ட்ரம்பின் வரிவிதிப்புகள் அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தை உலுக்குகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத சுங்கவரியை விதித்துள்ளார். இந்த வரி கடந்த செவ்வாய்க் கிழமையிலிருந்து அமலுக்கு வந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நிறுவப்பட்ட பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளின் முழுக் கட்டமைப்பும் சிதைந்துவிட்டது என்ற உணர்வு வளர்ந்து வருவதால், இந்த நடவடிக்கை உலகப் பொருளாதாரத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

மெக்ஸிகோ எல்லையிலிருந்து பத்து மைல்களுக்கு குறைவான தொலைவில் உள்ள ஹோல்ட்வில்லில் உள்ள ஒரு வயலில் தொழிலாளர்கள் முட்டைக்கோஸ் அறுவடை செய்கிறார்கள், புதன்கிழமை, மார்ச் 5, 2025 [AP Photo/Gregory Bull]

கனடா மற்றும் மெக்சிகோ மீது திணிக்கப்பட்ட சுங்கவரிகளுக்கு மேலதிகமாக, சீனாவிற்கு எதிரான வரிகளில் அமெரிக்கா மேலும் 10 சதவீதத்தை சேர்த்துள்ளது. இது, முன்னர் சீனாவிற்கு எதிராக அமல்படுத்தப்பட்ட 10 சதவீதமான வரிகளுக்கு மேலதிகமாகும்.

இதற்கு பதிலடியாக சீனா, கோழி, கோதுமை, சோளம் மற்றும் பருத்தி உள்ளிட்ட அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு 15 சதவீத சுங்க வரியையும், தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் பொருட்கள் மீது 10 சதவீத சுங்க வரியையும் விதித்துள்ளது.

பெய்ஜிங் அதன் “நம்பகத்தன்மையற்ற நிறுவன பட்டியலில்” 10 அமெரிக்க நிறுவனங்களைச் சேர்த்துள்ளது. இதன் அர்த்தம், அவை சீனாவிற்கு ஏற்றுமதி செய்யவோ அல்லது இறக்குமதி செய்யவோ அல்லது புதிய முதலீடுகளைச் செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதாகும். மேலும், 15 அமெரிக்க நிறுவனங்களை ஏற்றுமதி கட்டுப்பாட்டுப் பட்டியலுக்கு உட்படுத்தியுள்ளது.

கனடா 21 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிகள் மீது உடனடியாக 25 சதவீதத்துடன் பதிலிறுத்துள்ளது. இதைத் தொடர்ந்து மூன்று வார காலத்திற்குள் சுமார் 90 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதிகள் மீது மேலும் வரிகள் விதிக்கப்படும்.

அமெரிக்காவிற்குள் ஃபெண்டானைல் (fentanyl) போதைப்பொருள் மருந்து பாய்வதைத் தடுக்க கனடா போதுமானதாக இல்லை என்ற அடிப்படையில், ட்ரம்ப் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே இந்த கட்டண நடவடிக்கைகளை ஆரம்பத்தில் வெளியிட்டார். ஆனால், கனேடிய பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ இப்போது உளறிக் கொட்டுவதைப் போல, இது அமெரிக்காவின் விரிவாக்கவாத நோக்கங்களுக்கான ஒரு சாக்குப்போக்கு மட்டுமே ஆகும்.

கடந்த செவ்வாயன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், ஃபெண்டானைலின் எல்லை தாண்டிய கடத்தல் பிரச்சினை “முற்றிலும் போலியானது, முற்றிலும் நியாயமற்றது, முற்றிலும் தவறானது” என்று ட்ரூடோ கூறினார். ட்ரம்ப் உண்மையில் செய்ய விரும்பியது “கனேடிய பொருளாதாரத்தின் மொத்த சரிவைத் தூண்டுவதாகும். ஏனெனில், அது அதை இணைப்பதை எளிதாக்கும்”. முன்னதாக, வணிகத் தலைவர்கள் கூட்டத்தில் பேசிய ட்ரூடோ, முக்கியமான கனிமங்களில் ட்ரம்ப் கவனம் செலுத்துவதால், அவரது இணைப்பு அச்சுறுத்தல் ஒரு “உண்மையான விஷயம்” என்று கூறியிருந்தார்.

