முன்னோக்கு

வாஷிங்டன் வான்வெளியில் விமானங்களின் மோதல்: DC விமான பேரழிவின் பின்னணியில் உள்ள அரசியல் பிரச்சினைகளும் பதிலளிக்கப்படாத கேள்விகளும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ரொனால்ட் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திற்கு அருகிலுள்ள போடோமாக் ஆற்றில், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஜெட் விமானமும் ராணுவ ஹெலிகாப்டரும் வானில் மோதிய விபத்தில் சிக்கிய பகுதியைச் சுற்றி தேடுதல் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஜனவரி 31, 2025 வெள்ளிக்கிழமை.  [AP Photo/Alex Brandon]

கடந்த வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, வாஷிங்டன் டி.சி.யில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் ஜெட் விமானமும் அமெரிக்க ராணுவ பிளாக் ஹாக் ஹெலிகாப்டரும் நடுவானில் மோதிய விபத்தில் பலியான 67 பேரில் 41 பேர் போடோமாக் நதியிலிருந்து மீட்கப்பட்டனர். இது தொடர்பான முழு விவரங்கள் இன்னும் வெளிவரத் தொடங்கியுள்ள நிலையில், பேரழிவு, அதைத் தொடர்ந்து வந்த அரசியல் மோதல்கள், மூடிமறைப்புகள் ஏற்கனவே அமெரிக்காவில் ஒரு பெரிய அரசியல் நெருக்கடி மற்றும் உறுதியற்ற தன்மையை அம்பலப்படுத்தி, குறுக்கிட்டு வருகின்றன.

முதலாவதாக, இந்த விபத்து தொடர்பாக ஜனாதிபதி ட்ரம்பின் பிரதிபலிப்பை பற்றியதாகும். சாதாரண நிலைமைகளின் கீழ், அமெரிக்க ஜனாதிபதி இதுபோன்ற பெரியளவிலான பேரழிவிற்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அனுதாபத்தை வெளிப்படுத்தக்கூடிய வெற்று வார்த்தைகளுடன் பதிலளிப்பார். அத்துடன், இந்தப் பேரழிவு தொடர்பான ஒரு முழுமையான விசாரணை நடத்தப்படும் என்ற உறுதிமொழியையும் வழங்குவார்.

ஆனால், இதற்கு முரண்பட்ட விதத்தில், ட்ரம்ப், வியாழனன்று ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில், இந்த விபத்துக்காக விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளைக் கண்டித்து ஒரு கட்டுப்பாடற்ற மற்றும் இனவாத தாக்குதலைத் தொடங்கினார். “பொது அறிவும், திறமையும் அற்றவர்கள், கடுமையான அறிவுசார் குறைபாடுகள், மனநலப் பிரச்சினைகள், மன, உடல் நிலைமைகளால் பாதிக்கப்பட்ட” தொழிலாளர்கள் (அதாவது, இன மற்றும் சிறுபான்மையினர்) வேலைகளில் பணியமர்த்தப்படுகின்றனர். இதற்கு “பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கக்” கொள்கைகளே பொறுப்பாக இருக்கின்றன என்பதை தெளிவுபடுத்துவதாக ட்ரம்ப் அறிவித்தார். இந்தப் பாசிசக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அதன் உள்ளடக்கங்களை ஒரு நிர்வாக உத்தரவில் இணைத்து ட்ரம்ப் செயல்படத் தொடங்கினார்.

இந்த விபத்து நடந்து ஒரு நாளுக்குள்ளாகவே, வெளிப்படையாகத் தெரிந்த தெளிவான ஆதாரங்களில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதே ட்ரம்பின் உடனடி நோக்கமாக இருந்தது. அதாவது நீண்டகால நிதிப் பற்றாக்குறை மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு பணியாளர் பற்றாக்குறை (விமானப் பாதுகாப்பிற்கு அவசியமானது) ஆகியவை இந்த பேரழிவுக்கு முக்கிய பங்களிப்பு செய்த காரணிகளாக இருந்தன.

விபத்து நடந்த நேரத்தில், ரீகன் தேசிய விமான நிலையத்தில் (DCA) நிலையான இறக்கை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இரண்டையும் ஒரே ஒரு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி நிர்வகித்து வந்ததாக மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் (FAA) ஆரம்ப அறிக்கையை ஊடக அறிக்கைகள் மேற்கோள் காட்டியிருந்தன - இது பொதுவாக இரண்டு நபர்களின் வேலையாகும்.

மேலும், கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்த விமானப் போக்குவரத்து காரணமாக, ஆபத்தான நிலைமைகள் குறித்த எச்சரிக்கைகளை ரீகன் தேசிய விமான நிலையம் நீண்ட காலமாக எதிர்கொண்டுள்ளது. தலைநகரைச் சுற்றியுள்ள அரசாங்க நிறுவனங்கள், உளவுத்துறை தலைமையகங்கள் மற்றும் இராணுவத் தளங்களுக்கு இடையே தினமும் நூற்றுக்கணக்கான ஹெலிகாப்டர்கள் பறக்கின்றன. இது கிட்டத்தட்ட தவறுகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. உண்மையில், புதன்கிழமை நடந்த பயங்கர விபத்துக்கு ஒரு நாள் முன்பு, ஒரு DCA ஜெட் விமானம் அதன் பாதையில் ஒரு ஹெலிகாப்டரைத் தவிர்க்க அதன் தரையிறக்கத்தை தவிர்க்க வேண்டியிருந்தது.

