மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆறு வாரங்களில், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. ட்ரம்ப் ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்கவும், தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தவும், புலம்பெயர்ந்தோரைப் பாரியளவில் நாடு கடத்தவும் நகர்ந்து வருகிறார். கூட்டாட்சி அரசுத் தொழிலாளர்கள் மீதான நேரடித் தாக்குதல் அதிகரித்து வரும் சீற்றத்தை உருவாக்குகிறது. மேலும், மருத்துவ உதவியை முடக்கும் திட்டங்கள் உட்பட சமூகநலத் திட்டங்கள் மீதான பரந்த தாக்குதல்கள் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும்.
இந்த ஆழமடைந்து வரும் நெருக்கடி முழுவதும், ஜனநாயகக் கட்சியின் இயலாமை மற்றும் உடந்தையாக இருப்பதன் ஒரு சித்திரமாக இருந்து வருகிறது. அவர்கள் ட்ரம்பின் தாக்குதல்களை எந்த எதிர்ப்பும் இன்றி ஏற்றுக்கொண்டு, பெரும்பாலான சைகைகள் மற்றும் வெற்று அறிக்கைகளையே வழங்கி வருகின்றனர். ட்ரம்பின் பிற்போக்குத்தனமான மற்றும் பாசிச அமைச்சரவை காங்கிரஸால் சிரமமின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது. பைடென் ஒரு சுமூகமான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதாக உறுதியளித்த பிறகு, ஜனநாயகக் கட்சியினர் புலம்பெயர்ந்தோர்-விரோத லேகன் ரிலே சட்டத்தை நிறைவேற்றுவதற்கு வாக்களிப்பது உட்பட ட்ரம்பின் கொள்கைகளை செயல்படுத்தியுள்ளனர்.
இப்போது, திடீரென்று, ஜனநாயகக் கட்சியினர் போர் குறித்த பிரச்சினையில் தங்கள் குரலைக் கண்டறிந்துள்ளனர். உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி உடனான ட்ரம்பின் சமீபத்திய சந்திப்பைத் தொடர்ந்து, ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் ஒரு கூட்டாளியாக கண்டனம் செய்தும், அமெரிக்க “தேசிய பாதுகாப்பை” குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டி, ஒரு முழுமையான பிரச்சாரத்தை அவர் மீது தொடங்கியுள்ளனர்.
இந்த மாற்றத்திற்குப் பின்னால் உள்ள அரசியல் இயக்கவியல் தெளிவாக உள்ளது: ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக இரண்டு அடிப்படையில் வேறுபட்ட எதிர்ப்பு வடிவங்கள் உள்ளன. சமூக நலத் திட்டங்கள் மீதான அவரது தாக்குதல்கள், ஜனநாயக உரிமைகளை அவர் அழித்தல், புலம்பெயர்ந்தோரை துன்புறுத்துதல் மற்றும் காஸா இனப்படுகொலைக்கு அவர் அளித்துவரும் ஆதரவு ஆகியவற்றிற்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. மேலும், ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கை மாற்றங்களை, குறிப்பாக உக்ரேன் மீதான கொள்கை மாற்றங்களை எதிர்க்கும் ஆளும் வர்க்கத்தின் குறிப்பிடத்தக்க பிரிவுகளிடமிருந்தும் அவருக்கு எதிர்ப்பு உள்ளது.
ஜனநாயகக் கட்சி ஆளும் வர்க்கத்தின் சில பிரிவுகளின் எதிர்ப்பிற்காக குரல் கொடுக்கிறது. அது ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினரின் பிற்போக்குத்தனமான சமூகக் கொள்கைகளை ஆதரிக்கிறது. அதன் நோக்கம், மக்களின் கோபத்தை அதன் சொந்த பிற்போக்குத்தனமான நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவாக மாற்றுவதாகும் - இது ட்ரம்பிற்கு எதிரான எதிர்ப்பை போருக்கு ஆதரவளிப்பதாக மாற்றுகிறது. இது, முதல் ட்ரம்ப் நிர்வாகத்தின் போது ஜனநாயகக் கட்சியினர் பின்பற்றிய மூலோபாயத்தின் மிகவும் முன்னேறிய கட்டத்தின் தொடர்ச்சியாகும்.
