மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஒப்புதலுடன் செயல்பட்டு, உலகின் மிகப் பெரிய பணக்காரரான கோடீஸ்வரர் எலோன் மஸ்க்கின் பிரதிநிதிகள், கடந்த திங்கட்கிழமை அதிகாலை அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு முகமையின் (USAID) கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து, உலகளவில் உள்ள அந்த நிறுவனத்தின் கிட்டத்தட்ட 10,000ம் ஊழியர்களை வீட்டிலேயே இருக்கவும், வேலை செய்வதை நிறுத்தவும் கட்டளையிட்டுள்ளனர்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு, 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பிறகு அமைக்கப்பட்ட ஒரு சுயாதீன கூட்டாட்சி நிறுவனமான நுகர்வோர் நிதி பாதுகாப்பு பணியகத்திலும் (CFPB) இதேபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ட்ரம்ப்பின் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்டை (அவரே ஒரு முதலீட்டு நிதி பில்லியனர்) இந்த நிறுவனத்தின் இடைக்கால நிர்வாகியாக நியமித்தார். இதன் பின்னர் பெசென்ட் CFPB இன் 1,600 ஊழியர்களிடம், அதன் செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்யும் வரை வேலை செய்வதை நிறுத்துமாறு கூறினார். இதில் முக்கிய வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக நுகர்வோர் மோசடி தொடர்பாக ஏராளமான வழக்குகள் அடங்கும்.
இரண்டு நடவடிக்கைகளும் முற்றிலும் சட்டவிரோதமானவை. இந்த இரண்டு நிறுவனங்களும் காங்கிரஸால், 1961 இல் கென்னடி நிர்வாகத்தின் கீழ் USAID அமைப்பும், 2010 இல் CFPB யும் நிறுவப்பட்டன. காங்கிரசின் நடவடிக்கை இல்லாமல், ஜனாதிபதியின் ஒரே முடிவின் பேரில் இவற்றில் எதையும் மூட முடியாது. ஆனால், ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து, ஜனநாயகக் கட்சியினரின் இயலாமையை பாவித்தும், உச்ச நீதிமன்றத்தில் அவரது பாசிச ஆதரவாளர்களின் ஆதரவையும் நம்பியும், எப்போது வேண்டுமானாலும் சட்டத்தை மீறுவதே அவரது கொள்கையாக இருந்து வருகிறது.
USAID தொடர்பாக, நிர்வாக உத்தரவின் பேரில் ட்ரம்ப் நிறுவிய மஸ்க் நடத்தும் குழுவான “அரசாங்க செயல்திறன் துறையின்” (DOGE) பல அதிகாரிகள் சனிக்கிழமை USAID தலைமையகத்திற்கு வந்தனர். ஆனால், நிர்வாக பாதுகாப்பு அதிகாரிகளால் சில வளாகங்களுக்குள் நுழைய அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மஸ்க் உதவியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு முன்பு, அமெரிக்க மார்ஷல்களைக் கொண்டுவருவதற்கான அச்சுறுத்தல்களுடன் அங்கு ஒரு மோதல் நிலை ஏற்பட்டது.
USAID-யின் இரண்டு உயர் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக நிர்வாக விடுப்பில் வைக்கப்பட்டனர். மேலும் மஸ்க், தானும் ட்ரம்பும் தழுவிக் கொள்ளும் குண்டர் மொழியில், “USAID ஒரு குற்றவியல் அமைப்பு. அது இறக்க வேண்டிய நேரம் இது” என்று ட்வீட் செய்தார். பின்னர் அவர் தனக்குச் சொந்தமான X தளத்தில், “USAID அமெரிக்காவை வெறுக்கும் தீவிர இடது மார்க்சிஸ்டுகளின் ஒரு கட்டுவிரியன் பாம்பின் கூடு” என்று அறிவித்தார். USAID “தீவிரவாத பைத்தியக்காரர்களின் ஒரு கும்பலால் நடத்தப்படுவதாக” கூறி, “நாங்கள் அவர்களை வெளியேற்றுகிறோம்” என்று ட்ரம்ப் தனது சொந்த அவதூறுகளை சேர்த்துக் கொண்டார்.
