ஒடிசா ரயில் பேரழிவிற்கு மூன்று வாரங்களுக்கு பிறகு: இந்திய அதிகாரிகள் சோகத்திற்கான தங்கள் பொறுப்பை மூடி மறைக்க தீவிரமாக உள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஜூன் 2 அன்று, இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றின்  பயங்கரமான காட்சிகள் மில்லியன் கணக்கான மக்களின் மனதில் அழியாத திகில் காட்சியாக இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கத்தின் தலைமையிலான நாட்டின் ஆளும் உயரடுக்கு, பேரழிவிற்கு ஒரு பலிகடாவைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளைத் தொடர்கிறது.

இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒடிசாவில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் ஜூன் 2 அன்று நடந்த ரயில் விபத்தில் காயமடைந்த 1,200 பயணிகளில் ஒருவர். [AP Photo/Rafiq Maqbool]

ஜூன் 2 அன்று இரவு மூன்று ரயில்கள் மோதியதில் ஏறக்குறைய 300 பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 1,200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், பலர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா பஜார் ரயில் நிலையத்தில் நிகழ்ந்தது.

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னாவின் கூற்றுப்படி, மோதல்களைத் தவிர்க்கப் பயன்படுத்தப்படும் 'மின்னணு பின்னிப்பூட்டல் (electronic interlocking அமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தால்” இந்த பயங்கரமான விபத்து ஏற்பட்டது என்பதாகும்.

ரயிலுக்கு தேவையான பாதுகாப்பு உள்கட்டமைப்பை அபிவிருத்தி செய்யவும், அதனை மேம்படுத்தவும் மற்றும் பல தசாப்தங்களாக அடுத்தடுத்து வந்த  அரசாங்கங்களின் புறக்கணிப்பு மற்றும் செலவுக் குறைப்பால் ஏற்பட்ட கடுமையான பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்யவும், பில்லியன் கணக்கான ரூபாய்களை ஒதுக்குவதற்குப் பதிலாக, மோடி நிர்வாகமும் அரசு அதிகாரிகளும் தங்கள் பொறுப்பை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்.

இந்த இரயில் பேரழிவானது அரசாங்கத்தின் பூகோளரீதியான பிம்பத்தை சிதைப்பதாகவும் மற்றும் அடுத்த ஆண்டு வரவிருக்கும் பொதுத் தேர்தலில் தங்களின் செல்வாக்கை பாதிக்கக் கூடும் என்றும் கவலைப்பட்ட மோடியும் அவரது ரயில்வே அமைச்சரும் இப்போது ஆற்றொணா நிலையில் சேதத்தை சரிசெய்யும்  நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மோடியின் மத்திய அரசாங்கத்தின் கீழ் வரும் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ), இப்போது விபத்து குறித்து விசாரிப்பதற்கு பொறுப்பாக இருக்கிறது, அது  ஜூன் 21 அன்று ரயில்வே சிக்னல் ஜூனியர் என்ஜினியர் அமீர் கானின் வீட்டில் சோதனை நடத்தியது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டபடி, பாலசோர் மாவட்டத்தில் உள்ள சோரோவில் கானின் வாடகை வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அவர் சோரோவில் உள்ள சிக்னலிங் பிரிவின் ஒரு பகுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர் 'சிக்னல் அமைப்பை நிறுவுதல், பராமரித்தல் மற்றும் பழுதுபார்த்தல்' மற்றும் விபத்து நடந்த பஹனகா பஜார் நிலையத்திற்கு  பொறுப்பாக உள்ளார்.

தேடுதலுக்குப் பிறகு சிபிஐ அதிகாரிகள் கானை 'மேலும் விசாரணைக்காக  பேர் குறிப்பிடப்படாத இடத்திற்கு' அழைத்துச் சென்றதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மற்ற விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

பஹானாகா பஜார் ரயில் நிலையத்தின் பதிவு புத்தகம், ரிலே பேனல் மற்றும் உபகரணங்களை கைப்பற்றிய பின்னர் சிபிஐ அதற்கு சீல் வைத்தது என்று பெயர் குறிப்பிட விரும்பாத ரயில்வே அதிகாரி ஒருவர் ஜூன் 10 அன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார் மேலும் இந்த ரயில் நிலையத்தில்  ரயில்கள் எதுவுமே  இனி நிறுத்த முடியாது. 

