மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தால் (UNDP) வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களானது, உலகின் மிக ஏழ்மையான மக்கள் மீதான “பல்வேறு நெருக்கடிகளானது” பேரழிவு தரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
கோவிட்-19 தொற்றுநோய், வாழ்க்கைச் செலவு நெருக்கடி, பணவீக்கம், ஏகாதிபத்தியத்தின் அனைத்து மையங்களிலும் உள்ள வட்டி விகிதங்கள், அமெரிக்க டொலரின் உயரும் மதிப்பு, ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனில் அதிகரித்துவரும் அமெரிக்க-நேட்டோ தலைமையிலான போர், பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பேரழிவுகள் போன்றவை இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளன.
வறுமை விகிதங்கள், ஒரு நாளைக்கு $3.65க்கும் குறைவான வருமானத்தில் வாழும் மக்களின் எண்ணிக்கையால் அளவிடப்படுகிறது, 2020-23 மூன்று ஆண்டு காலப்பகுதியில் கூடுதலாக 165 மில்லியன் மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
UNDP இன் புதிய கொள்கை அறிக்கையின்படி “செயலற்ற தன்மைக்கான மனித விலையானது: வறுமை, சமூகப் பாதுகாப்பு மற்றும் கடன் சேவை என்பன 2020-2023” ல் இன்னும் மோசமாக வரவிருக்கிறது. உலக மக்கள்தொகையில் 10 சதவீதமான ஏழ்மையானவர்கள் மட்டுமே 2023 ஆம் ஆண்டிற்குள் தொற்றுநோய்க்கு முந்தைய, தனிநபர் உண்மையான வருமானம் ஆகியவற்றை மீண்டும் பெறாத ஒரே குழுவாக இருந்தனர் என்றும், குறைந்த வருமானம் உள்ள நாடுகளில், மக்கள்தொகையில் அடிமட்ட பாதிப் பேர் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்குக் கீழே இருப்பார்கள் என்றும் அது கணித்துள்ளது.
நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை, அறிவு மற்றும் ஒழுக்கமான வாழ்க்கைத் தரம் ஆகிய மூன்று அடிப்படை பரிமாணங்களில், சராசரி சாதனைகளை அளவிடும் உலகளாவிய மனித வளர்ச்சிக் குறியீட்டில் (HDI) அதிர்ச்சியூட்டும் சரிவு ஏற்பட்டுள்ளது. இது முதன்முறையாக, தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக குறைந்துள்ளது.
UNDP இன் 2023 கணக்கெடுப்பின்படி உலகின் 195 நாடுகளில், தலா 110 நாடுகளில் அதன் பல பரிமாண வறுமைக் குறியீட்டுத் (MPI) தரவு கிடைக்கிறது. 6.1 பில்லியன் மக்களில் 1.1 பில்லியன் பேர்கள் (வெறும் 18 சதவீதத்திற்கும் அதிகமானோர்) கடுமையான வறுமையில் வாழ்கின்றனர். துணை-சஹாரா ஆப்பிரிக்காவிலும் (534 மில்லியன்) மற்றும் தெற்காசியாவிலும் (389 மில்லியன்) ஒவ்வொரு ஆறு பேர்களில் ஐந்து பேர்கள் ஏழைகளாக இருக்கின்றனர்.
கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு ஏழைகள் (730 மில்லியன்) நடுத்தர வருமான நாடுகளில் வாழ்கின்றனர், அதே சமயம் 35 சதவீதம் பேர் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வசிக்கின்றனர். இதுவரை மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் இளம் தலைமுறையினர் ஆவர். 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் பாதி பேர் (566 மில்லியன்) பல பரிமாண வறுமைக் குறியீடு (MPI) ஏழைகளாக உள்ளனர். சிறுவர்களில் 27.7 சதவீதமும், பெரியவர்களில் 13.4 சதவீதமும் ஏழைகளாக உள்ளனர். உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கிராமப் புறங்களை வறுமை முக்கியமாக பாதிக்கிறது, உலகின் 84 சதவீத ஏழைகள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.
இதன் விளைவாக ஏற்படும் நீண்ட கால தாக்கங்கள் திகைப்பூட்டுகின்றன. இதன் பொருள் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் முழுத் தலைமுறையும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றன. அவர்கள் பள்ளி செயல்திறன்களில் மோசமாக இருப்பதுடன், குறைந்த வருமானத்தால் வாய்ப்புகள் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் மட்டும், ஐந்து வயதுக்குட்பட்ட 8 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அழிவுகரமான நிலைமைகள்தான் உள்ளூர் மற்றும் பிராந்திய மோதல்களுக்கு எரியூட்டி, தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, தங்கள் குடும்பங்களுக்கு வருமானம் தேடி அவர்களை இடம்பெயரச் செய்கின்றன.
UNDP அறிக்கை விளக்குவது போல், சமீபத்திய தசாப்தங்களில் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் பொதுக் கடன் அளவு, நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் உட்பட உலகளாவிய பொதுக் கடன், 2000 ஆம் ஆண்டு முதல் $92 டிரில்லியன் ஆக ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் $101 டிரில்லியனாக மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. வளரும் நாடுகள் மொத்தத்தில் கிட்டத்தட்ட 30 சதவிகிதம் கடன்பட்டுள்ளன, அதில் 70 சதவிகிதம் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகும்.
