முன்னோக்கு

கிரேக்கத்தில் வலதுசாரி புதிய ஜனநாயகக் கட்சி மீண்டும் அதிகாரத்திற்குத் திரும்புகிறது

சிரிசாவின் காட்டிக்கொடுப்புகள் எவ்வாறு கிரேக்கத்தில் தீவிர வலதுசாரி அரசியலை பலப்படுத்தியது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ், இடதுபுறம் மத்தியில் இருப்பவர், வெள்ளிக்கிழமை, ஜூன் 23, 2023. [AP Photo/Petros Giannakouris]

ஞாயிற்றுக்கிழமை நடந்த கிரேக்க பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான சிரிசாவை (Syriza - தீவிர இடதுகளின் -முற்போக்குக் கூட்டணி) தோற்கடித்த பின்னர், புதிய ஜனநாயகக் கட்சியின் (ND)  பிரதம மந்திரி கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் (Kyriakos Mitsotakis) திங்கள்கிழமை பதவியேற்றார்.

இந்த வலதுசாரி புதிய ஜனநாயகக் கட்சி மற்றொரு முறை பதவி ஏற்பதைப் போலவே, இந்தத் தேர்தலும் மூன்று அதிவலது கட்சிகள் பாராளுமன்றத்தில் மீண்டும் ஒருங்கிணைவதைக் கண்டது. இவை 34 இடங்களுடன், மொத்த வாக்குகளில் 12 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளன.

ஒரு பழமைவாத அரசாங்கம் தேர்வாகி இருப்பதையும் மற்றும் அதிவலது முன்னேறி இருப்பதையும், ஒரு பகுப்பாய்வாளர் கூறுகையில், “1974 இல் கிரேக்கத்தில் ஜனநாயகம் மீட்டமைக்கப்பட்டதற்குப் பிந்தைய மிகவும் பழமைவாத பாராளுமன்றம்” என்று விவரித்த நிலையில், இதற்கு சிரிசாவே அரசியல்ரீதியில் பொறுப்பாகிறது.

2015 மற்றும் 2019 இக்கு இடையே சிரிசா அமைத்திருந்த அரசாங்கத்தில், அது கடுமையான சிக்கன நடவடிக்கைகளைச் சுமத்திய அதேவேளையில், நேட்டோவுக்குள் கிரேக்கம் வகிக்கும் முக்கிய பாத்திரத்தை விசுவாசத்தோடு பாதுகாத்து நிதி ஒதுக்கியதுடன், அது ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக அகதிகளுக்கு எதிராக மூர்க்கமான “ஐரோப்பிய கோட்டைக்கான” (Fortress Europe) நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியது. ஒருசமயம் அதன் தலைமையை எதிர்பார்த்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைக் காட்டிக்கொடுத்து, அவர்கள் அணிதிரளாதவாறு அவர்களைக் கலைத்து விடும் திட்டநிரலை மட்டுமே அது ஆழப்படுத்தி உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) கோரிய சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரும் உறுதிமொழிகளின் அடிப்படையில், முதன்முதலில் ஜனவரி 2015 இல் சிரிசா ஒரு பெரும்பான்மை வெற்றியோடு ஆட்சி அமைத்தது, ஆனால் அது முதலாளித்துவ வர்க்கத்தின் சேவைக்காக மட்டுமே செயல்படும் கட்சி என்பதை அது ஆட்சிக்கு வந்து ஒரு சில மாதங்களிலேயே எடுத்துக்காட்டியது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) இதை 'கிரேக்கத்தில் சிரிசா காட்டிக்கொடுப்பின் அரசியல் படிப்பினைகள்' என்ற அதன் அறிக்கையில், 'தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மகத்தான மூலோபாய அனுபவம்' என்று மதிப்பிட்டது.

சோசலிச கொள்கைகள் ஒருபுறம் இருக்கட்டும், சிரிசா ஜெயித்தால் இடதுசாரி கொள்கைகளை நடைமுறைப்படுத்த வழிவகுக்கும் என்ற அதன் வாதங்களையும், சர்வதேச அளவில் அதை உற்சாகமூட்டிய அதன் எண்ணற்ற போலி-இடது ஆதரவு அமைப்புகளின் வாதங்களையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஆரம்பத்திலேயே நிராகரித்தது. அது முதலாளித்துவ-சார்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்து, உயர்மட்ட நடுத்தர வர்க்க அடுக்கை பிரதிநிதித்துவம் செய்கிறது என்று சிரிசாவின் வர்க்கத் தன்மையைப் பற்றிய ஒரு பகுப்பாய்வின் அடிப்படையில், அனைத்துலகக் குழு குறிப்பிடுகையில், சிரிசா விரைவிலேயே அதன் வாக்குறுதிகளைக் கைவிட்டு, கிரேக்கத்துக்கு கடன் வழங்கியவர்கள் கோரும் சிக்கன நடவடிக்கைத் தாக்குதலைத் தொடங்கும் — இது வலதுசாரி மற்றும் பாசிச சக்திகள் பலப்படுவதற்கு வழி வகுக்கும் என்று எச்சரித்தது.

