மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த வாரம், புலம்பெயர்ந்தவர்கள் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் பாசிச தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா எங்கிலும் குறிப்பிடத்தக்க போராட்டங்கள் வெடித்துள்ளன. நியூயோர்க், சிகாகோ, ஹூஸ்டன், டெட்ராய்ட் மற்றும் சான் டியாகோ போன்ற பெரிய நகரங்களிலும், அத்துடன் அர்கன்சாஸ், ஜோர்ஜியா, அயோவா மற்றும் மிசூரி உட்பட தெற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதி முழுவதும் சிறிய நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.
லொஸ் ஏஞ்சல்ஸில், வார இறுதியிலும் திங்களன்றும் நடந்த போராட்டங்கள் செவ்வாயன்று மாணவர் வெளிநடப்புகளாக விரிவடைந்தன. நூற்றுக்கணக்கான உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டனர். கலிபோர்னியா, டெக்சாஸ், மிச்சிகன் மற்றும் பிற மாநிலங்களிலும் வெளிநடப்புகள் நடந்துள்ளன. நாடு தழுவிய அளவில், மாநில தலைநகரங்கள் உட்பட, 50501 இயக்கத்தின் (50 மாநிலங்கள், 50 போராட்டங்கள், 1 நாள்) பதாகையின் கீழ் பெரிய ஆர்ப்பாட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தப் போராட்ட இயக்கம் சமீபத்திய நாட்களில் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்தப் போராட்டங்கள், ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மீதான வளர்ந்து வரும் எதிர்ப்பு மற்றும் திகிலின் குறிப்பிடத்தக்க வெளிப்பாடாகும். ட்ரம்ப் நிர்வாகம் அதிகாரத்துக்கு வந்த இரண்டு வாரங்களில் தொழிலாள வர்க்கத்தின் மீதான பரந்த போருக்கும் ஜனநாயக உரிமைகளை தகர்ப்பதற்கும் ஒரு முன்னணி தாக்குதலை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தொடங்கியுள்ளது.
ட்ரம்ப், மத்திய கூட்டாட்சி நிறுவனங்களை அழித்து, அரசியலமைப்பை அப்பட்டமாக மீறி, செலவினங்களை முடக்கி, பொதுக் கல்வி மற்றும் பிற சமூகத் திட்டங்களை அகற்றும் பணியைத் தொடங்கியுள்ளார். அத்துடன், சமூக சேவைகளை வெட்டித் தள்ளுவதற்கான பொறுப்பு உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மஸ்க் அரசாங்கத்தை தனது சொந்த தனியார் நிறுவனம் போல நடத்தி வருகிறார். அவர் பாரிய பணிநீக்கங்களுக்கு ஆணையிடுகிறார், கூட்டாட்சி ஊழியர்களுக்கு இறுதி எச்சரிக்கைகளை வழங்குகிறார், மேலும் தேர்ந்தெடுக்கப்படாத “அரசாங்க செயல்திறன் துறையில்” அதிகாரத்தை பலப்படுத்துகிறார்.
ட்ரம்பின் திட்டநிரலின் மையத்தில் தடையற்ற நிறைவேற்று அதிகாரம் மற்றும் ஜனாதிபதி சர்வாதிகாரத்தின் வலியுறுத்தல் உள்ளது. தெற்கு எல்லையில் ஒரு இட்டுக்கட்டப்பட்ட “படையெடுப்பை” அவர் அறிவித்துள்ளார். எல்லையை “மூடுவதற்கும்” புலம்பெயர்வு சட்டத்தை மீறுவதற்கும் அமெரிக்க வடக்கு கட்டளையகத்தின் (NORTHCOM) கீழ் இராணுவத்தை நிலைநிறுத்தியுள்ளார். அத்துடன் குவாண்டநாமோ வளைகுடாவை ஒரு பாரிய புலம்பெயர்ந்தோர் சித்திரவதை முகாமாகவும், இலத்தீன் அமெரிக்காவை ஒரு மிகப்பெரும் அமெரிக்க சிறைச்சாலையாகவும் மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளார். அவரது நிர்வாக உத்தரவுகள் ஏற்கனவே தொடங்கியுள்ள பாரிய நாடுகடத்தல்களுக்கும், இராணுவச் சட்டத்திற்கான அடித்தளத்தை அமைக்க கிளர்ச்சிச் சட்டத்தை செயல்படுத்துவதற்கும் வழி வகுக்கின்றன.
