மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஒரு சிறிய சீன தொடக்க நிறுவனமான டீப்சீக் (DeepSeek), அமெரிக்காவில் தயாரிக்கப்படும் மிகவும் மேம்பட்ட சிப்புகள் (advanced chips) இல்லாமலும் மிகக் குறைந்த விலையிலும் ஒரு மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு அமைப்புமுறையை உருவாக்க முடியும் என்று அறிவித்ததன் மூலம் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள், வோல் ஸ்ட்ரீட் மற்றும் அரசியல் மற்றும் இராணுவ அமைப்பிற்கு ஒரு பெரிய அடியாக விழுந்துள்ளது.
ஜனவரி 20 அன்று, டீப்சீக் (DeepSeek) நிறுவனம் பல்வேறுபட்ட சிக்கலான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஏற்ற R1 என்ற ஒரு மாதிரியை (model) அறிமுகப்படுத்தியிருந்தது, . இது குறைந்தளவிலான தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தி குறைந்த செலவில் மனிதனுடைய மேற்பார்வை இல்லாமல் தன்னைத் தானே கற்றுக்கொள்ளவும் மேம்படுத்துவும் கூடிய பெரிய மொழி மாதிரி (large language model - LLM)) என்று அழைக்கப்படும் ஒரு மாதிரியை உருவாக்கியிருப்பதாக அது விளக்கியுள்ளது, இது கட்டற்ற மென்பொருள் (open source) மாதிரியாகும் அதாவது உருவாக்கப்பட்ட செயல்முறையை யாரும் பின்பற்றலாம்.
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் கூற்றுப்படி: “டீப்சீக்கின் தொழில்நுட்பம் இன்னும் OpenAI மற்றும் Google ஐ விட பின்தங்கியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இது குறைவான மற்றும் குறைந்த மேம்பட்ட சிப்புகளைப் பயன்படுத்தி நெருக்கமான போட்டியாளராக ஆகிவிட்டது, மேலும் சில சந்தர்ப்பங்களில் அமெரிக்க மென்பொருள் உருவாக்குபவர்கள் (developers) அத்தியாவசியமாகக் கருதும் செயல்நடவடிக்கைகளையும் இது தவிர்த்துவிடுகிறது.
“டீப்சீக் R1 மாதிரி நான் பார்த்தவகையில் மிக அற்புதமான மற்றும் ஈர்க்கக்கூடிய முன்னேற்றங்களில் ஒன்றாக இருக்கிறது.” என்று ட்ரம்புக்கு ஆலோசனை வழங்கி வரும் சிலிக்கான் பள்ளத்தாக்கின் (Silicon Valley) ஆரம்பகட்ட நிறுவனங்களுக்கு முதலீடு செய்யும்முதலீட்டாளர் மார்க் ஆண்ட்ரீசன் வெள்ளிக்கிழமை X தளத்தில் பதிவிட்டுள்ளார் :
அவர் அதன் வளர்ச்சியை “செயற்கை நுன்னறிவின் (AI) ஸ்புட்னிக் தருணம்” என்று அழைத்தார், இது சோவியத் ஒன்றியம் 1957 இல் பூமியைச் சுற்றி வந்த முதல் செயற்கைக்கோளை ஏவியதுடன் ஒப்பிட்டுள்ளார், அப்போது அந்த நிகழ்வு அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது .
இந்த மாதிரி (model) வெளியிடப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, திங்களன்று (ஜனவரி 26, 2025) வோல் ஸ்ட்ரீட் வர்த்தகத்தில் ஒரு அதிர்ச்சி அலை தாக்கியது.
வோல் ஸ்ட்ரீட்டின் உயர் தொழில்நுட்ப வளர்ச்சியின் வர்த்தக மையத்தில் இருக்கும் நவீன செயற்கை நுண்ணறிவு சிப்புகளின் முன்னணி அமெரிக்க உற்பத்தியாளரான என்விடியாவின் (Nvidia) பங்குகள் ஏறத்தாழ 17 சதவீதம் சரிந்துவிட்டன. அந்நிறுவனம் சுமார் $600 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை இழந்தது, இந்த ஒரு நாள் வீழ்ச்சியானது அது கொண்டிருந்தமுந்தைய பாதிப்பைவிட இரு மடங்கிற்கும் அதிகமாகும், மேலும் வரலாற்றில் எந்தவொரு நிறுவனத்திற்கும் ஏற்பட்டதைவிட மிகப்பெரிய அடியாகும்.
