கனடா மற்றும் மெக்சிகோ மீது அமெரிக்கா 25 சதவீத சுங்கவரிகளை விதிக்கிறது

ட்ரம்பின் விரிவடைந்து வரும் உலகளாவிய வர்த்தகப் போர் என்பது பாரியளவு வேலைநீக்கங்கள் மற்றும் விலைவாசி உயர்வுகளால் தொழிலாளர்களைத் தண்டிப்பதை அர்த்தப்படுத்தும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகின் பிற நாடுகளுக்கு எதிரான தனது வர்த்தகப் போரை விரிவுபடுத்தியுள்ளார். திங்களன்று (மார்ச் 3, 2025) நள்ளிரவுக்குப் பின்னர், கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளிலிருந்து ஏறத்தாழ அனைத்து இறக்குமதிகள் மீதும் அமெரிக்கா 25 சதவீத சுங்கவரி விதித்துள்ளது. மேலும், சீனாவிலிருந்து வரும் அனைத்து இறக்குமதிப் பொருட்கள்மீதும் கடந்த மாதம் சுமத்தப்பட்ட கூடுதல் சுங்கவரிகளை இரட்டிப்பாக்கி 20 சதவீதமாக அது உயர்த்தியுள்ளது.

அமெரிக்காவின் மூன்று மிகப்பெரிய வர்த்தக கூட்டாளிகளைக் குறிவைத்து நடத்தப்படும் வர்த்தகப் போரானது, உற்பத்தியை மீண்டும் சொந்த நாட்டுக்கு மாற்றுவதற்கும் மற்றும் அதன் எதிரிகள் மற்றும் பெயரளவிலான கூட்டாளிகளுக்கு எதிராக உலகப் போருக்கான தயாரிப்பில் அமெரிக்கா மீது அதன் மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் உந்துதலின் ஒரு பகுதியாக இது இருக்கிறது. இது 1930களில், இரண்டாம் உலகப்போருக்கு முன்னோடியாகச் செயல்பட்ட, அனைத்து ஏகாதிபத்திய சக்திகளாலும் நடைமுறைப்படுத்தப்பட்ட வர்த்தகப் போர் நடவடிக்கைகளுடன் ஒரு அச்சமூட்டும் ஒற்றுமையைக் கொண்டிருக்கின்றது,

ட்ரம்ப் கடந்த மாத தொடக்கத்தில், கனடாவின் எரிசக்தி பொருட்கள்மீது 10 சதவீத சுங்கவரி விதித்திருப்பதைத் தொடர்ந்து, மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து வரும் அனைத்து இறக்குமதிப் பொருட்கள்மீதும் 25 சதவீத சுங்கவரியும் மேலும் அனைத்து சீனப் பொருட்கள்மீது கூடுதலாக 10 சதவீத இறக்குமதி வரியையும் விதித்து நிர்வாகரீதியான உத்தரவுகளை வழங்கியுள்ளார். சீனாவிற்கு எதிரான புதிய வரி பிப்ரவரி 4 அன்று திட்டமிட்டபடி செயல்படுத்தப்பட்டன. ஆனால் ட்ரம்ப், கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் மெக்சிகன் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் ஆகியோருடன் ஏற்பட்ட 11 மணி நேர பேரம் பேசல்களின் அடிப்படையில் அந்தந்த நாடுகளுக்கு எதிரான வரிகளை 30 நாட்களுக்கு “இடைநிறுத்தம்” செய்வதற்கான ஒப்பந்தங்களை எட்டினார்.

இந்த “இடைநிறுத்தம்” திங்களன்று (மார்ச் 3, 2025) பிற்பகல் முடிவடைவதால், மேலும் தளர்வுகளுக்கு “இடமில்லை” என்று ட்ரம்ப் அறிவித்துவிட்டார்.

அமெரிக்க வரிவிதிப்புகள் நடைமுறைக்கு வந்த சிறிது நேரத்திலேயே, அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவும் கனடாவும் வரிகளை அறிவித்துள்ளன. பெய்ஜிங் அமெரிக்க உணவுப் பொருட்கள்மீது 15 சதவீதமும் இதர பொருட்கள்மீது 10 சதவீதமும் சுங்கவரிகளை விதித்துள்ளது. இது சீனா பெப்ரவரியில் பதிலடி கொடுக்கும் விதமாக மேற்கொண்ட 10 சதவீத வரியைவிட கூடுதலாகும்.