இந்த சூழ்நிலையில், ஜனநாயகக் கட்சி மௌனத்துடனும் செயலிழந்த நிலையுடனும் பிரதிபலித்து வருகிறது. சிறுபான்மையினராக இருந்தாலும், குடியரசுக் கட்சியினர் அரசாங்கத்தைத் தடுக்கவும், முடக்கவும், நசுக்கவும் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். இதற்கு நேர்மாறாக, ஜனநாயகக் கட்சியினர், அவர்கள் பெரும்பான்மையைக் கொண்டிருந்தாலும், குடியரசுக் கட்சியினரை தடுத்து நிறுத்த முடியாத சக்தியாக, எந்த அர்த்தமுள்ள வகையிலும் எதிர்க்க முடியாத சக்தியாக கருதுகின்றனர்.
இந்த செயலற்ற தன்மை மிகவும் தெளிவாகிவிட்டதால், பைனான்சியல் டைம்ஸின் மிக முக்கியமான கட்டுரையாளர்களில் ஒருவரான எட்வர்ட் லூஸ், இந்த வாரம் அவர்களைப் பகிரங்கமாகக் கண்டித்தார். “ஜனநாயகக் கட்சியினர் உறங்கிக் கொண்டிருக்கையில்” என்ற தலைப்பின் கீழ், லூஸ் திங்களன்று, “அமெரிக்காவின் சிறுபான்மைக் கட்சி அதன் செயலை ஒன்றிணைக்க மிகவும் குடிபோதையில் உள்ளது என்று கூறுவது தர்மமாகும்” என்று எழுதினார்.
மேலும், “ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்ப்பின் வேட்பாளர்களுக்கான உறுதிப்படுத்தல் விசாரணைகளைத் தடுத்திருக்க முடியும் – அவர்களில் பலர், கடந்த சகாப்தத்தின் அறையில் இருந்து சிரித்திருப்பார்கள். அலபாமாவைச் சேர்ந்த டாமி டியூபர்வில்லே என்ற ஒரே ஒரு குடியரசுக் கட்சிக்காரர் மட்டுமே, 2023 ஆம் ஆண்டின் பெரும்பகுதியில் ஜோ பைடெனின் அனைத்து இராணுவ நியமனங்களையும் முடக்கினார். ஆனால், ஜனநாயகக் கட்சியினர் வழக்கமான ஒழுங்கையே பின்பற்றி வருகிறார்கள்” என்று லூஸ் குறிப்பிட்டார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அரசியலமைப்பு விதியின் எஞ்சிய பகுதியை ட்ரம்ப் நசுக்கும்போது, ஜனநாயகக் கட்சியினர் வழக்கம் போல் செயல்பட வலியுறுத்தி வருகின்றனர் என்பதாகும்.
நியூ யோர்க் டைம்ஸும் சில சந்தர்ப்பங்களில் ஜனநாயகக் கட்சியினரின் செயலற்ற தன்மையை கவனத்தில் கொண்டுள்ளது. இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், “ட்ரம்பை எதிர்க்க ஜனநாயகக் கட்சியினரின் போராட்டம் என்ற எங்களுக்கு ஒத்திசைவான செய்தி இல்லை” என்று குறப்பிட்டுள்ளது. “தனிப்பட்ட கூட்டங்களிலும் பொது நிகழ்வுகளிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகக் கட்சியினர் தலைமையற்றவர்களாகவும், திசைகாட்டி இல்லாதவர்களாகவும், பிளவுபட்டவர்களாகவும் காணப்படுகின்றனர். திரு ட்ரம்பை அடிக்கடி, எவ்வளவு கடுமையாக எதிர்ப்பது என்பதில் அவர்கள் உடன்படவில்லை. அவர்கள் ஏன் தேர்தலில் தோற்றார்கள் என்பது பற்றிய பொதுவான புரிதல் இல்லை. எதிர்காலத்தில் அவர்கள் எப்படி வெற்றி பெற முடியும் என்பதுகூட முக்கியமல்ல” என்று அந்தக் கட்டுரை மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், வேலைநிறுத்தம் அல்லது தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை உடனடியாக எதிர்கொண்டு, விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுப்பதில் ஒருபோதும் பிரச்சினை இல்லாத ஒரு கட்சியே ஜனநாயகக் கட்சியாகும். பைடெனின் கீழ், அதன் நிர்வாகம் 2022 இல் ஒரு இரயில் வேலைநிறுத்தத்தை முன்கூட்டியே தடை செய்ய காங்கிரஸுடன் இணைந்து செயல்பட்டு, தொழிலாளர்கள் முன்னர் நிராகரித்த ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்ற நிர்பந்தித்தது. இதே பைடென் நிர்வாகம், இஸ்ரேலிய போர்க் குற்றங்களை அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆதரிப்பதற்கான எதிர்ப்பை ஒடுக்கும் முயற்சியில், ஆர்ப்பாட்டக்காரர்களை “யூத-எதிர்ப்புவாதிகள்” என்று அவதூறு செய்வதில் குடியரசுக் கட்சியினருடன் கைகோர்த்து, காசாவில் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்கள் மீதான மிருகத்தனமான ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது.
