முன்னோக்கு

கனடா மற்றும் மெக்சிகோவை முதல் இலக்குகளாகக் கொண்டு, ட்ரம்ப் உலகளாவிய வர்த்தகப் போரைத் தொடங்குகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

கடந்த சனிக்கிழமையன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் மூன்று மிகப்பெரிய வர்த்தக பங்காளிகள் மீது தண்டனைக்குரிய சுங்கவரிகளை விதிக்கும் நிர்வாக உத்தரவுகளுடன், ஓர் உலகளாவிய வர்த்தகப் போரைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

வாஷிங்டன், வெள்ளை மாளிகையில் உள்ள ஜேம்ஸ் பிராடி பத்திரிகையாளர் சந்திப்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றுகிறார், வியாழன், ஜனவரி 30, 20. [AP Photo/Alex Brandon]

செவ்வாய்க்கிழமை முதல், கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் அமெரிக்கா 25 சதவீத சுங்கவரியை விதிக்கும். முதல் ட்ரம்ப் மற்றும் பைடென் நிர்வாகங்களின் போது ஏற்கனவே விதிக்கப்பட்ட பரந்த அளவிலான வரிவிதிப்புகளுக்கு உட்பட்டுள்ள சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், கூடுதலாக 10 சதவீத வரியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

உலகப் பொருளாதாரம், பூகோள அரசியல் மற்றும் வர்க்க உறவுகளை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக மறுவடிவமைக்கும் பரந்த முயற்சியில், இது முதல் படி மட்டுமே என்று ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய நாடுகளுக்கு எதிரான மேலதிக வர்த்தகப் போர் நடவடிக்கைகள் இம்மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ளன.

தற்போதுள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை ட்ரம்பால் அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் வட அமெரிக்கா மற்றும் உலகப் பொருளாதாரத்தை உலுக்கி எடுக்கும். கனடாவும் மெக்சிக்கோவும் பல்வேறு வகையான அமெரிக்க பண்டங்கள் மீது பழிவாங்கும் வரிகளை விரைவாக அறிவித்தன. இது, ட்ரம்பின் உத்தரவுகளின் கீழ், தானாகவே மேலதிக அமெரிக்க சுங்கவரிகளைத் தூண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் மீதான போர்

வெளிநாட்டு ஏற்றுமதியாளர்களால் வரிகள் செலுத்தப்படுகின்றன என்றும், அமெரிக்க தொழிலாளர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும், சுங்கவரிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து ட்ரம்ப் தொடர்ந்து பொய் கூறி வருகிறார்.

இதில் எதுவுமே உண்மை இல்லை. இறக்குமதி செய்யும் நிறுவனத்தால் சுங்க வரிகள் செலுத்தப்படுகின்றன. அமெரிக்க நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் பண்டத்தின் மதிப்பில் 25 சதவீதத்திற்கு சமமான சுங்கவரிகளை எதிர்கொள்ளும்போது, இந்த கூடுதல் வரிச்செலவை விலை உயர்வுகள் மூலம் நுகர்வோர் மீது திணிக்கும் அல்லது அவர்களின் ஆர்டர்களை இரத்து செய்யும்.

இந்த இரண்டில் எது நடந்தாலும், அது வட அமெரிக்க தொழிலாளர்களுக்கு பேரழிவுகரமானதாக இருக்கும். கனடா மற்றும் மெக்சிகோவில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழப்பார்கள். அதே நேரத்தில், அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் பணவீக்கத்தில் மிகப்பெரிய அதிகரிப்பை அனுபவிப்பார்கள்.

அமெரிக்காவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக கனடா இருந்து வருகின்றது. மேலும், வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (NAFTA) மற்றும் அதன் வாரிசான ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க-மெக்சிகோ-கனடா வர்த்தக ஒப்பந்தம் (USMCA) ஆகியவற்றின் கீழ், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக உருவாக்கப்பட்ட கண்ட உற்பத்திச் சங்கிலிகளின் வெடிப்பு மற்றும் பழிவாங்கும் வரிவிதிப்புகளால், அமெரிக்க தொழிலாளர்கள் வேலை வெட்டுக்களை சந்திக்க உள்ளார்கள்.

