முன்னோக்கு

பில்லியனர் ஜெஃப் பெசோஸ் வாஷிங்டன் போஸ்ட்டை ட்ரம்பின் கூட்டாளியாக ஆக்குகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

வாஷிங்டனில் உள்ள அமெரிக்க காங்கிரஸ் கட்டிடமான கேபிடலின் உள்வட்டரங்கில் 60வது ஜனாதிபதி பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக மார்க் ஜுக்கர்பெர்க், ஜெஃப் பெசோஸ், சுந்தர் பிச்சை மற்றும் எலோன் மஸ்க் உள்ளிட்ட விருந்தினர்கள் நிற்கிறார்கள், ஜனவரி 20, 2025 திங்கட்கிழமை [Photo by AP Photo/Julia Demaree Nikhinson, Pool]

2013 இல் வாஷிங்டன் போஸ்டை (Washington Post) விலைக்கு வாங்கிய அமேசான் பில்லியனர் ஜெஃப் பெஸோஸ் (Jeff Bezos), கடந்த புதனன்று பத்திரிகை சுதந்திரம் என்ற முகமூடியைக் கைவிட்டு, அப்பத்திரிகையின் தலையங்கப் பக்கங்கள் ட்ரம்ப் நிர்வாகத்தின் நிகழ்ச்சி நிரலுக்கும் மற்றும் பெஸோஸ் ஒரு முன்னணி பிரதிநிதியாக உள்ள முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களின் நலன்களுக்கும் ஏற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் கருத்து ஆசிரியர் டேவிட் ஷிப்லி (David Shipley) இந்த உத்தரவைப் பின்பற்றாமல் ராஜினாமா செய்த பின்னர், எலோன் மஸ்க் அல்லது டொனால்ட் ட்ரம்பிற்காக வரைவு செய்யப்பட்டிருக்கக்கூடிய ஒரு மின்னஞ்சலை, பெசோஸ் வாஷிங்டன் போஸ்ட்டின் அனைத்து ஊழியர்களுக்கும் அனுப்பினார். இது ட்டுவிட்டர் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது.

“தனிநபர் சுதந்திரங்கள் மற்றும் சுதந்திர சந்தைகள் ஆகிய இரண்டு தூண்களுக்கு ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் நாங்கள் ஒவ்வொரு நாளும் எழுதப் போகிறோம்,” என்று அவர் எழுதினார். “நிச்சயமாக நாங்கள் மற்ற தலைப்புகளையும் உள்ளடக்குவோம், ஆனால் அந்தத் தூண்களுக்கு எதிரான கண்ணோட்டங்கள் மற்றவர்களால் வெளியிடப்பட விடப்படும்.

“நான் அமெரிக்காவை சேர்ந்த, அமெரிக்காவுக்கானவன், அவ்வாறு இருப்பதில் பெருமைப்படுகிறேன்,” என்று பெஸோஸ் கூறினார். “எங்கள் நாடு வழக்கமாக இருப்பதால் இங்கு வரவில்லை. அமெரிக்காவின் வெற்றியின் பெரும் பகுதி பொருளாதாரத் துறையிலும் மற்ற எல்லா இடங்களிலும் சுதந்திரமாக இருந்துள்ளது. சுதந்திரம் நெறிமுறை சார்ந்தது (இது வற்புறுத்தலைக் குறைக்கிறது) மற்றும் நடைமுறைக்குரியது; இது படைப்பாற்றல், கண்டுபிடிப்பு மற்றும் செழிப்பை ஊக்குவிக்கிறது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்காவில், ஜனநாயக அரசாங்க வடிவங்களில் எஞ்சியிருப்பவற்றை ட்ரம்ப் திட்டமிட்டு அகற்றி வருகின்ற நிலையில், பெஸோஸின் இந்த உத்தரவு வருகிறது. இரட்டை பேச்சில் இருந்து மொழிபெயர்க்கையில், “தனிநபர் சுதந்திரங்கள் மற்றும் சுதந்திர சந்தைகளை” ஊக்குவிப்பதற்கான பெஸோஸின் சூளுரையின் அர்த்தம், அமெரிக்க மக்களின் அரசியல் சுதந்திரங்களை அழிப்பதற்கான ட்ரம்பின் முயற்சிகளை போஸ்ட் ஆதரிக்கும் என்பதும், ஏகபோக செல்வந்த தட்டுக்களின் ஒரு குழு பொருளாதார வாழ்வின் மீது மேலாதிக்கம் செலுத்துவதை வெட்கமின்றி ஆதரிக்கும் என்பதும் அர்த்தப்படுத்துகிறது.

