மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
மத்திய கூட்டாட்சி வேலைகளுக்கு எதிரான ட்ரம்ப் நிர்வாகத்தின் வெறியாட்டத்தை தடுத்து நிறுத்த, பாரிய நடவடிக்கைக்கு தயாராகுமாறு சர்வதேச தொழிலாளர் குழுக்களின் சாமானிய தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) அமெரிக்காவில் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுக்கிறது.
மத்திய கூட்டாட்சி தொழிலாளர்கள், அஞ்சல் துறை தொழிலாளர்கள் மற்றும் தனியார்துறை தொழிலாளர்களை ஒன்றிணைத்து, வேலைகள் மற்றும் சமூகத் திட்டங்களைப் பாதுகாக்க , பாரிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பிற வகையான கூட்டு நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க, சாமானிய தொழிலாளர் குழுக்களை (தொழிற்சங்க அதிகாரிகள் மற்றும் இரு நிறுவனக் கட்சிகளின் பிரதிநிதிகளைத் தவிர்த்து) கட்டியெழுப்ப வேண்டும்.
புதிய நிர்வாகம் பதவியேற்று ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில், பல்லாயிரக்கணக்கான கூட்டாட்சி தொழிலாளர்கள் ஏற்கனவே தங்கள் வேலைகளில் இருந்து அகற்றப்பட்டுவிட்டனர். வெள்ளிக்கிழமை, சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை 5,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. வார இறுதியில், உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தில் கிட்டத்தட்ட 1,300 வேலைகள் வெட்டித் தள்ளப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
இது வெறும் ஆரம்பம் மட்டுமே. இரண்டு மில்லியனுக்கும் மேலான மத்திய கூட்டாட்சி தொழிலாளர் தொகுப்பில் நூறாயிரக்கணக்கான வேலைகள் அச்சுறுத்தலின் கீழ் உள்ளன. இந்த தொழிலாளர்களில் சுமார் 30 சதவீதம் பேர் வாஷிங்டன் டி.சி, பகுதியில் இருந்து வேலை செய்து வருகிறார்கள் என்றாலும், பரந்த பெரும்பான்மையானவர்கள் அமெரிக்காவின் ஒவ்வொரு பகுதியிலும் பரவி வாழுகின்றனர்.
இந்த வேலை வெட்டுக்கள் அப்பட்டமாக சட்டவிரோதமானவை. மேலும், பொதுப் பணித்துறையில் அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட பணிநீக்கங்களுக்கு எதிரான பாதுகாப்புகளை மீறுகின்றன. ட்ரம்ப், அரசாங்க செயல்திறன் துறை (Department of Government Efficiency - DOGE) என்று அழைக்கப்படும் அமைப்பின் மூலம், பில்லியனரும் சக பாசிஸ்ட்டுமான எலோன் மஸ்க்கிற்கு அதிகாரத்தை வழங்கியுள்ளார். மேலும், ஒரு சாவியை அழுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த நிறுவனங்களையும் கலைப்பதற்கு அவருக்கு அனுமதியையும் வழங்கியுள்ளார்.
மத்திய கூட்டாட்சி தொழிலாளர்கள் மீதான தாக்குதல், தொழிலாள வர்க்கத்தின் மீதான பரந்த தாக்குதலின் முன்னணி மட்டுமே. ஒழிக்கப்படும் அச்சுறுத்தலின் கீழ் உள்ள சமூக நலத் திட்டங்கள் (மருத்துவ உதவி, உணவு மானிய முத்திரைகள் மற்றும் பொதுக் கல்வி உட்பட) மில்லியன் கணக்கான மக்களுக்கு உயிர்நாடிகளாக இருந்து வருகின்றன.
மத்திய கூட்டாட்சி நிறுவனங்களை பெயரளவில் வழிநடத்துவதற்கு பொறுப்பாக ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்ட நபர்களின் வெளிப்படையான நோக்கமானது, அவர்களின் துறைகளை ஒழித்துக்கட்டுவதாகும். இதில் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறைக்கு தடுப்பூசி எதிர்ப்பு ரொபர்ட் எஃப். கென்னடி ஜூனியரும், கல்வித் துறைக்கு ஒரு பில்லியனரும், மல்யுத்த அதிபருமான லிண்டா மெக்மஹோன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அஞ்சல் துறை மீதும், இதே போன்ற இணையான தாக்குதல் நடந்து வருகிறது. இந்த துறையை தனியார்மயமாக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாகக் சுட்டிக்காட்டியுள்ளார். (அரசியலமைப்பில் அதன் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது) தபால் துறையில் எஞ்சிய பகுதி, அமேசானின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் போன்ற தன்னலக் குழுக்களுக்கு விற்கப்பட்டு, அதை ஒரு இலாப நோக்கத்துக்கான நிறுவனமாக மாற்றப்பட இருக்கிறது.
