சீனாவுக்கு எதிரான குவாட் கூட்டத்திற்கான ஆஸ்திரேலியா பயணத்தை பைடென் இரத்து செய்தார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஆஸ்திரேலிய தொழிற்கட்சி அரசாங்கம் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் அமெரிக்கா தலைமையிலான சீன எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு ஒரு அடியாக, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆஸ்திரேலியாவுக்கான பயனத்தை இரத்து செய்ததாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

24 மே 2022 செவ்வாய்க் கிழமை, டோக்கியோவில் நடந்த குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில், இடது பக்கத்தில் இருந்து ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனிஸ், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா [AP Photo/Evan Vucci]

ஏறத்தாழ பெய்ஜிங்கிற்கு எதிராக இயங்கும் ஒரு கூட்டணியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியாவை ஒன்றிணைக்கும் நாற்தரப்பு மூலோபாய கலந்துரையாடல் (குவாட்) அடுத்த வாரம் சிட்னியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பைடெனும் பங்கேற்க இருந்தார். அவர் இன்னமும் வார இறுதியில் ஜீ7 உச்சி மாநாட்டிற்காக ஜப்பானுக்கு பயணித்துக் கொண்டிருக்கின்றார். குவாட்டின் ஒரு துண்டிக்கப்பட்ட பக்கவாட்டு கூட்டம் அங்கு நடைபெறும்.

கடன் உச்சவரம்புடன் தொடர்புடைய நெருக்கடியின் போது பைடென் அமெரிக்காவில் இருக்க வேண்டும் என்பதே இரத்து செய்யப்பட்டதற்கான காரணம் என கூறப்படுகிறது. அதன் சொந்த வழியில், அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்று வீழ்ச்சியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான ஒரு பினாமி போரை நடத்திக்கொண்டு, அதன் பிரதான பொருளாதார அச்சுறுத்தலாகக் கருதப்படும் சீனாவுடனும் ஒரு மோதலுக்குத் தயாராகி வரும் நிலையில், அமெரிக்க முதலாளித்துவமானது தொடர்ச்சியான உள்நாட்டு அரசியல் மற்றும் பொருளாதாரக் கொந்தளிப்பால் துவண்டு போயுள்ளதுடன் இது முன்னெப்போதும் இல்லாத பெரும் ஸ்திரமின்மையை ஏற்படுத்தவும் அச்சுறுத்துகிறது.

எவ்வாறாயினும், WSWS விளக்கியது போல், கடன் உச்சவரம்பு நெருக்கடி பெரும்பாலும் உருவாக்கப்பட்ட குணாம்சத்தைக் கொண்டுள்ளது. உச்சவரம்பு பிரச்சினை பல தசாப்தங்களாக ஒவ்வொரு சில வருடங்களுக்கும் தலைதூக்குகின்றது. ஒரு தீர்வு எப்போதும் கண்டுபிடிக்கப்படுகிறது. கூட்டுத்தாபனங்களின் நலன்களுக்காக, சமூகத் திட்டங்கள் மீதும் அமெரிக்கத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் மீதும் பெரும் தாக்குதலுக்கு அடித்தளம் அமைக்க இந்த கடன் உச்சவரம்பு பயன்படுத்தப்படுகிறது.

கடன் உச்சவரம்பு பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் அவர் தனது வெள்ளை மாளிகை மேசையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கவில்லை என்பதையே பைடனின் ஜப்பான் பயணம் காட்டுகிறது.

இந்த இரத்து ஒரு நுட்பமான, சிறந்த நடாகபாணியில் வெளிப்படுத்தப்படவில்லை, மாறாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸின் நிலைப்பாட்டைக் குலைக்கும் ஒரு கொடூரமான முறையில் வெளிப்படுத்தப்பட்டது.

