ஜேர்மன் கூட்டாட்சி தேர்தல் 2025: அரசாங்கக் கட்சிகளுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தோல்வி, தீவிர வலது சாரி AfD மற்றும் இடது கட்சிக்கு ஆதாயங்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஜேர்மனியில் இடம்பெற்ற 2025 கூட்டாட்சி தேர்தலானது, ஜேர்மனியிலும் ஐரோப்பாவிலும் அரசியல் நெருக்கடியை ஆழப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, பாசிசம், இராணுவவாதம் மற்றும் சமூக வெட்டுக்களுக்கு எதிராகப் போராட விரும்பும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முன், அடிப்படை அரசியல் பணிகள் முன் வைக்கப்படுகின்றன.

நாஜிக்களின் சகாப்தம் முடிந்ததிலிருந்து, ஜேர்மன் அரசியலில் மேலாதிக்கம் செலுத்தி வந்துள்ள மற்றும் கூட்டாட்சி மட்டத்தில் அரசாங்கங்களை அமைத்து வந்துள்ள கட்சிகள் மிகவும் வெறுக்கப்பட்டு வருகின்றன. பிரெடெரிக் மெர்ஸின் (Friedrich Merz) கீழ் பழமைவாத கிறிஸ்துவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்துவ சமூக யூனியன் (CDU/CSU) சுமார் 28.5 சதவீத வாக்குகளுடன் அதிக வாக்குகளைப் பெற்றாலும், அது அதன் வரலாற்றில் இரண்டாவது மோசமான தேர்தல் முடிவைப் பதிவு செய்துள்ளது. சமூக ஜனநாயகக் கட்சி (SPD) எப்பொழுதும் இல்லாத அளவிற்கு வெறும் 16 சதவீத வாக்குகளுடன் வீழ்ச்சியடைந்தது. அதேவேளையில் தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP) ஐந்து சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளுடன் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. ஒட்டுமொத்தமாக, கடந்த அரசாங்கக் கூட்டணியை அமைத்த சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைக் கட்சி மற்றும் தாராளவாத ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகள் ஏறத்தாழ 20 சதவிகிதப் புள்ளிகளை இழந்து கடுமையாக தண்டிக்கப்பட்டன.

நடப்பு அரசாங்கத்தின் அதிபரான ஓலாவ் ஷொல்ஸ் (SPD), கூட்டாட்சி குடியரசின் வரலாற்றில் மிகவும் வெறுக்கப்பட்ட சான்சிலர்களில் ஒருவராக பதவியை விட்டு விலகினார். தேர்தல் தினத்தன்று இன்ஃப்ராடெஸ்ட் டிமாப் (Infratest dimap) நடத்திய ஒரு ஆய்வின்படி, மக்கள்தொகையில் 72 சதவீதத்தினர் “ஓலாவ்  ஷொல்ஸின் அரசியல் வேலைகளில் அதிருப்தி அடைந்திருந்தனர்.” சமூக ஜனநாயகக் கட்சி “அநேகமாக” “ஜேர்மனியில் மிக முக்கியமான பிரச்சினைகளைத் தீர்க்கும்” என்று வெறும் 15 சதவீதத்தினர் மட்டுமே நம்பினர். இறுதியில், 17 சதவீதத்தினர் மட்டுமே “கூட்டணி அரசாங்கத்தில் திருப்தி” அடைந்தனர்.

ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போரைத் தீவிரப்படுத்துவது, காஸாவில் இனப்படுகொலையை ஆதரிப்பது, ஜேர்மன் ஆயுதப் படைகளுக்கு பாரியளவில் ஆயுதமளிப்பது மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல் நடத்துவது ஆகியவற்றை இன்றியமையாத கொள்கைகளாகக் கொண்டிருந்த ஓர் அரசாங்கத்தின் மீதான ஒரு பாரிய நம்பிக்கையில்லா வாக்களிப்பாக இந்த தேர்தல் இருந்தது.