ஒட்டாவா (Ottawa) ஆண்டுதோறும் 30 பில்லியன் கனேடிய டாலர் ($20.8 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு வரியினை விதித்துள்ளது. மூன்று வாரங்களுக்குப் பிறகு எந்தவித பேரங்களும் பலனளிக்கவில்லையெனில் $155 பில்லியன் கனேடிய டாலராக வரி உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளது.

இவை ட்ரம்பின் உலகளாவிய வர்த்தகப் போரின் ஆரம்ப கட்டங்கள் மட்டுமே. மார்ச் 12 முதல் அனைத்து இரும்பு மற்றும் அலுமினிய இறக்குமதிகள் மீதும் 25 சதவீத சுங்கவரிகள் நடைமுறைக்கு வர உள்ளன. ட்ரம்ப் அழிக்க விரும்புவதாகக் கூறும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள்கள்மீது 25 சதவீத சுங்கவரி விதிப்பதை அமல்படுத்தவும் வாஷிங்டன் முடிவெடுத்துள்ளது. ஏப்ரல் தொடக்கத்தில், அனைத்து இறக்குமதிகள் மீதும் பரஸ்பர சுங்கவரிகள் (reciprocal tariffs) என்றழைக்கப்படும் சுங்கவரிமுறையை அறிமுகப்படுத்த ட்ரம்ப் சபதமெடுத்துள்ளார். இது ஏற்றுமதி செய்யும் நாடு வசூலிக்கும் சுங்கவரிகளுக்கு ஏற்ப அமெரிக்காவும் சுங்கவரிகளை அதிகரிக்கப்போகிறது.

சுங்கவரிகள் என்பது இறக்குமதியாளர் குறிப்பிட்ட நாட்டிலிருந்து வாங்கும் பொருட்களுக்குச் செலுத்தும் கட்டணமாகும். ஆனால், இறுதியில், இரு நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். ஏனெனில், இறக்குமதியாளர் அதிக செலவினங்களை நுகர்வோர் மீது சுமத்துவதால், அவர்கள் விலைவாசி உயர்வுமூலம் கட்டணத்தைச் செலுத்தவேண்டியிருக்கும் அல்லது இறக்குமதி கொள்முதல் செய்வதை ரத்து செய்யவேண்டியிருக்கும். இதன் விளைவாக உற்பத்திகள் பாதிக்கப்படுவதுடன் வேலையிழப்புகளும் ஏற்படும்.

இந்த உண்மைகள் வர்த்தகப் போரில் உள்ள அனைத்து தரப்பினராலும் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. இவை பல தசாப்தங்களாக வீழ்ச்சி அடைந்து வரும் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மையால் தூண்டப்பட்டிருக்கும் தொழிலாளர்களின் கோபத்தை அவர்களின் “சொந்த” ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்குப் பின்னால் தவறாக வழிநடத்துவதற்கு மோசமான தேசியவாதத்தைத் தூண்டிவிடுவதில் கவனம் செலுத்துகின்றன.

ட்ரம்ப் மற்றும் அமெரிக்க தன்னலக்குழுக்களைப் பொறுத்த வரையில், முக்கிய உற்பத்தியை அமெரிக்காவுக்குள் மீண்டும் மறுமுதலீடு செய்வதற்கும் மற்றும் அதன் அண்டை வெளிநாடுகளில் வாஷிங்டனின் பொருளாதார மேலாதிக்கத்தை வலுப்படுத்துவதுமே இலக்காகும். செவ்வாயன்று அவர் தனது ட்ரூத் சமூக தளத்தில் எழுதியதைப் போல, “நிறுவனங்கள் அமெரிக்காவிற்குள் வந்தால், சுங்க வரிகள் எதுவும் இருக்காது!!!”

