தற்போது சுமார் 4.5 மில்லியன் மக்கள் இன்னும் வெள்ள கண்காணிப்பு மற்றும் வெள்ள எச்சரிக்கை சூழலில் உள்ளனர், இதுவரை நிகழ்ந்துள்ள சேதத்தின் அளவு 1 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

புயலானது டிசம்பர் 26 அன்று வளிமண்டல ஆறுகள்(atmospheric rivers- பெருங்கடல்களின் மேல் உருவாகும் செறிவூட்டப்பட்ட ஈரப்பதத்தின் பாரிய அடுக்குகள் அவற்றில் உள்ள தண்ணீரை நிலத்தில் பொழிவதற்கு முன் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணிக்க முடியும்) என்று அழைக்கப்படும் ஏழு அலைகளாக தொடங்கி மேற்கு கடற்கரையை மூழ்கடிக்கத் தொடங்கியது. சான்பிரான்சிஸ்கோவின் இரண்டாவது அதிக மழைப்பொழிவு நாள் மற்றும் ஓக்லாந்தின் முதல் அதிக மழைப்பொழிவு நாள் உட்பட, டிசம்பர் 31 அன்று மாநிலம் முழுவதும் ஏற்பட்ட வரலாறு காணாத மழைப்பொழிவுக்குப் பின்னர் வெள்ளப்பெருக்குகள் தொடங்கின. இதனால் அப்பகுதிகள் வெள்ளப்பெருக்குகளில் மூழ்கிவிட்டதால் முழு சுற்றுப்புறங்களும் ஏரிகளாக மாறிப் போயின.  

வில் ஒவ்வொரு புயலின் போதும் நிகழ்வது போல், வெளியேற்றப்பட வேண்டிய ஏழைகள், வயோதிபர்கள் மற்றும் வீடற்றவர்களுக்கு முக்கியமாக எந்த நிதியுதவியும் வழங்கப்படவில்லை. மில்லியன் கணக்கானவர்கள் எப்படியாவது தங்களால் இயன்ற வழிகளில் முயற்சித்து உயிர்பிழைத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர், அதாவது பெருக்கெடுக்கும் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க அவர்கள் மேல்மாடிகளிலும் கூரைகளிலும் ஏறி தங்களைத் தற்காத்துக் கொள்கின்றனர். 

கலிபோர்னியா வெள்ளமானது அமெரிக்காவில் பாரிய இறப்பையும் அழிவையும் ஏற்படுத்திய சமீபத்திய முக்கிய தீவிர வானிலை நிகழ்வுகளில் ஒன்றாகும். டிசம்பர் 21 முதல் 26 வரை அமெரிக்கா முழுவதும் வீசிய ஒரு குளிர்கால புயலானது அயோவா, மிச்சிகன், மின்னசோட்டா, நியூயோர்க் மற்றும் விஸ்கான்சின் உட்பட கனடாவின் ஒன்டாரியோவிலும் பனிப்புயல்களை உருவாக்கியது. புயல் மற்றும் அதனுடன் தொடர்புடைய குளிர் அலையால் நியூயோர்க்கின் பஃபேலோவில் 41 பேர் உட்பட குறைந்தது 98 பேர் இறந்துள்ளனர். நியூயோர்க் ஐந்து நாட்களில் 56 அங்குல பனிப்பொழிவை சந்தித்தது.

வெள்ளம் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலிபோர்னியாவை அழிவுக்குள்ளாக்கும் வளிமண்டல ஆறுகளின் தொடர் ஜனவரி 23 வரை தொடரும் என்று வானிலை முன்னறிவிப்புகள் கணித்துள்ளன. கலிபோர்னியா ஆளுனர் கவின் நியூசோம் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் இருவரும் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரநிலைகளை அறிவித்துள்ளனர் என்றாலும், புயலால் பாதிக்கப்படக்கூடிய (அல்லது மீண்டும் பாதிக்கப்படக்கூடிய) மக்களை வெளியேற்றவோ அல்லது வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்துவிட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாநிலம் முழுவதும் வெறும் 11 தங்குமிடங்கள் மற்றும் 20 தயார் நிலையில் இருக்கும் இடங்களை திறக்கும் அதே வேளையில், கலிஃபோர்னியர்களை 'அதிக-விழிப்புடன் இருக்கவே' நியூசோம் இதுவரை அழைப்பு விடுத்தார். புயல் சேத-கட்டுப்பாட்டு முயற்சிகளுக்கு உதவி வழங்க பைடென் மத்திய அவசரகால நிர்வாக அமைப்பிற்கு (FEMA) அங்கீகாரம் அளித்துள்ளார்.

