அமெரிக்கா தைவானை “மாபெரும் ஆயுதக் கிடங்காக” மாற்றி வருகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அதன் போரை வாஷிங்டன் தீவிரப்படுத்தினாலும், தைவான் குறித்த சீனாவுடனான போருக்கும் அது இன்னும் மிக வெளிப்படையாகவும் ஆத்திரமூட்டும் வகையிலும் தயாராகி வருகிறது. கடந்த வாரம் நியூ யோர்க் டைம்ஸில் (NYT) வெளியான “தைவானை மாபெரும் ஆயுதக் கிடங்காக மாற்றுவதை அமெரிக்கா நோக்கமாகக் கொண்டுள்ளது” என்ற கட்டுரை, பைடென் நிர்வாகம் பெய்ஜிங்கை இராணுவ நடவடிக்கைக்கு தூண்டும் வகையில், தைவானை பெருமளவிலான ஆயுதங்கள் நிரம்பிய முகாமாக மாற்றுவதற்கான அதன் இராணுவத் திட்டமிடல் மற்றும் தயாரிப்புகளின் அளவை வெளிப்படுத்துகிறது.

ஜூலை 28, 2022 அன்று, நிமிட்ஸ் வகை விமானந்தாங்கிக் கப்பலான USS ஆபிரகாம் லிங்கன் பசிபிக் பயிற்சிகளின் முடிவின் போது நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. (Canadian Armed Forces photo by Cpl. Djalma Vuong-De Ramos) 220728-O-CA231-2003 [Photo: Canadian Armed Forces photo by Cpl. Djalma Vuong-De Ramos]

1972 இல் ஜனாதிபதி நிக்சனின் சீனப் பயணத்திற்குப் பின்னர் 50 ஆண்டுகளாக, தீவுக்கும் சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கும் இடையிலான குறுகிய தைவான் ஜலசந்தியில் இருந்த பதட்டங்கள் ஒரே சீனக் கொள்கையால் குறைக்கப்பட்டன — அதாவது தைவான் உட்பட ஒட்டுமொத்த சீனாவின் சட்டப்பூர்வ அரசாங்கம் பெய்ஜிங் மட்டுமே என்பதை வாஷிங்டனும் ஏனைய அனைத்து நாடுகளும் மறைமுகமாக அங்கீகரித்தன. 1979 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே முறையான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டபோது, வாஷிங்டன் தைபேயுடனான அதன் இராணுவ மற்றும் இராஜதந்திர உறவுகளை முடித்துக் கொண்டது, மேலும் தீவில் இருந்து அனைத்து இராணுவப் படைகளையும் திரும்பப் பெற்றது.

ட்ரம்பைப் பின்பற்றி, இப்போது பைடென் நிர்வாகமும், தைபேயின் எந்தவொரு முறையான சுதந்திரப் பிரகடனமும் சீனாவுடனான போரைத் தூண்டும் என்பதை நன்கு அறிந்திருந்தும், ஒரே சீனா கொள்கையை மேலும் மேலும் அப்பட்டமாக கேள்விக்குள்ளாக்குகிறது. பெய்ஜிங், தைபே இரண்டும் அமெரிக்க இராணுவ செயல்பாட்டை ஊகிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ‘மூலோபாய தெளிவின்மை’ கொள்கையை திறம்பட முடிவுக்குக் கொண்டுவந்து, சீனாவுடனான எந்தவொரு போரிலும் தைவானுக்கு துணைநிற்க அமெரிக்கா உறுதிபூண்டுள்ளதாக நான்கு சந்தர்ப்பங்களில் பைடென் உறுதியாக அறிவித்துள்ளார்.

