மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
டச்சு நாடாளுமன்றத் தேர்தலில் வலதுசாரி தீவிரவாதியான கீர்ட் வில்டர்ஸின் (Geert Wilders) தேர்தல் வெற்றியானது, முன்னாள் இடதுசாரிக் கட்சிகளின் முழுமையான திவால்தன்மையின் விளைபொருளாகும். மேலும், முழு அரசியல் ஸ்தாபனமும் வலது பக்கம் மாறுவதையும் வெளிப்படுத்துகிறது. பாசிசம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான மற்றும் சோசலிச இயக்கம் தேவை என்பதை இது நிரூபிக்கிறது.
இஸ்லாத்திற்கு எதிராகவும், புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராகவும் அதன் வெறுப்பு பிரச்சாரங்களுக்கு இழிபுகழ் பெற்ற வைல்டர்ஸ்சின் சுதந்திரத்திற்கான கட்சி (PVV), அதன் வாக்குப் பதிவை 25 சதவீதத்திற்கும் குறைவாக இருமடங்காக அதிகரித்துள்ளது. PVV, துண்டு துண்டான டச்சு கட்சி நிலப்பரப்பில் வலுவான சக்தியாக மாறியிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தில் அடுத்த அரசாங்கத் தலைவராக வருவதற்கு வைல்டர்ஸுக்கு வாய்ப்பு உள்ளது. இன்னும் பதவியில் இருக்கும் பிரதம மந்திரி மார்க் ரூட்டின் வலதுசாரி தாராளவாத VVD மற்றும் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் ஓடுகாலி பீட்டர் ஓம்ட்ஜிக்ட்டின் புதிதாக நிறுவப்பட்ட NSC, வைல்டர்ஸுக்கு பெரும்பான்மையை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இறுதியில் வில்டர்ஸ் அரசாங்கத்தை வழிநடத்துவாரா என்பது தீர்க்கமான கேள்வியல்ல. மாறாக, பாசிஸ்டுகளின் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதோடு, முதலாளித்துவத்தின் அனைத்துக் கட்சிகளும் வலதுபுறம் மாறுவது தொடர்ந்து வேகமெடுக்கும். எப்பொழுதும் போல், நிறுவனமாயமான கட்சிகளும் ஊடகங்களும் அதிதீவிர வலதுசாரி வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதை நியாயப்படுத்தி, “மக்களின் கவலைகள்” தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று கூறுகின்றன. உண்மையில், ஆளும் வர்க்கத்தால் அதிதீவிர வலதுசாரிகளை ஊக்குவிப்பதே அவர்களின் அதிகாரத்திற்கான பாதையை அமைக்கிறது.
நெதர்லாந்தில் அரசாங்கப் பேச்சுவார்த்தைகளின் விளைவு என்னவாக இருந்தாலும், முழு ஆளும் வர்க்கத்தின் வலது பக்கத்திற்கான ஒரு கூர்மையான ஊசலாட்டத்தின் மாற்றத்தை ஐரோப்பா முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர். பாசிச சக்திகள் பல அரசாங்கங்களில் நீண்ட காலமாக உட்பொதிக்கப்பட்டுள்ளன, மேலும் அவர்களின் போர் திட்டம், அகதிகளுக்கு எதிரான போராட்டம் மற்றும் சர்வாதிகாரம் ஆகியவை ஐரோப்பா கண்டம் முழுவதும் செயல்படுத்தப்படுகின்றன.