மக்கள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, வீழ்ச்சி அடைந்து வரும் ஊதியங்கள் மற்றும் முன்னெப்போதும் இல்லாத சமூக நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், மில்லியன் கணக்கான மக்கள் ஸ்தாபக கட்சிகளை கடுமையாக எதிர்த்து அரசியல்ரீதியாக அணிதிரண்டுள்ள அதேவேளையில் – தேர்தல்களில் வாக்களிப்பு 84 சதவீதமாக இருந்தது. இது ஜேர்மனியின் மறுஇணைப்புக்குப் பிந்தைய மிக உயர்ந்த அளவாகும். – இந்தக் கோபம் மிகவும் சிதைந்த அரசியல் வெளிப்பாட்டை மட்டுமே கண்டுள்ளது.

இந்தத் தேர்தலில் மிகப்பெரிய பயனாளியாக அதிதீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சி இருந்தது. இது வாக்குகளில் அதன் பங்கை ஏறத்தாழ இரட்டிப்பாக்கி, 20.5 சதவீதத்துடன் அதன் சிறந்த முடிவைப் பெற்றது. குறிப்பாக கிழக்கு ஜேர்மனியில் இந்தக் கட்சி மேலாதிக்கம் செலுத்தியது. அங்கு முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் (GDR) முதலாளித்துவ மீட்சி, மக்களின் பரந்த பிரிவுகளுக்கான பொருளாதார மற்றும் சமூக அடித்தளங்களை அழித்தது. பேர்லினைத் தவிர, கிழக்கு ஜேர்மனியின் அனைத்து கூட்டாட்சி மாநிலங்களிலும் AfD வெற்றி பெற்றது - சில இடங்களில் தேர்தல் முடிவுகள் 40 சதவீதத்திற்கும் மேலாக இருந்ததுடன், மற்ற அனைத்துக் கட்சிகளையும்விட அதிக முன்னணியில் AfD இருந்தது.

தொழிலாளர்கள் மத்தியிலும் (2021 உடன் ஒப்பிடும்போது 17 சதவீதம் வரை) “மோசமான பொருளாதார நிலைமை உள்ள” வாக்காளர்கள் மத்தியிலும் (19 சதவீதம் வரை), ஒவ்வொரு குழுவிலும் 38 சதவீத வாக்குகளைப் பெற்று AfD சாதனைப் புள்ளிகளைப் பெற்றது. பாதிக்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே கட்சிக்கு உறுதியான “நம்பிக்கையுடன்” வாக்களித்தனர். தேர்தல் நாளில், AfD வாக்காளர்களில் சுமார் 39 சதவீதம் பேர், “மற்ற கட்சிகள் மீதான ஏமாற்றத்தால்” தங்கள் முடிவை எடுத்ததாகக் கூறினர். முதல் முறையாக AfDக்கு வாக்களித்தவர்களில், 59 சதவீதம் பேர் “ஏமாற்றத்தாலும்”, 38 சதவீதம் பேர் மட்டுமே உறுதியான “நம்பிக்கையுடனும்” வாக்களித்தனர்.

8.7 சதவீத வாக்குகளைப் பெற்ற இடது கட்சி, வலதுசாரி அரசாங்க கொள்கைகளுக்கு, குறிப்பாக இளம் வாக்காளர்களிடையே அதிகரித்து வந்த சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பில் இருந்து ஆதாயமடைய முடிந்தது. 25 வயதிற்கு குறைந்த வாக்காளர்கள் மத்தியில், AfD (21 சதவீதம்), கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (13 சதவீதம்), சமூக ஜனநாயகக் கட்சி (12 சதவீதம்) மற்றும் பசுமைக் கட்சி (11 சதவீதம்) ஆகியவற்றை விட 25 சதவீத வாக்குகளைப் பெற்று சிறந்த முடிவைப் பெற்றது. இடது கட்சி தலைநகர் பெர்லினையும் 19.9 சதவீத வாக்குகளுடன் வென்றது. CDU (18.3 சதவீதம்) கட்சியானது பசுமைக் கட்சியை (16.8 சதவீதம்) விட முன்னணியில் இருந்தது.

