சீன பலூன் மற்றும் ரஷ்யாவுக்கு ஆயுதம் வழங்கும் விவகாரத்தில் சீனாவை அமெரிக்கா அச்சுறுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

18ம் திகதி சனிக்கிழமை அன்று நடந்த மூனிச் பாதுகாப்பு மாநாட்டில்,  ஒரு நேருக்கு நேர் சந்திப்பில், அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கன், சீனத் தூதரகத்தின் உயர்மட்ட தூதர் வாங் யி உடனான பதட்டமான மோதலில் சீனாவிற்கு எதிரான அச்சுறுத்தல்களை பெரிதும் அதிகரித்தார். 

பெப்ரவரி 19, 2022 அன்று, ஜேர்மனியின் மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்திற்குப் பின்னர் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கன். [AP Photo/Ina Fassbender]

கடந்த மாத இறுதியில் அமெரிக்க வான் பகுதியில் ஊடுருவிய சீன பலூன் ‘அமெரிக்க இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு அத்துமீறல்’ என்றும் ‘இனி ஒருபோதும் இது நிகழக்கூடாது’ என்றும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளதாக பிளிங்கன் வாங் யி இடம் வெளிப்படையாக கூறினார். 

சீன பலூன் அமெரிக்க இராணுவ நிறுவல்களை உளவு பார்த்ததாகக் கூறும் போர்வெறிபிடித்த குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்கா இதுவரை ஒரு சிறிய ஆதாரத்தைக் கூட வழங்கவில்லை. இதற்கு, உண்மையில் பெப்ரவரி 4 ஆம் தேதி அமெரிக்க விமானப்படை பலூனை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தி அதன் சிதறிப்போன குப்பைகளை மீட்டு தொழில்நுட்ப வல்லுனர்களால் ஆய்வு செய்ததாக கூறப்படுவதே காரணமாகும். 

சீன பலூன் தொடர்பாக இரு நாடுகளின் இராணுவங்களுக்கு இடையிலான நேரடி பேச்சுவார்த்தையில் பெய்ஜிங் ஈடுபடாதது குறித்து பிளிங்கன் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். உண்மையில், அந்த நேரத்தில், சீனா தனது திசைதிருப்ப முடியாத பொது ஆராய்ச்சி பலூன் வழமைக்கு மாறான காற்றால் அடித்துச் செல்லப்பட்டதாக அறிவித்ததோடு, அமெரிக்க வான் பகுதியில் நுழைந்ததற்கு மன்னிப்பும் கேட்டது. 

அமெரிக்க ஊடகங்களும் அரசியல் ஸ்தாபகமும் பெய்ஜிங்குடனான உரையாடலில் எந்த அக்கறையும் காட்டவில்லை. மாறாக, அது சீனாவுடனான அதன் பொருளாதார மற்றும் இராணுவ மோதலை அதிகரிக்கக்கூடிய நிச்சயமற்ற மற்றும் அச்சம் நிறைந்த ஒரு அரசியல் சூழலை உருவாக்குவதற்கான வாய்ப்பாக ‘உளவு’ பலூன் விவகாரத்தைப் பற்றிக் கொண்டது. பைடென் நிர்வாகமோ, பெப்ரவரி 5-6 தேதிகளில் சீனா செல்வதற்கான பிளிங்கனின் திட்டமிட்ட பயணத்தை இரத்து செய்வதற்கான சாக்குப்போக்காக இந்த சம்பவத்தைப் பயன்படுத்தியது.

பிளிங்கன் உடனான சந்திப்பை வாங் உறுதிப்படுத்தியதோடு, இரு நாடுகளின் உறவுகளில் ஏற்பட்டுள்ள ‘சேதத்தை’ சரிசெய்ய அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்தார். அவர் ஊடகங்களிடம் இவ்வாறு கூறினார்: “ஒரு பலூனை ஏவுகணை மூலம் சூட்டு வீழ்த்துவதற்கு ஒரு மேம்பட்ட போர் விமானத்தை அமெரிக்கா அனுப்பியுள்ளது. அத்தகைய நடத்தை நம்பமுடியாததாக உள்ளது, கிட்டத்தட்ட வெறித்தனமானது.” 

“உலகம் முழுவதும் அத்தகைய பல பலூன்கள் உள்ளன. பல்வேறு நாடுகள் அவற்றை வைத்திருக்கின்றன. எனவே, அமெரிக்கா அவை அனைத்தையும் சுட்டு வீழ்த்தப் போகிறதா?” என்று வாங் கேள்வி எழுப்புகிறார். மேலும், அமெரிக்க பதிலிறுப்பானது “100 சதவீதம் பலாத்காரத்தை துஷ்பிரயோகம்’ செய்வதாக உள்ளது என்று அவர் முத்திரை குத்தினார்.  