அனைத்து ஐரோப்பிய அரசாங்கங்களும், அனைத்து நிறுவனமயமான கட்சிகளும், காஸாவில் அதிதீவிர வலதுசாரி இஸ்ரேலிய அரசாங்கத்தால் நடத்தப்பட்டுவரும் இனப்படுகொலையை ஆதரிக்கின்றன. காஸாவில் மொத்த மக்களும் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு, பட்டினிக்கு உள்ளாக்கப்பட்டு, நிரந்தர குண்டுவீச்சுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் போர் ஏற்கனவே குறைந்தபட்சம் 7,000ம் குழந்தைகள் உட்பட 20,000ம் பேர் வரையிலான உயிர்களை காவு கொண்டுள்ளது. ஐரோப்பா கண்டம் முழுவதும், இந்த அடிப்படையில் பாசிசக் கொள்கையானது, முஸ்லிம்களுக்கு எதிரான (அதிதீவிர வலதுசாரிகள் பல ஆண்டுகளாக, இதனை அதன் வேலைத்திட்டத்தின் மையத்தில் வைத்துள்ளனர்) அருவருப்பான தூண்டுதல் மற்றும் போரை எதிர்ப்பவர்கள் மீதான தாக்குதல்களுடன் சேர்ந்துள்ளது. அடிப்படை ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
அதே நேரத்தில், இதே அரசாங்கங்கள் உக்ரேனில் நாஜி ஒத்துழைப்பாளர்கள், யூத எதிர்ப்பாளர்கள் மற்றும் பாசிஸ்டுகளின் வாரிசுகளுடன் சேர்ந்து, ரஷ்யாவிற்கு எதிராக தங்கள் பினாமிப் போரை நடத்துவதற்கு வேலை செய்து வருன்றன. இரண்டாம் உலகப் போர் முடிந்து எழுபத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜேர்மனியின் டாங்கிகள் மீண்டும் ரஷ்யாவிற்கு எதிராக உருளுகின்றன. ஐரோப்பா முழுவதும் ஒரு பயங்கரமான மறுஆயுதமயமாக்கல் நடைபெறுகிறது. ஜேர்மனியும் நெதர்லாந்தும் ஏற்கனவே சமீப ஆண்டுகளில் தங்கள் இராணுவ வரவு செலவுத் திட்டங்களை இரட்டிப்பாக்கி, தங்கள் படைகளை மிக நெருக்கமாக ஒருங்கிணைத்துள்ளன.
இந்த பைத்தியக்காரத்தனமான போர்க் கொள்கை, அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் தீவிர சமூக அழிவுடன் இணைந்து செல்கிறது. பணவீக்கம் தொழிலாளர்களின் ஊதியத்தை சீரழிப்பதுடன், சுகாதாரம் மற்றும் கல்விக்கான வரவு செலவுத் திட்டங்கள் குறைக்கப்பட்டு, எஞ்சியிருக்கும் சமூகநல திட்டங்களும் அகற்றப்படுகின்றன. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, நெதர்லாந்தில் உண்மையான ஊதியம் கடந்த ஆண்டைவிட 7 சதவீதம் குறைந்துள்ளது.
எனினும், இந்தப் போர் மற்றும் சிக்கனக் கொள்கைகள், தொழிலாள வர்க்கத்தினுள் பாரிய எதிர்ப்பை எதிர்கொள்கிறது. மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக, பிரான்சில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் வலுவான எதிர்ப்புக்கள், உண்மையான ஊதிய வெட்டுக்கள் மற்றும் வேலைநிறுத்தத் தடைகளுக்கு எதிராக பிரிட்டனில் நடந்த வெகுஜன வேலைநிறுத்தங்கள் மற்றும் காஸாவில் இனப்படுகொலைக்கு எதிரான மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் ஆரம்பம் மட்டுமே.
இந்த எதிர்ப்புக்களை கொடூரமாக நசுக்குவதற்கு, ஆளும் வர்க்கத்தால் அதிதீவிர வலதுசாரிகள் வேண்டுமென்றே கட்டியெழுப்பப்படுகின்றனர். இத்தாலியில், அவர்கள் ஜியோர்ஜியா மெலோனியை ஆட்சிக்கு கொண்டு வந்தனர். மெலோனியின் அரசியல் பரம்பரை நேரடியாக முசோலினியிடம் செல்கிறது. ஜேர்மினியின் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் (சமூக ஜனநாயக கட்சி SPD) அகதிகளை பெருமளவில் வெளியேற்றுவதற்கும் சமூக வெட்டுக்களை செயல்படுத்துவதற்கும் மிலோனியுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறார். பிரான்சில், காஸாவில் இனப்படுகொலையை ஊக்குவிக்க மக்ரோனின் அமைச்சர்கள் பாசிச மரீன் லு பென்னுடன் இணைந்து அணிவகுத்துச் செல்கின்றனர். ஜேர்மனியில், ஜேர்மனிக்கான மாற்று கட்சி (AfD) முழுமையாக பாராளுமன்ற வேலைகளில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, மற்றும் அரசு எந்திரத்தில் வலதுசாரி தீவிரவாத பயங்கரவாத வலைப்பின்னல்கள் உயர் அதிகாரிகளால் ஆதரிக்கப்படுகின்றன.