புயலால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்வாழ்வு குறித்த நியூசோம் மற்றும் பைடெனின் அலட்சியம் பொதுவாக மனித வாழ்வின் மீதான அமெரிக்க ஆளும் உயரடுக்கின் பரந்த அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. அமெரிக்காவில் மட்டும் 1 மில்லியனுக்கும் அதிகமான இறப்புக்களை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தொற்றுநோயை அவர்கள் கையாண்டது போலவே, கணிக்கக்கூடிய மற்றும் முன்கணிக்கப்பட்ட வானிலை தொடர்பான பேரழிவுகளும் மனிதர்களை அழிக்க அனுமதிக்கப்படுகின்றன. மேலும் குடியிருப்பாளர்கள் அவர்களின் தலைவிதியை அவர்களே எதிர்கொள்ள கைவிடப்படுகிறார்கள்.

இத்தகைய நிகழ்வுகள், அமெரிக்காவில், குறிப்பாக கலிபோர்னியாவில் நிலவும் தொழிலாள வர்க்கத்திற்கும் பெருநிறுவன தன்னலக்குழுவிற்கும் இடையே உள்ள செல்வத்தின் பரந்த இடைவெளியையும் கூர்மையாக அம்பலப்படுத்துகின்றன. இந்த மாநிலத்தில் 186 பில்லியனர்கள் உள்ளனர். மேலும் 2022 ஆம் ஆண்டில் ஜேர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைத் தாண்டி ஜப்பான், சீனா மற்றும் ஒட்டுமொத்த அமெரிக்காவை பின்தள்ளி உலகின் 4வது பெரிய பொருளாதாரமாக இது மாறியுள்ளது. அதே நேரத்தில், அரச   வரவு செலவுத் திட்டத்தில் வெள்ளத் தடுப்புக்காக 202 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கீட்டிற்கு மட்டுமே முன்மொழியப்பட்டுள்ளதுடன், தற்போதுள்ள உள்கட்டமைப்பானது பல தசாப்தங்களாக அழிந்துபோக அனுமதிக்கப்பட்டுள்ளது. 

காலநிலை மாற்றத்தைத் தணிக்க எந்த உண்மையான முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இது இத்தகைய பாரிய வெள்ளத்திற்கான முக்கிய உந்துகோலாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை செவ்வாயன்று வெளியிட்ட ஒரு அறிக்கை, 2022 ஆம் ஆண்டு வரலாறு காணாத வகையில் ஐந்தாவது அதிக வெப்பமான ஆண்டாக இருந்ததையும், மேலும் கடந்த எட்டு ஆண்டுகளில் உலக சராசரி வெப்பநிலை தொழில்துறைக்கு முந்தைய சராசரியை விட 1 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததையும் காட்டியுள்ளது.

வேறு விதமாகக் கூறினால், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ‘வரலாற்று’ 2015 பாரிஸ் உடன்படிக்கைக்குப் பிந்தைய அனைத்து ஆண்டுகளும் முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான இத்தகைய ஒப்பந்தங்களின் வெற்றுத் தன்மையைக் காட்டுகின்றன. கடந்த ஆண்டு COP27 உச்சிமாநாட்டின் போது இந்த வெற்று பிதற்றல் மீண்டும் முன்வைக்கப்பட்டது. காலநிலை நெருக்கடியின் ‘திரும்பப் பெற முடியாத புள்ளி’ என்று பெரும்பாலும் கருதப்பட்ட புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகக் கட்டுப்படுத்த உலகளாவிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான இந்த அழைப்பு கிட்டத்தட்ட கைவிடப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தின் ஆபத்துகள், போருக்கான புதைபடிவ எரிபொருட்களின் தேவை ஆகியவற்றில் பெரும் ஏகாதிபத்திய சக்திகளின் முழுமையான செயலற்ற தன்மையுடன் தொடர்புடைய மிகவும் மோசமான அம்சமும் உள்ளது. பிற நாட்டினரை அடிபணிய வைக்கவும், மக்களை படுகொலை செய்யவும் உலகெங்கிலும் டாங்கிகள், படகுகள், விமானங்கள் மற்றும் பிற வாகனங்களை பயன்படுத்துகின்ற நிலையில், அமெரிக்க இராணுவம் தான் உலகின் மிகப்பெரிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்திற்கான காரணமாக உள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிற்கு எதிரான போர்கள், அமெரிக்க பெருநிறுவனங்களுக்கு குறிப்பிட்ட எண்ணெய் அல்லது இயற்கை எரிவாயு இருப்புக்களை பாதுகாக்கும் உறுதியை அவை ஏற்படுத்தியுள்ளன.