இது, இடது கட்சியின் செயலற்ற மற்றும் முதலாளித்துவ தன்மையை மாற்றிவிடாது. மாநில அளவில் இடது கட்சி சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சியினருடன் (தற்போது பிரேமன் மற்றும் மெக்லென்பேர்க்-மேற்கு பொமரேனியாவில்) ஆட்சி நடத்தும் இடங்களில், சமூக சிக்கன நடவடிக்கைகள், ஒரு போலிஸ் அரசைக் கட்டமைத்தல், அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்கள் ஆகிய கொள்கைகளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் அதன் எதிர்க்கட்சிப் பாத்திரத்தின் மூலம், பாசிசம் மற்றும் போருக்கு எதிரான எதிர்ப்பும், ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான பாரிய தாக்குதல்களும் கட்டுப்பாட்டை மீறி சுயாதீன வடிவங்களை எடுக்காமல் இருப்பதை உறுதி செய்வதை இடது கட்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

“இடது கட்சியுடன் தற்போது எந்த கூட்டணியும் இல்லை” என்பதால், கட்சி பாராளுமன்றத்திலும் தெருக்களிலும் எதிர்க்கட்சிக்குச் செல்கிறது என்று முன்னணி வேட்பாளரும் கட்சியின் தலைவருமான ஜான் வான் ஏகென் (Jan van Aken), ஞாயிற்றுக்கிழமை மாலை ஜேர்மன் பொதுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முக்கிய கட்சித் தலைவர்களின் விவாதத்தில் அறிவித்தார். அவர் “கிரீன்பீஸுக்காக பல வருடங்கள் பணியாற்றினார்”. மேலும், “இணைந்து ஆட்சி செய்வது அவசியமில்லை” என்பதையும், “நாடாளுமன்றத்திற்கு வெளியே உள்ள எதிர்க்கட்சியிலும் நிறைய ஆதாயம் பெறலாம்” என்பதையும் அறிந்துகொண்டார்.

“சமூக நலன்புரி அரசின் மீதான தாக்குதல்களை மெர்ஸ் மேற்கொள்வதை எதிர்ப்பதாக வான் ஏகென் அறிவித்ததை, மெர்ஸ் ஒரு இழிவான புன்னகையுடன் எதிர்கொண்டார். 35 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு ஜேர்மனியில் முதலாளித்துவத்தை மீண்டும் அறிமுகப்படுத்திய ஸ்ராலினிச சோசலிச ஐக்கிய கட்சி/ஜனநாயக சோசலிசக் கட்சி (SED/PDS) என்ற முன்னோடி அமைப்பை பற்றி பயப்படுவதற்கு எந்த அச்சமும் கொள்ளத் தேவை இல்லை என்பதை ஆளும் வர்க்கம் அறிந்திருக்கிறது.

சஹ்ரா வாகன்க்னெக்ட்டின் கூட்டணி (BSW) 4.97 சதவீத வாக்குகளுடன் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முடியாமல் தோல்வியடைந்த நிலையிலும், FDP 4.3 சதவீத வாக்குகளுடன் மிகவும் பின்தங்கியதாலும், CDU/CSU மற்றும் SPD ஆகியவை நாடாளுமன்ற இடங்களில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளன. இருப்பினும், அவை ஒன்றாக 45 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றன. இரு கட்சிகளும் ஒரு கூட்டு அரசாங்கத்தை அமைப்பதற்கான தமது விருப்பத்தை சமிக்ஞை செய்துள்ளன. பசுமை கட்சியினரும் இந்த கூட்டு அரசாங்கத்துக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறார்கள்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பேர்லின் வட்டமேசை” என்ற ஒட்டுமொத்த தொலைக்காட்சி விவாதமும், அரசியல் ஸ்தாபனத்தின் வலதுசாரி திருப்பத்தை எடுத்துக்காட்டி, அரசியல் முன்முயற்சி முதலாளித்துவத்தின் கைகளில் இருந்தால் தொழிலாள வர்க்கத்திற்கு என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டியது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்கனவே பாசிஸ்டுகளை ஆதரித்த ஊடகங்கள், நீண்ட காலமாக AfD-ஐ ஒரு சாத்தியமான ஆளும் கட்சியாகக் கருதி வருகின்றன. ஒரு ஆளும் கட்சியாக அவர் என்ன “சலுகைகளை வழங்கத்” தயாராக இருப்பார் என்று கேட்டபோது, ​​AfD தலைவரும் சான்சிலருக்கான வேட்பாளருமான ஆலிஸ் வைடெல் (Alice Weidel) விளக்கினார்: “நாம் எந்த பெரிய சலுகைகளையும் வழங்க வேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன். ஏன் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்: CDU எங்கள் திட்டத்தை கிட்டத்தட்ட முழுமையாக நகலெடுத்து எங்கள் அனைத்து நிலைப்பாடுகளையும் ஏற்றுக்கொண்டுள்ளது. அவர்களால் அதைச் செய்ய முடியும், ஆனால் இடதுசாரி கட்சிகளுடன் சேர்ந்து அவர்களால் அதை நடைமுறைப்படுத்த முடியாது,” என்றார்.