நெதர்லாந்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது வைல்டர்ஸ் முறையான மரியாதையுடன் நடத்தப்பட்டார். அவரது திட்டத்தை ஏற்றுக்கொண்ட அனைத்துக் கட்சிகளும், தமது பிரச்சாரத்தின் மையத்தில் புலம்பெயர்ந்தவர்களின் குடியேற்றத்தை வைத்தன. இது அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை ஆழமான சமூக நெருக்கடி, கடுமையான வீட்டுப் பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளுக்கு பலிகடா ஆக்கும் ஒரு வெளிப்படையான முயற்சியாக, நிதி மூலதனத்தின் நலனுக்காக, அனைத்து முக்கிய கட்சிகளாலும் பின்பற்றப்பட்ட கொள்கையின் முடிவுகளாக இருந்தன.
வில்டர்ஸ் மற்றும் இதர அதிதீவிர வலதுசாரிக் கட்சிகள் இன்னும் தங்களை ஒரு எதிர்ப்பு சக்தியாகக் காட்டிக் கொள்ள முடிகிறது என்பதும், அரசியல் விரக்தியை பிற்போக்குத்தனமான திசையில் செலுத்துவதும், உத்தியோகபூர்வ “இடது” சக்திகளின் முழுமையான திவால்தன்மையின் விளைவு ஆகும். இவர்கள் மிகவும் வெளிப்படையாக போர் முகாமில் உள்ளனர். அதேநேரம், ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போரை தேசியவாத-இராணுவவாத கண்ணோட்டத்தில் விமர்சிக்கும் அதிதீவிர வலதுசாரி சக்திகள் கூட மக்களிடையே இருக்கும் போர் எதிர்ப்பு மனநிலையை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு சுரண்டிக் கொள்கின்றனர். இன்று, உழைக்கும் மக்களின் நலன்களை ஓரளவு கூட பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த நிறுவனமயப்பட்ட கட்சியும் இல்லை.
ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ், பிரிட்டிஷ் தொழிற் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் அல்லது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் (அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களின் நண்பராகக் காட்டிக்கொள்பவர்) அனைவரும் இனப்படுகொலை, போர் மற்றும் சமூகத் தாக்குதல்களின் அரசியலுக்காக நிற்கின்றனர். டச்சு தொழிலாளர் கட்சி (PdA) இந்த விஷயத்தில் ஒரு முன்னோடி பாத்திரத்தை வகித்தது. 1980களில் தொழிற்சங்கங்கள், வணிக சங்கங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு இடையே நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்திய “போல்டர் மாதிரி” என்று அழைக்கப்படுவது, சமூக ஜனநாயக அரசாங்கத்தின் தலைவர்களான டோனி பிளேயர் (பெரிய பிரித்தானியா) மற்றும் ஹெஹார்ட் ஷ்ரோடர் (ஜேர்மனி) ஆகியோருக்கு அவர்களின் விரிவான சமூக எதிர்ப்புரட்சிக்கு ஒரு வரைபடமாக செயல்பட்டது.
ஐரோப்பிய ஒன்றிய (EU) ஆணையத்தின் நீண்டகால துணைத் தலைவர் பிராங் டிம்மர்மன்ஸ் தலைமையில் சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலில் PdA நின்றது. அவர், ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழிலாளர்-விரோதக் கொள்கைகளை உள்ளடக்கி, உக்ரேனில் நடந்துவரும் போரையும், காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையையும் வலுவாக ஆதரிக்கிறார். PdA பசுமைக் கட்சியுடன் இணைந்திருந்தாலும், இரு கட்சிகளும் சேர்ந்து 15.5 சதவீத வாக்குகளை மட்டுமே இத்தேர்தலில் பெற்றுள்ளன.
