மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த வெள்ளிக்கிழமை பவேரிய பெருநகரத்தில் தொடங்கிய மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில், உக்ரேனில் நடந்துவரும் போரும், ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைகளுக்கான ஜனாதிபதி ட்ரம்பின் அழுத்தமும் மையத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால் உண்மையில், அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே அதிகரித்து வரும் மோதலே மைய நிலைக்கு வந்தது.
இந்த மாநாட்டில் முதலில் உரையாற்றியவர்களில் ஒருவரான அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ், அதி தீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சித் (AfD) தலைவர் ஆலிஸ் வீடல் (Alice Weidel), டச்சு இஸ்லாமிய வெறுப்பாளர் கீர்ட் வைல்டர்ஸ் (Geert Wilders) அல்லது பிற ஐரோப்பிய அதி வலதுசாரி தீவிரவாதிகளிடமிருந்து வந்திருக்கக்கூடிய 15 நிமிட பாசிச உரையை நிகழ்த்தினார்.
இந்த பாதுகாப்பு மாநாட்டிற்கு வலதுசாரி தீவிரவாத கட்சிகள் அழைக்கப்படவில்லை என்பது ஒரு அவதூறு என்று தெரிவித்த வான்ஸ், இதில் “தடுப்பு சுவர்களுக்கு இடமில்லை” என்று குறிப்பிட்டார். கூடியிருந்த அரசியல் தலைவர்கள் “தங்கள் சொந்த மக்களின் வாக்குகளுக்கு” அஞ்சுவதாக குற்றஞ்சாட்டிய அவர், அவர்களை சர்வாதிகார ஆட்சியாளர்களுடன் ஒப்பிட்டார். ஐரோப்பாவிற்கு மிகப் பெரிய ஆபத்து உள்ளிருந்தே வருகிறது என்றும் அவர் அறிவித்தார்.
எடுத்துக்காட்டாக, வெளிப்படையற்ற நிதி ஆதாரங்களின் உதவியுடன் ருமேனியாவின் ஜனாதிபதித் தேர்தலில் பாசிச கொலின் ஜார்ஜெஸ்குவின் வெற்றி ரத்து செய்யப்பட்டது மற்றும் இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலும் கருக்கலைப்பு எதிர்ப்பு ஆர்வலர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெறுக்கத்தக்க கருத்துகளுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகள் ஆகியவற்றை வான்ஸ் மேற்கோள் காட்டினார்.
வான்ஸ் “பெருமளவிலான குடியேற்றமானது” மிகப்பெரிய பிரச்சினை என்று விவரித்தார். மாநாட்டுக்கு முந்தைய நாள் முனிச்சில் ஒரு ஆப்கானிஸ்தான் அகதி தனது காரை ஒரு தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்தின் மீது மோதிய தாக்குதலை அவர் நேரடியாகக் குறிப்பிட்டார். “நாம் பாதையை மாற்றி, நமது பொதுவான நாகரிகத்தை ஒரு புதிய திசையில் வழிநடத்துவதற்கு முன்பு எத்தனை முறை இந்த பயங்கரமான பின்னடைவுகளை அனுபவிக்க வேண்டும்?” என்று வான்ஸ் கூறினார். “மில்லியன் கணக்கான பரிசீலனை செய்யப்படாத புலம்பெயர்ந்தோர்கள் வெள்ளமென பெருக்கெடுத்து வருவதற்கான வாயில்களைத் திறக்க எந்த வாக்காளர்களும் வாக்குச்சாவடிகளுக்குச் செல்லவில்லை” என்று அவர் கூறினார்.
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் தோல்விக்குப் பிறகு, அமெரிக்க அரசாங்கம் நியூரம்பேர்க்கில் நாஜிக்களை வழிநடத்தவும், அவர்களின் குற்றங்களை பரந்த மக்களின் கவனத்திற்குக் கொண்டுவரவும் முயற்சித்தது. ட்ரம்பின் கீழ், அமெரிக்க அரசாங்கம் இப்போது ஐரோப்பாவில் பாசிசத்தை மீண்டும் புத்துயிரூட்ட முயற்சிக்கிறது.
