இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
கடந்த வாரம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியாவிற்கான மேற்கொண்ட அரசுமுறைப் பயணம், ஏகாதிபத்திய பாசாங்குத்தனம் பற்றிய ஒரு சித்திரத்தை வழங்கியது. அமெரிக்க நிர்வாகங்களுடன் இணைந்து சீனாவை 'எதேச்சதிகாரம்' என்று அடிக்கடி கண்டிக்கின்ற ஆஸ்திரேலிய தொழிற்கட்சி அரசாங்கம், தீவிர வலதுசாரி இந்து வகுப்புவாதத்தை அடிப்படையாகக் கொண்ட மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது மேலும் மேலும் சர்வாதிகாரத் தாக்குதல்களை நடத்தும் அந்த இந்தியத் தலைவரை தூக்கிக் கொண்டாடியது.
கடந்த புதன்கிழமை சிட்னியில் நடைபெறும் நாற்கர மூலோபாய உரையாடல் (குவாட்) கூட்டத்தில் மோடி பங்கேற்று இருந்தார். அமெரிக்க கடன் உச்சவரம்பு பேச்சுவார்த்தைகள் காரணமாக ஜனாதிபதி ஜோ பிடன் கலந்து கொள்ள முடியாது என்று அறிவித்ததை அடுத்து அந்த கூட்டம் இரத்து செய்யப்பட்டது.
ஆயினும்கூட, மோடி தனது பயணத்தைத் தொடர்ந்ததோடு தொழிற்கட்சி அரசாங்கம் அவருக்காக தாராளமாக, செலவிட்டது. இந்த விஜயம், இந்தோ-பசிபிக்கில் உள்ள நான்கு பெரிய இராணுவ சக்திகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகியவற்றின் நடைமுறைக் கூட்டணியான குவாட்டின் உறுப்பினர்களுக்கு இடையே தொடர்ச்சியான இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்த உதவியது.
இந்த அமெரிக்க தலைமையிலான போர் உந்துதலுக்கான அதன் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, தொழிற்கட்சி அரசாங்கம் மற்ற குவாட் உறுப்பினர்களுடன் இராணுவ மற்றும் அரசியல் உறவுகளை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டின் பிற்பகுதியில், இது ஜப்பானுடன், ஆஸ்திரேலியா இதுவரை இல்லாத பாதுகாப்பு ஒப்பந்தத்தை எட்டியது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கிடையே 'இணைந்து செயல்படுதல்' என்ற குறிக்கோளுடன், இராணுவ ஒத்துழைப்பில் கணிசமான அதிகரிப்பாகும்.
தொழிற் கட்சி பிரதம மந்திரி அந்தோனி அல்பனீஸ், கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் இருந்தபோது, இந்தியா இப்போது ஆஸ்திரேலியாவின் 'உயர்மட்ட மூலோபாய பங்காளி' என்று அறிவித்தார். ஆரம்பத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா மட்டும் பங்குபற்றிய மலபார் கடற்படை பயிற்சிகள் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என்றும் அதில் ஜப்பானும் பங்கேற்கும் என்றும் மோடியும் அல்பனிசும் அறிவித்தனர்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் செல்வாக்கிற்கு ஒரு பிரதான அச்சுறுத்தலாகக் கருதுகின்ற சீனாவுக்கு எதிரான எதிர்த் தாக்குதலுக்கு தீர்க்கமான இடமாக இந்தியா கருதப்படுகிறது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனாவை பின்னுக்கு தள்ளி, இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா 3,500 கிலோமீட்டர் தூரமான எல்லைக் கோட்டில் வரலாற்றுப் பிரச்சினையைக் கொண்டுள்ளதுடன் இந்தப் பிரச்சினைகள் போரின் சாத்தியமான வெடிபுள்ளியாக எரியூட்டப்பட்டு வருகின்றது.
