தைவானின் உள்ளூராட்சித் தேர்தல்கள்: ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சிகும் வாஷிங்டனுக்கும் விழுந்த ஒரு அடி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தைவானில் நவம்பர் 26 ஆம் தேதி நடந்த உள்ளாட்சித் தேர்தல்கள் ஆளும் DPP (ஜனநாயக முற்போக்குக் கட்சி) க்கு பெரும் தோல்வியில் முடிந்தது. எதிர்க்கட்சியான கோமின்டாங் (KMT) தீவில் உள்ள நகராட்சிகள், நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் பெரும்பான்மையான இடங்களை வென்றது.

தைவான் கோமின்டாங் கட்சியின் தைபே நகர மேயர் வேட்பாளர் வேய்ன் சியாங், நவம்பர் 26, 2022, சனிக்கிழமை, தைவானின் தைபேயில் உள்ள ஆதரவாளர்களுடன் தனது வெற்றியைக் கொண்டாடுகிறார் [AP Photo/Chiang Ying-ying]

தைபே மற்றும் தாயுவான் போன்ற முக்கிய நகரங்கள் உட்பட 22 உள்ளூர் அரசாங்க இடங்களில் 13 ஐ கோமின்டாங் வென்றுள்ளது. குறிப்பாக, தைபேயின் மேயர் பதவிக்கான போட்டியில், சர்வாதிகாரி சியாங் கேய்-ஷேக்கின் கொள்ளுப் பேரனான கோமின்டாங்கின் வேட்பாளர் சியாங் வான்-ஆன், ஜனநாயக முற்போக்குக் கட்சியின் வேட்பாளர் சென் ஷிஹ்-சுங்கை தோற்கடித்தார். சென் கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் பெரும்பகுதி சுகாதார அமைச்சராக பணியாற்றியுள்ளார். சியாங்கின் வெற்றி கோமின்டாங்கை அதன் பாரம்பரிய கோட்டையில் மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருகிறது, தற்போது சிறிய கட்சியான தைவான் மக்கள் கட்சியின் (TPP) கோ வென்-ஜே மேயராக உள்ளார்.

DPP இரண்டு இடங்களை இழந்ததால், அதன் மொத்த இடங்கள் ஐந்தாகக் குறைந்தன. பெயரளவிலான சுயேச்சை வேட்பாளர்கள் மற்ற இரண்டு இடங்களை வென்றனர், அதே நேரத்தில் TPP, Hsinchu நகரத்தை வென்றது. சியாயி நகருக்கு டிசம்பர் 18 ஆம் தேதி சிறப்புத் தேர்தல் நடைபெறும், இதில் KMT வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது கட்சியின் மொத்த இடங்களின் எண்ணிக்கையை 14 ஆக உயர்த்தும், அதாவது தேர்தலுக்கு முந்தைய அதே எண்ணிக்கையை அது தக்க வைத்துக் கொள்ளும்.

இந்த முடிவுகள் முழு அரசியல் ஸ்தாபகத்தின் மீதான அதிருப்தியின் வெளிப்பாட்டைக் காட்டிலும் KMT க்கான ஆதரவு குறைவாக இருப்பதைக் குறிக்கிறது. கடந்த உள்ளூராட்சித் தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், வாக்குப் பதிவு விகிதம் குறைவாகவே உள்ளது, அதாவது 2018 வாக்குப் பதிவு விகிதம் 66.11 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், இந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன. DPP க்கு 31 சதவீதம் மற்றும் KMT க்கு 14 சதவீதம் என்ற அளவிற்குத்தான் மக்கள் ஆதரவு உள்ளது என்ற நிலையில், இரண்டு கட்சிகளுமே பெரிதும் செல்வாக்கற்றுள்ளன.

தைவான் மீது பெய்ஜிங்குடனான வாஷிங்டனின் மோதலில் அவற்றின் தாக்கம் குறித்து அச்சத்துடனும் கவலையுடனும் அமெரிக்க ஊடகங்கள் இந்த முடிவுகளைப் பார்க்கின்றன. ட்ரம்பைத் தொடர்ந்து பைடென் நிர்வாகமும் தைவானுடனான உறவுகளை ஆத்திரமூட்டும் வகையில் வலுப்படுத்தியுள்ளது, இதன் மூலம், தீவை சீனாவின் ஒரு பகுதியாகவும், பெய்ஜிங்கை அதன் உத்தியோகபூர்வமான அரசாங்கமாகவும் அமெரிக்கா நடைமுறையில் அங்கீகரித்துள்ள ஒரே சீனா கொள்கையை குறைமதிப்பிற்குட்படுத்துகிறது. அவ்வாறு செய்வதன் மூலம், தைவானிய தேசியவாதக் கட்சியான ஜனநாயக முற்போக்குக் கட்சியை (DPP) சுதந்திரத்தை நோக்கி முன்னேறுமாறு அமெரிக்கா ஊக்குவித்துள்ளது — இந்த நடவடிக்கையை பெய்ஜிங் வலிமையுடன் எதிர்க்கும் என்று எச்சரித்துள்ளது.