எவ்வாறிருப்பினும், ட்ரம்ப் மற்றும் அவரைச் சுற்றியுள்ள பாசிசவாதிகள் என்று வரும்போது, ஜனநாயகக் கட்சியினரின் முதன்மையான கவலை எப்போதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நலன்களாகவே இருந்து வருகிறது. ட்ரம்ப் மீதான முதல் பதவிநீக்க குற்றவிசாரணைக்கும், ஜனநாயகம் மீதான அவரது தாக்குதல்களுடனோ அல்லது அவரது ஆட்சிக்கவிழ்ப்பு சதித்திட்டத்துடனோ எந்த அக்கறையும் காட்டாத ஜனநாயகக் கட்சி, உக்ரேன் தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் கவனம் செலுத்தியது.
இப்போது, ட்ரம்ப் அரசியலமைப்பைத் தாக்கி வருவதால், அவரை பதவி நீக்கம் செய்வதற்கான எந்த அறிகுறியும் ஜனநாயகக் கட்சியிடம் இல்லை. ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி வாரங்களில் தோன்றிய ஜனநாயகத்திற்கும் அவரது பாசிச அரசியலுக்கும் ட்ரம்பின் இருத்தலியல் அச்சுறுத்தல் பற்றிய சுருக்கமான குறிப்புகள் மறைந்துவிட்டன.
மௌனம் சம்மதத்தைக் குறிக்கிறது. ஒரு குறியீட்டு எதிர்ப்பைக் காட்டுவது கூட, அவர்களால் கட்டுப்படுத்த முடியாத ஒரு இயக்கத்தை கீழிருந்து தூண்டிவிடக்கூடும் என்று ஜனநாயகக் கட்சியினர் அஞ்சுகிறார்கள். அவர்களின் முக்கிய அக்கறை, எந்தவொரு உண்மையான எதிர்ப்பையும் நசுக்குவதும், இடைகழி முழுவதும் உள்ள தங்கள் பாசிச சகாக்களுடன் ஒத்துழைப்பைப் பேணுவதும் ஆகும்.
வெள்ளை மாளிகையை “சுமூகமாக” ஒப்படைத்துவிட்டு, ட்ரம்ப் தனது ஜனாதிபதி பதவியில் “வெற்றி” பெற வாழ்த்திய பிறகு, பைடென் தனது நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பது தொடர்பாக நேரத்தை வீணாக்கவில்லை. பிரெஞ்சு பில்லியனர் பிரான்சுவா-ஹென்றி பினோவுக்கு சொந்தமான லொஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட படைப்பாற்றல் மிக்க கலைஞர்கள் நிறுவனத்துடன் (CAA) இலாபகரமான பெருநிறுவன பேச்சு நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய, பைடென் ஒப்பந்தம் செய்துள்ளார். அங்கு அவர் சந்தேகத்திற்கு இடமின்றி அமெரிக்காவின் ஆன்மாவைப் பற்றிய வெற்று வார்த்தைகளை கொண்ட ஒரு உரைக்கு 400,000 டாலர்களை ஈட்டுவார்.