தற்போதைய மற்றும் முன்னாள் அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரை, தீவை ஒரு மிகப்பெரிய ஆயுத முகாமாக மாற்றுவதற்கு நோக்கம் கொண்ட உயர்மட்ட விவாதங்கள் வெள்ளை மாளிகை மற்றும் பென்டகனில் நடத்தப்படுவதை சுட்டிக்காட்டுகிறது. “தைவானில் ஒரு மாபெரும் ஆயுதக் குவியலைக் கட்டமைப்பதற்கான முயற்சிகளை அமெரிக்க அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர்,” அதாவது “தீவைச் சுற்றி சீன இராணுவம் சமீபத்தில் அதன் கடற்படை மற்றும் விமானப்படை பயிற்சிகளை நடத்தியது பற்றி படித்ததன் பின்னரே” இது நிகழ்த்தப்படுவதாக அமெரிக்கா கூறுகிறது.

அமெரிக்க மூலோபாய வட்டாரங்களில் எடுக்கப்பட்ட முடிவு என்னவென்றால், தைவானை மீண்டும் பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும் எந்தவொரு சீன இராணுவ நடவடிக்கையும் இராணுவ முற்றுகையுடன் தொடங்கும் “வாஷிங்டன் தைவானுக்கு துருப்புக்களை அனுப்ப முடிவு செய்தாலும், அதை சீன இராணுவம் முற்றுகையிட்டு ஆக்கிரமிக்கும் பட்சத்தில், படையெடுப்பை தாங்கும் அளவிற்கு தைவான் ஒரு ‘முள்ளம்பன்றி’ ஆக வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றர்” என்று NYT அறிவிக்கிறது.

உக்ரேனில் அமெரிக்க திட்டமிட்ட நடவடிக்கைகளில் ரஷ்யப் படைகளுக்கு எதிரான முன்னேற்றங்களால் உற்சாகமடைந்த வாஷிங்டன், சீன இராணுவத்திற்கும் அதிகபட்ச இழப்பை ஏற்படுத்தும் வகையில் தைவானில் நடக்கும் எந்தப் போரிலும் இதேபோன்ற தந்திரோபாயங்களைப் பிரயோகிக்க முயல்கிறது. NYT இவ்வாறு விளக்குகிறது: “ஏராளமான சிறிய, அதிகளவு நகரும் ஆயுதங்களுக்கு ஆதரவாக சில பெரிய அமைப்புகளுக்கான ஆயுதக் கொள்முதல் உத்தரவுகளை நிராகரிப்போம் என்று தைவான் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க ஆயுத தயாரிப்பாளர்களிடம் அமைதியாக தெரிவித்து, தைவானுக்கு விற்கப்படும் ஆயுதங்களின் அளவு மற்றும் வகைகளை அமெரிக்க அதிகாரிகள் தான் நிர்ணயம் செய்கின்றனர்.”

உக்ரேனிய இராணுவத்திற்கு வழங்கப்பட்ட நகரும் HIMARS ராக்கெட் ஏவுகணை செலுத்திகளுடன், தோள்பட்டையில் இருந்து ஏவக்கூடிய டாங்கி-எதிர்ப்பு மற்றும் விமான-எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட, ‘விரைந்து பாயும்’ வகை ஆயுதங்கள் ரஷ்யப் படைகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாக NYT குறிப்பிட்டது. கடுமையான போர் தளவாடங்களைக் கொண்ட தீவிர ஆயுதமேந்திய ‘முள்ளம்பன்றியாக’ தீவை மாற்றும் வகையில், இத்தகைய ஏராளமான ஆயுதங்களுக்கு தைவான் கொள்முதல் உத்தரவு அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உக்ரேனில் நடப்பது போலவே, மரணம் மற்றும் அழிவு பற்றிய முழு அலட்சியத்துடன் தைவான் தீவிலும் ஒரு போர் மூழ அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவை பலவீனப்படுத்தி சீர்குலைக்கும் நோக்கம் கொண்டு, திபெத், சின்ஜியாங் மற்றும் பிற இடங்களில் பிரிவினைவாத இயக்கங்களை ஊக்கப்படுத்துகிறது, மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை கீழ்ப்படுத்துகிறது. ஜனநாயகம் அல்லது சிறிய தைவான் தீவை பாதுகாப்பதற்கான ஒரு போர் என்பதை விட, ரஷ்யா மற்றும் சீனா இரண்டையும் உடைக்கும், மற்றும் யூரேசிய நிலப்பரப்பு மற்றும் அதன் பரந்த மனித மற்றும் இயற்கை வளங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் முயற்சியில் அமெரிக்கா மற்றொரு அணுவாயுத வல்லரசை பொறுப்பற்ற வகையில் எதிர்கொள்கிறது.