இது பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் முறிவின் உறுதியான அறிகுறியாகும். மூடிய கதவுகளுக்குப் பின்னால் பேசப்பட்டவை இப்போது வெளிப்படையாக வந்துள்ளன. ஏகாதிபத்தியத் தலைவர்கள் தங்கள் உண்மையான நிகழ்ச்சி நிரலை மறைக்க பொய் சொல்வதாக ஒருவருக்கொருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார்கள்.

கனடா மற்றும் மெக்சிகன் பொருளாதாரங்களுக்கு அச்சுறுத்தல் மிகவும் உண்மையானது. இரு நாடுகளின் ஏற்றுமதியில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை அமெரிக்காவிற்கு செல்கின்றன. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கொடுத்துள்ள பகுப்பாய்வின்படி, கனடா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவிகிதம் சுருக்கத்தையும் மெக்சிகோ 3 சதவிகித சுருக்கத்தை எதிர்கொள்ளக்கூடும்.

ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவை “ஏமாற்றுவதற்காக” அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு என்று கண்டனம் செய்த பின்னர், 25 சதவீத இறக்குமதி வரிவிதிப்புகளைத் திணிக்க ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ள நிலையில், ஐரோப்பாவும் நேரடியாக மோதல் போக்கில் உள்ளது.

கடந்த செவ்வாயன்று காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய ட்ரம்ப், ஏப்ரல் 2 ஆம் தேதி அறிக்கையை வழங்கிய பிறகு “பரஸ்பர கட்டணங்கள்” விதிக்கப்படும் என்று வலியுறுத்தினார்.

திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் சுங்கவரி விதிப்புகளுக்கும் அப்பால் செல்கின்றன. மேலும், ஐரோப்பிய மதிப்பு-கூட்டு வரி (VAT) மற்றும் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் மீதான விதிமுறைகள் போன்ற எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் பதிலடி கொடுப்பதும் இதில் அடங்கும். அவை, அமெரிக்கா அதன் நிறுவனங்களின் லாபத்திற்கு விரோதமானவை என்று கருதுகின்றன.

முக்கிய அமெரிக்க வாகனத்துறை நிறுவனங்களின் அழுத்தங்களுக்குப் பிறகு, மெக்சிகோ-கனடா வரிவிதிப்பிலிருந்து ட்ரம்ப் அவர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கினார். இது அவர்கள் “பொருளாதார ரீதியாக பாதகமாக இல்லை” என்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டதாக அவரது பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறினார். பல ஆண்டுகளாக நீடிக்கும் திட்டமிடல் நடவடிக்கைகளில் வாகன நிறுவனங்களுக்கு ஒரு மாதகால தாமதம் எவ்வாறு உதவும் என்று அவர் கூறவில்லை.

ஒரு மாதகால தாமதத்திற்கு முன்பே, எதிர்காலத்தில் என்ன திருப்பங்கள் வந்தாலும், சேதம் ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டதாக எச்சரிக்கைகள் வந்துள்ளன.

கனேடிய வர்த்தக சபையின் நிர்வாக துணைத் தலைவர் மத்தேயு ஹோம்ஸ் ஜேர்னலுக்கு இவ்வாறு தெரிவித்தார்: “நிறுவனங்கள் சுங்க வரிகளைத் தவிர்ப்பதற்காக தங்கள் மாதிரியை மாற்றிக் கொண்டு, அரசியல்வாதிகள் ஒரு குறிப்பிட்ட நாளில் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து, கடிகாரத்தைத் திருப்பி விட முடியாது.”