மற்றொரு செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட பிராட்காம் (Broadcom) இன் பங்குகளும் 17 சதவீதம் சரிந்தன. S&P 500 ஆனது 1.5 சதவிகிதம் குறைந்து முடிவடைந்தது, உயர் தொழில்நுட்ப NASDAQ ஆனது 3 சதவிகிதம் சரிந்தது.
செயற்கை நுண்ணறிவில் (AI) நேரடியாக ஈடுபடாத, ஆனால் அதன் வளர்ச்சியுடன் தொடர்புடைய மற்ற நிறுவனங்களும் அதனால் பாதிக்கப்பட்டன. செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்புக்கு மின்னணு வன்பொருட்களை வழங்கும் சீமென்ஸ் எனர்ஜி (Siemens Energy) நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதமும், தரவு மையங்களில் (data centres) பயன்படுத்தப்படும் மின்னணு சார்ந்த பொருட்களை விநியோகிக்கும் ஷ்னீடர் எலக்ட்ரிக்கல் (Schneider Electrical) நிறுவனத்தின் பங்குகள் 9.5 சதவீதமும் சரிவைச் சந்தித்தன.
டீப்சீக் திருப்புமுனை, அது நீடித்தால், சிலர் அதை கேள்விக்குள்ளாக்கினால், முன்னணி அமெரிக்க செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனங்களின் முக்கிய முதலீட்டுத் திட்டங்களைத் தலைகீழாக மாற்றிவிடலாம் என அச்சுறுத்துகிறது. “தரவு மையக் கட்டுமான வெறி” என்று அழைக்கப்படுகிறதோ அது, குறைந்தபட்சம் இந்த தசாப்தத்தின் இறுதி வரை அது தொடரும் என்று எதிர்பார்ப்பதாக என்விடியா (Nvidia) பைனான்சியல் டைம்ஸ் (FT)க்கு கூறியுள்ளது.
பிசெட் சொத்து மேலாண்மை (Picet Asset Management) இன் தலைமை பகுப்பாய்வாளர் லூகா பவ்லினி பைனான்சியல் டைம்ஸ்ஸுக்கு கூறுகையில், “ஒருமித்த கருத்து கொண்ட மற்றும் அசைக்க முடியாத முன்னிலை என்ற அனுமானத்தின் அடிப்படையில் அமைந்த ஒவ்வொரு வர்த்தகத்தையும் போலவே, செயற்கை நுண்ணறிவு வர்த்தகம் இன்னும் எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதை டீப்சீக் இன் வெளிப்படுத்தல் எடுத்துக்காட்டியிருக்கிறது” என்றார்.
2022 ஆம் ஆண்டின் இறுதியில் ChatGPT வெளியான பிறகு பங்குச் சந்தையில் செயற்கை நுண்ணறிவு (AI) வர்த்தகம் ஏற்றம் தொடங்கியது. 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து NASDAQ குறியீடு 92 சதவீதம் அதிகரித்திருந்தது. இது சந்தை மூலதனமயமாக்கலில் $14 டிரில்லியன் அதிகரிப்பு ஆகும். இது தொழில்நுட்ப நிறுவன நிறுவனர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளின் இலாகாக்களில் நூறாயிரக்கணக்கானது இல்லையென்றாலும் பத்தாயிரக்கணக்கான பில்லியன்களை உயர்த்தியுள்ளது. திங்கட்கிழமை வர்த்தகத்தின் குறியீடு $1 டிரில்லியன் டாலர் சந்தை மூலதனத்தை இழந்துவிட்டது. டீப்சீக்கின் வருகை பெரும் கவலைகளை எழுப்பியுள்ளது.