ஜனவரி 27, 2015 இல் “கிரேக்கத்தில் சிரிசா தேர்வாகி இருப்பதன் முக்கியத்துவம்” என்ற ஒரு முன்னோக்கில், WSWS பின்வருமாறு குறிப்பிட்டது:

சிப்ராஸ் அரசாங்கம் தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் அவசியமான “அனுபவம்” என்றும், அதிலிருந்து தொழிலாள வர்க்கம் ஏதாவது விதத்தில் உண்மையான சோசலிச கொள்கைகளுக்கான அவசியத்தைப் புரிந்து கொள்ளும் என்றும், சிரிசா மற்றும் அதன் முதலாளித்துவ-சார்பு திட்ட நிரலுக்கான ஆதரவை நியாயப்படுத்த, குட்டி முதலாளித்துவ போலி-இடது வழங்கிய அரசியல் தட்டிக்கழிப்பை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அவமதிப்போடு நிராகரிக்கிறது.

இத்தகைய சூழ்ச்சிகள் தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர இயக்கம் உருவாவதை எதிர்ப்பதற்கு மட்டுமே முன்னெடுக்கப்படுகின்றன, சிரிசாவின் அரசியலை இடைவிடாமல் அம்பலப்படுத்துவதன் மூலமாக மட்டுமே தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர இயக்கம் சாத்தியமாகும். இந்தப் பணியை, தொழிலாளர்களும் இளைஞர்களும், கிரேக்கத்திலும் சர்வதேச அளவிலும் முகங்கொடுக்கும் தீர்க்கமான போராட்டங்களுக்கு அவர்களைத் தயார் செய்வதற்காக உலக சோசலிச வலைத் தளம் முன்னெடுக்கிறது.

அதற்கடுத்த நாள், “சிரிசாவின் தேர்தல் வெற்றியும், போலி இடதும்” என்ற தலைப்பில் WSWS வெளியிட்ட ஒரு கட்டுரையில் அது பின்வருமாறு எழுதியது:

தொழிலாள வர்க்கம் இந்த அனுபவங்களினூடாக சென்று, அவற்றில் இருந்து பாடங்களைக் கற்க முடியும் என்றும், ஆகவே ஒருவர் சிரிசாவை ஆதரிக்க வேண்டும் என்ற அவற்றின் போலி-இடதுகளின் வாதங்களில் மற்றொன்று குறிப்பிட்டது. சிரிசா அரசாங்கம் முன்னிறுத்திய மிகப்பெரும் ஆபத்துக்களை வைத்துப் பார்த்தால், சிரிசா பிரதிநிதித்துவம் செய்த வர்க்க நலன்களை அம்பலப்படுத்துவது, அதன் விளைவுகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை எச்சரிப்பது மற்றும் ஒரு தெளிவான சோசலிச நோக்குநிலையை வழங்குவது ஆகியவையே ஒரு மார்க்சிச கட்சியின் பணியாக இருக்கும்.

ஸ்பெயினில் பொடெமோஸ், ஜேர்மனியில் இடது கட்சி, போர்த்துக்கலில் இடது அணி (Left Bloc) மற்றும் பிரான்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி உட்பட, சர்வதேச அளவில் இதேபோன்ற அரசியல் அமைப்புகளது வளர்ச்சியின் பின்னணியில், சிரிசா பற்றிய ICFI இன் பகுப்பாய்வு முன்வைக்கப்பட்டது.

