மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஜேர்மனியின் கூட்டாட்சி தேர்தல், ஒவ்வொரு பிரதான முதலாளித்துவ நாட்டிலும் நிலவும் ஆழமான அரசியல் மற்றும் சமூக நெருக்கடியைப் பிரதிபலிக்கிறது. ஜேர்மனியின் நிலைமை உலகளாவிய விளைவுகளுடன் வெடிக்கும் வர்க்க மோதல்களுக்கு இட்டுச் செல்லும்.
சமூக ஜனநாயகக் கட்சி (SPD), பசுமைக் கட்சி மற்றும் தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP) அடங்கிய கூட்டணி அரசாங்கத்தின் மீதான பாரிய கோபத்தின் வெளிப்பாடாக இந்த தேர்தல் முடிவு உள்ளது. அரசாங்கத்தின் போர் மற்றும் சிக்கனக் கொள்கை பாதுகாப்புச் செலவினங்களை இரட்டிப்பாக்கி, சமூக நலத் திட்டங்கள், கல்வி மற்றும் சுகாதாரத்தை வெட்டிக் குறைத்துள்ளது, மேலும் விலைவாசி உயர்வு மற்றும் வீட்டு வாடகை அதிகரிப்பின் ஊடாக சமூகத்தின் பரந்த பிரிவுகளின் வாழ்க்கைத் தரங்களையும் அழித்துள்ளது.
ஜேர்மன் கூட்டாட்சி குடியரசின் வரலாற்றில் இதற்கு முன்னர் ஒருபோதும் பதவியில் இருக்கும் ஒரு அரசாங்கம் இவ்வளவு வாக்குகளை இழந்ததில்லை. ஒட்டுமொத்தமாக, கூட்டணிக் கட்சிகள் 19.5 சதவீத புள்ளிகளை இழந்தன. தாராளவாத ஜனநாயகக் கட்சி கூட்டாட்சி பாராளுமன்றத்தில் இடம் பெறக்கூட முடியவில்லை. 1887 ஆம் ஆண்டு பிஸ்மார்க்கின் சோசலிச எதிர்ப்பு சட்டங்களின் கீழ், சமூக ஜனநாயகக் கட்சி ஒடுக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட காலத்துக்கு பின்பு, 16 சதவீத வாக்குகளுடன் கட்சி அதன் மோசமான முடிவைப் பெற்றுள்ளது.
கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CDU/CSU) வருங்கால கூட்டாட்சி சான்சிலராக பிரெடெரிக் மெர்ஸுக்கு வாய்ப்பளிக்கக் கூடும். ஆயினும்கூட, இது 28.5 சதவீதத்துடன் வரலாற்றில் அதன் இரண்டாவது மோசமான முடிவைக் கொண்டிருந்தது. தற்போது தயாரிப்பு செய்யப்பட்டு வருகின்ற கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியம் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகள் அடங்கிய “மகா கூட்டணியின்” ஒரு புதிய பதிப்பு, ஜேர்மன் வரலாற்றில் மிகச்சிறிய கூட்டணியாக இருக்கும். அதற்கு 45 சதவீத வாக்காளர்களின் ஆதரவு மட்டுமே இருக்கும். 14 சதவீத வாக்காளர்கள் கட்சிகளுக்கு வாக்களித்தால் மட்டுமே அதற்கு நாடாளுமன்றத்தில் குறுகிய பெரும்பான்மை பிரதிநிதிகள் இருக்க முடியும். ஆனால், இந்தக் கட்சிகள் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கான 5 சதவீத வரம்பை எட்டவில்லை.
சமூக ஜனநாயகக் கட்சி/பசுமைக் கட்சி/FDP கூட்டணியின் முன்கூட்டிய முடிவுக்கு வழிவகுத்த பாரிய பணிநீக்கங்கள், சமூக வெட்டுக்கள் மற்றும் போர்க் கொள்கையை ஒரு “மகா கூட்டணி” தீவிரப்படுத்தும். அது தீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சியை அதிகளவில் நம்பியிருக்கும். இந்த தேர்தலில், AfD அதன் வாக்குகளை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கி 20.8 சதவீதமாக உயர்த்தியுள்ளது. ஹட்லரின் மூன்றாம் பேரரசின் வீழ்ச்சிக்கு எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு பாசிசக் கட்சி முதல் முறையாக பாராளுமன்றத்தில் இரண்டாவது வலிமையான சக்தியாக மாறியுள்ளது.
