இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த திங்கட்கிழமை, மேற்கு துறைமுக கனேடிய துறைமுகத் தொழிலாளர்கள் 7,000 பேர் பிரிட்டிஷ் கொலம்பியா துறைமுகப் பணி நிறுவனங்களுக்கு எதிரான வேலைநிறுத்த நடவடிக்கையை அங்கீகரித்து 99 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பதிவு செய்தனர். அமெரிக்க மேற்கு கடற்கரை துறைமுகங்களில் 22,000 துறைமுகத் தொழிலாளர்கள் ஓராண்டுக்கும் மேலாக ஒப்பந்தம் இல்லாமலேயே வேலை செய்து வரும் நிலையில், அங்கே பரவியுள்ள சாமானியத் தொழிலாளர்களின் வேகக்குறைப்பு போராட்டங்களுக்கு மத்தியில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
பணவீக்கத்தை விட மிகக் குறைவாக ஒரு மணி நேரத்திற்கு வெறும் 1.56 டாலர் அற்ப கூலி உயர்வு குறித்த பசிபிக் கடற்போக்குவரத்து அமைப்பின் (Pacific Maritime Association’s – PMA) முன்மொழிவைத் தொழிலாளர்கள் எதிர்த்து போராடிய போது, சென்ற வார இறுதியில், பசிபிக் ரிம்மின் பரபரப்பான துறைமுகங்களில் ஒன்றான வாஷிங்டனின் சியாட்டில் துறைமுகம் முடக்கப்பட்டது. துறைமுகத்தில் நங்கூரமிடக் காத்திருந்த சரக்குப் போக்குவரத்துக் கப்பல்கள் கிலோமீட்டர் கணக்கிலான தூரத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், லாங் பீச் மற்றும் ஆக்லாந்து உட்பட உலகின் மிகப்பெரிய துறைமுகங்கள் சிலவற்றிலும் வேகக்குறைப்பு (Slowdowns) நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தில் மேற்குக் கடற்கரை துறைமுகத் தொழிலாளர்கள் (West Coast dockworkers) கொண்டுள்ள பலமான இடத்தை மிகைப்படுத்திக் கூறுவது கடினம். அண்மித்து அரை நூற்றாண்டு காலமாக, அதுவும் குறிப்பாக ஓஷியானிக்-கடந்த கன்டெய்னர் கப்பல் போக்குவரத்து வளர்ச்சிக்குப் பின்னர் இருந்து, ஒரு கணிசமானளவு உலக வர்த்தகம், இந்தத் தொழிலாளர்கள் செயல்படுத்தும் இந்தத் துறைமுகங்கள் வழியாகச் சென்றுள்ளன.
ஜூன் 9 நிலவரப்படி, 5.2 பில்லியன் டாலர் மதிப்பிலான சரக்கு, கலிபோர்னியா, ஓரேகான் மற்றும் வாஷிங்டன் கடற்கரையில் முடங்கி இருந்தன, அதுவும் வேலைகள் நிறுத்தப்படாமல் மெதுவாக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே நிலைமை இவ்வாறு உள்ளது. வெறும் ஒரேயொரு கன்டெய்னர் கப்பல் Ever Given மார்ச் 2021 இல் சூயஸ் கால்வாயில் முடக்கப்பட்ட போது ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார பாதிப்புகளை ஒருவர் நினைத்துப் பார்க்கலாம்.
உணவில் இருந்து கணினிகள் வரையில், தொழில்துறை உற்பத்திப் பொருட்கள் வரை, அமெரிக்காவின் மொத்த இறக்குமதிகளில் அண்மித்து 40 சதவீதம், லோஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகங்கள் மற்றும் லாங் பீச் துறைமுகம் வழியாக மட்டுமே செல்கின்றன. கடல் போக்குவரத்து பொருளாதார நிபுணர் ஜோன் மார்ட்டீனின் 2022 பகுப்பாய்வின்படி, பொருளாதார நடவடிக்கையில் ஓராண்டுக்கு அண்மித்து 2 ட்ரில்லியன் டாலர் மேற்கு கடற்கரை துறைமுகங்கள் வழியாக கிடைக்கிறது. 2021 இல் இது அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அண்மித்து 9 சதவீதமாகும்.