இந்த மூலோபாயத்தில் பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை மீண்டும் எடுப்பது, டென்மார்க்கின் பாகமாக இருக்கும் ஒரு தன்னாட்சி பிராந்தியமான கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது, மற்றும் கனடாவை அமெரிக்காவின் 51 வது மாநிலமாக மாற்றுவது ஆகியவை பொருளாதார அல்லது இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியிருப்பதாக ட்ரம்ப் மீண்டும் மீண்டும் அறிவித்துள்ளார். செவ்வாய்கிழமை காலை ட்ரூடோ ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் ட்ரம்ப் “கனடா பொருளாதாரத்தின் மொத்த சரிவையும் விரும்புகிறார். ஏனென்றால், அது நம்மை அவர்களுடன் இணைத்துக்கொள்வதை எளிதாக்கும் என்று அவர் எண்ணுகிறார்” என்று கூறி இதுதான் ட்ரம்ப் நிர்வாகம் பின்பற்றி வரும் திட்டநிரல் என்பதை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டார். .

ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்ப் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவர்களது தூதுக்குழு உறுப்பினர்களுடன் சேர்ந்து, சென்டர் டி காங்கிரஸ் பெல்லெவியூவில் இருதரப்பு சந்திப்பில் பங்கேற்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 25, 2019

ட்ரூடோவும் ஏனைய கனடாவின் அரசியல் ஸ்தாபகமும் ட்ரம்பின் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் வன்முறை வழிமுறைகளை எதிர்க்கவில்லை. அவர்களின் இலாபங்களையும் சலுகைகளையும் அச்சுறுத்தி அவர்களுக்கு எதிராக அவர்களைத் திருப்பிவிட்டதால் அவர்கள் கோபமடைந்துள்ளனர். கனடா ஏகாதிபத்தியம் எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் மிக நெருக்கமான கூட்டணியில் உலகளாவிய அதன் சூறையாடும் நலன்களைப் பின்தொடர்ந்து வந்துள்ளது. ஒட்டாவாவில் உள்ள அதன் தலைவர்கள், ரஷ்யாவை அடிபணிய வைப்பதற்கும் அதன் வளங்களைக் கொள்ளையடிப்பதற்கும் அமெரிக்க-நேட்டோ போர் உட்பட இந்த கூட்டுறவைத் தொடரவே விரும்புகின்றனர்.

இவ்வாறாக, ட்ரம்ப் மீதான அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட விமர்சனங்களை எதிரொலிக்கும் ட்ரூடோ, தனது செவ்வாய்கிழமை செய்தியாளர் சந்திப்பைத் தொடங்கி, “ஆகவே இன்று, அமெரிக்கா அவர்களின் நெருங்கிய கூட்டாளியும் ஒத்துழைப்பாளரும், அவர்களின் நெருங்கிய நண்பருமான கனடாவுக்கு எதிராக ஒரு வர்த்தகப் போரைத் தொடுத்திருக்கிறது. அதே நேரத்தில், அவர்கள் ரஷ்யாவுடன் நேர்மறையாகப் பணியாற்றுவது, பொய் சொல்லும், கொலைகார சர்வாதிகாரியான புட்டினை திருப்திப்படுத்துவது பற்றிப் பேசுகிறார்கள்” என்று கூறினார்.

ட்ரூடோ அரசாங்கமும் கனடாவின் மாகாண அரசாங்கங்களும் இப்போது பழிவாங்கும் நடவடிக்கையாகக் சுங்கவரிகள் மற்றும் எரிசக்தி ஏற்றுமதி வரிகள் அல்லது பொருளாதாரத் தடைகள் உட்பட பிற எதிர் நடவடிக்கைகளைச் செயல்படுத்த முயன்று வருகின்றன. இது ட்ரம்பின் பிற்போக்குத்தனமான அதே செயல் அளவுக்கு தவறான தேசியவாத பிரச்சாரத்தால் கையாளப்படுகிறது. ட்ரம்ப் மற்றும் அமெரிக்க தன்னலக்குழுவில் உள்ள அவரது ஆதரவாளர்களைப் போலவே சிக்கன நடவடிக்கைகள், உண்மையான ஊதிய குறைப்புகள் மற்றும் பணிநீக்கங்கள் மூலம் வர்த்தகப் போரின் செலவுகளைத் தொழிலாள வர்க்கத்தின் முதுகில் சுமத்துவதில் உறுதியாக உள்ளனர் என்ற உண்மையை அவர்கள் மேப்பிள் இலையைப் போர்த்திக் கொள்வதன் மூலமாக, தொழிலாள வர்க்கத்திடமிருந்து மறைக்க முடியும் என்று நம்புகின்றனர்.