மின்னணு இன்டர்லாக் அமைப்பில் 'வேண்டுமென்றே குறுக்கீடு செய்ததால் தான்' பேரழிவு ஏற்பட்டதாக மூத்த ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், 'யார் தவறு செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று மோடி அறிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் இந்து வெறியர்களும் மோடிக்கு ஆதரவான வலதுசாரி சக்திகளும் இந்த துயரச் சம்பவத்திற்கு முஸ்லிம்களைக் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளனர். இந்தியா டுடே ஒரு வகுப்புவாத சமூக ஊடக இடுகையை மேற்கோள் காட்டியது, இது பஹனாகா பஜார் ஸ்டேஷன் மாஸ்டர் ஒரு முஸ்லீம் என்று பொய்யாகக் கூறியது. மேலும் அவர் விபத்துக்குப் பிறகு தப்பி ஓடிவிட்டதாகவும் கூறியது. 

ஜூன் 11 அன்று நியூஸ் கிளிக் கிற்கு அளித்த பேட்டியில், இந்திய ரயில்வேயின் முன்னாள் தலைமைப் பொறியாளர் அலோக் குமா வர்மா, விசாரணையில் சிபிஐயின் ஈடுபாட்டைக் கேள்விக்குள்ளாக்கி, விசாரணையை நடத்துவதற்கு அதற்கு 'திறமை இல்லை' என்று அறிவித்தார்.

”இது சம்பந்தப்பட்ட அமைச்சரும், அரசாங்கமும் விரும்பும் ஒன்றாக உள்ளது.  இது நாசவேலை என்று அவர்கள் ஏன் நம்புகிறார்கள் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்தாத பட்சத்தில் அவர்களின் இந்த விசாரணை ஒரு பக்கச் செயலாக மட்டுமே பார்க்க முடியும். CRS (ரயில்வே பாதுகாப்பு ஆணையம்) அதன் விசாரணை அறிக்கையை முடிக்க வேண்டும், அது பொதுமக்கள் மற்றும் பாராளுமன்றத்தின் பார்வைக்கு முன் வைக்கப்பட வேண்டும், ”என்று வர்மா கூறினார்.

நூற்றுக்கணக்கான மோசமாக சிதைந்த உடல்கள் ஒடிசாவில் உள்ள பிணவறைகள் மற்றும் பள்ளிக் கட்டிடங்களில் உரிமை கோரப்படாமல் விடப்பட்டுள்ளன. இதற்கிடையில், இந்தப் பேரழிவில் காயமடைந்த 1,200 பயணிகளில் ஐந்து பேர் மருத்துவமனையில் இறந்துள்ளனர்.

உண்மையான இறப்பு எண்ணிக்கை குறித்தும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. உதாரணமாக, நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்திப்படி: “கோரமண்டல் எக்ஸ்பிரஸின் மூன்று நொறுக்கப்பட்ட பொது  வண்டிகளில் மொத்தம் 300 பேர் இருந்தனர் என்று மூத்த இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த எண்ணிக்கை  வண்டிகளின் அதிகாரப்பூர்வ திறனுடன் பொருந்துவதால், ரயிலின் உள்ளே இருந்து வரும் கணக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகமாக இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. இதுவரை அடையாளம் காணப்பட்ட இறந்தவர்களில் இருவர் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் இருந்து வந்தவர்கள் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான உடல்கள் உரிமை கோரப்படாமல் இருப்பது, பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முன்பதிவு செய்யப்படாத இருக்கைகளை மட்டுமே வாங்கக்கூடிய வறிய தொழிலாளர்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது. பயணிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னரே அதிக விலையுள்ள முன்பதிவு டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