இந்தப் போராட்டம், அனைத்து துறைமுகத் தொழிலாளர்களும் புரிந்து கொள்ள வேண்டிய ஓர் அடிப்படை மூலோபாய பிரச்சினையை எழுப்புகிறது: அதாவது, நாடுகளின் அடிப்படையில் தொழிலாளர்களைப் பிளவுபடுத்தும் அவற்றின் தசாப்தகால பழமையான கையேட்டைப் பயன்படுத்துவதில் நிறுவனங்கள் வெற்றி பெற்றால், அவை அதிக விட்டுக்கொடுப்புகளை உறிஞ்சுவதிலும் மற்றும் இன்னும் அதிக இலாபங்களை அறுவடை செய்வதிலும் வெற்றி பெறும். ஆனால் சாமானியத் தொழிலாளர்கள் தேசிய எல்லைகளைக் கடந்து ஐக்கியப்படுவதற்கு நடவடிக்கை எடுத்தால், அவர்களால் ஒவ்வொரு இடத்தின் தொழிலாளர்களிடம் இருந்தும் ஆதரவை திரட்டி, நிறுவனங்களுக்கு எதிராக எதிர்தாக்குதலைத் தொடுக்க முடியும்.
உலகத் துறைமுகங்களில் செயல்பட்டு வரும் நிறுவனங்களின் இலாபங்கள் குறித்தும், கோவிட் மரணங்கள் மீதும் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்குப் பின்னால் இன்னும் கூடுதலாக வீழ்ச்சி அடைந்து வரும் கூலிகள் குறித்தும் தொழிலாள வர்க்கத்தில் கோபம் அதிகரித்து வருகிறது. கடல் போக்குவரத்து பாதுகாப்பு ஆலோசனை அமைப்பான Crisis24 இன் தகவல்படி, 2021 ஐ காட்டிலும் ஏறக்குறைய நான்கு மடங்கு அதிகமாக, கடந்தாண்டு உலகெங்கிலுமான துறைமுகங்களில் குறைந்தபட்சம் 38 மிகப் பெரிய போராட்டங்களோ அல்லது வேலைநிறுத்தங்களோ நடந்துள்ளன.
வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரை துறைமுகங்களில் பணயத்தில் இருக்கும் அதேபோன்ற பிரச்சினைகளுக்காகவே, சமீபத்திய மாதங்களில், இங்கிலாந்து, பிரான்ஸ், அர்ஜென்டினா, தென்னாப்பிரிக்கா, சிலி, தென் கொரியா, ஜேர்மனி மற்றும் பிற இடங்களிலும் துறைமுகத் தொழிலாளர்களின் சக்தி வாய்ந்த வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன. கோலிமாவின் மன்ஜானிலொ நகரம் உட்பட, மெக்ஸிகோவின் மேற்கு கடற்கரை துறைமுகத் தொழிலாளர்கள், இந்த வசந்த காலத்தில் வேலைநிறுத்தங்கள் மேற்கொள்ள அச்சுறுத்தியுள்ளனர்.
இந்தாண்டு தொடக்கத்தில் புளூம்பேர்க் இல் வெளியான ஓர் அறிக்கையில், “2023 இலும் அனேகமாக தொழிலாளர் அமைதியின்மை குறையாமல் போகலாம், உலகளாவிய பொருளாதார நிலைமைகள் மேம்படவில்லை என்றால் அனேகமாக இது சொல்லப் போனால் இன்னும் மோசமாகலாம்,” என்று Crisis24 எச்சரித்தது.
இந்த போராட்டம், பைடென் நிர்வாகத்திற்கு எதிராகவும், ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகள் இரண்டுக்கும் எதிராகவும் மற்றும் கனடாவில் ட்ரூடோ அரசாங்கத்திற்கு எதிராகவும் ஒரு போராட்டத்தில் தொழிலாளர்களை எதிர்நிறுத்துகிறது.