பாரிய பணிநீக்கங்கள் மற்றும் ஆலை மூடல்களின் உண்மையான சுனாமி உடனடி விளைவாக இருக்கும். கனடாவின் வாகனத் தொழிற்துறையை மையமாகக் கொண்ட ஒன்ராறியோவின் முதல்வர், அந்த மாகாணத்தில் மட்டும் 500,000 வேலை இழப்புகள் குறித்து எச்சரித்துள்ளார்.

வட அமெரிக்காவில் வாகன உற்பத்தி மிகவும் ஒருங்கிணைந்ததாகும், பல பகுதிகளிலிருந்து எல்லைகளைக் கடந்துவரும் வாகனங்கள் ஒன்று சேர்க்கப்படுகின்றன. கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து வேலைகளும் முடிந்த வாகனங்களுக்கு, வாகன உற்பத்தியாளர்கள் 25 சதவீத சுங்கவரியை எதிர்கொள்வதோடு மட்டுமல்லாமல், அமெரிக்காவில் இறுதி அசெம்பிளி செய்யப்படும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பாகங்கள் உட்பட கூறுகள் மீதான கூடுதல் சுங்கவரிகளையும் அவர்கள் எதிர்கொள்வார்கள்.

வட அமெரிக்க வர்த்தகப் போர் வெடிப்பின் விளைவாக, பாரியளவில் கனடாவில் மட்டுமல்ல, மெக்சிகன் வாகன அசெம்பிளி மற்றும் உதிரிப்பாகங்கள் உற்பத்தி ஆலைகளும் கிட்டத்தட்ட உடனடியாக மூடப்படுவதற்கு வழிவகுக்கும். இது அமெரிக்க வாகன உற்பத்தியை பெருமளவில் சீர்குலைக்கும். இதன் விளைவாக சில நாட்கள் அல்லது வாரங்களுக்குள் அமெரிக்க வாகன ஆலைகளில் பல்லாயிரக்கணக்கான பணிநீக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பொதுமக்களின் பெரும் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சத்தில், ட்ரம்ப் தனது 25 சதவீத வரிகளுக்கு ஒரு விதிவிலக்கு அளித்து, இறக்குமதி செய்யப்படும் கனேடிய எரிசக்தி (முக்கியமாக கச்சா எண்ணெய்) மீதான வரியை 10 சதவீதமாக நிர்ணயித்தார். அமெரிக்க நுகர்வில் கனேடிய எண்ணெய் 20 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

வர்த்தகப் போர், “அமெரிக்கா முதலில்” மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக மேலாதிக்கத்திற்கான போர்

இவ்விதத்தில், ட்ரம்பின் வர்த்தகப் போர் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போரின் தீவிரத்திலிருந்து பிரிக்க முடியாததாகும். இது, உலகப் போரின் மூலமாக, உலக மேலாதிக்கத்தை அடைவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உந்துதலுடனும் பிணைந்துள்ளது.

வட அமெரிக்க கண்டத்தின் மீது தடையற்ற மேலாதிக்கத்தை நிலைநாட்ட ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாக மெக்சிகோவும் கனடாவும் இலக்கில் வைக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் இராணுவ நடவடிக்கை மூலம் கிரீன்லாந்து மற்றும் பனாமா கால்வாயை இணைப்பது; போதைப்பொருள் விற்பனையாளர்களை எதிர்த்துப் போராடுவது என்ற பெயரில் மெக்சிகோவை ஆக்கிரமிப்பது; மற்றும் அமெரிக்காவின் 51வது மாநிலமாக கனடாவை கட்டாயப்படுத்த “பொருளாதார பலத்தைப்” பயன்படுத்துவது போன்ற சபதங்களுடன், அவரது இப்போது உணரப்பட்ட சுங்கவரி அச்சுறுத்தல்கள் உள்ளன.

சீனா மற்றும் ரஷ்யாவுடனான போருக்காகவும், ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுடன் அதிகரித்து வரும் மோதல்களுக்காகவும், அதன் “அண்டை நாடுகளில்” தனது கட்டுப்பாட்டை பலப்படுத்துவதன் மூலம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கச்சை கட்டுவதே ட்ரம்பின் நோக்கமாகும். இதில், ட்ரம்பின் நடவடிக்கைகள் 1938 இல் ஹிட்லர் ஆஸ்திரியாவை மூன்றாம் பேரரசுடன் இணைத்ததை (Anschluss) முன்மாதிரியாகக் கொண்டுள்ளன.

