டச்சு பொதுத் தேர்தலில் நவ-பாசிச வைல்டர்ஸ் வெற்றி பெற்றார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

நவம்பர் 22 டச்சு பொதுத் தேர்தல்கள், கீர்ட் வில்டர்ஸின் சுதந்திரத்திற்கான பாசிசக் கட்சிக்கு (PVV) தேர்தல்களில் முன்னெப்போதும் இல்லாத தேர்தல் ஆதாயத்தை அளித்துள்ளது. 150 ஆசனங்கள் கொண்ட டச்சு பிரதிநிதிகள் சபையில் (Tweede Kamer) 2021 இல் 17 இடங்களைப் பெற்றிருந்த பி.வி.வி. இப்போது 25 சதவீத வாக்குகளுடன் அதை 37 ஆக இரட்டிப்பாக்கிக்கொண்டுள்ளது, இது டச்சு மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பாரதூரமான அரசியல் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வில்டர்ஸ் அதிக வாக்குகளைப் பெற்று இரண்டு நாட்களுக்குப் பிறகு, பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் வேரா பெர்க்காம்ப் உடனான சந்திப்பிற்குப் பிறகு, தீவிர வலதுசாரிக் கட்சியான பி.வி.வி. அல்லது சுதந்திரக் கட்சியின் தலைவரான கீர்ட் வில்டர்ஸ், வெள்ளிக்கிழமை 24 நவம்பர் 2023 அன்று ஊடகங்களுடன் பேசுகிறார். [AP Photo/Peter Dejong]

பிரதமர் மார்க் ரூட்டின் காபந்து கூட்டணி அரசாங்கத்தில் இருந்த வலதுசாரி கட்சிகளுக்கு இந்தத் தேர்தல் படுதோல்வியாக இருந்தது. அவை அனைத்தும் அவமானகரமான இழப்புகளை சந்தித்தன. டிலான் யெசில்கோஸ் தலைமையிலான ரூட்டின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான மக்கள் கட்சி (VVD), 34 முதல் 24 ஆசனங்களுக்குச் சரிந்தது. இதேபோல், சமூக-தாராளவாத ஜனநாயகவாதிகள் (D66) கட்சி 24 ஆசனங்களிலிருந்து 9 ஆகவும், கிறிஸ்தவ-ஜனநாயக அழைப்பு (CDA) 15 ஆசனங்களிலிருந்து 5 ஆகவும், கிறிஸ்டியன் யூனியன் (CU) 5 ஆசனங்களிலிருந்து 3 ஆகவும் சரிந்தது.

மதிப்பிழந்த பசுமைவாதிகளும் தொழிற் கட்சியும் (GL, PvdA) முன்னாள் ஐரோப்பிய ஆணையாளர் ஃபிரான்ஸ் டிம்மர்மன்ஸ் தலைமையில் ஒரு கூட்டு அறிக்கை வெளியிட்டதோடு ஒரு தேர்தல் பட்டியலையும் வெளியிட்டு, வலதுசாரிக் கட்சிகளை விட குறைந்த தீயவர்களாக தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முயன்றனர். இருப்பினும், ரூட்டின் கூட்டாளிகளின் சரிவில் இருந்து கணிசமாக லாபம் ஈட்ட இது போதுமானதாக இருக்கவில்லை. தந்திரோபாய வாக்களிப்பில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆசனங்களில் இருந்து 25 ஆக உயர்ந்து, வில்டர்ஸின் பி.வி.வி.யை விட மிகவும் பின்தங்கியிருந்தது.

புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய சமூக ஒப்பந்தம் (NSC) கட்சி, முன்னாள் CDA பாராளுமன்ற உறுப்பினர் Pieter Omtzigt தலைமையில், “நல்லாட்சிக்கான” வெற்று அழைப்புகளின் அடிப்படையில் 20 இடங்களை வென்றது.

தேர்தலுக்குப் பிறகு, வட கடல் நகரமான ஷெவெனிங்கனில் உள்ள ஒரு ஓட்டலில் உரையாற்றிய வில்டர்ஸ்: “டச்சுக்காரர் மீண்டும் முதல் இடத்திற்கு வருவார். நெதர்லாந்திற்கு நம்பிக்கை உள்ளது... நெதர்லாந்து மக்கள் தங்கள் நாட்டை திரும்பப் பெறுவார்கள், அகதிகள் மற்றும் குடியேறிகளின் சுனாமி மட்டுப்படுத்தப்படும்,” எனப் பிரகடனம் செய்தார்.