சமூக திட்டங்களை வெட்டுவதற்கும் நூறாயிரக் கணக்கான கூட்டாட்சி அரசுத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதற்கும் ட்ரம்புடன் இணைந்து செயல்பட்டு வரும் எலோன் மஸ்க், பெஸோஸின் அறிக்கையை “சபாஷ்” என்ற ஒற்றை வார்த்தை ட்வீட் மூலம் வரவேற்றார்.

ஒன்றுக்கு மேற்பட்ட வாஷிங்டன் போஸ்ட்டின் ஊழியர்கள் பகிரங்கமாக குறிப்பிட்டதைப் போல, “சுதந்திரம்” மற்றும் “வற்புறுத்தலுக்கு” எதிரான இந்த புகழ்மாலை, தனது ஊழியர்கள் மீது அவரது கட்டளைகளைத் திணிக்கும் ஒரு பில்லியனர் முதலாளியின் செய்தியின் ஒரு பகுதியாகும்! மேலும், நிருபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பத்தி எழுத்தாளர்கள் அவரது கட்டளைகளக்கு இணங்கத் தவறினால், என்ன எதிர்பார்க்க முடியும் என்பதைக் காட்ட ஷிப்லியுடைய தலைவிதியின் உதாரணமும் இணைக்கப்பட்டிருந்தது. 

உலகெங்கிலும் உள்ள 1.5 மில்லியன் அமேசான் தொழிலாளர்கள், பண்டகசாலைகளிலும் லாரிகளிலும் பெசோஸ் எவ்வாறு “வற்புறுத்தலைக் குறைக்கிறார்” என்பதற்கு சாட்சியமளிக்க முடியும். அங்கு அவர் தனது 250 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான செல்வத்தை தனது மிருகத்தனமான சுரண்டல் மூலம் உறிஞ்சி எடுத்துள்ளார்.

வேலை நேரத்தின் ஒவ்வொரு நொடியும் நிர்வாகத்தால் கண்காணிக்கப்படுகிறது. மேலும் வேலை “விகிதத்தை நிர்ணயிக்க” தவறும் தொழிலாளர்களுக்கு கதவு காட்டப்படுகிறது. பணியிடங்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் இறப்புகள் தவிர்க்க முடியாத விளைவாக ஆக்கப்படுகிறது. தொழிலாளர்கள் தங்களின் “தனிப்பட்ட சுதந்திரங்களை” பயன்படுத்தி தொழிற்சங்கங்களை உருவாக்கவோ அல்லது அதிக ஊதியங்கள் மற்றும் சிறந்த நிலைமைகளைக் கோரவோ செய்யும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக அமேசான் கடுமையாக சண்டையிடுகிறது.

பயங்கரமான சிடுமூஞ்சித்தனம் மற்றும் ஓர்வெல்லியன் இரட்டைப் பேச்சு ஒருபுறம் இருக்க, அமெரிக்கத் தலைநகரின் முக்கிய செய்தித்தாளில் முதலாளித்துவம் பற்றிய மிகவும் வெற்று விமர்சனம் கூட தடை செய்யப்பட்டிருப்பது பெரும் அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இது அரசியல் மற்றும் சமூகச் சீரழிவின் ஒரு நீண்ட நிகழ்ச்சிப்போக்கின் உச்சக்கட்டமாகும்.