இனவெறி வெறுப்பு பிரச்சாரத்திற்கும், இடதுசாரி எதிர்ப்பிற்கும் வாக்களிக்கும் வாய்ப்பை, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மறுப்பதற்கான முக்கிய பங்கு, முன்னாள் மாவோயிஸ்ட் சோசலிஸ்ட் கட்சி (SP) ஆல் ஆற்றப்பட்டது. சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு கருத்துக்கணிப்புகளில் 30 சதவீதம் வரை ஆதரவைப் பெற்ற இந்தக் கட்சி, 3.1 சதவீத வாக்குகளை மட்டுமே இத்தேர்தலில் பெற்றது. தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்தக் கட்சி புகலிடக் கோரிக்கையாளர்கள் மீதான கடுமையான கொள்கைகளுக்காக பிரச்சாரம் செய்ததோடு, “பொருளாதார இடம்பெயர்வுகளை தற்காலிகமாக நிறுத்த” அழைப்பும் விடுத்தது.
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உள்ள அதன் சகோதர கட்சிகள், எங்கெல்லாம் அரசாங்கங்களை அமைத்திருந்தாலும், இராணுவவாதம் மற்றும் சமூக வெட்டுக் கொள்கைகளை குறிப்பாக ஆக்கிரோஷமான முறையில் பயன்படுத்துகின்றன. சிரிசா 2015 இல் கிரேக்கத்தில் அதிதீவிர வலதுசாரி அனெல் கட்சியுடன் ஒரு கூட்டணியை உருவாக்கி, மிகக் கொடூரமான சமூக வெட்டுக்களை திணித்தது. அத்துடன், ஸ்பெயினில், பொடோமோஸ் 2020 இல் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தில் சேர்ந்ததோடு, சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர்க் கொள்கைகளை தீவிரமாக ஆதரித்தது.
மீண்டும் எழுச்சி பெற்றுவரும் வர்க்கப் போராட்டத்தை நசுக்கிவரும் தொழிற்சங்கங்கள், அரசாங்கங்களின் சர்வாதிகாரங்களைச் செயல்படுத்தும் பெருநிறுவன பொலிஸ் படைகளாக தங்களை மாற்றிக்கொண்டுள்ளன. இந்த ஆண்டில் மட்டும், அவர்கள் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மனி மற்றும் பல நாடுகளில் வேலைநிறுத்த இயக்கங்களை முடக்கி, தொழிலாளர்கள் மீது பாரிய உண்மையான ஊதிய வெட்டுக்களை கட்டாயப்படுத்தியுள்ளனர்.
வர்க்கப் போராட்டத்தை நசுக்கி, உத்தியோகபூர்வ கட்சிகளில் இடதுசாரி மாற்றீடு எதுவும் இல்லாததன் அர்த்தம், 1930 களில் இருந்து முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடியின் மத்தியில், மிக வலதுசாரி சக்திகள் ஆதிக்கம் செலுத்தி, தேர்தல்களில் கூட வெற்றி பெற முடியும் என்பதனை காட்டுகிறது.
1930களைப் போலல்லாமல், ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் இயக்கத்தை நசுக்க ஆளும் வர்க்கம் பாசிச இயக்கங்களைப் பயன்படுத்தினாலும், வலதுசாரி தீவிரவாதிகளிடம் இன்று வெகுஜன அமைப்புக்கள் இல்லை. ஆனால், அது இந்த நிலைமையை குறைவான ஆபத்தானதாக மாற்றாது. பாசிசவாதிகள் கணிசமான செல்வாக்கைப் பெற்றுள்ளனர் மற்றும் எந்தவொரு எதிர்ப்பையும் அடக்குவதற்கும் பயமுறுத்துவதற்கும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்படும் அடக்குமுறையின் அரச இயந்திரத்தின் பெரும் பகுதிகளைக் கட்டுப்படுத்துகின்றனர்.