சீன பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க விமானப்படை அடையாளம் தெரியாத வேறு மூன்று பறக்கும் பொருட்களையும் சுட்டு வீழ்த்தியுள்ளது. அவை சீனாவினது அல்ல என்பதையும், அவற்றால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதையும் பைடென் நிர்வாகம் ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அமெரிக்க உளவு அமைப்புக்கள், சீன ‘உளவு பலூன்’ முக்கிய அமெரிக்க இராணுவத் தளங்களில் வேண்டுமென்றே திருப்பிவிடப்பட்டதாக முன்னர் கூறியதை மறுபரிசீலனை செய்வதாகக் கூறியதோடு, உண்மையில் சீனா விளக்கமளித்தது போல் அது காற்றினால் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறியதாக கடந்த புதனன்று வாஷிங்டன் போஸ்ட் மற்றும் CNN செய்தி ஸ்தாபனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

வாங் உடனான தனது சந்திப்பின் போது, பிளிங்கன், அமெரிக்கா மற்றும் நேட்டோ உடன் உக்ரேனில் நடக்கும் அதன் போரில் ரஷ்யாவிற்கு ஆபத்தான இராணுவ உதவிகளை வழங்குவதற்கான விளிம்பில் சீனா இருப்பதாக அதனைக் குற்றம்சாட்டி ஏற்கனவே உள்ள உக்கிரமான மோதலை மேலும் தூண்டியுள்ளார். வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பிரைஸின் கூற்றுப்படி, பிளிங்கன் “சீனா ரஷ்யாவிற்கு தளபாட ஆதரவை வழங்கினால் அல்லது முறையான பொருளாதாரத் தடைகளை ஏமாற்றி உதவி செய்தால் அதன் தாக்கங்களும் விளைவுகளும் மோசமாக இருக்கும்” என்று வாங்கை எச்சரித்தார்.

மீண்டும் கூறுவதானால், பிளிங்கன் அல்லது பைடென் நிர்வாகத்தில் உள்ள வேறு எவரும் இந்த குற்றச்சாட்டுக்களை ஆதரிப்பதற்கு ஒரு சிறிய ஆதாரத்தை கூட வழங்கவில்லை. அதற்கு பதிலாக, அநாமதேய அமெரிக்க அதிகாரிகள் ஊடகங்களில் தெளிவற்ற மோசமான ஊகங்களை செய்திகளாக்கியுள்ளனர். அவை விமர்சனமின்றி இக்கூற்றுக்களை மறுசுழற்சி செய்கின்றன.

உதாரணமாக, CNN அறிக்கை, “ரஷ்ய இராணுவத்திற்கான சீனாவின் ஆதரவில் ‘குழப்பம்’ தரக்கூடிய போகுக்களை அமெரிக்கா சமீபத்தில் காணத் தொடங்கியுள்ளது. மேலும், பெய்ஜிங் ஆபத்தான இராணுவ உதவிகளை மறைமுகமாக ரஷ்யாவிற்கு வழங்குவதற்கான ‘எல்லைக்கு முன்னேற’ விரும்புகிறது என்பதற்கான அறிகுறிகள் தென்படுகிறது” என்று அமெரிக்கா தெரிவிப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அமெரிக்க குற்றச்சாட்டுகளுக்கு பெய்ஜிங் இன்னும் பதிலளிக்கவில்லை. முனிச் பாதுகாப்பு மாநாட்டிற்குப் பின்னர் வாங் மொஸ்கோவிற்கு விஜயம் செய்ய உள்ளார். ஏற்கனவே இத்தாலிக்கும் பிரான்சுக்கும் பயனம் சென்றுள்ளார். பெய்ஜிங் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை கண்டிக்கவில்லை என்றாலும், அதை பகிரங்கமாக ஆதரிக்கவில்லை. வாங் சனிக்கிழமை உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலோபாவை சந்தித்து, மோதலை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக் கொண்டுவருவதற்கு சீனா விரும்புவதாக அறிவித்தார். 

போர் தொடங்கி ஒரு வருடத்தைக் குறிப்பதான, பெப்ரவரி 24 அன்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் உரையில் ஒரு சமாதானத் திட்டத்திற்கான முன்மொழிவை சீனா வெளியிடவிருக்கும் நிலையில் பிளிங்கனின் அச்சுறுத்தல்கள் வந்துள்ளன. மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் தனது உரையில் திட்டத்தை தொடங்குவதற்கான சீனாவின் விருப்பத்தை வாங் அறிவித்தார். பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுடன் இந்த முன்மொழிவு தொடர்பாக அவர் ஏற்கனவே கலைந்துரையாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மாநாட்டில் தனது உரையில், வாங் ஐரோப்பிய சக்திகளுக்கு உணர்த்தும் வகையில் ஒரு குறிப்பிட்ட தொணியில் இவ்வாறு பேசினார்: “போரை நிறுத்த என்ன முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்; ஐரோப்பாவில் நிலையான அமைதியைக் கொண்டுவர என்ன கட்டமைப்பு அங்கு இருக்க வேண்டும்; மேலும் அதன் சுயாதீமான மூலோபாயத்தை  வெளிப்படுத்த ஐரோப்பா என்ன பங்கு வகிக்க வேண்டும் என்பது பற்றி நாம், குறிப்பாக நமது ஐரோப்பாவில் உள்ள நமது நண்பர்கள், நிதானமாக சிந்திக்க வேண்டும்.” 