தைவான் குறித்து சீனாவைப் போருக்குத் தூண்டும் தனது முயற்சிகளில், அமெரிக்கா தைவானின் ஜனாதிபதி சாய் இங்-வென் மற்றும் அவரது DPP இன் ஆதரவை நம்பியுள்ளது. இதனால் தேர்தல் முடிவுகள் அமெரிக்காவிற்கு ஒரு அடியாக அமைந்தது, இது தைவானிய “ஜனநாயகத்தின்” பிரபலமான பிரதிநிதிகளாக சாய் மற்றும் DPP ஐ வழமையாக அறிவிக்கிறது, சீனாவின் “ஆக்கிரமிப்பை” அதன் பிரதான நிலப்பகுதி வரை எதிர்த்து நிற்கிறது.

இதற்கிடையில், பெய்ஜிங்குடனான உறவை தனது அரசாங்கம் எவ்வாறு கையாள்கிறது என்பதற்கான வாக்கெடுப்பாக உள்ளாட்சித் தேர்தலை மாற்ற சாய் முயன்றார். ஒரே சீனா கொள்கைக்கு ஒரு வெளிப்படையான சவாலாக, நவம்பர் 12 பிரச்சார உரையில், 'தைவானின் இருப்பு மற்றும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான தைவான் மக்களின் வலியுறுத்தல் யாருக்கும் ஆத்திரமூட்டல் அல்ல என்பதை நான் அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன்.”, மேலும், “ஜனாதிபதி என்ற முறையில், தைவான் தைவான் மக்களின் தாய்வானாக இருப்பதை உறுதிசெய்ய முடிந்த அனைத்தையும் செய்வதே எனது விருப்பம்” என அவர் கூறினார்.

இந்தத் தேர்தலில் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகள் முக்கிய காரணிகளாக இருந்தபோதிலும், சீனாவுடனான போரைத் தூண்டுவதற்கான அமெரிக்காவின் பகடைக்காயாக தைவான் மாற்றப்படுகிறதோ என்பது பற்றிய உண்மையான அச்சத்தையும் முடிவுகள் பிரதிபலிக்கின்றன. சியாங் வான்-ஆனுக்கு வாக்களித்த தைபேயில் வசிக்கும் 50 வயதான நினா சென், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலிடம் இவ்வாறு கூறினார்: “எங்கள் உயிருக்கும் உடமைகளுக்கும் ஏற்கனவே அச்சுறுத்தல் இருப்பதால், ஜலசந்தி முழுவதும் அமைதி நிலவுவதையே நான் பெரிதும் விரும்புகிறேன்.”

தேர்தலுக்குப் பின்னர், ஜனாதிபதி சாய் DPP இன் தலைவர் பதவியை இராஜினாமா செய்தார், இது கட்சியின் இழப்பிற்கு யாரோ ஒருவர் ‘பொறுப்பேற்பதை’ காட்டும் வகையிலான ஒரு பொதுவான, பெரும்பாலும் செய்யக்கூடிய அடையாள சைகையாக இருந்தது. 2024 இல் தனது இரண்டாவது பதவிக்காலம் முடியும் வரை சாய் ஜனாதிபதியாக நீடிப்பார்.

2024 ஜனாதிபதித் தேர்தலில் DPPயை வெளியேற்றுவது சாத்தியமில்லை என்று KMTக்கான மோசமான கருத்துக் கணிப்புகளை சுட்டிக்காட்டி, வாக்களிப்பின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட அமெரிக்க ஊடகங்கள் முயன்றன. 1949 சீனப் புரட்சியின் போது சீனாவை விட்டு வெளியேற்றப்பட்ட பின்னர், தைவானில் அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரத்தை KMT நிறுவியது, ஆனால் சீனாவில் முதலாளித்துவத்தை மீட்டெடுத்ததை தொடர்ந்து சீன பிரதான நிலப்பகுதியுடனான நெருக்கமான பொருளாதார உறவுகளை அது இறுக்க முற்படுகிறது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், மோசமான வானிலை, சமீபத்திய வாக்கெடுப்புகளை தொடர்ந்து வாக்காளர் சோர்வு, மற்றும் கோவிட் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை முடிவுகளுக்குக் காரணமாக காட்டியது. அதன் கட்டுரை ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் தைவான் ஆய்வுகள் திட்டத்தில் உள்ள அரசியல் விஞ்ஞானியான வென்-டி சுங்கை மேற்கோளிட்டுள்ளது, அவர் “DPP இன் சீனக் கொள்கை தோல்வியடைந்தது என்று நாங்கள் ஊகிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