உண்மையில், வெளியேறும் ஆளும் கட்சிகளும் பெருமளவில் பாசிசவாதிகளின் அகதிகள் கொள்கை வேலைத்திட்டத்தை தழுவிக் கொண்டிருக்கின்றன என்பதோடு, கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியத்துடன் சேர்ந்து அதை நடைமுறைப்படுத்தவும் தயாராக உள்ளன. ஷொல்ஸ் மற்றும் சான்சிலர் பதவிக்கான பசுமைக் கட்சி வேட்பாளர் ரோபர்ட் ஹாபெக் (Robert Habeck) மெர்ஸ் உடன் இணைந்து வேலை செய்வதற்கான அவர்களின் விருப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர். தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியில், தஞ்சம் கோரும் கொள்கையை இன்னும் கூடுதலாக இறுக்குவதற்காக, மெர்ஸ் பாசிஸ்டுகளுடன் சேர்ந்து ஒரு நாடாளுமன்ற பெரும்பான்மையை ஒழுங்கமைத்தார். அவ்விதத்தில் அவர் தேவைப்பட்டால் AfD உடன் சேர்ந்து ஆட்சி செய்யவும் தயாராக இருக்கிறார் என்பதையும் எடுத்துக்காட்டினார்.

குறைந்தபட்சம் இப்போதைக்கு இதை அவர் கடுமையாக நிராகரிப்பது என்பது, முதன்மையாக வெளியுறவுக் கொள்கை பிரச்சினைகள் காரணமாகும். பவேரிய மாநில முதலமைச்சரும் CSU கட்சியின் தலைவருமான மார்கஸ் சோடர் (மெர்ஸை விட வலதுபுறம் இருப்பவர்) AfD, “எமது நாட்டை மாஸ்கோவின் ஒரு அடிமை நாடாக மாற்றும் நலன்களைக் கொண்ட யூரேசிய சமூகத்தை” ஆதரிப்பதாக குற்றம் சாட்டினார்.

மெர்ஸ், ஷொல்ஸ் மற்றும் ஹேபெக் ஆகியோர் “பேர்லின் வட்டமேசை” விவாதத்தின் போது AfD-ஐ அதே நிலைப்பாட்டில் இருந்து விமர்சித்தனர். மேலும் ரஷ்யாவிற்கு எதிரான உக்ரேன் போரைத் தொடரவும், ட்ரம்பின் கீழுள்ள அமெரிக்காவை எதிர்கொள்ளவும் ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவை பெருமளவில் மீள்ஆயுதமயமாக்குவதே, அடுத்த அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் என்பதையும் தெளிவுபடுத்தினர்.

உக்ரேன் தொடர்பாக அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைகள் குறித்து கேட்டபோது, ​​மெர்ஸ் விளக்கினார்: “என்னைப் பொறுத்தவரை, அமெரிக்காவிலிருந்து உண்மையான சுதந்திரத்தை படிப்படியாக அடைய ஐரோப்பாவை விரைவாக வலுப்படுத்துவதே முழுமையான முன்னுரிமையாக இருக்கும்” என்றார். மேலும், ஜூன் மாத இறுதியில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாடு, “தற்போதைய வடிவத்தில் நாம் இன்னும் நேட்டோவைப் பற்றிப் பேசுகிறோமா அல்லது ஒரு சுயாதீனமான ஐரோப்பிய பாதுகாப்புத் திறனை மிக விரைவாக நிறுவ வேண்டுமா” என்பதைக் காண்பிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

