இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
மக்கள் விடுதலை முன்னணி/தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம், “பயங்கரவாதம்” மற்றும் “குற்றங்களை” ஒடுக்குவதாகக் கூறிக்கொண்டு, அக்டோபர் 6 அன்று பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட மூலத்தையும் (PSTA), அக்டோபர் 20 அன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்ட மூலத்தையும் (POCB) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. எவ்வாறாயினும், இந்த இரண்டு சட்டமூலங்களும் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான கடுமையான தாக்குதல்களாக இருப்பதுடன், ஒடுக்குமுறை முதலாளித்துவ அரசை மேலும் பலப்படுத்துகின்றன.
இந்த இரண்டு சட்டங்களும் எதேச்சதிகாரமான கைதுகளையும் தடுப்புக்காவல்களையும் சாதாரண நிலைமையாக மாற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன் ஏற்கனவே மட்டுப்படுத்தப்பட்டுள்ள நீதித்துறைப் பாதுகாப்புகளை மேலும் பலவீனப்படுத்தி, அரசின், அதன் நிறைவேற்று அதிகாரத்தின் மற்றும் அரசாங்கத்தின் ஒடுக்குமுறை அதிகாரங்களை விரிவுபடுத்தி வலுப்படுத்துகின்றன.
இந்த இரண்டு சட்டமூலங்களையும் முழுமையாக விலக்கிக்கொள்ளுமாறும் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் ஏனைய அனைத்து ஒடுக்குமுறைச் சட்டங்களையும் ஒழிக்குமாறும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளும் கோரிக்கை விடுக்க வேண்டும். ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிராகத் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல் ரீதியில் அணிதிரட்டுவது அவசியமாவதோடு இந்தப் போராட்டத்தின் பின்னால் இளைஞர்களையும் கிராமப்புற ஏழைகளையும் அணிதிரட்ட வேண்டும்.
இந்த அரசியல் வேலைத்திட்டம் மற்றும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிராகப் போராடுவதற்கு தொழிலாள வர்க்கம் முன்னெடுக்க வேண்டிய மூலோபாயம் குறித்து கலந்துரையாடுவதற்காக, நவம்பர் 10 அன்று கொழும்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் (IYSSE) ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பங்குபற்றுமாறு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கிறோம்.
பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் “பயங்கரவாதச் செயல்கள்” பட்டியலில், குறிப்பிட்ட சில விடயங்கள் தொடர்பாக ஓர் அரசாங்கத்தையோ அல்லது சர்வதேச அமைப்பையோ செயற்படுமாறோ அல்லது செயற்படாமல் இருக்குமாறோ “தகாத முறையில்” நிர்ப்பந்திப்பதும் உள்ளடங்குகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன வேலைத்திட்டத்திற்கு, ஏகாதிபத்தியப் போர்களுக்கு மற்றும் அந்த சக்திகளுடன் செய்துகொள்ளப்படும் உடன்படிக்கைகளுக்கு எதிராகத் தொழிலாளர்கள் முன்னெடுக்கும் எந்தவொரு தொழிற்துறை போராட்ட நடவடிக்கையும் இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு “குற்றமாக” கருதப்படலாம். குறிப்பாக, வேலைநிறுத்தங்கள் காரணமாக “கணிசமான பொருளாதார இழப்பு” ஏற்பட்டால், அவற்றைக் குற்றங்களாக வகைப்படுத்த முடியும்.
இந்தச் சட்டமூலம், பிடியாணையின்றிக் கைது செய்வதற்கும் சோதனையிடுவதற்குமான அதிகாரங்களை முப்படையினருக்கும் கடலோரக் காவல்படை அதிகாரிகளுக்கும் விரிவுபடுத்துகிறது. குறிப்பிட்ட நீதித்துறை நடைமுறைகளுக்கு உட்பட்டு, நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் தடுப்புக்காவலில் வைப்பதற்கும் இது அனுமதிப்பதோடு குறிப்பிட்ட சூழ்நிலைகளில் கூட்டங்களைத் தடைசெய்யும் அதிகாரத்தையும் பொலிஸாருக்கு வழங்குகிறது. பாதிக்கப்பட்டவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களை நீதித்துறை அதிகாரி ஒருவர் முன்னிலையில் வழங்க முடியும் என்ற திருத்தம் வெறும் கண்துடைப்பு மட்டுமே.