அமெரிக்காவும் அதன் நெருங்கிய கூட்டாளிகளும் விரும்பும் கடைசி விஷயம் தான் சமாதான முன்மொழிவுகள் ஆகும். ஏனென்றால், எந்தவொரு பேச்சுவார்த்தையும் போரை மேலும் தீவிரப்படுத்தும் அவர்களின் திட்டங்களைக் குறைக்கிறது. உக்ரேனிய இராணுவத்திற்கு கனரக டாங்கிகளை அமெரிக்கா வழங்கியதோடு நில்லாமல், போர் விமானங்களை வழங்குவதற்கான விவாதங்களும் இப்போது நடந்து வருகின்றன.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பொறுத்த வரையில், உக்ரேனிய சுதந்திரத்தையோ அல்லது அதனிடம் இல்லாத ஜனநாயகத்தையோ பாதுகாப்பதில் போருக்கு எந்த தொடர்பும் இல்லை. மாறாக, ரஷ்யாவை பலவீனப்படுத்தவும், நிலைகுலையச் செய்யவும், இறுதியில் அந்த நாட்டையும் அதன் பரந்த இயற்கை வளங்களையும் உடைத்து தனக்கு கீழ்ப்படிய வைக்கவும் மோதலைச் சுரண்டுவதில் வாஷிங்டன் உறுதியாக உள்ளது.

உக்ரேனை ஆதரிக்கும் தீர்மானத்திற்கு ஐக்கிய நாடுகளின் பொது சபையில் சீனாவின் திட்டம் தனது ஆதரவைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று அமெரிக்கா கவலைப்படுகிறது. இந்த நடவடிக்கை பற்றி ஏற்கனவே பெப்ரவரி 24 போர் ஆண்டு நிறைவை ஒட்டி விவாதிக்கப்பட்டு வருகிறது. பெய்ஜிங்கிற்கு எதிரான பிளிங்கனின் ஆதாரமற்ற அவதூறுகளுக்குப் பின்னால் சர்வதேச அளவில் சீனாவின் பெயரை இருட்டடிப்பு செய்வதும், அதன் சமாதானத் திட்டத்திற்கான ஆதரவைக் குறைப்பதும் தான் அமெரிக்காவின் உடனடி நோக்கமாக உள்ளது. 

வாஷிங்டன் சீனா மீதான அதன் பொருளாதாரத் தடைகளையும் மற்றும் இதர தடைகளையும் தீவிரப்படுத்தி வருகிறது. சீனாவுடனான இராணுவ மோதலுக்கான தயாரிப்பில் இந்தோ-பசிபிக் முழுவதும் அதன் இராணுவ கட்டமைப்பை அதிகரித்து வருகிறது. இந்த அடிப்படையில், எவ்வாறாயினும், சமீபத்திய சீன எதிர்ப்பு குற்றச்சாட்டுக்களானது பெய்ஜிங்கிற்கு எதிரான அமெரிக்க போர் பிரச்சாரத்தின் மேலும் ஒரு அடியெடுப்பாகும்.

அமெரிக்காவை பொறுத்தவரை, அதன் உலகளாவிய பொருளாதார மேலாதிக்கத்திற்கு சீனாவை முக்கிய அச்சுறுத்தலாக அது கருதுவதுடன், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரை பெய்ஜிங்குடனான போருக்கான முன்னோடியாக அது பார்க்கிறது. 1979 இல் இருந்து அமெரிக்க-சீனா உறவுகள் அடிப்படையாகக் கொண்டுள்ள ஒரே சீனா கொள்கையை திட்டமிட்ட முறையில் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ள போதிலும், தைவான் மீதான அதன் கொள்கையை வாஷிங்டன் மாற்றவில்லை என்று பிளிங்கன் பாசாங்குத்தனமாக வாங்கிடம் கூறினார்.

உக்ரேனை ஆக்கிரமிப்பதற்கு ரஷ்யாவை வேண்டுமென்றே தூண்டியது போலவே, பைடென் நிர்வாகம் சீனாவைத் தூண்டி தைவானைத் தாக்க வைத்து, அதன் மூலம் சீன ஆட்சியை சீர்குலைக்கும் மோதலில் சீனாவை சிக்க வைக்க முயல்கிறது.

அமெரிக்க பாதுகாப்புக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக அபத்தமான முறையில் சீன ஆராய்ச்சி பலூன் விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கியுள்ளதானது, அமெரிக்க போர் தயாரிப்புகள் எவ்வளவு பொறுப்பற்றதாக உள்ளன என்பதற்கான ஒரு அளவீடாகும்.