ட்ரம்ப் ஒரு தெளிவான செய்தியை வழங்குகிறார்: வலிமையை சரியானதாக்கும் காட்டின் சட்டம், இப்போது உலகளாவிய அரசுகளுக்கு இடையிலான உறவுகளில் மேலோங்கி உள்ளது.

ஒரு பொருளாதார நிலைப்பாட்டில் இருந்து, ட்ரம்பின் உலகளாவிய வர்த்தகப் போரும் மற்றும் அமெரிக்கா முதல் என்ற பாதுகாப்புவாத நோக்கங்களும் பகுத்தறிவற்றவை. முதலாளித்துவ ஒழுங்கமைப்பும் அதன் தேசிய-அரசு அமைப்புமுறையும், ஒரு வரலாற்று முட்டுச்சந்தை எட்டியுள்ளதோடு, துரிதமாக சமூக பிற்போக்குத்தனம் மற்றும் காட்டுமிராண்டித்தனத்திற்குள் இறங்கி வருகின்றன என்பதை இவை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. நீண்டகாலமாக உலக முதலாளித்துவத்தின் பாதுகாப்பு அரணாகவும், இப்போதும் மிக சக்திவாய்ந்த ஏகாதிபத்திய அரசாகவும் மற்றும் உலகளாவிய முதலாளித்துவ நிதியின் மையமாகவும் உள்ள அமெரிக்கா, இரண்டாம் உலகப் போரைத் தூண்ட உதவிய கழுத்தை அறுத்து, அண்டை நாட்டை பிச்சைக்காரனாக்கும் பாதுகாப்புவாத கொள்கைகளை உயிர்ப்பித்து வருகிறது.

அப்படிச் சொன்னாலும், பைத்தியக்காரத்தனத்திற்கு ஒரு திட்டவட்டமான வர்க்க தர்க்கம் உள்ளது.

முதலாவதாக, வட அமெரிக்க பொருளாதாரத்தில் பேரழிவை ஏற்படுத்துவதன் மூலமும், தொழிலாளர்க்ள மீதான சுரண்டலை வியத்தகு முறையில் அதிகரிப்பதன் மூலமும், பெருநிறுவன அமெரிக்காவை சிறந்த நிலையில் வைத்திருக்கலாம் என ட்ரம்ப் நம்புகிறார். அதேவேளையில், அமெரிக்க சந்தையை மெக்சிகோ மற்றும் கனடா அதீதமாக சார்ந்திருப்பதைப் பயன்படுத்தி, தனது முதலாளித்துவ போட்டியாளர்களிடம் இருந்து அதிகபட்ச சலுகைகளை மிரட்டி அவர் பணம் பறிக்கிறார்.

இரண்டாவதாக, ட்ரம்ப் உற்பத்தித் துறையை அமெரிக்காவிற்கு “மீண்டும் கொண்டு வர” கட்டாயப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு, அவர் வாஷிங்டனின் இராணுவ-தொழில்துறை திறனை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

1934 ஆம் ஆண்டு, தனது “தேசியவாதமும் பொருளாதார வாழ்வும்” என்ற கட்டுரையில் லியோன் ட்ரொட்ஸ்கி, ஒரு எதேச்சாதிகார தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக ஹிட்லரின் கூற்றுக்கள் “பிற்போக்குத்தனமானவை மற்றும் முற்றிலும் கற்பனாவாதமானவை... [ஒரு] பசியுள்ள புலியைப் போலவே, ஏகாதிபத்தியம் ஒரு புதிய பாய்ச்சலுக்காக தன்னைத் திரட்டிக் கொள்ள அதன் சொந்த தேசியக் குகைக்குள் பின்வாங்கியுள்ளது” என்று எச்சரித்தார்.

கனேடிய ஆளும் வர்க்கத்தின் பிரதிபலிப்பு

ட்ரம்பின் நடவடிக்கைகள் அவநம்பிக்கையான தன்மையைக் கொண்டிருந்தாலும், அவை கனேடிய ஏகாதிபத்தியத்தையும் மெக்சிக்கன் முதலாளித்துவத்தையும் தடுமாறச் செய்துள்ளன.

