தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் இருந்து வரும் பிரமாண்டமான இழுவைப் படகுகள் இலங்கையின் வடக்கு கடலுக்குள் நுழைவதால் தங்களுடைய வாழ்வாதாரம் நாசப்படுத்தப்படுவதாக வட இலங்கை மீனவர்கள் நீண்டகாலமாக முறைப்பாடு செய்து வருகின்றனர்.
இலங்கை அரசாங்கம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாமல் விட்டு வைத்திருக்கின்ற நிலையில், வட இலங்கை மீனவர்களின் நிலைமை மேலும் மேலும் மோசடைந்து வருகின்றது. இந்த சூழ்நிலையிலேயே இந்திய இழுவைப் படகுகளை இலங்கையின் வடக்கு கடல் பகுதிகளில் தொழிலில் ஈடுபட அனுமதி பத்திரம் வழங்குவது தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வட இலங்கை மீனவர்கள், கடந்த மார்ச் 23 அன்று மன்னாரில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தினர். இதில் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களுமாக பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் பங்குபற்றினர்.
போராட்டக்காரர்கள் இந்திய இழுவைப் படகுகளால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதற்கு எதிராகவும் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராகவும் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
மேலும், “இந்தியாவின் ஆக்கிரமிப்பை நிறுத்து!”, “அரசே பெற்ற கடனுக்காக தேசிய வளங்களை விற்காதே!”, “காற்றாலை வேண்டாம், எம்மை கடனாளி ஆக்காதே!”, “எமது கடல் வளத்தை விற்று வரும் வரி எமக்கு தேவையில்லை!”, “தொழிலாளர்களின் பட்டினி நிலைக்கு பதில் சொல்!”, “வடபுல மீனவர்களே விழித்துக்கொள்ளுங்கள், உங்களை எதிர்நோக்கிவரும் பிரச்சனைகளை உணர்ந்து கொள்ளுங்கள்!” போன்ற பதாகை வாசகங்கள் மீனவர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் மற்றும் சிக்கன நடவடிக்கைகளின் பாதிப்பை வெளிப்படுத்தின.
மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நகரத்தின் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. போராட்டத்தில் கடற்றொழிலாளர் சங்கங்கள், பொது மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டிருந்தனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்புவதற்காக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் போராட்டக்காரர்கள் மணு ஒன்றையும் கையளித்தனர்.
இந்திய ஆளும் வர்க்கத்துக்கு விசுவாசமாக செயற்படும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உருப்பினர் வினோநோகராதலிங்கமும் இந்த போராட்டத்தை தங்கள் சுய அரசியல் இலாபத்துக்காக சுரண்டிக்கொள்வதன் பேரில், பாசாங்குத்தனமாக பங்குபற்றியிருந்தனர்.
வடமாகாண மீனவர் சமூகம் என்ற பெயரில் தங்களை அடையளப்படுத்திக்கொண்ட போராட்ட ஏற்பாட்டாளர்கள், கடற்தொழிலாளர் சங்கங்களின் தலைமையில் உள்ளவர்களே. இந்த தலைமைகள் சந்தர்ப்பத்தைப் பொறுத்து அரசாங்க கட்சிகளுடன் அல்லது எதிர்க் கட்சிகளுடன் சார்ந்து நிற்பவர்கள் ஆவர். இந்த ஏற்பாட்டாளர்கள் விநியோகித்த துண்டுப் பிரசுரத்தில், “இந்திய மீனவர்களின் வருகையை முற்றுமுழுதாக நிறுத்த வேண்டும்” என கோரியிருந்தனர். இது இரு நாட்டு மீனவர்களையும் பகைவர்களாக இருத்தும் முயற்சியாகும். எனினும், உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய சாதாரண மீனவர்கள் இழுவைப் படகுகளின் வருகையை மட்டுமே தாம் எதிர்ப்பதாகவும், தாம் இந்திய மீனவர்களின் பகைவர்கள் அல்ல என்றும் தெரிவித்தனர். (பார்க்க: தமிழ்நாட்டு பெரும் முதலாளிகளின் இளுவைப்படகுகள் தமது வாழ்வாதாரத்தை அழிப்பது பற்றி வட இலங்கை மீனவர்கள் WSWS உடன் பேசினர்)
2010 முதல் இந்திய-இலங்கை மீனவர்கள் மட்டத்தில் மூன்று முறை கலந்துரையாடி எடுக்கப்பட்ட முடிவுகளை இரு நாட்டு அரசாங்கங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பின்னர் அரசாங்க மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட சாதகமான விடயங்களையும் அவை அமுல்படுத்தவில்லை.
