தமிழ்நாட்டு பெரும் முதலாளிகளின் இழுவைப்படகுகள் தமது வாழ்வாதாரத்தை அழிப்பது பற்றி வட இலங்கை மீனவர்கள் WSWS உடன் பேசினர்

தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும் முதலாளிகளுக்குச் சொந்தமான பிரமாண்டமான இழுவைப் படகுகள்,  வட இலங்கை கடலுக்குள் நுழைந்து மீன் பிடித்து தங்களுடைய வாழ்வாதாரத்தை நாசப்படுத்துவதையும், இந்திய இளுவைப் படகுகளுக்கு, இலங்கையின் வடக்கு கடல் பகுதிகளில் தொழிலில் ஈடுபட அனுமதி பத்திரம் வழங்குவது தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் ஆலோசிக்கும் திட்டத்தையும் எதிர்த்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

மார்ச் 23 அன்று மன்னாரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய நான்கு மாவட்டங்களையும் சேர்ந்த பாதிப்புக்குள்ளாகும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் பங்குபற்றினர். ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அவர்கள் பேரணியாக சென்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்புவதறகாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மணு ஒன்றையும் கையளித்தனர். 

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக, இலங்கை அரசாங்கங்கள் முன்னெடுத்த இனவாத போரின் அழிவுகளை சந்தித்த வட பகுதி மீனவர்கள், இப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டவிழ்த்து விட்டுள்ள சிக்கன நடவடிக்களின் பாதிப்புக்கும் மேலாக இந்திய இழுவைப் படகுகளின் பாதிப்பை எதிர்கொள்கின்றனர். (பார்க்க: வட இலங்கை மீனவர்கள் இந்திய இளுவைப்படகுகள் தமது வாழ்வாதாரத்தை அழிப்பதற்கு எதிராக போராடுகின்றனர்)

இளுவைப் படகுகளில் கடலின் அடிவரை விரிக்கப்படும் வலைகளை அதிவேக இயந்திரம் கொண்டு இழுப்பதால் கடலின் அடியில் உள்ள வளங்களுடன் இலங்கை மீனவர்களின் வலைகளும் நாசமாக்கப்படுகின்றன. இதனால் கடல் வளம் மட்டுமன்றி இலங்கை மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களும் நாசமாக்கப்படுகின்றன. அதனால் அவர்கள் பெரும் நட்டத்தை எதிர்கொள்கின்றனர். 

இந்த பிரச்சினையைத் தீர்க்க இரு நாட்டு அரசாங்கங்களும் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ள நிலையில் தாங்கள் தசாப்தத்துக்கும் மேலாக இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதாகவும், தாங்கள் இழுவைப் படகுகள் ஏற்படுத்தும் அழிவையே எதிர்ப்பதாகவும் , இந்திய மீனவர்களை எதிர்க்கவில்லை என்றும் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய இலங்கை மீனவர்கள் தெரிவித்தனர்.

இந்திய இழுவைப் படகுகளின் பாதிப்புக்கு எதிராக மன்னாரில் 23 மார்ச் 2023 அன்று மீனவர்கள் நடத்திய பேரணி [Photo: WSWS]

எமது நிருபர்களுடன் பேசிய ஒரு நண்டுவலைத் தொழிலாளியான மன்னார் தோட்டவெளியை சேர்ந்த செபமாலை ஜூட் றோசன், வாரத்தில் 3 நாட்களுக்கு இந்திய இளுவைப்படகுகள் கரையோரங்களுக்கு வருவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனத் தெரிவித்தார். “2 மாதங்கள் பாவிக்கக்கூடிய எமது வலைகள் இளுவைப்படகில் மாட்டுவதால் 15 நாட்களில் நாசமாகி விடுகின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வலைகள் முற்றாக இழுத்துச் செல்லப்படுகின்றன. இதற்கு அரசாங்க தரப்பில் இருந்தோ அல்லது வேறு நிறுவனங்களில் இருந்தோ எமக்கு எந்தவிதமான இழப்பீடுகளும் கிடைப்பதில்லை, ஆனால், நட்ட ஈடு கொடுக்கப்படுவதாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன,” என அவர் கூறினார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியின் சுமைகளைப் பற்றியும் ஜூட் விளக்கினார்: “மண்ணெண்ணை விலை அதிகரிக்கப்பட்டு ஒரு வருடமாகின்றது. ஆனால் இதுவரைக்கும் மானியங்களோ அல்லது நிவாரணங்களோ வழங்கப்படவில்லை. காலங்காலமாக அதற்கு பதிவுகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. முன்னர் 10 மீனவர்கள் 1,000 கிலோ மீன்களை பிடித்து வருவார்கள். இப்போதெல்லாம் வளங்கள் அழிக்கப்படுவதன் காரணமாக 100 பேருக்கு கூட, அந்த தொகை கிடைப்பது அரிதாக இருக்கின்றது. அதேபோல கடலுணவுகளுக்கு நிலையான விலையும் கிடையாது.” 