இத்தகைய மொழிநடை, இப்பொழுது அமெரிக்க நிதிய தன்னலக்குழுவை பீடித்துள்ள பாசிச வெறிக்கு சான்றாக உள்ளது. அதன் 50 பில்லியன் டாலர் வரவு-செலவுத் திட்டத்தின் பெரும்பகுதி 60 நாடுகளில் உணவு உதவி மற்றும் அகதிகள் நிவாரண திட்டங்களுக்கு நிதியளிக்கின்ற அதேவேளையில், USAID பனிப்போரின் போது அமெரிக்க ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையின் ஒரு கருவியாக செயல்படுவதற்காக ஸ்தாபிக்கப்பட்டது. உத்தியோகபூர்வ இராணுவ-உளவுத்துறை நிறுவனங்கள் அணுக முடியாத நாடுகளில் அமெரிக்க உளவுத்துறை நடவடிக்கைகளுக்கான ஒரு மூடிமறைப்பாக USAID நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
USAID மற்றும் CFPB மூடப்படுவதானது, கல்வித்துறை, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை, சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையின் மிகப் பெரிய, மக்கள் ஆதரவு பெற்ற நிறுவனங்களை மூடுவதற்கான ஒரு ஒத்திகையாகும். புதிய ட்ரம்ப் நிர்வாகத்தின் 900 பக்க திட்டமான, திட்ட நகல் 2025 இல் விவரிக்கப்பட்டுள்ளபடி, இந்தத் துறைகள் அனைத்தையும் அகற்றுதல் அல்லது ஆழமான வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களுக்கு இலக்காக ஆக்கப்பட்டுள்ளன.
சில அதிகாரிகள் பரிந்துரைத்தபடி, இந்த இரண்டு நிறுவனங்களும் வெளியுறவுத்துறை அல்லது கருவூலம் போன்ற பெரிய கூட்டாட்சி அலகுகளில் ஒருங்கிணைக்கப்பட்டால், வேலைக்குத் திரும்புவதற்கோ அல்லது சமமான பதவிகளைக் கண்டுபிடிப்பதற்கோ மிகக் குறைந்த வாய்ப்பே இல்லாமல் USAID மற்றும் CFPB ஊழியர்கள் தெருவில் வீசப்படுவர்.
எலோன் மஸ்க் அவரது டெஸ்லா தொழிற்சாலைகளில் அதீதமாக சுரண்டப்படும் தொழிலாளர்கள் அல்லது ட்விட்டர் சமூக ஊடகத் தளத்தை வாங்கி அதை மறுஒழுங்கமைத்து, அதை பாசிச பிரச்சாரத்திற்கான ஒரு ஊதுகுழலாக மாற்றிய பின்னர், ஒட்டுமொத்தமாக பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டரில் உள்ள தொழிலாளர்களைப் போல, மத்திய அரசாங்கத்தின் தொழிலாளர் சக்தியை நடத்தி வருகிறார்.
கூட்டாட்சித் தொழிலாளர்கள் இரக்கமற்ற முறையில் நடத்தப்படுவது ஒட்டுமொத்தத் தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு எச்சரிக்கை ஆகும். 1981ம் ஆண்டு ஜனாதிபதி ரோனால்ட் ரீகன், வேலைநிறுத்தம் செய்த ஏராளமான PATCO விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளை பணிநீக்கம் செய்தபோது, பெருநிறுவன தொழிற்சங்க உடைப்பு அலைக்கு பச்சை விளக்கு காட்டினார். ட்ரம்பும் மஸ்க்கும் அந்த உதாரணத்தைப் பின்பற்றி, இந்த முறை அதை இன்னும் பரந்த அளவில், பரந்த கூட்டாட்சி தொழிலாளர்களுக்கு எதிராக பிரயோகிக்கின்றனர்.
