மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அலுவலகமானது உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை பிரத்தியேகமாக வரவேற்பதற்காக, 98 வயதான நாஜி போர்க் குற்றவாளியான யாரோஸ்லாவ் ஹுன்காவுக்கு செப்டம்பர் 2023 இல் முறையான அழைப்பை அனுப்பியது. திங்களன்று குளோப் அண்ட் மெயில் வெளியிட்ட இந்த வெளிப்படுத்தலானது, வாஃபென்-எஸ்எஸ் (Waffen-SS) இன் முன்னாள் உறுப்பினருக்கு கனடாவின் மக்கள் அவையினர் எழுந்து நின்று ஒருமனதாக கரவொலி எழுப்பியமையானது, ஆளும் உயரடுக்கிற்குள் அதிவலது மற்றும் முழு நாஜி படைகளை அவர்களின் ஏகாதிபத்திய நலன்களை மிகவும் தீவிரமாக பின்தொடர பயன்படுத்துவதற்கு பரந்த ஆதரவைப் பிரதிபலிக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
“கனடாவின் பிரதமரின் அழைப்பிதழ்—செப்டம்பர் 22, 2023” என்ற தலைப்பிலான மின்னஞ்சலில் “அன்புள்ள யாரோஸ்லாவ் ஹுன்கா” என்று இந்த அழைப்பிதழ் இருந்தது. அதில், “கனடாவின் பிரதமர் மாண்புமிகு ஜஸ்டின் ட்ரூடோ உங்களை ஒரு சிறப்பு நிகழ்வுக்கு அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்வு செப்டம்பர் 22, 2023 வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு டொராண்டோ, ஒன்ராறியோவில் நடைபெறும்” என்று அதில் இருந்தது.
ட்ரூடோவைத் தவிர, இந்த நிகழ்வில் துணை பிரதம மந்திரி கிறிஸ்டியா ஃப்ரீலாண்டும் கலந்து கொண்டார், இவரது தாய்வழித் தாத்தா மைகைலோ சோமியாக், இரண்டாம் உலகப் போரின் போது ஹுன்காவுடன் சக உக்ரேனிய நாஜி ஒத்துழைப்பாளராக இருந்தார். சோமியாக் ஒரு பாசிச உக்ரேனிய மொழி செய்தித்தாளான கிராகிவ்ஸ்கி விஸ்டி (Krakivski Visti) இன் ஆசிரியராக இருந்தார். உக்ரேனில் யூதர்கள் பாரிய அளவில் நிர்மூலமாக்கப்பட்ட நிலைமையில் அது திட்டமிட்ட யூதவிரோத தூண்டுதலில் ஈடுபட்டது. ஹுன்கா பணியாற்றிய வாஃபென்-எஸ்எஸ் பிரிவானது வாஃபென்-எஸ்.எஸ்ஸின் 14 வது கிரெனேடியர்ஸ் பிரிவு, அல்லது ‘கலீசியா பிரிவு’, உருவாக்குவதற்கும் அவர் பிரச்சாரம் செய்தார்.
இறுதியில், ஃபோர்ட் யார்க் இராணுவத் தளத்தில் நடைபெற்ற வரவேற்பில் ஹுன்கா பங்கேற்கவில்லை. அவர் இல்லாதது குறித்த பெரும்பாலான விளக்கம் என்னவென்றால், சில மணி நேரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் எழுந்து நின்று கரவொலி எழுப்பி அவர் பெற்றுக் கொண்ட கெளரவத்தால் ஏற்பட்ட பொது மக்களின் கோபத்தின் காரணமாக, பிரதம மந்திரி அலுவலம் சேதத்தை தவிர்த்து கட்டுப்பாட்டிற்குள் நிலைமையை கொண்டுவர தூண்டியதற்கு வழிவகுத்தது.
