மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் கடந்த செவ்வாயன்று ஒரு சந்திப்பை மேற்கொண்டார். இந்த சந்திப்புக்கு பின்னர், அமெரிக்க ஜனாதிபதி காஸாவை வலுக்கட்டாயமாக இணைத்து, அதன் மக்களை இன ரீதியாக சுத்திகரிக்கும் தனது நோக்கத்தை மீண்டும் வலியுறுத்தினார்.
“காஸாவை நாம் பெறப் போகிறோம். அதை வாங்க வேண்டியதில்லை. வாங்குவதற்கு எதுவும் இல்லை. காஸாவை நாம் பெறுவோம்.... நாங்கள் அதை எடுத்துக்கொள்வோம்” என்று ட்ரம்ப் கூறினார்.
இந்த சனிக்கிழமைக்குள் எஞ்சியிருக்கும் அனைத்து இஸ்ரேலிய பணயக் கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்காவிட்டால், “அனைத்து பந்தயங்களும் முறிந்துவிடும்” என்றும், “அனைத்து நரகமும் வெடிக்கும்” என்றும் அறிவித்த ட்ரம்ப், ஏற்கனவே 70,000 ஐத் தாண்டியிருக்கும் ஒரு இனப்படுகொலையில் எண்ணற்ற பாலஸ்தீனியர்களைக் மேலும் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தல் விடுத்தார்.
காஸா மக்களை அவர்களின் நிலத்திலிருந்து எவ்வாறு வெளியேற்றப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு, “பல தசாப்தங்களாகவும் நூற்றாண்டுகளாகவும் நடந்த விஷயங்களுடன் ஒப்பிடும்போது, இது ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்கள்தான்” என்று ட்ரம்ப் பதிலளித்தார்,
அந்த அறையில் இருந்த செய்தியாளர்கள், 2 மில்லியன் மக்களை அவர்களின் நிலங்களில் இருந்து வெளியேற்றுவதற்காக, பாரிய படுகொலையைப் பயன்படுத்துவதற்கு முன்னோடியாக ஜனாதிபதி குறிப்பிடும் “அந்த வேறு விஷயங்கள் என்ன?” என்ற வெளிப்படையான கேள்வியைக் கேட்கவில்லை.
அது, பூர்வீக அமெரிக்கர்களை இனச்சுத்திகரிப்பு செய்து, அவர்களின் தாயகத்திலிருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள ஏழ்மையான ஒதுக்குப்புறங்களில் குவிக்கப்பட்டது போன்றதா? அல்லது, 40 ஆண்டு காலப்பகுதியில் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்ற கொடூரமான பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் போன்றதா? அல்லது, பெல்ஜியத்தின் அரசர் லியோபோல்ட் கொங்கோ மக்களை ஒட்டுமொத்தமாக படுகொலை செய்தும், உடல் உறுப்புக்களை சிதைத்தும், அதன் 13 மில்லியன் மக்களின் மரணத்திற்கு இட்டுச் சென்றது போன்றதா?
அல்லது யூத இனப்படுகொலையின் போது ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவில் இருந்து 6 மில்லியன் யூதர்கள் பாரியளவில் இடம்பெயர்க்கப்பட்டு, திட்டமிட்டு நிர்மூலமாக்கப்பட்டது போன்றதா?
காஸா மக்களை இடம்பெயர வைப்பதற்கான ட்ரம்பின் திட்டம், ஆயுத மோதல்களின் போது அப்பாவி மக்களை பலவந்தமாக இடமாற்றம் செய்வதற்கான நான்காவது ஜெனீவா மாநாட்டின் கீழ் உள்ள தடையை அப்பட்டமாக மீறுவதாகும். மேலும் அவர்களின் நிலத்தைத் திருடும் அவரது திட்டம், அமெரிக்காவால் அங்கீகரிக்கப்பட்ட 1970 ஐக்கிய நாடுகள் சபை ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறுகிறது. இந்த ஒப்பந்தமானது, ஒரு நாட்டின் பிரதேசம் “அச்சுறுத்தல் அல்லது பலத்தைப் பயன்படுத்துவதன் மூலமாக மற்றொரு அரசால் கையகப்படுத்தப்படக்கூடாது” என்று கூறுகிறது.
அமெரிக்கா காஸாவை “சொந்தமாக்கும்” என்று அறிவிப்பதன் மூலம், ட்ரம்ப் காலனித்துவ காட்டுமிராண்டித்தனம் மற்றும் கொடூரத்தின் ஒரு புதிய சகாப்தத்தை பிரகடனம் செய்துள்ளார். அதில் ஒட்டுமொத்தமாக, மில்லியன் கணக்கான மக்கள் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் பலிபீடத்தில் பலியிடப்படுவார்கள்
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி குறித்த அவரது கட்டுரையில், கார்ல் மார்க்ஸ் “முதலாளித்துவ நாகரிகத்தின் உள்ளார்ந்த ஆழமான பாசாங்குத்தனமும், காட்டுமிராண்டித்தனமும் நம் கண்களுக்கு முன்பாக தெளிவாகத் தெரிகின்றன. அது மரியாதைக்குரிய வடிவங்களை எடுக்கும் அதன் தாயகத்திலிருந்து காலனிகளுக்குத் திரும்பி, அங்கு அது நிர்வாணமாக நிற்கிறது” என்று எழுதினார்.