வாஷிங்டன் கடந்த மாதம் தைவானுக்கு 1.1 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பு கொண்ட ஆறாவது ஆயுத விற்பனையை அறிவித்தது, இது பைடென் நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஆயுத விற்பனையாகும். முன்னாள் பென்டகன் ஊழியர் ட்ரூ தாம்சன் என்பவர் NYT இடம், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட சில ஆயுத விற்பனைகள் மிகப்பெரிய அளவிலானவை என்றாலும், சமீபத்திய விற்பனையானது, தைவான் ‘ஒரு மோதலுக்கு முன்னதாக போர் தளவாடங்களின் ஒரு பெரும் கையிருப்பைக் கொண்டிருக்கும்’ என்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறினார். இந்த ஆயுதத் தொகுப்பில் 60 ஹார்பூன் கடலோர கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் அடங்கும்.

கடந்த மாதம் அமெரிக்க செனட் வெளியுறவுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட தைவான் கொள்கைச் சட்டம், தைவானுக்கான ஆயுத விற்பனையை 2027 ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டுகளில் 6.5 பில்லியன் டாலர்கள் மதிப்பில் மேலும் அதிகரிக்க அங்கீகாரம் அளிக்கும். குறிப்பிடத்தக்க வகையில், இந்த சட்டம், தைவானை —பெயரளவில் சீனாவின் ஒரு பகுதியாக வாஷிங்டன் இன்னும் கருதுகிறது— அமெரிக்காவின் நேட்டோ அல்லாத கூட்டாளியாக அறிவிக்கும், மேலும் ஒரே சீனா கொள்கையை திறம்பட முடிவுக்குக் கொண்டுவரும். இந்த சட்டம் இன்னும் காங்கிரஸால் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

கடந்த வாரம் கருத்து தெரிவிக்கையில், NYT, வாஷிங்டன் உக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்ப முன்னுரிமை அளித்துள்ள நிலையில், தைவானுக்கான ஆயுத விநியோகங்கள் நிறுத்தப்படலாம் என்பதான அமெரிக்க இராணுவ வட்டாரங்களின் கவலைக்கு குரல் கொடுத்தது. “ஆயுத தயாரிப்பாளர்கள் நீண்டகால ஆயுதக் கொள்முதல் உத்தரவுகளின் நிலையான வரத்து இல்லாமல் புதிய உற்பத்தி முயற்சிகளைத் தொடங்கத் தயங்குகிறார்கள்” என்று அது குறிப்பிட்டது. உண்மை என்னவென்றால், விவாதத்தில் இருக்கும் இந்த பிரச்சினை, உக்ரேனில் போர் விரிவடைகின்ற மற்றும் தைவான் மீதான சீன மோதலை அமெரிக்கா தூண்டி வருகின்ற நிலையில், ஆயுத உற்பத்தியின் விரிவாக்கம் பற்றி ஏற்கனவே பரிசீலிக்கப்படுவதைக் குறிக்கிறது.

NYT கட்டுரை, தைவானுக்கான இராணுவ தளவாட விநியோகங்களை எவ்வாறு விரைவுபடுத்துவது என்று வாஷிங்டன் ஏற்கனவே பரிசீலித்து வருவதை சுட்டிக்காட்டியது. கடந்த வாரம், அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் வருடாந்திர அமெரிக்க-தைவான் பாதுகாப்பு முயற்சி மாநாட்டில் (US-Taiwan Defense Industry Conference) உரையாற்றவிருந்தார், இது மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடைபெற்ற மூன்று நாள் நிகழ்வு ஆகும். தைவானுக்கான ஆயுத விற்பனையை மேற்பார்வையிடும் பணியகத்தின் இயக்குனரான லாரா க்ரெஸ்ஸி, அமெரிக்க பாதுகாப்புத் துறையில் உள்ள தனது சக அதிகாரியுடன் இணைந்து கொண்டார்.