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரினால் COP27 மாநாடு மூடிமறைக்கப்பட்டது. இது ஒரு பகுதியாக ஐரோப்பாவை, மற்றும் குறிப்பாக ஜேர்மனியை, அதன் இயற்கை எரிவாயு தேவைகளுக்கு அமெரிக்காவை நோக்கித் திரும்பும்படி கட்டாயப்படுத்தியது. போரின் விளைவாக, ஜேர்மனியும், அதன் நிலக்கரித் தொழிலுக்கு புத்துயிர் அளித்தது, மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதற்கான உறுதிமொழிகளை பெரிதும் கைவிட்டது. புதைபடிவ எரிபொருள் வெளியேற்றத்தை அதிகரிக்க கட்டாயப்படுத்துவது அமெரிக்க அரசாங்கத்தின் ஏகாதிபத்திய நலன்களுடன் பின்னிப் பிணைந்துள்ளது.  

வெள்ளை மாளிகையின் கூற்றுப்படி, துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், ‘காலநிலை நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கான பைடென்-ஹாரிஸ் நிர்வாகத்தின் முன்னைய மற்றும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி’ மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உரையாற்றவுள்ளார்.

இந்தக் கூற்று உண்மையாக இருந்தால், கிழக்கு ஐரோப்பாவில் ஒரு போரைத் தூண்டுவதற்கு வெள்ளை மாளிகை வாரி இறைக்கும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் புவி வெப்பமடைதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், நடந்து கொண்டிருக்கும் மற்றும் எதிர்வரவிருக்கும் காலநிலை பேரழிவுகளைத் தடுப்பதற்கும் திருப்பிவிடப்பட வேண்டும். உண்மையில், ஹாரிஸ், பைடென் மற்றும் அவர்களின் நண்பர்கள் மூன்றாம் உலகப் போரைத் தொடங்க ‘வரலாற்றுரீதியான மற்றும் தொடர்ச்சியான வேலையில்’ ஈடுபட்டுள்ளனர்.

இறுதியில், கலிபோர்னியா வெள்ளமானது முதலாளித்துவம் சமூக தேவைகளுடன் இணங்காதிருப்பதற்கான மற்றொரு அப்பட்டமான உதாரணமாகும்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள உலகளாவிய தீர்வு தேவைப்படுகிறது. ஆனால், தேசிய அரசுகள் மற்றும் நிதிய தன்னலக்குழுவின் சுயநல செழுமைப்படுத்தலுக்கான சமூகத்தின் அமைப்பை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்பின் கீழ் அத்தகைய தீர்வுக்கு சாத்தியமில்லை.

வெள்ளம், காட்டுத்தீ, பனிப்புயல், சூறாவளி மற்றும் காலநிலை மாற்றத்தால் மோசமாக்கப்படும் பிற தீவிர காலனிலை நிகழ்வுகளால் இழக்கப்பட்ட வாழ்க்கை காப்பாற்றப்பட வேண்டும் என்றால், சர்வதேச தொழிலாள வர்க்கம் காலாவதியான முதலாளித்துவ சமூக ஒழுங்கை முற்றுமுழுதாக அகற்றி, உலக சமுதாயத்தை விஞ்ஞான, மனிதாபிமான, உலகளாவிய மற்றும் சோசலிச அடிப்படையில் மறுசீரமைக்க வேண்டும்.