மத்தியிலுள்ள கூட்டாட்சி செலவினங்களை மேற்பார்வையிடும் வெள்ளை மாளிகை நிறுவனமான மேலாண்மை மற்றும் வரவு-செலவுத் திட்ட அலுவலகம் (OMB) பிறப்பித்த உத்தரவின் பேரில், அனைத்து கூட்டாட்சி மானியங்கள் மற்றும் கொடுப்பனவுகளை நிறுத்த ட்ரம்ப் கடந்த வாரம் முயற்சித்ததைத் தொடர்ந்து, USAID மற்றும் CFPB கூட்டாட்சி நிறுவனங்களின் பணிநிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ஒரு கூட்டாட்சி நீதிபதி அந்த உத்தரவை தற்காலிகமாக தடுத்து நிறுத்தினார. இது, ஏற்கனவே மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் அமெரிக்க சுகாதார காப்பீட்டு திட்டமான மருத்துவ உதவி உட்பட மாநில, உள்ளூர் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு கூட்டாட்சி கொடுப்பனவுகளை நிறுத்துவதற்கான வழிகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மத்திய கூட்டாட்சி சமூக செலவினங்கள் மீதான தாக்குதலைத் தொடர ட்ரம்ப் சூளுரைத்தார். கடந்த வெள்ளிக்கிழமை, அவரது வழிகாட்டுதலின் பேரில், அரசாங்க செயல்திறன் துறைக்கு (DOGE) ஆண்டுக்கு ஒரு பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளைக் கையாளும் கருவூல அமைப்பான நிதிச் சேவைப் பணியகத்தை (BFS) அணுக அனுமதி வழங்கப்பட்டது.
சமூக பாதுகாப்பு காசோலைகள், வருமான வரி திரும்ப செலுத்துதல்கள் மற்றும் கூட்டாட்சி சம்பள காசோலைகள் உட்பட அமெரிக்க அரசாங்கத்தால் செலுத்தப்பபடும் கொடுப்பனவுகளில் 90 சதவீதத்தை BFS அனுப்புகிறது. கருவூலத்தின் உயர்மட்ட ஆட்சித்துறை ஊழியரான டேவிட் லெப்ரிக், முன்னர் முற்றிலும் தொழில்நுட்ப எந்திரத்திற்குள் அப்பட்டமான அரசியல் தலையீட்டை ஆட்சேபித்த பின்னர் திடீரென ஓய்வு பெற்றார்: கருவூலம் வெறுமனே மற்ற கூட்டாட்சி அமைப்புக்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கொடுப்பனவுகளை செயல்படுத்துகிறது, ஆனால் அவற்றின் தகுதிகளின் அடிப்படையில் தீர்ப்பளிப்பதில்லை.
நீதிமன்ற உத்தரவால் தற்காலிகமாக தடைசெய்யப்பட்ட வெட்டுக்களை அமல்படுத்துவதற்காக, ட்ரம்ப் மற்றும் மஸ்க் பணம் செலுத்தும் பொறிமுறையின் நேரடி கட்டுப்பாட்டை நாடுகிறார்கள் என்பது தெளிவாகிறது. கருவூலச் செயலர் பெசன்ட் அணுகல் “படிக்க மட்டும்” என்று கூறிய அதேவேளையில், மஸ்க் ஏற்கனவே எக்ஸ் தளத்தில் DOGE உதவியாளர்கள் கொடுப்பனவுகளை “விரைவாக நிறுத்துகிறார்கள்” என்று பெருமை பேசியுள்ளார். “பயங்கரவாத” குழுக்கள் கருவூலத்திலிருந்து நிதியைப் பெறுகின்றன என்று மஸ்க் கூறினாலும், லூத்தரன் அறக்கட்டளைக்கான நிதியுதவி மட்டுமே ஒப்புக்கொள்ளப்பட்ட குறைப்பு இருந்தது.
DOGE இன் செயல்பாடுகள் மஸ்க்கிற்கும், அவர் மூலமாக ட்ரம்புக்கும், கூட்டாட்சி அரசாங்கத்தின் அன்றாட நடவடிக்கைகள் மீது நேரடி கட்டுப்பாட்டை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் பிற நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்ற மஸ்க்கின் உதவியாளர்கள், கூட்டாட்சி மனிதவளத் துறையாகச் செயல்படும் பணியாளர் மேலாண்மை அலுவலகம்; அரசாங்க சொத்து, ரியல் எஸ்டேட் மற்றும் குத்தகையை நிர்வகிக்கும் பொது சேவைகள் நிர்வாகம்; மற்றும் கருவூலம் ஆகியவற்றில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் சர்வாதிகார அதிகாரத்தின் இந்த வலியுறுத்தல்களுக்கு ஜனநாயகக் கட்சியின் விடையிறுப்பு கைகளைப் பிசைதல் மற்றும் போர்வெறியின் ஒரு கலவையாக இருக்கிறது. ஜனநாயகக் கட்சி செனட்டர்களான ஜீன் ஷாஹீன் மற்றும் டிம் கெய்ன் ஆகியோர் USAIDஐ கையகப்படுத்திய மஸ்க் உதவியாளர்களுக்கு ஏஜென்சியின் ரகசியங்களைக் கையாள்வதற்கு முறையான பாதுகாப்பு அனுமதிகள் இல்லை என்று புகார் கூறினர். கருவூலத்தில் மஸ்க் உதவியாளர்களுக்கு கதவு திறந்திருப்பது குறித்தும் இதேபோன்ற விமர்சனங்கள் கூறப்பட்டன.