ஹிட்லரின் மூன்றாம் பேரரசின் வீழ்ச்சி மற்றும் அதைத் தொடர்ந்து வந்த காலனித்துவ-எதிர்ப்பு எழுச்சிகளுக்குப் பிந்தைய காலகட்டத்தில், ஏகாதிபத்திய சக்திகள் இந்த நிர்வாணத்தை மறைக்க முயன்றன. அவர்கள் காலனித்துவ பேரரசுகள் அல்ல, ஜனநாயகங்கள் என்று அறிவித்தனர். சர்வதேச சட்டத்தையும் ஜெனீவா உடன்படிக்கைகளையும் மீறும் போது கூட, அதைப் பெயரளவிலாவது நிலைநிறுத்தி வைத்தனர்.
ட்ரம்பை இரண்டாவது பதவிக்காலத்திற்கு அதிகாரத்திற்கு கொண்டு வந்ததன் மூலமாக, அமெரிக்காவை ஆளும் தன்னலக்குழுக்களின் சதிக்கூட்டம், அமெரிக்க அரசியலமைப்பை மட்டுமல்ல, மாறாக சர்வதேச சட்டத்தையும் பின்பற்றுகிறோம் என்ற பாசாங்கைக் கைவிடுவதற்கு முடிவு செய்துள்ளது. இனிமேல், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை சட்டவிரோதமான அடிப்படையில் நடத்தப்படும். ஏகாதிபத்திய சக்திகள் தாங்களாகவே ஏற்றுக்கொண்டு, ஒப்புதல் அளித்து, பகிரங்கமாக வரவேற்ற ஒப்பந்தங்கள் மற்றும் சட்டங்கள் மீறப்படும்.
ஆனால், ட்ரம்ப் சர்வதேச சட்டத்தை அங்கீகரிக்கவில்லை என்றாலும், சர்வதேச சட்டம் இன்னும் ட்ரம்புக்கு பொருந்தும். நூரெம்பேர்க்கில் விசாரணைக்கு வைக்கப்படிருந்த நாஜி தலைவர்களுக்கான சர்வதேச இராணுவ நீதிமன்றத்தில், தனது தொடக்க உரையில், முன்னணி வழக்கறிஞரான ரொபர்ட் எச். ஜாக்சன், நாஜி ஜேர்மனியின் தலைவர்களைப் பற்றி இதே கருத்தை துல்லியமாக கூறினார்.
அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்:
உலகின் சட்ட சிந்தனையில், இந்தப் பரிணாம வளர்ச்சியின் சக்தியையும் அர்த்தத்தையும் இந்த நாஜிக்கள் கவனிக்கத் தவறுவது அல்லது புரிந்து கொள்ளத் தவறுவது, ஒரு தற்காப்பு அல்லது தீங்கின் அளவை தணிப்பது அல்ல. மாறாக, இது அவர்களின் குற்றத்தை மோசமாக்குகிறது, மேலும் அவர்கள் மீறிய சட்டத்தை, அவர்களின் சட்டவிரோத நடத்தைக்கு சட்டப்பூர்வ பயன்பாடு மூலம் நிரூபிக்க வேண்டும் என்பதை மேலும் கட்டாயமாக்குகிறது.
ஜாக்சன் தொடர்ந்தார்:
ஒப்பந்தங்களை மீறும் சில செயல்கள் குற்றங்களாக இருப்பின், அமெரிக்கா அவற்றைச் செய்தாலும் சரி, ஜேர்மனி அவற்றைச் செய்தாலும் சரி, அவை குற்றங்களே ஆகும். மேலும், எங்களுக்கு எதிராக நாங்கள் செயல்படுத்த விரும்பாத குற்றவியல் நடத்தை விதியை மற்றவர்களுக்கு எதிராக வகுக்க நாங்கள் தயாராக இல்லை.
ஜாக்சனுடைய இந்தக் கூற்றுக்கள், இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் இருந்த ஆக்கிரமிப்புப் போர் மற்றும் பிராந்திய இணைப்பை தடைசெய்யும் உடன்பாடுகளை நாஜி ஆட்சி மீறியதற்கு பொருந்துமானால், அவை இன்னும் கூடுதலான முறையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைவர்களுக்கும் பொருந்தும். குறிப்பாக, நாஜித் தலைவர்கள் மீது வழக்கு தொடுத்தல், தண்டனை வழங்குதல் மற்றும் மரணதண்டனைக்கு உள்ளாக்கக் கூடிய தகுதிகளை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைவர்களும் கொண்டுள்ளனர்.