பாசிசம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தை எவ்வாறு நடத்துவது என்பதுதான் இப்போது எழுந்துள்ள முக்கியமான கேள்வியாக உள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைக் கட்சி மற்றும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் ஆகியவை தங்கள் போர் மற்றும் சிக்கனக் கொள்கைகள் மீதான சீற்றத்தை, சமூகத்தின் மிகவும் நலிந்த உறுப்பினர்கள் மீதான தாக்குதல்களுக்குப் பின்னால் திசைதிருப்ப தங்களால் இயன்ற அனைத்தையும் செய்தன. இவர்கள் அகதிகளுக்கு எதிராக ஒரு கீழ்த்தரமான அவதூறு பிரச்சாரத்தை ஒழுங்கமைத்தனர். கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் சான்சிலர் வேட்பாளரான பிரெடெரிக் மெர்ஸ், தீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியுடன் (AfD) ஒரு உடன்படிக்கையை செய்து கொண்டு, பாசிசவாதிகளுடன் சேர்ந்து புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றினார்.
இதன் விளைவாக AfD இயல்பாக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டது. அதேநேரத்தில், தொழிற்சங்கங்கள் வேலை மற்றும் சமூக வெட்டுக்களுக்கு எதிரான எந்தவொரு போராட்டத்தையும் முறையாக அடக்கியதாலும், அரசாங்கத்தின் போர்க் கொள்கையை ஆதரித்ததாலும் AfD தன்னை அரசியல் ஸ்தாபனத்தின் எதிர்ப்பாளராகக் காட்டிக்கொள்ள முடிந்தது. இதற்கு சான்றாக, தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கத்தில், வோக்ஸ்வாகனில் 35,000ம் வேலைகளை அழிப்பதற்கும் 20 சதவீதம் வரை ஊதியங்களைக் குறைப்பதற்கும் எந்தவொரு போராட்டமும் இல்லாமல் IG மெட்டல் தொழிற்சங்கம் உடன்பட்டது.
இத்தகைய நிலைமைகளின் கீழ், சமூகப் பேரழிவு மீதான கோபம் விரக்தியாக மாறி, AfD க்கு ஒரு விளைநிலத்தை உருவாக்கியது. இது குறிப்பாக, கிழக்கு ஜேர்மனியில் நிஜமாக இடம்பெற்றது. அங்கு SPD, CDU மற்றும் இடது கட்சி ஆகியவை முதலாளித்துவ மீட்சிக்குப் பின்னர் ஒரு சமூகப் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. அங்கே, AfD 36.2 சதவீத வாக்குகளுடன் மிகப் பலமான சக்தியாக ஆனது. தொழிலாளர்கள் மத்தியில், இக்கட்சி தேசியளவிலான 38 சதவீத வாக்குகளைப் பெற்றது. இது வேறெந்தக் கட்சியும் பெற்றதை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
எவ்வாறிருப்பினும், அகதிகளுக்கு எதிரான கிளர்ச்சிப் பிரச்சாரங்களும் சமூக வாய்வீச்சும் நிதி மூலதனத்தின் மிகவும் பேராசை கொண்ட பிரிவுகளின் நலன்களை AfD பிரதிநிதித்துவம் செய்கிறது என்ற உண்மையை என்றென்றைக்குமாக மறைக்க முடியாது. தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை நசுக்குவதற்காகவும், ஹங்கேரியில் விக்டர் ஓர்பன் முதல் இத்தாலியில் ஜியோர்ஜியா மெலோனி, நெதர்லாந்தில் கீர்ட் வைல்டர்ஸ், ஆர்ஜென்டினாவில் ஜேவியர் மிலே மற்றும் அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் வரை பணக்காரர்களை மேலும் வளப்படுத்துவதற்கான அனைத்துத் தடைகளையும் உடைப்பதற்காகவும் பாசிசக் கட்சிகள் பல நாடுகளில் அதிகாரத்திற்கு கொண்டு வரப்படுகின்றன.
ஜேர்மன் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சார்பாக முன்னெப்போதும் இல்லாத வகையில், சமூக வெட்டுக்குறைப்பு பிரச்சாரத்தை ஒழுங்கமைத்து வரும், உலகின் மிகப் பெரிய செல்வந்தரான எலோன் மஸ்க்கிடம் இருந்து AfD பாரிய ஆதரவைப் பெற்றது.