இந்தியாவின் இரயில் திறன் போதிய அளவில் விரிவடையாததையும் டைம்ஸ் குறிப்பிட்டது: “கடந்த 50 ஆண்டுகளில் 1.4 பில்லியன் மக்களைக் கொண்ட இந்த நாட்டில் பயணிகளின் சுமை மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்துள்ள நிலையில், ரயில் பாதையின் மைலேஜ் அடிப்படையில் இரயில்வே வலைப்பின்னலின் திறன் சுமார் 40 சதவீதம் மட்டுமே விரிவடைந்துள்ளது..'

நியூஸ் க்ளிக்  உடன்  பேட்டியின் போது, முன்னாள் தலைமை பொறியாளர் வர்மா கூறியதாவது: “எங்களிடம் விரைவு ரயில்கள் இல்லை. உண்மையில், உலகிலேயே மிக மெதுவாக செல்லும் ரயில்கள் தான் எம்மிடம் இருக்கின்றன. ஆனாலும் பேரழிவு தரும் விபத்துகள் நடக்கின்றன. பராமரிப்பு பணியில் சமரசம் செய்யப்பட்டுள்ளது. எங்கள் நிலைய அதிகாரிகள் மற்றும் பிற ஊழியர்கள் அதிக சுமையான வேலைகளை செய்கின்றனர். பொது மற்றும் தூங்கியிருந்து பயணம் செய்யும் பெட்டிகளில் நெரிசலாக இருப்பது மற்றொரு பெரிய பிரச்சனையாகும், மேலும் இது இறப்புகளை மேலும் அதிகரிக்கிறது.’’

வர்மா மோடி அரசாங்கத்தின் போக்குவரத்துக் கொள்கைகளை அப்பட்டமாக விமர்சித்தார்: “நாங்கள் விலையுயர்ந்த விரைவுச் சாலைகளை அபரிமிதமான விகிதத்தில் உருவாக்குகிறோம், விமான நிறுவனங்கள் மற்றும் விமானப் போக்குவரத்தும் 10 சதவிகிதம் அதிகரித்து வருகிறது, ஆனால், மிகவும் காலநிலை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து வழிமுறையான ரயில்வே புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் துயரமானது. இதற்கு  தவறான முன்னுரிமைகள் காரணமாக இருக்கிறது.'

மோடி அரசாங்கம் மற்றும் இந்திய முதலாளித்துவத்தின் 'முன்னுரிமைகள்' இலாபத்தால் உந்தப்படுகின்றன, மனித உயிர்களைப் பாதுகாப்பதில் அக்கறை இல்லை, எனவே அவர்கள் ஒஷிடாவில் வெகுஜன இறப்புகள் மற்றும் இந்தியாவில் மில்லியன் கணக்கான மக்கள் காலநிலை பேரழிவுகள் மற்றும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கொல்லப்பட்டுள்ளனர்.

சீனாவிற்கு எதிரான போருக்கான அதன் தயாரிப்புகளை விரைவுபடுத்திவரும் அமெரிக்க அரசாங்கத்துடனான நெருக்கமான ஒத்துழைப்புடன் பணிபுரியும் மோடி அரசாங்கம், இப்பிராந்தியத்தில் புது டெல்லியின் பிற்போக்குத்தனமான புவிசார் அரசியல் நலன்களைத் தொடர அதன் இராணுவ செலவினங்களை அதிகரிப்பதில் முனைப்பாக உள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, 2018-22 க்கு இடைப்பட்ட ஐந்தாண்டு காலப்பகுதியில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இருந்துள்ளது. இந்தப் பணம்  இராணுவவாதம், போர் மற்றும் இறப்புக்காக அல்லாமல் தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாய வெகுஜனங்களின் ஆரோக்கியத்தையும் வாழ்க்கையையும் பாதுகாக்க பயன்படுத்தப்பட வேண்டும்.