இந்த இந்திய இழுவைப் படகுகள் தமிழ்நாட்டில் உள்ள பெரும் முதலாளிகளுக்கும் சில அரசியல் புள்ளிகளுக்கும் சொந்தமானவை. இந்த படகுகளில் இருந்து விரிக்கப்படும் பிரமாண்டமான வலைகள் கடலின் அடிமட்டத்துக்கே சென்று மீன்களின் இருப்புக்குத் தேவையான முருகைக் கற்பாறைகள் உட்பட இயற்கை வளங்களையும் நாசமாக்கிச் செல்வதோடு மட்டுமல்லாமல், இலங்கை மீனவர்கள் விரித்து வைத்திருக்கும் சாதாரண வலைகளையும் சேர்த்து சேதப்படுத்திவிட்டுச் செல்கின்றன. தசாப்தத்துக்கும் மேலாக இந்தப் பிரச்சினையை வட இலங்கை மீனவர்கள் எதிர்கொள்கின்றனர்.
இந்திய முதலாளிகளின் இலாபப் பேராசையின் அழுத்தத்துக்கு உள்ளாகும், இழுவைப்படகு தொழிலாளர்கள், மீன் வளம் கிடைக்கும் இடங்களில் கண்மூடித்தனமாக மீன்பிடியில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரினதும் விளைவாக ஆட்டங்கண்டு போன இலங்கை பொருளாதாரத்தை மீட்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டுள்ள கொடூரமான சிக்கன நடவடிக்கைகளின் விளைவாக, இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் வின்னைமுட்டும் விலை அதிகரிப்பு மற்றும் மீனவர்களின் கடலுணவுகளுக்கு நிலையான விலையின்மை போன்ற துன்பங்களுக்கும் மேலாகவே இந்த இந்திய இளுவைப் படகுகளின் தொந்தரவுகள் இடம்பெறுகின்றன.
வட இலங்கை மீனவர்கள் கொழும்பு அரசாங்கங்கள் மூன்று தசாப்த காலங்களாக பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுத்த இனவாத யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள். வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்கள் தசாப்த காலங்களாக போரினால் அகதிகளாக இடம்பெயர்ந்து கொண்டிருந்ததுடன் தமது உடமைகளையும் உறவினர்களையும் இழந்தவர்கள். 2009 மே மாதம் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டு போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இறுதி தாக்குதல்களில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கை கூறுகின்றது.
யுத்த காலத்தில் கடற்படையின் பாஸ் நடைமுறைகள் போன்ற கடுமையான தடைகளையும் அடக்குமுறைகளையும் வட பகுதி மீனவர்கள் எதிர்கொண்டனர். போர் முடிந்து 14 வருடங்களை நெருங்குகையிலும் இன்னமும் வடக்கு, கிழக்கை இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. சட்டவிரோதமாக மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் மீனவர்கள் கடற்படையினரால் கொடூரமாக தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் மற்றும் நீதி மன்றங்களில் தாங்கொனா தண்டப் பண விதிப்புகளுக்கும் உள்ளாகின்றனர். சில இடங்களில் இன்னமும் பாஸ் நடைமுறைகள் அமுல்படுத்தப்படுவதுடன், போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் போர்வையிலும் கடற்படை ஒடுக்குமுறைகள் இடம்பெறுகின்றன.
இதே போல் இந்திய மீனவர்களும் இலங்கை கடற்படையின் தாக்குதல்களுக்கும் படுகொலைகளுக்கும் ஆளாகின்றனர். டசின் கணக்கான மீனவர்கள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கடற்படையால் கைதுசெய்யப்பட்டு இலங்கை நீதிமன்றங்களில் நிறுத்தப்படுவது தொடர்கின்றது.
இலங்கை, இந்திய மீனவர்களின் நீண்டகாலப் பிரச்சனைகளை பேணிவரும் அரசாங்கங்கள், திட்டமிட்ட வகையில் இரு மீனவர் பகுதியினரையும் மோதலுக்குள் தள்ளிவிடுகின்றதன. இன்னொரு இந்திய ஆளும் வர்க்க விசுவாசியான இலங்கை கடற்றொழில் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மீனவர்களை தமிழ் நாட்டு மீனவர்களுக்கு எதிரான ஆத்திரமூட்டல்களை மேற்கொள்ள தூண்டி விடுவதில் பேர்போனவராவார்.
