இலங்கை: ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் கீழ் மோசமடைந்து வரும் வாழ்க்கை நிலைமைகள் குறித்து தொழிலாளர்களும் இளைஞர்களும் கருத்துத் தெரிவிக்கின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் (IYSSE) உறுப்பினர்கள், மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்தின் கீழ் மோசமடைந்து வரும் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் மீதான வளர்ந்து வரும் ஏமாற்றம் குறித்து தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுடன் கலந்துரையாடினர்.

கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு அருகில் சோ.ச.க. பிரச்சாரம்

https://www.wsws.org/asset/fb68e1dd-e06e-4957-9fbd-5c596c1b2916?rendition=image1280

2022 வெகுஜன எழுச்சியின்போது மில்லியன் கணக்கான மக்களை வீதிகளில் இறங்கிப் போராடத் தூண்டி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இராஜினாமா செய்ய நிர்ப்பந்தித்த வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வறுமை மற்றும் அத்தியாவசிய சேவைகளின் சீரழிவு ஆகியவை இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ளன. 2024 இல் பாரம்பரிய முதலாளித்துவக் கட்சிகள் மீதான வெகுஜன விரோதத்தைச் சுரண்டிக்கொண்டு ஆட்சிக்கு வந்த ஜே.வி.பி./தே.ம.ச., அதற்கு முந்தைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டத்தையே தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது மேலும் அதிக வரிகளைத் திணிப்பதுடன், பொதுச் சேவைகளை வெட்டிக் குறைத்து, தனியார்மயமாக்கலைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

நவம்பர் 10 அன்று கொழும்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள, “ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சியின் இரண்டு ஆண்டுகள்: சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை திணிக்கும் பெருவணிகத்தின் அரசாங்கம்” என்ற தலைப்பில் சோ.ச.க. நடத்தும் பொதுக் கூட்டத்திற்கான பிரச்சாரத்தின்போதே இந்தக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள், வேலைத்தளங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் கூட்டம் தொடர்பான அறிவித்தலின் சிங்கள மற்றும் தமிழ் பதிப்புகளை விநியோகித்ததுடன், அரசாங்கத்தின் ஆட்சிப் பதிவையும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான சோசலிச இயக்கத்தின் அவசியத்தையும் பற்றி கலந்துரையாடினர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் ராதிகா அபிலாஷ், 2022 வெகுஜன எழுச்சிக்குப் பின்னரும் சாதாரண மக்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறினார்.

“கோட்டாபய ராஜபக்ஷ வெளியேற்றப்பட்ட பின்னர், விக்கிரமசிங்க அதிகாரத்திற்கு வந்தார். “பாரம்பரிய அரசியல் கட்சிகளின் ஆட்சியையே நாங்கள் இதுவரை பார்த்திருக்கிறோம். அநுரகுமார திசாநாயக ஜனாதிபதியாகப் பதவிக்கு வந்தபோது, ஒரு புதிய சமூக அரசியலைக் காண்போம் என்று நம்பினோம். ஆனால் அது நடக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

மாணவர் விடுதிகளில் நிலவும் நெரிசலையும், சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு மோசமடைந்து வரும் நிலைமைகளின் கீழ் கல்வி கற்பதில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் அபிலாஷ் விவரித்தார். 15க்கு 15 அடி அளவுள்ள ஓர் அறையில் எட்டு அல்லது ஒன்பது மாணவர்கள் தங்கியுள்ளனர். விடுதியில் உள்ள இரண்டு படிப்பு அறைகளில் ஒன்று உறங்கும் அறையாக மாற்றப்பட்டுள்ளது.

“படிப்பதற்கு எந்தவிதமான வசதிகளும் இல்லை. மாணவிகளால் இந்த நிலைமையைச் சகித்துக்கொள்ளவே முடியாது. உணவகங்களில் வழங்கப்படும் உணவு சுகாதாரமற்றதாக உள்ளது. ஒரு பொதி மதிய உணவின் விலை 190 ரூபாய்.”

அவரது மாதாந்தச் செலவுகள் சுமார் 35,000 ரூபாயாக இருப்பதால், பெற்றோருக்குச் சுமையாக இருப்பதைத் தவிர்ப்பதற்காக வார இறுதி நாட்களில் மேலதிக வேலைகளைச் செய்ய வேண்டியுள்ளது.

மாணவர் போராட்டங்களும், ஊழியர் பற்றாக்குறைக்கு எதிரான விரிவுரையாளர்களின் ஆர்ப்பாட்டங்களும் ஏன் தொழிலாளர்களின் போராட்டங்களுடன் ஐக்கியப்படுத்தப்படவில்லை என்று அபிலாஷ் கேள்வி எழுப்பினார். இது, அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்பைப் பிளவுபடுத்துவதிலும் ஒடுக்குவதிலும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் வகிக்கும் பாத்திரம் குறித்த கலந்துரையாடலுக்கு வழிவகுத்தது.

சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ பிரச்சாரகர்களுடனான கலந்துரையாடலில், இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் சர்வதேச வேர்கள் குறித்தும், தேசிய எல்லைகளைக் கடந்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

“இலங்கையின் எல்லைகளுக்குள் நிலவும் நிலைமைகளின் அடிப்படையிலேயே நாம் சிந்திக்கப் பழகியிருக்கிறோம். அதிகபட்சம் தெற்காசிய நிலைமைகள் குறித்தே சிந்திக்கிறோம்” என்று அபிலாஷ் கூறினார். சர்வதேச ரீதியில் தொழிலாளர்களும் இளைஞர்களும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் அவரை மிகவும் கவர்ந்திருந்தன. பிரான்சில் நடைபெற்றுவரும் வெகுஜன மாணவர் போராட்டங்களையும் ஏகாதிபத்தியப் போரின் வளர்ந்து வரும் ஆபத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தப் பிரச்சினைகள் குறித்து மேலும் கலந்துரையாடுவதற்காக நவம்பர் 10 கூட்டத்தில் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர், மஹீஷ வாருசவிதான, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் (FUTA) தலைமையில் அக்டோபர் 30 அன்று நடைபெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேலைநிறுத்தம் குறித்து கலந்துரையாடினார். கல்விசார் ஆட்சேர்ப்பு, அளவுக்கு அதிகமான வேலைச் சுமையிலிருந்து நிவாரணம், போதுமான வசதிகள், ஊதிய ஏற்றத்தாழ்வுகளுக்கும் கொடுப்பனவுக் குறைப்புகளுக்கும் முடிவு கட்டுதல் மற்றும் வரி நிவாரணம் ஆகியவை அவர்களின் கோரிக்கைகளில் அடங்கியிருந்தன.

வேலைநிறுத்தம், பேரணி மற்றும் கருத்தரங்கில் தான் உற்சாகத்துடன் பங்கேற்றதாகவும், ஆனால் இந்தப் போராட்டத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்ற கேள்வியே தமக்கு எஞ்சியதாகவும் அவர் கூறினார். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கான செலவினத்தை 6 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கைக்காகப் போராடுவதற்குப் பதிலாக, அந்த இலக்கை நோக்கிய படிப்படியான “செயல்திட்ட வரைபடம்” ஒன்றை அரசாங்கத்திடம் கோருவதற்கு FUTA தலைவர்கள் முன்மொழிந்தனர்.

“உண்மையில், வேலைநிறுத்தம் குறித்து உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையை வாசித்த பின்னர்தான், தொழிற்சங்கத் தலைவர்கள் எப்போதும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளுக்குள் எங்களைச் சிக்கவைக்க முயற்சிக்கிறார்கள் என்பதை நான் புரிந்துகொண்டேன்” என்று வாருசவிதான கூறினார்.

இந்தப் போராட்டம் வெறுமனே அரசாங்கத்திற்கு எதிரானது மட்டுமல்ல, இந்தத் தாக்குதல்களுக்கு கட்டளையிட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிரானதும் ஆகும் என்று அவர் கூறினார். “அதனால்தான் எமது போராட்டம் அவசியமாக முதலாளித்துவத்திற்கு எதிரான அரசியல் போராட்டமாகவும் சோசலிசத்திற்கான போராட்டமாகவும் இருக்க வேண்டும்.”

ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதில் தொழிற்சங்கத் தலைவர்கள் வகித்த பாத்திரத்தையும் வருசவிதான சுட்டிக்காட்டினார். தொழிலாளர்கள் சுயாதீனமான அடிமட்ட உறுப்பினர்களின் நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டும் என்ற சோ.ச.க.யின் அழைப்புக்கு அவர் ஆதரவு தெரிவித்தார்.

“எமது போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக, அந்தத் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, தொழிலாளர்களின் நலன்களுக்காகப் போராடும் அமைப்புகளை நாம் கட்டியெழுப்ப வேண்டும். நீங்கள் முன்மொழியும் அடிமட்ட உறுப்பினர்களின் நடவடிக்கைக் குழுக்கள் இதற்கு பொருத்தமானவை என்று நான் கருதுகிறேன்.”

புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 ஆண்டுகளாக தபால் சேவையில் பணியாற்றி வரும் ஒரு தபால் உதவியாளர், நீடித்துவரும் ஊழியர் பற்றாக்குறையின் தாக்கத்தை விவரித்தார். அவசர நிலைமைகளில்கூட தொழிலாளர்கள் விடுமுறை பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. கடந்த இரண்டு வரவு-செலவுத் திட்டங்களின்போது அவரது சம்பளம் சுமார் 4,000 ரூபாய் மட்டுமே அதிகரித்துள்ளது. அவரது இரண்டு பிள்ளைகளும் இன்னமும் கல்வி கற்று வருகின்றனர்.