இத்தாலியில் ஜியோர்ஜியா மெலோனி (Giorgia Meloni), ஹங்கேரியில் விக்டொர் ஓர்பன் (Viktor Orbán), நெதர்லாந்தில் கீர்ட் வில்டர்ஸ் மற்றும் ஆர்ஜென்டினாவில் ஜேவியர் மிலே (Javier Milei) போன்ற நவ-பாசிசவாத அரசியல்வாதிகள் ஏற்கனவே ட்ரம்பின் நெருங்கிய கூட்டாளிகளாக இருந்து வருகின்றனர். ஜேர்மனியில், சமூக சிக்கன நடவடிக்கைகளுக்கான ட்ரம்பின் பிரதிநிதி எலோன் மஸ்க் (Elon Musk), தேர்தல் பிரச்சாரத்தில் AfD கட்சிக்கு ஆதரவாக பாரியளவில் தலையீடு செய்து வருகிறார்.
அட்லாண்டிக்கின் இரண்டு பக்கங்களிலும் உள்ள அதிதீவிர வலதுசாரிகளை ஒன்றாகக் கொண்டு வருவது அவர்களின் பொதுவான அரசியல் நிகழ்ச்சி நிரலாகும்: அதாவது, பல ஆண்டுகளாக வெட்டுக்களுக்கு பின்னர் எஞ்சியிருக்கும் அனைத்து சமூக திட்டங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சுகாதார வசதிகளையும் அகற்றுவது; புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் மீதான தாக்குதலில் தொடங்கி, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளை அழிப்பது; ட்ரம்ப் நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும் பில்லியனிய செல்வந்த தட்டுக்களைச் செழிப்பாக்குவதற்கு வழியில் நிற்கும் அத்தனை தடைகளையும் அகற்றுவது; மற்றும் போர் உற்பத்தியை நோக்கி பொருளாதாரத்தின் நோக்குநிலை ஆகியவைகளே அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலாகும்.
நாஜிக்கள் கூட தமது வெளியுறவுக் கொள்கைக் கூட்டணிகளை, பொதுச் சித்தாந்த அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தனர். உதாரணமாக, ஹிட்லரின் ஜேர்மனி 1939 இல் முசோலினியின் இத்தாலியுடன் எஃகு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்தது. 1940 ஆம் ஆண்டில், இது ஜப்பானுடன் இணைந்து மூன்று வல்லரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தமாக விரிவுபடுத்தப்பட்டது.
ஆனால், ஐரோப்பிய சக்திகள் ஜனநாயகத்தின் கோட்டைகளோ அல்லது ட்ரம்பின் சூழ்ச்சிகளுக்கு அப்பாவித்தனமாக பலியானவர்களோ அல்ல. அதற்கு நேரெதிராக, உலக சோசலிச வலைத் தளம் பல பகுப்பாய்வுகளில் சுட்டிக்காட்டியுள்ளதைப் போல, ட்ரம்பின் எழுச்சியும் மறுதேர்வும் ஒரு தற்செயலான பிறழ்ச்சி அல்ல, “மாறாக அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள அரசியலின் ஒரு அடிப்படை மறுஒழுங்கமைப்பின் வெளிப்பாடாகும்.”
ஜனவரி 3, 2025 அன்று உலக சோசலிச வலைத் தளம் அதன் புத்தாண்டு அறிக்கையில் பின்வருமாறு எழுதியது:
புதிய அரசாங்கத்தின் தன்மையானது, முதலாளித்துவ சமூக அமைப்பின் தன்மைக்கு ஏற்ற வகையில், அரச வன்முறையின் மறுஒழுங்கமைப்பைக் குறிக்கிறது. உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களும் பெருநிறுவனங்களும் எல்லையற்ற அளவில் வளங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர்.
ட்ரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதானது, “அரசியல் பிற்போக்குத்தனத்தின் நீண்டகால செயல்முறையின் உச்சக்கட்டமாகவும், வரவிருக்கும் நிகழ்வுகளின் முன்னறிவிப்பாகவும் உள்ளது” என்று அந்த அறிக்கை வலியுறுத்தியது. இது “பாசிச காட்டுமிராண்டித்தனம் மற்றும் முதலாளித்துவ சர்வாதிகாரத்தை ‘இயல்பாக்குவதின்’ ஓர் அரசியல் வெளிப்பாடாகும்.” “ஜனநாயகக் கட்சியும் முதலாளித்துவ ஊடகங்களும், ஜனநாயகம் மீதான ட்ரம்பின் அச்சுறுத்தல் பற்றிய அனைத்துக் குறிப்புகளையும் கைவிட்டு, பாசிசம் என்ற “f -வார்த்தை” ஒருபுறம் இருக்க, ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினருக்கு தங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்க சூளுரைப்பதில்” இருந்து இவற்றைக் காண முடியும்.
