தோழர் ஹலீல் செலிக்: சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு உத்வேகம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

சோசலிச சமத்துவக் கட்சியின் (ஆஸ்திரேலியா) முன்னணி உறுப்பினரான பீட்டர் சைமண்ட்ஸ், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் துருக்கியப் பிரிவான சோசலிச சமத்துவக் குழுவின் (Sosyalist Eşitlik Grubu) நிறுவனரும் தலைவருமான ஹலில் செலிக்கிற்கு (Halil Çelik) வழங்கிய அஞ்சலியை இங்கு வெளியிடுகிறோம். ஜனவரி 14, ஞாயிற்றுக்கிழமை இஸ்தான்புல்லில் நடைபெற்ற ஹலிலின் ஐந்தாவது ஆண்டு நினைவு கூட்டத்தில் சைமண்ட்ஸின் கருத்துக்கள் வாசிக்கப்பட்டன.

ஹலில் செலிக் (1961-2018)

சோசலிச சமத்துவக் குழுவின் அன்பான தோழர்களே மற்றும் நண்பர்களே

தோழர் ஹலீல் செலிக் அவர்களின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாளைக் குறிக்கும் உங்கள் நினைவஞ்சலிக் கூட்டத்திற்கு சோசலிச சமத்துவக் கட்சியின் (ஆஸ்திரேலியா) சார்பாக உங்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்களை அனுப்புகிறேன்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) துருக்கியப் பிரிவுக்கான அரசியல் அடித்தளங்களை அமைப்பதில் ஹலீல் முக்கிய பங்கு வகித்தார். உலக சோசலிச வலைத் தளத்தின் முக்கிய கட்டுரைகள் மற்றும் அறிக்கைகளின் அவரது மொழிபெயர்ப்புகள், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பணியைத் துருக்கிய தொழிலாள வர்க்கத்திற்கு கொண்டு சேர்த்து, நான்காம் அகிலத்துடனும் சர்வதேச தொழிலாள வர்க்கத்துடனும் அதன் அரசியல் தொடர்பையும் ஒருங்கிணைப்பையும் சாத்தியமாக்கியது.

அனைத்து விதமான போலி இடதுகள் மற்றும் சோசலிஸ்டுகள், குறிப்பாக நான்காம் அகிலத்தில் இருந்து பிரிந்து ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படைகளை பொய்யாக்கியவர்களிடமிருந்து வேறுபடுத்துவது அவசியம் என்பதை ஹலீல் புரிந்துகொண்டார். மைக்கேல் பாப்லோ மற்றும் எர்னஸ்ட் மண்டேலின் திருத்தல்வாதத்திற்கு எதிராக 1953ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை நிறுவுவதற்காக நடத்தப்பட்ட அரசியல் போராட்டங்களை மையமாகக் கொண்ட டேவிட் நோர்த்தின் அடிப்படைப் படைப்பான - நாம் காக்கும் மரபியம் (The Heritage We Defend)-ஐ - மொழியாக்கம் செய்யும் கடினமான பணியை அவர் மேற்கொண்டார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை புரட்சிகர மார்க்சிசத்தின் உண்மையான கட்சியாக அடையாளம் காண்பது ஹலீலுக்கு ஒரு கடினமான அரசியல் பாதையாக இருந்தது. அவரது அகால மரணம் பற்றிய ICFIன் அறிக்கை விளக்கியது போல்:

“ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களைக் கண்டறிவது கடினமாகவும், அரசியல் இடதுசாரிகள் எண்ணற்ற தேசியவாத மற்றும் குட்டி முதலாளித்துவப் போக்குகளால் மேலாதிக்கம் பெற்ற ஒரு நாட்டில், உண்மையான மார்க்சிச சர்வதேசியத்திற்கான பாதை நீண்ட மற்றும் கடினமான ஒன்றாக மாறியிருந்தது. ஆனால் ஹலீல் ஒரு உண்மையான போராளி, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தை நிறுவுவதில் உறுதியாக இருந்தார். சிறைச்சாலை, அடக்குமுறை அல்லது பல அரசியல் சாணக்கியர்களுடனான அவரது அனுபவங்கள் அவரைச் சோர்வடையச் செய்யவில்லை”.

2014 இல் பேர்லினில் ஹலிலை சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதன் பிரிவுகளின் வேலைகளில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். துருக்கி மற்றும் பரந்த மத்திய கிழக்கின் அரசியலில் அவருக்கு நெருக்கமான அறிவு இருந்தது மற்றும் சர்வதேச நிகழ்வுகளை நெருக்கமாகப் பின்பற்றினார். துருக்கிய ஆளும் வர்க்கத்தின் புவிசார் அரசியல் ஆர்வங்கள் மற்றும் துருக்கி மற்றும் அப் பிராந்தியத்தில் குர்திஷ் பிரச்சினை பற்றி நாங்கள் பேசினோம். ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் அதன் தாக்கங்கள் குறித்து அவருக்கு உறுதியான புரிதல் இருந்தது. ஹலீல் ஒரு தீவிரப் புரட்சியாளனாக, தனது சரியான அரசியல் வீட்டை இறுதியாக கண்டுபிடித்தது எனக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஹலீலின் வாழ்க்கையும் பணியும் துருக்கிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மட்டுமல்ல, சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது. ஸ்ராலினிசம் மற்றும் மாவோயிசம் மற்றும் அவர்களின் துரோகங்கள், அவர்களின் போலி-இடது வக்காலத்து வாங்குபவர்களுடன் சேர்ந்து, பல தசாப்தங்களாக அரசியல்ரீதியாக அழிவுகரமான பாத்திரத்தை ஆற்றிய ஆசியாவில் இதில் அடங்கும். இந்த நாடுகளில், மனிதகுலம் எதிர்கொள்ளும் மகத்தான நெருக்கடிகளுக்கு புரட்சிகர தீர்வுகளைத் தேடும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கும் தங்கள் வழியைக் கண்டறிய அவரது முன்மாதிரி சந்தேகத்திற்கு இடமின்றி உதவும்.

தோழர் ஹலீல் செலிக் அவர்களின் நினைவு நீடுழி வாழ்க!

உங்கள் சகோதரத்துவத்துடன்,

பீட்டர் சைமண்ட்ஸ்,

சோசலிச சமத்துவக் கட்சி (ஆஸ்திரேலியா)