ஐந்து மில்லியன் மெக்சிக்கன் வேலைகள் நேரடியாக அமெரிக்க வர்த்தகத்தைச் சார்ந்திருப்பதாக செய்திகள் கூறுகின்ற அதேவேளையில், மெக்சிக்கன் ஜனாதிபதி கிளாடியா ஷெயின்பாம் சுங்கவரிகளின் தாக்கத்தைக் குறைத்து மதிப்பிட முயல்கிறார். மேலும் ட்ரம்புடன் “கலந்துரையாடலுக்கும் உரையாடலுக்கும்” மன்றாடிய அவர், “மெக்சிக்கோ,” “ஒரு மோதலை விரும்பவில்லை,” என்று வலியுறுத்தினார்.

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த சனிக்கிழமை இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். ட்ரம்பின் நடவடிக்கைகளை அவர் கண்டித்தபோதும், கனடா அமெரிக்காவின் தீவிர நட்பு நாடு என்றும், வட அமெரிக்காவின் ஏகாதிபத்திய சக்திகளின் பொதுவான எதிரிகளை அது தாக்கினால் மட்டுமே வாஷிங்டனுக்கு அதன் முழு ஆதரவு இருக்கும் என்றும் ட்ரூடோ உறுதியாகக் கூறினார்.

வாஷிங்டனுக்கு தெரிவிக்கையில் ட்ரூடோ, “நோர்மண்டியின் கடற்கரைகளில் இருந்து கொரிய தீபகற்பத்தின் மலைகள் வரையில், ஃபிளாண்டர்ஸ் வயல்களில் இருந்து காந்தஹார் [ஆப்கானிஸ்தான்] வீதிகள் வரையில், உங்களின் இருண்ட நேரங்களில் உங்களுடன் சேர்ந்து நாங்கள் போராடி உயிரிழந்துள்ளோம்” என்று அறிவித்தார். நவம்பரில் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரூடோ வருங்கால சர்வாதிகாரியை சமாதானப்படுத்தும் ஒரு பெரும்பிரயத்தன முயற்சியில், ட்ரம்பின் மார்-அ-லாகோ மாளிகைக்கு விரைந்தார்.

கூலிப்படையின் உள் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள கனேடிய முதலாளித்துவ வர்க்கம், அமெரிக்கா தலைமையிலான வட அமெரிக்காவின் கோட்டைக்குள் மிகவும் சாதகமான நிலையைப் பெறுவதற்கான நிலைப்பாட்டில் இருந்து மட்டுமே ட்ரம்பை “எதிர்க்கிறது”.

அதேநேரத்தில், ட்ரம்பைப் போலவே, அதுவும் தொழிலாள வர்க்கத்தின் மீதான வர்க்கப் போரைத் தீவிரப்படுத்த வர்த்தகப் போரைப் பயன்படுத்தும். ஏற்கனவே, அதி தீவிர வலதுசாரி பழமைவாத தலைவர் பியர் பொய்லீவ்ரே தலைமையிலான ஒரு புதிய அரசாங்கத்திற்கு வழி வகுக்க ட்ரூடோ இராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்தப் புதிய அரசாங்கம் ட்ரம்ப் பாணி கொள்கைகளை செயல்படுத்த இருப்பதுடன், பாரிய இராணுவ செலவின உயர்வுகள் மற்றும் சமூக செலவினக் குறைப்புகளில் இருந்து பெருநிறுவன கனடா மற்றும் பணக்காரர்களுக்கான பெரும் வரி குறைப்புக்கள் மற்றும் மூலதனத்தின் மீதான அனைத்து ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளையும் நீக்கும்.

உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!

அனைத்து தொழிலாளர்களின் வேலைகள், ஊதியங்கள் மற்றும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் வட அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட எதிர் தாக்குதலை அபிவிருத்தி செய்வதற்கு மிகப்பெரிய தடைகளாக, பிற்போக்குத்தனமான தேசியவாத தொழிற்சங்க அதிகாரத்துவங்களும், நடுத்தர வர்க்க போலி இடதுசாரிகளின் அமைப்புகளில் உள்ள அவர்களின் அரசியல் வக்காலத்து வாங்குபவர்களும் மற்றும் வழக்கறிஞர்களும் இருந்து வருகின்றனர்.