மேலும், உலக சோசலிச வலைத் தளத்தின் அறிக்கை பின்வருமாறு வலியுறுத்தியது:
அமெரிக்காவில் தெளிவாக வெளிப்படும் செயல்முறைகள் உண்மையில் உலகளாவியவை. உலகெங்கிலும், முதலாளித்துவ அரசாங்கங்கள் பாரிய அரசியல் நெருக்கடிகளால் உலுக்கப்பட்டு, மக்கள் எதிர்ப்பை எதிர்கொண்டு, அதிகரித்தளவில் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு திரும்பியும் வருகின்றன.
இது, குறிப்பாக ஐரோப்பாவில் உண்மையாகும். அதிதீவிர வலதுசாரிக் கட்சிகள் கௌரவிக்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டு அரசாங்கத்திற்குள் கொண்டு வரப்பட்டு வருகின்றன. ஜேர்மனியில், எதிர்க்கட்சி தலைவரும் அடுத்த சான்சிலராக வரக் கூடியவருமான பிரெடெரிக் மேர்ஸ், இரண்டு வாரங்களுக்கு முன்பு பாசிச AfD கட்சிக்கு எதிரான தடைகளைத் தாண்டி, வலதுசாரி தீவிரவாதிகளுடன் இணைந்து முதல் முறையாக நாடாளுமன்றத்தில் குடியேற்ற எதிர்ப்புத் தீர்மானத்தை நிறைவேற்றினார். இந்த நடவடிக்கைக்கு எதிராக மில்லியன் கணக்கான மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், மெர்ஸ் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகிறார்.
இந்த வலதை நோக்கிய திருப்பத்தில், உக்ரேனிய போர் ஒரு முக்கிய பாத்திரம் வகித்துள்ளது. 2014 இல், ஜேர்மனி மற்றும் பிற ஐரோப்பிய சக்திகளுடன் சேர்ந்து அமெரிக்கா கியேவில் ஒரு வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஒழுங்கமைத்தது. இந்த சதி, ஒரு மேற்கத்திய சார்பு ஆட்சியை அதிகாரத்திற்குக் கொண்டு வந்ததுடன் அடுத்தடுத்த போருக்கான அடித்தளங்களை அமைத்தது. அப்போதிருந்து, ஸ்டீபன் பண்டேரா போன்ற நாஜி ஒத்துழைப்பாளர்களை நாயகர்களாக கௌரவிக்கின்ற உக்ரேனிய பாசிசவாத சக்திகளுடன் அவை நெருக்கமாக வேலை செய்து வருகின்றன. பல்கலைக்கழகங்களிலும் ஊடகங்களிலும் வரலாற்றை முறையாக திருத்துவதும் இதனுடன் சேர்ந்துள்ளது. நாஜிக்களின் குற்றங்கள் அற்பமாக்கப்பட்டு, இரண்டாம் உலகப் போருக்கு சோவியத் ஒன்றியமே பொறுப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், உக்ரேனிய போர் ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு படுதோல்வியாக நிரூபணமாகியுள்ளது. ஐரோப்பிய, உக்ரேனின் தலைவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக ட்ரம்ப் அறிவித்திருப்பதானது, ஐரோப்பிய அரசாங்கங்களிடையே பீதியைத் தூண்டியுள்ளது. அமெரிக்கா போரில் இருந்து விலகி, மதிப்புமிக்க மூலப்பொருட்களை பெற்றுக்கொள்ளும் என்றும், போரின் செலவுகள் மற்றும் விளைவுகள் ஐரோப்பா மீது சுமையை ஏற்றும் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.
ட்ரம்ப் நிர்வாகம் உக்ரேனில் “சமாதானத்தை” ஏற்படுத்துகிறது என்ற எந்தப் பிரமையிலும் யாரும் இருக்கக் கூடாது. மாறாக, சீனாவிற்கு எதிரான போருக்குத் தயாராக, வடக்கு மற்றும் தென் அமெரிக்கா மீது அமெரிக்க மேலாதிக்கத்தை விரிவுபடுத்த முயல்வதால், உக்ரேனின் குறிப்பிடத்தக்க எரிசக்தி மற்றும் கனிம வளத்தை நேரடியாக சுரண்டுவதற்காக ட்ரம்ப் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை மறுநோக்கு நிலைப்படுத்தி வருகிறார். இதில் பனாமா கால்வாய், கிரீன்லாந்து மற்றும் கனடாவை இணைப்பதற்கான அவரது முன்மொழிவும் அடங்கும்.