புளூம்பேர்க் (Bloomberg) கட்டுரை ஒன்று குறிப்பிட்டதைப் போல: “திடீரென்று, அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஏற்றம் ஒரு கேள்வியாக மாறியுள்ளது: நூற்றுக்கணக்கான பில்லியன்கள் செயற்கை நுண்ணறிவு முதலீடுகள் பாரிய சந்தை மூலதனப் பங்குகள் மீது வைக்கப்பட்டுள்ள உயர்ந்த மதிப்பீடுகளை நியாயப்படுத்த போதுமானளவுக்கு பெரிய இலாபங்களுக்கு எப்போதாவது இட்டுச் செல்லுமா?
இந்த குழு பங்குகள் S&P 500 குறியீட்டில் உள்ள அனைத்து பங்குகளின் மொத்த மதிப்பில் 30 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இது வரலாற்றில் வேறு எந்த காலத்தையும் விட அதிகமாகும்
புளூம்பேர்க் மேற்கோளிட்ட பல ஆய்வாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்துக்கள், செயற்கை நுண்ணறிவில் (AI) இல் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் மாற்றத்தையும் அது ஊக்குவித்துள்ள சந்தை ஏற்றத்தையும் சுட்டிக்காட்டியிருக்கின்றன.
Franklin Templeton Investment Solutions இன் மூத்த துணைத் தலைவர் மேக்ஸ் கோக்மேன் கூறினார்: “இன்றைய நகர்வுகள் இந்த சந்தை அமைப்பு எவ்வளவு ஆபத்தானதாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. மதிப்பீடுகள் வானத்தை நோக்கி நீட்டிக்கப்படும்போது, சிறிய நடுக்கங்கள் முழு சந்தையையும் அதிர வைப்பது எளிதாகிவிடுகிறது.”
செல்வ மேலாண்மை (wealth management) நிறுவனமான யூனியன் பான்கைர் ப்ரிவீயின் நிர்வாக இயக்குனர் வே-செர்ன் லிங் கூறினார்: “குறைந்த செலவில் சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளை உருவாக்க முடியும் என்பதை டீப்சீக் எடுத்துக் காட்டியிருக்கிறது. இது முழு செயற்கை நுண்ணறிவு (AI) வர்த்தக விநியோக சங்கிலிக்கான முதலீட்டு வழக்கையும் தடம் புரளச் செய்யக்கூடும், இது ஒரு சிறிய விரல்விட்டு எண்ணக்கூடிய ஹைப்பர்ஸ்கேலர்கள் (hyperscalers) என்று சொல்லப்படும் வணிகங்களுக்கான கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் தரவு தீர்வுகளை வழங்கும் பெரிய அளவிலான தரவு மையங்கள் அதிக செலவினங்களால் இயக்கப்படுகிறது.”
ஒரு செல்வ மேலாண்மை நிறுவனத்தின் மூத்த சந்தை மூலோபாயவாதியான பால் நோல்ட கூறுகையில், இது பங்குகளுக்கான “ஸ்புட்னிக் தருணமா” என்று தனக்குத் தெரியாது, ஆனால் அமெரிக்கா “அது மட்டுமே விளையாட்டில் இல்லை” என்பதற்கான ஒரு விழிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றார்.
“அதற்கு நிறைய முதலீட்டாளர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனங்களை வேறுவிதமாகப் பார்க்க வேண்டும்: பங்குகளில் இந்த மிக உயர்ந்த மதிப்பீடுகளை வைப்பது சந்தையை அவை வளைத்துவிட்டதாக நினைப்பது மிகப்பெரிய தவறு, அது மறு மதிப்பீடு செய்யப்படுகிறது.”
