இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வேலையற்ற பட்டாதாரிகள் அரச தொழில்களைக் கோரி கடந்த ஆண்டு டிசம்பர் 13 முதல் பல போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.
இதன் பாகமாக ஜனவரி 31 அன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் யாழ்ப்பாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போதும் போராட்டம் செய்தனர். பெப்ரவரி 8 அன்று திருகோணமலையிலும் மற்றொரு போராட்டத்தை செய்தனர்.
அவர்கள் அரசாங்க அனுமதி பெற்ற அல்லது வெளிநாட்டு பட்டப்படிப்பு அல்லது உள்வாரி, வெளிவாரி பட்டப்படிப்பு என தாம் எதைப் பெற்றிருந்தாலும் இலங்கை பல்கலைக்கழக மானியத்தின் கீழ் பட்டம் பெற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வழங்க கோருகின்றனர்.
இந்தப் பட்டதாரிகள் கடந்த காலத்தில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்களின் கீழ் பல ஆண்டுகளாக அரசாங்க வேலைகளுக்காக காத்திருக்கின்றனர். வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர்கள், கடிதங்கள் மற்றும் சந்திப்புகள் ஊடாக முன்வைத்த தமது வேண்டுகோள்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி/தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்திடம் இருந்து பதில் கிடைக்காத நிலையிலேயே இந்தப் போராட்டங்களை ஏற்பாடு செய்ததாகத் தெரிவித்தனர்.
வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை வடக்கு கிழக்கு மாகணங்களில் மாத்திரம் அன்றி நாடு முழுவதிலும் உயர்வடைகின்றது. 2024 ஆம் ஆண்டில் சுமார் 35,000 பட்டதாரிகள் வேலையற்று இருந்தனர்.
வேலையற்ற பட்டதாரிகள் மத்தியில் கோபம் வளர்ச்சியடைந்த நிலைமையில், முன்னாள் ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ, அவர்களில் சுமார் 50,000 பேரை “அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக” உள்வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டார். அரச துறைகளில் உள்ள பட்டதாரிகளுக்கான சம்பளத்தைவிட பாரியளவில் வெட்டப்பட்ட குறைந்த ஊதியமே அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் 20,000 பேர் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களில் 16,000 பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பாடசாலை ஆசிரியர்களாக பணிபுரிவதோடு அரசாங்க ஆசிரியர்களோடு ஒப்பிடும் போது குறைந்த சம்பளத்தோடு வேலை செய்வதோடு கடினமான சேவை நிலைமைகளுக்கும் முகங்கொடுக்கின்றனர்.
கோவிட்-19 தொற்று நோயால் துாண்டப்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியுடன், இன்னும் மோசமடைந்த நாட்டின் பொருளாதார நெருக்கடியினால் புதிய ஆட்சேர்ப்புகள் நிறுத்தப்பட்டன. 2019இல் இருந்து 2024 வரையில் வெளியேறிய பத்தாயிரக்கணக்கான பட்டதாரிகள் வேலையற்ற நிலைக்கு தள்ளப்பட்டதோடு அவர்களின் சமூக மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மோசமடைந்துள்ளன.
அவர்களில் 42 வயதைத் தாண்டியும் பத்து ஆண்டுகளாக வேலைக்காக காத்திருக்கு பட்டதாரிகளும் உள்ளனர். பல பட்டதாரிகள் அரசாங்க வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திருமணம் செய்துள்ளனர் ஆனால் அனைத்தும் வீண். சரியான வேலையற்ற நிலையில் பலர் மிகக் குறைந்தளவான நாளாந்த சம்பளத்தில் கொடூரமான சுரண்டல் நிலைமையின் கீழ் நிரந்தரமற்ற வேலை செய்து தமது வாழ்வை நடத்த தள்ளப்பட்டுள்ளனர். சிலர் மேசன், வாகன சாரதி, வர்ணம் புசுதல், மின்சார வேலை, தச்சு வேலை மற்றும் பிற நிரந்தரமற்ற வேலைகளைச் செய்கின்றனர்.
ஜனவரி 16 அன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் சர்வாநந்தசிவம் சசிகரன், “எமது சங்கம் இதுவரைக்கும் 800 கடிதங்களை வடக்கு கிழக்கில் உள்ள ஆளுநர்களில் இருந்து கொழும்பு அரசாங்கம் வரை எழுதி அனுப்பியுள்ளது. ஆனால், எதுவும் வெற்றியளிக்கவில்லை,” என்றார். அரசாங்கம் வந்து நான்கு மாதங்கள் தானே ஆகின்றது என சாக்கு போக்கு சொல்வதாகவும், ஆனால் தாங்கள் ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வேலையின்றி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பும், வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகளை ஆதரிப்பதோடு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப அதிகரிக்கின்ற போதுமான ஊதியத்துடன் கூடிய கண்ணியமான. ஓய்வூதியத்துடன் கூடிய தொழில்களைப் பெறுவதற்கான அவர்களின் உரிமையைப் பாதுகாக்கின்றன.
மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை. நாட்டில் உள்ள அரச நிறுவனங்களில் கிட்டத்தட்ட 30,000 வெற்றிடங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவை ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு நடைறையின் படி நிறப்பப்படும் எனவும் தெரிவித்தார்.
திசாநாயக்கவின் யாழ்ப்பாணத்துக்கான வருகை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பானது அல்ல. அவர் உரிய நடவடிக்கையின் பின்பே, இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் உரிமையாளர்களுக்கு கொடுக்கப்படும் என மீண்டும் குறிப்பிடடார். இதைத் தான் முன்னைய ஆட்சிகளும் கூறியிருந்தன.
அவர் பல அமைச்சர்களுடன் முதலாளித்துவ முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்தும் திட்டங்களை அறிவிக்கவே யாழ்ப்பாணம் சென்றிருந்தார். பரந்தன், மாங்குளம், காங்கேசந்துறை ஆகிய இடங்களில் தொழிற்துறை வலயங்கள் உருவாக்கப்படும் என ஜனாதிபதி கூறினார். அவர், வடக்கு மற்றும் கிழக்கில் மூதலீடு செய்யுமாறு தமிழ் புலம்பெயர்ந்தவர்களை கேட்டுக்கொண்டார்.
இந்த மாவட்டங்களில் உள்ள சகல அமைச்சர்களும் இந்த மாவட்ட அபிவிருத்திக் குழுவின் உறுப்பினர்களாகவே வேலை செய்கின்றனர். தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் போன்ற தமிழ் தேசியவாத கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் தே.ம.ச.யைச் சேர்ந்தவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் அமைச்சர்கள், அரச வேலைகளுக்காக காத்திருக்காது தனியார் துறை வேலைகளில் வேலை தேடுமாறு பட்டதாரிகளைத் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.
டிசம்பர் 13 நடைபெற்ற போரட்டத்தின் போது கடற்தொழில் மற்றும் நீரியல் துறை அமைச்சர் சந்திரசேகர், “எமது நாட்டின் அபிவிருத்தி அரச வேலைகளில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை. வெறும் 1.3 தொழிலாளர்களே அரசாங்கத் துறையில் உள்ளனர், ஆனால் அதிகமானோர் தனியார் துறைகளிலேயே உள்ளனர்” எனக் கூறி அரச வேலைக்கான போராட்டத்தை மழுங்கடித்து போராட்டக்காரர்களை கலைக்க முயற்சித்தார்.
ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களின் செய்தி, உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை ஊக்குவிக்க தொழிற்துறை வலயங்களை உருவாக்கும் வரை காத்திருங்கள். நீங்கள் அவர்களின் நிறுவனங்களில் கடினமாக உழைக்கலாம்! என்பதே ஆகும்.
தனியார் நிறுவனங்களில் வேலை தேடுமாறு கூறிய அமைச்சரக்கு பதில் அளித்த ஒரு பட்டதாரி: ”நீங்கள் அரச வேலை ஒன்றைப் பெறும் போது தனியார் வேலையில் இருந்து விலகிவிடுவீர்கள் எனக் கூறி, தனியார் நிறுவன உரிமையாளர்கள் எம்மை ஆட்சேர்ப்பதற்கு நிராகரிக்கினறனர்,” என்றார்.
போரட்டம் செய்த பட்டதாரிகள், இந்த ஐந்து ஆண்டுகளில் பல அரச தொழிலாளர்கள் ஓய்வு பெற்றும் பலர் வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளனர். ஆனால் அரச தொழில் வெற்றிடங்கள் நிரப்படவில்லை. ஆகையால் எமது நம்பிக்களை வெறுமையடைந்துள்ளன, என சுட்டிக் காட்டினர்.
சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்டுள்ள நடவடிக்கைகளின் பாகமாக அரசாங்கம் அரச செலவீனங்களை குறைப்பதற்கு 5 இலட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களை குறைத்து அரசாங்கத் துறையை குறுக்குவதற்கு முயற்சிக்கின்றது. அரசாங்கம் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் உட்பட மறுசீரமைப்பு செயன்முறைகளில் ஈடுபட்டுள்ளது. இது இலட்சக்கணக்கான தொழில்களை நாசமாக்குவதிலேயே முடிவடையும்.
இந்த பட்டதாரிகளின் போராட்டங்களின் போது சலக தமிழ் கட்சிகளும் அமைதியை பேணுகின்றன. இந்த கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி தலைமை வகித்த மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இணைந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் சர்வதேச நாணய நிதிய கொள்கைகளை ஆதரிப்பதோடு வடக்கு, கிழக்கிற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் வருவதால் தொழிலாளர்களைச் சுரண்டுவதில் தாமும் இணைந்து கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
சுவாரஸ்யமான வகையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தமிழ் பேசும் இளைஞர்களை பொலிஸ் படையில் இணைவதற்கு உற்சாகப்படுத்தினார். இது வேலை வழங்குவது கிடையாது மாறாக தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு தயாரிக்கப்படும் அரச எந்திரத்தை பலப்படுத்துவதற்கானதே ஆகும். இதே பொலிஸ் தான் ஜனாதிபதி வருகையின் போது வேலையற்ற பட்டதாரிகளின் திட்டமிடப்பட்ட போராட்டத்தை தடைசெய்ய தடையுத்தரவு பெற முயற்சித்து, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முறையீடு செய்தது.
சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கையை கட்டவிழ்த்துவிடும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் வர்க்கப் போர் திட்ட நிரலை புரிந்துகொள்ளுமாறு வேலையற்ற பட்டதாரிகளுக்கு அழைப்புவிடுக்கின்றன.
முதலாளித்துவம் அதன் நெருக்கடியின் மத்தியில், கொடூரமாக சுரண்டவும் இலாபங்களை அதிகரித்துக்கொள்ளவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. இது எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் நடைபெறுகின்றது. முதலாளித்துவ முறைமைக்குள் வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கும், அதே போல் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கும் எந்தத் தீர்வும் கிடையாது.
சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ., தொழிலாள வர்க்கத்தின் ஆதரவுடன் சோசலிச கொள்கைகளுக்காக போராடுவதற்கு இணைவதன் மூலமே தமது கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என வேலையற்றவர்களுக்கு அழைப்புவிடுகின்றது.
தொழிலாளர்கள், இந்த வேலையற்ற பட்டதாரிகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும். அத்தோடு உங்களது கோரிக்கைளில் ஒன்றாக, அனைத்து இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் விரும்பத்தக்க கண்ணியமான சம்பளம், ஓய்வுதிய உரிமை மற்றும் சரியான வேலை நிலைமைகளை வழங்கு! என்ற கோரிக்கையும் இருக்க வேண்டும்.
தொழிலாளர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து பிரிந்து சுயாதீன அமைப்பான நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டும். இந்த நடவடிக்கை குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு சோசலிசத்துக்கும் ஜனநாயகத்துக்குமான மாநாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். வேலையற்ற பட்டதாரிகள் இந்தப் போராட்டத்தில் இணைந்து பிரதான பணியை வகிக்க வேண்டும்.
அத்தகைய சக்திவாய்ந்த மாநாட்டைக் கட்டியெழுப்புவது, முதலாளித்துவ முறைமையை துாக்கியெறிந்து சோசலிச கொள்கைகளை அமுல்படுத்தும ஒரேயொரு அரசாங்கமான தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தில், தொழிலாளர்களால் கிராமப்புற ஏழைகளையும் இளைஞர்களையும் ஒன்றிணைக்க முடியும்.
ஒரு சிலரின் இலாப தேவையை அடிப்படையாகக் கொண்டுள்ள முதலாளித்துவ உற்பத்தி முறையை முடிவுக்கு கொண்டுவந்து, சோசலிச முறைமையின் கீழ் மனிதத் தேவைக்கான அறிவார்ந்த திட்டமிடப்பட்ட உற்பத்தியை ஸ்தாபிப்பதே, வேலையின்மை உட்பட சமூக நோய்களை இல்லமால் ஒழிப்பதற்கான அடித்தளம் ஆகும்.
இந்தப் போராட்டம் பின்வரும் கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்.
- சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகள் வேண்டாம்.! அனைத்து வெளிநாட்டுக் கடன்களைம் தள்ளுபடி செய்!
- வங்கிகள், பெரு நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்டங்களை தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டில் வைத்திடு!
- அனைவருக்கும் தொழில்! வேலை வழங்கும் வரை கண்ணியமான வாழ்க்கைக்கும் சமூக நலன்களுக்கும் மானியம் வழங்கு!
- கிராமப்புற விவசாயிகள் மற்றும் தேவை உடையோர்களுக்கான அனைத்து மானியங்கள் மற்றும் சமூக வேலைத்திட்டங்களை மீண்டும் புதுப்பித்து விரிவுபடுத்து!
- ஏழை விவசாயிகள், சிறு மீனவர்கள் மற்றும் சிறு வியாபரிகளின் அனைத்துக் கடன்களையும் இரத்து செய்!
- கொழும்பு ஸ்தாபனத்தின் சிங்கள-பௌத்த பேரினவாதம் மற்றும் தமிழ் முதலாளிகளின் தமிழ் தேசியவாதம் உட்பட அனைத்து வடிவிலான தேசியவாதம் மற்றும் வகுப்புவாதங்களையும் எதிர்த்திடு!
மேலும் படிக்க
- இலங்கை ஜனாதிபதி பெருவணிக மன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்துவதாக உறுதியளிக்கிறார்
- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மாணவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகளைக் கோருவதை கண்டனம் செய்! இலவசக் கல்வியைப் பாதுகாக்க போராடுவதற்கு ஐக்கியப்படு!
- இலங்கையில் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீதான பொலிஸ் தாக்குதலை கண்டனம் செய்! கைது செய்யப்பட்ட நான்கு ஆசிரியர்களை விடுதலை செய்!