முன்னோக்கு

அமெரிக்க ஆதரவுடன், இஸ்ரேல் இனப்படுகொலையை காஸாவிலிருந்து மேற்குக் கரை வரை விரிவுபடுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

மேற்குக் கரையிலுள்ள அல்-ஃபராவின் அகதிகள் முகாமில் இராணுவ நடவடிக்கையின் போது இஸ்ரேலிய படைகளின் புல்டோசர் ஒரு தெருவில் நகர்கிறது. ஆகஸ்ட் 28, 2024, புதன்கிழமை. [AP Photo/Nasser Nasser]

மேற்குக் கரையை குறிவைத்து பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் தனது இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் புதிய கட்டத்தை தொடங்கியுள்ளது.

செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில், நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய துருப்புக்கள், கவச வாகனங்கள் மற்றும் புல்டோசர்களுடன், ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் ஆதரவுடன், இரண்டு தசாப்தங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், ஜெனின், துபாஸ் மற்றும் துல்கரேம் நகரங்கள் மற்றும் முகாம்களை குறிவைத்து மிகப்பெரிய தாக்குதலை நடத்தின.

39,000 மக்களைக் கொண்ட ஜெனின் நகரம் சுற்றி வளைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், இஸ்ரேலிய படைகள் மேற்குக்கரை முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்வதை தடுத்துள்ளன. மேற்குக் கரையில் நடைபெறும் தாக்குதல் பல நாட்களுக்கு நீடிக்கும் என்றும், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்குக் கரையின் இனச் சுத்திகரிப்புதான் இலக்கு என்று இஸ்ரேலிய வெளியுறவு மந்திரி இஸ்ரேல் காட்ஸ் தெளிவுபடுத்தினார்: “பாலஸ்தீன குடியிருப்பாளர்களை தற்காலிகமாக வெளியேற்றுவது உட்பட, காஸாவில் பயங்கரவாத உள்கட்டமைப்பை நாம் கையாள்வதைப் போலவே இந்த அச்சுறுத்தலையும் நாம் சமாளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

காஸா இனப்படுகொலையைப் போலவே இந்த நடவடிக்கையின் இலக்கும் 1967 முதல் இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள நிலத்தை முறையாக இணைக்கும் நோக்கத்துடன், முடிந்தவரை பல பாலஸ்தீனியர்களைக் கொன்று, அவர்களது வீடுகள் மற்றும் கிராமங்களை விட்டு இடம்பெயர வைப்பது ஆகும். காஸா, மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் உட்பட பாலஸ்தீனிய பிராந்தியங்களில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு சட்டவிரோதமானது என்று ஜூலை மாதம் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தற்போது 10 மாதங்களாக இடம்பெற்றுவரும் காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல், அதன் மக்களுக்கு ஒரு தீய கனவை உருவாக்கியுள்ளது. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 40,000க்கும் மேற்பட்டவர்கள் மடிந்துள்ளனர், மேலும் 10,000 பேர் இடிபாடுகளுக்கு இடையே காணாமல் போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது. உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கையில் 17,000 குழந்தைகளும் அடங்குவர்.

கடந்த மாதம் மருத்துவ இதழான தி லான்செட்டில் வெளியிடப்பட்ட மதிப்பீட்டின்படி, இஸ்ரேல் வேண்டுமென்றே ஊக்குவித்துவரும் பட்டினி மற்றும் தொற்றுநோய் பரவலில் பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்தால், உண்மையான இறப்பு எண்ணிக்கை 186,000 அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம்.

காஸாவில் எஞ்சியுள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் அங்கிருந்து மீண்டும் மீண்டும் வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இப்போது 89 சதவீத பிரதேசத்தை உள்ளடக்கிய பகுதிகளில் வாழும் மக்கள் இஸ்ரேலிய வெளியேற்ற உத்தரவுகளை எதிர்கொள்கின்றனர். தற்போது, உணவு, குழாய் நீர் அல்லது சுகாதார வசதிகளை வழங்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத வெறும் 41 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் மக்கள் நெரிசலாக வாழத் தள்ளப்பட்டுள்ளனர்.

சர்வதேச உதவி அமைப்புக்களின் செயற்பாடுகளை மூடுமாறு நிர்ப்பந்திக்க இஸ்ரேல் ஒரு ஒருங்கிணைந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. டெய்ர் அல்-பலாவில் உள்ள அதன் தலைமையகத்தை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை அடுத்து, இந்த வாரம் உணவு விநியோகத்தை நிறுத்துவதாக ஐ.நா அறிவித்தது. மேலும் உலக உணவுத் திட்ட அமைப்பின் தெளிவாகக் குறிக்கப்பட்ட வாகனம் ஒன்று புதன்கிழமை இஸ்ரேலியப் படைகளால் சுடப்பட்டதை அடுத்து அதன் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டியிருந்ததாக, அந்த அமைப்பு  கூறியது. காஸாவில் 10 பேரில் ஒன்பது பேர் இப்போது 24 மணி நேரமும் உணவின்றி இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும், தடுக்கக்கூடிய நோய்கள் அங்கு அதிகரித்து வருகின்றன. 