டீப்சீக் வளர்ச்சி, மிகப்பெரும் அரசியல் தாக்கங்களைக் ஏற்படுத்தியுள்ளது. உலகப் பொருளாதாரத்தின் மீது அமெரிக்க ஆதிக்கத்தை உறுதி செய்வதையும், எல்லாவற்றிற்கும் மேலாக சீனாவை அடக்குவதையும் நோக்கமாகக் கொண்ட அமெரிக்கா, செயற்கை நுண்ணறிவில் உலகத் தலைவராக இருப்பதாகவும், அதன் வளர்ச்சி மற்றும் ஏகபோகம் அவரது “அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்கு” (Make America Great Again) திட்டத்தின் மையமாக இருப்பதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
முதல் ட்ரம்ப் நிர்வாகத்தில் தொடங்கி பின்னர் பைடெனின் கீழும் கணிசமாகத் தீவிரப்படுத்தப்பட்ட சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியின் மீதான தாக்குதல், “தேசிய பாதுகாப்பு” என்ற போர்வையின் கீழ்உயர்தர கணினி சிப்புகளுக்கு ஏற்றுமதி தடைகளை விதிப்பதில் கவனம் செலுத்தியிருந்தது.
ஆனால் டீப்சீக் அறிவிப்புக்கு முன்பே, இந்த கொள்கை தோல்வியடைந்து வருவது மட்டுமல்லாமல், அது சீனாவின் உயர் தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னோக்கி தள்ளியிருக்கலாம் என்பதற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளன.
கடந்த ஆண்டு, முதல் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் திணிக்கப்பட்ட தடைகளால் ஏறத்தாழ வர்த்தகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சீன தொலைபேசி மற்றும் தொலைதொடர்பு நிறுவனமான ஹூவாய் (Huawei), அதன் போட்டியாளர்களுடன் போதுமானளவுக்கு போட்டியிடும் ஒரு தொலைபேசியைத் தயாரித்து வெளியிட்டது. இது மிகவும் கடினமாகக் கருதப்பட்ட ஒரு புதிய சிப்பை உருவாக்கியிருந்ததும் இதில் அடங்கும்.
சீனா ஏற்கனவே சூரியக் கதிரை நேரடியாக மின்சாரமாக மாற்றும் ஒளிமின்கலங்கள் எனப்படும் ஒளிமின்னழுத்தியம் (photovoltaics) துறையில் உலகளாவில் முன்னணியில் உள்ளது.இது சோலார் பேனல்களுக்கு மிகவும் முக்கியமானது, மேலும் உலகளவில் மின்சார வாகனங்கள் உற்பத்தியில் முன்னணியில் இல்லை என்றாலும் அதில் வேகமாக வளர்ந்துவருகிறது.
அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவ அமைப்பில் இப்போது இது செயற்கை நுண்ணறிவில் (AI) நடக்குமா என்ற கேள்வி எழும்.
பார்க்லேஸில் வளர்ந்து வரும் சந்தைகளின் மேக்ரோ மற்றும் அந்நிய செலாவணி மூலோபாயத்தின் தலைவரான மிதுல் கோடெச்சா பைனான்சியல் டைம்ஸ் (FT) க்கு கூறியதைப் போல: “தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது இந்த சுங்கவரிகளும் மற்றும் முதலீட்டு கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் கூட, சீனா சும்மா உட்கார்ந்திருக்கவில்லை என்பதற்கு இது கொஞ்சம் எதார்த்தமாக வெளிப்பட்டிருப்பது போல் தெரிகிறது.”
தொழில்நுட்பத்தின்மீது தடைகளின் தாக்கம் இருந்தபோதிலும், அவை குறிப்பிடத்தக்கவையாக இருந்தபோதிலும், ஒவ்வொரு ஆண்டும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகளின் திறன்களையும் அறிவாற்றலையும் சீன நிறுவனங்களால் பயன்படுத்த முடிந்திருக்கிறது.
டீப்சீக் வளர்ச்சிக்கு பென்டகன் அல்லது இராணுவ மற்றும் உளவுத்துறை அமைப்பின்ஏனைய பிரிவுகளிடமிருந்து இதுவரை எந்த பொது பதிலும் வெளிவரவில்லை. ஆனாலும் இது கவனமான ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் செயற்கை நுண்ணறிவு (AI) அமெரிக்க மேலாதிக்கத்தை பராமரிப்பதற்கான ஒரு இருத்தலியல் பிரச்சினையாகக் கருதப்படுகிறது. இதுவரை விதிக்கப்பட்ட நடவடிக்கைகள் பயனுள்ளதாக இல்லையென்றால் அடுத்த முடிவு எடுக்கப்படும்.