வாட்டர்கேட் மோசடியை அம்பலப்படுத்துவதில் போஸ்ட் முன்னிலை வகித்து அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலம் ஆகிவிட்டது. நியூ யோர்க் டைம்ஸ் பென்டகன் ஆவணங்களை வெளியிட்டு வருகிறது. அப்போதும் கூட, இந்த செய்தித்தாள்கள் முதலாளித்துவ நிறுவனங்களாக இருந்தன, பல மில்லியனர்களுக்கு சொந்தமானவையாக இருந்தன. அத்துடன், வெளிநாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் உள்நாட்டில் பெருவணிகங்களையும் பாதுகாக்க பொறுப்பேற்றிருந்தன. வாட்டர்கேட் அம்பலப்படுத்தல் காரணமாக, ரிச்சர்ட் நிக்சன் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த ஒரு வருடத்திற்குப் பிறகு, வாஷிங்டன் போஸ்ட் உரிமையாளர் கேத்தரின் கிரஹாம் பத்திரிகையாளர்களின் வேலைநிறுத்தத்தை முறியடித்து, தொழிலாளர்களை கரும்புள்ளிகளால் மாற்றினார்.

எவ்வாறிருப்பினும், இன்று, ட்ரம்ப் நிர்வாகத்தின் பாசிசப் போக்கிற்கு எதிராக இடம்பெற்றுவரும் முற்றுமுதலான எதிர்ப்புக்கள் ஒருபுறம் இருக்கட்டும், அங்கே ஒரு துளி கூட உண்மையான ஊடக விமர்சனம் கூட இல்லை. இரண்டாவது ட்ரம்ப் நிர்வாகம் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக தேட்டங்களை அழிப்பதற்கான அதன் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கத் தொடங்குகின்ற நிலையில், மற்றும் வெளிநாடுகளில் அதன் ஜனநாயகக் கட்சி முன்னோடிகளால் ஏற்கனவே தொடங்கப்பட்டதை விட இன்னும் அதிக காட்டுமிராண்டித்தனமான இராணுவ சாகசங்களுக்குத் தயாரிப்பு செய்து வருகின்ற நிலையில், பெருநிறுவன ஊடக முதலைகள் ஒட்டுமொத்தமாக ஆளும் வர்க்கத்தின் அரசியல் பயணப் பாதையைப் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிகழ்முறையில் பெஸோஸின் பாத்திரம் குறித்து சுருக்கமாக மதிப்பாய்வு செய்வது மதிப்புக்குரியது. 2013 இல் போஸ்டை விலைக்கு வாங்கி, அதன் தலையங்கப் பணியில் தலையிட மாட்டேன் என்று பெஸோஸ் உறுதியளித்த பிறகு, பில்லியனர் முதல் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு ஓரளவு விமர்சன ரீதியான அணுகுமுறையை அவர் அனுமதித்தார்.

வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் பதவியேற்ற முதல் நான்காண்டுகளில் அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையான 30,000 எட்டிய, அவர் கூறிய பொய்களை போஸ்ட் தொடர்ந்து கணக்கிட்டு வந்தது. ஜனவரி 6, 2021 அன்று ட்ரம்பின் தோல்வியுற்ற ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்குப் பிறகு, இப்பத்திரிகையானது, அவரது பதவி நீக்கத்தையும் பின்னர் அவர் மீது வழக்குத் தொடரலையும் ஆதரித்தது. மேலும், அந்த நாளின் நிகழ்வுகளின் முக்கியமான வீடியோ காப்பகத்தைத் தொகுத்தது.

ட்ரம்ப்பிற்கு எதிரான தி போஸ்ட்டின் எதிர்ப்பு, ஜனநாயகக் கட்சி மற்றும் அரசு எந்திரத்தின் குறிப்பிடத்தக்க பிரிவுகளைப் போலவே, வெளியுறவுக் கொள்கை பிரச்சினைகள் தொடர்பானதாகும். குறிப்பாக, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரில், போஸ்ட் ஒரு முன்னணி வக்கீலாக செயல்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஆண்டு, ட்ரம்ப் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்புமனுவை உறுதிப்படுத்தி, கருத்துக்கணிப்புகளில் முன்னேறியபோது, போஸ்ட்டில் ஒரு தெளிவான மாற்றம் ஏற்பட்டது. பெசோஸ், பிரிட்டனில் ரூபர்ட் முர்டோக்கின் வலதுசாரி ஊடக சாம்ராஜ்யத்தின் மூத்தவரான வில் லூயிஸ் என்ற புதிய வெளியீட்டாளரையும், முர்டோக்கிற்குச் சொந்தமான வால் ஸ்ட்ரீட் ஜேர்னலில் இருந்து செய்தி நடவடிக்கைகளை இயக்க ஒரு புதிய நிர்வாக ஆசிரியரான மாட் முர்ரேயையும் கொண்டு வந்தார்.