இப்போது, இந்த கொடுங்கனவு மேற்குக் கரைக்கு கொண்டு வரப்படுகிறது. 2022 இல் பெஞ்சமின் நெதன்யாகுவின் அதிவலது ஆட்சி அதிகாரத்திற்கு திரும்பியதிலிருந்து மேற்குக் கரை மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் வியத்தகு முறையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நெதன்யாகு அரசாங்கம் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான குடியேற்றவாசிகளின் வன்முறையை ஊக்குவித்து சட்டவிரோத குடியேற்றங்களை நிர்மாணிப்பதை துரிதப்படுத்தியுள்ளது.

இப்பொழுது மேற்குக் கரையில் 517,000 குடியேறிகள் வாழ்கின்றனர். இது 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட கிட்டத்தட்ட இரு மடங்காகும், கிழக்கு ஜெருசலேமில் 200,000 க்கும் அதிகமானோர் வாழ்ந்து வருகின்றனர்.

நெதன்யாகு மேற்குக் கரையில் குடியேற்றவாசிகளுக்கான கட்டுமானங்களை மேற்பார்வையிட நிதி மந்திரி பெசலெல் ஸ்மோட்ரிச்சையும், சட்ட ஒழுங்கை பராமரிக்க தேசிய பாதுகாப்பு மந்திரி இட்டாமர் பென்-க்வீரையும் நியமித்தார். இந்த இரண்டு அதிதீவிர வலதுசாரி அமைச்சர்களும் மேற்குக் கரையில் இருந்து குடியேறியவர்கள் மற்றும் பாலஸ்தீனத்தின் இன சுத்திகரிப்புக்கு மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

2023 ஜனவரி, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், மேற்குக் கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் பெரும் தாக்குதல்களைத் தொடங்கியது. 12 பாலஸ்தீனியர்களைக் கொன்ற ஜூலை தாக்குதல், “சர்வதேச சட்டங்கள் மற்றும் பலத்தைப் பயன்படுத்துவது தொடர்பான விதிமுறைகளை மொத்தமாக மீறுவதாகவும்,  இதனை போர்க்குற்றமாக கருத வேண்டும்” என்றும் ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்தது.

அக்டோபர் 7, 2023 தாக்குதல்களுக்கு முன்னதாக இடம் பெற்ற இதுபோன்ற பிற அட்டூழியங்களை நெதன்யாகு அரசாங்கம் முன்கூட்டியே அறிந்திருந்தது. மேலும், காஸா எல்லையில் இருந்து பாதுகாப்புப் படைகளைத் திரும்பப் பெறுவதன் மூலம் இதனை எளிதாக்கியது. நெதன்யாகு ஆட்சி காஸா பகுதியில் ஒரு இனப்படுகொலை மற்றும் இன சுத்திகரிப்பைத் தொடங்க இந்த வாய்ப்பைப் பற்றிக் கொண்டது.

காஸா இனப்படுகொலையானது மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் குடியேற்றவாசிகளின் தாக்குதல்களுடனும் இஸ்ரேலிய இராணுவத்தினரின் தாக்குதல்களுடனும் இணைந்து அதிகரித்துள்ளது. கடந்த 10 மாதங்களில், இந்தப் பகுதிகளில் 652 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த பாரிய குற்றம் அமெரிக்கா மற்றும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளால் நிதியளிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு, அரசியல் ரீதியாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மேற்குக் கரையின் மீதான தாக்குதல் அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் உரையாற்றிவிட்டு நெதன்யாகு திரும்பிய ஒரு மாதத்திற்குப் பிறகு வந்துள்ளது. அதில், அவர் ஈரானை மையமாகக் கொண்டு பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் போரை மத்திய கிழக்கு எங்கிலும் ஒரு மோதலாக விரிவுபடுத்த சூளுரைத்திருந்தார். 

அமெரிக்க காங்கிரஸின் இரு அவைகளிலுள்ள ஜனநாயக கட்சி மற்றும் குடியரசுக் கட்சி உறுப்பினர்களிடமிருந்து ஒரு கைத்தட்டலைப் பெற்ற நெதன்யாகு, அதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோருடன் தனித்தனியான சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார்.  நெதன்யாஹுவை சந்தித்த பிறகு ஹாரிஸ், “ஈரான் மற்றும் ஈரான் ஆதரவு போராளிகளான ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போன்றவற்றிலிருந்து இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும் என்பதை நான் எப்போதும் உறுதி செய்வேன்” என்று அறிவித்தார். இது, காஸாவிற்கு அப்பாலும் போரை விரிவுபடுத்தவதற்கான ஒரு பயனுள்ள பச்சை விளக்காகும்.