நாடு முழுவதும், 313 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு வசதிகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை, கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் பரிந்துரைக்கப்பட்ட பணியாளர் நிலைகளுக்குக் கீழே இயங்குகின்றன. அதில், 73 வசதிகள் குறைந்தபட்சம் கால் பகுதியினரைக் கொண்ட நிலையில் இயங்குகின்றன என்று வெள்ளிக்கிழமை தி நியூயார்க் டைம்ஸில் வெளிவந்த ஒரு பகுப்பாய்வு தெரிவிக்கிறது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வழக்கமாக வாரத்திற்கு ஆறு நாட்கள் மற்றும் 10 மணி நேர ஷிப்டுகளில் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

2023 இல் இருந்து, டைம்ஸ் நடத்திய ஒரு தனி பகுப்பாய்வு, முந்தைய ஆண்டில் 503 “குறிப்பிடத்தக்க” விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு குறைபாடுகளை மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் பதிவு செய்திருப்பதைக் கண்டறிந்துள்ளது—இது அதற்கு முந்தைய ஆண்டை விட 65 சதவீதத்திற்கும் மேலான அதிகரிப்பாகும்.

விமானப் பாதுகாப்பில் உள்ள நிலைமைகள் சமூக உள்கட்டமைப்பின் சிதைவின் ஒரு வெளிப்பாடு ஆகும். இது, கொள்கைகளை ஆணையிடும் தன்னலக்குழுவிற்கு சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையை முழுமையாகக் கீழ்ப்படுத்தியதன் விளைவாக ஏற்பட்டதாகும். 1981ல் PATCO விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வேலைநிறுத்தம் செய்து இப்பொழுது கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போதைய ஜனாதிபதி றீகன், AFL-CIO தொழிற்சங்க எந்திரத்தின் உடந்தையுடனும், தொழிலாள வர்க்கத்தின் பாரிய எதிர்ப்பையும் எதிர்கொண்ட நிலையிலும், 11,000 க்கும் அதிகமான கட்டுப்பாட்டு அதிகாரிகளை பணிநீக்கம் செய்ததன் மூலமாக, இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நசுக்கினார்.

பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர், காங்கிரஸால் நிறைவேற்றப்பட்டு ஜனநாயகக் கட்சியின் பில் கிளிண்டனால் சட்டமாக கையெழுத்திடப்பட்ட இருகட்சி சட்டத்தில், றீகனின் வெற்றிகரமான தொழிற்சங்க-உடைப்புக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தேசிய விமான நிலையம் ரீகனின் பெயரால் மறுபெயரிடப்பட்டது.

PATCO போராட்டத்தின் தோல்வி, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் மீதும் முழுமையான தாக்குதலுக்கான வழிகளைத் திறந்தது. அடுத்தடுத்து வந்த நிர்வாகங்கள், கட்சி வேறுபாடின்றி செலவுக் குறைப்பு, தனியார்மயமாக்கல் மற்றும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல் ஆகியவற்றை அலை அலையாக மேற்கொண்டன. இன்று, 1981-ஐ விட குறைவான முழுமையான சான்றளிக்கப்பட்ட விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளே உள்ளனர். மேலும் எஞ்சியிருப்பவர்கள் பெருகிய முறையில் ஆபத்தான சூழ்நிலையில், ஆபத்தான நீண்ட ஷிப்டுகளில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

சமூக தீயை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ட்ரம்பின் கொள்கைகள் இந்த நெருக்கடியை கணிசமாக மோசமாக்கும். கடந்த வியாழக்கிழமை, இந்த விபத்து நடந்த அடுத்த நாள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் பிற கூட்டாட்சி ஊழியர்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி, கோடீஸ்வரர் தன்னலக்குழு எலோன் மஸ்க்கின் “அரசாங்க செயல்திறன் துறை” மற்றும் மேலாண்மை வரவு-செலவு திட்டக்கணக்கு அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதத்தைப் பெற்றுள்ளனர்.

நியூ யோர்க் டைம்ஸ் செய்தியின்படி, அரசாங்கம் “பொதுத்துறையில் குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட வேலைகளில் இருந்து தனியார் துறையில் அதிக உற்பத்தித்திறன் கொண்ட வேலைகளுக்கு மாற மக்களை ஊக்குவிப்பதாக” கடிதம் குறிப்பிட்டது. இது, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு, தொற்று நோய்களை எதிர்த்துப் போராடுவது, அல்லது சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவப் பராமரிப்பு பெறுநர்களுக்கு தொலைபேசி ஆலோசனை வழங்குவது போன்ற “பயனற்ற” தொழில்களில் இருந்து மக்களை வோல் ஸ்ட்ரீட், காப்பீடு மற்றும் பிற மோசடிகள் போன்ற “அதிக உற்பத்தித்திறன்” கொண்ட வேலைகளுக்கு மாற்றுவதைக் குறிக்கிறது.