MSNBC இல் தோன்றிய ஒபாமாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி பென் ரோட்ஸ், USAID மூடப்படுவதை குறித்து, “ஒருகாலத்தில் அமெரிக்காவால் நிரப்பப்பட்ட இடத்தை நிரப்ப, அடிப்படையில் ஒட்டுமொத்த உலகையும் சீனா மற்றும் பிற நாடுகளுக்கு விட்டுக்கொடுப்பதாக” கண்டனம் செய்தார். மேலும் அவர் “இது அமெரிக்காவின் நம்பமுடியாத மூலோபாய தேசிய பாதுகாப்பு நலன்களும் கூட, உங்களுக்குத் தெரியும், எலோன் மஸ்க் மற்றும் டொனால்ட் ட்ரம்பும் இதைப் பற்றி குறைவாகவே அக்கறை காட்டுகின்றனர்” என்று தெரிவித்தார்.
உண்மை என்னவென்றால், ட்ரம்ப் ஜனநாயகக் கட்சியினரை விட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பேராசை பிடித்த பாதுகாவலர்களில் குறைந்தவர் அல்ல. கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதன் மூலமும், கனடாவை உள்வாங்குவதன் மூலமும், பனாமா கால்வாயை “திரும்பப் பெறுவதன்” மூலமும் வட அமெரிக்க கோட்டையைக் கட்டுவதற்கான அவரது உந்துதலில் இது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், மிருகத்தனமான சக்தி மற்றும் பொருளாதார மிரட்டலுக்கு ஆதரவாக, USAID ஆல் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் “மென்மையான சக்தி” முறைகளை அவர் அலட்சியம் செய்கிறார்.
கடந்த திங்களன்று நடந்த சம்பவங்கள், வரவிருக்கும் ட்ரம்ப் ஆட்சி குறித்து உலக சோசலிச வலைத் தளம் செய்துள்ள மதிப்பீட்டை ஊர்ஜிதம் செய்கின்றன. நமது புத்தாண்டு அறிக்கை அறிவித்தபடி:
வரவிருக்கும் நிர்வாகம் செல்வந்தர்களின், செல்வந்தர்களால், செல்வந்தர்களுக்கான அரசாக இருக்கும். அமெரிக்காவின் வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு, உலகின் மிகப் பெரிய செல்வந்தரும், ஓர்வெல்லியன் “அரசாங்கத் செயல்திறன் துறையின்” தலைவருமான மஸ்க் முதல், ட்ரம்பின் அமைச்சரவை மற்றும் வெள்ளை மாளிகையில் பணியாற்றும் பில்லியனர்களின் கூட்டம் வரையான தன்னலக்குழுவே அரசின் மீது நேரடிக் கட்டுப்பாட்டை செலுத்தும். … புதிய அரசாங்கத்தின் தன்மையானது, முதலாளித்துவ சமூக அமைப்பின் தன்மைக்கு ஏற்ற வகையில் அரச வன்முறையின் மறுஒழுங்கமைப்பைக் குறிக்கிறது.
ட்ரம்ப் நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வருகின்ற சமூக எதிர்ப்புரட்சிக்கு எதிரான போராட்டமானது, பொருளாதார வாழ்வின் சோசலிச மறுஒழுங்கமைப்பின் பாகமாக, தன்னலக்குழுக்களால் கட்டுப்படுத்தப்படும் பரந்த செல்வவளத்தைப் பறிமுதல் செய்வதுடன் பிரிக்கவியலாதவாறு பிணைந்துள்ளது என்பதை, முன்னெப்போதினும் இல்லாத வகையில் மஸ்க்கின் நேரடியான தனிப்பட்ட தலையீடு தெளிவுபடுத்துகிறது.