இந்த மாத தொடக்கத்தில், F-15 ரக 50 போர் விமானங்கள், மேம்பட்ட நடுத்தர தூர வான்-விமான ஏவுகணைகள் (AMRAAM), 120mm டாங்கிகளுக்கான வெடிமருந்துகள், அதிக தாக்கத்துடன்-வெடிக்கும் எறிகணைகள் மற்றும் தந்திரோபாய வாகனங்கள் உட்பட இஸ்ரேலுக்கு 20 பில்லியன் டாலர் ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்தது. குறிப்பாக, காஸாவிற்கு அப்பால் போரை விரிவுபடுத்த தேவையான ஆதார வளங்களை இஸ்ரேலுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா அதன் தீவிரமடைந்து வரும் உலகளாவிய போரின் கட்டமைப்பிற்குள் இந்த இனப்படுகொலையை இஸ்ரேல் இந்த உலகளாவிய போரின் மத்திய கிழக்கு முன்னணியின் அச்சாணியாக உள்ளது, ஈரான் மற்றும் பிராந்தியத்தில் அதன் கூட்டாளிகளுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் நாயாக சேவையாற்றுகிறது.

ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிரான உலகளாவிய போர் விரிவாக்கத்தின் கட்டமைப்பிற்குள் அமெரிக்கா இனப்படுகொலையை ஆதரித்து வருகிறது. இந்த உலகளாவிய போரின் மத்திய கிழக்கு போர்முனையில் அச்சாணியாக செயற்பட்டுவரும் இஸ்ரேல், ஈரான் மற்றும் இப்பிராந்தியத்தில், அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக அமெரிக்காவின் தாக்குதல் நாயாக செயல்பட்டு வருகிறது.

மேற்குக் கரை வரை இனப்படுகொலை விரிவடைந்திருப்பதானது, வெகுஜன எதிர்ப்புக்களில் இதுகாறும் ஆதிக்கம் செலுத்தி வந்த அமைப்புக்களின் முன்னோக்கின் மொத்த தோல்வியை எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்காவில், இஸ்ரேலை ஆதரிப்பதை நிறுத்துமாறு ஜனாதிபதி பைடெனுக்கும், மேலும் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிசான கமலா ஹாரிசுக்கும் “அழுத்தம்” கொடுக்க அவர்கள் முயன்று வந்தனர்.

எவ்வாறிருப்பினும், நெதன்யாகு ஆட்சிக்கான அமெரிக்க உதவி மீதான எந்தவொரு மட்டுப்படுத்தல்களையும் ஹாரிஸ் முற்றிலுமாக நிராகரித்துள்ளார். ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் தெரிவித்த கருத்துக்களில், “இஸ்ரேல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதற்கான அதன் உரிமைக்காக நான் எப்போதும் எழுந்து நிற்பேன், இஸ்ரேல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் திறனைக் கொண்டிருப்பதை நான் எப்போதும் உறுதிப்படுத்துவேன்,” என்று அறிவித்தார்.

பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கான அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்துப் பிரிவுகளின் மொத்த ஆதரவும், இராணுவ வழிமுறைகள் மூலம் அதன் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு முட்டுக்கொடுக்கும் அமெரிக்க முதலாளித்துவத்தின் உந்துதலில் இருந்து பாய்கிறது. இதில் மத்திய கிழக்கை நவ காலனித்துவ முறையில் அடிமைப்படுத்துவது ஒரு முக்கிய கூறுபாடாகும். 

அமெரிக்க காங்கிரஸ் கட்டிடமான கபிடோலுக்கு நெதன்யாகு வருகை தந்ததுக்கு எதிராக ஜூலை 24 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், சோசலிச சமத்துவக் கட்சியின் அங்கத்தவர்கள், இனப்படுகொலையை நிறுத்த முதலாளித்துவ அரசியல்வாதிகள் மீது கோரிக்கைகளை வைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியில்தான் முடிவடையும் என்று விளக்கியிருந்தனர். மேற்குக் கரையில் இஸ்ரேலின் பாரிய தாக்குதலுடன், இந்த எச்சரிக்கைகள் சரியானவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.

பாலஸ்தீனத்தின் மீதான இனப்படுகொலை மற்றும் இனச்சுத்திகரிப்பு ஆகியவற்றிற்கு வளர்ந்து வரும் உலகளாவிய எதிர்ப்புக்கு முற்றிலும் மாறுபட்ட மூலோபாயம் தேவைப்படுகிறது. அது ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் உட்பட அனைத்து ஏகாதிபத்திய போர்களுக்கும் எதிரான போராட்டத்துடன் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த வேண்டும். மேலும் தொழிலாள வர்க்கம் தங்கள் வேலைகள், ஊதியங்கள் மற்றும் வாழ்க்கைத் தரங்களைப் பாதுகாப்பதற்கான வளர்ந்து வரும் போராட்டத்துடன் இணைந்திருக்க வேண்டும். ஏகாதிபத்தியப் போர் மற்றும் காட்டுமிராண்டித்தனத்திற்கு பிரதான காரணமான முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கியெறிவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் அது ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.

Loading