“செயல்திறனுக்காகவே” இந்த வெட்டுக்கள் என்ற கூற்று, எலோன் மஸ்க்கிடமிருந்து வருவது அபத்தமானது. அமெரிக்க இராணுவ ஒப்பந்தங்கள் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஊகவணிகத்தின் மூலம் கிட்டத்தட்ட 500 பில்லியன் டாலர் சொத்துக்களை குவித்து வைத்துள்ள எலோன் மஸ்க், கழிவு மற்றும் ஒட்டுண்ணித்தனத்தின் வரையறையாக இருக்கிறார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புகள், வேலையிட பாதுகாப்பு நெறிமுறைகள், பொது சுகாதார முன்முயற்சிகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு முறைகள் ஆகியவற்றை அகற்றுவதே இதன் உண்மையான நோக்கமாகும். இது, தொழிலாள வர்க்கத்தின் மீதான முழுமையான மற்றும் கட்டுப்பாடற்ற சுரண்டலுக்கான எந்தவொரு கட்டுப்பாடுகளையும் நீக்குகிறது. எலோன் மஸ்க்கும் இதர தன்னலக்குழுக்களும் பொது வளங்களை சூறையாடுவது என்பது, மனித வரலாற்றில் இடம்பெற்றுவரும் மிகப்பெரிய கொள்ளையாகும்.
கடந்த வார இறுதியில், ட்ரம்ப் ஒரு எக்ஸ்/ட்விட்டர் பதிவில், “தனது நாட்டைக் காப்பாற்றுபவர் எந்த சட்டத்தையும் மீற மாட்டார்,” என்று குறிப்பிட்டதன் மூலம், தனது நிர்வாகத்தின் சர்வாதிகார குணாம்சத்தை தெளிவுபடுத்தினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ட்ரம்ப் தன்னைத்தானே சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு, தனது ஆட்சியை ஹிட்லரின் ஃபியூரர் (Fuhrer) கோட்பாட்டின் முன்மாதிரியாகக் கொண்டிருக்கிறார்.
ட்ரம்ப் ஸ்தாபிக்க முயற்சிக்கும் புதிய ஆட்சியின் கீழ், தொழிலாளர்களுக்கு எந்த உரிமைகளும் இருக்காது. புலம்பெயர்ந்தவர்கள் மீதான அவரது தாக்குதல்கள், அமெரிக்க பெருநிறுவனங்களால் உருவாக்கப்பட்ட வறுமைக்கு “வெளிநாட்டு” தொழிலாளர்களை பலிகடா ஆக்குவது மட்டுமல்லாமல், மாறாக தலைவருக்கு தனிப்பட்ட விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்ட குடியுரிமையை மறுவரையறை செய்வதற்கும், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை அரசியலமைப்பு பாதுகாப்புகளை கிழித்தெறிவதற்கும் உதவுகின்றன.
மஸ்க்கின் இருப்பும், அவரது நிர்வாகமும் என்பது தன்னலக்குழுவால், மற்றும் தன்னலக்குழுவிற்காக மிகவும் அப்பட்டமான மற்றும் வெளிப்படையான அரசாங்க வடிவமாக இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது.
ட்ரம்ப் பணத்தை வாரி இறைக்கும் ஒரேயொரு துறை, இராணுவமும் பொலிஸும் மட்டுமே. அவர் அரசாங்கத்தை பிரடெரிக் ஏங்கல்ஸ் வரையறுத்தபடி, “ஆயுதம் ஏந்தியவர்களின் உடல்கள்” மற்றும் “அனைத்து வகையான சிறைச்சாலைகளின்” நிலைக்கு குறைக்கிறார். சமூக வேலைத்திட்டங்கள் மீதான வெட்டுக்கள், சீனா போன்ற உத்தியோகபூர்வ எதிரிகளுக்கு எதிராக மட்டுமல்ல, மாறாக கனடா மற்றும் ஐரோப்பிய சக்திகள் போன்ற நேற்றைய “கூட்டாளிகள்” என்று முத்திரை குத்தப்பட்ட நாடுகளுக்கு எதிராகக் கூட, பாரிய புதிய போர்களுக்கான ஆதாரவளங்களை விடுவிக்க மட்டுமே சேவையாற்றுகின்றன.
