இலங்கை IYSSE அமைப்பிடமிருந்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

தோழர்களே, தோழிகளே,

2025 ஆம் ஆண்டு, உலகம் முழுவதும் வாழும் நீங்கள் உட்பட பில்லியன் கணக்கான இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் தீர்க்கமான ஆண்டாக இருக்கும் என்பதை முதலில் உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம்.

உலக பொருளாதார நெருக்கடி மேலும் மேலும் ஆழமடைந்து வரும் நிலையில், இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம் உட்பட உலகம் முழுவதிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள், உங்களதும் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களினதும் இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதாரம் போன்ற சமூக உரிமைகள், பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் உரிமைகள் உட்பட ஜனநாயக உரிமைகளுக்கு பெரும் தாக்குதல்களை நடத்தும்.

இந்த ஆண்டு தொடங்கியவுடன், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இதை நாங்கள் அனுபவித்தோம். அங்கு அரசியல் விஞ்ஞான மாணவர் சங்கத்தின் ஆதரவுடன், 'சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை தோற்கடிப்பது எப்படி?' என்ற தலைப்பில், ஜனவரி 03 அன்று சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஒரு பொது கூட்டம் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் அன்று காலையில் தடை செய்யப்பட்டது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஐ.வை.எஸ்.எஸ்.இ. விரிவுரை மீதான தடைக்கு எதிராக 21 ஜனவரி 2025 அன்று சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் நடத்திய மறியல் போராட்டம்.

பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தர் ரஞ்சித் பல்லேகம, அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவரிடம், 'அரசாங்கக் கொள்கைகளுக்கு சவால் விடுவதாகத் தோன்றாத வகையில் கூட்டத்தின் தலைப்பைத் திருத்துமாறும், இல்லையெனில், மேற்கண்ட கூட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்' என்றும் தெரிவித்தார்.

பேச்சு சுதந்திரத்தின் மீதான இந்தத் தாக்குதலுக்கு மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழிலாளர்களிடமிருந்து எதிர்ப்பு எழுந்த நிலையில், பதில் துணைவேந்தரின் கடிதத்தின் உள்ளடக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட உள்ளடக்கத்துடன் அறிக்கை ஒன்றை துணைவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் ஜனவரி 10 அன்று வெளியிட்டார். அந்த அறிக்கையின் படி, அனுமதி பெறுவதற்கான நடைமுறை பின்பற்றப்படாததாலேயே கூட்டம் தடை செய்யப்பட்டது.

உங்களுக்குத் தெரிந்த வகையில், அரசியல் விஞ்ஞான மாணவர் சங்கத்தின் அனுசரணையின் கீழ், ஐ.வை.எஸ்.எஸ்.இ. கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு தலைப்புகளின் கீழ் 5 கூட்டங்களை நடத்தியுள்ள போதும், அத்தகைய நிர்வாக நடைமுறைகள் எதுவும் மீறப்பட்டிருக்கவில்லை. அப்படியானால் இந்தக் கூட்டத்திற்கு எதிராக மட்டும் அந்த நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதாக கூறுவது ஏன்?

கூட்டத்தின் தலைப்பு, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் உறுதியாக உள்ள ஜே.வி.பி./தே.ம.ச. 'அரசாங்கத்தின் கொள்கைகளை சவால் செய்கிறது' என்பதால், இந்தத் தடையானது அரசாங்கத்தின் தலையீட்டால் எடுக்கப்பட்ட முடிவு என்பது தெளிவாகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்க்கும் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில், இந்த சிக்கனத் தாக்குதல்களைத் தோற்கடிக்க ஐ.வை.எஸ்.எஸ்.இ. முன்மொழிந்த சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கு ஆதரவு பெருகும் என பல்கலைக்கழக அதிகாரிகளும் அரசாங்கமும் கவலை கொண்டுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்களாகிய நீங்கள், ஏற்கனவே தங்குமிடங்கள், விரிவுரை மண்டபங்கள் மற்றும் விரிவுரையாளர்களின் பற்றாக்குறையை எதிர்கொள்கிறீர்கள். அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட அற்பமான மஹாபொல புலமைப்பரிசில் தொகை போதுமானதாக இல்லை. பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்கனவே தாம் எதிர்கொள்ளும் நிலைமைகளுக்கும் ஜனநாயக உரிமைகள் ஒடுக்கப்படுவதற்கும் எதிராகப் போராடி வருகின்றனர்.