மக்கள் அவையின் ஒவ்வொரு உறுப்பினரும், கனடாவின் இராணுவத் தலைவர், ஜெலென்ஸ்கி மற்றும் அரங்கில் இருந்த ஜி-7 இன் தூதுவர்கள் ஆகியோர்களால் ஒரு நாஜி போர் குற்றவாளிக்கு எழுந்து நின்று கரவொலி எழுப்பப்பட்டது அறியாமையால் நடந்தது என்ற நம்பமுடியாத கதையைச் சுற்றி கனடாவின் அரசியல் ஸ்தாபனம் அந்த நேரத்தில் ஒன்றாக அணிதிரண்டது. அவை அரங்கில் ஹுன்காவை சுட்டிக்காட்டி, அவர் ஒரு உக்ரேனிய மற்றும் கனேடிய “போர் வீரர்” என்று கெளரவித்து மற்றும் எழுந்து நின்று கரவொலி எழுப்ப அழைப்பு விடுத்த அவையின் சபாநாயகர் அந்தோணி ரோட்டா தனது பதவியை ராஜினாமா செய்தார் மற்றும் இந்த சம்பவத்திற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். நாடாளுமன்றத்தில் நடந்த “தவறுக்கு” மன்னிப்பு கேட்ட ட்ரூடோ, பின்னர் செப்டம்பர் 2023 இல், “வெள்ளிக்கிழமை இந்த அவையில் இருந்த நாங்கள் அனைவரும் நிலைமை குறித்து அறியாமல் அவ்வாறு செய்திருந்தாலும் எழுந்து நின்று கைதட்டியதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறோம்” என்று கூறினார்.
உலக சோசலிச வலைத் தளமானது நாடாளுமன்றத்தில் ஹுன்காவை கெளரவித்தது தொடர்பான அதன் பகுப்பாய்வில், இந்த பரிதாபகரமான சாக்குப்போக்கை நிராகரித்தது. உலக சோசலிச வலைத் தளம் செப்டம்பர் 28, 2023 அன்று பின்வருமாறு எழுதியது, “இது அபத்தமானது. வெள்ளிக்கிழமை நிகழ்வு ஒரு வழமையான நாடாளுமன்ற அமர்வு அல்ல, மாறாக ரஷ்யாவுக்கு எதிரான போரில் 9 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான இராணுவ மற்றும் நிதி உதவிகளுடன் ஒட்டாவா முழுமையாக ஆதரித்துள்ள உக்ரேனிய அரச தலைவரின் விஜயமாக இருந்தது. நடவடிக்கைகளின் ஒவ்வொரு கட்டமும் கவனமாக திட்டமிடப்பட்டு முன்கூட்டியே தயாரிக்கப்பட்டிருக்கும். இதற்கு மாறாக கருத்து தெரிவிப்பது வாசகர்களை முட்டாள்களாகப் பார்ப்பதாகும்...
வெளிப்படையாக மறுக்கும் தீவிர முயற்சிகளானது — அதாவது ஹுன்காவின் கொண்டாட்டம் ஒரு வேண்டுமென்றே அரசியல் ஆத்திரமூட்டலாகும், இது அதன் தூண்டுதல்களுக்கு எதிராக கணிசமாக திரும்பியது —ஒரு நாஜி போர் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட எழுந்து நின்று கரவொலி எழுப்பி வரவேற்பது, உக்ரேனில் ரஷ்யா மீதான அமெரிக்க தலைமையிலான போரை விற்க பயன்படுத்தப்பட்ட பிரச்சாரத்தை வெடிக்கச் செய்கிறது என்ற உண்மையால் உந்தப்படுகின்றன” என்று பகுப்பாய்வில் எடுத்துக்காட்டியது.