அமைப்புகளைத் தடைசெய்வதற்காக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள், அமைப்பாகச் செயற்படுவதற்கான சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளதுடன், பரந்துபட்ட வகையில் வரையறுக்கப்பட்டுள்ள கருத்து வெளிப்பாடு மற்றும் பேச்சு தொடர்பான குற்றங்களும் ஊடகவியலாளர்கள், அரசியல் அமைப்புகள் மற்றும் சமூக ஊடகப் பாவனையாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்ட மூலம் ஒடுக்குமுறைக்கான மற்றொரு வழியைத் திறந்துவிடுகிறது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு என்பதன் வரைவிலக்கணத்தில், “நிதி அல்லது வேறு பொருள்சார் ஆதாயங்களைப்” பெறுவதற்காகக் கடுமையான குற்றங்களைச் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒன்றிணைந்து செயற்படும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் உள்ளடங்குகின்றனர்.
இருதார மணம், அறிவுசார் சொத்துரிமைகளை மீறுதல் மற்றும் “அரச அதிகாரிகள் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தடையாக இருத்தல்” ஆகியவை இதில் உள்ளடங்கும் சில குற்றங்களாகும். சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக, “ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் அறியப்பட்ட உறுப்பினர்களால் பயன்படுத்தப்படும் ஆடை அணியும் பாணிகள், கைச் சைகைகள், மொழி அல்லது பச்சை குத்தல்கள்” போன்ற பல்வேறு சூழ்நிலைச் சான்றுகளையும், ஒருவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களால் பயன்படுத்தப்படுவதாகக் கருதப்படும் இடங்களுக்குச் சென்றுள்ளாரா என்பதையும் கருத்தில் கொள்ள நீதிமன்றத்திற்கு அனுமதி வழங்கப்படலாம்.
இந்தத் தெளிவற்ற மற்றும் பரந்த பொருளைக் கொண்ட சூத்திரப்படுத்தல்களையும் விதிகளையும், அரசியல் கட்சிகள் மற்றும் எதிர்ப்பாளர்கள், தொழிற்துறை போராட்டங்கள் மற்றும் கூட்டங்களையும் இலக்குவைப்பதற்காக குற்றச் செயல்களாக பொருள்கொள்ள முடியும். இந்தச் சட்டமூலத்தின் கீழ் உள்ளடக்கப்படும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை, நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி வெளியிடுவதற்காக ஊடகவியலாளர்களும் ஊடக அமைப்புகளும் சிறைத்தண்டனை உட்பட குற்றவியல் தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.
இந்தப் பரந்த குற்ற வகைகளும் உறுப்பினர் தொடர்பான விதிகளும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் அரசியல் எதிர்ப்பாளர்களைக் குறிவைத்து இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பாரதூரமான சாத்தியத்தை உருவாக்குகின்றன. “அரச அதிகாரிகள் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தடையாக இருத்தல்” என்பது அத்தகைய சாத்தியத்துக்கு ஒரு நேரடி உதாரணமாகும். இது தொழிலாளர்களின் தொழிற்துறை போராட்டங்களுக்கும் ஏனைய அமைப்புகளின் எதிர்ப்புப் போராட்டங்களுக்கும் பொருத்திப் பயன்படுத்தப்படலாம்.
இச் சட்டமூலம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அருவருக்கத்தக்க அம்சங்களில் ஒன்றான, பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெற்று, அவற்றை நீதிமன்றங்களில் அவர்களுக்கு எதிரான சாட்சியங்களாகப் பயன்படுத்தும் நடைமுறையை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது. நீண்டகாலத்திற்கு நிறைவேற்று அதிகாரத்தின் உத்தரவின் பேரில் தடுப்புக்காவலில் வைப்பதும், நீதிமன்றத்தின் தற்துணிபு அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதும் புதிய சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சிகளும் அவற்றின் போலி இடது பிரதிநிதிகளும் இந்த ஒடுக்குமுறைச் சட்டமூலங்களுக்கு எதிராகப் பொதுமக்கள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பை, ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தை பின்வாங்குமாறு வேண்டுகோள் விடுக்கின்ற மற்றும் அழுத்தம் கொடுக்கின்ற பயனற்ற முயற்சிகளுக்குள் திசைதிருப்பிவிடச் செயற்பட்டு வருகின்றனர். இந்தச் சட்டமூலங்களுக்கு எதிராகத் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நடவடிக்கைகளை அணிதிரட்டுவதைத் தடுப்பதே அவர்களின் பிரதான நோக்கமாகும்.
ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), அக்டோபர் 27 அன்று கொழும்பில் உள்ள இராஜதந்திரத் தூதரகங்களுடன் கலந்துரையாடல் நடத்தி, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கு அவற்றின் ஆதரவைக் கோரியது. பயங்கரவாதத்திற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கும் எதிரான சட்டங்கள் அவசியம் என்று வலியுறுத்தும் ஐ.ம.ச. தலைவர் சஜித் பிரேமதாச, “வினைத்திறனான” நீதித்துறை மேற்பார்வையையும் நிறைவேற்று அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கோரினார்.
இந்த ஒடுக்குமுறைச் சட்டங்கள் மூலம், இலங்கைக்கு வழங்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி+ வர்த்தகச் சலுகைகளை இழக்கும் ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் பிரேமதாச இலங்கையின் பெருவணிகத்தினரை எச்சரித்துள்ளார். வெளிநாடுகளில் போர்களை முன்னெடுப்பதுடன், தமது சொந்த நாடுகளில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக இரத்தக்களரி ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடும் ஐரோப்பிய ஒன்றிய சக்திகளும் அமெரிக்காவும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் என்று கூறுவது பொய்யாகும். இந்த வல்லரசுகள் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அன்றி, சீனாவுக்கு எதிரான தமது மூலோபாய நோக்கங்களுக்குள் கொழும்பு ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே வர்த்தகச் சலுகைகளைப் பயன்படுத்துகின்றன.
வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) ஒரு கிளையாக விளங்கும் ஐ.ம.ச. தலைவர்கள், தமிழ் மக்களுக்கு எதிரான அதன் இரத்தக்களரி இனவாதப் போரையும், கொடூரமான அவசரகாலச் சட்ட விதிமுறைகள் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதையும் அத்தியாவசிய சேவைகள் விதிமுறைகளைப் பயன்படுத்தித் தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதையும் ஆதரித்தனர். சில மேலோட்டமான மாற்றங்களுடன் இந்த ஒடுக்குமுறைச் சட்டங்களை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என்பதே பிரேமதாசவின் விருப்பமாகும். ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்துடன் அவர்களுக்கு அடிப்படை வேறுபாடுகள் எதுவும் கிடையாது.
போலி இடது முன்னிலை சோசலிசக் கட்சி, ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும் தலைவர்களைப் போலக் காட்டிக்கொண்டு, இந்தச் சட்டமூலங்கள் தொடர்பாக உரத்த விமர்சனங்களை முன்வைக்கிறது. இந்தச் சட்டமூலங்களை விலக்கிக்கொள்ளுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக, அது நவம்பர் 4 அன்று பாராளுமன்றத்திற்கு முன்னால் ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்தது. அந்தப் போராட்டத்தில் உரையாற்றிய கட்சியின் பேச்சாளர் வசந்த முதலிகே, “அவ்வாறு செய்யாவிட்டால், நாம் ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்பி, உங்கள் கொள்கைகளைத் தோற்கடிப்பதற்காகப் போராடுவோம்” என்று எச்சரித்தார்.
முன்னிலை சோசலிசக் கட்சி கூறும் மக்கள் இயக்கம் என்பது எதிர்க்கட்சிகளுடனும் தொழிற்சங்கத் தலைவர்களுடனும் ஒரு கூட்டணியை அமைக்குமாறு வேண்டுகோள் விடுப்பதைத் தவிர வேறொன்றுமில்லை. அக்கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான தொழிலாளர் போராட்ட மையம், இந்தச் சட்டமூலத்தை “எதிர்ப்பதற்கு” தொழிற்சங்கத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து பல கூட்டங்களை நடத்தியது. இது ஒரு மோசடியாகும்.