ஐ.வை.எஸ்.எஸ்.இ. கூட்டம் நடைபெறுவதற்கு முந்தைய நாள், பல்கலைக்கழகத்தில் சிசிடிவி கமராக்கள் பொருத்தப்பட்டதற்கும், மாலை 6.30 மணிக்குப் பிறகு வளாகத்திற்குள் இருக்க தடை விதிக்கப்பட்டதற்கும், மாணவர் செயற்பாட்டாளர்கள் வகுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கும் ஏனைய தாக்குதல்களுக்கும் எதிராக மாணவர்கள் போராட்டங்கள் நடத்தினர். அதைத் தொடர்ந்து, கல்வி தனியார்மயமாக்கலுக்கு எதிராக பேராதனையிலும் இன்னும் பல பல்கலைக்கழகங்களிலும் மாணவர் போராட்டங்கள் வெடித்தன.

இந்தச் சூழ்நிலையில், ஜனவரி 15 அன்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அனைத்து மாணவர் சங்க நடவடிக்கைகளையும் தடை செய்ய நடவடிக்கை எடுத்தார். இந்த தடை பின்னர் நீக்கப்பட்டாலும், எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை மற்றும் கூட்டங்களை நடத்தும் உரிமை உட்பட உங்கள் ஜனநாயக உரிமைகள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கமும் பல்கலைக்கழக நிர்வாகமும் தயாராக இருப்பதை இது நிரூபித்தது.

அரசியல் விஞ்ஞான மாணவர் சங்கம், ஐ.வை.எஸ்.எஸ்.இ. கூட்டத்திற்கு அனுமதி பெறும் போது, பிரதான பாதுகாப்பு அதிகாரி, ஒழுக்க கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் பெயர் குறிப்பிடப்படாத ஏனைய அதிகாரிகள் ஊடாக, துணை வேந்தரின் அனுமதி பெறும் வரையான நடைமுறையை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. இவை, மாணவர் சங்கங்கள் இதுவரை பொதுவாக பின்பற்றாத நடைமுறை ஆகும். இந்த வகையான நடைமுறைகளை பின்பற்ற அனைத்து மாணவர் சங்கங்களும் இனிமேல் கட்டாயப்படுத்தப்படும்.

'அரசாங்கத்திற்கு சவால் விடுக்கின்ற' அல்லது அதிகாரிகள் விரும்பாத கோஷங்கள் அல்லது தலைப்புகளில் விரிவுரைகள் அல்லது கூட்டங்களை நடத்த முடியாது. இது உண்மையில் பல்கலைக்கழகங்களில் பல்வேறு தலைப்புகளில் கூட்டங்கள், விவாதங்கள், கருத்தரங்குகள் போன்ற பல்வேறு முறைகள் மூலம் உங்கள் அறிவைக் கூர்மைப்படுத்திக் கொள்ள உங்களுக்கு உள்ள உரிமை, பேச்சு சுதந்திரம், கருத்து வெளியிடும் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுவதற்கான உரிமை உட்பட ஜனநாயக உரிமைகளை மிதித்து நசுக்குவதாக இல்லையா?

உலகம் முழுவதும் முதலாளித்துவ அரசுகள் இதுபோன்ற தாக்குதல்களைத் கட்டவிழ்த்து விடுகின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பில்லியனர்களின் தேவைகளுக்கு ஏற்ப தொழிலாளர் வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை அழித்து, பாசிச ஆட்சியை மேம்படுத்தி வருகிறார். 30 மில்லியன் குடியேற்றத் தொழிலாளர்களை வெளியேற்ற டிரம்ப் எடுத்த முடிவுக்கு எதிராக, இப்போது அமெரிக்கா முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் உருவாகியுள்ளன. கல்விக்காக ஒதுக்கப்பட்ட 80 பில்லியன் டொலர்களை அரசாங்கம் திரும்ப சுருட்டிக்கொண்டுள்ளது. ட்ரம்ப், மேலும் கல்வி துறையை கலைக்க தயாராகி வருகிறார் என்று வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. ட்ரம்ப், பல நாடுகளிலிருந்து வரும் இறக்குமதிகளுக்கு பெரும் வரிகளை விதித்து, உலக பொருளாதாரத்திற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி, மூன்றாம் உலகப் போரை நோக்கிய ஏகாதிபத்திய போர் முனைவைத் துரிதப்படுத்தியுள்ளார்.