பல வாரங்களாக, அல்பானீசும் பிற சிரேஷ்ட தொழிற் கட்சி அமைச்சர்களும் குவாட் கூட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி கூறி வந்தனர். இது இந்தோ-பசிபிக் பகுதியில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் ஆஸ்திரேலியாவின் அதிளவிலான மையப் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும், பைடன் நிர்வாகத்துடன் தொழிற்கட்சி அரசாங்கத்தின் நெருங்கிய உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் இருந்தது.

கடந்த செவ்வாய் இரவு 10:30 மணியளவில், அல்பானீஸ், கணிசமான ஆரவாரத்துடன், பைடன் தனது விஜயத்தின் போது ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவார் என்று அறிவித்திருந்தார். ஆனால் மறுநாள் காலை முழு பயணமும் நிறுத்தப்பட்டது.

பைடனின் பயணம் இரத்து செய்யப்ட்டது பற்றி அல்பனீஸ் தெரிந்துகொள்வதற்கு முன்பே நியூ யார்க் டைம்ஸ் போன்ற பிரதான அமெரிக்க வெளியீடுகள் அறிந்துகொண்டிருக்கலாம். அல்பனீஸுக்கு ஒரு அமெரிக்க அதிகாரியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அவர் புதன்கிழமை காலை 5 மணிக்கு முன்னதாக விஜயம் இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் கூறியுள்ளன. தூக்கத்தில் இருந்து எழுப்பி விட்ட அந்த தகவல் அழைப்பு, அல்பானிஸ் அல்லது அவரது குழுவினரால் பத்திரிகைகளுக்கு கசிந்திருக்க வாய்ப்பில்லை.

பைடனின் இரத்துக்கு பல காரணங்கள் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது நடத்தப்பட்ட விதம் தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு ஒரு தெளிவான அவமதிப்பை வெளிப்படுத்துகிறது.

இந்த நாடகத்தில் உள்ள சில காரணிகளை ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் சில சமிக்ஞை செய்துள்ளன. அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய இராணுவ-உளவுத்துறை எந்திரத்துடன் ஆழமாக இணைப்புகளைக் கொண்டுள்ள ஸ்தாபன ஊடகங்கள், அளவு கடந்து கவலை கொண்டுள்ளன. 

ஆஸ்திரேலியன் மூலோபாயக் கொள்கை நிறுவனத்தின் (ASPI) மூத்த உறுப்பினரும் அதன் முன்னாள் நிர்வாக இயக்குநருமான பீட்டர் ஜென்னிங்ஸ் விடயங்களை வெளிப்படுத்தி எழுதிய கட்டுரையை தீ அஸ்றேலியன் வெளியிட்டது. ASPI நிறுவனத்துக்கு அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்களுடன் சேர்ந்து பிரதான ஆயுத உற்பத்தியாளர்களும் நிதியளிக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தீவிர ஊதுகுழலாக இது செயல்படுகிறது.

பைடனின் பயண ரத்துக்கு அடிப்படையான பல்வேறு காரணிகளை ஜென்னிங்ஸ் குறிப்பிட்டார். இதில் அமெரிக்காவில் நிலவும் அரசியல் நெருக்கடியும், அத்தகைய நேரத்தில் உள்நாட்டு பொதுக் கருத்தை சமாளிக்க வேண்டிய அவசியம் மற்றும் ஜனாதிபதியின் வயது மூப்பும் இதில் அடங்கும்.

'சிட்னி பயணத்தை இரத்து செய்வதில் பெரும் பரிதாபம் என்னவென்றால், ஆஸ்திரேலிய-அமெரிக்க உறவுகள் சிறந்த நிலையில் இருக்க முடியாததாகும்' என்றும் அவர் எழுதினார்.