கனடாவின் எதிர்-வரிவிதிப்புகளுக்கு, இணையாக அச்சுறுத்தும் வகையில் பதிலளித்த ட்ரம்ப் “தயவுசெய்து ஆளுநர் ட்ரூடோவிடம் சொல்லுங்கள்... எங்கள் பரஸ்பர சுங்கவரி உடனடியாக அதே அளவு அதிகரிக்கப்படும் என்று” கூறினார்.

மெக்சிகோ, கனடாவை விட அமெரிக்க வர்த்தகத்தை அதிகம் சார்ந்துள்ளது. அதன் பங்கிற்கு, மெக்சிகோ ஜனாதிபதி ஷெயின்பாம், அவரது உதவியாளர்கள் மற்றும் வெள்ளை மாளிகைக்கு இடையே வியாழக்கிழமை தொலைபேசி அழைப்பு வரும் வரை எந்தவொரு பழிவாங்கும் வரிவிதிப்புகளையும் எடுப்பதற்கு தாமதப்படுத்துவதாகக் கூறியுள்ளனர். கனடாவைப் போலவே, மெக்சிகோவும் அமெரிக்காவுடன் அது பகிர்ந்து கொள்ளும் எல்லையில் பாதுகாப்புப் படைகளை அதிகரித்துள்ளது. ட்ரம்பின் போலியான கூற்றுக்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ஃபெண்டானைல் (fentanyl) மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான எல்லை தாண்டிய “படையெடுப்பு” குறித்த “தேசிய பாதுகாப்பு” பிரச்சனைகளால் இந்த வரிவிதிப்புகள் உந்தப்படுகின்றன. ஆனால், அவை அனைத்துமே காரணமில்லை

வாஷிங்டனும் ஒட்டாவாவும் வர்த்தகப் போருக்கு தொழிலாளர்களை விலை செலுத்த வைக்கின்றன

ட்ரம்பால் கட்டவிழ்த்து விடப்பட்ட மற்றும் கனேடிய ஆளும் உயரடுக்கின் போர்வெறிமிக்க பதிலிறுப்பால் தூண்டப்பட்ட வர்த்தகப் போர், வட அமெரிக்கா முழுவதும் மற்றும் அதற்கு அப்பால் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும். வாகனத்துறை மற்றும் பிற உற்பத்தித் தொழில்துறைகள், பல தசாப்தங்களாக ஒருங்கிணைந்த கண்டம் சார்ந்த விநியோகச் சங்கிலிகளை உருவாக்கியிருக்கின்றன. அவற்றுடன் உதிரிபாகங்களும் பகுதியளவிலான கட்டமைக்கப்பட்ட வாகனங்களும் அவை முடிவடைவதற்கு முன்னரே பல சந்தர்ப்பங்களில் தேசிய எல்லைகளைக் கடக்கின்றன. ஆகவே, இத்தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மொத்த சுங்கவரிகள் வெறும் 25 சதவீதம் என்பதை விடப் பல மடங்கு அதிகமாக எதிர்கொள்ளும்.

வாகனத்துறை மற்றும் உதிரிப் பாகங்கள் உற்பத்தி ஆலைகளில் பத்தாயிரக் கணக்கான பணிநீக்கங்கள் நிகழும் என்று தொழில்துறை வல்லுனர்கள் கணித்துள்ளனர். பார்க்லேஸ் அறிக்கையின்படி ஃபோர்ட் (Ford), ஜெனரல் மோட்டார்ஸ் (GM) மற்றும் ஸ்டெல்லாண்டிஸ் (Stellantis) ஆகியவற்றின் மீதான வரிகள் “அனைத்து இலாபங்களையும் திறம்பட அழித்துவிடும்” என்று குறிப்பிடுகிறது. டெட்ராய்ட் மூன்று பெரும் நிறுவனங்களில் சுமார் 18,000 தொழிலாளர்களையும், விநியோகஸ்தர்கள் மற்றும் பிற வாகன உற்பத்திகளில் பல்லாயிரக்கணக்கானவர்களையும் வேலைக்கு அமர்த்தியுள்ள கனடாவின் வாகன தொழில்துறை பத்து நாட்களுக்குள் மூடப்படலாம் என்றும் ஒன்டாரியோ மாநில முதலமைச்சர் டக் ஃபோர்ட் (Doug Ford) கருத்து தெரிவித்துள்ளார்.