ஆஸ்திரேலிய முதலாளித்துவ வர்க்கம், வளர்ந்து வரும் வர்த்தகப் போருக்கு மத்தியில், அதன் பிரமாண்டமான சந்தையான சீனாவுக்கான ஏற்றுமதியில் இழப்பு ஏற்படும் எனில், அதற்கு ஈடுசெய்யக்கூடிய சாத்தியம் கொண்டதாக கணிசமான இந்தியப் பொருளாதாரத்தை பார்க்கப்படுகின்றது. இந்தியத் தொழிலாளர்கள் மீதான உக்கிரமான சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட தொழில்துறைக் கட்டமைப்பை மோடி மேற்பார்வையிடுகிறார்.
அதே நேரத்தில், ரஷ்யாவுடன் நாடு கணிசமான பொருளாதார உறவுகளைக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், இந்தியாவுடனான உறவுகளை இறுக்குவது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்தியா உக்ரைன் போர் குறித்து நேரடியாக கருத்து தெரிவிப்பதை பெரும்பாலும் தவிர்த்து வருகிறது. ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமிப் போர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மூலோபாயத்தின் ஒரு முனையாகும், மற்றொன்று சீனாவுடனான மோதலாகும்.
அல்பனீஸ் மற்றும் அவரது தொழிற்கட்சி அரசாங்கமும் இந்தியாவை வாஷிங்டனின் திட்டங்களுடன் நேரடியாக இணைப்பதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். மோடியின் பயணத்தின் பொதுவான சூழலும் நோக்கமும் அதுதான்.
ஒருவேளை, மோடியும் அவரது ஆஸ்திரேலிய உபசரிப்பாளர்களும், இந்தியத் தலைவரின் எதேச்சதிகாரத் தன்மையை மறைக்க முயலவில்லை என்பது பயணத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கலாம். மாறாக, அவர்கள் மோடி ஆட்சியை பண்புமயப்படுத்தும் எதேச்சதிகார ஆளுமையை ஆஸ்திரேலியாவிற்குள் மறு அறிமுகம் செய்ய முயன்றனர்.
கடந்த வாரம் சிட்னியில் நடந்த ஒரு அரங்க நிகழ்வே மோடி விஜயத்தின் மையமாக இருந்தது. “இந்த மேடையில் நான் கடைசியாக ஒருவரைப் பார்த்தேன், அவர்தான், புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் (பாடகர்). ஆனால் பிரதமர் மோடிக்குக் கிடைத்த வரவேற்பு அவருக்குக் கிடைக்கவில்லை. பிரதமர் மோடிதான் பொஸ்” என அறிவித்து, அல்பனிஸ் மோடிக்கு முகஸ்துதி செய்தார். இருவரும் அன்புடன் தழுவிக் கொண்டனர்.
இந்த நிகழ்வானது, மோடி மற்றும் அவரது தீவிர வலதுசாரி பாரதிய ஜனதா கட்சிக்கு (பா.ஜ.க.) ஒரு அரசியல் பிரச்சார கூட்டமாக இருந்தது. ஆஸ்திரேலியாவில் ஏறக்குறைய 800,000 இந்திய வம்சாவளியினர் வாழ்ந்து வருகின்றபோதிலும், நிகழ்ச்சியில் 20,000 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அவர்கள் பாசிச துணை இராணுவ அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடனும் (ஆர்.எஸ்.எஸ்.) மோடியுடனும் இணைந்த பிஜேபியின் ஆதரவாளர்களாக இருந்தனர்.
ஆர்.எஸ்.எஸ்., வரலாறு முழுதும் நாஜி ஆட்சியின் இனவெறியை புகழ் பாடுகின்றது. இந்து வகுப்புவாத வன்முறையை மட்டுப்படுத்தப்பட்டளவு விமர்சித்தற்காக, இந்திய தேசியவாத தலைவரான மகாத்மா காந்தி அதன் பற்றாளரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
சிட்னி நிகழ்வு, மார்ச் மாதம் அல்பனீஸின் இந்திய விஜயத்தை பிரதிபலித்தது. இந்து தேர்போல் அலங்கரிக்கப்பட்ட திறந்த காரில் கிரிக்கெட் மைதானத்தைச் சுற்றிச் சென்று, அவர் மோடியுடன் தன்னை நெருக்கமாக அடையாளப்படுத்திக் கொண்டார்.