ஜென்னிங்ஸ் குறிப்பிட்டது போல், ஒரு வருடமாகத்தான் பதவியில் இருந்து வருகின்ற தொழிற்கட்சி அரசாங்கம், சீனாவிற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போருக்கான தயாரிப்புகளில் ஆஸ்திரேலியாவின் முன்னணி பங்கை வியத்தகு முறையில் துரிதப்படுத்தியுள்ளது. அல்பானீஸ் மற்றும் பிற தொழிற்கட்சி அமைச்சர்கள் 'செயல்பாட்டு இராஜதந்திரம்' என்று அவர்கள் விவரிக்கும் செயல்களில் ஈடுபட்டு, அப்பிராந்தியம் முழுவதும் அமெரிக்க நோக்கத்தை ஆக்ரோஷமாக முன்நகர்த்தி, சீனாவுடனான வாஷிங்டனின் மோதலுக்குப் பின்னால் ஏனைய நாடுகள் அணிசேர வேண்டும் என்று கோருகின்றனர்.

மார்ச் மாதம், சான் டியாகோவில் பைடென் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் உடன் அல்பனீசும் நின்றார். அப்போது அவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க 368 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை அறிவித்தனர். 'சமுத்திரத்தின் உயர்மட்ட வேட்டைக்காரன்' என்று அழைக்கப்படும் இத்தகைய நீர்மூழ்கிக் கப்பல்கள், இந்தோ-பசிபிக் முழுவதும் சீனாவுக்கு எதிராக தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இது ஒரு பரந்த இராணுவக் கட்டமைப்பின் மையப்பகுதி மட்டுமே. கடந்த மாதம் வெளியிடப்பட்ட தொழிற்கட்சியின் பாதுகப்பு மூலோபாய மீளாய்வில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, இராணுவமானது ஒரு ஆயுத மோதலுக்கான தயாரிப்பில், ஆஸ்திரேலியக் கண்டத்தின் உத்தியோகபூர்வ பாதுகாப்பு நடவடிக்கையில் இருந்து, பிராந்தியம் முழுவதும் 'தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டத்திற்கு' மாறும்.

இது அமெரிக்க போர் உந்துதலுக்கு முற்றிலும் ஒத்துப்போகிறது. ஆனால் ஜென்னிங்ஸ் போன்ற நபர்கள், அமெரிக்க உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் சிலர், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் சீனாவுடன் மோதலை எதிர்பார்க்கும் நிலைமைகளின் கீழ், ஆஸ்திரேலிய இராணுவ மேம்படுத்தல்கள் போதுமான அளவு வேகமாக நடக்கவில்லை என்று தொடர்ந்து கவலைகளை எழுப்பியுள்ளனர்.

அந்த ஏமாற்றங்கள் பைடனின் பயண இரத்துக்கு ஒரு காரணியாக இருக்கலாம் என்று ஜென்னிங்ஸ் வலியுறுத்தினார். 'பல தசாப்தங்களின் பின்னர் மிகப்பெரிய பாதுகாப்பு திகைப்பூட்டலை மேற்கொள்ள வாக்குறுதியளித்ததை அடுத்து, அரசாங்கத்தின் பொது பாதுகாப்பு மூலோபாய மதிப்பாய்வின் கேலிக்கூத்தான வடிவத்தில், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு புதிய நிதியளிப்பு இல்லாததோடு கடற்படை பிரிவு பற்றிய மற்றொரு மதிப்பாய்வு மட்டுமே, மற்றும் இராணுவத்தின் நவீனப்படுத்தலுக்குப் பதிலாக பணத்தை சேமிப்பதை இலக்காகக் கொண்ட ஒரு அரைகுறை மருவடிவமைப்பு மட்டுமே.'

'வாஷிங்டனில் உள்ள ஆஸ்திரேலியாவின் நெருங்கிய ஆதரவாளர்கள் இந்த நிலைமைகளால் குழம்பிப் போய் இருப்பார்கள்' என்று ஜென்னிங்ஸ் மேலும் கூறினார். 