தோழர்களே, தோழிகளே! உலகம் முழுவதும் வளர்ந்து வரும் இந்த நெருக்கடியின் முதிர்ந்த வெளிப்பாட்டை இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் அனுபவித்துள்ளீர்கள். இலங்கையின் பாரம்பரிய முதலாளித்துவ கட்சிகளுக்கு எதிரான வெகுஜன வெறுப்பை பயன்படுத்தி அதிகாரத்திற்கு வந்துள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கின் அரசாங்கம், தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளை நசுக்கி, விக்கிரமசிங்க அரசாங்கம் தொடங்கிய திட்டங்களை முன்னெடுத்துச் சென்று, ஏகாதிபத்திய வங்கியாளர்கள் மற்றும் பெரும் வணிகர்களின் இலாபப் பொதியை நிரப்புவதற்காக சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்துள்ள கட்டளைகளை அப்படியே செயல்படுத்தி வருகிறது.

நூற்றுக்கணக்கான அரச நிறுவனங்கள் தனியார்மயமாக்குதல், அரச துறையில் இலட்சக் கணக்கான தொழில்களை குறைத்தல், வட் உட்பட தண்டனை முறையிலான வரிகளை உயர்த்துதல் மற்றும் ஏற்கனவே மோசமடைந்துள்ள கல்வி மற்றும் சுகாதார சேவைகளை மேலும் வெட்டிக் குறைப்பதும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் அடங்கும்.

ஜே.வி.பி./தே.ம.ச., உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெரும் வணிகர்கள் மற்றும் அமெரிக்கத் தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகளின் நம்பிக்கையைப் பெற்றுள்ள இலங்கையின் முதலாளித்துவ ஸ்தாபனத்தின் ஒரு கட்சியாக மாறியுள்ளது என்பதையும், அதிகாரத்திற்கு வந்தால், விக்ரமசிங்க அரசாங்கத்தை விட மோசமான முறையில் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன வெட்டுக்கைள முன்னெடுத்துச் செல்வதற்கு எதேச்சதிகார ஆட்சியை நோக்கி நகரும் என்பதையும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. மற்றும் அதற்கு தலைமை தாங்கும் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மட்டுமே முன்கூட்டியே சுட்டிக்காட்டியுள்ளன.

தோழர்களே, தோழிகளே!

முதலாளித்துவ தாக்குதல்களை தோற்கடிக்கவும், பல்கலைக்கழகங்களில் கலாச்சார மற்றும் புத்திஜீவி வாழ்வை மீண்டும் உயிர்ப்பிக்கவும், கடந்த கால ஜனநாயக மரபுகளை பல்கலைக்கழகங்களில் மீண்டும் உயிர்ப்பிப்பது அவசியம் ஆகும். இலங்கையின் பல்கலைக்கழக முறையின் ஆரம்ப காலத்தில், மாணவர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையே, தங்களின் அரசியல் கருத்துகள் குறித்து சுதந்திரமாக விவாதிக்கும், கலந்துரையாடும், மற்றும் இலவச கல்வி உரிமைக்காக போராடும் ஒரு மரபு இருந்தது. ட்ராட்ஸ்கிஸ கட்சியான, இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி (பி.எல்.பி.ஐ.), தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் சர்வதேச சோசலிச முன்நோக்கின் கீழ் நடத்திய போராட்டம், இலவச கல்வி உரிமையை வென்றெடுப்பதற்கான அடிப்படை செயற்பாடுகளை முன்னெடுத்தது.

ஆனால், மாவோவாதம், சே குவேராவாதம் போன்ற மார்க்சிஸ-விரோத தத்துவங்கள் மற்றும் சிங்கள பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஜே.வி.பி. மற்றும் அதன் அங்கமாக 1970களின் பிற்பகுதியில் வேலைகளைத் தொடங்கிய, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (அ.ப.மா.ஒ.), அந்த ஜனநாயக சம்பிரதாயங்களுக்கு முற்றிலும் எதிராக நின்றது. கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக, ஜே.வி.பி. மற்றும் அதில் இருந்து பிரிந்த போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியின் கீழ் செயல்பட்ட, அ.ப.மா.ஒ. செயல்பாட்டாளர்கள், பல்கலைக்கழகங்களில் கட்சி அரசியல் வேண்டாம் என்றும், 'மாணவர் அரசியல்' மட்டுமே இருக்கவேண்டும் என்றும் கூறி தங்களின் முதலாளித்துவ அரசியலை செயல்படுத்துகிறார்கள்.

பல்கலைக்கழகத்தில் ஜனநாயக-விரோதமாக ஒரு கூட்டத்தை தடை செய்து, பின்னர் துணை வேந்தர் மாணவர் சங்கங்களை தடை செய்த போது, இந்த அமைப்புகள் என்ன செய்தன?