போலி-இடதுகள், ஜனநாயகக் கட்சிக்குள்ளும் அதைச் சுற்றியும் செயல்படுகின்ற உயர்மட்ட நடுத்தர வர்க்க அமைப்புகளும், அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரத்தை வகித்து வருகின்றன.
அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகளுடன் (DSA) தொடர்புடைய பிரதான வெளியீடான ஜாக்கோபின் இதழ், “முதல் நாளில், ட்ரம்ப் தான் சர்வாதிகாரியாக இருப்பேன் என்று உறுதியளித்தவர் அல்ல” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. ட்ரம்ப் நிர்வாக உத்தரவுகளை சரமாரியாக பிறப்பித்திருந்தாலும், “இவை வரவிருக்கும் ஜனாதிபதிக்கு வழக்கமாக இருப்பதை விட ஓரளவு துணிச்சலான ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குச் சமம்”, ஆனால் சர்வாதிகார அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு அருகில் எதுவும் இல்லை என்று அது வாதிடுகிறது.
அதாவது, ஜாக்கோபின் கூற்றுப்படி, கவலைப்பட ஒன்றுமில்லை. ஜனநாயகக் கட்சியினர் ஒரு சாதாரண எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறார்கள், மேலும் வழக்கம் போல் அலுவல்களை தொடரலாம் என்று கருதுகிறார்கள்.
பேர்ணி சாண்டர்ஸும் அவரது “அரசியல் புரட்சி” அமைப்பும் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்களுக்கு எதிரான போராட்டங்களைக் கட்டுப்படுத்த முயல்வதற்கான அறிகுறிகள் இப்போது உள்ளன, அவற்றில் இன்று நடைபெறும் போராட்டங்களும் அடங்கும். வெளிப்படையாகச் சொல்லப் போனால்: ஜனநாயகக் கட்சி மற்றும் பைடென் நிர்வாகத்திற்கு எதிரான எதிர்ப்பைத் திசைதிருப்புவதன் மூலம் ட்ரம்பின் மீள் வருகைக்கு சாண்டர்ஸும் அவரைப் போன்றவர்களும் கணிசமான பொறுப்பைக் கொண்டுள்ளனர். அவர்கள் மீண்டும் அதில் இறங்கியுள்ளனர்.
ட்ரம்ப் மீண்டும் அதிகாரத்துக்கு வந்திருப்பதானது, ஜனநாயகக் கட்சிக்கு ஒரு அரசியல் தோல்வியாகும். மேலும் அதன் அரசியல் நடவடிக்கைக்கு சாவு மணி அடிக்க வேண்டும். நாடு முழுவதும் அதிகரித்து வரும் போராட்டங்கள் காட்டுவது போல், எதிர்ப்பு வளரும், வளர்ந்து கொண்டே இருக்கும். இப்போதுள்ள முக்கிய கேள்வியானது அரசியல் முன்னோக்கு பற்றியதாகும்.
சோசலிச சமத்துவக் கட்சி, ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினருக்கு எதிராக மட்டுமல்லாமல், முழு அரசியல் ஸ்தாபனத்திற்கும் எதிராக இயக்கப்படும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கத்தின் வளர்ச்சிக்கு தலைமை தாங்குகிறது.
நாடு முழுவதும் பணியிடங்கள், பள்ளிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் சுயாதீனமான சாமானிய தொழிலாளர் குழுக்களை கட்டியெழுப்ப சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. இந்தக் குழுக்கள், ட்ரம்பின் சர்வாதிகார ஆட்சி, ஜனநாயகக் கட்சியின் உடந்தை மற்றும் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான பரந்த தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஒன்றிணைத்து, எதிர்ப்பின் மையங்களாகச் செயல்படும். பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழுவிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் மகத்தான சமூக சக்தியை அணிதிரட்ட, வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் உட்பட வெகுஜன நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதற்கான கட்டமைப்பை அவை வழங்கும்.
சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம், அதை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாது. பில்லியனர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், ஏகாதிபத்திய போர் இயந்திரத்தை அகற்றவும், தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூகத் தேவைகளின் அடிப்படையில் பொருளாதார மற்றும் அரசியல் வாழ்க்கையை மறுசீரமைக்கும் ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை நிறுவவும் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட விரும்பும் அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து, அதனைக் கட்டியெழுப்புமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.