ஆகஸ்ட் மாதம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தீவுக்கு மேற்கொண்ட ஆத்திரமூட்டும் விஜயத்தைத் தொடர்ந்து, அமெரிக்க மற்றும் தைவான் அதிகாரிகளுக்கு இடையேயான உயர்மட்ட விவாதங்கள் அதிகரித்ததை இந்த நிகழ்வு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பாதுகாப்பு முயற்சி மாநாட்டிற்கான தைவான் பிரதிநிதிகள் குழுவிற்கு தேசிய பாதுகாப்பு துணை மந்திரி வாங் ஷின்-லுங் தலைமை தாங்கினார். ட்ரம்பைத் தொடர்ந்து பைடெனும், தைவானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ தொடர்புகளை மட்டுப்படுத்திய ஒரே சீனா கொள்கைக்கு உட்பட்ட நீண்டகால இராஜதந்திர நெறிமுறைகளை தகர்த்துவிட்டார்.

வாஷிங்டன், தைவானில் ஒரு மாபெரும் ஆயுதக் கட்டமைப்பை மட்டும் உருவாக்கவில்லை, மாறாக போர் மற்றும் சீன முற்றுகை நிகழ்ந்தால் தீவுக்கு இராணுவத் தளவாடங்களை எவ்வாறு கொண்டு சேர்ப்பது என்பது குறித்தும் பரிசீலித்து வருகிறது. பாதுகாப்பு ஆலோசகர் எரிக் வெர்தீம் NYT இடம் இவ்வாறு கூறினார்: “போர் நிகழ்ந்தால் தேவைப்படக்கூடிய இராணுவத் தளவாடங்களின் அளவு மிகப்பெரிய அளவினதாக இருக்கும், மேலும் அவற்றைப் பெறுவதும் கடினமாக இருக்கும், இருப்பினும் செய்யக்கூடியதாக இருக்கலாம்.”

எவ்வாறாயினும், முற்றுகையை முறியடிப்பதற்கான அமெரிக்காவின் எந்தவொரு முயற்சியும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு நேரடி மோதலை ஏற்படுத்த அச்சுறுத்துகிறது, அது ஜப்பான், தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட பிராந்தியம் முழுவதிலும் உள்ள அமெரிக்க தளங்கள் மற்றும் அதன் கூட்டாளிகளை விரைந்து களத்தில் இறங்க வைக்கும் ஒரு போராக வெடிக்கும் வாய்ப்பைக் கொண்டுள்ளது. வெர்தீம் மேலும் இவ்வாறு கூறினார்: “கேள்வி என்னவென்றால்: ஒரு முற்றுகையை செயல்படுத்துவது அல்லது முறியடிப்பதில் முறையே சீனாவும் வெள்ளை மாளிகையும் எந்த அளவிற்கு ஆபத்தை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது, மற்றும் அவை எந்த அளவிற்கு எதிர்த்து நிற்க முடியும்?”

பைடென் நிர்வாகம் ஏற்கனவே இந்த கேள்விக்கு வார்த்தைகளால் இல்லாவிட்டாலும் செயல்களால் பதிலளித்துள்ளது. ஐரோப்பாவில் அணுவாயுதப் போரை நோக்கி இது உலகை பொறுப்பற்ற முறையில் மூழ்கடித்தாலும், ஆசியாவின் மிக ஆபத்தான போர் வெடிப்புப் புள்ளியாக கூறப்படும் தைவான் குறித்து சீனாவுடனான பதட்டங்களை அமெரிக்கா வேண்டுமென்றே எரியூட்டுகிறது. மனித விலைகொடுப்பு என்னவாக இருந்தாலும், ஒவ்வொரு வகையிலும், அமெரிக்க உலகளாவிய மேலாதிக்கத்திற்கு சீனா சவால் விடுவதைத் தடுப்பதில் அமெரிக்கா மிக உறுதியாக உள்ளது என்பது தொடர்பான பல அறிகுறிகளில், அதிகரித்து வரும் ஆயுத விற்பனைகளும் ஒன்றாகும்.