இந்தப் பகுப்பாய்வானது ட்ரூடோவின் “அன்புள்ள யாரோஸ்லாவ்” அழைப்பிற்கும் சமமாக பொருந்துகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உடனடியாக தேசிய முக்கியத்துவத்திற்கு வந்த ஒரு அதிவலது செல்வாக்குக் குழுவான உக்ரேனிய கனேடிய காங்கிரஸ் (Ukrainian Canadian Congress, UCC) இன் ஒத்துழைப்புடன் டொரொண்டோ நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அப்போது அது கனடாவில் நாஜி ஒத்துழைப்பாளர்களை அனுமதிக்க பிரச்சாரம் செய்தது. இவற்றில் ஹுன்கா போன்ற வாஃபென்-எஸ்எஸ் (Waffen-SS) உறுப்பினர்களும், ஸ்டீபன் பண்டேரா தலைமையிலான பாசிச உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பின் (Organization of Ukrainian Nationalists, OUN) உறுப்பினர்களும் அடங்குவர். OUN ஆனது 1940 இல் அரசு ஆதரவுடன் நிறுவப்பட்டது மற்றும் எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக விரிவான அரச நிதியும் மற்றும் அரசியல் உதவியும் வழங்கப்பட்டிருந்தது. கனடாவின் வெளியுறவுக் கொள்கையில் அது தொடர்ந்தும் அதீத பங்களிப்பை வழங்கி வருகின்றது. அது ஒட்டாவாவைப் போலவே கனேடிய அரசாங்கத்துடனும் நெருக்கமாக வேலை செய்திருக்கிறது, மேலும் கனேடிய ஆயுதப் படைகளானது உக்ரேனிய இராணுவம் மற்றும் நவ-நாஜி அசோவ் படைப்பிரிவு உட்பட அரசு இயந்திரத்திற்குள் பாசிசவாத சக்திகளை ஒருங்கிணைக்க உதவியுள்ளன.
ஹுன்கா தனது கடந்த காலத்தைக் குறித்து பல ஆண்டுகளாக பகிரங்கமாக பெருமையடித்துக் கொண்டிருந்தாலும், எல்லோரும் ஹுன்காவின் கடந்த காலத்தைப் பற்றி அறியாதவர்கள் என்று கனடியப் பிரதமர் அலுவலகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ட்ரூடோவின் செய்தித் தொடர்பாளர் ஆன்-கிளாரா வைலன்கோர்ட்டின் கூற்றுப்படி, “மக்கள் அவையின் முன்னாள் சபாநாயகரால் சுயாதீனமாக அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு பிரதமருக்கு இந்த நபரைப் பற்றி எதுவும் தெரியாது. கடந்த செப்டம்பரில், டொராண்டோவில் உக்ரைன் ஜனாதிபதியுடன் ஒரு சமூக நிகழ்வு இருந்தது, இதில் 1,000 க்கும் மேற்பட்டோர் அழைக்கப்பட்டனர். உக்ரேனிய கனடிய காங்கிரஸ் போன்ற குழுக்களின் பரிந்துரையின் பேரில் நூற்றுக்கணக்கான கனேடியர்கள் அழைக்கப்பட்டனர்.”
இந்த சந்தேகத்திற்குரிய போலிக்காரணத்தை ஒருவர் மேலோட்டமாக ஏற்றுக்கொண்டாலும், அது பதில் கொடுப்பதை விட அதிக கேள்விகளைத்தான் எழுப்புகிறது.
பிரதமர், அவரது துணைப் பிரதமர் மற்றும் கனேடிய ஏகாதிபத்தியத்தின் நெருங்கிய சர்வதேச கூட்டாளிகளில் ஒருவரின் கௌரவ விருந்தினர் ஆகியோர் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வுக்கு கனடாவின் அரசாங்கத் தலைவரின் பெயரில் “நூற்றுக்கணக்கான கனேடியர்களை” அழைப்புவிடுக்கும் திறன் எத்தனை அமைப்புகளுக்கு உள்ளது? பிரதம மந்திரிக்கு உண்மையிலேயே “இந்த நபரைப் பற்றி எதுவும் தெரியாது” என்றால், பிரதமர் அலுவலகம் அவருக்கு தனிப்பட்ட முறையில் “அன்புள்ள யாரோஸ்லாவ் ஹுன்கா” என்ற அழைப்பிதழை அனுப்பியதில் என்ன நியாயப்படுத்தல் இருக்க முடியும்?