ஊழியர் பற்றாக்குறைக்கு எதிராகத் தனது தொழிற்சங்கம் போராடுமா என்றும், புதிய ஆட்சேர்ப்பைக் கோருமா என்றும் அவர் கொழும்பில் உள்ள தொழிற்சங்கப் பிரதிநிதியிடம் கேட்டுள்ளார். அந்தத் தொழிற்சங்க அதிகாரி, அரசாங்கத்தின் முடிவுகளைத் தமது தொழிற்சங்கம் எதிர்க்காது என்றும், தொழிலாளர்கள் இன்னும் சிறிது காலம் இந்த நிலைமையைச் சகித்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்ததாக அந்தத் தொழிலாளர் கூறினார்.

தொழிற்சங்கச் சந்தாக்களைத் தொடர்ந்து ஏன் செலுத்த வேண்டும் என்ற கேள்வியை இப்போது அவரது சக ஊழியர்கள் எழுப்பி வருவதாகவும் அவர் கூறினார்.

இரத்மலானையைச் சேர்ந்த ரயில் துப்புரவுத் தொழிலாளி அஜித், கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாகப் பணியாற்றிய போதிலும் தனக்கும் தனது சக ஊழியர்களுக்கும் நிரந்தர வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதை விவரித்தார்.

தேர்தல்களுக்கு முன்னர், ஜே.வி.பி. தொழிற்சங்கத் தலைவர்கள் நிரந்தர நியமனங்களை வழங்குவதாக உறுதியளித்ததுடன், கட்சிக்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டுமாறும் தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டனர்.

“இப்போது இரண்டு ஆண்டுகளாகியும், இன்னமும் சுற்றறிக்கைகளைத் தேடிக்கொண்டிருப்பதாக அவர்கள் கூறிக்கொண்டே இருக்கிறார்கள். நியமனங்கள் ஒழுங்காக இல்லை என்று கூறி, இந்தப் பணியை இழுத்தடிக்கிறார்கள்.”

அஜித்துக்கு ஒரு நாளைக்கு வெறும் 1,600 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. அவருக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை கிடையாது. அவர் ஒரு நாள் விடுமுறை எடுத்தாலும், அந்த நாளுக்கான சம்பளத்தை இழக்க நேரிடுகிறது. இதே நிலைமைகளை 48 துப்புரவுத் தொழிலாளர்கள் எதிர்கொள்வதாக அவர் கூறினார்.

நீர்கொழும்பு, முன்னக்கரையைச் சேர்ந்த 54 வயதான பெண் ஒருவர், படுத்த படுக்கையாக இருக்கும் தனது கணவரையும் மூன்று பிள்ளைகளையும் பராமரிப்பதற்காகப் போராடி வருவதை விவரித்தார். அவர் வீட்டு வேலைகளைச் செய்வதுடன், அரசாங்க மருத்துவமனைகளில் நோயாளிகளைப் பராமரிக்கும் வேலைவாய்ப்பையும் தேடி வருகிறார்.

“ஒரு நோயாளியைப் பராமரிப்பதற்கு எனக்கு ஒரு நாளைக்கு 3,000 ரூபாய் கிடைக்கிறது. அதைக் கொண்டுதான் நான் வாழ்க்கையை நடத்துகிறேன்” என்று அவர் கூறினார்.

உணவு மற்றும் பிள்ளைகளின் கல்வி உட்பட அடிப்படைச் செலவுகளுக்காக அவரது குடும்பத்திற்கு மாதம் சுமார் 60,000 ரூபாய் தேவைப்படுகிறது.

“நான் அஸ்வெசும [அரசாங்கத்தின் வரையறுக்கப்பட்ட நலன்புரி உதவித் திட்டம்] பெறுவதற்குப் பலமுறை விண்ணப்பித்தேன். ஆனால், அது எனக்குக் கிடைக்கவில்லை. எனது கணவர் சுமார் ஐந்து ஆண்டுகளாகப் படுத்த படுக்கையாக இருக்கிறார். பத்து ஆண்டுகளுக்கு முன்னிருந்த நிலைமையுடன் ஒப்பிடுகையில், எங்களது வாழ்க்கை சீர்குலைந்துவிட்டது. 2022 இல் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடியபோதிலும், அந்தப் பிரச்சினைகளில் எதுவும் தீர்க்கப்படவில்லை.”

ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வரும் சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டத்தின் மத்தியில், அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை 2023 இல் 1,773,445 இல் இருந்து 2026 இல் 1,251,522 ஆகக் குறைந்துள்ளது. இது 520,000 க்கும் அதிகமான பயனாளிகளின் வீழ்ச்சியாகும்.

இந்தக் கலந்துரையாடல்கள், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்திற்கும் தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்கி வந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கும் எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பை வெளிப்படுத்தின. அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் முறித்துக்கொண்டு, முதலாளித்துவத்திற்கு எதிரான சர்வதேசப் போராட்டத்தின் ஒரு பகுதியாக சோசலிசக் கொள்கைகளுக்காகப் போராடும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் அவை வலியுறுத்தின.

நவம்பர் 10 அன்று மாலை 4 மணிக்கு கொழும்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கிறோம்.

Loading