2020-21 ஆம் ஆண்டில் வட்டி விகிதங்கள் மிகக் குறைவாக இருந்தது. - (தொற்றுநோய் தொடங்கியதைத் தொடர்ந்து நிதிய அமைப்பை முடுக்கிவிட மத்திய வங்கிகள் டிரில்லியன் கணக்கான டொலர்களை உட் செலுத்தியது) நான்கு தசாப்தங்களில் மிக வேகமான வேகத்தில் பொருளாதார மந்தநிலையைத் தூண்டி, உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவை எதிர்கொள்வதற்கு, ஊதிய உயர்வுக்கான தொழிலாள வர்க்கத்தின் கோரிக்கைகளை கட்டுப்படுத்தும் முயற்சியில், 2022 ஆம் ஆண்டில் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்த ஆரம்பித்தன. இது சர்வதேச சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் பல பொருட்களுடன் இணைக்கப்பட்டுள்ள அமெரிக்க டொலரின் மதிப்பின் அதிகரிப்புக்கு வழிவகுத்தது, அதற்கேற்ப பணவீக்கமும் மற்றும் பொதுக் கடனின் செலவும் உயர்ந்துள்ளது. இது குறிப்பாக இலங்கை, லெபனான் மற்றும் எகிப்து போன்ற டொலருடன் நாணயங்கள் இணைக்கப்பட்ட ஏழை நாடுகளை பாதித்தது.
வறுமை, மனிதாபிமான நெருக்கடிகள், அவசரநிலைகள் மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றைச் சமாளிக்கத் தேவையான சமூக உதவி மற்றும் பொதுச் சேவைகளை அரசாங்கங்களால் வழங்க இயலாதுள்ளது. UNDP இன் அறிக்கையின்படி, 2022 இல், 46 நாடுகள் அரசாங்க வருவாயில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக வட்டியை செலுத்துகின்றன, அதே சமயம் 25 வளரும் நாடுகள் - 2000 க்குப் பிறகு அதிக எண்ணிக்கையில் - 20 சதவீதத்திற்கும் அதிகமாக வெளிநாட்டுக் கடன் சேவையில் செலவிட்டன. சராசரி குறைந்த வருமானம் கொண்ட நாடுகள், 2011 இல் 3.8 முதல் 4.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், கடன் சேவையில் 11 சதவீதத்தை செலவிடுகிறது.
கடன் சேவையானது சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பிற்காக ஏற்கனவே செலவழிக்கப்பட்ட அற்பத் தொகையை மாற்றுகிறது, வருமான இழப்பு, வேலையின்மை மற்றும் வறுமையைத் தணிப்பதற்கான பெரும் முயற்சிகள் என்பன பல மக்களை துயரத்தில் தள்ளுகிறது. புள்ளிவிவரங்கள் உலக நிதிய உயரடுக்கால் உலகின் மிக ஏழ்மையான மக்களால் உருவாக்கப்பட்ட மதிப்பை இரக்கமற்ற முறையில் அபகரித்ததை வெளிப்படுத்துகின்றன.
குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் சராசரியாக சேவைக் கடனை விட இரண்டு மடங்கு அதிகமாகச் செலவழிக்கின்றன, அவர்கள் சமூக உதவிக்காகவும், சுகாதாரத்தை விட 1.4 மடங்கு அதிகமாகவும் செலவிடுவதால், கடன் சேவைக்கான செலவு பொதுவாக கல்விச் செலவில் 60 சதவீதத்திற்கு சமமாக இருக்கும். ஐக்கிய நாடுகளின் பூகோள நெருக்கடிக்கான பதில் குழுவின் கூற்றுப்படி, 3.3 பில்லியன் மக்கள், அல்லது உலக மக்கள் தொகையில் 41 சதவீதமானவர்கள், கல்வி அல்லது சுகாதாரத்தை விட வட்டி செலுத்துதலில் அதிகம் செலவிடும் நாடுகளில் வாழ்கின்றனர்.
இதனால் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கான உள்கட்டமைப்பை உருவாக்கவும், நடவடிக்கைகளை செயல்படுத்தவும் இந்த நாடுகளால் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பாகிஸ்தானில், 1,700 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று 33 மில்லியன் மக்களைப் பாதித்த நாட்டின் வரலாற்றில் மிக மோசமான, பேரழிவுகரமான வெள்ளத்தைத் தொடர்ந்து, அரசாங்கம் சர்வதேச மனிதாபிமான உதவியில் பெற்றதை விட, அதிகமான புதிய கடனைப் பெற்றது. இது அரசாங்க வருவாயில் 40 சதவீதத்தை விழுங்குகிறது.