கடற்படை இப்போதும் போர்க் கால பாஸ் நடைமுறைகளை அமுல்படுத்துவதாக அவர் கூறினார்: “நினைத்தவுடன் உடனடியாக தொழிலுக்கு செல்ல முடியாது. தொழிலுக்கு போகும் போதும் வரும் போதும் பாஸ் பதிவுசெய்ய வேண்டும். இதனால் எமக்கு நேரவிரயமும் பிடித்த கடலுணவுகளை சந்தைப்படுத்துவதில் தாமதமும் ஏற்படுகின்றது.

“யுத்தகால ஒடுக்குமுறைகள் முடிவுக்கு வரவில்லை. அதேநேரத்தில் சட்டவிரோதமான தொழில்களான டைனமெற் பாவிப்பது, கடல் அட்டைகளை இரவில் வெளிச்சம் பாய்ச்சி சிலிண்டர்கள் பாவித்து பிடிப்பது, அதேபோல கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்தல் போன்ற சமூவிரோத செயற்பாடுகளும் கடற்படையின் ஆதவுடனேயே இடம்பெறுகின்றது. ஆனால் பாதிப்பு என்னவோ கரையோரப் பகுதிகளில் தொழிலில் ஈடுபடும் ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களுக்கே ஏற்படுகின்றது. இப்படி இருக்கையில் எமது குறுகிய கடல் பகுதியில் உள்ள வளங்களை இந்திய இளுவைப்படகுகள் அள்ளிச்செல்ல விட்டால் நாம் பட்டினி கிடந்து தான் சாகவேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.

அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கு இப்போது பெறுமதியான கடல் அட்டை ஏற்றுமதியை விருத்தி செய்ய, அரசாங்கம் கடல் பிரதேசத்தை பிரித்து விநியோகிப்பதை விரிவாக்கியுள்ளது. “அமைச்சர் தேவானந்தா, மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் என்னும் பெயரில் கடலட்டைப் பண்னைகளை விரிவாக்குகின்றார். இதல் 50 வீதமான பண்னைகள் தொழிலாளர்களுக்கும் மீதி தனியார் முதலாளிகளுக்கும் தரை வார்க்கப்படுகின்றன. இதற்கு கடல் தொழிலாளர் சங்கங்களும் உடந்தையாக உள்ளன. இந்த நடவடிக்கைகள் நாளடைவில் தொழிலாளர்களை பண்னை அடிமை முறைக்குள் தள்ளிவிடும்” என்று அவர் விளக்கினார். 

23 மார்ச் 2023 அன்று WSWS நிருபர்களுடன் உரையாடும் போராட்டத்தில் பங்குபற்றிய கடல் தொழிலாளர் [Photo: WSWS]

மன்னார் பனங்கட்டி கொட்டு பகுதியை சேர்ந்த ஏ. ஜெனிட்டன், 31, சிறகுவலைத் தொழிலாளி ஆவார். “எமது தொழில் கடற்கரையில் இருந்து 2-3 கிலோ மீற்றர் தூரத்தில் களங்கட்டி (சிறகு வலை) தொழில் செய்வதுதான். இந்திய இளுவைப் படகுகள் வந்து எமது 15 லட்சம் ரூபாய் பெறுமதியான வலைகளை அழித்துவிட்டன. இத்தகைய பாதிப்பு கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அதிகமாக இருக்கின்றது. பொலிஸில் முறைப்பாடு செய்வதனால் எந்த நன்மையும் கிடைப்பதில்லை. இப்போதெல்லாம் நாங்கள் பொலிசில் முறைப்பாடு செய்வதில்லை.