வியாழனன்று உள்ளூர் ஊடகத்தில் உரையாற்றிய வில்டர்ஸ், “நெதர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டுமா என்பது குறித்த வாக்கெடுப்புக்கு ஆதரவாக” இருப்பதாகக் கூறியதோடு, பிரதமராக இருப்பதற்கான தனது இலட்சியங்களையும் அறிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “முதல் விஷயம் புகலிடம் மற்றும் குடியேற்றம் மீதான குறிப்பிடத்தக்க கட்டுப்பாடு ஆகும். நாங்கள் அதை நமக்காக செய்யவில்லை, எங்களுக்கு வாக்களித்த அனைத்து டச்சு மக்களுக்காகவும் செய்கிறோம்,” என்றார்.

“மாற்றத்தின் காற்று இங்கே உள்ளது!” என்று அறிவித்த ஹங்கேரியின் விக்டர் ஆர்பன் உட்பட உலகெங்கிலும் உள்ள அதி-வலதுசாரிகள் வில்டர்ஸை வாழ்த்தினர். அதி-வலதுசாரி பிளெமிஷ் அரசியல்வாதியான டொம் வான் க்ரீகன், “எங்களைப் போன்ற கட்சிகள் ஐரோப்பா முழுவதிலும் தங்கள் பாதையில் நிற்கின்றன” என்று அறிவித்தார்.

கார்டியன் பத்திரிகை, டச்சு தேர்தல் முடிவுகளை “சிலிர்க்க வைக்கிறது” என்று கூறியது. “ஐரோப்பிய ஒன்றியத்தின் மோசமான கனவு” என்று பொலிட்டிகோ அறிவித்த அதே நேரம், “ஐரோப்பா முழுவதும் அதிர்ச்சி அலைகளை அனுப்பக்கூடும்” என்று நியூயோர்க் டைம்ஸ் எச்சரித்தது. இதேபோல், நெதர்லாந்தில், டி டெலிகிராப் “நெதர்லாந்து வலதுபுறம் திரும்புகிறது” என்று அறிவித்துடன் “மற்ற கட்சிகளுக்கு ஒரு அதிர்ச்சி அலை” அனுப்புவது பற்றி பேசியது. டி வோல்க்ஸ்க்ரான்ட், இதை “பெரிய சங்கடங்களை உருவாக்குகின்ற பி.வி.வி.யின் திடுக்கிடும் மறுபிரவேசம்” என்று அழைத்ததுடன், மற்ற ஊடகங்களும் இவ்வாறே கருத்து தெரிவித்தன.

சர்வதேச பத்திரிகைகள் வில்டர்ஸின் வெற்றியை ஒரு “அதிர்ச்சி” விளைவு என்று சித்தரித்தாலும், உண்மையில் அது முழு டச்சு மற்றும் ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளின் விளைபொருளாகும்.

அதி-வலதுசாரி இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, மற்றும் ஸ்லோவாக்கியாவில் குடியேற்றத்தைக் குறைப்பதாக உறுதியளித்த ரொபர்ட் ஃபிகோ ஆட்சிக்கு வந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகே வில்டர்ஸ் வெற்றி பெற்றுள்ளார். அவரது பிரச்சாரத்தின் போது, வில்டர்ஸ் அனைத்து குடியேற்றங்களுக்கும் எல்லைகளை மூடுவதாக வாக்குறுதியளித்ததுடன், பிரெக்ஸிட்டின் டச்சு அர்த்தமான “நெக்சிட்” என்பதற்கும் நெதர்லாந்தில் “இஸ்லாமியமாக்கத்தை அகற்றவும்” அழைப்பு விடுத்தார். அவர் உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும், காஸாவில் விரிவடைந்து வரும் போருக்கு மத்தியில் உறுதியான இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவும் அழைப்பு விடுத்தார்.

டச்சு ஆளும் உயரடுக்கு மற்றும் பிரதான கட்சிகள் மற்றும் ஊடகங்களும் பொய்யான, புலம்பெயர்ந்தோர்-விரோத பிரச்சாரத்தின் அடிப்படையிலேயே தேர்தல் பிரச்சாரத்தை அதிக அளவில் நடத்தின. இதன் விளைவாக சிதைவுகள் மற்றும் குழப்பங்கள் நிறைந்த நச்சுத்தனமான தேர்தல் சூழல் உருவானது. நெதர்லாந்திலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சமூக சிக்கன நடவடிக்கை, போர் மற்றும் காஸாவில் இனப்படுகொலை பற்றிய உண்மையான அரசியல் பிரச்சினைகளை எந்த வேட்பாளரும் தெளிவாக வெளிப்படுத்தாத நிலையில், சில மதிப்பீடுகளின்படி, 60 சதவீத வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவில்லாமல் இருந்தனர்.