மிக குறிப்பிடத்தக்கவாறு அவர் எழுதியதாவது: “AUKUS ஒத்துழைப்பு குறிப்பிடும் கோரிக்கைகளுக்கு ஆஸ்திரேலியா உண்மையில் பொருந்துகிறதா என்பதை வாஷிங்டன் தொடர்ந்து மதிப்பிடுகிறது. நிதியுதவியுடன் எங்கள் பாதுகாப்புச் சவடால்களை ஆதரிக்கத் தவறுகின்றமை குறித்துக்கொள்ளப்படும். மற்ற முன்னுரிமைகள் நெருக்கும் போது, அந்த வகையான தன்நிறைவு நடவடிக்கைகள் ஜனாதிபதியின் வருகைகளைப் பெறாது.”

பொதுவாக குறைவான வெளிப்படையான சொற்களில் இருந்தாலும், மற்ற வர்ணனையாளர்களாலும் இதே போன்ற உள்நோக்கங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க போர் உந்துதலுடன் முழுமையாக இணைந்துள்ள பலம்வாய்ந்த சக்திகளால் தொழிற்கட்சி அரசாங்கம் தாக்கப்படுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

ஆனால் அதே நேரத்தில், ஆளும் உயரடுக்கின் சிறுபான்மை பிரிவு AUKUS மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இந்த அடுக்கு போருக்கு எதிரானது அல்ல. மாறாக, நாட்டின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியுடனான ஒட்டு மொத்த போரின் விளைவுகளைப் பற்றி அது அஞ்சுகிறது. அதன் பிரதிநிதிகளில் முன்னாள் தொழிற்கட்சி பிரதமர் பால் கீட்டிங் மற்றும் முன்னணி தொழிற்கட்சி பிரமுகர் பாப் கார், முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சர் மற்றும் 10 ஆண்டுகளாக நியூ சவுத் வேல்ஸ் மாநில முதல்வராக இருந்த சில முக்கிய தேசிய அரசியல்வாதிகள் அடங்குவர்.

குறிப்பாக, கீட்டிங்கின் தலையீடுகள், வாஷிங்டனில் நெருக்கமாகப் கவனிக்கப்பட்டதாக முந்தைய செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன. அல்பனீஸ் அரசாங்கம் கீட்டிங்கின் அறிக்கைகளை 'காலாவதியானது' என்று நிராகரித்துள்ள போதிலும், அவரை மௌனமாக்கவோ அல்லது அவரது வாதங்களை உறுதியாக மறுக்கவோ முடியவில்லை.

சாதாரண மக்களின் உண்மையான மற்றும் பரவலான போர் எதிர்ப்பு உணர்வே அவர்களுக்கு மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. AUKUS நீர்மூழ்கிக் கப்பல் அறிவிப்பு மற்றும் அதன் பாரிய விலைக் குறி, கணிசமான அதிர்ச்சியையும் கோபத்தையும் தூண்டியுள்ளது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, போருக்கான தயாரிப்புகள் பெரும்பாலும் மக்களின் முதுகுக்குப் பின்னால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

இந்த உணர்வுகளை நசுக்க முயற்சித்து, தொழிற்கட்சி அரசாங்கம் அதன் மே மாத வரவு செலவுத் திட்டத்தை வாழ்க்கைச் செலவு நிவாரண நடவடிக்கையாக மோசடித்தனமாக தொகுத்தது. அடுத்த ஆண்டு பாதுகாப்புச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட 50 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகை, அந்த நடவடிக்கைகளுக்கு குறுக்கே நிற்கின்றது. ஆனால், அரசாங்கம் விளைபயனுடன் தகரக் குவளையை வீதியில் கீழ் நோக்கி உதைத்துள்ளதுடன் AUKUS தொடர்பான பெரும்பாலான நிதி எதிர்காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்ட விக்கிலீக்ஸ் வெளியீட்டாளரும் ஆஸ்திரேலிய குடிமகனுமான ஜூலியன் அசான்ஜின் அவல நிலையும் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது, அசான்ஜின் வழக்கை 'முடிவிற்கு கொண்டு வர' வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது என்பதைக் குறிக்கும் வகையிலான மிகவும் நிபந்தனைக்குட்பட்ட அறிக்கைகளை வெளியிட அல்பனீஸை நிர்ப்பந்தித்தது. அமெரிக்க போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் முயற்சியையும் வழக்குத் தொடுப்பதையும் பைடென் மேற்பார்வையிடுகிறார்.