பணிநீக்கங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. ஜனவரி தொடக்கத்தில், உலக சோசலிச வலைத் தளம் (wsws.org), தேசிய எஃகு கார் சாமானிய தொழிலாளர் குழுவின் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இது, அமெரிக்க வாடிக்கையாளர்களிடமிருந்து கொள்முதல் ஆணைகள் குறைந்ததன் காரணமாக ஒன்டாரியோவின் ஹாமில்டன் ஆலையின் 1,400 முக்கிய தொழிலாளர்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒன்டாரியோவின் இங்கர்சாலில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸின் (GM) CAMI ஒருங்கிணைப்பு ஆலையிலுள்ள ஒரு தொழிலாளி செவ்வாயன்று உலக சோசலிச வலைத் தளத்திடம் (wsws.org) கூறுகையில், கவலையை ஏற்படுத்தும் சுங்கவரிகளின் காரணமாக மிகக் குறைந்த பணிமூப்பு கொண்ட 80 தொழிலாளர்கள் பிப்ரவரி 10 அன்று பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்றார். “மற்ற அனைவரும் குறைந்தபட்சம் அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்,” என்று அந்தத் தொழிலாளி தொடர்ந்து கூறியுள்ளார்.

“இது இருண்டதாகத் தெரிகிறது. அடுத்த 3 முதல் 6 மாதங்களில் பெரியளவில் கொள்முதல் செய்ய வேண்டாம் என்று உங்கள் தலைமையால் நீங்கள் எச்சரிக்கப்பட்டிருப்பது ஒருபோதும் நல்ல அறிகுறி அல்ல. பிப்ரவரி 10 ஆம் தேதி, முதல் சுற்று பணிநீக்கம் மேற்கொண்டபோது அதிலிருந்து வெற்றிபெற்ற நாங்கள் அடுத்த சுற்றில் வெற்றிபெற மாட்டோம். அல்லது ஆலை 1-ஷிப்டுக்கு சென்றால், அது எங்களது புதிய குறுகிய ஒப்பந்தம் முடியும் வரை 540 வேலைகள் வெட்டப்படும் அல்லது பணிநீக்கம் நடக்கும்.”

செவ்வாயன்று ஓஹியோவின் டொலிடோவில் உள்ள ஜீப் ஆலைக்கு வெளியே உலக சோசலிச வலைத் தளம் நேர்காணல் செய்தபோது, ஒரு தொழிலாளி, “ஏற்கனவே நிறைய நிச்சயமற்ற நிலை உள்ளது. இந்த வரிவிதிப்புகள் வாகன தொழிற்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். பணிநீக்கங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார்.

செவ்வாயன்று வர்த்தகத்தில் ஜேர்மனியின் பங்குச் சந்தை 3.5 சதவிகிதம் சரிந்தது. வாகன தயாரிப்பாளர்களும் உதிரிப்பாகங்கள் விநியோகிப்பவர்களும் சரிவிற்கு முக்கிய பங்களித்தனர். கொன்டினென்டல் (Continental) பங்குகள் 11.6 சதவிகிதம் சரிந்தன. அதே சமயத்தில் BMW 5.9 சதவிகிதமும், டெய்ம்லர் டிரக்ஸ் (Daimler Trucks) 7.8 சதவிகிதம் சரிந்தன. இந்த மூன்று நிறுவனங்களும் வட அமெரிக்க சந்தையில் மிகவும் மோசமான நிலையை வெளிப்படுத்தின. ஐரோப்பிய மற்றும் பிற சந்தைகளில் அதிக கவனம் செலுத்துபவர்களும் கூட ட்ரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது சுங்கவரிகளை சுமத்துவதை எதிர்பார்த்து பணிநீக்கங்களை செய்வதற்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன அல்லது அறிவித்துள்ளன. ஒரு ஜேர்மன் பொருளாதார சிந்தனைக் குழாம் சுங்கவரிகள் நடைமுறைக்கு வந்தால், ஜேர்மன் பொருளாதாரம் இந்த ஆண்டு அதன் வளர்ச்சி விகிதம் 0.5 சதவீதம் வீழ்ச்சியடையும் என்றும், இது மேலும் கூடுதலான வேலை வெட்டுக்களுக்கு வழிவகுக்கும் என்றும் கணித்துள்ளது.