கனடா, கிரீன்லாந்து மற்றும் பனாமாக் கால்வாயை இணைப்பதற்கான ட்ரம்பின் அச்சுறுத்தல்களும், அவரது “அமெரிக்கா முதலில்” என்ற இராணுவமயமாக்கலும், உலகப் போருக்குத் தயாராகும் வகையில், வட அமெரிக்காவை ஒரு ஆயுதமேந்திய கோட்டையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
அமெரிக்க வரலாற்றிலேயே மிகத் தீவிரமான அரசியலமைப்பு நெருக்கடி என்று செய்தி ஊடகத்தால் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஜனநாயகக் கட்சி முற்றிலும் பலவீனமாக உள்ளது. பொதுமக்களுக்கு என்ன நடக்கிறது என்பதைக் கூட தெளிவாகக் கூற அது மறுக்கிறது. ஏனென்றால், ஜனநாயகக் கட்சி பெருநிறுவன அமெரிக்காவின் ஒரு கட்சியாக இருந்து வருவதால், கீழிருந்து வரும் எதிர்ப்பைக் கண்டு அது பயப்படுகின்றது.
தொழிற்சங்க எந்திரம், அதன் பங்கிற்கு, கோழைத்தனத்திற்கும் அப்பட்டமான ஒத்துழைப்பிற்கும் இடையே ஊசலாடுகிறது. ட்ரம்பின் பெருமளவிலான பணிநீக்கங்களால் செயல்படாமல் போயுள்ள உச்ச நீதிமன்றத்தையும் தேசிய தொழிலாளர் உறவுகள் வாரியத்தையும் ட்ரம்பின் கூட்டு சதிகாரர்கள் நடத்திவரும்போது, அமெரிக்க அரசு ஊழியர் கூட்டமைப்பு (AFGE) மற்றும் பிற அரசு தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை நீதிமன்றங்களை நம்பியிருக்கச் சொல்கின்றன. மேலும், வேலைநிறுத்தத்துக்கு எதிரான தொழிலாளர் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதையே தொழிற்சங்க எந்திரம் வலியுறுத்துகிறது. அதே நேரத்தில், ட்ரம்ப் பாரிய பணிநீக்கங்களைச் செய்ய தன்னால் முடிந்தளவு, ஒவ்வொரு சட்டத்தையும் வெளிப்படையாக மீறி வருகிறார்.
டீம்ஸ்டர்ஸ், சர்வதேச கடலோர தொழிலாளர்கள் சங்கம், மற்றும் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம் உட்பட ஏனைய தொழிற்சங்கங்கள், ட்ரம்பின் பொருளாதார கொள்கைகள் ஏதோவொரு விதத்தில் தொழிலாளர்களின் வேலைகளைக் காப்பாற்றும் என்று பொய்யுரைத்து, ட்ரம்பின் இனவாத தேசியவாதத்தை பகிரங்கமாக ஆதரிக்கின்றன.
நாற்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஜனாதிபதி ரோனால்ட் ரீகன் தொழில்முறை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் அமைப்பின் (PATCO) 11,000 வேலைநிறுத்த உறுப்பினர்களை பணிநீக்கம் செய்து, கருப்புப் பட்டியலில் சேர்த்தார். இது அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் முழு-வீச்சிலான வர்க்கப் போரை நோக்கிய ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது. இதைத் தொடர்ந்து பல தசாப்தங்களாக வேலை வெட்டுக்களும் ஆலை மூடல்களும் இன்றுவரை தொடர்கின்றன.
அந்த நேரத்தில், PATCO-வை பாதுகாப்பதற்கான ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு தொழிலாள வர்க்கத்தில் பாரிய ஆதரவு இருந்தது—இது செப்டம்பர் 19, 1981 அன்று வாஷிங்டன் டி.சி.யில் அரை மில்லியன் தொழிலாளர்கள் அணிவகுத்துச் சென்ற ஒற்றுமை தின ஆர்ப்பாட்டத்தால் நிரூபிக்கப்பட்டது. இது, அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது.