வருகின்ற செவ்வாய்க்கிழமை மாலையில் காங்கிரசில் ட்ரம்ப் ஆற்றவிருக்கும் உரைக்கு பதிலளிக்கும் ஜனநாயகக் கட்சியினரின் திட்டத்தில் இந்த மூலோபாயம் தெளிவாகத் தெரிகிறது. சிறப்பு பேச்சாளராக மிச்சிகன் செனட்டர் எலிசா ஸ்லாட்கின் இருப்பார். இவர் பென்டகனில் சேர்வதற்கு முன்னர் ஈராக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிட்ட ஒரு முன்னாள் CIAயின் உளவாளியாக இருந்தார். ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு முன்னணி வக்கீலாக இருக்கும் ஸ்லாட்கின், உக்ரேன் தொடர்பாக ட்ரம்பை கண்டித்து, “ரொனால்ட் ரீகன் தனது கல்லறையில் புரண்டு படுக்க வேண்டும்” என்று அறிவித்தார்.
இந்த அடிப்படை நிலைப்பாட்டை ஒவ்வொரு ஜனநாயகக் கட்சிக்காரரும் திரும்பத் திரும்பக் கூறியுள்ளனர். ஆக்ஸியோஸ் வலைத் தளத்தின் தகவலின்படி, செவ்வாயன்று செனட் உறுதிப்படுத்தல் விசாரணைகளில் ஜனநாயகக் கட்சியினர் “ட்ரம்ப்பின் வேட்பாளர்கள் மீது உக்ரேன் பதுங்கியிருந்து தாக்குதலை” மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. “நேட்டோவுடனான உறவு, உக்ரேனுடனான உறவு, சர்வாதிகாரி புட்டினுடன் ஜனாதிபதிக்கு உள்ள உறவு ... இவை அனைத்தும் பெரிய பிரச்சினைகள்” என்று ஜனநாயகக் கட்சியின் ஓரிகான் செனட்டர் ஜெஃப் மேர்க்லி விசாரணைகளுக்கு முன்னதாக அறிவித்தார்.
அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் மற்றும் பிற போலி இடது அமைப்புகளால் ஆதரிக்கப்படும் வெர்மான்ட் செனட்டர் பேர்னி சாண்டர்ஸ், போர் ஆதரவு பிரச்சாரத்தில் குறிப்பாக ஒரு நயவஞ்சகமான பாத்திரம் வகித்து வருகிறார். ஜனநாயகக் கட்சியின் இராணுவவாத நிகழ்ச்சி நிரலுக்கு ஒரு ஜனரஞ்சக பூச்சைக் கொடுக்கும் நோக்கத்துடன், செவ்வாய்க்கிழமை இரவு ட்ரம்பின் கருத்துக்களுக்கு அவர் நேரடியாக பதிலளிக்கத் திட்டமிட்டுள்ளார். உக்ரேன் போரை விரிவாக்கக் கோரும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவுக்குப் பின்னால், ட்ரம்பிற்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பை கட்டி வைப்பதே அவரது பாத்திரமாகும்.
Meet the Press ஞாயிறு நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த சாண்டர்ஸ், ரஷ்யாவிற்கு எதிரான போரைத் தொடர்வதன் மூலம் “உலகின் ஜனநாயகத் தலைவராக நாம் மேற்கொண்டுவரும் 250 ஆண்டுகால பாரம்பரியத்தைப் பாதுகாப்பதே எமது பணி” என்று அறிவித்தார்.
இது, பூமியின் மிகவும் பிற்போக்குத்தனமான சக்தியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இன்றைய பாத்திரத்தை மூடிமறைக்க, பிரிட்டிஷ் முடியாட்சியைத் தோற்கடித்த அமெரிக்கப் புரட்சி மற்றும் அடிமை முறையைத் தூக்கிவீசிய அமெரிக்க உள்நாட்டு யுத்தம் ஆகியவற்றின் மகத்தான ஜனநாயக பாரம்பரியங்களைப் பயன்படுத்துவதற்கான ஒரு அருவருப்பான முயற்சியாகும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மேலாதிக்க முதலாளித்துவ சக்தியாக உருவெடுத்ததிலிருந்து அமெரிக்கா, சர்வாதிகாரிகளை ஆதரித்தும், அரசாங்கங்களைத் தூக்கியெறிந்தும், ஒரு ஒட்டுண்ணி நிதிய தன்னலக்குழுக்களின் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக போர்களை நடத்தி வருகிறது. அமெரிக்காவில் உள்ள பில்லியனர்களை வாய்வீச்சுடன் கண்டிக்கும் சாண்டர்ஸ், ஜனநாயகக் கட்சியையும் அது மேற்கொண்டுவந்த வெளிநாடுகள் மீதான போர்களையும் எந்தவித தயக்கமும் இல்லாமல் ஆதரித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சாண்டர்ஸ், “டொனால்ட் ட்ரம்பின் புதிய சிறந்த நண்பரான விளாடிமிர் புட்டினை சந்தியுங்கள்” என்ற தலைப்பின் கீழ் திங்களன்று மூன்று பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மெக்கார்த்தியிச தொனியைக் கொண்டிருக்கின்ற இந்த அறிக்கையானது, புட்டினை முன்னாள் சோவியத் உளவாளி என்றும், அவர் 16 ஆண்டுகள் கேஜிபியில் கழித்தவர் என்றும், பின்னர் ரஷ்ய தன்னலக்குழுவின் பிரதிநிதியாக அவரது சாதனையை கோடிட்டுக் காட்டி கண்டனம் செய்கிறது.
ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து எழுந்த ரஷ்ய முதலாளித்துவ வர்க்கத்தின் பிற்போக்குத்தனமான பிரதிநிதி புட்டின் என்பதில் கேள்விக்கு இடமில்லை. ஆனால், உள்நாட்டிலும் ரஷ்யாவின் சுற்றுவட்டத்திலும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அவரது குற்றங்கள், அதே காலகட்டத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் இழைக்கப்பட்ட குற்றங்களுடன் ஒப்பிடுகையில் மிகச் சிறியவையாகும்.
சாண்டர்ஸ் தனது முழு அரசியல் வாழ்க்கையையும் இத்தகைய குற்றங்களை மன்னிப்பதிலும், அவற்றை ஆதரிப்பதிலும் செலவிட்டுள்ளார். அவர் ஜனநாயகக் கட்சி நிர்வாகங்களால் (முன்னாள் யூகோஸ்லாவியா, லிபியா மற்றும் உக்ரேனில்) தொடங்கப்பட்ட போர்களை ஆதரித்தார் அல்லது குடியரசுக் கட்சி நிர்வாகங்களால் தொடங்கப்பட்டு ஜனநாயகக் கட்சியினரால் (ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில்) தொடரப்பட்ட போர்களுக்கு நிதியளிக்க சாண்டர்ஸ் வாக்களித்தார்.
ஜனநாயகக் கட்சியின் முதன்மையான அக்கறை, ரஷ்யாவிற்கு எதிரான போரை தீவிரப்படுத்துவதற்கான கோரிக்கைகளுக்கு அடிபணியச் செய்வதன் மூலம், ட்ரம்பிற்கு எதிரான இடதுசாரி, சோசலிச எதிர்ப்பின் வளர்ச்சியைத் தடுப்பதாகும். ஜனநாயகக் கட்சியினர் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால், பைடெனின் பிற்போக்குத்தனமான கொள்கைகளை - வெளிநாட்டில் போர், உள்நாட்டில் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் - தொடர்ந்தும் ஆழப்படுத்தியிருப்பார்கள். அதேவேளையில், தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு இயக்கத்தையும் ஒடுக்குவதற்கான வேலைகளையும் செய்திருப்பார்கள்.
ஜனநாயகக் கட்சியுடனான எந்தவொரு கூட்டும், ட்ரம்பின் பாசிச கொள்கைகளுக்கு எதிரான ஒரு உண்மையான இயக்கத்திற்கு அரசியல்ரீதியாக உயிராபத்தானதாகும். ட்ரம்பிற்கு எதிரான எதிர்ப்பை, ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு ஒத்ததாக மாற்றும் சாண்டர்சின் முயற்சி நேரடியாக அவரது கரங்களில் விளையாடுகிறது. இந்தப் போர் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்த பிரிவுகளிடையே ஆழமாக மதிப்பிழந்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் நிதிய தன்னலக்குழுவின் நலன்களுக்கு முழுமையாக உறுதியளித்துள்ள ட்ரம்ப், இந்த எதிர்ப்பை தனது சொந்த பிற்போக்குத்தனமான நோக்கங்களுக்காக சிடுமூஞ்சித்தனமாக சுரண்டிக் கொள்கிறார்.
ட்ரம்ப் நிர்வாகத்திற்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பை, உளவுத்துறை நிறுவனங்கள், பென்டகன் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஆகியவற்றிற்காகப் பேசுகின்ற ஜனநாயகக் கட்சியின் முற்றிலும் பிற்போக்குத்தனமான கொள்கைகளுடன் பிணைக்கக்கூடாது. ரஷ்யாவிற்கு எதிரான போர் உந்துதலை வலுப்படுத்துவதற்கு, ட்ரம்பிற்கு எதிரான எதிர்ப்பைப் பயன்படுத்தும் முயற்சி நிராகரிக்கப்பட வேண்டும். சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தை, இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்துடன் இணைத்து, இறுதியில் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.