ஒவ்வொரு முறையும் தீவிர வலதுசாரிக் கட்சிகள் அரசாங்கத்தை அமைக்கும் அல்லது பங்குபெறும் போது, தொழிலாள வர்க்கத்தின் கோபமும் எதிர்ப்பும் இன்னும் கூர்மையான வடிவங்களை எடுக்கின்றன. ஆனால், அதிவலதுசாரி தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டம் என்பது தெளிவான அரசியல் முன்னோக்கை அடிப்படையாகக் கொண்டால் மட்டுமே வெற்றிபெற முடியும். இந்த இயக்கம் வைல்டர்ஸ், மெலோனி வகையறாக்களுக்கு எதிராக மட்டுமல்ல, முழு முதலாளித்துவ அமைப்புக்கும், அதன் கட்சிகள் மற்றும் அரசு எந்திரத்திற்கும் எதிராகவும், சோசலிசத்திற்கு ஆதரவாகவும் இயக்கப்பட வேண்டும். சொந்த புரட்சிகர தலைமையை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பதுதான், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் மையக் கேள்வியாகும்.
“தாராளவாத” மற்றும் போலி-இடது அரசியல்வாதிகள் அவ்வப்போது ஞாயிற்றுக்கிழமை உரைகளில் வலதுசாரி தீவிரவாதிகளுக்கு எதிராக “ஜனநாயகவாதிகளின் ஒற்றுமைக்கு” அழைப்பு விடுக்கும்போது, அவர்கள் வர்க்கப் போராட்டத்தை அடக்குவதைத் தக்கவைத்துக்கொள்வதிலும் மிகவும் வலதுசாரிக் கொள்கைகளைச் செயல்படுத்துவதிலும் அக்கறை கொண்டுள்ளனர். இது தீவிர வலதுசாரிகளுக்கு எதிராகப் போராடுவதற்குப் பயன்படுவதில்லை, மாறாக அதை வலுப்படுத்துவதற்குப் பயன்படுகிறது.
இனப்படுகொலை மற்றும் குற்றவியல் கொள்கைகளில் அனைத்துக் கட்சிகளின் ஐக்கிய முன்னணிக்கு ஆழ்ந்த புறநிலை காரணங்கள் உள்ளன. “வர்க்க மற்றும் சர்வதேச முரண்பாடுகளின் தாக்கத்தின் கீழ், ஜனநாயகத்தின் பாதுகாப்பு தடுப்புக் கருவிகள் எரிகிறது அல்லது வெடிக்கிறது. சர்வாதிகாரத்தின் மின்சார ஒழுக்கு அதைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறது” என்று லியோன் ட்ரொட்ஸ்கி 1929ல் எழுதினார். அன்று போலவே, இப்போதும் முதலாளித்துவ நெருக்கடி இரண்டு மாற்று வழிகளை மட்டுமே வழங்குகிறது: ஒன்று, சர்வாதிகாரம் மற்றும் போர் அல்லது சோசலிசப் புரட்சி.
இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிரான பாரிய வெகுஜன எதிர்ப்புக்கள் மற்றும் எல்லா இடங்களிலும் வளர்ந்து வரும் வேலைநிறுத்தங்கள் ஆகியவற்றை முதலாளித்துவத்திற்கு எதிரான மற்றும் ஒரு சோசலிச சமூகத்திற்கான ஒரு சக்திவாய்ந்த இயக்கமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இந்த முன்னோக்குகாகத்தான், சோசலிச சமத்துவக் கட்சி (ஜேர்மனி) அடுத்த ஆண்டு ஐரோப்பிய தேர்தல்களில் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் துருக்கியில் உள்ள தனது சகோதர கட்சிகளுடன் இணைந்து போராடுகிறது. இப்போதே எங்கள் தேர்தல் பிரச்சாரத்தை ஆதரித்து, போரையும் பாசிசத்தையும் நிறுத்த, தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய வெகுஜனக் கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை கட்டியெழுப்புங்கள்.