“முன்னர் ஒரு கிலோ வலையின் பெறுமதி 1,500 ரூபா. தற்போது 3,500 ரூபா. ஒரு கூட்டம் களங்கட்டி வலை செய்வதற்கு 120 கிலோ வலை தேவை, இப்போது அதற்கு 4-5 இலட்சங்கள் தேவை. ஆனால் எங்களுக்கு எதுவிதமான மானியங்களும் வழங்கப்படுவதில்லை. இந்திய இளுவைப்படகுகள் எமது கரைக்கு வந்து நாங்கள் 15 பேர் ஒருமாதம் உழைக்கும் உழைப்பை ஒரு நாளில் அள்ளிச்செல்கின்றன. நாங்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளுக்கு இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகள் எதுவுமே செய்வதில்லை. பராமுகமாகவே இருக்கின்றார்கள். தேர்தல் நேரங்களில் மட்டுமே அவர்களை இங்கு பரவலாக பார்க்க முடியும்,” என அவர் கூறினார். 

மன்னார் தாழ்வுபாட்டைச் சேர்ந்த எஸ். பீற்றர் குரூஸ், இலங்கை மீனவர்கள் இந்திய மீனவர்களின் எதிரிகள் அல்ல என விளக்கினார். “இது நன்கு திட்டமிடப்பட்ட வகையில் இலங்கை மற்றும் இந்தியாவிலுள்ள சமூகப் பிரச்சனைகளை திசை திருப்புவதற்காக, இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இலங்கை இந்திய தமிழ் தொழிலாளர்களை மோதலுக்குள் இளுத்து விட்டுள்ளன என்பதை விளங்கிக்கொள்ள முடியும். இன்னும் விரிவாகச் சொல்வதென்றால் இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் எம்மை அரவணைத்து பாதுகாத்த இந்திய தமிழ்நாட்டு மீனவர்களுடன் நேரடி மோதலுக்கு கொண்டு செல்லவே இங்குள்ள ஆட்சியாளர்கள் திட்டமிட்டு செயல்படுகின்றனர்.   

“இந்திய முதலாளிகளின் இளுவைப் படகுளையும் மற்றும் அவை மேற்கொள்ளும் தொழில்களையுமே, நாங்கள் எதிர்க்கிறோம். எம்மைப்போன்று பாரம்பரிய முறைகளில் மீன்பிடியில் ஈடுபடும் சாதரண இந்தியத் தொழிலாளர்களை நாங்கள் எதிர்க்கவும் இல்லை அவர்கள் வருவதற்கு நாம் தடை விதிக்க கோருவதுமில்லை. இந்திய இழுவைப்படகுகள் மீன்களின் பெருக்கத்திற்கு வசதியாக இருக்கும் பவளப்பாறைகளை அழிக்கின்றன, இத்தகைய செயற்பாடுகள் எதிர்காலச் சந்ததிகளுக்கு கடல் வளத்தை இல்லாது அழிக்கும் செயற்பாடாகும். 

“எமது நாட்டில் நிறைய தொழில் முறைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக  தங்கூசிவலை, சுருக்குவலை, குழை வைத்து கணவாய் பிடித்தல், இழுவைப்படகுத் தொழில்கள் என்பவற்றுக்குந் தடைவிதிக்கப்பட்டுள்ளன. சுருக்குவலைத் தொழிலில் ஈடுபட்ட எமது சக மீனவர்களுக்கு நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு தண்டப்பணங்களும் அறவிடப்பட்டுள்ளன. அதனால் எங்களது வருமானங்கள் வீழ்ச்சியடைந்து வாழ்வாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய இழுவைப்படகுகள் மட்டும் எமது கரையோரங்களில் வந்து கடலுணவுகளை அள்ளிச்செல்வதுடன் எமது தொழில்களையும் நாசமாக்குகின்றன,” என அவர் தெரிவித்தார்.

மலிவு விலையில் மீன்பிடி உபகரணங்கள் மற்றும் வசதிகளுக்காகப் போராடு! இலங்கை மற்றும் இந்திய மீனவர்களை பிரிக்கும் தேசியவாத ஆத்திரமூட்டல்களை நிராகரி! 

இலங்கை: வாழ்வாதாரம் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க மீனவர் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குங்கள்

இலங்கை கடற்படை தமிழ் மீனவர்களை கொடூரமாக தாக்குகின்றது