இறுதியாக, ஊடக செய்திகள் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு தோல்விகளில் கவனம் செலுத்தியிருந்தாலும், ஒரு முக்கிய கேள்வி பெரும்பாலும் ஆராயப்படாமல் உள்ளது: இந்த விமான மோதலின் போது பிளாக் ஹாக் இராணுவ போக்குவரத்து ஹெலிகாப்டர் வாஷிங்டனின் வான்வெளியில் துல்லியமாக என்ன செய்து கொண்டிருந்தது?

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்தின் கூற்றுப்படி, விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் “அரசாங்கத்தின் தொடர் பயிற்சியில்” (COG) ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இந்த வார்த்தை, அமெரிக்க அரசின் மிகவும் உணர்திறன் மிக்க நடவடிக்கைகளைக் குறிக்கிறது. போர் அல்லது உள்நாட்டு அமைதியின்மை போன்ற ஒரு தேசிய அவசரநிலை ஏற்பட்டால், ஜனாதிபதியால் பரந்த அமெரிக்க இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் கட்டுப்பாட்டைப் பராமரிப்பதை இந்த பயிற்சி நோக்கமாகக் கொண்டிருக்கிறது. உலக சோசலிச வலைத் தளம் நேற்று அறிவித்தபடி, விமானப் பாதை அது தலைநகரின் வடக்கே போடோமாக் நதிக்கரையில் இருந்து, ஒருவேளை வேர்ஜீனியாவின் லாங்லியில் உள்ள CIA தலைமையகத்திலிருந்து திரும்பி வருவதைக் குறிக்கிறது.

ஆரம்ப அறிக்கைகளின்படி, பிளாக் ஹாக் ஹெலிகாப்டர், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஜெட் விமானத்தின் பாதையில் குறுக்கே சென்றபோது அதன் பாதைக்கு நியமிக்கப்பட்ட உயரத்திற்கு மேலே பறந்து கொண்டிருந்தது. அது ஏன் அதன் நியமிக்கப்பட்ட பாதை மற்றும் உயரத்திலிருந்து விலகிச் சென்றது? உலகிலேயே மிகவும் கடுமையாக கண்காணிக்கப்படும் வான்வெளியில், ஒரு இராணுவ ஹெலிகாப்டர், வணிக விமானங்களுக்கான நன்கு அறியப்பட்ட தரையிறங்கும் பாதையில் எவ்வாறு ஊடுருவியது?

உள்நாட்டு விவகாரங்களில் இராணுவத்தின் பாத்திரத்தை பாரியளவில் விரிவாக்குவதற்கு ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட ஒரு பெரும் முயற்சியின் பின்னணியில் இந்த விபத்து நடந்துள்ளது. தனது நிர்வாகத்தின் ஆரம்ப நாட்களில், எல்லைகளை “மூடும்” மற்றும் புலம்பெயர்ந்தோரின் “படையெடுப்பு” என்றழைக்கப்படுவதை எதிர்க்கும் பணியை, அமெரிக்காவின் வடக்கு கட்டளையகத்திற்கு (NORTHCOM) ஒதுக்கும் தொடர்ச்சியான நிர்வாக உத்தரவுகளை ட்ரம்ப் பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவுகள், கடந்த காலங்களில் எப்போதும் பொதுமக்கள் விவகாரங்களாக இருந்தவற்றில் ஆயுதப்படைகளின் நேரடித் தலையீட்டை நியாயப்படுத்தி, பாரிய இடம்பெயர்வை ஒரு இராணுவ அவசரநிலையாக வடிவமைக்கின்றன. அதே நேரத்தில், உள்நாட்டு அரசியல் எதிர்ப்பை அடக்குவதற்கு அமெரிக்கா முழுவதும் இராணுவத்தைப் பயன்படுத்த அனுமதிக்கும் ஒரு நடவடிக்கையான கிளர்ச்சிச் சட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்டங்களை நிர்வாகம் சமிக்ஞை செய்துள்ளது.

ட்ரம்பின் கீழ், அமெரிக்காவை ஒரு இராணுவமயப்பட்ட பொலிஸ் அரசாக உருமாற்றுவது முன்னொருபோதும் இல்லாத வேகத்தில் தீவிரமடைந்து வருகிறது. இந்த விமான விபத்தைச் சுற்றியுள்ள நிகழ்வுகள், குறைந்தபட்சம், இந்த ஏற்பாடுகள் பொதுப் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி நடத்தப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டுகின்றன. புதிய நிர்வாகம் பதவியேற்று 10 நாட்களுக்குள் வந்துள்ள வாஷிங்டன் டி.சி. பேரழிவு, வரவிருக்கும் பாரிய சமூக மற்றும் அரசியல் கொந்தளிப்புகளின் அறிகுறியாக இருக்கிறது.