ஜேர்மனியிலும் AfD அரசாங்கத்திற்குள் கொண்டு வரப்படுவது என்பது வெறுமனே ஒரு காலத்தின் விடயம் மட்டுமேயாகும். ஆளும் வர்க்கத்தின் நிலைப்பாட்டில் இருந்து, நாஜிக்களை அவர்கள் அற்பமாக்குவதும் புலம்பெயர்ந்தோர் மீதான அவர்களின் வெறுப்பும் இதற்குத் தடையாக இல்லை. தற்போதுள்ள ஒரே தடைகள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உக்ரேன் மீதான வெளியுறவுக் கொள்கை வேறுபாடுகள் மட்டுமே ஆகும்.
ஆனால், AfD ஸ்தாபக கட்சிகளால் இயல்பாக்கப்பட்டு அரவணைக்கப்பட்டு வருகின்ற அதேவேளையில், இந்த பாசிசவாதிகளுக்கு எதிர்ப்புகள் அதிகரித்தும் வருகிறது. இது குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி வாரங்களில் வெளிப்படையாகத் தெரிந்தது. கடந்த பிப்ரவரி தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் பாசிஸ்டுகளுடன் வாக்களிப்பதன் மூலம் மெர்ஸ் AfD-க்கான தடுப்புச்சுவர் என்று அழைக்கப்பட்டதைத் தகர்த்தெறிந்த பிறகு, லட்சக்கணக்கான இளைஞர்கள் வீதிகளில் இறங்கி AfD மற்றும் அரசியல் ஸ்தாபனத்தின் வலதுசாரி மாற்றத்திற்கு எதிராகப் போராடினர்.
அரசியல்ரீதியாக, இது சமூக வெட்டுக்கள் மற்றும் அகதிகளை நாடு கடத்துவதில் கணிசமாக பங்களிப்பு செய்துவரும் இடது கட்சிக்கு (Die Linke) ஆதாயமளித்துள்ளது. மேலும், அது அனுபவித்து வரும் இளம் உறுப்பினர்கள் மற்றும் வாக்காளர்களின் திடீர் வருகையால் மிகவும் ஆச்சரியமடைந்தவர்களில் இடது கட்சியும் ஒன்றாகும்.
கடந்த ஜனவரியில் இடது கட்சி 3 சதவீத வாக்குகளை மட்டுமே கருத்துக்கணிப்பில் பெற்றிருந்த போதிலும், அது தேர்தலில் 8.8 சதவீத வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற பிரிவாக பாராளுமன்றத்திற்குள் நுழைந்தது. இளம் வாக்காளர்களிடையே, அது 25 சதவீத வாக்குகளுடன் வலுவான கட்சியாகவும் மாறியது. மேலும் பேர்லின் மாநிலத்திலும் 19.9 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தையும் பிடித்தது.
இடது கட்சியுடன் இளைஞர்கள் கொண்டுள்ள நம்பிக்கைகளுக்கும், அது உண்மையில் எதை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதற்கும் இடையே ஒரு பெரிய வேறுபாடு உள்ளது. இளைஞர்கள் பாசிசவாதிகளை எதிர்க்க விரும்புகின்றனர், அகதிகள் மீதான கிளர்ச்சிப் பிராச்சாரத்தை நிராகரிக்கின்றனர், நியாயமான வருமானங்களையும் கட்டுபடியாகக்கூடிய மலிவு வாடகைகளையும் விரும்புகின்றனர். இடது கட்சி மட்டுமே பாராளுமன்றத்தில் சமூகப் பிரச்சினைகளில் (பணக்காரர்கள் மீதான வரிகள், குறைந்தபட்ச ஊதிய உயர்வு மற்றும் வாடகைக் கட்டுப்பாடுகள்) தனது தேர்தல் பிரச்சாரத்தை மையப்படுத்திய ஒரே கட்சியாக இருந்ததால், அது நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஆனால், அதிகாரத்தில் இருப்பவர்கள் வலதை நோக்கி திரும்புவதை எதிர்ப்பதற்கு இடது கட்சியிடம் எந்த வேலைத்திட்டமும் கிடையாது. ஆளும் வர்க்கத்தின் முக்கிய கட்சிகள், பாராளுமன்ற எதிர்ப்பு மற்றும் தெருக்களில் இருந்து வரும் அழுத்தம் ஆகியவற்றின் மூலம் போக்கை மாற்றிக்கொள்ள முடியும் என்ற போலித் தோற்றத்தை இடது கட்சி பரப்பி வருகிறது.
