இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட வட-மாகாணத்தில் வாழும் விவசாயிகள் நாட்டின் ஏனைய இடங்களில் உள்ள தமது சகாக்களைப் போலவே கால நிலை மாற்றம் காரணமாக ஏற்படும் வெள்ளம் அதே போன்று வறட்சியினாலும் பாதிக்கப்பட்டுகின்றனர்.
பருவகால வயல் விதைப்பு நேரங்களிலும், அதேபோல் அறுவடை காலத்தின் போதும் கிடைக்கும் மேலதிகமான மழைவீழ்ச்சி விவசாயிகளின் விளைச்சலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
அதீத மழைவீழ்ச்சியால் வயல்களில் அதிக நீர் தேங்கியமையால் பயிர்கள் அழுகி, நாகமாகியுள்ளன. சில விவசாயிகள் தமது அறுவடைகளை பிற்போட்டுள்ளனர். வயல் காணிகள் சேற்று நிலமாக மாறியதால் விவசாயிகளால் அறுவடை இயந்திரங்களைப் பயன்படுத்த இயலாத நிலையில், கைகளால் வெட்டி அறுவடை செய்யவேண்டியிருந்தது.
வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களை பயன்படுத்த முடியாததால், விவசாயிகள் அவற்றை வயல்களிலேயே எரித்துவிடுகின்றனர். அதேபோல், அறுவடை செய்யப்பட்ட நெல்லை உலர்த்துவதற்கு சரியான இடங்கள் இல்லாததால், விவசாயிகள் தங்கள் நெல்லை உலர்த்துவதற்கு வீதியோரங்களைப் பயன்படுத்தத் தள்ளப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் வயல் நிலங்களை உழுவுதற்கு, விதைப்பதற்கு, அறுவடை இயந்திரங்களை வாடகைhfhd எடுப்பதற்கு, கிருமி நாசினிகள் மற்றும் உரங்கள் கொள்வனவுக்கும், வேலையாட்களுக்கு கூலி வழங்கவுமாக பாரிய செலவுகளை செய்துள்ளனர். அவர்கள், உள்ளுரில் வட்டிக்கு கடன் கொடுப்பவர்களிடமும் வங்கிகளிடமும் வட்டிக்கு கடன் பெற்றுள்ளனர். அதே வேளை, சிலர் தமது நகைகளை அடகு வைத்தும் பணம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் நான்கு மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் இரு பருவங்களின் போதும் நீர்த் தேக்கங்களின் நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்ய முடியும். ஆனால், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தமது வேளாண்மை நடவடிக்கைகளுக்கு மழை நீரை மாத்திரமே நம்பியிருக்க வேண்டியுள்ளது.
இந்த நீர்த் தேங்கங்களில் நீர் மட்டம் அதிகரிக்கும் போது, வான் கதவுகள் திறக்கப்படுகின்றன. இதன் போது இந்தப் பகுதிகளில் உள்ள நெல் பயிர்களை வெள்ளம் அடித்துச் செல்வது அடிக்கடி நடக்கும் சம்பவமாகும்,
இரணைமடு நீர்த் தேக்கத்தை நம்பியுள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல விவசாயிகள் வான் கதவுகள் திறக்கும் போது இந்த அழிவுகரமான நிலைமைக்கு முகங்கொடுக்கின்றனர். சுமார் 21,985 ஏக்கர் விவசாய நிலங்கள் இந்தத் தேக்கத்தில் தங்கியுள்ளன. பல ஏழை விவசாயிகளின் நிலங்கள் அதன் கழிவு வாய்க்கால் ஊடாக வழிந்தோடும் நீரிலேயே தங்கியுள்ளன.
தமது வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தை நம்பியிருக்கும் விவசாயிகள், வறுமையோடும், கடனோடும் மற்றும் தமது அத்தியாவசிய வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் கூட போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலைமை பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 26 ஆண்டுகால இரத்தக் களரி இனவாதப் போரால் இன்னும் மோசமாக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் குண்டுத் தாக்குதலால் பலர் உயிழந்ததோடு அங்கவீனங்களாகவும் ஆக்கப்பட்டதுடன் அவர்களின் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டும் உள்ளன. பலர் இன்னும் அரை நிரந்தர வீடுகளிலேயே வாழ்கின்றனர்.