நாட்டின் புவியியல் தனிமையையும் அமெரிக்க கூட்டணியின் மையத்தன்மையையும் கருத்தில் கொள்ளும் போது, அமெரிக்க ஜனாதிபதிகளின் வருகைகள் ஆஸ்திரேலிய அரசியல் வாழ்க்கையில் எப்போதும் முக்கிய நிகழ்வுகளாகும்.

இரத்து செய்யப்பட்ட வருகைகளும் ஒரு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. 2010 இல், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆஸ்திரேலியாவுக்கு திட்டமிடப்பட்ட சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்தார், பின்னர் அதை முழுதும் இரத்து செய்தார்.

முதல் ஒத்திவைப்பு மார்ச் மாதத்திலும் மற்றொன்று ஜூன் மாதத்திலும் நடந்தது. அந்த மாத இறுதியில், பிரதமர் கெவின் ரட், ஒரு பின் அறை சதித்திட்டத்தின் மூலம் வெளியேற்றப்பட்டார். இது மக்கள் மற்றும் தொழிற்கட்சித் தலைமையின் பிரிவுகளின் முதுகுக்குப் பின்னால், ஒரே இரவில் நடந்தது. இந்த வெளியேற்றம் தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க கருவிகளால் மேற்கொள்ளப்பட்டது. இவை அமெரிக்க தூதரகத்திற்கு இரகசிய தகவல் கொடுப்பவை என பின்னர் அம்பலத்துக்கு வந்தது.

அவர்களின் நிலையை வெளிப்படுத்திய விக்கிலீக்ஸ் தகவல்கள், இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவுடன் ஒரு சமாதான கொடுக்கல் வாங்கலை முன்னெடுக்க வாஷிங்டன் முயற்சி செய்ய வேண்டும் என்ற ரட்டின் அழைப்புக்கு அமெரிக்கா கடுமையாக விரோதம் கொண்டிருந்ததையும் காட்டியது. இளஞ்சூடான இந்த வழிமுறை எந்த வகையிலும் போருக்கு எதிரானது அல்ல, ஆனால் பெய்ஜிங்குடன் ஒரு முழுமையான மோதலுக்கான அமெரிக்க தயாரிப்புகளுக்கு குறுக்கே நின்றது. ரட், குவாட் பற்றி ஆதங்கமும் தெரிவித்திருந்தார்.

2011 இல், ஜூலியா கில்லார்ட் பிரதம மந்திரியாக பதவியேற்றதைத் தொடர்ந்து, ஒபாமா ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் மாடியில் இருந்து, முன்னெப்போதும் இல்லாத வகையில், ஆசியாவிற்கான அமெரிக்க முன்னோக்கினை அறிவித்தார். கில்லார்ட் கையெழுத்திட்டு, டார்வினில் ஒரு அமெரிக்க கடல் தளத்தை நிறுவுவதாக அறிவித்தார்.

ரட்டுக்கு எதிராக அமெரிக்கா தூண்டிவிட்ட சதி வெளிப்படையாக கலந்துரையாடப்படவில்லை எனினும், ரட்டின் அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சராக இருந்த அல்பனீஸ் உட்பட அதிகாரத்தின் தாழ்வாரங்களின் கீழ் நடப்பவர்களின் மனதில் அது ஓடிக்கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ரட்டின் அரசாங்கம் முயற்சித்ததைப் போல, அல்பனீஸ் தனது அரசாங்கம் தள்ளாடாது என்பதை நிரூபிக்க தன்னால் இயன்ற அனைத்தையும் செய்துள்ளார். ஆனால், போருக்கான தீவிர உந்துதல்களுக்கு மத்தியில், ஜென்னிங்ஸ் குறிப்பிட்டது போல், அவரது அரசாங்கமும் அதன் செயல்பாடுகளும் தொடர்ந்து வாஷிங்டனில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.