நாடாளுமன்றத்தில் எழுந்து நின்று கரவொலி எழுப்புவதற்கும், ஹுன்காவிற்கு விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பிற்கும் ஒரே நம்பத்தகுந்த விளக்கமாகவிருப்பது என்னவெனில், சந்தைகள், மூலப் பொருட்கள் மற்றும் பூகோள அளவில் பிரதான வல்லரசுகளிடையே செல்வாக்கு மண்டலங்களுக்கான தீவிர போராட்டத்தில் கனேடிய ஏகாதிபத்தியம் பங்கு பெறுவதற்கு மிகவும் பிற்போக்கான அரசியல் சக்திகளுடன் கூட்டணிகள் தேவை என்பதுதான். ரஷ்யாவை ஒரு அரை-காலனித்துவ அந்தஸ்துக்கு அடிபணியச் செய்வதற்கான அமெரிக்க-தலைமையிலான முனைப்பு, உக்ரேனில் உத்தியோகபூர்வ அரசியல் வாழ்வில் மேலாதிக்கம் செலுத்தி வந்த பண்டேராவின் அதிவலது அரசியல் வழித்தோன்றல்களால் எடுத்துக்காட்டப்பட்டவாறு, அதே அடிப்படை இலக்குகளைப் பின்தொடர்வதில் 20 ஆம் நூற்றாண்டில் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தால் பயன்படுத்தப்பட்ட அதே பாசிசவாத சக்திகளுக்கு புத்துயிரூட்டுவதை அவசியமாக்குகிறது.
காஸாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு வழங்கப்பட்ட கட்டுப்பாடற்ற ஆதரவானது, வாஷிங்டன் மற்றும் பிரதான ஐரோப்பிய தலைநகரங்களிலுள்ள அதன் சமதரப்பினரைப் போலவே, ட்ரூடோவின் தாராளவாத அரசாங்கமும், கனேடிய ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நலன்கள் மற்றும் குறிக்கோள்களை முன்னெடுப்பதில் மிகவும் ஈவிரக்கமற்ற வழிமுறைகளைப் பயன்படுத்த தயாராக இருப்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
உள்நாட்டு முன்னணியில், ஹுன்கா மற்றும் அவரது பாசிசவாத கூட்டாளிகளான UCC ஐ ஊக்குவிப்பதென்பது, தொழிலாள வர்க்கத்தையும் மற்றும் ஆளும் உயரடுக்கின் சிக்கன நடவடிக்கை மற்றும் போர் திட்டநிரலுக்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் மிரட்டுவதை வெளிப்படையாக நோக்கமாகக் கொண்டுள்ளது.
ட்ரூடோ அரசாங்கமானது, தொழிற்சங்கங்களிலுள்ள அதன் பங்காளிகள் மற்றும் தொழிற்சங்க ஆதரவிலான புதிய ஜனநாயகக் கட்சி மூலமாக வர்க்கப் போராட்டத்தை ஒடுக்க நோக்கம் கொண்டுள்ளது. எவ்வாறிருப்பினும், ஒரு நாஜி போர் குற்றவாளிக்கு ட்ரூடோ விடுத்த அழைப்பானது, அதிவலது ஆத்திரமூட்டலாளர் பியர் போலீவ்ரே தலைமையிலான வெளிப்படையான வலதுசாரி பிரிவுக்கு சளைக்காத விதத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் “தாராளவாத” பிரிவு, அதன் வர்க்க நலன்களைப் பாதுகாக்க அவசியமான எந்த வழிவகையையும் நாடத் தயாராக உள்ளது என்பதற்கான ஒரு எச்சரிக்கையாக சேவையாற்றுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜனவரி-பிப்ரவரி 2022 இல் ஒட்டாவா நகரத்தை ஆக்கிரமித்த “சுதந்திரம்” என்று அழைக்கப்படும் வாகன தொடரணி அணிவகுப்பிற்காக மிகவும் தீவிரமான ஆதரிப்பவராக பணியாற்றிய பின்னர் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ்களின் தலைவராக போலீவ்ரே (Poilievre) உருவெடுத்தார். ஒரு எதேச்சதிகார இராணுவ ஆட்சியை ஸ்தாபிக்க அறிவுறுத்திய பாசிசவாதிகளால் தூண்டிவிடப்பட்ட இந்த வாகன தொடரணியின் அணிவகுப்பு, எஞ்சியிருக்கும் அனைத்து கோவிட்-19 தணிப்பு நடவடிக்கைகளையும் அகற்றுவதற்கு பொதுமக்களின் எதிர்ப்பை தகர்க்க பயன்படுத்தப்பட்டது.