பணவீக்கத்தால் தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். சுங்கவரிகள் சில வாரங்களுக்கு மேல் நீடித்தால், அவை ஒரு காரின் விலையில் ஆயிரக்கணக்கான டாலர்களையும், சில பிக்-அப் டிரக்குகளுக்கு 10,000ம் டாலருக்கும் அதிகமாகவும் விலை அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். ஒன்டாரியோ மற்றும் கியூபெக்கில் இருந்து அமெரிக்காவுக்கான மின்சார இறக்குமதிகள் மீதான 10 சதவீத சுங்கவரி விதிக்கப்பட்டால், நியூ இங்கிலாந்து மற்றும் நியூயோர்க்கில் உள்ள மின்சார வழங்குநர்கள் முறையே ஆண்டுக்கு $165 மில்லியன் டாலர் மற்றும் “பத்து மில்லியன்கள்” மின்சாரக் கட்டணங்கள் உயரும் என்று மதிப்பிட்டுள்ளனர். ஒன்டாரியோ முதலமைச்சர் ஃபோர்ட் அமெரிக்க வரிவிதிப்புகளுக்கு பதிலடியாக, அமெரிக்காவிற்கான எரிசக்தி வினியோகங்களை துண்டிப்பதற்கான அவரது அச்சுறுத்தலை செயல்படுத்தினால், விலைகள் மேலும் அதிகமாக உயரக்கூடும். இந்த நடவடிக்கையை கனடாவின் தேசியவாத வாய்வீச்சாளர் திங்களன்று அவர் முகத்தில் “ஒரு புன்னகையுடன்” நிகழ்ச்சியைச் செய்யப்போவதாக உறுதியளித்தார்.

இரண்டு முக்கிய அமெரிக்க சில்லறை விற்பனையாளர்களான டார்கெட் (Target) மற்றும் பெஸ்ட் பை (Best Buy) ஆகியவற்றின் தலைமை நிர்வாக அதிகாரிகள், மளிகைப் பொருட்கள் மற்றும் பிற வீட்டுப் பொருட்களின் விலைகள் இந்த வார தொடக்கத்தில் உயரக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். பெஸ்ட் பையின் கோரி பாரி என்பவர் விலை உயர்வு “மிகவும் சாத்தியம்” என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் டார்கெட்டின் பிரையன் கார்னெல் என்பவர் CNBCயிடம் பழங்கள் மற்றும் காய்கறிகள் முதலில் பாதிக்கக்கப்படலாம் என்று கூறினார்.

தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் வர்த்தகப் போரில் தொழிலாளர் இடைநிலை அதிகாரிகளாக சேவையாற்றுகின்றன

“தேசிய ஐக்கியம்” என்ற பெயரில் வர்த்தகப் போரில் இணைவதற்கு தொழிலாளர்களை அணிதிரட்டுவதில் மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்படும் பயிற்சி சார்ஜென்ட்களாக தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் இருக்கின்றன. பல தசாப்தங்களாக அரசு மற்றும் வணிக செயலதிகாரிகளுடன் பெருநிறுவன உறவுகளை வளர்த்துக்கொண்டு, இதன் மூலமாக அவை வேலை வெட்டுக்கள் மற்றும் பாரிய விட்டுக்கொடுப்புகளைத் திணிப்பதற்கு உதவியுள்ளன. அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள தொழிற்சங்க எந்திரங்கள் “அவர்களின்” ஆளும் வர்க்கத்தின் இலாப நலன்களைப் போல எதையும் தீவிரமாகப் பாதுகாக்கவில்லை.

ட்ரம்பின் பாசிச ஆலோசகர்களின் பிரகடனங்களுடன் சேர்த்துப் பார்ப்பதற்கு பொருத்தமற்றதாக ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கத்திடமிருந்து (UAW) வந்த ஓர் அறிக்கையில், “தொழிலாளர்-விரோத வர்த்தக உடன்படிக்கைகளின் அநீதியை அகற்றுவதற்கான கருவிப்பெட்டியில் சுங்கவரிகள் ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருக்கிறது. தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு குண்டு போல் வீசப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக பேரழிவை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஒரு அமெரிக்க ஜனாதிபதி தீவிர நடவடிக்கை எடுப்பதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்று குறிப்பிட்டிருந்தது.