உதாரணமாக, இடது கட்சியின் தலைவரான ஜான் வான் ஏகென், பாராளுமன்றத் திட்டங்களில் புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்காக தனது கட்சி “பேச்சுவார்த்தை நடத்த” தயாராக இருப்பதாக தேர்தல் தினத்தன்று மாலை அறிவித்தார். “நீங்கள் இணைந்து ஆட்சி செய்ய வேண்டிய அவசியமில்லை, நீங்கள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் மற்றும் பாராளுமன்றத்திற்கு வெளியே உள்ள எதிர்க்கட்சியிலிருந்து நிறைய வெல்ல முடியும்,” என்று கிரீன்பீஸுடனான தனது அனுபவத்தைக் குறிப்பிட்டு அவர் விளக்கினார்.
இடது கட்சி, முதலாளித்துவத்தை ஒழிக்க முடியாது, சீர்திருத்தம் செய்வது சாத்தியம் என்று கூறுகிறது. ஆனால், இது ஒரு ஆபத்தான மாயையாகும். ஆளும் உயரடுக்கினர் வலது பக்கம் திரும்புவது என்பது தவறான கொள்கைகளின் விளைவாக மட்டுமல்ல, மாறாக அதனை சிறிய அழுத்தம் கொடுப்பதன் மூலம் சரிசெய்யவும் முடியாது. அனைத்து இடங்களிலும் ஆளும் வர்க்கம் அதன் சமூக அமைப்பு முறையின் ஆழமான நெருக்கடியை எதிர்கொள்வதால் சர்வாதிகாரத்தையும் போரையும் நாடி வருகிறது.
20 ஆம் நூற்றாண்டைப் போலவே, முதலாளித்துவம் மீண்டும் பாசிசம் மற்றும் போருக்கு இட்டுச் செல்கிறது. இதை அமெரிக்காவில் மிகத் தெளிவாகக் காணலாம்.
அடுத்த அரசாங்கத்தின் கொள்கை முதலாளித்துவத்தின் சர்வதேச நெருக்கடியால் முழுமையாக மேலாதிக்கம் செலுத்தப்படும். நேட்டோ மற்றும் ட்ரம்பின் வர்த்தகப் போர் நடவடிக்கைகளின் முறிவுக்கு எதிர்வினையாற்றி வருகின்ற ஜேர்மன் ஆளும் வர்க்கம், ஐரோப்பாவின் “முன்னணி சக்தியாக” அதன் சொந்தக் கணக்கில் பாரிய அளவில் மீள்ஆயுதபாணியாகி, போரை நடத்தத் தயாராகிறது. தேர்தல் நடந்த இரவிலேயே இது ஏற்கனவே தெளிவாகத் தெரிந்தது.
உக்ரேனுக்கு மேலும் கூடுதல் ஆயுத விநியோகங்களுக்கு மெர்ஸ் அழைப்பு விடுத்தார். ரஷ்யாவுடனான முழு நேட்டோ எல்லையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். திங்களன்று, மெர்ஸ் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்து, சர்வதேச கைது வாரண்ட் இருந்தபோதிலும், அவரை ஜேர்மனிக்கு அழைத்தார். இதன்மூலம், சான்ஸ்லர் என்ற முறையில், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு அவர் தொடர்ந்து ஆதரவளிப்பார் என்பதை சுட்டிக்காட்டினார்.
ஊடக அறிக்கைகளின்படி, பழைய பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர், ஜேர்மன் ஆயுதப் படைகளுக்கு 200 பில்லியன் யூரோக்களை வழங்குவதற்காக ஒரு புதிய சிறப்பு நிதியை நிறைவேற்றுவது குறித்து CDU/CSU மற்றும் SPD ஆகியவை பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஒரு “சுயாதீன ஐரோப்பிய பாதுகாப்புத் திறன்” இப்போது மிக விரைவாக மேம்படுத்தப்பட வேண்டும் என்று பசுமைக் கட்சித் தலைவர் ஹேபெக் விளக்கினார். “பாதுகாப்பு, இராணுவ பாதுகாப்பு, எதிர் உளவு பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் துறையிலும் நாம் இப்போது ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், மேலும் இதற்காக எங்களுக்கு பெரும் அளவு பணம் தேவைப்படும்,” என்று அவர் கூறினார்.