சர்வதேச சட்டத்தில் உள்ள முதலாளித்துவ சட்டபூர்வ கட்டமைப்பில் இருந்து உறுதியாக முறித்துக் கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நகர்வு ஒரு வலிமையின் செயல் அல்ல, மாறாக பலவீனத்தின் செயல் ஆகும்.
பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் டிம் மேசன், “ஜேர்மனியில் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கும் 1938-39 இல் போரை நோக்கிய இராணுவ விரிவாக்கவாத கொள்கைகளின் தீவிரப்படுத்தலுக்கும் இடையே ஒரு காரணமான தொடர்பை” முன்வைத்துள்ளார். ஜேர்மனி தொடர்பான தனது ஆய்வறிக்கையை நிரூபிக்க மேசன் தனது வாழ்க்கை முழுவதும் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தால், அது ட்ரம்பின் அமெரிக்காவில் வெளிப்படையாக தெரிகிறது.
நெருக்கடியால் சுமையாகி, கடனுக்கு அடிமையாகி, நிதிக் குமிழிகள் தொடர்ந்து வெடித்து, வளர்ந்து வரும் வர்த்தக நெருக்கடியையும், பல ஆண்டுகாலப் போர் மற்றும் வங்கி பிணை எடுப்புகளால் தாங்க முடியாத மத்திய கூட்டாட்சி கடனையும் எதிர்கொண்டுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தால், கண்ணியத்தின் தோற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது. அது வெளிப்படையாக ஒரு கொள்ளைக் கும்பலாகவும், கழுத்தை அறுக்கும் கும்பலாகவும் செயல்பட்டு வருகிறது.
கனடாவும் மெக்சிகோவும் அமெரிக்காவிற்கு எதிராக செலுத்துமதி நிலுவை உபரிகளை கொண்டிருக்கின்றன என்றால், அந்த பற்றாக்குறைகளை அகற்ற அவை அமெரிக்கவுடன் இணைக்கப்பட வேண்டும். இலத்தீன் அமெரிக்காவில் வர்த்தகம் மற்றும் முதலீட்டின் அடிப்படையில் சீனா அமெரிக்காவை விஞ்சுகிறது என்றால், ஆடுகளத்தை சமன் செய்ய பனாமாக் கால்வாய் கைப்பற்றப்பட வேண்டும்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ட்ரம்பின் இணைப்புவாதக் கனவுகள், பேரழிவை நோக்கி அக்கறை கொண்ட ஒரு ஆளும் வர்க்கத்தை வெளிப்படுத்துகின்றன. உலகளாவிய காலனித்துவ சாம்ராஜ்யத்தை உருவாக்குவதன் மூலமாக, அதன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சிக்கல்களைத் தீர்ப்பதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திட்டமானது ஒரு பகல் கனவாகும்.
உலகை மேலாதிக்கம் செய்வதற்கான ட்ரம்பின் முயற்சிகள், “ஆயிரம் ஆண்டுகால பேரரசை” உருவாக்குவதற்கான அடோல்ஃப் ஹிட்லரின் முயற்சிகளை விட, அவருக்கு சிறந்ததாக முடிவடையப் போவதில்லை. அது, பேர்லினின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்த ஆழமான ஒரு பதுங்கு குழியில் ஹிட்லர், தலையில் தன்னைத் தானே சுட்டுக் கொள்வதில் முடிவடைந்தது.
ஆனால், அணு ஆயுதங்களாலும், ஒரு மூலைக்குள் தள்ளப்பட்ட நலிந்த சமூக வர்க்கத்தின் மனிதப்படுகொலை இரத்தவெறி ஆகியவற்றைக் கொண்டுள்ள ட்ரம்ப், மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவராக உள்ளார்.
ட்ரம்பின் வார்த்தைகள் அனைத்து நாடுகளின் தொழிலாளர்களுக்குமான, அனைத்திற்கும் மேலாக, அமெரிக்கத் தொழிலாளர்களின் நடவடிக்கைக்கான ஓர் அழைப்பாக இருக்க வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடூரமான, பாரிய படுகொலை முறைகள் மற்றும் அதன் காலனித்துவ பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கூட்டு பயங்கரங்கள் ஆகியவை, அமெரிக்க தொழிலாளர்களுக்கு எதிராகவே திருப்பப்படும்.
ஏகாதிபத்திய போர் மற்றும் காலனித்துவத்தின் உலகளாவிய வெடிப்புக்கு எதிரான போராட்டத்தில், உழைக்கும் மக்கள் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!” என்ற சுலோகத்தை கையிலெடுக்க வேண்டும்.
உலக சோசலிச இயக்கத்தில் ஐக்கியப்பட்ட, தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த, கூட்டான சர்வதேச போராட்டத்தால் மட்டுமே, ட்ரம்ப் திட்டமிட்டு தயாரித்து வரும் ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தை நிறுத்த முடியும். அமெரிக்காவில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அதன் சகோதரக் கட்சிகளும் இந்த போராட்டத்தை முன்னெடுத்து தலைமை தாங்கி வருகின்றன.