ட்ரம்ப்பினுடைய வர்த்தகப் போர் உலகின் அனைத்துப் பொருளாதாரங்களையும் மட்டுமல்ல, அமெரிக்காவையும் அச்சுறுத்துகிறது. கடந்த நவம்பர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றதிலிருந்து கிடைத்த அத்தனை ஆதாயங்களையும் துடைத்தழித்துள்ள வோல் ஸ்ட்ரீட்டின் பங்கு மதிப்புகளின் வீழ்ச்சி ஒரு அறிகுறியாகும். மொத்தம் சுமார் 3.4 டிரில்லியன் டாலர் சந்தை மூலதனமயமாக்கலில் இருந்து துடைத்தெறியப்பட்டுள்ளது.

வரிவிதிப்புகளின் தாக்கம் குறித்த எச்சரிக்கைகள் தடிமனாகவும் வேகமாகவும் வந்து கொண்டிருக்கின்றன. தொழில்துறை பிரதிநிதிகள் வரிவிதிப்பு நடவடிக்கைகளை கண்டிப்பதால், விவசாயத் துறை முதலில் பாதிக்கப்படும் துறைகளில் ஒன்றாக ஆகியுள்ளது.

“ஜனாதிபதி நினைப்பதற்கு மாறாக, இது வலியைத் தவிர வேறில்லை” என்று அயோவா விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஆரோன் லெஹ்மன் பைனான்சியல் டைம்ஸிடம் தெரிவித்தார்.

பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு வந்த இதர கருத்துக்களும் இதே தொனியில்தான் இருந்தன. அமெரிக்க சோயாபீன் சங்கத்தின் தலைவர் காலேப் ரக்லாண்ட், விவசாயிகள் “விரக்தியடைந்துள்ளனர்” என்று கூறினார். வரிகள் என்பது லேசாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றல்ல, “அல்லது சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றல்ல”, ஆனால் அவை வணிகங்களைப் பாதிக்கின்றன. அவர்கள் “எங்கள் வணிக உறவுகள் அடிப்படையாகக் கொண்ட ஒரு அடிப்படைக் கொள்கையை, அதாவது நம்பகத்தன்மையை”, அவர்கள் உலுக்கியுள்ளனர்.

ட்ரம்ப் விலைகளைக் குறைத்து பொருளாதாரத்தை வளர்ப்பார் என்ற அவரது தேர்தல் கூற்றுகளைப் பற்றி குறிப்பிடுகையில் (ஜனநாயகக் கட்சியினர் மீதான கோபம் மற்றும் வெறுப்பு காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் ட்ரம்புக்கு வாக்களிக்கத் தூண்டிய மோசடி செய்பவர்கள் தொடர்பான கூற்றுக்கள்) சில்லறை வணிகத் தலைவர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் மைக்கேல் ஹான்சன் பின்வருமாறு கூறினார்: “கனடா மற்றும் மெக்சிகோ மீதான வரிவிதிப்புகள் அந்த இலக்குகளை தீவிர ஆபத்தில் ஆழ்த்துகின்றன என்பதோடு, வட அமெரிக்க பொருளாதாரத்தை ஸ்திரமின்மைக்கு உட்படுத்தும் அபாயத்தையும் ஏற்படுத்துகின்றன.”

நியூ யோர்க் டைம்ஸ், “பதட்டமான வணிகக் குழுக்கள்” தங்கள் பதில்களைத் தீர்மானிக்க கூட்டங்களை நடத்தி வருவதாகவும், ட்ரம்ப் எந்த தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் அவற்றைத் திணித்துள்ளாரோ அந்த தேசிய பாதுகாப்பு ஆணையத்திற்கு ஒரு சட்டரீதியான சவாலை விடுப்பதற்கு கூட சிலர் பரிசீலித்து வருவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

தேசிய வங்கி மற்றும் நிதியியல் மன்றத்தின் தலைமைப் பொருளாதார நிபுணரான கேத்தி போஸ்ட்ஜான்சிக் கூறுகையில், சுங்கவரிகள் பராமரிக்கப்பட்டு பதிலடி நடவடிக்கைகள் தொடரப்பட்டால், பொருளாதார வளர்ச்சி 2024 இல் இருந்ததை விட 2025 இல் குறைந்தபட்சம் ஒரு சதவீத புள்ளி குறைவாக இருக்கும், இது வெறும் 1.5 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று தெரிவித்தார்.