அமெரிக்காவில் இரயில்வே தொழிலாளர்கள் கடந்தாண்டு நிறுவனத்திற்குச் சாதகமான ஓர் உடன்படிக்கையை நிராகரித்த போது அவர்களுக்கு எதிராக பைடெனும் காங்கிரஸூம் தலையிட்டதைப் போல, ஓர் ஒப்பந்தத்தைச் சர்வாதிகாரமாக திணிக்க, வோல் ஸ்ட்ரீட் சார்பாக, துறைமுகத் தொழிலாளர்களுக்கு எதிராக தலையிடுமாறு வலியுறுத்தி, கடந்த இரண்டு வாரங்களில், அதாவது ஜூன் 7 இல் தேசிய உற்பத்தியாளர்கள் சங்கத்திடம் இருந்தும், ஜூன் 5 இல் தேசிய சில்லறை வர்த்தக கூட்டமைப்பிடம் இருந்தும், ஜூன் 2 இல் சில்லறை தொழில்துறை தலைவர்கள் சங்கத்திடம் இருந்தும் பைடென் நிர்வாகத்திற்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
திங்கட்கிழமை Journal of Commerce இல் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் வெளியானதைப் போல, இந்தத் திட்டங்கள் பின்னணியில் நடந்து வருகின்றன. இரயில்வே தொழிலாளர்கள் போராட்டத்தின் போது முன்னாள் தொழிலாளர் நலத்துறை செயலர் மார்டி வால்ஷின் துணைப் பொறுப்பாளராக இருந்தவரும் தற்போது தற்காலிக தொழிலாளர் நலத்துறை செயலருமான ஜூலி சூ, “[ஓர்] உடன்படிக்கை எட்டப்படும் வகையில் முன்மொழியப்பட்ட கூலிகளுக்கு அருகில் நகர, ILWU இல் இருந்து பேச்சுவார்த்தையாளர்களைப் பெறுவதற்காக” திங்கட்கிழமை PMA அதிகாரிகளைச் சந்திக்க இருப்பதாக அப்பத்திரிகை அறிவித்தது.
பைடென் நிர்வாகம் மற்றும் கனடாவில் உள்ள அதன் கூட்டாளிகளைப் பொறுத்த வரையில், துறைமுகத் தொழிலாளர்களின் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவது இலாபங்களை அதிகரிப்பதற்கு முக்கியமானதாக மட்டுமல்ல, மாறாக ரஷ்யாவுடனான அதன் போர் முனைவை விரிவாக்குவதற்கும் சீனாவுக்கு எதிரான அதன் போர் தயாரிப்புகளுக்கும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஆளும் வர்க்கம் போருக்காக அளப்பரிய தொகைகளை ஒதுக்கி உள்ளது. கூலிகளைக் குறைப்பதன் மூலமாகவும் சமூகத் திட்டங்களை வெட்டுவதன் மூலமாகவும் இவை அனைத்திற்கும் பணம் வழங்கப்பட உள்ளன.
அனைத்திற்கும் மேலாக, உலகெங்கிலும் இராணுவத் தளவாடங்களைக் கொண்டு செல்வதற்கு இந்தத் துறைமுகங்கள் முக்கியமாக உள்ளன. அமெரிக்கா “உலகெங்கிலும் அதன் இராணுவப் பலத்தைக் காட்ட அதன் துறைமுகங்களைச் சார்ந்துள்ளது. ஒரு மிகப் பெரிய மோதல் சம்பவத்தில், அமெரிக்க இராணுவச் சரக்குகளில் 90 சதவீதம் கடல் வழியாகவே கொண்டு செல்லப்படும். இன்றைய இராணுவத் துறைமுக உள்கட்டமைப்பு 22 மூலோபாய துறைமுகங்களில் ஒருங்குவிந்துள்ளது. பதினேழு மூலோபாய துறைமுகங்கள் வர்த்தகத் துறைமுகங்கள் ஆகும். வெளிநாடுகள் உடனான இராணுவ மோதல்களின் போது, படைத்துறைசாரா வர்த்தகக் கப்பல் போக்குவரத்துடன் சேர்ந்து, பாதுகாப்புத்துறை (DoD) இந்த துறைமுகங்களில் இருந்தே அதன் தளவாடங்களைக் கொண்டு செல்கிறது,” என்று Army War College இன் 2022 அறிக்கை குறிப்பிட்டது.
இந்தச் சூழலில், சர்வதேச லாங்ஷோர் மற்றும் வேர்ஹவுஸ் தொழிற்சங்க (ILWU) எந்திரமும் துறைமுகத் தொழிலாளர்களின் பிற தொழிற்சங்கங்களும் ஒரு வேலைநிறுத்தத்தைத் தவிர்க்க அவற்றால் ஆன அனைத்தையும் செய்து வருகின்றன. ILWU அதன் கனேடிய சமபலத்தைப் போலில்லாமல், அது ஜூலை 2022 இல் அமெரிக்க ஒப்பந்தம் காலாவதியாகி விட்ட போதும் கூட, ஒரு வேலைநிறுத்தத்தை அங்கீகரிப்பதற்கான வாக்கெடுப்புக்கு அழைப்புக் கூட விடுக்கவில்லை. உலக சோசலிச வலைத் தளச் செய்தியாளர்களிடம் பேசினாலும் கூட தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்க அச்சுறுத்தி வரும் உள்ளூர் கிளை 29 இன் தலைவர் ரேமாண்ட் லெய்பா போலவே, உள்ளூர் ILWU அதிகாரிகளும் சாமானியத் தொழிலாளர்களின் கோபம் அதிகரித்து வருவதைக் குறித்து மிகவும் பீதியடைந்திருந்தனர்.