கடந்த ஜூலையில் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சிக்குப் பின்னர் பெஸோஸ் அவருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, தனது அனுதாபத்தை வழங்கியதோடு எதிர்கால ஆதரவையும் பரிந்துரைத்தார். தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு, ட்ரம்பின் ஜனநாயகக்கட்சி போட்டியாளரான துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் ஒப்புதலை போஸ்ட் வெளியிடுவதைத் தடுக்க கோடீஸ்வரர் பெஸோஸ் தலையீடு செய்தார்.

ஐந்து வாரங்களுக்கு முன்பு பதவியேற்பு விழாவில் ட்ரம்பிற்குப் பின்னால் தோன்றி, கொண்டாட்டத்திற்கு தலா 1 மில்லியன் டாலர் நன்கொடை அளித்த ஒரு சில தன்னலக்குழுக்களுடன் சேர்ந்து கொண்டதன் மூலம் பெசோஸ் தனது மறுஒழுங்கமைப்பை முடித்துக் கொண்டார்.

இந்த உள்ளடக்கத்தில், இணையத்தில் பலதரப்பட்ட கருத்துக்களின் பெருக்கத்தை மேற்கோளிட்டு பெஸோஸ் அவரது தலையங்க உத்தரவை நியாயப்படுத்தினார் என்பது கவனிக்கத்தக்கது. ட்ரம்பிற்குப் பின்னால் பெசோஸுடன் சேர்ந்து மூன்று நபர்கள் (ட்விட்டரின் எலோன் மஸ்க், பேஸ்புக்கின் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் கூகிளின் சுந்தர் பிச்சை) இருந்தனர். இவர்கள் அனைவரும், கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கும் இணைய பேச்சுகளைத் தணிக்கை செய்வதற்கும் ஒரு முறையான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெஸோஸின் நடவடிக்கைகளில் கொடூரமான சுயநலனின் ஒரு கூறுபாடு உள்ளது. புதிய நிர்வாகத்தால் எதிர்மறையாகப் பாதிக்கப்படக்கூடிய ஏராளமான அரசாங்க ஒப்பந்தங்களை அவர் கொண்டுள்ளார், இருப்பினும் அவர் மஸ்க்கை விட அரசாங்க உதவிகளை குறைவாகவே சார்ந்துள்ளார். ஆனால், இதை விட மிக முக்கியமானது, அமேசானின் பில்லியனர் சர்வாதிகாரி மற்றும் வெள்ளை மாளிகையில் பில்லியனர் சர்வாதிகாரியாக ஆகப்போகும் இரண்டு செல்வந்த தட்டுக்களுக்கு இடையிலான அரசியல் உடன்பாடு ஆகும்.

“சுதந்திர சந்தைகளின்” பாதுகாப்பிற்கு பத்திரிகையை முழுவதுமாக அடிபணியச் செய்வேன் என்ற கொள்கையில் பெசோஸ் வலியுறுத்துவது, இலாப அமைப்புமுறைக்கு எதிராக கீழிருந்து ஒரு கட்டுப்படுத்த முடியாத இயக்கம் உருவாகி வருவதாக பில்லியனர் தன்னலக்குழுக்களின் தரப்பில் அதிகரித்து வரும் அச்சத்தை வெளிப்படுத்துகிறது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்ப பெருநிறுவன ஊடகங்களை தகவமைத்துக் கொள்ளும் செயல்முறையின் மிகவும் ஆபாசமான வெளிப்பாடே பெசோஸ் ஆவார். தொலைக்காட்சி வலையமைப்புகளிலும், செய்தித்தாள்களிலும், புதிய நிர்வாகத்தின் ஊடக அறிக்கையை முடிந்தவரை முகஸ்துதி மற்றும் விமர்சனமற்றதாக மாற்றுவதற்கு உயர்மட்டத்தில் உள்ள முதலாளிகளிடமிருந்தும் வெள்ளை மாளிகையிலிருந்தும் ஒருங்கிணைந்த அழுத்தம் வந்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் தேசிய ஒளிபரப்பு நிறுவனத்தில் (MSNBC) தாராளவாத பண்டிதர்கள் மற்றும் விவாத நிகழ்ச்சி தொகுப்பாளர்களை களையெடுப்பது ஏற்கனவே நடந்து வருகிறது. கேபிள் சேனல் காம்காஸ்டின் துணை நிறுவனம், அதன் தாய் நிறுவனமான NBCUniversal ஆல் விற்கப்படுகிறது. இந்த வாரம் அதன் புதிய தலைமை நிர்வாக அதிகாரி ரெபேக்கா குட்லர் நீண்டகால மாலை தொகுப்பாளர் ஜாய் ரீடை நீக்கினார். அதே நேரத்தில், நிகழ்ச்சி தொகுப்பாளர்களான அலெக்ஸ் வாக்னர், ஜொனாதன் கேப்ஹார்ட், அய்மன் மொஹைல்டின் மற்றும் கேட்டி பாங் ஆகியோரை அவர் பதவியிறக்கம் செய்தார்.