தேர்தலுக்கு சற்று முன்னர் வெளியிடப்பட்ட மீள்ஆயுதமயமாக்கல் ஆவணங்கள் இதன் அர்த்தம் என்ன என்பதை எடுத்துக் காட்டுகின்றன. “அமெரிக்கா இல்லாமல் ஐரோப்பாவைப் பாதுகாத்தல்: தேவைப்படுவதற்கான முதல் மதிப்பீடுகள்” என்ற தலைப்பில் உலகப் பொருளாதாரத்திற்கான கீல் நிறுவனம் நடத்திய ஆய்வில், ஐரோப்பியர்கள் சுமார் 50 கூடுதல் படைப்பிரிவுகளை அமைத்து 1,400 புதிய யுத்த டாங்கிகள் மற்றும் 2,000 காலாட்படை போரிடும் வாகனங்களை வாங்க வேண்டும் என்று விளக்கியது. கூடுதலாக, ரஷ்யாவுடனான சாத்தியமான மோதலில் நேட்டோவிற்கு 100,000 போர் துருப்புக்களை அணிதிரட்டும் திறன் கொண்டதாக ஜேர்மன் இராணுவம் மட்டும் இருக்க வேண்டும் என்று அந்த ஆய்வு குறிப்பிட்டது.

கிறிஸ்துவ சமூக ஒன்றியக் கட்சியால் முன்வைக்கப்பட்ட “ஜேர்மன் இராணுவம் மற்றும் ஜேர்மனியின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான” ஒரு தலையாய திட்டமானது, ஜேர்மன் இராணுவத்தை “500,000 செயல்பாட்டு சிப்பாய்கள் மற்றும் ரிசர்வ் படையினராக” “வளர்ப்பதற்கும்” “கட்டாய இராணுவ சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கும்” அழைப்பு விடுக்கிறது.

இதுவே, அதன் அத்தனை விளைவுகளுடனும், அபிவிருத்தியடைந்து வரும் மூன்றாம் உலகப் போருக்கான வேலைத்திட்டமாகும். மீதமுள்ள அனைத்து சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளும் இந்த வகையான மறு ஆயுதமயமாக்கலுக்கு பலியாகின்றன. போர்க்களங்களில் எண்ணற்ற மனித உயிரிழப்புகளைப் பற்றி குறிப்பிடத் தேவையில்லை. கடந்த காலத்தைப் போலவே, இந்த பைத்தியக்காரத்தனத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு கொடூரமான சர்வாதிகாரத்தை நிறுவுவது தேவைப்படும்.

உலக சோசலிச வலைத் தளம் அதன் தேர்தலுக்கு முந்தைய முன்னோக்கில் எழுதியதைப் போல, ஜேர்மன் கூட்டாட்சித் தேர்தல் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையைக் குறிக்கிறது. பாசிசம், இராணுவவாதம் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டம் என்பது, ஒரு சோசலிச அடிப்படையில் தொழிலாளர்களின் ஒரு சுயாதீனமான இயக்கத்தால் மட்டுமே தலைமை தாங்கப்பட முடியும் என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்துடன் ஒரு மிருகத்தனமான மோதலுக்கு தயாரிப்பு செய்து வருகிறது. தொழிலாள வர்க்கம் பாரிய போராட்டங்களை மேற்கொள்வதுக்கு தள்ளப்படும். இதற்கு தொழிலாளர்கள் ஒரு நனவான அரசியல் வேலைத்திட்டத்துடன் விடையிறுப்பார்களா என்பதுதான் தீர்க்கமான கேள்வியாகும்.

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவை தொழிலாள வர்க்கத்தின் புதிய புரட்சிகர தலைமையாக கட்டியெழுப்புவது இப்போது முக்கியமானதாகும். நாம் எமது வாக்காளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரையும் ஒரு நனவான முடிவை எடுத்து, எமது கட்சியின் உறுப்பினர்களாக ஆகுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

பேர்லினில், சோசலிச சமத்துவக் கட்சி அதன் மாநில பட்டியலுக்கு 425 வாக்குகளைப் பெற்றது. இது கடந்த தேர்தலுடன் ஏறக்குறைய சமமாக இருந்தது. டியூஸ்பேர்க் வடக்கு தொகுதியில் ஒரு நேரடி வேட்பாளராக சோசலிச சமத்துவக் கட்சியின் துணைத் தலைவர் டீட்மார் கைசென்கெர்ஸ்டிங் (Dietmar Gaisenkersting) 560 வாக்குகள் (0.5 சதவீதம்), மற்றும் லைப்சிக் I தொகுதியில் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் மார்ட்டின் மவுவர் (Martin Mauer) 310 வாக்குகளைப் (0.2 சதவீதம்) பெற்று குறிப்பிடத்தக்க முடிவுகளைப் பெற்றுள்ளனர்.