ஸ்தாபனக் கட்சிகள், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வெறுப்பை ஊக்குவிப்பதன் மூலம் மட்டுமின்றி, அவருடன் கூட்டுச் சேர விருப்பம் தெரிவித்ததன் மூலமும் வில்டர்ஸை நியாயப்படுத்தின. இதில், ரூட்ஸ்சின் வி.வி.. கட்சி முன்னணி பாத்திரத்தில் வகித்தது. ஆகஸ்டில், பிரச்சாரத்தின் போது, வி.வி.டி. தலைவரும் நீதி அமைச்சருமான திலான் யெசில்கோஸ், வில்டர்ஸைப் பொறுத்தவரை, தான் “ஒரு விஷயமாக எடுத்துக்கொண்டு கதவை மூடி வைக்க விரும்பவில்லை” என்று வலியுறுத்தினார். “[பேச்சுவார்த்தை] மேசையில் யார் இருப்பார்கள், எந்த நோக்கத்துடன் இருப்பார்கள் என்பதிலேயே எனக்கு அதிக ஆர்வம் உள்ளது,” அவர் கூறினார்.

பின்னர் பிரச்சாரத்தின் போது, அத்தகைய நிலைப்பாடுகள் வி.வி.டி.யின் இழப்பில் பி.வி.பி.ஐ பலப்படுத்தியது என்பது தெளிவாகத் தெரிந்ததால், வில்டர்ஸுடன் கூட்டணி அமைக்கும் திட்டத்தை மறுப்பதற்காக யெசில்கோஸ் மீண்டும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.

டச்சு உத்தியோகபூர்வ வட்டாரங்களில், வலதுசாரி அல்லது சமூக ஜனநாயகக் கட்சிகள் மட்டுமன்றி, ஒட்டுண்ணி டச்சு தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் பிணைக்கப்பட்ட அரசியல் சக்திகளும், இறுதியில் வில்டர்சுக்கு ஒரு தெளிவான சாதகமாக மாறிப்போன ஒரு இனவெறி பிரச்சாரத்தில் இணைந்துகொண்டன.

“இந்தத் தேர்தல்களில் வாக்காளர்கள் வில்டர்ஸை ஆதரித்ததற்கு முக்கியக் காரணம், அவரது குடியேற்ற எதிர்ப்பு திட்ட நிரலாகும், அதைத் தொடர்ந்து வாழ்க்கைச் செலவு நெருக்கடி மற்றும் அவரது சுகாதார திட்டங்கள் பற்றிய அவரது நிலைப்பாடும் உள்ளன” என்று ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக பேராசிரியர் சாரா டி லாங்கே பொலிட்டிகோ ஊடகத்திடம் கூறினார். பிரதான கட்சிகள் குடியேற்றத்தை ஒரு முக்கிய பிரச்சினையாக ஆக்குவதன் மூலம் “வில்டர்ஸை நியாயப்படுத்தின” என்று அவள் மேலும் கூறினாள். “பணையத்தில் இருக்கும் பிரச்சினை அதுதான் என்றால், நகலைக் காட்டிலும் அசலுக்கு ஏன் வாக்களிக்கக்கூடாது என்று வாக்காளர்கள் நினைத்திருக்கலாம்,” என்று அவள் கூறினாள்.

புலம்பெயர்ந்தோர்-விரோத வெறுப்புகளுக்கு எதிராக இடதுசாரி எதிர்ப்பிற்கு வாக்களிக்கும் வாய்ப்பை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இல்லாமல் ஆக்குவதில் முன்னாள் மாவோயிஸ்ட் சோசலிஸ்ட் கட்சி (SP) முக்கிய பங்கு ஆற்றியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு கருத்துக் கணிப்புகளில் 30 சதவீத ஆதரவைப் பெற்றுள்ள இந்தக் கட்சி, புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிரான கடுமையான கொள்கைகளுக்கு அழைப்புவிடுப்பதன் அடிப்படையில் போட்டியிட்டது. பாராளுமன்றத்தில் 9 ஆசனங்களில் இருந்து 5 ஆக வீழ்ச்சியடைந்த பரந்த தேர்தல் தோல்வியால் அது விடுபடவில்லை. உண்மையில், அதன் தேர்தல் அறிக்கை அறிவித்ததாவது:


கட்டுப்பாடற்ற தொழிலாளர் இடம்பெயர்வு தற்போது சுரண்டலுக்கும், ஏனைய நாடுகளிலிருந்து வெளியேறுவதற்கும் (”மூளை வடிகால்” என்று அழைக்கப்படுபவை) மற்றும் சமூகங்களை வேரோடு பிடுங்குவதற்கும் வழிவகுக்கிறது.… இந்த வழியில், நாம் பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சமூக தனிமைப்படுத்தலை உடைக்கிறோம். நெதர்லாந்தில் பணிபுரிய விரும்பும் மற்றும் குடியுரிமை இல்லாத எவரும் தொழில் அனுமதிச்சீட்டை வைத்திருக்க வேண்டும். சூழ்நிலையைப் பொறுத்து, வருடத்திற்கு அதிகபட்ச தொழில் அனுமதிகளை சரிசெய்யலாம். இது சீராகும் வரை பொருளாதார இடம்பெயர்வை தற்காலிகமாக நிறுத்துவோம்.