அசோசியேட்டட் பிரஸ் (AP) மற்றும் வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்கம் (WHCA) போன்ற முக்கிய பத்திரிகை நிறுவனங்களை வெள்ளை மாளிகை மிரட்டி வருகிறது. மெக்சிகோ வளைகுடாவின் பெயரை ட்ரம்ப் அதன் பாணி வழிகாட்டியில் மாற்றியதை ஏற்க மறுத்ததற்காக அசோசியேட்டட் பிரஸ் இலக்கில் வைக்கப்பட்டுள்ளது. அதன் செய்தியாளர்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள் மற்றும் ஜனாதிபதி பயணம் செய்யும் விமானமான ஏர் ஃபோர்ஸ் ஒன் பயணங்களில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளனர். 111 ஆண்டுகள் பழமையான வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்கம், ஜனாதிபதியை உள்ளடக்கிய “தினசரி நிருபர்கள் குழுவை” தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை இழந்துவிட்டது. ட்ரம்ப் இப்போது அதிதீவிர வலதுசாரிகளின் பிரசுரங்கள் மற்றும் பாசிச பாட்காஸ்டர்களுக்கு ஆதரவாக அவர்களை நேரடியாக தேர்ந்தெடுப்பார்.

வலதை நோக்கிய தீவிர திருப்பம் குறித்து செய்தியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற செய்தி ஊடகத் தொழிலாளர்கள் மத்தியில் புரிந்து கொள்ளத்தக்க சீற்றம் உள்ளது. போஸ்டின் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மார்ட்டி பரோன் தி டெய்லி பீஸ்ட் பத்திரிகைக்கு கூறுகையில், போஸ்ட் ஊழியர்களுக்கு பெசோஸ் அனுப்பிய குறிப்பில் அவர் “வருத்தமும் வெறுப்பும்” அடைந்ததாக தெரிவித்தார். டசின் கணக்கான போஸ்ட் தொழிலாளர்கள் சமூக ஊடகங்களில் விமர்சனரீதியான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அதில், சிலர் புதிய தலையங்கக் கொள்கையை செய்தி செயல்பாடுகளுக்கு நேரடியாகப் பயன்படுத்தினால் ராஜினாமா செய்வதாக அச்சுறுத்தினர்.

ஆனால், எலோன் மஸ்க் மற்றும் பெஸோஸ் போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய பில்லியனர்கள் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் விட அதிக செல்வவளத்தைக் குவித்துக் கொண்டுள்ள ஒரு சமூகத்திற்குள், ஒரு சுயாதீனமான மற்றும் சுதந்திரமான ஊடகம் —நான்காம் தூண் என்றழைக்கப்படுவது— இருப்பது உட்பட, அங்கே ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியாது.

ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு என்பது ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக அணிதிரட்டுவதிலேயே தங்கியுள்ளது. இந்தப் போராட்டம் புரட்சிகர சோசலிச பத்திரிகைகளான உலக சோசலிச வலைத் தளத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இது, அமெரிக்காவிலும் உலகளவிலும் அதிகரித்த வாசகர்களைப் பெற்று வருகிறது.