தற்போதுள்ள மக்கள் விடுதலை முன்னணி \ தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி.\தே.ம.ச.) அரசாங்கம், வெளிநாட்டுக் கடன்களையும், அதற்கான வட்டியையும் திருப்பிச் செலுத்துதற்கான சுமையை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மீது திணிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்டுள்ள சமூக வெட்டுக்களை தொடர்ச்சியாக அமுல்படுத்துகின்றது. உரங்கள் மற்றும் கிரிமிநாசினிகளின் விலைகள் அதே போன்று இயந்திரங்களின் வாடகைகள் கூர்மையாக அதிகரித்துள்ளன.
விவசாயிகள் தமது நிலைமைகள் பற்றி உலக சோசலிச வலைத் தள நிருபர்களுடன் பேசினர். இவர்களின் கிரமமான பெரியகுளம், யுத்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.
பெரியகுளத்தைச் சேர்ந்த ஐயம்பிள்ளை துரைஐயா, 1972 இல் கிளிநொச்சிக்கு வந்து, காட்டுப் பிரதேசமாக இருந்த நிலத்தை துப்பரவு செய்து குடியேறிதாக கூறினார்.
நாம் ஆரம்ப காலங்களில், இன்று போல் அதிகமான அழிவுளுக்கு முகங்கொடுத்தது இல்லை. (தற்போதைய காலநிலை மாற்றத்தினால்) இரணைமடு குளத்தின் வான் கதவுகள் ஒவ்வொரு முறை திறக்கும் போதும் எமது வயல் நிலங்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாது வீடுகளுக்குள்ளும் நீர் புகுந்துவிடுகின்றது.
“வெள்ளம் பெருக்கெடுக்கும் போது, நாம் அடிக்கடி வீடுகளை விட்டு வெளியேறி பாடசாலைகளில் தஞ்சமடைய வேண்டியுள்ளது. அந்த நேரத்தில், வீதிகள் நீரில் மூழ்கும் போது போக்குவரத்து தடைப்பட்டுவிடும். இதன் காரணமாக இந்த இடத்தில் கால்வாய் அமைக்கவும், குளம் ஒன்றைக் கட்டித் தருமாறும் கோரி அரசாங்கத்திற்கு 15 விவசாயிகள் கையெழுத்திட்டு மனு கொடுத்தோம். ஆனால் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை்.
அவர் ஐந்து ஏக்கர் நிலத்தில் நெல் விதைத்த போதிலும், 14 மூடை நெல் மாத்திரமே அறுவடை செய்ய முடிந்தது. வி்ளைச்சல் போதாமையால், ஐந்து பேர் கொண்ட அவரது குடும்பத்தின் உணவுத் தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் போய்விட்டது. இந்த விதைப்புக்காக 5 இலட்சம் ரூபா கடன் பட்டுள்ள அவர், அதை மீளச் செலுத்த முடியாமல் திண்டாடுகின்றார்.
“எமது கிராமத்தின் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை. நீண்டதூரம் நடந்து சென்றே குடிதண்ணீர் பெற வேண்டும். பஸ் போக்குவரத்துச் சேவை மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், எமது பிள்ளைகள் 4 கிலோ மீட்டர் நடந்தே பாடசாலைக்கு செல்ல வேண்டும். எமது கிராமத்தில் சந்தை உட்பட அடிப்படை வசதிகள் கிடையாது. அதற்காக நாங்கள் 10 கிலோ மீட்டருக்கு அப்பால் செல்ல வேண்டும்” என அவர் கூறினார்.
குஞ்சுப் பரந்தன் கிராமத்தைச் சேர்ந்த எஸ். பரஞ்சோதி கூறியதாவது: நாங்கள் நீண்ட காலமாக இந்தக் கிராமத்தில் வாழ்கிறோம். இங்கு 55 குடும்பங்கள் உள்ளன. எமது பிரதான தொழில் விவசாயம் ஆகும். இந்த முறை, இரண்டு ஏக்கர்களில் நெல் விதைத்தோம், ஆனால் இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டதால் எமது வயல் நிலத்தில் விதைக்கப்பட்ட பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. நான் நெல் பயிரிடுவதற்காக 170,000 ரூபா கடன் பட்டுள்ளேன். அத்தோடு, நான் ஒரு சிறு வியாபாரத்தையும் செய்கிறேன். இந்த வணிகத்தில் இருந்து வரும் வருமானத்தைக் கொண்டுதான் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.”