இந்த அதிகாரத்துவத்தினர், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன வேலைத்திட்டத்திற்கு எதிராகவும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் தொழிலாளர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களைத் தடுப்பதற்குத் தமது தொழிற்சங்கங்களைப் பயன்படுத்தினர். இதன் விளைவாக, தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வரும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் அதிகாரம் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்ட விதிமுறைகள், தண்டனைச் சட்டக்கோவை மற்றும் ஏனைய ஒழுங்குமுறைச் சட்டங்கள் போன்ற ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்டங்கள், “பயங்கரவாதம்” மற்றும் ஏனைய குற்றங்களை எதிர்கொள்வதற்குப் போதுமானவை என்பதே முன்னிலை சோசலிச கட்சியின் வாதமாகும். சுருக்கமாகக் கூறுவதானால், தொழிலாளர்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிரான ஓர் ஒடுக்குமுறைக் கருவியான முதலாளித்துவ அரசையும் அதன் நிறுவனங்களையுமே அவர்கள் பாதுகாக்கின்றனர்.
சர்வதேச நிதி மூலதனத்தினாலும் ஆளும் உயரடுக்கினராலும் தீர்மானிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தினதும் ஆளும் வர்க்கத்தினதும் கொள்கைகளை எந்தவொரு போராட்டத்தினாலோ அல்லது வேண்டுகோளினாலோ மாற்றியமைக்க முடியாது. இந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகளைத் தோற்கடிப்பதற்காகத் அரசியல் ரீதியில் சுயாதீனமான தொழிலாள வர்க்கத்தின் இயக்கம் ஒன்றைக் கட்டியெழுப்புவதைத் தடுப்பதே அவர்களின் பிரச்சாரங்களின் நோக்கமாகும்.
முதலாளித்துவ மற்றும் பாராளுமன்றக் கட்டமைப்பிற்குள் உழைக்கும் மக்களால் தமது வாழ்க்கை நிலைமைகளையும் சமூக நிலைமைகளையும் பாதுகாக்க முடியாது.
சிக்கன நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதை ஜனநாயக வழியில் முன்னெடுக்க முடியாது என்பதை நன்கு அறிந்திருப்பதன் காரணமாகவே, அநுரகுமார திசாநாயக அரசாங்கம் இந்தச் சட்டமூலங்களைப் பாராளுமன்றத்தின் ஊடாக அவசரமாக நிறைவேற்றிக்கொள்ள முனைகின்றது. உழைக்கும் மக்களின் கோபம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அவப்பெயர் பெற்ற தொழிற்சங்கத் தலைவர்கள் மீதும் போலி இடது குழுக்கள் மீதும் அவர்கள் நம்பிக்கை வைக்க முடியாது.
இந்தச் சட்டமூலங்கள், சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கன நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்கு எதிராகத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பை ஒடுக்குவதற்கான அரசாங்கத்தின் தயாரிப்புகளின் ஒரு பகுதியே ஆகும் என நாம் எச்சரிக்கிறோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டுத் தப்பியோடி இராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு, அவரது அரசாங்கம் வீழ்த்தப்பட்ட 2022 வெகுஜன எழுச்சியின் அவதாரம் இப்போது திசாநாயக அரசாங்கத்தையும் ஆளும் உயரடுக்கினரையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றது.
தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் மீண்டும் வெடிப்பது குறித்து அவர்கள் பீதியடைந்துள்ளனர். தமது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் தொழிலாளர்களும் மாணவர்களும் தத்தமது அரசாங்கங்களுக்கும் பெருநிறுவனச் செல்வந்தத் தன்னலக்குழுக்களுக்கும் எதிராகப் போராட்டங்களில் இறங்கின்றமை, இலங்கை உட்பட சர்வதேச ஆளும் உயரடுக்கினரையும் கலக்கமடையச் செய்துள்ளது.
திசாநாயக்க அரசாங்கமும் முதலாளித்துவ பாராளுமன்றக் கட்சிகளும் மட்டுமன்றி, போலி இடது குழுக்களும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பைக் கண்டு அமைதியிழந்துள்ளனர். 2022 மக்கள் எழுச்சியின்போது, அவப்பெயர் பெற்ற பாராளுமன்றக் கட்சிகளைக் கொண்ட இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக ஜே.வி.பி.யும் ஐ.ம.ச.வும் முன்னெடுத்த பிரச்சாரத்திற்கு இந்தத் தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் முன்னிலை சோசலிசக் கட்சியும் ஆதரவளித்து, அந்த வெகுஜன இயக்கத்தை தீர்வு காண முடியாத பாராளுமன்ற ஆட்சி மற்றும் முதலாளித்துவக் கட்டமைப்பின் முட்டுச்சந்திற்குள் திசைதிருப்ப அவர்கள் செயற்பட்டனர்.