இந்த “அமெரிக்கா முதலில்” என்ற கொள்கை ஐரோப்பிய “கூட்டாளிகளுக்கு” எதிராகவும் இயக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு “அரக்கத்தனம்” என்று முத்திரை குத்திய அவர், தண்டனைக்குரிய சுங்கவரிகளை விதிப்பதாக அச்சுறுத்துவதன் மூலம் அதைக் கலைக்க முயற்சிக்கிறார்.
ஐரோப்பிய அரசாங்கங்கள் ஒருபுறம் ட்ரம்புடன் இணக்கமாக இருப்பதன் மூலமும், மறுபுறம் தங்களை பாரியளவில் ஆயுதபாணியாக்கிக் கொள்வதன் மூலமும் இதற்கு விடையிறுத்து வருகின்றன. வான்ஸுக்கு சற்று முன்னதாக, ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயன் ஆகியோரின் உரைகள் இந்தத் திசையைச் சுட்டிக்காட்டுகின்றன.
எதிர்காலத்தில் ஜேர்மனி பாதுகாப்புத் துறையில் 2 சதவீதத்திற்கும் அதிகமாக “கணிசமானளவுக்கு” முதலீடு செய்ய வேண்டும் என்று ஸ்டெய்ன்மியர் அறிவித்தார். “நாங்கள் எச்சரிக்கை மணிகளைக் கேட்டிருக்கிறோம்,” என்று அவர் கூறினார். புதிய அமெரிக்க நிர்வாகம் நிறுவப்பட்ட விதிகள் மற்றும் அதன் நட்பு நாடுகளை மதிக்கவில்லை என்று கவலை தெரிவித்த அதே வேளையில், ஐரோப்பாவும் உக்ரேனும் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் கிட்டத்தட்ட கெஞ்சும் அழைப்பை விடுத்தார். மேலும் “நீங்கள் ஜேர்மனியை நம்பலாம்,” என்று அவர் வலியுறுத்தினார்.
வர்த்தகப் போர்களும் வரிகளும் “அர்த்தமற்றவை” என்றும், ஆனால் எதிர் வரிகளை விதிக்க அச்சுறுத்துவதாகவும், பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்ததாகவும் உர்சுலா வான் டெர் லேயன் கூறினார். “வலுவான உக்ரேனை” உறுதி செய்வதற்காக ஐரோப்பாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்காவிற்கும் அவர் அழைப்பு விடுத்தார். மேலும், ஐரோப்பிய இராணுவ செலவினங்களை பெருமளவில் அதிகரிப்பதாக அவர் உறுதியளித்தார். போர் தொடங்கியதிலிருந்து செலவினங்கள் 200 பில்லியன் யூரோக்களிலிருந்து 320 பில்லியன் யூரோக்களாக அதிகரித்திருந்தாலும், இது போதுமானதாக இல்லை என்று அவர் கூறினார்.
முனீச்சில் மிகத் தெளிவாக கண்ணுக்குத் தெரிந்த வர்த்தகப் போர் மற்றும் மீள்ஆயுதமயமாக்கலின் சுழல் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலத்தை நினைவூட்டுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் முன்னணி மார்க்சியவாதியான லியோன் ட்ரொட்ஸ்கி 1928 இல் பின்வருமாறு எச்சரிக்கை விடுத்தார்:
நெருக்கடி காலங்களில், அமெரிக்க மேலாதிக்கமானது செழிப்பு காலங்களை விட முழுமையாகவும், வெளிப்படையாகவும், இரக்கமின்றியும் செயல்படும். ஆசியா, கனடா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பாவில், இது அமைதியான முறையில் நடந்தாலும் சரி அல்லது போர் மூலம் நடந்தாலும் சரி, பிரதானமாக ஐரோப்பாவின் இழப்பில், அமெரிக்கா தனது சிரமங்கள் மற்றும் தீமைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயலும்.
இந்தக் கணிப்பு இன்று இன்னும் உண்மையாக உள்ளது. அணுஆயுதங்களைக் கொண்டு மனிதயினத்தை அழிக்க அச்சுறுத்தும் மரணச் சுழற்சியை தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும். தன்னலக்குழுக்களின் செழிப்பாக்கம், மீள்ஆயுதமயமாக்கல் மற்றும் மற்றும் அதிகரித்து வரும் போர்களின் முழு சுமையையும் தொழிலாள வர்க்கம் சுமந்து செல்கிறது. மேலும், அது முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராக சமரசமற்ற எதிர்ப்பிலும் நிற்கிறது.