ஐ.வை.எஸ்.எஸ்.இ. கூட்டத்தை தடை செய்தமைக்கு, ஜே.வி.பி.யின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் சங்கம் அல்லது அ.ப.மா.ஒ. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் சங்கம் மற்றும் ஏனைய பீடங்களின் மாணவர் சங்கங்களின் தலைவர்கள், துணை வேந்தருடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஏதாவது போராட்டமோ கூட்டமோ நடத்துவதில்லை என்று அவருக்கு வாக்குறுதி கொடுத்தனர்.

அ.ப.மா.ஒ. மற்றும் அதற்கு தலைமை தாங்கும் முன்னிலை சோசலிசக் கட்சியும், ஒட்டுமொத்த இலவச கல்வி வெட்டுக்கு அடிப்படையில் உள்ள, முதலாளித்துவத்தின் அமைப்பு ரீதியான நெருக்கடி குறித்து மாணவர்களின் கவனத்துக்கு கொண்டுவராமல் இருப்பதற்குக் காரணம், அவர்கள் உற்பத்தி சாதனங்களின் தனியார் உரிமை மற்றும் இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ முறைமையின் பாதுகாவலர்களாக இருப்பதாலேயே ஆகும். அவர்கள், முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுத்து கோரிக்கைகளை வெல்லலாம் என்ற போலி நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளனர்.

ஊதியங்களின் உண்மையான மதிப்பு அரிக்கப்படுவதற்கு, தொழில் வெட்டுக்கள் மற்றும் மோசமடைந்து வரும் வேலை நிலைமைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கமும், கல்வி மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்களும் எழுச்சி பெற வேண்டும். இந்தப் போராட்டங்கள் வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் வெடிக்கும்.

இருப்பினும், 2022 இல் இலங்கையில் நடந்த வெகுஜன எழுச்சி உட்பட சர்வதேச அனுபவத்தின் படிப்பினை என்னவென்றால், அத்தகைய போராட்டங்கள் எழுந்தாலும், சரியான முன்னோக்கையும் தலைமைத்துவத்தையும் வழங்கும் ஒரு வெகுஜன புரட்சிகரக் கட்சி இல்லையெனில் அவை வெற்றிபெற முடியாது, என்பதே ஆகும்.

தேசிய அளவில், முதலாளித்துவ முறைமைக்குள் மக்களின் எந்தப் பிரச்சினையும் தீர்க்கப்படாது என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். ஒரு சிலரின் இலாபத்திற்காக அன்றி, மனிதத் தேவைகளின் அடிப்படையில் உற்பத்தி செய்து, விநியோகிக்கும் ஒரு சர்வதேச சோசலிச கட்டமைப்பின் கீழ் மட்டுமே, செயற்கை நுண்ணறிவு உட்பட விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் மனிதகுலம் அடைந்துள்ள தனித்துவமான சாதனைகளைப் பயன்படுத்தி கல்வி, சுகாதாரம் உட்பட சமூக உரிமைகளை உறுதி செய்ய முடியும். அத்துடன் மனிதகுலத்தின் பொருளாதார, சமூக-கலாச்சார வாழ்க்கையை புதிய மட்டத்திற்கு உயர்த்துவதன் மூலம் சமூக சமத்துவத்தை உறுதி செய்ய முடியும்.

இப்போது, ​​இளைஞர்களும் மாணவர்களும் சர்வதேச அளவில் முதலாளித்துவ அமைப்பைத் தூக்கியெறியும் வரலாற்று ஆற்றலைக் கொண்ட, சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் இணைந்து, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். நாம் பின்வரும் கோரிக்கைகளுக்காகப் போராடுமாறு அழைப்புவிடுக்கிறோம்.

  • ஐ.வை.எஸ்.எஸ்.இ. பொதுக் கூட்டத்தின் மீதான தடையை நீக்கு!
  • பேச்சு சுதந்திரத்தில் கை வைக்காதே!
  • வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிராகரி!
  • அனைவருக்கும் கிடைக்கக்கூடிய இலவச கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த, பில்லியன் கணக்கான நிதியை ஒதுக்கீடு செய்!
  • ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. கிளைகளைக் கட்டியெழுப்புவோம்!

அதே சமயம், ஐ.வை.எஸ்.எஸ்.இ. கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்தும், கூட்டத்தை மீண்டும் நடத்த அனுமதிக்கக் கோரியும், பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு எதிர்ப்புக் கடிதங்களை அனுப்பி எங்கள் பிரச்சாரத்தில் இணைந்துகொள்ளுங்கள்.

துணைவேந்தர், பேராதனை பல்கலைக்கழகம், மின்னஞ்சல்: vc@pdn.ac.lk

பிரதி: ஐ.வை.எஸ்.எஸ்.இ. மின்னஞ்சல்: iysseslb@gmail.com

மேலும் படிக்க