சிரிசாவின் காட்டிக்கொடுப்பு, கிரேக்கத்தின் எல்லைகளைக் கடந்து அதற்கு அப்பாலும் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்பட இருந்த ஒரு வடிவத்தை அமைத்தது. பிரிட்டிஷ் கட்சியின் தலைவராக ஜெர்மி கோர்பின் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிரிசாவின் முன்னாள் நிதி அமைச்சர் யானிஸ் வாரௌஃபாகிஸ், கோர்பினின் மிகத் தீவிர ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தார். சிப்ராஸ் திணித்த சிக்கன நடவடிக்கைகளைப் பேரம்பேசுவதில் கருவியாக இருந்த அவர், அந்த நடவடிக்கைகளில் இருந்து தன்னை விலக்கிக் கொள்ள 2015 ஜூலையில் அந்த அரசாங்கத்தில் இருந்து இராஜினாமா செய்தார். “PASOK பாணியில் எதுவும் நடந்து விடாமல்” (Pasokification இல் இருந்து) தொழிற்கட்சியைக் காப்பாற்றுவதே கோர்பினின் அறிவிக்கப்பட்ட திட்டமாக இருந்தது. கிரேக்க சமூக ஜனநாயகக் கட்சியான பாசோக் (PASOK) ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்ட சிக்கன நடவடிக்கைகளின் முதல் பொதியை திணித்த பின்னர், அது முறிவைச் சந்தித்தது.

தொழிற்கட்சியின் 2016 சிறப்பு மாநாட்டில் கோர்பின் அவரது வெற்றி உரையில் கூறுகையில், “2008 பொறிவுக்குப் பின்னர், ஒரு மாற்றீட்டுக்கும் மற்றும் ஆக்கப்பூர்வமற்ற சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்குமான கோரிக்கை, ஒரு நாடு மாற்றி இன்னொரு நாட்டில் புதிய இயக்கங்கள் மற்றும் கட்சிகள் தோன்றுவதற்கு வழி வகுத்துள்ளது. … பிரிட்டனில், இது பாரம்பரிய அரசியலின் இதயதானத்தில், அதாவது தொழிற்கட்சியிலேயே ஏற்பட்டுள்ளது, இது குறித்து நாம் முற்றிலும் பெருமைப்பட வேண்டும்,” என்று அறிவித்தார். வாரௌஃபாகிஸைக் கோர்பின் ஒரு பொருளாதார ஆலோசகராகவும் கூட நியமித்தார்.

நான்கு ஆண்டுகள் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் வலதுசாரி எதிர்ப்பாளர்களிடம் அரசியல் ரீதியில் மோசமாக சரணடைந்த கோர்பின் 'அனுபவத்தின்' விளைவு, தொழிற்கட்சியின் ஒரு முழுமையான தோல்வியாக இருந்தது. இப்போது இது, கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்குச் சூளுரைத்து, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ போரை ஆதரிப்பதில் வெறித்தனமான பழமைவாத அரசாங்கத்துடன் அடியொற்றி அணிவகுத்து வரும் சர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையில் உள்ளது.

சோசலிசத்தை வந்தடைவதற்காக, சிரிசா மற்றும் மேற்குறிப்பிட்ட அவர்களின் பரிவாரங்கள் நடத்தும் அரசாங்கங்களின் “அனுபவத்தை” தொழிலாளர்கள் கடந்து வர வேண்டும் என்று கூறிய பின்னர், அதன் விளைவு அதற்கு மாறாக எப்போதும் போல வலதுக்குத் திரும்பி உள்ளதை ஒரேயொரு போலி-இடது போக்கும் கூட ஒப்புக் கொள்ளவில்லை. அனைத்திற்கும் மேலாக, ஒவ்வொரு அரசியல் காட்டிக்கொடுப்புக்குப் பின்னரும், அடுத்த சிரிசாவை — அதாவது, தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு போலி இடது மாற்று தலைமையை வழங்கும் விதத்தில், இடது தொனியில் வாய்வீச்சைக் காட்டும் குட்டி முதலாளித்துவ அமைப்புகளை — நோக்கிய அடுத்த தேடல் தொடர்கிறது.

போலி-இடது குழுக்கள் இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்குள் அவை அனுபவிக்கும் தனிச்சலுகைகள் மற்றும் வசதியான இருப்பைப் பாதுகாப்பதற்காக, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நடுநிலைமைக்குச் செயலூக்கத்துடன் முயன்று வருகின்றன என்பதைத் தவிர வேறெந்த தீர்மானத்திற்கும் வர முடியாது.

கிரேக்கத்திலும் மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை அவசியம் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே சர்வதேச அளவில் தொழிலாளர்களும் இளைஞர்களும் பெற வேண்டிய இன்றியமையாத படிப்பினையாக உள்ளது. இந்த போராட்டத்தை முன்னெடுக்க தொழிலாளர்களைத் தத்துவார்த்த ரீதியில் ஆயுதபாணியாக்குவது அவசியம் என்பது, போலி-இடது போக்குகளைக் குறித்த ICFI இன் எழுத்துக்களில் உள்ளடங்கி உள்ளது.