இந்த “பிரமாண்டமான தொகைகள்” தொழிலாளர்களிடம் இருந்து பிழிந்தெடுக்கப்பட உள்ளன. பொதுத்துறையில் பாரிய வேலை மற்றும் ஊதியக் குறைப்புக்கள், ஓய்வூதியங்கள், கல்வி மற்றும் மருத்துவப் பாதுகாப்பு ஆகியவற்றின் மீதான வெட்டுக்கள் நீண்டகாலமாகவே திட்டமிடப்பட்டு வருகின்றன. இதனுடன் தொழில்துறையில் வேலைகள் பெருமளவில் அழிக்கப்படுகின்றன, இதனால் பெரிய நிறுவனங்கள் வர்த்தகப் போருக்குத் தயாராகி வருகின்றன. இது ஜனநாயகத்துடன் ஒத்துப்போகவில்லை. ஆதலால், ஒரு சர்வாதிகாரத்தை நிறுவ வேண்டும்.
இதை எதிர்க்க இடது கட்சி எதுவும் செய்யவில்லை. மாறாக, அது அரசாங்கப் பொறுப்புக்களை எடுத்துக்கொண்ட இடமெல்லாம், அது எந்த சமூக சீர்திருத்தங்களையும் முன்னெடுக்கவில்லை. மாறாக தொழிலாளர்களின் உரிமைகள் மீதான மோசமான தாக்குதல்களையே முன்னெடுத்துள்ளது. பேர்லினில், வேறெந்த மாநில அரசாங்கத்தையும் விட ஊதியங்கள், கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பை அது வெட்டித் தள்ளியது. இன்றுவரை அதன் ஒரே முதலமைச்சர் போடோ ராமலோ, வேறு எந்த கூட்டாட்சி மாநிலத்தையும் விட துரிங்கியாவில் இருந்து அதிகமான அகதிகளை நாடு கடத்தியுள்ளார்.
இடது கட்சியின் உண்மையான நிலைப்பாடு குறிப்பாக போர் பிரச்சினையில் தெளிவாக உள்ளது. இது பெரும்பாலும் கூட்டாட்சி அரசாங்கத்தின் வழியை ஏற்றுள்ளது. அதன் கடைசி கட்சி மாநாட்டில், அது அதன் முந்தைய அமைதிவாத வார்த்தைகளை உத்தியோகபூர்வமாக கைவிட்டு, உக்ரேனுக்கு ஆயுத விநியோகங்களை வரவேற்றதுடன், இஸ்ரேலின் “தற்காப்பு உரிமையை” கையிலெடுத்தது.
முதலாளித்துவத்தைத் தூக்கிவீசாமல் எந்தவொரு பிரச்சினையைக் கூட தீர்ப்பதோ அல்லது ஒரு பேரழிவுகரமான உலகப் போரைத் தடுப்பதோ சாத்தியமில்லை. ஆனால், இடது கட்சி இதை நிராகரிக்கிறது. அதன் ஒட்டுமொத்த கொள்கையும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பயனற்ற முறையீடுகள் செய்வதன் மூலமும், தொழிலாளர்களை அரசாங்கத்திற்கு அடிபணியச் செய்வதன் மூலமும் போர், பாசிசம் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக வளர்ந்து வரும் அணிதிரள்வை முடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுதான் பாசிஸ்டுகளை மேலும் பலப்படுத்துவதற்கான உறுதியான வழிமுறையாக இருக்கிறது.
அதே காரணத்திற்காக, இடது கட்சி, எந்தவொரு தீவிரமான தொழில்துறை நடவடிக்கையையும் நாசப்படுத்தும் தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவ எந்திரங்களுடன் நெருக்கமாக செயல்படுகிறது. மேலும் இடது கட்சி, பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களின் “சமூக பங்காளிகளாக” செயல்பட்டு வேலை மற்றும் சமூக வெட்டுக்களை ஒழுங்கமைக்கின்றது.
ஜேர்மனியில் இடது கட்சியின் பங்கு சர்வதேச அளவில் பல வடிவங்களில் மீண்டும் நிகழ்கிறது. கிரேக்கத் தொழிலாளர்கள் இடது கட்சியின் சகோதரக் கட்சியான சிரிசாவுடன் அதே அனுபவத்தைக் கொண்டுள்ளனர். மேலும், ஸ்பானிய தொழிலாளர்கள் போடெமோஸின் அனுபவத்தைக் கொண்டுள்ளனர். தங்கள் வாக்காளர்களின் விருப்பத்தை அல்லது சர்வதேச வங்கிகளின் கட்டளைகளைப் பின்பற்றுவதற்கான மாற்றீட்டை எதிர்கொண்டு, பேரழிவு தரும் சமூக விளைவுகளுடன் அவர்கள் பிந்தையதைத் தேர்வு செய்கிறார்கள்.