“அதிக கடன்பட்ட நாடுகளில், அதிக அளவிலான கடன், போதிய சமூகச் செலவுகள் மற்றும் வறுமை விகிதங்களில் ஆபத்தான அதிகரிப்பு ஆகியவற்றுக்கு இடையே ஒரு தொடர்பு உள்ளது” என்று UNDP நிர்வாகி அச்சிம் ஸ்டெய்னர் விளக்கினார். தொற்றுநோயின் தாக்கத்தைத் தணிக்க சில அரசாங்கங்கள் எடுத்த நடவடிக்கைகள் இல்லாமல், 2022 மற்றும் 2023 க்கு இடையில் நிகர வறுமை அதிகரிப்பு இன்னும் அதிகமாக இருந்துள்ளது. “சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பில் முதலீடு செய்வதன் மூலம் நாடுகளின் மக்கள்தொகையை ஆதரிப்பது கடன் சேவையை கடினமாக்குகிறது” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
2023 இல் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மைக்கான உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்து நிலை அறிக்கையானது, 2022 இல் 783 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொண்டனர் என்றும் 2030 ஆம் ஆண்டில் 600 மில்லியன் மக்கள் நீண்டகால ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது. 3.1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் (உலக மக்கள்தொகையில் 42 சதவீதம்) 2021 இல் ஆரோக்கியமான உணவை வாங்க முடியவில்லை, மேலும் 2.4 பில்லியன் மக்கள் 2022 இல் மிதமான அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பின்றி இருந்தனர் (உலக மக்கள்தொகையில் 29.6 சதவீதம்), அதே நேரத்தில் உணவு மற்றும் ஆற்றல் உற்பத்தி நிறுவன ஜாம்பவான்கள் 2022 இல் அவர்களின் லாபத்தை இரட்டிப்பாக்கி உள்ளனர்.
சர்வதேச வங்கிகள், நிதி நிறுவனங்கள், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற பலதரப்பு கடன் வழங்கும் நிறுவனங்கள் உலகெங்கிலும் உள்ள வரி செலுத்துவோரின் பணத்தை உறிஞ்சுவதால், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீது எப்போதும் அதிக கஷ்டங்களை பணக்கார நாடுகள் சுமத்துகின்றன. ஐக்கிய நாடுகளின் பூகோள நெருக்கடி பதில் குழுவின் கூற்றுப்படி, ஆப்பிரிக்க நாடுகள் அமெரிக்காவை விட நான்கு மடங்கு அதிகமாகவும் ஜேர்மனியை விட எட்டு மடங்கு அதிகமாகவும் கடன் வாங்குகின்றன.
பத்திரதாரர்கள், வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்குபவர்கள் போன்ற தனியார் கடன் வழங்குபவர்களிடம் திரும்புவது என்பது, பலதரப்பு மற்றும் இருதரப்பு கடன் வழங்குபவர்களை விட செலவுகள் அதிகமானதாகும். மேலும், அதிக எண்ணிக்கையிலான கடனாளிகள் கடனை மறுசீரமைப்பதை மிகவும் கடினமாக்குகிறது.
பூகோள நெருக்கடி பதில் குழு, இதற்கு ஒரு “தீர்வு” எட்டவில்லை என்று சுட்டிக்காட்டுகிறது. வறுமையின் இந்த சமீபத்திய அதிகரிப்பை போக்குவதற்கும், 165 மில்லியன் மக்களின் வருமானத்தை ஒரு நாளைக்கு 3.65 டொலர்களுக்கு மேல் உயர்த்துவதற்கும் சுமார் $14 பில்லியன் அல்லது 2022 ஆம் ஆண்டில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.009 சதவிகிதம் செலவாகும் என்று கணக்கிடுகிறது. இது 2022ல் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் பொது வெளிக் கடன் சேவைத் தொகையான $370 பில்லியனை விட சராசரியாக 4 சதவிகிதம் குறைவாகும். இது உலகின் 2,640 பில்லியனர்களின் செல்வத்திலும் குறைவான தொகையாகும். கோவிட்-19 நெருக்கடி மற்றும் உக்ரேனில் நடந்துவரும் போரின் பின்னணியில், ஃபோர்ப்ஸின் பத்திரிகையின் உலக பில்லியனர்கள் சொத்துப்பட்டியலின்படி, அது $12.2 டிரில்லியனாக வெடித்துள்ளது.
ஆனால், உலகின் பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கிற்கு அபரிமிதமான செல்வத்தை உற்பத்தி செய்துவரும் இந்த பொருளாதார அமைப்பானது, பட்டினி, வறுமை மற்றும் பில்லியன் கணக்கானவர்களின் கடுமையான துன்பங்களுக்கான “தீர்வை” பொறுத்துக்கொள்ளாது. மனிதாபிமான உதவிக்கான ஐ.நா.வின் பல முறையீடுகள் தங்கள் இலக்குகளை விட மிகக் குறைந்தவை என்று சாட்சியமளிக்கின்றன. வறுமை மற்றும் பசியை போக்குவதற்கு, முழு முதலாளித்துவ அமைப்புக்கு எதிராகவும், சோசலிசத்திற்காகவும், பணக்கார மற்றும் ஏழ்மையான நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களால் ஒரு ஒருங்கிணைந்த போராட்டம் தேவைப்படுகிறது.