தமது பிரச்சனைகள் சம்பந்தமாக தமிழ் அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக அக்கறையற்று இருப்பதாக குற்றம் சாட்டும் மீனவர்கள், நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டீர்களோ அவர்களிடமே சென்று பிரச்சனைகளை கூறுங்கள் என தேவானந்தா சொல்வதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
கடற்றொழிலாளர் சங்கங்களும் அவற்றின் சமாசங்களும் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி.) அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற அரசியல் கட்சிகளுடன் உறவுகளைப் பேணுவதோடு, அவ்வப்போது கிடைக்கும் அரசாங்க சலுகைகளுக்கு இடைத் தரகர்களாக செயற்படுவதுடன் நின்றுவிடுகின்றன. அடிப்படை சமூக உரிமைகளுக்காகப் போராட இலாயக்கற்றுப் போயுள்ள தொழிற்சங்கங்களுக்கு சமாந்தரமாக, இந்த கடற்றொழிலாளர் சங்கங்களும் அரசாங்கத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட அழுத்தங்களைக் கொடுப்பதோடு நின்றுவிடுகின்றன.
அதனால் தொழிலாளர்களும் கிராமப்புற வெகுஜனங்களும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்காக அவர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக வேலைத் தளங்களிலும் கிராமப்புறங்களிலும் சொந்த நடவடிக்கை குழுக்களை அமைத்துக்கொள்வது அவசியமாகும். இது. சோசலிச கொள்கைகளுக்காக அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸதாபிப்பதன் மூலம், தங்கள் சமூக மற்றும் ஜனநாயக பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள இந்திய துணைக் கண்டத்திலும் உலகம் முழதும் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்பட்டு நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகுக்கும்.
சோசலிச சமத்துவக் கட்சியின் வழிகாட்டுதலின் கீழ் இவ்வாறு யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை தீவில் மீனவர் நடவடிக்கை குழுவொன்று அண்மையில் அமைக்கப்பட்டது. அந்தக் குழு, “மலிவு விலையில் மீன்பிடி உபகரணங்கள் மற்றும் வசதிகளுக்காகப் போராடு! இலங்கை மற்றும் இந்திய மீனவர்களை பிரிக்கும் தேசியவாத ஆத்திரமூட்டல்களை நிராகரி! என்ற தலைப்பின் கீழ் அறிக்கை ஒன்றை 20 மார்ச் 2023 அன்று வெளியிட்டது.
“நமது எதிரிகள், இந்தியாவில் உள்ள நமது வர்க்க சகோதரர்கள் அல்ல, மாறாக, ஏகாதிபத்தியத்திற்கு கீழ்ப்படிந்த சேவகர்களான இலங்கை மற்றும் இந்திய ஆளும் வர்க்கங்களே ஆகும். நமது வெறுப்பு அவர்களுக்கு எதிரானதாக இருக்க வேண்டும், இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எதிரானதாக அல்ல,” என அந்த அறிக்கை தெரிவித்தது.
தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் உட்பட கிராமப்புற மக்களதும் நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டிற்காக சோசலிச சமத்துவக் கட்சி விடுத்த அழைப்பை அந்த அறிக்கை ஆதரித்து இருந்தது. “அத்தகைய ஒரு மாநாடு ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கு அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்கும். அத்தகைய வேலைத்திட்டத்தில் அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் நிராகரிப்பதையும் பெரும் நிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் வங்கிகளை தேசியமயமாக்குவதும் உள்ளடக்கப்பட வேண்டும்,” என விளக்கிய அந்த அறிக்கை, அந்த போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அனைத்து மீனவர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தது.
மலிவு விலையில் மீன்பிடி உபகரணங்கள் மற்றும் வசதிகளுக்காகப் போராடு! இலங்கை மற்றும் இந்திய மீனவர்களை பிரிக்கும் தேசியவாத ஆத்திரமூட்டல்களை நிராகரி!
இலங்கை: வாழ்வாதாரம் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க மீனவர் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குங்கள்
இலங்கை கடற்படை தமிழ் மீனவர்களை கொடூரமாக தாக்குகின்றது