சாமானியத் தொழிலாளர்களைத் தடுத்து வைக்கும் ILWU இன் முயற்சிகள் தோல்வி அடைந்து வருதையே, வெஸ்ட் கோஸ்ட் துறைமுகங்களின் வேலைக் குறைப்பு போராட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன. துறைமுகத் தொழிலாளர்களின் போராட்டங்களுடன் எந்த சம்பந்தமும் இல்லாத அதிகாரிகளைக் கொண்ட இந்த பெரியளவிலான அதிகாரத்துவ எந்திரம், ஒவ்வொரு இடத்திலும் சாமானியத் தொழிலாளர்களின் முதுகில் அமர்ந்துள்ள ஒரு சுமையாகும். பைடென் நிர்வாகத்தின் சார்பாகவும் மற்றும் அரசின் சார்பாகவும் சாமானியத் தொழிலாளர்கள் மீது பொலிஸ் வேலை செய்வதே அதன் நோக்கமாகும்.
லியோன் ட்ரொட்ஸ்கி ஆகஸ்ட் 1940 இல் ஸ்ராலினிச GPU இன் கரங்களில் படுகொலை செய்யப்படும் அந்த நேரத்தில் எழுதிக் கொண்டிருந்த, 'ஏகாதிபத்திய சீரழிவு சகாப்தத்தில் தொழிற்சங்கங்கள்' என்ற அவரது துண்டுப் பிரசுரத்தில், அந்த ரஷ்ய புரட்சியாளர் பின்வருமாறு எழுதினார், 'ஒட்டுமொத்த உலகிலும் நவீன தொழிற்சங்க அமைப்புகளின் வளர்ச்சியில், அல்லது இன்னும் சரியாகச் சொன்னால் சீரழிவில், ஒரு பொதுவான அம்சம் உள்ளது: அதாவது, அது அரசு அதிகாரத்திற்கு நெருக்கமாக சென்று கொண்டிருக்கிறது மற்றும் அதனுடன் ஒருங்கிணைந்து வளர்ந்து வருகிறது.”
தொழிற்சங்கங்களின் சீரழிவை ட்ரொட்ஸ்கி மார்க்சிச ஆய்வுக்கு உட்படுத்தியதில் இருந்து 80 ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்தில், இந்த நிகழ்வுபோக்கு வேகமடைந்துள்ளது, அதேவேளையில் உயர்மட்ட அதிகாரத்துவவாதிகளுக்கும் முதலாளித்துவ அரசுக்கும் இடையிலான இடைவெளி கலைந்து போயுள்ளது.
சாமானியத் துறைமுகத் தொழிலாளர்கள் அவர்களுக்காக ILWU எந்திரம் நடவடிக்கை எடுக்குமென காத்திருந்து முயற்சியை இழக்கக் கூடாது. அந்த நாள் வரவே வராது. பெருவாரியாக வேலைநிறுத்தத்திற்கு வாக்களித்து, ஒரு விற்றுத்தள்ளப்பட்ட ஒப்பந்தத்தை நிர்பந்திப்பதற்கான தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் முயற்சியை நிராகரித்த அமெரிக்க இரயில்வே தொழிலாளர்களின் கதியைப் பாருங்கள், ஆனால் காங்கிரஸ் சபையில் ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் இரயில்வே தொழிலாளர் சட்டத்தைப் பயன்படுத்தி நடைமுறையளவில் அவர்களின் போராட்டத்தைச் சட்டவிரோதமாக்கினர். வெள்ளை மாளிகையில் உள்ள ILWU இன் நண்பர்கள் மீது எந்த நம்பிக்கையும் வைக்க முடியாது.
சாமானியத் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC), தொழிலாளர்கள் அவர்களின் சொந்தக் கரங்களில் அதிகாரத்தை எடுப்பதற்கு உதவ தயாராக உள்ளது. IWA-RFC என்பது ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்தப்படும் தொழிலாளர் குழுக்களின் ஓர் உலகளாவிய வலையமைப்பாகும். கடைநிலை ஆலைத் தொழிலாளர்களுக்கு அதிகாரத்தை வழங்குவதே அதன் நோக்கமாகும். தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்படுவதை உடைத்து, சர்வதேச அளவில் அவர்களின் சகத் தொழிலாளர்களுடன் பொதுவான ஒரு காரணத்தை உருவாக்க உதவுவதும் அதன் நோக்கமாகும். சாமானியத் துறைமுகத் தொழிலாளர்கள் அனைவரும் இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.