அமெரிக்காவில், அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA), ஜனநாயகக் கட்சிக்கு முட்டுக் கொடுக்க அதனால் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றது. ஜனநாயகக் கட்சியின் சொந்த போர் மற்றும் சமூக செலவின சிக்கனக் கொள்கைகளே ட்ரம்ப் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கான நிலைமைகளை உருவாக்கின. DSA உடன் இணைந்த ஜேக்கோபின் பத்திரிகை, “ஜேர்மனியின் தேர்தலுக்குப் பிறகு, இடதுசாரிகள் மீண்டும் நம்பிக்கை கொள்ளலாம்” என்ற தலைப்பில், இடது கட்சியைப் புகழ்ந்து ஒரு கட்டுரையுடன் ஜேர்மன் தேர்தலுக்கு பதிலளித்தது.
ஜேர்மனியின் நிலைமை குறித்து மட்டுமல்ல, மாறாக அமெரிக்காவிலும் கூட DSA க்கு கவலை உள்ளது. இது பேர்னி சாண்டர்ஸ் மற்றும் அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் போன்ற பிரமுகர்களை மீண்டும் உயிர்ப்பித்து, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டலைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜேர்மனியிலும் உலகெங்கிலும், பாசிசத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தொழிலாள வர்க்க போராட்டத்தின் வளர்ச்சி அவசியமாகும். வேலைநீக்கங்கள் மற்றும் ஊதியக் குறைப்புகளுக்கு எதிரான போராட்டம் போர் மற்றும் பாசிசத்திற்கு எதிரான அரசியல் அணிதிரட்டலுடன் இணைக்கப்பட வேண்டும். இந்த வழியில் மட்டுமே தொழிலாளர்கள் தமது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் முதலாளித்துவ தன்னலக்குழுவை எதிர்க்கவும் முடியும்.
இதற்கு ஜேர்மனியில் இடது கட்சி உட்பட தொழிற்சங்க எந்திரம் மற்றும் போலி-இடது அமைப்புகளின் முடக்கும் செல்வாக்கை முறியடிப்பது அவசியமாகும். காட்டுமிராண்டித்தனத்தின் மூல காரணமான முதலாளித்துவத்திற்கு எதிராக, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் சுயாதீனமான இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். அவர்கள் தொழிலாளர்களின் சர்வதேச ஐக்கியத்துடன் தேசியவாதம் மற்றும் போரின் வளர்ச்சியை எதிர்க்க வேண்டும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (SGP) இந்த வேலைத்திட்டத்திற்காக போராடி வருகிறது. கூட்டாட்சித் தேர்தலுக்கான எங்கள் தேர்தல் அறிக்கையில், நாங்கள் பின்வருமாறு எழுதினோம்:
3.5 பில்லியன் மக்களைக் கொண்டுள்ள சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒரு வலிமையான சமூக சக்தியாகும். இது, 1991 ஐ விட 55 சதவீதம் அதிகமாகும். இது, போர் மற்றும் நெருக்கடியின் ஒட்டுமொத்த சுமையையும் தாங்கி வருகின்ற அதேவேளையில், அனைத்து சமூக செல்வங்களையும் உருவாக்குகிறது. தொழிலாள வர்க்கம் அரசியல் வாழ்க்கையில் சுயாதீனமாக தலையீடு செய்து, சமூகத்தை ஒரு புரட்சிகர அடித்தளத்தில் மாற்றினால் மட்டுமே (பெரிய வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து அவற்றை ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்தல்) பேரழிவைத் தடுக்க முடியும்.
இந்த சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டம் இப்போது தீர்க்கமான முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. ஜேர்மனியில் உள்ள அனைத்து வாசகர்களையும் சோசலிச சமத்துவக் கட்சியின் செயலூக்கமான ஆதரவாளர்களாகப் பதிவு செய்யுமாறும், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எமது சகோதரக் கட்சிகளில் சேர்ந்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டியெழுப்புமாறும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.