அவர்களின் தற்போதைய பிரச்சாரங்களிலும், முன்னிலை சோசலிசக் கட்சியும் தொழிற்சங்க அதிகாரத்துவம் மீண்டும் அதே வகிபாகத்தையே ஆற்றுகின்ற போதிலும், இம்முறை அது ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் எதேச்சதிகாரமான ஆட்சியை பலப்ப்படுத்துவதற்கான பாதையைத் திறந்துவிடுகிறது.
தமது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதில், தொழிலாள வர்க்கம் ஆளும் உயரடுக்கின் எந்தவொரு பிரிவின் மீதும் அல்லது அதன் ஆதரவாளர்கள் மீதும் எவ்வித நம்பிக்கையும் வைக்க முடியாது. எதிர்க்கட்சிகளிடமோ, தொழிற்சங்க அதிகாரத்துவத்திடமோ அல்லது முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி இடது குழுக்களிடமோ இந்தப் பொறுப்பை ஒப்படைக்க முடியாது. தொழிலாளர்களே முன்முயற்சி எடுக்க வேண்டும்.
இதனாலேயே, ஒவ்வொரு வேலைத் தளத்திலும் நிறுவனத்திலும் தங்களால் ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. கிராமப்புற ஏழைகளையும் அவ்வாறு செய்யுமாறு நாம் அழைப்பு விடுக்கிறோம். இந்தக் குழுக்களுக்குள் முதலாளித்துவக் கட்சிகளையும் தொழிற்சங்க அதிகாரிகளையும் அனுமதிக்கக் கூடாது.
இந்தச் சட்டமூலங்களின் உண்மையான தன்மையை அம்பலப்படுத்தும் கலந்துரையாடல்களை இந்தக் குழுக்கள் ஏற்பாடு செய்யவதோடு ஒடுக்குமுறைச் சட்டங்களின் கீழ் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க வேண்டும். அவற்றை விலக்கிக்கொள்ளச் செய்வதற்காக ஒருங்கிணைந்த எதிர்ப்புப் போராட்டங்களையும் தொழிற்துறை நடவடிக்கைகளையும் தயாரிக்க வேண்டும். இந்தப் போராட்டத்தை சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன வேலைத்திட்டத்திற்கு எதிரான போராட்டத்துடன் இணைக்க வேண்டும்.
இன அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தி பலவீனப்படுத்த முயற்சிக்கும் முதலாளித்துவக் கட்சிகளுக்கும் இனவாதக் குழுக்களுக்கும் எதிராக, சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான அதன் பிரச்சாரத்தை சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி முன்னெடுக்க வேண்டும்.
இதற்கு, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை, சிக்கன வேலைத்திட்டத்திற்கு எதிரான எதிர்ப்புடனும் அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்துடனும் இணைப்பது அவசியமாகும். தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களிலிருந்து தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டை சோசலிச சமத்துவக் கட்சி முன்மொழிகிறது.
இந்தப் போராட்டம் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். கிராமப்புற மக்களுடன் கூட்டணி சேர்ந்து, தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றி சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு இலங்கைத் தொழிலாளர்களுக்கு அனைத்துலகத் தொழிலாள வர்க்கத்தின் ஆதரவு அவசியமாகும். தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் சர்வதேசக் கூட்டணி (IWA-RFC) ஊடாக, தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தை அனைத்துலகத் தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்துடன் இணைக்க வேண்டும்.
மேலும் படிக்க
- ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்குமான இலங்கை தொழிலாளர்களினதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டிற்காக!
- இலங்கையில் ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சியின் இரண்டு ஆண்டுகள்
- இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அரசாங்கத்திற்கு சமூக எதிர்ப்பை ஒடுக்குவதற்கான பரந்த அதிகாரங்களை வழங்குகிறது
- வாஷிங்டனின் அழுத்தத்திற்குப் பணிந்து, ஈரானியக் கப்பல்களுக்கு உதவி வழங்க இலங்கையும் இந்தியாவும் மறுக்கின்றன