“தொழிலாள வர்க்கம், முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான போராட்டம், மற்றும் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியைக் கட்டியெழுப்புதல்” என்ற அதன் புத்தாண்டு அறிக்கையில் உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எழுதியதைப் போல:”
காஸா இனப்படுகொலையானது, ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், முதலாம் உலகப் போரின் மத்தியில் லெனினால் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட ஒரு போக்கை உயர்ந்த மட்டத்தில் உறுதிப்படுத்துகிறது. அவர் 1916 இல் பின்வருமாறு எழுதினார், “ஜனநாயக-குடியரசுவாதிகளுக்கும் மற்றும் பிற்போக்கு-முடியாட்சி ஏகாதிபத்திய பூர்சுவா வர்க்கத்திற்கும் இடையிலான வேறுபாடு அழிக்கப்படுகிறது, ஏனெனில் அவைகள் இரண்டும் உயிருடன் அழுகிக் கொண்டிருக்கின்றன...” “பிற்போக்கு-முடியாட்சிவாதிகளுக்கு” “பாசிசம்” என்ற சொல்லை பதிலீடு செய்வதும் லெனினின் பகுப்பாய்வும், தற்போதைய ஏகாதிபத்திய ஆட்சிகளைக் குறித்து விளக்குவதற்கு முற்றிலும் செல்லுபடியாகுவதாக இருக்கிறது.
ஒரு நாஜி போர் குற்றவாளியை ட்ரூடோ அரவணைத்ததற்கும் அதிகமாக, இந்த சர்வதேச போக்கானது, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், அதிவலது தேசிய பேரணிக் கட்சியின் (RN) புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கைகளை ஏற்றிருப்பதிலும் மற்றும் ஜேர்மன் அரசாங்கம் பாசிசவாத ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சியின் முக்கிய கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதிலும் வெளிப்பாட்டைக் காண்பிக்கின்றது. அமெரிக்காவில், ஜனாதிபதி ஜோ பைடெனும் ஜனநாயகக் கட்சியினரும், உலகெங்கிலும் போர் நடத்துவதற்கும் அமெரிக்க உலகளாவிய மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பதற்குமான அவர்களின் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக, ஜனவரி 6, 2021 அன்று ட்ரம்பின் பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியில் குடியரசுக் கட்சியினர் உடந்தையாக இருந்த பின்னர், அவர்களுக்கு மறுவாழ்வளிக்க முனைந்துள்ளனர்.
அதிகரித்து வரும் உலகளாவிய பாசிசவாத அச்சுறுத்தலுக்கு எதிராக ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க தகைமை கொண்ட ஒரே சமூக சக்தி முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறைக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் அணிதிரட்டப்பட்ட சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். இதே முதலாளித்துவ நெருக்கடியானது, ஒவ்வொரு நாட்டின் ஆளும் வர்க்கங்களையும் அவற்றின் பரந்த செல்வவளத்தைப் பாதுகாப்பதற்காக உலகப் போர் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது, இது தொழிலாள வர்க்கத்தை சோசலிசத்திற்கான ஒரு வெகுஜன இயக்கம் எழுவதற்கான புறநிலை அடித்தளத்தை உருவாக்கும் பெரும் வர்க்க மோதல்களுக்குள் தள்ளுகிறது.