இந்த ஆற்றலை AFL-CIO தொழிற்சங்க அதிகாரத்துவம் காட்டிக் கொடுத்தது. இது, வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே PATCO-வை அதன் தலைவிதிக்குக் கைவிட்டது. AFL-CIO-வின் பதில், தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் ரீகன் நிர்வாகத்தின் வெளிப்படையான முகவர்களாக மாறியதையும், தொழிலாளர்களின் போர்க்குணமிக்க எதிர்ப்பை உடைத்து, வாழ்க்கைத் தரத்தில் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியை செய்வதற்கு, அரசாங்க பிரச்சாரத்தில் கூட்டுச் சேர்ந்ததையும் குறித்தது.
ட்ரம்பின் தாக்குதல்கள் PATCO வின் அளவை அற்பமாக்குகின்றன—இதற்கு பாரிய எதிர்ப்பு தவிர்க்கவியலாமல் வெளிப்படும். ட்ரம்ப் பின்பற்றி வருகின்ற சுங்கவரி யுத்தக் கொள்கைகள் பொருளாதாரத்தின் மீது நாசத்தை உண்டாக்கும். இது, பாரிய வேலைநீக்கங்கள் மற்றும் வேலைவாய்ப்பின்மைக்கு இட்டுச் செல்லும். அதேவேளையில் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அவரது தாக்குதல்கள் ஒரு சமூக வெடிப்பைத் தூண்டும்.
வரலாற்றின் அளவில், அமெரிக்காவில் உள்ள 200 மில்லியன் தொழிலாளர்களுடனும், உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான தொழிலாளர்களுடனும் ஒப்பிடும்போது, ட்ரம்பும் அவரது ஒரு சில தன்னலக்குழுக்களும், பாசிச சதிகாரர்களும் ஒரு தூசிக்கும் இல்லை. ஆனால் முக்கியமான பிரச்சினை என்னவென்றால், ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீன சக்தியாகவும், சமூக அடித்தளமாகவும் அணிதிரட்டப்பட வேண்டும்.
அனைத்திற்கும் மேலாக, அமெரிக்க தொழிலாளர்கள் ட்ரம்பின் “அமெரிக்கா முதலில்” என்ற பொய்களை நிராகரித்து, சர்வதேச ஆதரவைக் கோர வேண்டும். உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் தங்கள் சொந்த நாடுகளில் இதேபோன்ற தீவிர வலதுசாரி சதிகளை எதிர்த்துப் போராடுவதற்கு அமெரிக்காவில் நடப்பதை எதிர்க்க வேண்டும். இவை வெள்ளை மாளிகையால் வெளிப்படையாக ஊக்குவிக்கப்படுகின்றன. அதே நேரத்தில், அமெரிக்காவில் ஒரு பாசிச சர்வாதிகாரம் பூமிக் கிரகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனையும் அச்சுறுத்துவதால் உலகளாவிய ஒற்றுமை அவசியமாகும்.
மத்திய கூட்டாட்சி தொழிலாளர்கள் மீதான தாக்குதலை எதிர்ப்பதற்கான நடவடிக்கை குழுக்களை உருவாக்குவது, சர்வாதிகாரத்திற்கு எதிராக ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதுடன் இணைக்கப்பட வேண்டும். இதில், புலம்பெயர்ந்தோரைப் பாதுகாக்க அக்கம் பக்கமுள்ள மற்றும் பணியிடக் குழுக்களும் அடங்கும். ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்குப் பின்னால் நிற்கும் தன்னலக்குழுவின் செல்வம் பறிமுதல் செய்யப்பட வேண்டும். மேலும், மில்லியன் கணக்கானோருக்கு அவசியமான பொது சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் முக்கிய சமூகத் திட்டங்களை பெருமளவில் மேம்படுத்த அமெரிக்காவின் போர் இயந்திரம் ஒழிக்கப்பட வேண்டும்.
பெருநிறுவன தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனத்திற்காக உலகெங்கிலும் போராடும் நடவடிக்கை குழுக்களை உள்ளடக்கிய சர்வதேச தொழிலாளர் குழுக்களின் சாமானிய தொழிலாளர் கூட்டணி, அமெரிக்காவில் சர்வாதிகார அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஒரு பரந்த எதிர் தாக்குதலுக்கான உலகளாவிய நரம்பு மையமாக செயல்பட முடியும்.