ஏப்ரல் மாதத்தில் நடைமுறைக்கு வரவிருக்கும் வாகன இறக்குமதிகள் மீதான கூடுதல் வரிகளுக்கான திட்டங்களை வடிவமைக்க, ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம் (UAW) “ட்ரம்ப் நிர்வாகத்துடன் தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது” என்று அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது. “நிறுவனங்கள் தங்கள் நடத்தையை மாற்றவும், அமெரிக்காவில் மறுமுதலீடு செய்யவும், அமெரிக்க தொழிலாளி, அமெரிக்க நுகர்வோர் மற்றும் அமெரிக்க வரி செலுத்துவோரை ஏமாற்றுவதை நிறுத்தவும் ஊக்குவிக்கும் தீவிர நடவடிக்கையை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்” என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

கனடாவின் மிகப்பெரிய தனியார்துறை தொழிற்சங்கமான யூனிஃபோரின் தலைவர் லானா பெய்ன், “பொருளாதார ரீதியில் ஆயுதபாணியாக்கு அழைப்பை” வெளியிட்டுள்ளார். “ஒவ்வொரு கனடாவின் அரசியல்வாதியும், வணிகத் தலைவரும், தொழிலாளியும் மற்றும் குடியிருப்பாளரும் எதிர்த்துப் போராட வேண்டும். ட்ரம்ப் கனேடியர்களின் உறுதியையும் ஒற்றுமையையும் தீவிரமான நிலையில் தவறாக மதிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வர்த்தகப் போர் அமெரிக்க தொழிலாளர்களுக்கு எவ்வளவு பாதிப்பையேற்படுத்தும் என்பதை அவர் தவறாகக் கருதியுள்ளார்,” என்று பெய்ன் கூறினார். இந்த இழிவான தேசியவாத உரையைத் தொடர்ந்து, யூனிஃபோருக்கு முன்னர் இருந்த அமைப்பான கனேடிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம் (CAW), 1985ஆம் ஆண்டில் ஐக்கிய வாகன தொழிலாளர்கள் சங்கத்துடன் (UAW) ஒரு தேசியவாத பிளவின் பகுதியாக உருவாக்கப்பட்டது என்பதை நினைவுபடுத்துவது முக்கியம்.

வட அமெரிக்கா முழுவதிலுமுள்ள தொழிலாளர்கள் இந்த வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள எந்தவொரு ஆளும் வர்க்க பிரிவுகள் எவற்றையும் ஆதரிப்பதன் மூலம் தங்கள் வேலைகளைப் பாதுகாக்கவோ அல்லது தங்கள் நலன்களுக்காகப் போராடவோ முடியாது. தேசியவாத வழிகளில் தொழிலாளர்களை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்துவதற்கான தொழிற்சங்கங்களின் முயற்சிகளை நிராகரித்து, அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிக்கோ தொழிலாளர்கள் வேலையில் தினசரி நடவடிக்கைகளினால் ஏற்கனவே ஒரு ஐக்கியப்பட்ட எல்லை தாண்டிய உற்பத்தி செயல்முறையில் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைத்து தொழிலாளர்களின் வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க ஒரு பொதுவான போராட்டத்தை நடத்த வேண்டும்.

அவ்வாறு செய்வதற்கு அவர்கள் எந்தவொரு முதலாளித்துவ தேசிய அரசுக்கும் விசுவாசம் இல்லாத ஒரு வர்க்கமாக தொழிலாளர்களின் புறநிலை சமூக நிலைக்கு ஒத்திருக்கும் வர்க்கப் போராட்டத்திற்கான சுயாதீனமான அமைப்புகளை (சாமானிய தொழிலாளர் குழுக்கள்) கட்டியெழுப்ப வேண்டும். வர்த்தகப் போர் மற்றும் ஏகாதிபத்திய போரின் மூல காரணமான முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் அதிகரித்து வரும் எதிர்ப்போடு இந்தப் போராட்டம் இணைக்கப்பட வேண்டும்.