இத்தகைய நிகழ்வுகளில், அவுஸ்திரேலியாவும் அமெரிக்காவும் 'மதிப்புகளை பகிர்ந்து ' கொள்கின்ற ஒரு நாடான இந்தியா எப்போதும் 'உலகின் மிகப்பெரிய ஜனநாயகம்' என்று விவரிக்கப்படுகிறது. இந்த 'மதிப்புகள்' சீனாவின் “எதேச்சதிகாரத்துக்கு” எதிரிடையாக நிறுத்தப்படுகின்றன. ஆனால் மோடியின் சாதனை என்ன?
[Bullet list]
- மோடி, குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோது, 2012ல் இந்து மதக் கலவரங்களை ஊக்குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த கலவரத்தின் விளைவாக குறைந்தது 790 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர்.
- இந்த ஆண்டு பெப்ரவரியில், குஜராத் படுகொலையில் அவரது பாத்திரத்தை கோடிட்டுக் காட்டும் ஆவணப்படம் தொடர்பாக, பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இந்திய அலுவலகத்தில் சோதனை நடத்த மோடி உத்தரவிட்டார்.
- 2019 இல், பிரதமர் என்ற வகையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் மாகாணங்களின் அரை சுயாட்சி அந்தஸ்தை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்து விளைவுமிகுந்த அரசியலமைப்புச் சதியை மேற்கொண்டார். ஒரு பெரிய பொலிஸ் பாதுகாப்பு, எதிரிகளை சுற்றி வளைத்தல் மற்றும் ஒரு கட்டத்தில் மின்னணு தகவல் தொடர்புகளை முற்றிலுமாக முடக்கியது போன்ற நடவடிக்கைகளுடன் காஷ்மீரில் ஒரு பயங்கரமான ஆட்சியை மோடி கட்டவிழ்த்துவிட்டுள்ளார்.
- தொழிற்சாலை சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தமைக்காக, சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஆயுட்காலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 13 மாருதி சுசுகி தொழிலாளர்கள் போன்ற தொழிலாளர் தலைவர்கள் மீதான தாக்குதல்களுக்கு மோடி தலைமை தாங்குகிறார்.
இந்த பட்டியல் மேலும் தொடரலாம். 2021இல், ஸ்வீடனை தளமாகக் கொண்ட V-Dem நிறுவனம், மோடியின் கீழ் இந்தியா மீதான அதன் மதிப்பீட்டை ஜனநாயகத்தில் இருந்து 'தேர்தல் எதேச்சதிகாரம்' என்று தரமிறக்கியது. 'கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் சிவில் சமூக சுதந்திரமும்” எந்தவொரு இந்திய நிர்வாகத்திலும் கண்டிராதளவு இல்லாமல் போயுள்ளன' என்று அந்த அறிக்கை கூறியது.
ஆஸ்திரேலியா உட்பட, அமெரிக்கா மற்றும் அதன் பங்காளிகளும் இவற்றை கண்டும் காணாதது போல் இருக்கின்றன. சீனாவின் ஜின்ஜாங் மாகாணத்தில் உய்கர் முஸ்லிம்களின் அவலநிலையை உயர்த்திக் காட்டுவதை அவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தாலும், காஷ்மீரில் முஸ்லிம்கள் மீதான பரந்தளவில் ஆவணப்படுத்தப்பட்ட துன்புறுத்தலை அலட்சியம் செய்கின்றனர்.