அமெரிக்கப் பொருளாதாரத்தின் எதிர்பார்ப்பு வேகமாக மோசமடைந்து வருவதாகத் தோன்றுகிறது. கடந்த வெள்ளியன்று, அட்லான்டாவின் பெடரல் ரிசர்வ் வங்கி மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி பற்றிய மதிப்பீட்டின்படி, முதல் காலாண்டில் 1.5 சதவிகித சுருக்கம் இருக்கும் என்று கணித்துள்ளது. திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு மதிப்பீட்டில், அந்த சுருக்கம் 2.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அமெரிக்க வணிகங்கள் புதிய ஆர்டர்கள் மற்றும் வேலைவாய்ப்பில் கணிசமான சரிவுகளை அறிவித்துள்ளன. பிப்ரவரிக்கான ISM வாங்கும் உற்பத்தியாளர்கள் குறியீடு முந்தைய மாதத்தில் 50.9 லிருந்து 50.3 ஆக குறைந்தது. இது, 50 என்ற அளவு விரிவடைவதற்கும் சுருங்குவதற்கும் இடையேயான எல்லையைக் குறிக்கிறது. இதர குறியீடுகள் புதிய ஆர்டர்களில் செங்குத்தான சரிவை சுட்டிக்காட்டின. இது, 55.1 இல் இருந்து 48.6 வரையான வீழ்ச்சியைக் குறிக்கிறது.

அமெரிக்கப் பொருளாதாரத்தில் கணிசமான வீழ்ச்சிக்கான சாத்தியக்கூறு பத்திர சந்தையிலும் பிரதிபலிக்கிறது. 10 வருட அரசாங்க பத்திரங்களின் வருவாய் (வட்டி விகிதங்கள்) வீழ்ச்சியடைந்து வருகின்றன.

பொதுவாக, வரி உயர்வுகளால் ஏற்படும் பணவீக்க அழுத்தங்கள் காரணமாக பெடரல் ரிசர்வ் விகிதங்களைக் குறைக்காது என்ற முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பில் பொதுவாக அவை உயரும் என்று எதிர்பார்க்கலாம். இது வெளிநாட்டினரால் பணம் செலுத்தப்படுகிறது என்ற ட்ரம்பின் பொய்யான கூற்றுக்களுக்கு முரணாக, நுகர்வோர் மற்றும் வணிகங்களை பாதிக்கிறது.

ஆனால் சந்தை உணர்வு வேகமாக மாறி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து, ஒரே ஒரு வட்டி விகித குறைப்பு மட்டுமே இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்போது ஜூன் மாதத்தில் தொடங்கி மூன்று சரிவுகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால், ட்ரம்பின் வரி நடவடிக்கைகள் பொருளாதாரத்தை மந்தநிலையை நோக்கித் தள்ளும் என்றும், அப்போது பெடரல் வங்கி விகிதங்களைக் குறைக்க வேண்டிய அவசியத்தை உணரும் என்றும் முதலீட்டாளர்கள் அஞ்சுகிறார்கள். அதன் கவலைகளில் ஒன்று, இது வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை என்றாலும், மந்தநிலை வோல் ஸ்ட்ரீட்டில் ஒரு தீவிர வீழ்ச்சியை ஏற்படுத்தி, நிதியக் கொந்தளிப்புக்கு இட்டுச் செல்லக்கூடும் என்பதாகும்.

பார்க்ளே வங்கியின் (Barclay’s bank) ஒரு பகுப்பாய்வாளரான இமானுவல் காவ் பைனான்சியல் டைம்ஸ் க்கு கூறியதைப் போல: “முதலீட்டாளர்கள் உண்மையில் ட்ரம்பின் கொள்கைகளைக் கண்டு அஞ்சத் தொடங்கியுள்ளனர். அமெரிக்காவில் ஒரு வளர்ச்சி பிரச்சினை இருந்தால், அதை புறக்கணிப்பது கடினம் ... மக்கள் பதட்டத்தில் உள்ளனர், சிலர் மந்தநிலை குறித்து அஞ்சத் தொடங்கியுள்ளனர்.”

Loading