தொழிலாளர்களை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தவும், அரசியல் ரீதியாக அவர்களை சுரண்டும் மற்றும் பீரங்கிக்கு இரையாகப் பயன்படுத்தும் அதே முதலாளிகளுடன் அவர்களை பிணைக்கவும் இவர்கள் தேசியவாதத்தைத் தூண்டி வருகின்றனர். ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஷான் ஃபெயின் சனியன்று ஓர் அறிக்கையை வெளியிட்டு, “தசாப்த கால தொழிலாளர்-விரோத வர்த்தக கொள்கையை அகற்றுவதற்கான ஒரு நல்ல முதல் படியாக அமெரிக்க உற்பத்தி வேலைகளைப் பாதுகாப்பதற்கான மூர்க்கமான வரிவிதிப்பு நடவடிக்கையை UAW ஆதரிக்கிறது,” என்று அறிவித்தார். இதற்கிடையில், கனடாவில் தொழிற்சங்க ஆதரவு பெற்ற புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவரான ஜக்மீத் சிங், “கனேடியர்கள் வலுவாக நின்று ஒன்றாக நிற்க வேண்டிய நேரம் இது” என்று அறிவித்தார்.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் உள்ள தொழிலாளர்கள், அபிவிருத்தி அடைந்து வரும் வர்த்தகப் போரில் தத்தமது ஆளும் வர்க்கங்கள் மற்றும் அரசாங்கங்களுக்குப் பின்னால் தங்களை கட்டி வைக்கும் அனைத்து முயற்சிகளையும் உறுதியாக எதிர்க்க வேண்டும்.

ட்ரம்ப் மற்றும் ட்ரூடோ “அமெரிக்க” மற்றும் “கனேடிய” வேலைகளுக்காக போராடி வருவதாக கூறும் அவர்களின் போலித்தனமான கூற்றுகளை தொழிலாளர்கள் அவமதிப்புடன் நிராகரித்து, “இது எங்களது போர் அல்ல, இதற்காக நாங்கள் விலை செலுத்த மாட்டோம்” என்று ஒரே குரலில் அறிவிக்க வேண்டும்.

வட அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் ஐக்கிய இயக்கத்தில், தொழிற்சங்க எந்திரத்திலிருந்து சுயாதீனமாக, சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குவதன் மூலம், சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் பாகமாக, தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும். இந்தக் குழுக்கள், பாரிய வேலை வெட்டுக்கள், சலுகைகள், பொது சேவைகள் மற்றும் சமூக திட்டங்களை அகற்றுதல் போன்ற வடிவங்களில் ஆளும் வர்க்கத்தின் “தியாகங்களுக்கான” கோரிக்கைகளுக்கு உறுதியான எதிர்ப்பை ஒழுங்கமைக்க வேண்டும்.

வர்த்தகப் போர் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான அதன் நாசகரமான தாக்கங்களுக்கான எதிர்ப்பும், ஏகாதிபத்தியப் போர் மற்றும் புலம்பெயர்ந்தோர்-விரோத பேரினவாதத்திற்கான எதிர்ப்பும், அதன் முக்கிய கொள்கைகளான ஒரு சர்வதேசிய சோசலிச வேலைத்திட்டத்தால் இட்டு நிரப்பப்பட வேண்டும்.

உண்மையான வர்க்கப் போராட்டத்திற்கான புதிய சாமானிய தொழிலாளர் அமைப்புகளைக் கட்டியெழுப்புவதுடன், தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான கண்டந்தழுவிய பாரிய இயக்கமாகவும், ஒரு சோசலிச வட அமெரிக்காவுக்காகவும் தங்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்த தொழிலாளர்கள் போராடி வருகின்ற நிலையில், அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் உள்ள தொழிலாளர்கள் சீனா, ஐரோப்பா மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளை ஐக்கியப்படுத்த வேண்டும். முன்னெப்போதையும் விட: “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!” என்பதே தொழிலாள வர்க்கத்தின் சுலோகமாக இருக்க வேண்டும்.