'ஜனநாயக ரீதியாக ஒரு பல்பரிமானப் பார்வை கொண்ட இந்தியாவின் உள் அரசியல் பற்றி நான் ஒரு கருத்தையும் தெரிவிக்கப் போவதில்லை' என்று அல்பனீஸ், கூறினார்
சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையில் எழுதும் மேத்திவ் நோட், ஆஸ்திரேலிய ஊடகங்களில் சீனாவுக்கு எதிரான குரல்களில் மிகவும் ஆக்கிரோஷமானவர் ஆவார். மார்ச் மாதம், அமெரிக்க அணு ஆயுதங்களை நிலைநிறுத்துதல் மற்றும் கட்டாய ஆட்சேர்ப்பு உட்பட, ஆஸ்திரேலியா, மூன்று ஆண்டுகளுக்குள் சீனாவுடன் போருக்குத் தயாராக வேண்டும் என்று அழைப்பு விடுத்து எழுதப்பட்ட 'ரெட் அலர்ட்' (சிவப்பு எச்சரிக்கை) என்ற தொடரின் இணை ஆசிரியராக இருந்தார். அவர் இந்த இராணுவவாத வேலைத்திட்டத்தை 'ஜனநாயகத்தின்' பாதுகாப்பாக எப்போதும் முன்வைக்கிறார்.
சீனாவில் ஜனநாயக உரிமைகள் குறித்து வெளித்தோற்றத்தில் அக்கறை காட்டும் அதே வேளை, இந்தியாவில் சிவில் உரிமைகள் குறித்து நோட் கவலைப்படவில்லை. வஞ்சத்தனத்தை வெளிப்படுத்திய ஒரு கருத்தில் நோட் எழுதியதாவது: 'வெளியுறவுக் கொள்கைக்கு வேலைத்திட்டம் மற்றும் நடைமுறைவாத நுட்பம் கொண்ட சமநிலை தேவை என்றாலும், அல்பனிஸின் முதன்மை வேலை ஆஸ்திரேலியாவின் தேசிய நலன்களை முன்னேற்றுவதே தவிர, அவரது சக உலகத் தலைவர்களின் தோல்விகளில் “கவனம் செலுத்துவது” அல்ல.'
நோட் தொடர்ந்தார்: 'உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு, சீனாவின் விரைவான எழுச்சிக்கு ஒரு முக்கியமான எதிர் எடையாக செயல்படும் வளர்ந்து வரும் பொருளாதார சக்தி மையமாக இருப்பதால், ஆஸ்திரேலியாவின் நலனுக்காக அல்பனீஸ் மோடியுடன் நல்ல உறவை வைத்திருக்க வேண்டும்.'
இந்த பயணத்தின் போது, அல்பனீஸ் மோடியுடன் வர்த்தகம் மற்றும் இடம்பெயர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரித்தார். ஆனால், இந்த பயணத்தின் மிக முக்கியமான அம்சம் இரு தலைவர்களுக்கும் இடையே இருந்த நெருக்கமான இணக்கம் ஆகும். இதை சீனாவிற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போருக்கான முன்னேறிய தயாரிப்புகளின் பின்னணியில் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
மோடியுடன் அல்பனீஸ் இணைந்திருப்பது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும். ஆஸ்திரேலிய ஆளும் உயரடுக்கு அதன் பூகோள மூலோபாய நலன்களை மேம்படுத்த இந்தியாவில் எதேச்சதிகாரத்துடன் மகிழ்ச்சியாக கூட்டுச் சேருமெனில், வாழ்க்கை நிலைமைகள் தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையிலும் பேரழிவுகரமான போர் உருவாகி வரும் நிலையிலும், தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்க உள்நாட்டில் சர்வாதிகார ஆட்சியை ஆதரிக்கும்.
ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் சீனாவுக்கு எதிராக இராணுவ உறவுகளை ஆழப்படுத்துகின்றன
சீனாவுக்கு எதிரான குவாட் கூட்டத்திற்கான ஆஸ்திரேலியா பயணத்தை பைடென் இரத்து செய்தார்