டச்சு ஆளும் உயரடுக்கின் பரந்த பிரிவுகள் இப்போது வில்டர்ஸை அலுவலகத்தில் அமர்த்த ஆக்ரோஷமாக சூழ்ச்சி செய்து வருகின்றன. தேர்தல் முடிந்து 24 மணிநேரம் கூட ஆகவில்லை, GL/PvDA இன் நிறுவுனர்கள் அவர் எதிர்க்கட்சியை வழிநடத்தலாம் என்று பரிந்துரைத்து, வில்டர்ஸின் பி.வி.வி., யெஸில்கோஸின் வி.வி.டி மற்றும் பீட்டர் ஓம்ட்ஜிக்டின் NSC ஆகியவற்றின் மொத்தமாக 81 ஆசனங்களைக் கொண்டிருக்கும் அரசாங்கக் கூட்டணியை உருவாக்க வழி வகுக்கின்றது. புதிதாக உருவாக்கப்பட்ட வலதுசாரி ஜனரஞ்சகக் கட்சியான BBB (விவசாயி-குடிமகன் இயக்கம்) ஏற்கனவே அதன் 7 ஆசனங்களுடன் வில்டர்ஸ் உடன் சேர விருப்பம் தெரிவித்துள்ளது.

NCS கட்சித் தலைவர் Omtzigt, “நாங்கள் ஆட்சியமைக்க தயாராக இருக்கிறோம். இது கடினமான முடிவு. எந்த வகையில் சிறப்பாகப் பங்களிக்க முடியும் என்பதை வியாழக்கிழமை விவாதிப்போம்,” என்று தெரிவித்தார்.

“இந்த வார தொடக்கத்தில் தனது கட்சி வில்டர்ஸ் தலைமையிலான அரசாங்கத்தில் சேராது என்று கூறியிருந்த வி.வி.டி. தலைவர் திலான் யெசில்கோஸ், வெற்றியாளர் தான் பெரும்பான்மையைப் பெற முடியும் என்பதை இப்போது காட்ட வேண்டும் என்று கூறினார்,” என நெதர்லாந்தின் NOS பொதுத் தொலைக்காட்சியும் தெரிவித்திருந்தது.

எந்த முதலாளித்துவக் கட்சிகள் ஆளும் கூட்டணியை உருவாக்கினாலும், எது “எதிர்க்கட்சி” என்று அழைக்கப்பட்டாலும், உள்வரும் டச்சு அரசியல் ஸ்தாபனம் தொழிலாள வர்க்கத்தின் மீது மூர்க்கமான தாக்குதலை நடத்தும். இது இனப்படுகொலை, போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் சமூக எதிர்ப்புகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நவ-பாசிச, பொலிஸ் அரச ஆட்சியை திணிப்பதன் மூலம் பிரதிபலிக்கும். நெதர்லாந்தர்களை வில்டர்ஸ் ஆண்டாலும் அல்லது நெதர்லாந்தின் ஏனைய குடியேற்ற எதிர்ப்புக் கட்சிகளில் இருந்து உருவாக்கப்பட்ட கூட்டணி வெளிப்படையாக ஆண்டாலும் இதுவே உண்மை ஆகும்.

உலகம் முழுவதும் உள்ளதைப் போலவே நெதர்லாந்திலும், முதலாளித்துவ அரசாங்கங்களின் போர், இனப்படுகொலை, சிக்கன நடவடிக்கை மற்றும் பொலிஸ்-அரசு ஆட்சி ஆகிய கொள்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் ஆழ்ந்த எதிர்ப்பு உள்ளது. ஆம்ஸ்டர்டாமின் மத்திய ரயில் நிலையத்தைச் சுற்றி பெரிய பேரணிகள் உட்பட, காஸாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு எதிரான வெகுஜன எதிர்ப்புகளைக் நெதர்லாந்து கண்டது, வில்டர்ஸின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, நெதர்லாந்தின் பெரிய நகரங்களான ஆம்ஸ்டர்டாம் மற்றும் உட்ரெக்ட் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மார்க்சிச மற்றும் சர்வதேசிய எதிர்ப்பு இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) கொள்கைக்கு அப்பால், ஐரோப்பாவின் முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான இத்தகைய உணர்வுகள் நனவான உண்மையான அரசியல் வெளிப்பாட்டைக் காணவில்லை. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவை ஸ்தாபிப்பதும், ஒரு சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில், ஐரோப்பா முழுவதும் முதலாளித்துவ ஸ்தாபனத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், அதிகாரத்தை தொழிலாள வர்க்கத்தின் கைகளுக்கு மாற்றுவதற்கும் ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே டச்சு தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் அவசர பணி ஆகும்.