கிராமவாசிகள், தங்கள் விவசாயத் தேவைகளுக்காக நீரைப் பெறுவதற்கு தமது கிராமத்தில் உள்ள “செருக்கன் குளத்தை” புனரமைத்து தருமாறு அரச அதிகாரிகளுக்கு பல தடவை முறைப்பாடு செய்துள்ளனர், ஆனால் அரசாங்கம் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குஞ்சுப் பரந்தன் கிராமம், கிளிநொச்சியில் இருந்து 12 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள கிராமத்தவர்கள், தங்கள் அடிப்படைத் தேவைகளுக்காக கிளிநொச்சி நகருக்கே செல்ல வேண்டும். பாடசாலை ஆறு கிலாமீற்றர் தொலைவில் உள்ளது. நிலத்தடி நீர் உவர்ப்பானதால் கிராமவாசிகள் கிளிநொச்சியில் இருந்து வரும் தண்ணீர் ஊர்தி ஊடாகவே குடிதண்ணீரைப் பெறுகின்றனர்.
மருத்துவமனைக்கு செல்வதாயினும் கூட, கிளிநொச்சி நகரத்துக்கே செல்ல வேண்டும். இங்கு வாழும் மக்களின் காணிகளுக்கு முறையான அரச உறுதிப்பத்திரம் கிடையாது, ஆனால் பல தலைமுறைகளாக தற்காலிக அனுமதிப் பத்திரத்துடனேயே குடியிருக்கின்றனர். மிக முக்கியமாக சவர் நிலத் தன்மையை மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வெள்ளப்பெருக்கைத் தடுக்கவும் முறையான வடிகால் முறைமையை அமைப்பது மிகவும் அத்தியவசியமானது என, பரஞ்சோதி வலியுறுத்தினார்.
மக்கள் யுத்தத்தால் பெரிதும் பாதிக்ப்பட்டுள்ளதாக எம். ஜெயக்குமார் விளக்கினார். அவர்கள் பல தடவை பல்வேறு இடங்களில் அகதி முகாம்களில் வாழ்ந்தனர். “தற்போது வெள்ளம் காரணமக அகதிகளாகி பாடசாலைகளில் வாழ்கின்றோம். நாம் தொடர்ந்தும் வறுமைக்குள் வாழவேண்டியுள்ளது. விவாசாயம் எமக்கு உதவவில்லை,” என அவர் தெரிவித்தார்.
விவசாயத் திணைக்களத்தில் வேலை செய்யும் ஆர். ஈஸ்வரன், வெள்ளத்தால் பயிர்கள் நாசமாக்கப்பட்ட இடங்களில் உள்ள விவசாயிகளின் நிலைமை மிக மோசமானது என்றார். “விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்திற்கு இழப்பீடு வழங்கப்படுவது கிடையாது. மேலும் பரிசோதகர் வரும் வரையில் விவசாயிகள் அறு வடை செய்ய முடியாது. அவ்வாறு அறுவடை செய்தால், நட்ட ஈட்டுக்கு பதியமாட்டார்கள். ஆனால், உரிய நேரத்தில் அதிகாரிகள் சென்று அழிவு விபரத்தினைப் பார்வையிட மாட்டார்கள். விதை நெல், உரம் மற்றும் கிரிமிநாசினிகளின் விலை காரணமாக நான் இந்த ஆண்டு பயிர்செய்யவில்லை. இந்த அரசாங்கமும் மக்களை ஏமாற்றுகின்றது,” என அவர் விளக்கினார்.
அரசாங்கம், விவசாயிகளுக்கு பல்வேறுபட்ட திட்டங்களை அறிவித்தாலும் கூட, அவற்றில் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. நெல்லுக்கு உண்மையான நிர்ணய விலை கிடையாது. அரச அதிகாரிகள் முழு நெல்லையும் வாங்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
கிளிநொச்சியில் உள்ள தனியார் வர்த்தகர்கள் மிகக் குறைந்த விலை விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்கின்றனர். ஈரமான ஒரு கிலோ சிவப்பு நெல், 112 ரூபாவுக்கும், காய்ந்த ஒரு கிலோ சிவப்பு நெல் 128 ரூபாவுக்கும், ஈரமான வெள்ளை நெல் ஒரு கிலோ 97 ரூபாவுக்கும் காய்ந்த நெல் 113 ருபாவுக்கும் கொள்வனவு செய்யப்படுவதாக விசாயிகள் கூறுகின்றனர்.
இதற்கும் மேலாக, மூடைக் கணக்கில் நெல் கொள்வனவு செய்யும்போது, விவசாயிகள் நட்டமடைகின்றார்கள். அதாவது, வழமையாக ஒரு மூடை நெல் 8,500 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படும். அந்த மூடையில் வழமையாக 69 கிலோ மட்டுமே உள்ளடக்கப்படும். ஆனால் தற்போது, 72 அல்லது 75 கிலோ நெல் உள்ளடக்கப்படுகின்றது. மேலதிக நெல்லுக்கு கொள்வனவாளர்கள் பணம் கொடுப்பதில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.