நிச்சயமாக, மற்ற உள்ளூர் பிரச்சினைகளும் தேர்தலில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தன. மக்கள் மத்தியில் கோவிட்-19 நோய்தொற்றை தடையின்றி வெடித்துப் பரவ அனுமதித்ததான தைபேயின் முடிவு தாக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த வாரத்தில் மட்டும், அங்கு 102,576 புதிய நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, இது ஒரு மில்லியன் நபர்களில் பரவும் நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை வீதத்தின் அடிப்படையில் தைவானை உலகின் முதல் பத்து நாடுகளில் இடம்பெறச் செய்துள்ளது. மேலும், ஒரு மில்லியன் மக்களில் நிகழும் இறப்பு வீதத்தில் இது இரண்டாவது-அதிக இறப்புக்களைக் கொண்டுள்ளது. 14,334 இறப்புக்கள் உட்பட, மொத்த நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை தற்போது 8,313,366 என்ற அளவிற்கு உச்சமாக உள்ளது, இவற்றில் பெரும்பகுதி நோய்தொற்றுக்கள் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் நிகழ்ந்தவையாகும்.

தேசிய தைவான் பல்கலைக்கழக பேராசிரியரும், பொது சுகாதார நிபுணருமான, சான் சாங்-சுவான், திங்களன்று ஒரு முகநூல் பதிவில் தைபேய் தொற்றுநோயை கையாண்ட விதம் பற்றி விமர்சித்திருந்தார், அதில் அவர், “ஒரு கோவிட் நோயாளியைப் பொறுத்தவரை, அவர் குணமடையும் நிலையில் இருந்தாலும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாலும், அல்லது இறந்து போயிருந்தாலும், விஷயம் எதுவானாலும், நோயாளியும் நோயாளியின் குடும்பமும் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ச்சியான கவலை, பயம் மற்றும் சிரமத்துடன் வாழ வேண்டிய மிகவும் விரும்பத்தகாத ஒரு சூழ்நிலையை அனுபவிக்கின்றனர். எனவே, கடினமான கோவிட் அனுபவம் பலரின் தேர்தல் நடத்தையை பாதிப்பது தவிர்க்க முடியாதது” என்று குறிப்பிட்டுள்ளார்.

20 முதல் 24 வயதுடையவர்களில் 12.27 சதவீதம் பேர் உத்தியோகபூர்வமாக வேலையில்லாமல் இருப்பதால், இளைஞர்களின் வேலையின்மை விகிதமும் அதிகமாக உள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஊதியங்கள் தேக்கநிலையில் உள்ளன, பட்டதாரிகள் 2000 இல் 975 டாலர் மாத ஊதியம் பெற்றதுடன் ஒப்பிடுகையில், சமீபத்திய பல்கலைக்கழக பட்டதாரிகள் மாதத்திற்கு வெறும் 1,000 டாலரை மட்டுமே சம்பாதிக்கின்றனர். மேலும், 40 வயதுக்குட்ப்பட்டவர்களில் 65 சதவீதம் பேர் கடனில் உள்ளனர்.

அதே நேரத்தில், நுகர்வோர் விலை குறியீடு இந்த ஆண்டு ஒப்பீட்டளவில் குறைவாக 3.1 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், அவை உணவு மற்றும் எரிபொருளைப் பொறுத்தவரை கடுமையாக உயர்ந்துள்ளன, குறிப்பாக வசந்த காலம் மற்றும் கோடை காலத்தில் உணவு விலைகள் மே மாதத்தில் 7.4 சதவீதம் உயர்ந்தன. அக்டோபரில் உணவு விலைகள் 5.17 சதவீதம் அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், தைவானிய ஆளும் வர்க்கம் தொற்றுநோய் காலத்தில் அதிக இலாபம் ஈட்டியுள்ளது, பொருளாதாரம் 2021 இல் 6.28 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது, இது 2010 க்கு பிந்தைய அதிவேக வளர்ச்சியாகும். 2020 இல் பொருளாதாரம் 3.11 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த சமூக நிலைமைகள் தைவானில் நிலவும் கூர்மையான வர்க்கப் பிளவைக் காட்டுகின்றன.

உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் சீரழிந்து வரும் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் பலரின் வாக்குகளை பாதித்தது என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், தைவானிய வாக்காளர்கள், சீனாவுடன் ஒட்டுமொத்த தைவான் ஜலசந்தி கொண்டுள்ள உறவுகளின் நிலை குறித்து எப்போதும் கவனமாகவே உள்ளனர். உக்ரேனிய மக்களுக்கு நடந்ததைப் போலவே, சீனாவிற்கு எதிரான ஒரு அமெரிக்கப் பினாமிப் போரில் தாங்களும் மூழ்கிவிடுவதற்கான வாய்ப்பு இருப்பதை அவர்கள் வாக்களிக்கும்போது மனதில் கொண்டிருந்தனர்.